Advertisement

அத்தியாயம் 16

அன்று ஜனா நிஷாவின் கண்களுக்கு மிக அழகாகத் தெரிந்தான். அவனைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல நிஷாவிற்குத் தோன்றியது.

எத்தனை நாட்கள் இந்த அற்ப சந்தோஷம் நிலைக்கும் என்று நிஷாவிற்குத் தெரியாது. ஆனால் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அதை அனுபவிக்கவே விரும்பினாள் நிஷா.

“ஜனா இந்த பில்லைப் பாரேன்… இதுல கிஸ்ஸான் டோமேட்டோ கெட்ச்அப்னு போட்டிருக்கே? அது எது?” என்று நிஷா ஜனாவை நெருங்கி சந்தேகம் கேட்க ஜனாவும் அவளது தந்திரம் புரியாமல் அவளுக்கு விளக்கம் தந்துகொண்டிருந்தான்.

ஜனாவுடன் கிடைக்கும் அந்த ஒரு சில நிமிடங்களுக்காக நிஷா குட்டி நாடகம் ஆடினாள். அவன் தனது கண்கள் விரித்து பதில் சொல்லும்போது நிஷாவின் மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் குதூகலித்தன. கிஸ்ஸான் கெட்ச்சப்புகள் நிரம்பியிருக்கும் ராக்-யின் பக்கமாக அவளை அழைத்துச்சென்று ஒரு பாட்டிலை ஜனா எடுத்துக்கொடுத்தபோது அவனுடன் தனிமையில் இன்னும் சில வினாடிகள் கிடைத்துவிடாதா என்று நிஷா பேராசைப்பட்டாள்.

ஜனா அவளிடம் நட்பு பாராட்டும்போது அவளது உள்ளம் எல்லாம் தேனில் நிரம்பியது போன்ற உணர்வு அவளுக்கு ஏற்படும்.

‘தான் மனதில் காதல் செய்யும் ஜனாவுடன் இணைய முடியாமல் போனால் என்ன நடக்கும்? அவளது அன்னை அவளை வாழ்நாள் முழுதும் கன்னியாக வைத்திருக்கப்போவதில்லை. அவளுக்கு நிச்சயம் திருமணம் நடக்கும்.  அப்படி ஒரு திருமணம் நடக்கும் பட்சத்தில்  வேறு ஒருவனுடன் அவள் வாழப்போகும் வாழ்வு நரகமாய் மாறிடாதா?’ என பலவிதமாய் நினைத்து வருந்தும் மனதிடம்,

“லவ் பண்றவனை கல்யாணம் பண்ற பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்கிறது இல்லையில நிஷா?” என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொள்வாள்.

மீண்டும் மனம் ஜனாவின் நிழலைத்தேடி ஓட ஆரம்பித்துவிடும்.

உன்னை பிரியமாக… நேசத்தோடு பார்க்காதவனிடம் இப்படி பைத்தியகாரத்தனமாய் காதல் கொள்வது மடத்தனம் தானே? என்று புத்திமதிகூறும் புத்தியிடம்,

“தன்னை மாணவனாய் ஏற்காமல் வெறுத்து ஒதுக்கிய துரோணரை ஏகலைவன் மனதார ஆசிரியராக ஏற்கவில்லையா?” என்று யூ-ட்யூப்பில் பார்த்த தத்துவக் கதையைச் சொல்லிச் சமாளித்தாள் நிஷா.

தான் குறிவைக்கப்பட்டுவிட்டோம் என்று தாமதமாகத் தான் உணர்ந்துகொள்ளும் மான்.

நெருப்பு சூழும்வரை காய்ந்த மரங்கள் காற்றோடு கட்டித்தழுவிக் கொண்டு தான் இருக்கும்.

அதுபோல ஜனாவிற்கும் பல நாட்களாக நிஷாவின் காதல் வேட்டையும் புரியவில்லை காதல் நெருப்பும் புரியவில்லை.

ஆனால் தான் துரத்தப்படுகிறோம் என்று மான் உணரும் நொடியும் வரத்தானே செய்யும்?

முற்றிலும் பற்றி எரியும் முன்னே மரங்கள் தங்களைச் சுற்றி வெட்பத்தை உணரும் நொடி வரத்தானே செய்யும்?

அதுபோல ஜனாவும் உணர்ந்தான்.

நிஷாவின் பார்வையை உணர ஆரம்பித்தான்.

தன்னை யாரோ சதா நேரமும் ‘ஜனா’ ‘ஜனா’ என்று அழைப்பதுபோல ஆரம்பத்தில் உணர்ந்தவன் ‘அது நிஷாவின் குரலோ?’ என்று சந்தேகப்பட ஆரம்பித்தான்.

ஜனா சற்று சுதாரித்துக்கொண்டு நிஷாவிடம் இருந்து சற்று விலகினான்.

மான் தப்பிவிடுமா?

******

“ஜனா அண்ணா சாப்பிட வரல?”

“இல்ல ப்ரதீபா… நீங்க சாப்பிடுங்க. நான் வர்றதுக்கு 7 மணி ஆகிடும். இன்னிக்கி நிறைய டெலிவரி இருக்குல?”

“அருண் அண்ணா எங்க? நீ ஏன் அத்தனை டெலிவரிக்கும் போற?”

“அவனுக்கும் வேலை இருக்குல?” என்று வேலைகளைக் காரணம் காட்டி நிஷா இருக்கும் இடத்தில் இருந்து ஒதுங்கினான் ஜனா.

“ஜனா இந்த சரக்கை சரி பார்த்துட்டேன். பெட்டி போட்டு டெலிவரிக்கு பேக் செய்து கொடேன்…” என்று நிஷா கேட்டபோது, “அருணை வரச்சொல்லவா நிஷா? எனக்கு கொஞ்சம் வேலை இருக்கே?” என்று கூறி நழுவிப்போனான்.

சந்தேகம் என்று வந்தப்பிறகு சில நாட்களாக அவன் கவனிக்காமல் விட்டுச் சென்றவை கூட இப்போது அவனது கண்ணில் பட்டன. சாப்பாட்டு வேளை முடிந்ததும் ஊழியர்கள் அத்தனை பேரின் சாப்பாட்டுப் பையும் பிஸ்கெட் குட்டவுன் வாசலில் ஒரே சீராக வரிசையாக அடுக்கப்பட்டு வைக்கப்படும். அப்படி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பைகளில் ஜனாவின் சாப்பாட்டுப் பையும் நிஷாவின் சாப்பாட்டுப் பையும் அருகருகே தான் இருக்கும். ஒரு நாள் தவறாமல் இருவரின் பையும் ஒட்டி இருந்தது ஜனாவின் மனதில் பலத்த சந்தேகத்தைக் கொடுத்தது.

நிஷா வேலைக்குச் சேரும் முன்னே சதா நேரமும் காலியாக இருக்கும் தனது தண்ணீர் பாட்டில் இப்போதெல்லாம் தான் கடையில் இருக்கும் 12 மணி நேரமும் நிரம்பியே இருப்பதையும் கவனித்தான் ஜனா. தினந்தினம் நம்ம வாட்டர் பாட்டில்ல அவ்வளவு அக்கறையா யார் தண்ணீ பிடிச்சி வைக்கிறது? என்று தன்னிடமே கேட்டுக்கொண்டான் ஜனா.

ஜனாவின் அசைவுகளை நிஷாவைப் போலவே கவனிக்கும் ப்ரதீபாவிற்கும் அவளது கூட்டணி ஆட்களுக்கும் ஜனாவின் சந்தேகம் புரிந்து போனது. அவனது சந்தேகம் வலுப்பெற ஆரம்பிக்கும்போதே அக்கும்பல் உண்மையைக் கண்டுகொண்டது.

“நிஷா… ஜனா அண்ணாவுக்கு உன் மேல சந்தேகம் வந்திருக்குன்னு நினைக்கறேன்… ஜனா ஏதாவது கேட்டா… ‘ஆமா நான் உன்னை லவ் பண்றேன் ஜனா’-ன்னு சொல்லிடு. சரியா? அதைவிட நல்ல சான்ஸ் இருக்க முடியாது.” –  என்று ப்ரதீபா சொன்னது நிஷாவின் வயிற்றிற்குள் புளியைக் கரைத்தாலும் நிஷா கவனமாக இருக்கக் கற்றுக்கொண்டாள். ஜனா திருமணத்திற்குத் தயாராகும் வரை தான் ஜனாவை காதலிக்கும் விஷயத்தை ரகசியமாகவே வைக்க விரும்பினாள் நிஷா.

அதே நேரத்தில் ஜனாவாக அவளது காதலைக் கண்டுபிடித்து ‘என்னை லவ் பண்றியா நிஷா?’ என்று கேட்கும்போது ‘ஆம்’ என்று  கூறி அதை ஒத்துக்கொள்ளும் தைரியத்தையும் வளர்த்துக்கொள்ள நினைத்தாள் நிஷா.

“ஐ லவ் யூ ஜனான்னு லவ்வை சொல்லும் தைரியம் இன்னும் நமக்கு வரல… ஜனாவாக கண்டுபிடிச்சிக் கேட்டா ஆமா உன்னை லவ் பண்றேன்னு ஒத்துக்க வேண்டியது தான். அதற்கப்புறம் நடக்கப்போறது விதி வசம்…” என்று நிஷா தன் மனதில் தீர்மானம் எடுத்துக்கொண்டாள்.

*****

அன்று ஆடி வெள்ளி. ஊர் முழுதும் இருந்த கோயில்களில் திருவிழா கொண்டாட்டம் தான். சூப்பர்மார்கெட்டில் பணிபுரியும் அத்தனை பேரும் ஏதாவது ஒரு பண்டத்தை வீட்டில் தயார் செய்து கொண்டுவந்திருந்தார்கள்.

பானு அக்கா கம்மங்கூழ் கொண்டு வந்திருந்தார். ஒரு பேப்பர் கப் ரோலைப் பிரித்து அனைவருக்கும் பேப்பர் கப்புகளில் கூழை ஊற்றிக்கொடுத்தார்.

“ஜனா இந்தா கூழ் குடி” என்று பானு அக்கா சொன்னபோது மறுக்காமல் குடித்தவன் நிஷா அவன் முன்னே ஒரு திண்பண்டத்தை நீட்டி,

“ஜனா இந்தா கருப்பட்டி வடை… வீட்ல செஞ்சது… நானே செஞ்சேன்..” என்று சொன்னபோது மிகவும் கலவரப்பட்டுப்போனான்.

பானு அக்கா கூழ் கொடுத்தபோது அதுல தாய்மை உணர்வு கொட்டி இருந்துச்சு. ஆனா நிஷா வடையைக் கொடுத்தபோது அவ பார்வையில என்னமோ இருக்கே? என்று மனதுக்குள் ஆராய்ச்சி நடத்தியவனின் புத்தி நிஷாவிடம் திடமாக மறுக்க முடியாமல் திண்டாடியது.

” எனக்குப் பிடிக்காது… வேணாம்னு சொல்லிடவா? ச்ச ச்ச அதையும் சொல்ல முடியாது. கல்லைத் தவிர எல்லாத்தையும் அவ முன்னாடி திண்ணுத் தொலைச்சிருக்கேன்… நானும் ப்ரதீபாவும் உருளைக்கிழங்கு பொரியல்ல ஆரம்பிச்சி ஊறுகாய்க்கு கூட சண்டை பிடிப்போம்னு நிஷாவுக்கு நல்லா தெரியுமே? கருப்பட்டி மூடையில இருந்து தினம் தினம் 50 கிராம் கருப்பட்டியை திண்ணுட்டு இனிப்பு பிடிக்காதுன்னு சொன்னா அசிங்கமா பார்ப்பா… இப்ப என்ன பண்ணலாம்?” என்று யோசித்தவன் அவளிடமிருந்து கருப்பட்டி வடையை வாங்கிக்கொண்டு,

“இப்ப பசிக்கல… அப்புறமா சாப்பிடறேன்.” என்று கூறி அவள் கொடுத்த வடையை தான் கம்மங்கூழ் ஊற்றிக்குடித்த பேப்பர் கப்பில் வைத்தான் ஜனா.

அவனது ஒத்திப்போடலை கவனித்து, “கருப்பட்டி இனிப்பு சரியா இருக்கான்னு மட்டும் பாரேன் ஜனா” என்று சொன்னாள் நிஷா. கருப்பட்டியின் பெயரைக் கேட்டதும் ஜனாவின் வாயில் கருப்பட்டி சுவை வந்து ஒட்டிக்கொண்டது. அப்போது பார்த்து டைரிமில்க் சில்க்கின் விளம்பரத்தில் வாயோரத்தில் டைரிமில்க் ஒழுகிட நிற்கும் பெண் தான் அவனது நினைவுக்கு வந்தாள். அந்தப் பெண்ணின் உதடுகளில் வழியும் டைரி மில்க் போல அவனது உதடுகளில் இப்போது கருப்பட்டிச் சாறின் சுவை கற்பனையாய் வழிந்தோடியது… அதற்கு மேல் மறுக்காமல் வடையைப் பிய்த்து வாயில் வைத்தான் ஜனா. ஒரு சிறு துண்டை வாயில் வைத்தது தான் ஜனாவிற்குத் தெரியும். முழு வடையும் காலியாகிப்போனது எப்படி என்று அவனுக்கே தெரியாது.

‘இங்க இருந்தா நிஷாகிட்ட இன்னொரு வடை தா-ன்னு கேட்டாலும் கேட்போம்’ என்று நினைத்து பயந்தவன் “அருண்ணு டெலிவரிக்குப் போறியா? நானும் உன்கூட வர்றேன். ஹனுமான் கடலை எண்ணெய் ஸ்டாக் இல்ல… லாரி ஷெட்ல இருந்து எடுக்கப்போணும். என்னை லாரி ஷெட்டுக்கு கூட்டிட்டுப்போயேன்…” என்று பேட்டரி வண்டியில் கிளம்பிக்கொண்டிருந்த அருண்ணிடம் கேட்டு அவனருகே சென்றான். நிஷாவிடம் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட்டம் பிடித்த ஜனா, போகிற வழியில் இருந்த கருப்பட்டி மூடையில் இருந்து சிறு துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டே அருணின் வண்டியில் தொற்றிக்கொண்டான். ஜனாவை நினைத்து நிஷாவிற்கு சிரிப்பதா? அழுவதா என்று கூடத் தெரியவில்லை.

’10 கிராம்கூட தேராத கருப்பட்டித் துண்டை வாயில போட்டு மெல்ல ஆசைப்படுற… ஆனா உனக்காக 45கிலோ கருப்பட்டி மொத்தமாக உன்கிட்ட வர காத்திருக்கும்போது ஏன்டா இப்படி பயந்து ஓடுற?’ என்று அவன் சென்ற திசையைப் பார்த்து பேசியது நிஷாவின் மனம்.

*****

அருணும் ஜனாவும் இரண்டே மணி நேரத்தில் அத்தனை டெலிவரியையும் முடித்துவிட்டு ஒரு தள்ளுவண்டிக் கடையில் நின்று பருத்திப் பால் வாங்கிக் குடித்துக்கொண்டிருந்தார்கள்.

ஜனாவிற்கும் ரகசியத்திற்கும் மிக மிக தூரம். இந்நாள் வரை அவனது வாழ்வில் ரகசியம் என்பதே கிடையாது. தான் வயசுக்கு வந்த நாளிள் ரகசியத்தை தனது பள்ளிகால நண்பர்களிடம் கூறியபிறகு தான் அவனுக்கு அன்று தூக்கமே வந்தது. சமீபத்தில்கூட தனது அன்னையிடமிருந்து 200 ரூபாயைத் திருடியதைக்கூட தனது அண்ணனிடம் கூறிவிட்டுத் தான் அன்று மறு வேலை பார்த்தான் ஜனா.

இப்படி இருக்கும் ஜனாவிற்கு அவனது வாழ்வில் லேட்டஸ்டாக நடந்த ரகசியத்தை யாரிடமாவது சொல்லியே ஆக வேண்டும் என்ற மண்டைக்குடைச்சல் ஏற்பட்டபோது ஜனாவின் எதிரே அருண் தான் இருந்தான்.

தனது கையில் மிதமான சூட்டில் இருந்த பருத்திப்பாலை மிகவும் கவனமாக ஊதி ஊதி குடித்துக்கொண்டிருந்த அருணைப் பார்த்து ‘கட்டுக்கட்டா பல பிரச்சனையை சட்டைப்பாக்கெட்டுக்குள்ளயே வச்சிக்கிட்டு எப்படி டா இப்படி ரசிச்சி குடிக்கிற அருண்ணு?’ என்று மனதுக்குள் வியந்த ஜனா ஒரே மடக்கில் தனது கையில் இருந்த பருத்திப் பாலை குடித்து முடித்துவிட்டு,

“அருண் நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லவா? ஆனா அதை நீ யார்கிட்டயும் சொல்லக்கூடாது.” என்று பேச்சை ஆரம்பித்தான்.

“ம்… சொல்லு சொல்லு” என்று பருத்திப் பாலில் இருந்து தலையை வெளியே எடுக்காமல் சொன்னான் அருண்.

“நிஷா என்னை பார்க்கிற பார்வையே சரியில்ல மச்சி..”

“அப்படியா?” என்று சிரித்துக்கொண்டே கேட்ட அருணை கவனிக்காமல்,

“ஆமா அருண்ணு… டெட்டால் பாட்டிலை நான் அடுக்கும்போது என்னையே பார்த்துகிட்டு தான் ரேட் அடிச்சா… அப்புறம் நான் மண்டவெல்லத்தை டெலிவரிக்கு பேக் செய்தபோது என் தலைக்குப் பின்னால அவ பார்க்கிறதை நான் உணர்ந்தேன்டா… உடனே திரும்பிப் பார்த்தேன் அருண்ணு… நிஷா என்னை பார்த்திட்டு இருந்தாடா…”

“ஆக அவ உன்னைப் பார்த்தது இருக்கட்டும்… நீயும் அவளையே தான் பார்த்துட்டு இருந்திருக்கன்னு சொல்லு..”

“அவ தான் டா என்னைப் பார்த்தா… அவ பார்த்ததை நான் பார்த்தேன்…”

“ஆனா ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் ஸைட் அடிச்சது நிஜம். அப்படித்தான?”

“அருண்ணு… வேணா வம்பிழுக்காத… ப்ரதீபாகிட்ட சொன்னா அவ கேலி பண்ணுவான்னு தான உன்கிட்ட சொன்னேன்? நீயும் கேலி தான் பண்ற…”

“மச்சி தெரியாத விஷயத்தை சொன்னா தான் அது சீக்ரட்… தெரிந்த விஷயம் சீக்ரட் லிஸ்ட்ல சேராது…”

“என்ன சொல்ற? புரியலடா அருண்ணு…”

“நிஷா உன்னை ஸைட் அடிப்பது நம்ம கடையில இருக்கிற எல்லாருக்கும் தெரியுமே…”

“ப்ரதீபாவுக்கு?”

“அதுக்கு தெரியாத விஷயம் இந்த சேலத்துல நடக்கும்?”

தான் எத்தனை மக்காக கேள்வி கேட்கிறோம் என்று புரிந்தது ஜனாவிற்கு.

“செல்வாவுக்கு??” என்று பதில் தெரிந்தே கேள்வி கேட்டான் ஜனா.

“ப்ரதீபாவும் செல்வலட்சுமியும் அக்கா தங்கச்சி மாதிரி…”

“அப்படின்னா ரெண்டு பேருக்கும் தெரியும்னு அடிச்சி சொல்ற?”

“திருநெல்வேலிக்கு வாக்கப்பட்டுப் போன நம்ம ப்ரியாவுக்கே விஷயம் தெரியும்போது அதுங்களுக்கு தெரியாமல் இருக்குமா?” என்று அருண் கேட்டதும் தனது கையில் இருந்த காலி கண்ணாடிக் கோப்பையை தள்ளுவண்டியில் வைத்துவிட்டு “வாடா கடைக்குப் போலாம்” என்றான் ஜனா. ஆனால் கடைக்குள் அவன் நுழைந்ததும் அவர்களது குமார் அண்ணன் ஜனாவைத் தனியாகக் கூப்பிட்டு,

“ஜனா… லவ் பண்றது ஓகே தான்… ஆனா இன்ஸ்டாகிராம் போஸ்ட் மாதிரி பப்ளிக்கா சொல்லக்கூடாதுடா…. வாட்ஸ் ஆப் சாட்-ல உங்களுக்குள்ள சொல்லிக்கணும். சரியா? நிஷாகிட்டயும் சொல்லி வை….” என்றார்.

“புரியல குமார் அண்ணே…”

“மூனு மாசமாவா இந்தக் கதை நடக்குது? இல்ல அதுக்கும் மேலயா?”

“எனக்கு இப்பயும் எதுவும் புரியலண்ணே…”

“இந்த சோப்பு நான் வாங்கிட்டுப் போன மைசூர் சான்டல் சோப் பாக்ஸ்ல இருந்தது… சோப்ல ஸ்டிக்கி நோட்லாம் ஒட்டியா விற்கிறீங்க?” என்று கூறி சோப்பை ஜனாவின் கையில் கொடுத்தவர்,

“என்கிட்ட இப்ப வசமா மாட்டினியா?” என்று உரக்கச் சிரித்துக்கொண்டே கேட்டார் குமார் அண்ணன்.

ஜனா பேச்சற்று நின்றான்.

“மூனு மாசத்துக்கு முன்னே வாங்குன சோப்பு இது…  டாக்டர் சொன்னதால மூனு மாசமா பாசிப் பயிறு மாவு தேய்ச்சி குளிச்சதால இந்த சோப்பையே யூஸ் பண்ணல. நேத்து தான் இதை பிரிச்சேன்… பிரிச்சதும் உன் காதல் கடிதம் தான் கண்ணுல பட்டது.” என்று கூறி சிரித்துக்கொண்டே தனது மஞ்சப்பையை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார் குமார் அண்ணன்.

தனது கையில் இருந்த சோப்பில் இருந்த ஸ்டிக்கி நோட்டை வாசித்தான் ஜனா.

ஐ லவ் யூ நிஷா ஐ லவ் யூ ஜனா என்று அதில் எழுதியிருந்தது.

இது நிஷாவின் வேலை தான் என்று புரிந்துகொண்டான்.

ஜனா தனது வாழ்நாளில் அனுபவிக்காத கோபத்தை அன்று அனுபவித்தான்.

****

Advertisement