Advertisement

அத்தியாயம் 15

இத்தனை நாளும் கண்களில் காதலோடு சுற்றித்திரிந்த நிஷாவிடம் நிறைய மாற்றங்கள். ஜனாவிற்கு திருமணத்தின் மீது இருக்கும் வெறுப்பைத் தெரிந்துகொண்டப்பிறகு காதல் ஞானிபோல் நடந்துகொண்டாள் நிஷா.

வீட்டில் இருந்து லெமன் ரைஸ் செய்து கொண்டு வந்த நிஷா அதை ப்ரதீபாவிடம் பிடிவாதமாகக் கொடுத்து, “இதை ஜனாகிட்ட நீ தான் கொடுக்கணும்.” என்றாள்.

“நீயே கொடு… அப்புறம் நாங்க பொழுதுபோகாமல் ஏத்திவிட்டோம்னு சொல்லுவ… நான் அந்த விளையாட்டுக்கு வரலப்பா…”

“ஜனாவுக்கு சந்தேகம் வந்துட்டா என்கிட்ட பேசவே பேசாது. அதான் உன்கிட்டக்கொடுத்து கொடுக்கச் சொல்றேன்…”

“அந்த பயம் இருக்குல? நேத்து நீ தெளிவா பேசினப்பிறகு எனக்கும் கொஞ்சம் பயம் வந்திடுச்சு… நீ சொல்றதுல கொஞ்சம் நியாயம் இருக்கிறதால நீயும் ஜனாவும் சம்பந்தப்பட்ட விஷயத்துல ஒதுங்கி இருக்கலாம்னு நானும் செல்வாவும் முடிவு பண்ணிருக்கோம்.”

“ப்ளீஸ் ப்ரதீபா… எனக்காக ப்ளீஸ். ஜனாகூட சேரவே முடியாதுன்னு தெரிஞ்சிபோச்சு… இந்த சின்ன சந்தோஷம்கூடவா எனக்கு கிடைக்கக்கூடாது?”

“ஏன் இப்படி நெகடிவ்வா நினைக்கிற?”

“ஒரு வருஷமா நாம பழகுறோம்… எனக்காக ஏதாவது நல்லது செய்யணும்னு நீ நினைச்சா ஒரே ஒரு உண்மையை மட்டும் சொல்லு…”

“என்ன உண்மை?”

“ஜனா என்னை கல்யாணம் பண்ணிக்க வேணாம்… அவன் எப்ப கல்யாணத்துக்கு ஒத்துப்பான்னு மட்டும் சொல்லு…”

“நீ லவ் பண்றேன்னு சொல்லிப்பாரு… அவன்கூட பேசிப்பாரு நிஷா…. ஜனா கல்யாணத்துக்கு ஒத்துக்கும்.”

“நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. பொண்ணு யாருங்கிற கேள்விக்கே நான் வரல… ஜனா எப்ப கல்யாணத்துக்கு ஒத்துக்கும்? அது தான் என் கேள்வி”

“ஒரு மூணு வருஷம் கழிச்சி…”

“அதாவது குறைந்த பட்சமா மூணு வருஷம்… ஆனா என் வீட்டுல இந்த வருஷ முடிவுலயே என்னை யாருக்காவது கட்டிக்கொடுத்திடுவாங்க… வீட்டுல தினம் தினம் என் கல்யாணப்பேச்சு தான். நேத்து நானும் என் அம்மாவும் துணிமணி எடுக்கப்போனோம்… துணிகடைக்காரன் ஒரு எவர்சில்வர் பானை ஃப்ரீயா கொடுத்தான். வீட்டுக்குப் போனதும் அதை என் சீர் பாத்திரத்தோடு என் அம்மா அடுக்கி வச்சிடுச்சு… இவ்வளவு ஏன்… நேத்து ஒரு ஐஸ்கிரீம் கேட்டேன். அதுக்கு என் அம்மா என்ன சொன்னாங்க தெரியுமா?”

“என்ன சொன்னாங்க?”

“நான் கத்திரிக்காய் வாங்கத் தான்; காசு வச்சிருக்கேன்… நீ கேட்குற சாக்கோபார் ஐஸ்-யை என்னால வாங்க முடியாதுடியம்மா… இனி இந்த மாதிரி சாமான் எல்லாம் உன் புருஷன் வீட்டுக்குப் போனதும் கேட்டு வாங்கிக்கோடியம்மா-ன்னு சொல்லிட்டாங்க… இப்ப எல்லாம் என் அம்மாகூட நான் எதைப்பற்றி பேசுனாலும் என் கல்யாணப் பேச்சுல வந்து நின்னிடுது… ஜனாகூட கடையில இருக்கிறபோது தான் மனசு அமைதியா இருக்கு… இன்னிக்கி ஜனாவுக்கு ஏதாவது சாப்பாடு செஞ்சி கொடுக்கணும்னு தோணுச்சு… அதுக்கும் நீ தடை போடுற… இப்படி சின்ன சின்ன சந்தோஷம்கூடவா எனக்கு கிடைக்கக்கூடாது? காலையில வெல்லன எழுந்திரிச்சி ஜனாவுக்காக ஆசைஆசையா லெமன் ரைஸ் ரெடி பண்ணேன்ப்பா…”

நிஷாவின் இக்கட்டான நிலை ப்ரதீபாவிற்குப் புரிந்தது. நிஷாவின் கையில் இருந்த டப்பாவை வாங்கிக்கொண்டாள். அதை வயிற்றோடு அழுத்திப் பிடித்து மெல்ல டப்பாவை திறந்த ப்ரதீபா,

“ஒரு லெமன் புளிஞ்சியா? ரெண்டு லெமன் புளிஞ்சியா?” என்று நிஷாவின் லெமன் சாதத்தை கொஞ்சம் எடுத்து ருசித்தபடியே கேட்டாள்.

“ஒரு லெமன் தான் புளிஞ்சேன்… ஏன் கேட்குற? புளிப்பா இருக்கா?”

“ஒத்த எழும்பிச்சம்பழத்தை புளியத்தான் காலையில வெல்லன எழுந்திரிச்சியா? அப்படினா ப்ரியாணி செய்யணும்னா விடிய விடிய தூங்க மாட்ட போலயே?” என்று ப்ரதீபா கேட்க திருமணத்தின் மீது ஜனாவிற்கு இருக்கும் வெறுப்பை நினைத்து சலனப்பட்டுக்கொண்டிருந்த நிஷா தனது மனக்கவலையை மறந்து  சிரித்தாள்.

“ப்ரதீபா… ப்ளீஸ்…” என்று சிரித்துக்கொண்டே நிஷா கோரிக்கை வைக்க,

“சரி சரி… ஜனாகிட்ட கொடுக்கறேன்… ஆனா இப்படி தேவதாஸ் மாதிரி மூஞ்சை வச்சிக்கிட்டுயிருந்தா தர மாட்டேன்.” என்றாள் ப்ரதீபா.

“சரி சரி… நான் கொடுத்தேன்னு சொல்லாத…”

“அதான் முதல்லயே வார்னிங் கொடுத்திட்டியே?” என்ற ப்ரதீபா நிஷா கொடுத்த லெமன் சாத டப்பாவை தனது சாப்பாட்டுக் கூடைக்குள் வைத்துக்கொண்டாள்.

மதிய உணவுவேளையின்போது ப்ரதீபா கொடுத்த லெமன் சாதத்தை ருசித்த ஜனா,

“இந்தா நிஷா… ப்ரதீபா லெமன் ரைஸ் கொடுத்தா… லெமன் ரைஸ் ரொம்ப நல்லா இருக்கு. சாப்பிடு…” என்று கூறி நிஷாவிடம் ஒரு டிப்பனின் மூடியில் லெமன் சாதத்தை வைத்துக்கொடுத்தான்.

“ஹா ஹா திருநெல்வேலிக்கே அல்வாவா?” என்று கேட்டு ப்ரதீபா சிரிக்க…

“என்ன சொன்ன?” என்று புரியாமல் கேட்டான் ஜனா.

“நிஷாவும் லெமன் ரைஸ் தான கொண்டு வந்திருக்கா? அவளுக்கு எதுக்கு? எனக்கு கொடு… பசிக்கிது…” என்று கூறி ஜனாவின் கையில் இருந்த மூடியை பிடுங்கி சாப்பிட ஆரம்பித்தாள் ப்ரதீபா.

“இதை பக்கத்துல வச்சிக்கிட்டு உனக்கு சாப்பாட்டை கொடுத்தது என் தப்பு தான்… சாரி நிஷா.” என்று ஜனா நிஷாவிடம் போலியாக மன்னிப்பு கேட்டான்.

நிஷா சிரிக்க, ப்ரதீபா ஜனாவின் தோளில் கிள்ளினாள்.

லெமன் சாதத்தில் ஆரம்பித்த நிஷாவின் விருந்தோம்பல் கோழி பிரியாணி வரை சென்றது.

சில தினங்கள் கழித்து ஒரு காலைவேளையில் வழக்கம்போல ப்ரதீபாவை ஜனா பிக் அப் செய்யப்போனபோது ப்ரதீபாவின் அன்னையிடம்,

“பிரியாணி சூப்பர் அக்கா… ஆனா எதுக்கு மெனக்கெடுறீங்க?” என்று ஜனா கேட்டு வைக்க… ப்ரதீபாவின் இதயம் ஒரு நிமிடம் அதன் லப்டப் பாஷையை பேச மறந்தது.

ஆனால் ப்ரதீபாவின் நல்ல நேரம் ஜனா கேள்வி கேட்டபோது அவளது அன்னை தேவி, ஜனாவின் பேச்சு புரியாமல் பதில் பேசாமல் பேந்தப்பேந்த விழிக்கத் தான் செய்தார்.

அந்த கண நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஜனாவை அந்த இடத்தில் இருந்து கிளப்பிச் சென்றாள் ப்ரதீபா. ஜனாவிற்கு துளிகூட சந்தேகம் வரவில்லை.

அன்றும் வழக்கம்போல ப்ரதீபாவின் கையில் ஒரு டப்பாவைக் கொடுத்து,

“இன்னிக்கி ஜனாவுக்கு பீஸ் பரோட்டா செஞ்சேன்ப்பா… நேத்து நைட் அம்மா பரோட்டா வாங்கி வந்துச்சு… அதுல மூனு பரோட்டா மிச்சம் ஆயிடுச்சு. அதை அப்படியே ப்ரிஜ்-ல வச்சிட்டேன். காலையில எழுந்து அதுல கொஞ்சம் முட்டை சேர்த்து முட்டை பரோட்டா பண்ணிட்டேன்.” என்றாள் நிஷா.

“இதுக்குப் பேர் என்ன சொன்ன?” – ப்ரதீபா.

“பீஸ் பரோட்டா…”

“இன்னிக்கி காலையில நானும் என் அம்மா கையில பீஸ் பரோட்டா ஆகத் தெரிஞ்சேன் தெரியுமா…” என்று சிரிக்காமல் சொன்னாள் ப்ரதீபா.

“என்ன சொல்ற?”

“ஜனா என் அம்மாகிட்ட ப்ரியாணி சூப்பர் அக்கான்னு பாராட்டுச்சு…”

“அய்யோ…”

“ஜஸ்ட் மிஸ் தெரியுமா? இனி இந்த ஆட்டத்துக்கு நான் வரலப்பா… ஒரு நாள் போல ஒரு நாள் இருக்காது. என் அம்மாவுக்கு தெரிஞ்சது ‘எவன்டி உனக்கு சாப்பாடு வாங்கிக்கொடுக்குறா’ன்னு என்னை சந்தேகப்பட ஆரம்பிச்சிடும். என்னை இனி இதுல கோர்த்துவிடாதப்பா…” என்று ப்ரதீபா கூறிவிட,

உடனே நிஷா செல்வலட்சுமியின் பக்கம் திரும்பி அவளது கையில் டிப்பன் பாக்ஸ்ஸை நீட்டி “நீ இதை ஜனாகிட்டக் கொடேன்” என்றாள்.

“அய்யோ நான் மாட்டேன்ப்பா… ப்ரதீபா வீட்டுல அவளோட அம்மா தான் டெரர் பீஸ்… தேவி அத்தை அடிச்சாக்கூட தப்பிச்சிடலாம்… ஆனா என் வீட்டுல என் அப்பா தான் டெரர் பீஸ்… விஷயம் லீக் ஆனா நான் என்னோட அப்பாவோட இரும்புக் கையால அடி வாங்கணும். டோர் டெலிவரிக்குப் போகும்போது ஜனா அண்ணா தினம் என் அப்பா கடையைத்தான் தாண்டிப்போகும் தெரியுமா? அப்போ பார்த்து ஜனா ஏதாவது லூஸ் டாக் விட்டுச்சு… என் கதை கந்தல் தான்…” என்று செல்வலட்சுமியும் பின்வாங்கினாள்.

 “இன்னிக்கி ஒரு நாளைக்கு மட்டும்ப்பா… நாளையிலிருந்து கொண்டு வரல… ப்ளீஸ் ப்ரதீபா” என்று நிஷா கெஞ்சினாள்.

“என்னால முடியாதுப்பா நிஷா…” – ப்ரதீபா.

“நீங்க தான என்னையும் ஜனாவையும் கோர்த்து வச்சி பேசுனீங்க? இப்ப நீங்களே பேக் அடிச்சா எப்படி?”

“நிஷாவோட ஒன்ஸைட் லவ் பண்ற டார்ச்சர் இருக்கே… என்னால முடியல. 10கிலோ வத்தல் மூடையை பாக்கெட் போடச் சொன்னா கூட நிம்மதியா சிரிச்சிகிட்டே பாக்கெட் போடலாம் போல… இவ டார்ச்சரை தாங்க முடியல…” ப்ரதீபா சலித்துக்கொண்டே நிஷாவின் கையில் இருந்து டப்பாவை வாங்கினாள்.

“எல்லாம் உன் ஜனா அண்ணா படுத்துற பாடு தான்… நான் என்ன பண்ண? தினம் நைட் கனவுல வந்து…”

“கனவுல வந்து…”

“என்னை ரேப் பண்றான்ப்பா…”

“ரேப்பா?”

“ம்…” என்று மேலும் கீழும் தலையாட்டினாள் நிஷா.

“எனக்கு 19 முடிஞ்சி 20 ஆகப்போகுது. எனக்கு ரேப்ன்னா என்னன்னு தெரியும்… ரொம்பத்தான்  கதையளக்காத…”

“நிஜமா… கனவுல ரேப் பண்றான்ப்பா…”

“நிஷா… ரேப்னா என்ன தெரியுமா? ஒரு பொண்ணுக்குப் பிடிக்காமல்… அவ விருப்பம் இல்லாமல் கட்டிப்பிடிச்சி தப்பு பண்ணா தான் அதுக்குப் பேரு ரேப்… கனவுல ஜனா கட்டிப்பிடிச்சப்ப அவன் கையை தட்டிவிட்ட??”

“இல்லயேப்பா…”

“அப்படின்னா அதுக்குப் பேரு ரேப் இல்ல…”

“சரி… ஹனிமூன் நடந்துச்சுன்னு வச்சிக்கோ… நைட் முழுக்க ஹனிமூன் கொண்டாடிட்டு, கடையில அவனை நேர்ல பார்க்கும்போது எப்படி இருக்கு தெரியுமா? அதான்… மனசுல இருக்கிற ஆசையை இப்படி விதவிதமா சாப்பாடு செஞ்சி கொடுத்து போக்கிக்கறேன்…”

“ஹா… ஹா…” ப்ரதீபா வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள்.

“எதுக்கு இப்ப நீ பேய் மாதிரி சிரிக்கிற? வேணா என்னை கேலி பண்ணாத…”

“ஒரு நிமிஷம் ஜனா போனுக்கு கால் போடேன்…”

“எதுக்கு?”

“என் போன்ல இருந்து கால் போடேன்… உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை காட்டணும்..” என்று ப்ரதீபா சீரியஸாகச் சொல்ல, உடனே நிஷா ப்ரதீபாவின் போனில் இருந்து ஜனாவின் போனிற்கு கால் போட்டாள்.

“கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை? கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை? ஆஆ ஆ… மருதமலை மாமணியே முருகய்யா… தேவரின் குலம் காக்கும் வேலய்யா, ஐயா… மருதமலை மாமணியே முருகய்யா…” என்ற பாடல் ஜனாவின் ரிங்டோனாக ஒலித்தது.

“கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?” என்று கேட்டு இன்னும் சிரித்தாள் ப்ரதீபா.

“கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை?” என்று செல்வலட்சுமியும் சிரித்துக்கொண்டே அடுத்த வரியைப் பாடினாள்.

நிஷா அவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே முறைக்க…

“இந்தப் பாட்டை ரிங்டோன்னாக வச்சிருக்கிறவன் தினம் கனவுல ஹனிமூன் கொண்டாடுறான்னு சொல்ற பார்த்தியா? அது தான் என்னால ஜீரணிச்சிக்கவே முடியல.” என்று சொல்லி ப்ரதீபா இன்னும் சிரிக்க,

“நான் தான் வர்றேன்னு சொன்னேன்ல? எதுக்கு போன் அடிச்சிக்கிட்டே இருக்க?” என்று ப்ரதீபாவைப் பார்த்துக் கேட்டுக்கொண்டே அந்த பிஸ்கட் குட்டவுனுக்குள் நுழைந்தான் ஜனா.

மூவரும் சிரிப்பதை நிறுத்திவிட்டு பேயைப் பார்ப்பதுபோல ஜனாவைப் பார்த்தனர்.

“என்ன? எதுக்கு அப்படிப்பார்க்கிறீங்க?” என்றவன் நிஷாவின் கையில் இருந்த டப்பாவைப் பார்த்து, “இன்னிக்கி ப்ரதீபா என்ன கொண்டு வந்தா?” என்று கேட்டான்.

“இந்தா ஜனா அண்ணா, பீஸ் ப்ரோட்டா.”  என்று கூறி கையில் இருந்த டப்பாவை ஜனாவின் கையில் கொடுத்தாள் ப்ரதீபா.

ஜனாவிற்கு ஏற்கனவே பயங்கர பசி. அதனால் அதை வாங்கிக்கொண்டு வேகமாக சாப்பிட ஆரம்பித்தான்.

ஜனாவின் டிப்பன் பாக்ஸ்ஸில் பரோட்டா காலியாக ஆரம்பிக்க இன்னொரு டிப்பன் பாக்ஸ்ஸை திறந்து அதையும் ஜனாவிடம் கொடுத்தாள் நிஷா.

“இன்னொரு பாக்ஸ் இருக்கா??”

“ஆமா, ப்ரதீபா எனக்காக கொண்டு வந்திருந்தா. எனக்கு பரோட்டாவே பிடிக்காது. நீ சாப்பிடு. எதுக்கு நின்னுகிட்டே சாப்பிடுற? உட்கார்ந்து சாப்பிடு…” என்று அவனுக்கு பரிமாறுவதில் குறியாக இருந்தாள் நிஷா.

“விட்டா இலை போட்டு சாப்பாடு போடும் போல… அவன் தட்டுல பரோட்டா தீரத் தீர இந்தம்மா பரிமாறுவதைப் பாரேன்..” என்று செல்வலட்சுமி ப்ரதீபாவின் காதில் ரகசியமாகச் சொன்னாள்.

“ப்ரதீபா பீஸ் பரோட்டா சூப்பர். உன் அம்மா எப்படி செஞ்சாங்க?” என்று ஜனா கேட்க, ப்ரதீபா தன்னைச் சுற்றி பின்னப்பட்ட பொய் வலையை நினைத்து நொந்துகொண்டாள்.

“மச்சி… எப்பன்னு தெரியல… ஆனா நீ உன் அம்மா கையில பீஸ்பரோட்டா ஆகப்போறது கன்பர்ம் டீ…” என்று செல்வலட்சுமி ப்ரதீபாவின் காதில் கிசுகிசுத்துவிட்டு சாப்பாட்டு பேக்கை எடுத்துக்கொண்டு அமர்ந்தாள்.

அனைவரும் தங்களது சாப்பாட்டு பேக்குடன் அமர்ந்தனர். ஜனா ப்ரதீபாவின் சமையல் திறமையை மறந்து தன்னைச் சுற்றி இருந்த டிப்பன்களில் லயித்துப்போயிருந்தான்.

ஆனால் சாப்பாட்டையே நினைக்காமல் அணில் போல தனது உணவை கொரித்துக்கொண்டிருந்தாள் ப்ரதீபா.

எதிர்காலத்தில்… அதாவது, நாளையோ, மறுநாளோ… என கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் அவளது எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களை ப்ரதீபா தன் மனதில் நினைத்துப்பார்த்தாள். அக்கணமே போட்டோவில் கூட கண்டிராத சாய்பாபாவை மனதுக்குள் நினைத்து வேண்டிக்கொள்ள ஆரம்பித்துவிட்டாள்.

“என்னப்பா முணுமுணுக்குற? சாமி கும்பிடுறியா?” செல்வலட்சுமி கேட்க,

“மொட்டைபோடுறதை மட்டும் தான் விட்டு வச்சிருக்கேன். மத்த எல்லா நேத்திக்கடனும் போட்டாச்சு…” என்றாள் ப்ரதீபா.

செல்வலட்சுமிக்கு சிரிப்பு தாங்கவில்லை. புரையேறியபடியே சாப்பிட்டாள்.

“எதுக்கு செல்வா சிரிக்கிற?” என்று ஜனா கேட்டபோது,

“ஜனா ஒரு நிமிஷம் இங்க வாயேன்…” என்று பாலனின் குரல் கேட்க செல்வலட்சுமியிடம் தான் கேட்ட கேள்வியை மறந்து ஜனா வேக வேகமாகச் சாப்பிட்டு முடித்து கடைக்குள் சென்றான்.

நாட்கள் சென்றன.

சாய்பாபாவின் கருணையால் ப்ரதீபா அத்தனை நாட்களும் காப்பாற்றப்பட்டாள்.

Advertisement