Advertisement

வேகமாக அருணிடம் வந்த அவனது அன்னை, “மஹாவுக்கு தீட்டு பட்டிருக்கு. இப்பவே ஆஸ்பத்திரி போகணும்டா. ஒரு ஆட்டோ பிடி.” என்றார்.

ஜனாவும் அருணும் ஓடிச் சென்று ஆட்டோ பிடித்தனர்.

அருண்  தான் ஆட்டோவிற்கு 200 ரூபாய் பணம் கட்டினான்.

மருத்துவமனைக்குள் நுழைந்த நேரத்தில் இருந்து அரை மணி நேரத்திற்கு ஒரு முறை அவனது கையில் மெடிக்கல் பில் ஒன்று  தரப்பட்டது. யாரிடமோ போனில் பேசி பணத்திற்கு ஏற்பாடு செய்தான் அருண்.

அதை வேடிக்கை பார்ப்பதை தவிர ஜனாவினால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை..

“மச்சி என் கையில காசே இல்ல டா… மாசக் கடைசி…” என்று அமைதியான குரலில் ஜனா அருணிடம் கூறிட, “விடு மச்சி, எனக்குத் தெரியாதா? அதான் வட்டிக்கு பணம் வாங்கிருக்கேன். இதுவரை 30000 வாங்கிட்டேன்… ஏற்கனவே உன்கிட்ட வாங்குன ஆயிரம் ரூபாயை நான் இன்னும் கொடுக்கல, அதுவே மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு… இதுல நான் இன்னும் உன்கிட்ட பண உதவி கேட்கணுமா…” என்றான் அருண்.

“ஜி ஹெச்சுக்கு போயிருந்தா இந்த செலவெல்லாம் கிடையாது… நம்ம சக்திக்கு தனியார் ஆஸ்பத்திரியில பிரசவம் பார்க்க முடியுமா?” என்று அருணின் அன்னை புலம்பிக்கொண்டே இருந்தார்.

“மணி 9 ஆயிடுச்சு… நான் கிளம்பவா? டாக்டர் என்ன சொன்னாங்கன்னு கால் பண்ணி சொல்லு. சரியா?” என்று அருணின் கையைப் பிடித்து ஆறுதல் படுத்திக்கொண்டே கேட்டான் ஜனா.

“சரி டா. நீ கிளம்பு,” என்று அருண் சொன்ன பிறகும் கிளம்பாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்த ஜனா, “அருண்ணு…” என்று பேச்சை ஆரம்பிக்க,

“நீ என்ன சொல்லப்போறன்னு எனக்குத் தெரியும்… எவ்வளவு பிரச்சனை வந்தாலும் குடிக்காமல் இருக்க டிரை பண்றேன் டா…” என்றான் அருண்.

 ஜனா பதில் ஏதும் சொல்லாமல் கடைக்கு கிளம்பி விட்டான்.

****

மதிய உணவு வேளையின் போது அனைவரும் ஒன்றாக பிஸ்கட் குட்டவுன்னில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தபோது…

ப்ரதீபா தனது தயிர் சாதத்தை வடையோடு சாப்பிட்டு கொண்டே அருணை பற்றிய பேச்சை எடுத்தாள்.

“அருண் அண்ணாவுக்கு ஆம்பளப் புள்ள பொறந்திருக்காம்… இருபது நாள் முன்னேயே டெலிவரி ஆகிடுச்சாம்… ஆனா புள்ள ஆரோக்கியமா இருக்காம்… அம்மாh இப்பத்தான் போன் போட்டாங்க…” என்று ப்ரதீபா சந்தோஷமாகச் சொல்ல,

“இந்த குடியை மட்டும் நிறுத்திட்டா அருண் அண்ணா லைப் சூப்பரா இருக்கும்… எப்படி தான் இப்படி குடிகாரனா மாறினான்னு தெரியல…” என்றாள் செல்வலட்சுமி.

“குடியை நிறுத்துனா அருண் லைப் மாறாது” என்று வாய்க்குள் தனது சாம்பார் சாதத்தை மென்று கொண்டே சொன்னான் ஜனா.

“என்ன சொல்ற ஜனா அண்ணா? அருண் அண்ணா வேற எதுவும் கெட்ட பழக்கம் வச்சிருக்கானா..” – செல்வலட்சுமி.

“அதெல்லாம் இல்ல, ஆனா ஒரு பெரிய தப்பு பண்ணி வச்சிருக்கான்..”

“என்ன தப்பு பண்ணி வச்சிருக்கான்?”

“அவன் கல்யாணம் பண்ணது தப்பு.. நாலு காசு இல்லாம கல்யாணம் பண்ணலாமா?”

“அவனுக்கு 28 வயசு ஆயிடுச்சு ஜனா அண்ணா… இன்னும்  கல்யாணம் பண்ணாம இருக்க முடியுமா…?” – செல்வலட்சுமி.

“வயசானா ஆகிட்டு போகுது… பாக்கெட்ல பணம் இல்லாம பொண்டாட்டிய வச்சு குடித்தனம் பண்ண முடியுமா…?”

“காசு பணம் சேர்த்தா தான் கல்யாணம் பண்ண முடியும்ன்னா எல்லாரும் 35 வயசுக்கு மேல 40 வயசுக்கு மேல தான் கல்யாணம் பண்ண முடியும்…” -ப்ரதீபா.

“பரவாயில்லை ப்ரதீபா… கல்யாணம் பண்ணிட்டு பணத்துக்கு நாயா பேயா அலையறதுக்கு அது எவ்வளவோ பரவாயில்லை… 35 வயசுல கல்யாணம் பண்றது பெட்டர்.”

“ஜனாவும் செல்வலட்சுமியும் ப்ரதீபாவும் தீவிரமாக தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தபோது அமைதியாக இந்த நிஷா, “ஜனா உன் வயசு என்ன?” என்று சட்டென்று கேட்டாள்.

“நாளையில இருந்து 27…” என்று ஜனா சொல்லவும்…

“அட நாளைக்கு உனக்கு பெர்த்டேல?” என்று சிரித்த முகமாய் கேட்ட ப்ரதீபா ஜனாவிடம், “ஜனா அண்ணா எனக்கு 3 டைரி மில்க் வாங்கித்தரணும்.” என்று உரிமையாய் கேட்டாள்.

“எல்லாம் வாங்கியாச்சு தாயே… உனக்கும் செல்வாவுக்கும் டைரி மில்க்… நிஷாவுக்கு பைவ் ஸ்டார்… பாலண்ணாவுக்கு வெஜ் பிரியாணி… எல்லாம் பக்காவா ப்ளான் பண்ணிருக்கேன்…” என்ற ஜனா, “ப்ரதீபா வா அரட்டையடிச்சது போதும்… வந்து கையைக் கழுவு… சாப்பிட்ட கை காஞ்சிட்டே இருக்கு பாரு…” என்று சொல்லியபடி தனது கைகளை கழுவிக்கொள்ள எழுந்தான்.

ப்ரதீபாவின் இடைபுகுதலால் ஜனாவின் வயதைப் பற்றிய நிஷாவின் ஆர்வத்தை ஜனா கவனிக்கவில்லை. அவன் எதைத் தான் கவனித்தான்? இதை கவனிப்பதற்கு?

ஜனா அவனது வேலையைப் பாரக்கச் சென்றதும் வழக்கம்போல நிஷாவை ஓட்ட ஆரம்பித்தார்கள் ப்ரதீபாவும் செல்வாவும்.

“ஜனா உனக்கு பிடிக்கும்னு பைவ் ஸ்டார் வாங்கி வைத்திருக்கு பா…” என்று ப்ரதீபா ஆரம்பிக்க நிஷா பொங்கிவிட்டாள்.

“போதும் ப்ரதீபா இப்படியே ஓட்டிகிட்டே இருக்காதீங்க… எதுவுமே நடக்கப் போறது இல்ல.. சும்மா வெறும் வாயில அவுள் மெல்ற மாதிரி என்னையும் ஜனாவையும் சேர்த்து வச்சி பேசிக்கிட்டு இருக்கீங்க… உங்களுக்கு நேரம் போகலன்னா நான் தான் கிடைச்சேனா?”

“என்ன நிஷா இப்ப சொல்லிட்ட? நேரம் போகாமலா நாங்க இப்படி பேசுறோம்? ப்ராமிஸ்ஸா இல்ல நிஷா… நிஜமாவே ஜனாவுக்கு உன்ன பிடிச்சிருக்கு…”

“பிடிச்சா மட்டும் போதுமா? அது லவ்ங்குற ஸ்டேஜுக்கு வர வேண்டாமா? தேவையில்லாம என்னோட மனசுல ஆசையை வளர்த்து விட்டுட்டீங்க…”

“உன் மேல ஜனாவுக்கு இருக்கிற பிடித்தம் கண்டிப்பா ஒரு நாள் லவ்வா மாறும்.. எங்களுக்கு ஜனாவைப் பத்தி தெரியும்…”

“அப்படியே மாறினாலும் அடுத்த ஸ்டேஜுக்கு அவன் கொண்டு போக மாட்டான்… மனசுக்குள்ள வச்சி பொதிச்சிடுவான்… என்னை எவ்வளவு பெரிய சிக்கல்ல இழுத்துவிட்டுருக்கீங்க தெரியுமா?”

“நிஷா நீ என்ன சொல்றன்னு எனக்கு புரியல…”

“ஜனா கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டான் ப்ரதீபா… எங்க வீட்ல இந்த வருஷமே மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க… வீட்டு வாடகையில ஆயிரம் ரூபாய் கூட்டிட்டாங்கன்னு போன வாரம் முழுக்க எங்கிட்ட புலம்பி கொண்டு இருந்தான்… இந்த நிலைமையில் சொந்தமா வீடு கட்டாமல் கல்யாணத்தை பத்தி நினைக்க கூட மாட்டான்… ஜனாவுக்கு என்னை பிடிக்கும் தான்… நானும் ஒத்துக்கறேன்… ஆனா இதை லவ் என்கிற ஸ்டேஜ் வரைக்கும் ஜனா எடுத்துட்டு போக மாட்டான்… அப்படியே லவ் பண்ணாலும் கல்யாணம் வரைக்கும் எடுத்துட்டு போக மாட்டான்…”

“நிஷா கோபப்படாத… எல்லாம் சரியா தான் நடக்கும்…” என்ற ப்ரதீபாவின் குரல் நிஷாவின் புலம்பலுக்கு முன்னே காற்றில் கரைந்தே போய்விட்டது. நிஷா நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தாள்.

“ஆனா நான் ஒரு முடிவு பண்ணி இருக்கேன்… ஜனா மேல இருக்கிற பிடித்தத்தை லவ்ங்குற ஸ்டேஜ் வரைக்கும் என் மனசு எடுத்து போயிருச்சு… எனக்கு ஜனாவுக்கும் கல்யாணம் ஆகுதோ ஆகலையோ அவன என்னைக்குமே நான் லவ் பண்ணிட்டு தான் இருப்பேன்…”

“ஜனா ஒன்னும் கோழ கிடையாது… அது நல்ல மூட்ல இருக்கும்போது உன் லவ்வை அதுகிட்ட சொல்லு… ஆரம்பத்துல ஏத்துக்கலன்னாலும் கொஞ்ச நாள்ல ஏத்துக்கும். எனக்கு ஜனா அண்ணா பற்றி தெரியும் நிஷா… நேர்ல போய் பேசிப்பாரு…”

“நேர்ல கேட்டு அது மாட்டேன்னு சொல்லிட்டா? அந்த நிமிஷமே உயிரே போயிடற மாதிரி இருக்கும் ப்ரதீபா… என்னால அதை நினைச்சிக்கூட பார்க்க முடியல…”

“யாராவது ஒருத்தர் மனசுல இருக்கிற ஆசையை சொன்னாதான கிளிக் ஆகும்? உங்க ரெண்டு பேரையும் நாங்க  தான்  சேர்த்து வச்சிப் பேசினோம்… ஆனா அந்த நினைப்பு எங்களுக்கு எப்படி வந்திச்சு? நீ ஜனாகூட பழகுற விதத்தைப் பார்த்து சந்தேகப்பட்டோமா? இல்ல ஜனா உன்கூட பழகுறதைப் பார்த்து சந்தேகப்படடோமா?”

“ஜனா உன்கூட பழகுறதைப் பார்த்து தான் சந்தேகப்பட்டு பேச ஆரம்பிச்சீங்க…”

“கரெக்ட்… அதான் சொல்றேன்… ஜனாவின் ஆழ் மனசுல நீ ராணி மாதிரி உட்கார்ந்திருக்க… அதுக்கும் உன்னை பிடிச்சிருக்கு.”

“அந்த மரக்கட்டைக்கு என்னை பிடிச்சா என்ன பிடிக்காட்டி நான் என்ன? நான் அதை லவ் பண்ணிட்டு தான் இருப்பேன்… எங்க அப்பாவோட குலதெய்வம் பேச்சியம்மன்… அந்த ஆத்தாகிட்ட ஜனா என்னை லவ் பண்ணணும்… நானும் ஜனாவும் சேரணும்னு… கடைசி நிமிஷம் வரை வேண்டிக்கிட்டு தான் இருப்பேன்.” என்று கூறி நிஷா கன்னங்களில் வழிந்த கண்ணீரை தனது துப்பட்டாவில் துடைத்துக்கொண்டபோது,

“பில் போட யாருப்பா இருக்கீங்க?” என்ற குரல் பில் கவுண்டரில் இருந்து கேட்கவும் வேகமாக ப்ரதீபாவும் செல்வாவும் கடைக்குள் சென்றனர்.

நிஷா பேக்கிங் செய்யும் இடத்தில் இருக்க பில் கவுன்டரில் இருந்த ப்ரதீபாவும் செல்வாவும் பாலனிற்கு கேட்காத குரலில் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

“நாம தான் தேவை இல்லாம நிஷா மனசுல ஆசையை வளர்த்து விட்டுட்டோம்… இது மட்டும் ஜனா அண்ணாவுக்கு தெரிஞ்சது…” என்று செல்வா பீதியுடன் கேட்க,

“நைனா கடையில போடுற கொத்து புரோட்டா மாதிரி நம்மள கொத்து புரோட்டா போட்டுரும்…” என்று வருங்காலத்தில் தனக்கு கிடைக்கப்போகும் தண்டனையைப் பற்றி ஒளிவு மறைவின்றி சொன்னாள் ப்ரதீபா.

Advertisement