Advertisement

அத்தியாயம் 14

நிஷா அந்த அறையைச் சுற்றிப் பார்த்தாள். அறை முழுவதும் வெள்ளை நிறத்தில் உயர்ரக பெயின்ட் அடிக்கப்பட்டு இருந்தது. அவளைச் சுற்றி நூத்துக்கும் மேற்பட்ட பிஸ்கட்டுகள் அட்டைப் பெட்டிகளுக்குள் இருந்தன.

“இது எல்லாம் நம்ம சூப்பர்மார்கெட் சரக்குங்க.” என்று தன்னிடமே பேசிக்கொண்ட நிஷா தன் எதிரே ஜனா நிற்பதைக் கண்டதும் இதயப்பகுதிக்குள் நடுக்கத்தை உணர்ந்தாள்.

“ஏய் நிஷா… ப்ரதீபா என்கிட்ட விஷயத்தை சொன்னா…” –ஜனா.

“சொல்லிட்டாளா? என்ன சென்னா?”- நிஷாவின் முகத்தில் வியர்வைத் துளிகள்.

“அவ சொன்னதை விடு. நான் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்.”

“என்ன சொல்லணும்?”

“ஐ லவ் யூ.”- ஜனா.

“என்ன???”

“ஐ லவ் யூ சொன்னேன் நிஷா.”

“ஓ… சரி, சரி.”

“என்ன சரின்னு சொல்ற? திரும்ப ஐ லவ் யூன்னு சொல்லு.”

நிஷா பேசாமல் அமைதியாக நின்றாள்.

“என்ன? பிடிக்கலயா?”

“இல்ல… பயமா இருக்கு.”

“எதுக்கு பயமா இருக்கு?”

“சும்மா தான்… பயமா இருக்காதா?”

“நான் முத்தம் கொடுத்திடுவேன்னு பயப்படுறியா?”

“ச்ச ச்ச அந்த பயம் எல்லாம் இல்ல…”

“அப்படின்னா நான் முத்தம் கொடுக்கலாமா?”

“அய்யோ வேணாம்… நீயா ஜனா இப்படி பேசுறது? என்னால நம்பவே முடியல.”

“எதை நம்ப முடியல? நான் ஐ லவ் யூ சொன்னதையா? முத்தம் கொடுப்பேன்னு சொன்னதையா?”

“முத்தம் கொடுப்பேன்னு சொன்னதை…”

“அப்படின்னா நான் ஐ லவ் யூ சொல்வேன்னு எதிர்ப்பார்த்து தான் இருந்திருக்க?”

“ம்… எதிர்பார்த்தேன்னு சொல்ல முடியாது… ஆசைப்பட்டேன்னு சொல்லலாம்.”

“அப்படின்னா என்னோட ஐ லவ் யூ மட்டும் வேணும்… முத்தம் வேணாம்… அப்படித்தான?”

நிஷா குனிந்து சிரித்துக்கொண்டே, தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.

“நான் ஐ லவ் யூ சொல்லணும்னு நீ ஆசைப்படுற… உனக்கு முத்தம் கொடுக்கணும்னு நான் ஆசைப்படுறேன்… ரெண்டு பேர் ஆசையும் நிறைவேறணும்ல?”

நிஷா அவனது முகத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டே மெல்ல பின்னால் நகர்ந்தாள்.

“கிட்ட வா… உனக்கு முத்தம் கொடுத்துட்டே ஐ லவ் யூ சொல்றேன்.” என்ற ஜனா ஓட்டம் பிடிக்க தயாராக இருந்தவளை மின்னல் வேகத்தில் நெருங்கி அவளது தாமரை இதழ்களை தன் வசப்படுத்தினான்.

தன் உயிரையே அவனது உதடுகள் உறிஞ்சிக்கொண்டிருந்த வேளையில் மெல்ல கண்களைத் திறந்தாள் நிஷா.

தனது உதடுகள் செய்யும் வேலையை நிறுத்தாமல் அவளது கண்களைப் பார்த்து தெளிவில்லாத குளறலாய் “ஐ லவ் யூ” சொன்னான் ஜனா.

ஜனாவும் நிஷாவும் இரவு 12 மணியளவில் காதல் செய்து கொண்டிருக்க… மின்விசிறி சுற்றுவதை நிறுத்தியது.

பின்னந்தலை முழுவதும் வியர்வையில் நனைந்திருக்க வியர்த்து விறுவிறுத்து பாதி தூக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்தாள் நிஷா. ஜனாவின் ‘ஐ லவ் யூ’  என்பது கனவு என்று அவளுக்கு புரிந்திட வெகு நேரம் ஆனது.

சில கனவுகள் பயமுறுத்தும். சில கனவுகள் சிரிக்க வைக்கும். சில தொந்தரவு செய்யும்… இன்னும் சில ஏங்க வைக்கும். ஆனால் நிஷாவின் கனவுகள் இவை அத்தனையையும் செய்தன. பயமுறுத்தின, சிரிக்க வைத்தன, தொந்தரவு செய்தன, ஏங்க வைத்தன.

அவளது கனவுகள் வளர்ந்தன… நீண்டன… கடல் அலைபோல ஆர்ப்பரித்து அடங்கின…

எத்தனை உயரமாய் வளர்ந்தன?

அவளும் ஜனாவும் தங்களது முதலிரவைக் கொண்டாடும் நாள் வரை வளர்ந்தன.

எத்தனை நீளாமாய் நீண்டன?

இருவரது தோலிலும் சுருக்கங்கள் தெரியும் நாள் வரை நீண்டன.

கடல் அலை போல எப்போது ஆர்ப்பரித்தன?

கனவில் காண்பது நிகழ்காலத்தில் நிஜமாகாமல் அவளை ஏமாற்றும்போது கடல் அலை போல அவளது கனவுகள்கூட ஆர்ப்பரித்தன.

*****

“ப்ரதீபா என் கையில என்ன இருக்குன்னு பாரேன்…”

“என்ன இருக்கு? மைசூர் சான்டல் சோப்பு வச்சிருக்க…”

“ச்ச ச்ச… இந்த சோப்புக்குள்ள லவ் லெட்டர் வச்சிருக்கேன். இந்த சோப்பை ஜனா தான எனக்கு வாங்கிக்கொடுத்துச்சு…”

“வாங்கிக்கொடுக்கல… ப்ரீ சோப்புன்னு உன் கையில கொடுத்துச்சு. அதுவும் பாலண்ணா கொடுக்கச் சொன்னாரு.அதான் கொடுத்துச்சு.”

“எது எப்படியோ? என்கிட்ட அது கையால கொடுத்துச்சுல?”

“ஆமா… அப்படியும் வச்சிக்கலாம்.”

“அதனால இந்த சோப்பை பத்திரமா வச்சிருக்கேன்…” என்ற நிஷா டப்பாவில் இருந்து சோப்பை வெளியே எடுத்து அதை முகர்ந்து பார்த்தாள்.

“அது என்ன? சோப்பைச் சுற்றி ரெண்டு ஸ்டிக்கி நோட் ஒட்டிருக்க?” என்று கூறி சோப்பை நிஷாவிடம் இருந்து வாங்கி அதில் இருந்த ஸ்டிக்கி நோட்டை வாசித்தாள் ப்ரதீபா.

“ஒரு ஸ்டிக்கி நோட்ல ஐ லவ் யூ ஜனா-ன்னு எழுதிருக்கு… இன்னொரு ஸ்டிக்கி நோட்ல ஐ லவ் யூ நிஷா-ன்னு எழுதிருக்கு?” ப்ரதீபா கேட்டாள்.

“ஜனா எப்ப என்னைப் பார்த்து ஐ லவ் யூ சொல்றது?? நான் எப்ப என் காதால அதைக் கேட்குறது??” என்று கூறி பெருமூச்சுவிட்டாள் நிஷா.

“அதுக்கு இப்போதைக்கு வாய்ப்பு இல்ல…”

“அதான் ஜனா எனக்கு எழுதுற மாதிரி நானே எனக்கு ஐ லவ் யூ சொல்லிக்கிட்டேன்.”

“ஒரு இன்ச் ஸ்டிக்கி நோட்ல லவ் லெட்டரா?”

“ஜனாவுக்கு என் மேல லவ் வரும்போது இதை அதுகிட்ட கொடுக்கணும்.” என்று கூறி மைசூர் சான்டல் சோப்பை ப்ரதீபாவிடமிருந்து வாங்கிக்கொண்டாள் நிஷா.

அப்போது “நிஷா, ப்ரதீபா… எங்க இருக்கீங்க?” என்று பாலண்ணின் குரல் கேட்கவும் சோப்பை பெட்டிக்குள் அடைத்து தனது கூடையில் வைத்துவிட்டு கடைக்குள் சென்றாள் நிஷா. அவள் பின்னாலேயே ப்ரதீபாவும் கடைக்குள் நுழைந்தாள்.

ஆள் அரவம் அற்ற பிஸ்கட் குட்டவுனிற்குள் கதவைத் தள்ளிக்கொண்டு செல்வலட்சுமி நுழைந்தபோது கதவோரமாய் இருந்த நிஷாவின் கூடை தரையில் சாய்ந்தது.

நிஷாவின் மைசூர் சான்டல் சோப் பெட்டி தரையில் விழுந்தது.

குட்டவுனை விட்டு வெளியேறும்போது மிகவும் பொறுப்பான பிள்ளையாக தரையில் கிடந்த மைசூர் சான்டல் சோப்பை கடைக்குள் எடுத்துச் சென்று ‘மைசூர் சான்டல் சோப்’ வரிசையில் அடுக்கி வைத்தாள் செல்வலட்சுமி.

*********

“ப்ரதீபா என் கூடைக்குள் சோப்பு பெட்டி வச்சிருந்தேன் பார்த்த?”

“இல்லயே…”

“ஓ அதுவா? அதை தான் நான் சோப்பு ராக்ல அடுக்கி வச்சேனே?” என்றாள் செல்வலட்சுமி.

நிஷாவிற்கு அழுகை வந்தது.

“நிஷா அதுக்குள்ள லவ் லெட்டர் வச்சிருந்தேன்ப்பா…”- ப்ரதீபா.

அச்சச்சோ… என்று கூறி தான் அடுக்கி வைத்திருந்த இடத்தில் தேடினாள் செல்வா. ஆனால் அவர்களது சோப் கிடைக்கவில்லை.

“ஏதாவது பிரச்சனை ஆகுமா ப்ரதீபா?” என்று கேட்ட நிஷாவின் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது.

“ஒண்ணும் ஆகாது. விடு. கஸ்டமர் கைக்கு போனா கடைக்கு போன் போட்டு சொல்வாங்க… நாம தான போனை அட்டென்ட் பண்ணுவோம்? சமாளிச்சிகலாம். ஒரு சோப்புக்காக யாரும் கடைக்கு வர மாட்டாங்க.”

மாதங்கள் சென்றன…

“சோப்பு பற்றி யாருமே கேட்கலயே?” நிஷாவின் குரலில் வருத்தம் இருந்தது.

“அதான… நல்லவேளை… அதை வாங்குன கஸ்டமர் கண்டுக்காமல் விட்டுட்டாங்க போல…” –ப்ரதீபா.

“ஆனா என்னோட ஜனா கொடுத்த முதல் கிஃப்ட் பறிபோயிடுச்சுப்பா…”

“இது ரொம்ப ஓவர்ப்பா நிஷா… மாட்டாமல் இருந்ததே பெரிசு…” என்று சொல்லி நிஷாவின் வாயை ப்ரதீபா அடைத்தாலும் நாளுக்குள் நாள் நிஷாவின் காதல் தொந்தரவுகள் கூடிக்கொண்டே போனது.

****

அருணின் திருமணம் முடிந்து 10 மாதங்கள் கடந்துவிட்டன.

அதாவது நிஷா ஜனாவின் உலகத்திற்குள் நுழைந்து ஓர் ஆண்டு முடிந்துவிட்டது. ஜனா 27 வயதை நெருங்கிக்கொண்டிருந்தான். ரோபோ போலவே உழைத்து உழைத்து நாட்களை கடத்திக்கொண்டிருந்தான் ஜனா.

டெலிவரி கொடுத்துவிட்டு வந்த ஜனாவிடம் ஓடிவந்த ப்ரதீபா,

“ஜனா உனக்கு விஷயம் தெரியுமா? அருண் அண்ணே காலையில வரும்போதே… ஃபுல் போதையாம். முதலாளி அவனை வீட்டுக்கு பத்தி விட்டுட்டாரு. நீ போய் அருண் அண்ணாவை பார்த்துட்டு வாயேன். அது ரொம்ப மூட் அவுட்ல இருக்கும்ல?”

“சரி… நீ வேலைய பாரு… சாயங்காலம் அருண் வீட்டுக்கு போய் அவன் கிட்ட பேசி கொடுக்கிறேன்…”

“அருணை வேலையை விட்டு பாலண்ணா தூக்கிடுவாரா?”

“ச்ச ச்ச…”

“இல்ல கடையில எல்லாரும் அப்படித்தான் பேசிக்கிறாங்க…”

“நான் அண்ணாகிட்ட பேசிக்கறேன். நீ பயப்படாமல் போ ப்ரதீபா…” என்று ப்ரதீபாவிடம் சொன்ன ஜனா பாலனிடம் பேச சந்தர்ப்பம் கிடைத்தபோது அதை நழுவவிடாமல் அருணைப் பற்றி பேசினான்.

“அருணை வேலையை விட்டு தூக்கிடுவீங்களா பாலன் அண்ணா?”

“சேச்சே இன்னைக்கு தப்பு பண்ணான்… அதனால இன்னிக்கி வர வேணாம்னு சொன்னேன். வேலையை விட்டு எல்லாம் தூக்கல… உன்கிட்ட யார் சொன்னா…”

“கடையில எல்லாரும் அப்படிப் பேசுறாங்கன்னு ப்ரதீபா சொல்லுச்சு… அதான் அருண் நடத்தை பிடிக்காம அவனை வேலையை விட்டு நிறுத்திட்டீங்களோன்னு நினைச்சேன்… வேலையில இருந்து நிறுத்துறதா இருந்தா கொஞ்சம் யோசிங்க அண்ணே… இப்பதான் அவனுக்கு கல்யாணம் ஆயிருக்கு… மஹா நிறைமாசமா இருக்கு… அவனுக்கு நிறைய டென்ஷன் வீட்ல…”

“அதான் தூக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்ல? போ ஜனா போய் வேலையைப் பாரு.” என்று பாலன் உறுதியான குரலில் கூறியதும் ஜனா நிம்மதியான மனநிலையில் மறுநாள் காலை 8 மணிக்கெல்லாம் அருணைப் பார்க்க அவனது வீட்டிற்குச் சென்றான்.

“என்ன ஜனா காலங்காத்தால எட்டு மணிக்கு வந்திருக்க? வா வீட்டுக்குள்ள..” என்றுபடி அருண் அவனை வரவேற்றான்.

“நேத்து கடைக்கு வரும்போது போதையில இருந்தியாடா?”

“சத்தமா பேசாத மாஹாவுக்கு உடம்பு சரியில்லை… அவளுக்கு கேட்டுறப்போகுது… மஹாவும் அம்மாவும் அடுப்படியில தான் இருக்காங்க.”

“என்ன பண்ணுது மஹாவுக்கு?”

“ரெண்டு நாளா வாந்தியா எடுத்துட்டு இருக்கா…”

“ஹாஸ்பிட்டல் போனியா?”

“ம்… ப்ரைவேட்டுக்கு தான் போனேன். கையில இருந்த 5000மும் காலி… அந்;த டென்ஷன்ல தான்…” என்று அருண் சொன்னபோது, “வாங்க ஜனா அண்ணா என்ன இந்நேரம்?” என்று கேட்டு அவன் அருகே வந்தாள் மஹா.

“நான் வீடு கட்டப்போறேன்ல? அது விஷயமா அருண்கிட்டப் பேசுணும்னு வந்தேன்மா. 9 மணிக்கு கடைக்குப் போணும்ல? அதான் 8 மணிக்கே வந்துட்டேன்.” என்று ஏதோ உளறி சமாளித்தான் ஜனா.

“ஓ…” என்று பேசிக்கொண்டே வீட்டின் பின்பக்கம் இருந்த பாத்ரூமுக்கு மஹா சென்றாள்.

“யாரு வந்திருக்கிறது?” ஜனாவா என்று அடுப்படியின் ஜன்னல் வழியாகப் பார்த்து கேட்ட அருணின் அன்னையிடம், “நான் தான் ஜனா வந்துருக்கேன் ஆன்ட்டி.” என்று சப்தமாகக் கூறி ஜனா தன் இருப்பை உணர்த்தினான்.

“இருப்பா… ரெண்டே நிமிஷத்துல வந்துடுறேன்” என்று அவனுக்கு பதில் தந்த அருணின் அன்னை மும்முரமாக சமைத்துக் கொண்டிருந்தார்.

“சரி ஆன்ட்டி… நீங்க பொறுமையா வாங்க… நான் அருண்கூட பேசிட்டு இருக்கேன்…” என்று பதில் கொடுத்த ஜனா,

“இன்னிக்கி வேலைக்கு வந்திடுவீல?” என்று அருணிடம் கேட்டான்.

“ம்…”

“என்னடா ம்-ன்னு உச்சுக்கொட்டுற? தெளிவா பேசு.”

“வர்றேன்டா… பாலண்ணா முகத்துல எப்படி முழிக்கிறதுன்னு தெரியல…” என்று அருண் ஜனாவிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது பாத்ரூமுக்குச் சென்ற அருளின் மனைவி வெளுத்துப் போன முகத்துடன் வீட்டிற்குள் வந்தாள்.

மெல்ல அடுப்படிக்குள் சென்றவள் தனது மாமியாரிடம் ஏதோ பேசினாள்.

Advertisement