Advertisement

“வீட்டுக்குள்ள வாங்கன்னு பாலண்ணா கூப்பிடுறாரு… ஆனா ஜனா உள்ளேயே நுழைய மாட்டேன்னு சொல்லிடுச்சு. அவர் மனசுல என்ன நினைப்பாரு? பாலண்ணாவோட ரெண்டாவது பையனுக்கு ஒரு வயசு தான் ஆகுது… எனக்கு அவன் கூட விளையாடனும்னு ஆசையா இருந்துச்சு. இந்த ஜனா தான் எங்களையும் பிடிச்சி இழுத்துட்டு வந்துருச்சு..” ப்ரதீபா நிஷாவிடம்.

“ப்ரதீபா போதும்… இந்தப் பேச்சை விடு.”- ஜனா எச்சரிக்கை செய்தான்.

ஆனால் ப்ரதீபா வழக்கம் போல தனது வாயை மூடாமல் ஓட்டை ரெக்கார்டு போல சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாள்.

உள்ளுக்குள் கோபம் பெருகிட, “ப்ரதீபா நீ வாயை மூடவே மாட்டியா? உனக்கு வாயை மூடவே தெரியாதா?” என்று கோபமாக கத்திவிட்டான் ஜனா.

ப்ரதீபாவின் கண்களில் உடனே கண்ணீர் கோர்த்துக் கொண்டது.

தனது துப்பட்டாவில் கண்ணீரை துடைத்துக்கொண்டு பிஸ்கட் குட்டவுனின் மூலையில் படுத்து விட்டாள் ப்ரதீபா.

“எதுக்கு ஜனா அண்ணா தேவையே இல்லாமல் இப்ப கோபப்பட்ட?” என்று செல்வலட்சுமி கேட்டபோது கூட ஜனா எதுவும் பேசாமல் வேறு புறம் திரும்பிக் கொண்டான்.

 அவர்கள் மூவருக்குள்ளும் நடந்த வாக்குவாதங்களைக் கேட்டு, என்ன செய்வது? யார் பக்கம் நிற்பது? என்று தெரியாமல் பார்வையாளராக மட்டுமே இருந்தாள் நிஷா.

பத்து நிமிடங்கள் கழித்து தானாக ப்ரதீபாவின் அருகே சென்ற ஜனா, “ப்ரதீபா எழுந்திரி. சாரி ப்ரதீபா.” என்று கூறி அவளை எழுப்பினான்.

ப்ரதீபா லேசாகக் கூட அசைந்து கொடுக்கவில்லை. ஒருச்சாய்ந்து படுத்திருந்தவள் இம்மிகூட அசையாமல் படுத்திருந்தாள்.

“ஏய் கூப்பிடுறேன்ல?” என்று கூறி அவளது கால் கட்டை விரலைப் பிடித்து இழுத்தான் ஜனா.

சட்டென்று எழுந்து உட்கார்ந்த ப்ரதீபா, “இப்போ உனக்கு என்ன வேணும்?” என்று கோபமாக கேட்டாள்.

 “சாரி… எனக்கே மூட் சரியில்லாமல் இருந்துச்சு…  நீ வேற தொண தொணண்ணு அந்த மேட்டரைப் பத்தியே பேசிட்டு இருந்தியா… கோபம் வந்திடுச்சு… ஏதோ கோவத்துல திட்டிட்டேன்… சாரி.”

ஜனாவின் சாரியை ஏற்றுக்கொள்ளாமல் அடம் செய்தாள் ப்ரதீபா..

“அதான் சாரி சொல்லிட்டேன்ல வா லூடோ கேம் விளையாடலாம்…” – ஜனா தனது முயற்சியை கைவிடவில்லை.

பிடிவாதக்கார ப்ரதீபாவை சமாளிக்க செல்வலட்சுமியைப் பார்த்தான் ஜனா.

“எழுந்திரி ப்ரதீபா, அதான் ஜனா சாரி சொல்லிடுச்சுல?” என்று செல்வலட்சுமி ப்ரதீபாவை சமாதானப்படுத்தினாள்.

செல்வலட்சுமி அழைத்தும் ப்ரதீபா எழுந்திருக்கவில்லை. ப்ரதீபாவின் பிடிவாதத்தைப் பார்த்து நிஷாவிற்கே மலைப்பாக இருந்தது.

“திட்டுனதுக்கு சாரி ப்ரதீபா. ஆயிரம்வாட்டி சாரி… இன்னும் எத்தனை சாரி கேக்கணும்?” தணிந்த குரலில் ஜனா ப்ரதீபாவிடம் மன்னிப்பு கேட்டான்.

அந்த குரலிற்கு இளகாத மனம் மனமே இல்லை.

மெல்ல எழுந்து உட்கார்ந்த ப்ரதீபா, “சரி… என்னைத் திட்டுனதை மன்னிச்சு விட்டுடறேன்.. ஆனா எதுக்கு என்மேல கோவப்பட்ட? அதை முதல்ல சொல்லு.” என்றாள்.

ப்ரதீபா எதையாவது நினைத்து பிடிவாதம் பிடித்தால்… அவள் முற்றிலும் சமாதானம் அடையும்வரை இறங்கிவரமாட்டாள் என்று அறிந்திருந்தான் ஜனா.

“சொல்லு ஜனா அண்ணா… எதுக்கு என் மேல கோபப்பட்ட?” என்று ப்ரதீபா கேட்டபோது, உண்மைக் காரணம் தெரியாமல் ப்ரதீபா விடப்போவதில்லை என்பதையும் அறிந்த ஜனா யார் கண்களையும் பார்க்காமல் சுவற்றைப் பார்த்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

“போன வாரம் ‘பிரஸ்டீஜ் காலண்டர்’ கஸ்டமர் வீட்டுக்கு போனேன்ல? – ஜனா கேட்டான்.

“ஆமா”

“அந்த வீட்டுக்கு இதுவரைக்கும் நூரு தடவையாவது டோர் டெலிவரிக்கு போயிருப்பேன்.. ஆனா போன தடவை போனப்போ என்ன ஆச்சு தெரியுமா..”

“அந்த வீட்டில் ஒரு கிழவி இருக்குமே… அந்தக் கிழவி உன்னை திட்டுச்சா..”- ப்ரதீபா.

“ச்ச ச்ச அதெல்லாம் இல்ல.”

“பின்ன… வேற என்ன நடந்துச்சு?”

“அவங்க வீட்டு ஹால்-ஐ பார்த்தேன், தரையில் ஒட்டியிருந்த டைல்ஸ்-ஐ பார்த்தேன், சுவரில் அடிச்சிருந்த பெயிண்ட்டை பார்த்தேன். சுவத்துல மாட்டி இருந்த டிவியைப் பார்த்தேன்… இப்படி எல்லாத்தையும் என் கண்ணு பார்த்துட்டே இருந்துச்சு ப்ரதீபா… வச்சக் கண்ணை எடுக்காமல் பார்த்தேன்..”

“சரி…”

“முன்ன எல்லாம் நான் இப்படி பார்க்கவே மாட்டேன் ப்ரதீபா… இப்போ நான் வீடு கட்ட முடிவெடுத்த நாளிலிருந்து… கரெக்ட்டா சொல்லணும்னா என் வீட்டைக் கட்டுற இன்ஜினியர் என்னை அந்த டைல்ஸ் கடைக்கு கூட்டிட்டுப் போனாருல? அந்த நாள்ல இருந்து ஒரு வீட்டை பார்த்தா எல்லாத்தையும் நான் நோட் பண்றேன்… சோஃபா, டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், தரையில் இருக்கிற டைல்ஸ், கதவு… இப்படி எல்லாத்தையும் பார்க்குறேன் தெரியுமா? இது எல்லாத்துக்கும் எவ்வளவு செலவாகும்னு யோசிக்க ஆரம்பிச்சிடுறேன். என்னோட வீட்டு பட்ஜெட்டையும் இந்த வீட்டு பட்ஜெட்டையும் கம்பேர் பண்ணிப் பார்க்க ஆரம்பிக்கறேன்…”

ப்ரதீபா அமைதியாக ஜனா சொல்வதைக் கேட்டுக் கொண்டே அமர்ந்திருந்தாள். செல்வலட்சுமி மூச்சு கூட விடவில்லை. நிஷா ஜனாவின் முகத்தின் உணர்வுகளை ஒன்றுவிடாமல் படித்துக் கொண்டிருந்தாள்.

“அதை எல்லாம் கணக்குப் பார்க்க பார்க்க அப்படியே உள்ளுக்குள்ள பொறாமையா வருது… இந்நாள் வரைக்கும் என் ப்ரண்டுகளை பார்த்துக் கூட நான் பொறாமை பட்டதில்ல… நான் கட்டப்போற வீட்டு மேல ஆசை ஆசையா இருக்கேனா… அதனால யார் வீட்டுக்குப் போனாலும் மனசு ஏங்குது ப்ரதீபா.. அந்த பங்களா வீடுகளின் கட்டுமானச் செலவில் பத்தில் ஒரு கால் பங்கு செலவு கூட என் வீட்டுக்கு என்னால பண்ண முடியாது.. என் வீடு முழுக்க ப்ளாஸ்டிக் கதவு தான் இருக்கப்போகுது. அந்த வீடுகளில் தேக்கு மரத்துல நிலக்கதவைப் பார்க்கும்போது என்னோட மனசுக்குள்ள மோசமான தாழ்வு மனப்பான்மை வந்துடுது… ரொம்ப ஏக்கம் வந்திடுது… இப்பல்லாம் டோர் டெலிவரியே போகப் பிடிக்க மாட்டேங்குது. அதான் எல்லாத்துக்கும் அருணையே அனுப்பிடறேன்..”

“அதான் பாலாண்ணா வீட்டுக்குள்ள வர மாட்டேன்னு சொன்னியா?”

“ஆமா… பாலண்ணா யாரு? அவர்கூட எப்படி பழகுறேன்… என்னை நம்பி கடைச்சாவியை கொடுத்து அனுப்புறாரு. அவரோட வீட்டப் பார்த்தும் நான் இதே மாதிரி பொறாமை பட்டா ஏதாவது தப்பா நடந்துடாதா? அடி மனசுக்குள்ள இருந்து ஏங்குனா பயங்கரமா திருஷ்டி படுமாம். எங்க அம்மா அடிக்கடி சொல்லும்… நான் டீக்கடையில வடை வாங்கிச் சாப்பிடும்போது எங்க பக்கத்து வீட்டு ரம்யாவுக்கும் எங்க அம்மா வடை வாங்கிக்கொடுத்துடுவாங்க. அந்தப்புள்ள மனசுக்குள்ள ஏங்குனா எனக்கு உடம்புக்கு ஏதாவது பண்ணிடுமாம்… அம்மா அடிக்கடி சொல்லும். நான் பாலண்ணா வீட்டைப் பார்த்து மனசுக்குள்ள ஏங்கிட்டேனா அவங்களுக்கு தான ஏதாவது கெடுதல் நடக்கும்? அதான் வீட்டுக்குள்ள போகல…”

“அட ஜனா அண்ணா… உன் வயசுக்கேத்த பேச்சா இதெல்லாம்? என்னமோ ஏழாவது எட்டாவது படிக்கிற பையன் மாதிரி பேசிக்கிட்டுருக்க.. கண் திருஷ்டி எல்லாம் சும்மா. கட்டுக்கதை.”

“இல்ல ப்ரதீபா… பிரெஸ்டீஜ் காலண்டர் வீட்ல அந்த டிவியை நான் உத்து உத்துப் பார்த்துட்டு இருந்தேன்ல? மறுவாரமே அந்த டிவி ஒர்க் பண்ணல. அதைக் கழட்டி வராந்தாவுல போட்டு வச்சிருந்தாங்க. என்ன விவரம்னு கேட்டப்பதான் எனக்கே விஷயம் தெரிஞ்சது…”

“நல்லவேளை… அந்த டிவி-ஐ நீ உத்து உத்து பார்க்கும்போது அந்த கிழவி உன்னைப் பார்க்கல… பார்த்து இருந்தா அந்தக் கிழவி உன் கண்ண நோண்டி உன் கையிலேயே கொடுத்திருக்கும்.” என்று சொல்லிச் சிரித்தாள் ப்ரதீபா.

“நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன் நீ ஜோக் அடிக்கிற பாத்தியா…”

“ஜனா அண்ணா… அடுத்து அந்த வீட்டுக்குப் போகும்போது அந்த கிழவியை மட்டும் உத்து உத்து பார்த்துட்டு இர்றேன்…”

“ஏய்… வேணா…”

“ஏன் ஜனா அண்ணா கிழவியைப் பார்த்தா உன் மனசு ஏங்காதா? அந்த மாதிரி ஒரு கிழவியை நீ கட்டுற புது வீட்டுல வைக்க முடியாதுல? இந்த மாதிரி ஒரு கிழவி நாம கட்டுற புது வீட்டுல இல்லையேன்னு உன் மனசு ஏங்கணும் ஜனா அண்ணா… பணக்காரங்க வீட்டுல மட்டும் தான் கிழவி இருக்கணுமா? ஏழைகளுக்கு கிழவி இருக்கக்கூடாதா?” என்று ப்ரதீபா கேட்டபிறகு ஜனாவின் வாய் பேசவில்லை. ப்ரதீபாவிடம் ஜனாவின் கை தான் பேசியது. இருவரும் ஒருவரை ஒருவர் அடித்து விளையாட ஆரம்பித்தனர்.

நிஷாவின் காதில் ஜனாவின் வார்த்தைகள் ஒலித்துக்கொண்டே இருந்தன.

“ஏக்கம்…”

இதை அவளும் எத்தனை முறை அனுபவித்திருக்கிறாள். ஆனால் விபரம் தெரிய ஆரம்பித்தப்பிறகு அந்த ஏக்கத்தை மனதுக்குள் புதைத்துப் பழகிவிட்டாள். வறுமைக் கோட்டில் நின்றுகொண்டு அதைவிட்டு நகரவே முடியாமல் தவிக்கும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இது போன்ற ஏக்கங்கள் இருப்பது உண்மை. ஆனால் அதை யாரும் வெளியே சொல்வதில்லை. ஆனால் இன்று 25 வயது நிரம்பிய ஜனா தனது ஏக்கத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசிவிட்டான்…

அவ்விடத்தில் நிகழ்ந்த உரையாடல்களை நிஷா மனதுக்குள் மீண்டும் மீண்டும் ஒலிக்கவிட்டாள். ஜனாவின் பேச்சு மனப்பாடம் ஆனது.

ஜனாவை தனது காதலனாக தேர்வு செய்தாள் நிஷா.

ஏமாறத்தான் போகிறோம் என்று தெரிந்தே ஏமாறத் துணிந்தாள் நிஷா.

ஜனா பிஸ்கட் குட்டவுனை விட்டுச் சென்றதும் ப்ரதீபாவிடம் சென்றவள்,

“ஏய் ப்ரதீபா… என்னையும் ஜனாவையும் வச்சு ஓட்டிகிட்டே இருப்பல? இப்ப எதையாவது சொல்லி ஓட்டு பார்ப்போம்… கேட்கணும் போல ஆசையா இருக்கு.” என்றாள்.

“என்னது?? உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சி ஓட்டணுமா? அதை உனக்கு கேட்கணும்னு ஆசையா இருக்கா?” – ப்ரதீபா.

“ஆமா… ப்ளீஸ்பா எதையாவது சொல்லி ஓட்டேன்… உப்பு சப்பில்லாத மேட்டர் கூட சொல்லி ஓட்டு. நானும் அவனும் ஒரே மாதிரி டிரஸ் போட்டுருக்கோம், ஒரே கலர்ல செருப்பு போட்டுருக்கோம்… ஒரே கலர்ல..”

“ஆமாமா… நீங்க ரெண்டு பேரும் ஒரே கலர்ல பொட்டு வச்சிருக்கீங்க… நீயும் அவனும் ஒரே கலர்ல வளையல் போட்டுருக்கீங்கன்னு சொல்லி ஓட்டவா? என்னைப் பார்த்தா லூசு மாதிரி தெரியுதா? நான் வேலை வெட்டி இல்லாமல் தான் உங்களை சேர்த்து வச்சி ஓட்டுறேன்னு நினைச்சீங்களா?”

நிஷா சிரித்தாள்.

“என்னைப் பார்த்தா எப்படி தெரியுது? ஜனா எவ்வளவு சீரியஸா பேசுச்சு? இந்நேரத்துல நான் உன்கூட விளையாடணுமா? ரெண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் அம்சமா இருக்குனு உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு பேசுனதுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.. நானே ஜனா பேசுனதை மனசுல நினைச்சி கவலப்பட்டுட்டு இருக்கேன்… இந்நேரம் வந்து என்ன பேச்சு பேசச் சொல்ற? உனக்கே இது ஓவரா இல்ல?”

“ஏய் செல்வலட்சுமி, நீ ஏதாவது சொல்லி ஓட்டேன். சும்மா சும்மா காரணம் இல்லாம ஓட்டுவீங்கல? இப்ப காரணத்தோடு கேட்கறேன்ல? ஓட்டுப்பா..”

“இத்தனை நாள் இல்லாத காரணம் இப்ப எப்படி வந்துச்சு?” – செல்வலட்சுமி கேள்வி கேட்டாள்.

“இத்தனை நாளா நானும் லவ் பண்ணல. ஜனாவும் என்னை லவ் பண்ணல. ஆனா நீங்க ஓட்டிக்கிட்டே இருந்தீங்க… இப்பத்தான் நான் ஜனாவை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேனே? அதனால இப்ப ஓட்டுனீங்கன்னா மனசுக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கும்..”

நிஷாவின் பதிலை கேட்டு செல்வலட்சுமி அரண்டே போய்விட்டாள்..

“அச்சச்சோ இந்த ஆட்டத்துக்கு நான் வரலப்பா… அதெல்லாம் ப்ரதீபாவோட ஏரியா… ஜனா அண்ணாவுக்கு தெரிஞ்சது… என்னை வறுத்தெடுத்துடும்…” என்று செல்வா சொல்லிவிட நிஷா ப்ரதீபாவைப் பார்த்தாள்.

“இப்ப உனக்கு ஜனாவை லவ் பண்ணணும்… அவ்வளவு தான? ஜனா தனியா இருக்கும்போது ஜனா காதுல மெல்ல விஷயத்தை சொல்லிடுறேன். ஓகே?” என்று கேட்டு நிஷாவிற்கு ஹார்ட் அட்டாக் வரவழைத்தாள் ப்ரதீபா.

பிறகு நிஷா அரண்டு நிற்பதைப் பார்த்து, “சரி சரி பயப்படாத…. நானா எதுவும் சொல்ல மாட்டேன். ஆனா ஜனா அண்ணாவா கண்டுபிடிச்சிட்டா என்னால எதுவும் பண்ண முடியாதுப்பா நிஷா” என்று நியாயவாதியாய் நிஷாவிடம் பேசினாள் ப்ரதீபா.

Advertisement