Advertisement

அத்தியாயம் 13

வேன் காலை 8 மணிக்கு குற்றாலம் வந்தடைந்தது.

அனைவரும் ஐந்தருவிக்குச் குளிக்கச் சென்றபோது அங்கு ஜனக்கூட்டமே இல்லை.

அருணும் ஜனாவும் அருவியில் ஆண்கள் பிரிவில் மணிக்கணக்காக குளித்துக்கொண்டிருக்க மற்றவர்கள் எல்லாம் பேயாட்டம் என்று கூறுவதுபோல அருவியில் பேய் ஆட்டம் போட்டனர்.

உண்மையைச் சொல்லப்போனால் அந்த அருவியில் பேய்களின் கூட்டத்தை இறக்கிவிட்டிருந்தால் அவைகள் கூட சற்று குறைவாகவே ஆட்டம் போட்டிருக்கும்.

‘சிங்கம்போல நடந்து வந்தா’ பாட்டுக்கு யாஸ் அக்காவின் ஆட்டமும் அருவியில் கும்மயடித்து பாட்டுப் பாடிய பானு அக்காவும் தான் அதில் பெரிய ஹெலைட்… மாரிச்செல்வி அக்கா, ப்ரதீபா, காஸிம், செல்வலட்சுமி  மற்றும் பாலனின் மூத்த மகனின் ஆட்டத்தைப் பற்றி வார்த்தைகளால் சொல்வதற்கு எதுவும் இல்லை. அது மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாதது.

தறிகெட்டு ஆட்டம்போடும் தனது பணியாட்களை சமாளிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் பாலன் மௌனவிரதத்திற்கு வந்துவிட்டார்.

இதற்கு மேல் அருவியில் நிற்க முடியாது என்ற கட்டத்திற்கு வந்தப்பிறகு தான் அனைவரும் அருவியை விட்டு வெளியே வந்தனர்.

அப்படி குளித்துவிட்டு வருகையில் நிஷாவின் மார்பில் ஜனா தவறுதலாக மோதிவிட சட்டென அவனுக்கு வழிவிட்டு தள்ளி நின்றுகொண்டாள் நிஷா.

அவனது ஈரமார்போடு தனது உடல் மோதிய வேகத்தில் நிலைதடுமாறி தள்ளாடி நின்றுவிட்டாள் நிஷா. மோதிய மறுகணம் தன்னைச் சுற்றி ஆட்கள் நிற்கிறார்களா? என்று அவசரகமாகப் பார்த்த நிஷா, ‘அப்பாடா யாரும் இல்ல…’ என்று நிம்மதியடைந்தபோது ஜனா எதையும் கண்டுகொள்ளாமல் வேனிற்குள் ஏறிவிட்டான்.

வேனிற்குள் ஏறாமல் வேனின் படிக்கட்டின் பக்கமாக பற்களைக் கடித்தபடி நின்றுகொண்டிருந்த நிஷாவின் மனதுக்குள் ஏதோ ஒன்று நுழைந்தது. ஊசியின் காதுக்குள் நுழைவது தெரியாமல் நுழையும் நூல் போல ஏதோ ஒன்று தனது மனதுக்குள் சப்தமில்லாமல் நுழைவதை உணர்ந்தாள் நிஷா.

ஆனால் நிஷாவின் மார்பில் தான் இடித்துக்கொண்டோம் என்பதைக் கூட அறியாத ஜனா என்னும் சன்னியாசி வேனிற்குள் ஏறி தனது சீட்டில் ஜம்மென்று அமர்ந்தும்விட்டான்.

ஆனால் நிஷாவிற்குள் ஓராயிரம் மின்னல்கள். மனம் கிளர்ச்சியடைந்தது. காமத்தின் சிறு துளி அவள் மேல் விழுந்த வினாடியே பட்டுப் பூச்சியாய் சுருங்கிப்போனாள் நிஷா. யாரிடமும் அதிகம் பேசாமல் அமைதியாக தனிமை கூட்டிற்குள் அடைந்துகொண்டாள்.

ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி காமத்தின் முதல் அறிமுகம் என்றுமே திகிலடையச் செய்யும் தானே? நிஷாவின் முகத்தில் திகில் ஒட்டியிருந்தது.

இப்போது அவளுக்கு தெரிய வேண்டியது ஜனாவின் ரியாக்ஷன் என்ன? என்பது தான். ஆனால் அதை அறிந்துகொள்ள அவனது முகத்தை அவள் பார்க்க வேண்டுமே? அவனது முகத்தை நேருக்கு நேராக எப்படிப் பார்ப்பது? என்று உள்ளக்குள் தவித்து நின்றாள் நிஷா.

“ஏய் நிஷா… ஏன் அமைதியா இருக்க?” – செல்வலட்சுமி.

“ஆ??”

“ஏன் அமைதியா இருக்க?”

“ஒண்ணுமில்ல…”

“வயிறு வலிக்கிதா?” என்று கேலி கிண்டல்களை விட்டுவிட்டு ப்ரதீபாவும் அக்கறையாக விசாரித்தாள்.

அனைவரிடமும் ஒண்ணுமில்லையே என்று சொல்லிச்சமாளித்த நிஷாவின் கண்ணோரத்தில் ஜனாவின் பிம்பம் தெரிந்தபோதெல்லாம்,

“எல்லாத்துக்கும் நீ தான் ஜனா காரணம்… என் மேல இடிச்சிட்டு இப்படி இடிச்ச புளி மாதிரி உட்கார்ந்திருக்க? எதுவுமே தோணலயா? எனக்கு ஆயிரம் தோணுதே? உனக்கு ஒண்ணுகூட தோணல?” என்று பல சந்தேகங்கள் எழுந்தன நிஷாவிற்கு.

‘அவனுக்கும் ஏதாவது தோணிருக்கும்… முகத்துல காட்டல… அவ்வளவு தான்’ என்று நினைத்த நிஷாவின் எண்ணத்தை ‘கொசு பேட்’ கொண்டு விரட்டுவது போல, “நிஷா வேன்ல தூங்கிடாத… ப்ரதீபா கொரட்டை விடுறதை ரெக்கார்ட் பண்ணணும்… சரியா?” என்று கூறி வழக்கம்போல அவனது ப்ரதீபாவிடம் தோளில் ஜனா இடி வாங்கிக்கொண்டபோது,

“நீ உண்மையிலேயே விவேகானந்தருக்கு அண்ணன் தான் ஜனா” என்று நிஷாவே தனது மனதில் நினைத்துக்கொண்டாள்.

இரவு சரியாக 8 மணிக்கு மீண்டும் சேலத்திற்கு வேன் புறப்பட்டது.

ஜனாவின் நடத்தையைப் பார்த்தப்பிறகு நிஷா தனது மனதை கடிவாளமிட்டு அடக்கி ஒரு வழியாக சமாளித்துக்கொண்டாள்.

இரண்டு மணி நேரம் கழித்து ஒரு ஹோட்டலின் வாயிலில் வேன் நின்றது. ‘எனக்குப் பசிக்கல’ என்று வேன்னில் இருந்து இறங்க மறுத்துவிட்ட நிஷாவைத் தவிர அனைவரும் இரவு உணவை சாப்பிட்டனர்.

தான் சாப்பிட்டு முடித்ததும் மற்றவர்களுக்காக காத்திருந்த ஜனா தனது செல்போனை கையில் எடுத்துப் பார்த்தான். அதில் 8 மிஸ்ட் கால்கள் இருந்தன. அத்தனையும் அருணின் மனைவி மஹாவின் கால்கள் தான். வேனில் அருணைத் தேடினான் ஜனா. அவனைக் காணவில்லை என்றதும் உடனே காஸிமிடம்,

“அருண் எங்கடா?” என்று கேட்டான் ஜனா.

“அருண் அண்ணா பாத்ரூம் பக்கம் போச்சுல?” என்று காஸிம் கூறிட பாத்ரூம் பக்கமாகச் சென்று அருணைத் தேடிப் பார்த்தான் ஜனா.

பின்பக்கம் இருந்த தென்னைமரத்தடியில் அமர்ந்து ஒரு பாட்டில் டாஸ்மாக் சரக்கை சத்தமில்லாமல் காலி செய்து கொண்டிருந்தான் அருண்.

“என்ன அருண் தண்ணி அடிக்கிற?”

“சும்மா டா… கொஞ்சமா குடிச்சேன்.”

“கொஞ்சமா குடிச்சியா? கிட்ட வந்தாலே நாருது… மஹாக்கு கால் பண்ணவே இல்லயா? எனக்கு 8 மிஸ்ட் கால் வந்திருக்குடா…” என்று கோபமாக ஜனா ஆரம்பிக்க,

“வேன்ல போகும்போது மஹாகிட்ட பேசிக்கறேன்…” என்று தனது கையில் கைபேசியை எடுத்துக்கொண்டு எழுந்தான் அருண்.

“எங்க போற? தண்ணி அடிச்சிட்டு வேனுக்குள் ஏறக்கூடாது…”

“போடா… நீ என்ன சொல்றது நான் என்ன கேட்கிறது?”

“சரி வா… பாலன் அண்ணாகிட்ட, ‘அருண் தண்ணி அடிச்சிருக்கான்… வேன்ல ஏத்தலாமா’-ன்னு நான் கேட்கிறேன்… பாலன் அண்ணா என்ன சொல்றாருன்னு பார்ப்போம்…”

“இப்ப என்ன செய்யணும்ங்கிற? வேன்-ல ஏறக்கூடாது. அவ்வளவு தானே? நான் பஸ் பிடிச்சு ஊர் வந்து சேர்ந்துக்கிறேன்.” என்றவன் ஹோட்டல் வாயிலில் நின்ற அரசு பேருந்தில் ஏறிக்கொண்டான்.

சில நொடிகள் வெறுப்பாக அருணைப் பார்த்த ஜனா அவனும் அரசு பேருந்தில் ஏறிக்கொண்டான்.

“நீ எதுக்குப்பா என் கூட வர்ற? நீங்க தான் தண்ணி அடிக்கிறவங்களை ஒதுக்கி வச்சுருவீங்களே…”

“இப்ப வாய மூடிட்டு நீ வரல… சத்துன்னு கன்னத்துல அறைஞ்சிடுவேன்… வயசுல மூத்தவன்னு கூட பார்க்க மாட்டேன் அருண்ணு..” என்று கூறிக்கொண்டே தனது கைபேசியை எடுத்து பாலனிற்கு கால் செய்து விஷயத்தை சொன்னான் ஜனா.

“அண்ணே… அருண் லேசா தண்ணி போட்டு இருக்காப்ல.. நான் அருண்ணை கூட்டிட்டு பஸ்ல கிளம்பறேன். நீங்க பின்னாடி வேன்ல வந்து சேருங்க.”

“அப்படியா? சரி ஜனா… பார்த்து பத்திரமா வந்து சேருங்க. வீட்டுக்குப் போனதும் கால் பண்ணு.”

“சரி அண்ணே.”

“கல்யாணத்துக்கு அப்புறம் திருந்துவான்னு பார்த்தா… இப்பதான் மோசமாகிக்கிட்டே வர்றான்.” என்று வருத்தமாகச் சொன்ன பாலனிடம்,

“வேன்ல நம்மாளுங்க கேட்டா பார்த்து13 பேசிக்கோங்க…” என்று அருணிற்காக பரிந்து பேசிவிட்டுத் தான் கைபேசி உரையாடலை நிறுத்தினான் ஜனா.

பேருந்து புறப்பட்டது.

போதையின் உச்சியில் இருந்தபடி இளையராஜா பாடல்களையும் ஏ.ஆர் ரஹ்மான் பாடல்களையும் அத்தாக்ஷரிபோல கலந்து பாடிக்கொண்டே வந்த அருணிடம்,

“ஏன்டா அருண் இப்படி பண்ற?” என்று கேட்டான் ஜனா.

தனது பாடும் திறமையை சற்று நேரம் ஒத்தி வைத்துவிட்டு,

“என் மண்டைக்குள்ள எவ்வளவு டென்ஷன் ஓடுதுன்னு உனக்குத் தெரியாது… டென்ஷன் ஆனா நான் தண்ணி அடிப்பேன்…” என்றான் அருண்.

“உனக்கு இப்ப என்ன டென்ஷன்?”

“வீட்ல வந்து பாரு, அப்ப புரியும் உனக்கு… மஹாக்கும் எங்க அம்மாவுக்கும் சுத்தமா ஒத்துப் போக மாட்டேங்குது, தனி வீட்டுக்கு போகணும்னு மஹா சொல்லுதுடா… என்னால தனியா ஒரு வீடு வாடகைக்கு பிடிச்சு… வாடகை கொடுத்து… என் சம்பாத்தியத்தில் குடும்பம் நடத்த முடியுமா.. வீட்டுல ரெண்டு நாளா தனிக்குடித்தனம் பஞ்சாயத்து தான். இப்ப போனதும் திரும்பவும் மஹாவோட புலம்பல கேக்கணும்… மாசமா இருக்காடா. திட்டக் கூட முடியல… என் அம்மாவும் விட்டுக்கொடுத்து போக மாட்டிக்கிறாங்க… சமாளிக்க முடியல மச்சி…” என்று புலம்பிய அருணிடம் என்ன சமாதானம் சொல்வது என்று கூட ஜனாவிற்குத் தெரியவில்லை.

“அதுக்காக குடிச்சி உடம்பை கெடுத்துக்குவியா?” என்று அருணிடம் கடிந்துகொண்ட ஜனா பேருந்து சேலம் வந்தடைந்த பிறகும் அருணின் வீடு வரை சென்று அவனை விட்டுவிட்டுத் தான் தனது வீட்டிற்குச் சென்றான்.

வீட்டிற்குச் சென்றதும் பாலனின் கைபேசிக்கு அழைத்து, “அண்ணா ஊருக்கு வந்துட்டோம்ண்ணா.” என்று ஜனா தகவல் சொன்னான்.

“எல்லாரையும் அவுங்கவுங்க வீட்டுல இறக்கிவிட்டுட்டு நானும் இப்பத் தான் டா வீட்டுக்கு வந்தேன். அருண் வீட்டுக்குப் போயிட்டான்ல?”

“அவனை வீட்டுல விட்டுட்டுத் தான் வந்தேன்ணா… நம்மாளுங்ககிட்ட என்ன சொன்னீங்க?”

“ப்ரதீபாகிட்ட மட்டும் சொன்னேன்… அவ மத்தவங்ககிட்ட சொல்லிருப்பா…”

“சரிண்ணா…”

“நாளைக்கு என்ன நாள்-ன்னு ஞாபகம் இருக்குல?”

“இருக்குண்ணா. உங்க அப்பாவுக்கு நினைவு நாள்.”

“எல்லாருக்கும் எங்க வீட்டுல இருந்து தான் காலச் சாப்பாடும் மதியச் சாப்பாடும்… ஆம்னி சாவி உன்கிட்டத் தான இருக்கு?”

“ஆமாண்ணா…”

“சரி… காலையில 8.30 மணிக்கு ஆம்னி காரை எடுத்துட்டு வீட்டுக்கு வா. நீ தான் சாப்பாட்டுக் கேரியரை எடுத்துட்டுப் போணும். துணைக்கு ப்ரதீபாவையும் செல்வாவையும் கூப்பிட்டுக்கோ.”

“சரிண்ணா…”

“அப்ப வச்சிடவா?”

“சரிண்ணா.” என்று அழைப்பில் இருந்து ஜனா விடுபெற்றான்.

*****

மறுநாள் காலை 8.30 மணி…

செல்வலட்சுமி, ப்ரதீபா மற்றும் ஜனா பாலனின் வீட்டிற்குச் சென்று சாப்பாட்டு கேரியரை எடுத்து ஆம்னி காரில் ஏற்றினர்.

“வீட்டுக்குள்ள வா ஜனா… எல்லாரும் சேர்ந்து சாப்டுட்டு அரை மணி நேரத்துல கடைக்கு போயிடலாம்.” என்று பாலன் அவர்களை வீட்டிற்குள் அழைத்தான்.

“இல்ல பாலண்ணே, கடையில எல்லார்கூடயும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடறோமே…”- ஜனா உடனே மறுத்தான்.

செல்வலட்சுமிக்கும் ப்ரதீபாவிற்கும் பாலனின் குழந்தைகளுடன் விளையாட ஆசையாக இருந்தது. ஆனால் ஜனா ஆம்னி காரை ஸ்டார்ட் செய்துவிட்டதால் அவனுடன் காரில் ஏறிக்கொண்டார்கள்.

“சொன்னா கேட்க மாட்டியே, சரி சரி வீட்டுக்குள்ள வர வேணாம். கடையிலயே சாப்பிடுங்க… போனதும் எல்லாரையும் சாப்பிட வச்சிடு. இந்தா கடைச்சாவி… நான் அரை மணி நேரத்துல கடைக்கு வந்துடுவேன். கடையை பார்த்துக்கோங்கடா.” என்று கூறி கடைச்சாவியை ஜனாவிடம் கொடுத்துவிட்டு பாலன் தனது வீட்டிற்குள் சென்று விட்டார்.

தெருமுனை திரும்பியதும் ப்ரதீபாவும் செல்வ லட்சுமியும் ஜனாவிடம் வாக்குவாதம் செய்தனர்.

“எதுக்கு ஜனா அண்ணா வீட்டுக்குள்ள போகல?  பாலண்ணா எத்தனை தடவை உன்னை கூப்பிட்டாரு.. வர்ற வர்ற நீ ரொம்ப தான் பிகு பண்ற தெரியுமா..” – ப்ரதீபா.

“ஆமாம்பா… ஜனா ரொம்ப பிகு பண்ணுது… பாலன் அண்ணாவோட பசங்ககூட விளையாட ஆசையா இருந்தது தெரியுமா?” என்று செல்வலட்சுமியும் ப்ரதீபாவின் பேச்சை ஒத்துக் கொண்டாள்.

“ரெண்டு பேரும் அமைதியா வர்றீங்களா இல்லையா?” என்று அதட்டிய ஜனா தனது வண்டியின் வேகத்தைக் கூட்டி பத்தே நிமிடங்களில் கடைக்குச் சென்றுவிட்டான்.

கடைக்குள் நுழைந்ததும் பாலன் கொடுத்து அனுப்பிய சாப்பாட்டை அனைவருக்கும் பரிமாறிய ஜனா தனது கூட்டணியுடன் சேர்ந்து தானும் சாப்பிட்டு முடித்தான்.

மீண்டும் மதிய வேளை வந்தபோது பாலனின் வீட்டிற்குச் சென்று மதியச் சாப்பாட்டை ஜனாவே எடுக்கச்சென்றான்.

அப்போதும் அவன் பாலனின் வீட்டிற்குள் செல்லவில்லை.

இதை ப்ரதீபாவிடமும் செல்வலட்சுமியிடமும் பாலனே குறையாகச்சொன்னார்.

மதிய விருந்துச் சாப்பாட்டை முடித்துவிட்டு பிஸ்கட் குட்டவுனில் ஓய்வாக இருந்தபோது, ப்ரதீபா நிஷாவிடம் ஜனாவைப் குறையடிக்க ஆரம்பித்தாள்.

Advertisement