Advertisement

“எனக்கு தெரியும் ஜனா அண்ணே. தினமும் சொல்லுவியா? இது என்ன மெட்ராஸ்ஸா? ரெண்டு பக்கம் கால் போட்டு ஜாலியா ஒரு பையன்கூட பைக்ல போறதுக்கு? நம்ம ஊர்ல எல்லாரும் ‘ஆ’ன்னு பார்ப்பாங்கன்னு எனக்கும் தெரியும்…” என்று சலித்துக் கொண்டு அவனது பைக்கில் ஒரு பக்கமாக கால் போட்டு உட்கார்ந்தாள் ப்ரதீபா.

ப்ரதீபாவும் இரவு முழுவதும் சரியாகத் தூங்கவில்லை. கடந்த நான்கு நாட்களாக அவளுக்கும் மிகுந்த மனஉலைச்சல்.

‘இப்பத்தான் ஜனா அண்ணா நம்மகிட்ட முகம் கொடுத்து பேச ஆரம்பிச்சிருக்கு… கொஞ்ச நாள் போகட்டும்… ஏதாவது செய்ய ப்ளான் பண்ணணும்.’ என்று தான் மனதுக்குள் நினைத்துக்கொண்டே ஜனாவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தாள் ப்ரதீபா.

ஆனால் பைக்கில் செல்லும்போதே நிஷாவைப் பற்றி நினைத்ததும் ஜனாவின் மேல் இருந்த கோபம் மீண்டும் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.

“மெதுவா போ ஜனா அண்ணா… பயமா இருக்குல?” ஆகாத மருமகளின்; கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்று குற்றம் கண்டுபிடிக்கும் மாமியார் போல ஜனாவிடம் குற்றம் கண்டுபிடித்தாள் ப்ரதீபா.

அவளது குற்றச்சாட்டை பொருட்படுத்தாமல், “செல்வா நமக்காக வெயிட் பண்றாளா… ஒரு நாள் நமக்கு முன்னே போகலாம்ல? நாமளே லேட்டு…” என்ற ஜனா தனது பைக்கின் வேகத்தை இன்னும் கூட்டினான்.

“அவ எப்படி தனியா சைக்கிள்ல போவா? நாம வர்ற வரைக்கும் வெயிட் பண்ணித் தான் போவா. அவ வீட்ல தனியா அனுப்ப மாட்டாங்க… லேட்டா போனா கூட பரவால்லன்னு நமக்காக வெயிட் பண்ணித் தான் கிளம்புவா. உனக்கு கஷ்டமாயிருந்தா சொல்லு… நாளைக்கு நானும் அவளும் பஸ்ல வந்துடுறோம். இல்லன்னா அருண் அண்ணனை கூப்பிட வரச்சொல்றோம்…”

“காலையிலேயே சண்டை போட ஆரம்பிச்சிட்டியா? லேட்டானதால தான சொன்னேன்?” என்று கேட்டபடியே செல்வலட்சுமின் வீட்டு வாசல் பக்கமாக பைக்கை நிறுத்தி ஹார்ன் அடித்தான் ஜனா.

ஆனால் அவனது ஹார்னிற்கு தேவையே இருக்கவில்லை. செல்வலட்சுமி தனது சைக்கிளில் அமர்ந்தபடி தயாராக ரோட்டோரமாக நின்று கொண்டிருந்தாள்.

“ஜனா அண்ணே இன்னைக்கு நீ தான் லேட்… நான் சைக்கிளை எடுத்து அஞ்சு நிமிஷம் ஆச்சு…” என்று பெருமையாக சொல்லிக் கொண்ட செல்வலட்சுமி தனது சைக்கிள் பெடலை லேசாக அழுத்தி முன்னே செல்ல ஆரம்பித்தாள்.

“ஒரு நாள் சீக்கிரம் கிளம்பிட்டு இது பண்ற அலப்பரையை பாரேன்…” என்று ப்ரதீபாவிடம் கமென்ட் செய்த ஜனா,

“நாங்க முன்னாடி போறோம், எங்க பின்னாடியே வா.” என்று செல்வலட்சுமியிடம் கூறி தனது பைக்கின் வேகத்தைக் குறைத்து செல்வலட்சுமியின் முன்னால் செல்ல ஆரம்பித்தான்.

அவனைப் பின் தொடர்ந்து வந்த செல்வலட்சுமி ஜனாவின் வேகத்தை ஈடுகட்டியபடியே தனது சைக்கிளை பெடல் செய்தாள்.

மூவரும் அவர்கள் பணி புரியும் வேலவன் சூப்பர் மார்க்கெட்டில் வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்குள் நுழைந்தபோது மணி 8.45.

ஜனாவின் கண் மறந்தும் நிஷாவின் சைக்கிளைத் தேடவில்லை.

“வர்ற வர்ற எல்லாருக்கும் ரொம்ப ஞாபக மறதி வந்துடுது…” என்று ப்ரதீபா பொடி வைத்துப் பேசியதைக்கூட கவனிக்காமல் அந்த சந்துக்குள் வாகனத்தை நிறுத்திவிட்டு தனது சாப்பாட்டுப் பைகளை எடுத்துக்கொண்டு ஜனா வேலவன் சு+ப்பர்மார்கெட் நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டான்.

“ப்ரதீபா நேத்துல இருந்து தான் ஜனா நம்மகூட பேச ஆரம்பிச்சிருக்கு… நீ அதை திரும்ப உசுப்பேத்தாத…” என்று செல்வலட்சுமி சொன்னதையும் பொருட்படுத்தாமல்,

“நிஷா இன்னும் வரல போலயே?” என்று நிஷாவின் பச்சை நிற சைக்கிளை காணாமல் ஏமாற்றமாகச் சொன்னாள் ப்ரதீபா.

“மணி 8.50 தான ஆகுது? நிஷா 9 மணிக்குத் தான் வருவா… வா போலாம்…” என்று செல்வலட்சுமி ப்ரதீபாவை இழுத்துக்கொண்டு தான் நடக்க ஆரம்பித்தாள்.

மூவரும் கடையின் வாசல் பக்கமாக நடக்க ஆரம்பிக்க, காஸிம் அவர்களை நோக்கி ஓடி வந்தான்.

“அண்ணே ஓனர் சாவிப் பையை என்கிட்ட கொடுத்துட்டு பேங்குக்குப் போனாரு… பேங்க்ல லேட்டாகுதாம். என்னை கடை திறக்கச் சொன்னாரு. ஆனா எல்லா சாவியும் போட்டுப் பார்த்துட்டேன். பூட்டு திறக்க வரலண்ணே. இந்தா நீ வந்து தொறந்து பாரு…” என்றான்.

“என்னடா இது? கடையில வேலைக்கு சேர்ந்து ரெண்டு வருஷம் ஆச்சு, இன்னும் சரியான சாவி போட்டு பூட்டு திறக்கத் தெரியலையா?” என்று கேட்டுக் கொண்டே ஜனா காஸிமிடமிருந்து சாவிப் பையை கையில் வாங்கிக் கொண்டான்.

வேகமாக ஷட்டரின் அருகே சென்றவன் அதில் தொங்கிக்கொண்டிருந்த இரண்டு மூன்று பூட்டுக்களை வேகமாகத் திறந்தான்.

பூட்டுக்கள் திறக்கப்பட்டதும் ஷட்டரின் இடது பக்கம் இருந்த துளையில் ஷட்டர் கீயை சொருகி அதை சுற்றினான். அவன் சுற்றச் சுற்ற ஷட்டர் மேல் நோக்கி நகர்ந்தது. ஷட்டர் உயர்த்தப்பட்டதும் ஷட்டர் கீயை துளையில் இருந்து உருவினான். காத்திருந்த பணியாட்கள் கடைக்குள் நுழைந்தார்கள். வேகமாக மின்சார இணைப்புகளை உயிர்ப்பித்தார்கள்.

செல்வலட்சுமி, ப்ரதீபா மற்றும் மாரிச்செல்வி அக்கா ஆளுக்கு ஒரு துடைப்பத்தை எடுத்துக்கொண்டு கடையைப் பெருக்க ஆரம்பித்தார்கள்.

“இப்ப தான் வந்தீங்களா? நான் தான் லேட்டுன்னு நினைச்சிட்டு வேகமாக சைக்கிளை பெடல் பண்ணி வந்தேன்ப்பா… கால் செம்ம வலி எடுக்குது.” என்று கூறிக்கொண்டே செருப்பைக் கழற்றினார் பானு அக்கா.

 “ப்ரதீபா நீ பெருக்கிட்டு தொடைப்பத்தை கொடேன்…” என்று பானு அக்கா துடைப்பத்தைக் கேட்க, “என் வேலை முடிஞ்சதுக்கா… இந்தாங்க.” என்று தனது கையில் இருந்த துடைப்பத்தை பானு அக்காவின் கையில் கொடுத்த ப்ரதீபா பில் கவுன்டரில் இருந்த கம்ப்யூட்டரை ஆன் செய்தாள்.

அவர்கள் அனைவரும் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது,

“செல்வா… எனக்கு ஒரு கிலோ பரும் பூண்டும் அரை கிலோ பாசிப்பயரும் பில் போடு…” என்று குமார் அண்ணனின் குரல் கணீரென்று அக்கடையில் ஒலித்தது.

“வாங்க குமார் அண்ணே” என்று சொன்ன ஜனா அவருக்கு வணக்கம் வைத்துவிட்டு தன் தோளில் இருந்த 26கிலோ அரிசி மூடையை இறக்கி வைத்துவிட்டு அடுத்த மூடையை எடுக்கச் சென்றான்.

“அண்ணே ஒரு நிமிஷம்ணே… இப்பத்தான் கம்ப்யூட்டரை ஆன் செய்துருக்கேன். ரெண்டே நிமிஷத்துல பில் போட்டுக் கொடுத்துடுறேன்…” என்று அவசரமாக கம்ப்யூட்டரை இயக்கினாள் செல்வலட்சுமி.

“மணி ஒன்பதேகால் ஆயிடுச்சு… இப்பத்தான் கடையைத் தொறந்து சாமானை அடுக்குறீங்க? நல்லா பொறுப்பா இருக்கீங்க டா… எங்க டா உங்க ஓனரு?” என்று கேட்ட குமார் அண்ணன் கம்ப்யூட்டரின் அருகே இருந்த நாற்காலியில் தனது மஞ்சப் பையுடன் அமர்ந்தார்.

குமார் அண்ணன்… அவரது தேகம் நல்ல நிறம்… ஒல்லியான உருவம். உருவத்திற்கு ஏற்றார்போல கண்ணாடி அணிந்திருப்பார். நேர்மையான மனிதர். அன்பான மனிதரும் கூட. அவரது வார்த்தைகளில் என்றும் அன்பும் அக்கறையும் கொட்டிக்கிடக்கும். அவருடன் பழகினால் ஃப்விகால் போல நம்மிடமும் அக்குணங்கள் ஒட்டிக்கொள்ளும். ஒருபெரிய கம்பெனியின் மேனேஜர். வேலவன் சூப்பர்மார்க்கெட்டின் ரெகுலர் கஸ்டமர். நான்கு நாட்களுக்கு முன்பாக வேலவன் சு+ப்பர்மார்கெட்டில் ஒரு பெரிய சுறாவளியைக் கிளிப்பி விட்டவர். அது அவரை அறியாமல் செய்த தவறு தான். அந்த சுறாவளியில் சிக்கி சேதமடைந்தது நிஷா மட்டுமே…

அவரிடம் வழக்கமாகப் பேச்சு கொடுக்கும் ஜனா இன்று அமைதியாக தனது வேலையில் இருக்க, “என்ன ஜனா? நான் கேட்டதுக்கு பதிலே காணும்? ரொம்ப பிஸியா இருக்கீங்களா?” என்று மனதில் கள்ளம் இல்லாமல் சிரித்துக்கொண்டே கேட்டார்.

“ச்ச ச்ச… அப்படி எல்லாம் எதுவும் இல்லண்ணே… நீங்க ப்ரதீபாகிட்ட பேசுறீங்கன்னு நான் நினைச்சேன்…” என்ற ஜனா, “ஓனர் பேங்க்குக்கு போயிருக்காருண்ணே. அதான் இன்னிக்கி ஒரு பத்து நிமிஷம் லேட் ஆயிடுச்சு.” என்ற ஜனா 26 கிலோ மூடையை அப்படியே தூக்கி தனது தோள்பட்டையில் போட்டுக்கொண்டிருந்தான்.

“ஜனா அண்ணா உன் பைக் சாவி தாயேன்… பாலண்ணா என்னை கூப்பிட வரச்சொன்னாரு. அவர் வண்டியில பெட்ரோல் இல்லையாம்…”- என்று கேட்டு காஸிம் ஜனாவிடம் வந்தான்.

“டேய் பைக் சாவியா? ஒழுங்கா ஓட்டுவியாடா?” ஜனா கேட்க,

“என்ன ஜனா அண்ணா என்னைப் பார்த்து இப்படி கேட்டுட்ட?” என்றான் காஸிம்.

“உன்னைப் பார்த்து தான்டா கேட்கணும்… ஒழுங்கா ஓட்டு. ஸ்பீட்டா போன… தொலைச்சிடுவேன்… இந்தா சாவி.” என்று சாவியைக் கொடுக்கப்போன ஜனா, “இரு பைக்ல சாமான் வச்சிருந்தேன். அதை எடுக்கணும்… நானும் உன்கூட வர்றேன்.” என்று கூறி அரிசி மூடையை ஓரமாக வைத்துவிட்டு காஸிமுடன் தனது பைக் நோக்கிச் சென்றான்.

“சீக்கிரம்ணே… பாலன் அண்ணா வெயிட் பண்ணுவாரு…”

 “அவசரப்படாத டா… பைக் ஓட்ட இந்த அவசரமா?” என்று கேட்டுக்கொண்டே பைக் நிற்கும் சந்துக்குள் நுழைந்த ஜனா பைக்கின் கேஸ்ஸை சாவி கொண்டு திறந்தான். ஒரு சிகப்பு நிற டிப்பன் பாக்ஸ்ஸை அதிலிருந்து எடுத்தவன் தனது பைக் சாவியை காஸிமிடம் கொடுத்துவிட்டு, “பத்தரம் டா.” என்றான்.

“அதெல்லாம் பத்தரமா வந்திடுவேன்னா…”

“நான் பத்தரம்னு சொன்னது வண்டியை…”

“ஜனா அண்ணா இதுலாம் ரொம்ப ஓவரு. சின்னப் பையன்னு உன் இஷ்டத்துக்கு ராக்கிங் பண்ற…”

“அப்படியா?” என்று ஜனா கேட்டதும் காஸிம் ஜனாவைப் பார்த்து முறைக்க ஜனா சிரித்தான்.

ஜனாவின் முன்னேயே பைக்கின் ஆக்சிலேட்டரைக் கூட்டி வேகமாக பைக்கில் சென்றான் காஸிம்.

‘இந்த சுல்லானைத் திருத்த முடியலேயே’ என்று மனதில் நினைத்துக்கொண்டே கடைக்குள் சென்றான் ஜனா.

ஜனா கடைக்குள் நுழைந்தபோது சரக்கு வேன்-யில் இருந்து அரிசி மூடையை டிராலியில் வைத்து ப்ரதீபா இழுத்துக் கொண்டு வருவதைப் பார்த்தான்.

“ப்ரதீபா, அந்த மூடையை டிராலியில வச்சி இழுக்காத… நான் தூக்கிக்கறேன். நீ இன்னொரு கம்ப்யூட்டரை ஆன் செய்து வர்ற கஸ்டமருக்கு பில் போடு…” என்று ஜனா ப்ரதீபாவைத் தடுக்க,

“நீ என்ன மாடா? எத்தனை மூடை தூக்குவ? மூடைகளை தூக்கிட்டுப் போற இரும்பு டிராலியில வச்சித் தான கொண்டுபோறேன்? அரிசி குட்டவுன் வரை இழுத்து வச்சிட்டா உனக்கு ஈசியா இருக்கும்ல ஜனாண்ணா… எனக்கு பத்து நிமிஷ வேலை தான? அதுக்கப்புறம் பில் போட்டுக்கலாம்…” என்ற ப்ரதீபா 26 கிலோ அரிசி மூடையை டிராலியில் வைத்து இழுத்துக்கொண்டே அரிசி குட்டவுனுக்குக் கொண்டுசென்று விட்டாள்.

“சொன்னா கேட்கமாட்டியா?” என்று ஜனா அதட்டியபோது,

“விடுப்பா… இரும்பு டிராலியில தான எடுத்துட்டுப் போகப்போகுது. அரிசி மூடை தூக்கத் தான உங்க முதலாளி அத்தனை டிராலி வாங்கிப் போட்டிருக்காரு.” என்று ப்ரதீபாவிற்கு ஆதரவு தந்தார் குமார் அண்ணன்.

“அது இல்லண்ணே…” – ஜனா தயங்கினான்.

“நீ அவளுக்கு அண்ணன் மாதிரி தான? அண்ணணுக்கு வேலை பார்த்துக்கொடுக்குது… வயசுப் பிள்ளை தான? எங்களை மாதிரியா? அதெல்லாம் வேலை செய்யிறதுல தப்பில்ல…” என்று ஜனாவிடம் சொன்ன குமார் அண்ணன்,

“நீ இழுத்துட்டு வாடா…” என்று ப்ரதீபாவிடம் சிரித்துக்கொண்டே சொன்னார்.

அக்கடையின் முதலாளி பாலனின் குரலிற்கு அடுத்தபடியாக அக்கடையில் உரிமையாய் ஒலிக்கும் குமார் அண்ணனின் குரலிற்கு அனைவரும் அடிபணிவர். ஜனாவும் அடி பணிந்தான்.

Advertisement