கடந்து செல் காதலுடன்! 8 2 10929 “மணி. அவங்க தேடி வந்தது உங்க யாரையும் இல்லை. அப்புறம் எதுக்கு அவங்களை பிடிச்சு வைச்சுக்கணும். விடுங்க” என்றார் மற்றவர். “எங்க இடதுக்குள்ள அத்துமீறி நுழைஞ்சிருக்காங்க“ “சேதாரத்தை வாங்கிடலாம். எவ்வளவு வேணும் சொல்லுங்க“ “அதை உங்ககிட்ட ஏன் சொல்லணும்? அவங்க உங்க ஆளுங்கன்னு இல்லைன்னு சொல்லிட்டீங்க தானே?” மணி கேட்க, “மூர்த்திக்காக நாங்க பேசி வாங்கி கொடுக்கிறோம்” என்றார் ஒருவர். “மூர்த்தி அண்ணனே பேசிப்பார். நீங்க கிளம்பிக்கோங்க” மாசிலாமணி முடித்துவிட்டார். “என்னப்பா மூர்த்தி. நீ சொல்லுப்பா. உனக்கு என்ன வேணுமோ கேளு. நாங்க வாங்கி தரோம். பணம், பதவி, சொத்து என்ன வேணும்ன்னாலும் சொல்லு” என்று அங்கிருந்து நகராமல் இவரிடம் கேட்டு நின்றார்கள். “அவங்க தேடி வந்தது எந்த பையனை?” என்று கேட்டார் குருமூர்த்தி. “அது எதுக்கு உனக்கு? சேதாரத்தை மட்டும் வாங்கிட்டு ஒதுங்கு” என்று ஓர் குரல் பாய்ந்து வந்தது. குருமூர்த்தி மின்னலாக எதிர் கூட்டத்திற்குள் பாய்ந்தவர், பேசியவனை உதைத்த உதையில் அவன் பல அடிகள் பறந்து போய் விழுந்தான். யாராலும் குருமூர்த்தியை தடுக்க முடியவில்லை. முடியவும் முடியாது! அவர்மேல் இருக்கும் பயம் இன்றும் உண்டே! “மூர்த்தி. அவன் புதுப்பையன். அவனுக்கு உன்னை பத்தி தெரியலைப்பா” என்று பெரியவர் நைச்சியமாக பேச, “நான் கேட்டதுக்கு பதில்” என்றவரின் பார்வை இப்போது சண்முகத்தின் மேல் அழுத்தமாக படிந்தது. “வசுந்தரா மேடம் மகன்” என்றார் சண்முகம். ஒரு நாள் முடிந்துவிட்டது. இன்னமும் குருமூர்த்தி கண்டுபிடிக்காமல் இருக்க மாட்டார் என்பது சண்முகத்தின் எண்ணம். “நான் அவனுங்களை விடுவேன்னு எப்படி நினைச்ச?” என்று அடுத்த கேள்வி குருமூர்த்தியிடம் இருந்து அம்பாக துளைத்தது. குருமூர்த்தி, அவரின் மகள் வாழ்க்கையை காப்பாற்றி கொடுத்தவர் வசுந்தரா. அவரின் மகனை தேடி வந்தவர்களை குருமூர்த்தி எப்படி விடுவார்? நிச்சயம் விட மாட்டார் என்று தெரிந்து தான் சண்முகமே நேரில் வந்தது. “அது வேற விஷயம். அவங்க பார்த்துப்பாங்க. நீ பிடிச்சு வைச்சிருக்கவங்களை விட்டுடு. அதுதான் நம்ம எல்லோருக்கும் நல்லது” என்றார் சண்முகம். “உங்க நல்லதை நீங்க பார்த்துக்கோங்க. என் நல்லதை நான் பார்த்துகிறேன்” என்றார் குருமூர்த்தி. “உன் பொண்ணை பத்தி நீ யோசிக்கலை” சண்முகம் சொல்ல, குருமூர்த்தியிடம் அப்படி ஓர் ஆங்காரம் வீறு கொண்டு எழுந்தது. “என் பொண்ணு பத்தி இனி ஒரு வார்த்தை வர கூடாது” என்று கர்ஜித்தார். “நான் உண்மையை சொல்றேன். அவங்க கணக்கு தப்பினது இல்லை“ “உன்னை உயிரோட விட்டதுல தப்பா கணக்கு போட்டிருப்பாங்க. சரியாக்கிடுறேன்” என்றார் குருமூர்த்தி. சண்முகம் முகம் கருத்து போனது. “சொன்னா கேளு மூர்த்தி. நீ ரிஸ்க் எடுக்கிற” சண்முகம் எச்சரிக்க, “அவர் உனக்காக தான் பேசுறார் மூர்த்தி. புரிஞ்சுக்கோப்பா” என்றார் பெரியவர். “வசுந்தரா மேடம் குடும்பம் ஒன்னும் சாதாரண குடும்பம் இல்லையே. அவங்க பிரச்சனையை அவங்களே பார்த்துப்பாங்க. நீ இதுல வராத மூர்த்தி. வேண்டாம்” என்றார் சண்முகம். குருமூர்த்தியின் நலனை தான் சண்முகம் பார்க்கிறார் என்பது அங்கிருந்த எல்லோருக்கும் புரிந்தது மாசிலாமணி உட்பட! “உன் இடம்ன்னு தெரியாம தான் வந்திருப்பாங்க. இந்த ஒருமுறை விட்டுடலாம்” என, “சின்ன குழந்தை கூட இதை நம்பாது. லிங்கம் அய்யாவை பார்த்துட்டு வந்ததுல இருந்து எங்களை பாலோ பண்றவங்களுக்கு நாங்க யாருன்னு தெரியாது இல்லை” என்று மாசிலாமணி நக்கலாக கேட்டார். “ம்ப்ச். பசங்க தொழிலுக்கு புதுசு. அதோட, அதோட அந்த பசங்க வேற ஒருத்தருக்கு வேலை செய்றவங்க” “அவரை வர சொல்லுங்க. பேசலாம்” என்றார் குருமூர்த்தி. “வசுந்தரா மேடம்க்காக துப்பு துலக்க நினைக்காத மூர்த்தி” என்று சண்முகம் கணித்து சொல்ல, “அந்த புது முதலாளி வந்ததுக்கு அப்புறம் பேசிக்கலாம். இப்போ கிளம்புங்க” என்று குருமூர்த்தி விடை கொடுத்துவிட்டார். வெகு சில ஆட்கள் என்றால் விட்டுவிட முடியும். ஆனால் குருமூர்த்தியிடம் இருப்பது பல நூறு ஆட்கள். அதில் பலர் குற்ற பிண்ணனி கொண்டவர்கள். காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திடுபவர்களும் அதில் அடக்கம். அவர்களின் குடும்பங்களுக்கும் பதில் சொல்ல வேண்டும். சட்டென இத்தனை ஆட்கள் காணாமல் போவதே மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும். வெகு ரகசியமாக, உலகத்தின் கண்ணை கட்டிவிட்டு ஆடும் ஆட்டத்தில் குருமூர்த்தி வெளிச்சத்தை பாய்ச்ச நினைக்கிறார். “அண்ணா. குருமூர்த்தி அண்ணா அசையற மாதிரி தெரியலை. பேசாம உள்ள புகுந்து பசங்களை மீட்டுடலாமா?” என்று சண்முகத்திடம் ஆட்கள் கேட்டனர். “வாய்ப்பில்லை. மூர்த்திக்கு இப்போவும் செல்வாக்கு உண்டு. சொல்ல முடியாது நம்ம கூட்டத்துலே அவனுக்கு ஆளுங்க இருப்பாங்க. அவ்வளவு சுலபமா எல்லாம் பசங்ககிட்ட போயிட முடியாது” என்ற சண்முகம் அவரின் ஆட்களுடன் அதே ஊரிலே தங்கிவிட்டார். பலருக்கு அந்த இரவு தூக்கமில்லாமல் போனது. முக்கியமாக குருமூர்த்தியால் சிறிதும் கண் மூட முடியவில்லை. சுபத்ரா நினைவு அவரை இன்றும் அதிகம் கொன்றது. கடந்த கால வாழ்க்கை ஓர் படம் போல் அவருக்குள் ஓடியது. இந்த நொடியும் மனைவியை நெஞ்சோடு அணைக்க அவரின் ஆவி துடித்தது. கட்டிலில் மனைவிக்கான இடம் வெறுமையாக இருந்தது அவரின் மனதை போல! சட்டென மகள் நினைவு! அவளை பார்த்தே ஆக வேண்டும் என்று தோன்றிவிட, உடனே அவளின் அறைக்கு விரைந்தார். கதவு தாளிடப்பட்டிருந்தது. குருமூர்த்தியின் ஆணை தான். “இனி ரூமுக்கு போன உடனே கதவை லாக் பண்ணிக்கோ” என்றிருந்தார். நள்ளிரவுக்கு மேல் நேரம் என்பதால் அவளை தொந்தரவு செய்ய மனமில்லை. நிமிடங்கள் அங்கேயே நின்றவர், அந்த கதவை கரங்களால் வருடினார். ‘நெஞ்சுக்குள்ள பொத்தி என் மகளை வளர்க்கலை நான்! அனாதை மாதிரி என் மகள் தனியா வளர்ந்தா!’ குருமூர்த்தி கண்ணோரம் கண்ணீர் கசிந்தது. சில வருடங்கள் இருண்ட காலத்தின் வாழ்ந்தவர்கள்! என் பொண்டாட்டியை விட்டுட்டேன். என் மகளை விட மாட்டேன்! தந்தையின் கலங்கிய நெஞ்சம் வைராக்கியம் கொண்டது. நெகிழ்ந்த கரங்கள் இறுகி போக, கடினப்பட்ட இதயத்துடன் அவரின் அறைக்கு சென்றார். குருமூர்த்தி மகளை தொந்தரவு செய்ய மனமில்லாமல் செல்ல, அவரின் மகளோ அங்கு தொந்தரவில் தான் இருந்தாள். கதவு தாளிடப்பட்டிருந்தது யாருக்கு நல்லது என்று தெரியவில்லை. சம்யுக்தா அறையில் இருந்தான் சர்வாச்சார்யா! ஓரளவு எதிர்பார்த்து இருந்தாள் என்றாலும் அதிர்ச்சிக்கு குறைவில்லை. இப்படி நடந்துவிட கூடாது என்பதாலே இன்று அவனிடம் பேச சென்றாள். ஆனால் பேச வாய்ப்பளிக்காத நல்லவன், அவளை கடுப்பாக்கி, திட்டு வாங்க வைத்து, அழவும் வைத்துவிட்டான். குருமூர்த்தி பேசியதில் சம்யுக்தா எதற்காக அவனை காண சென்றாளோ அதையே செய்யாமல் வந்துவிட்டாள். அதன் பின்னான நேரத்தில் சம்யுக்தா தெளிந்து, குருமூர்த்தியிடம் சொல்லிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் காத்திருக்க அவரோ இவளின் முகத்தை கூட பார்க்கவில்லை. மகளுக்கு திரும்ப கண்ணீர் சூழ்ந்துவிட்டது. அந்த வருத்தத்திலே படுத்திருக்க, ஏதோ சத்தம். பெண்ணுக்கு திகிலாகிவிட்டது. அந்த ரகசிய சுவற்றின் பக்கம் தான் சத்தம். திறக்க முயன்று கொண்டிருக்கிறான் என்று புரிந்து போனது. முதலில் வருவது அந்த நல்லவன் தானா இல்லை வேறு யாரும் இந்த வழியை கண்டுபிடித்து விட்டார்களா என்ற சந்தேகம் வேறு முளைத்துவிட்டதில், படபடத்து போனாள் சம்யுக்தா. திக் திக்கென்ற அதிர்ந்த நெஞ்சத்துடன் நின்றிருந்தவளை, எதிர்கொண்டான் அடங்காதவன். “நல்லவேளை இவன் மட்டும் தான்” என்று இவள் ஆசுவாசம் கொள்வதற்குள், குருமூர்த்தி அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. இவளின் அறைக்கு முன் அவரின் அரவம் தெரிய, பெண்ணுக்கு நெஞ்சடைத்து போனது. இவன் வேறு ஏதோ பேச வர, “ஸ்ஸ்” என்று பாய்ந்து அவன் வாய் மூடினாள் சம்யுக்தா. “ஏய் என்ன சும்மா சும்மா என்னை தொடுற? டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணு. இதெல்லாம் எனக்கு பிடிக்காது” என்றான் இந்த நல்லவன். ‘மலைமாடுக்கு இந்த நினைப்பு வேற இருக்கா?’ சம்யுக்தாவிற்கு பொங்கியது.