சர்வாச்சார்யா கார் எஸ்டேட்டிற்குள் நுழைந்த நேரமே வானவேடிக்கை ஆரம்பித்துவிட்டது.

என்ன இது? வசுந்தரா, சிவப்பிரகாசம் ஜன்னலை திறந்து பார்க்க, நல்லவன் புன்னகைத்தான்.

மனுஷன் அடங்க மாட்டேங்கிறாரே!

“டாட்” என்று அவன் பிள்ளைகள் கார் நிற்கவும், காருக்குள் வைத்தே தந்தை மேல் ஏறிவிட்டார்கள்.

தீரஜ் கேஸ் முடிவுக்கு வரும் நேரம் என்பதால் சர்வாச்சார்யா டெல்லியிலே சில நாட்கள் தங்கிவிட்டான். பிள்ளைகளுக்கு அந்த பிரிவின் பாசம்!

“ஹேய் மை லயன்ஸ்!” சர்வாச்சார்யா முகம் அப்படியே புன்னகையில் பூத்துவிட, இருவரையும் ஆளுக்கொரு பக்கமாக தூக்கி முத்தமிட்டான்.

“தங்கங்களா! நாங்களும் இங்கதான் இருக்கோம்” என்று வசுந்தரா குரல் கொடுக்க,

“பாட்டி!” என்று அவரிடமும், சிவபிராகசத்திடமும் தாவி கொண்டார்கள் பேரன்கள்.

சர்வாச்சார்யா காரை விட்டு இறங்கியதும் சம்யுக்தா அவன் கண் முன் நின்றாள்.

இருவருக்குள்ளும் மௌனமான ஆர்ப்பரிப்பு!

மனைவியை இழுத்து நெஞ்சோடு இறுக்கமாக அணைத்து கொள்ள பரபரத்தது.

கட்டுப்படுத்தி கொண்டவன், சம்யுக்தாவின் கரத்தை பற்றி இறுக்கமாக கோர்த்து கொண்டான்.

வசுந்தரா தம்பதி பேரன்களுடன் வர, ஆரத்தி எடுக்க வேண்டும் என்றார்கள்.

“ஆரத்தி எதுக்கு?” வசுந்தரா மறுக்க,

“உங்க தீர்ப்புக்கான மரியாதை இது” என்றார் குருமூர்த்தி.

“சர்வா” என்று வசுந்தரா மகனை அழைத்து தனக்கு பக்கத்தில் நிற்க வைத்து கொள்ள, அவனோ மறுத்த சம்யுக்தாவையும் தன்னுடன் நிறுத்தி கொண்டான்.

ஒரு குடும்பமாக நின்றார்கள் அவர்கள். தாத்தா பாட்டி, அப்பாம்மா, பேரன்கள்!

குருமூர்த்தி எப்போதும் போல் இப்போதும் பேரன்களை பார்த்து  நிறைந்து போனார்.

என் பேரன்களுக்கு குடும்பம் இருக்கு! ரொம்ப நல்ல குடும்பம் இருக்கு! அவங்க சந்தோஷமா இருக்காங்க. இருப்பாங்க!

பல நேரங்களில் மனிதர் யோசித்திருக்கிறார். என் அடுத்த தலைமுறை எப்படி இருப்பாங்க? எந்த சூழ்நிலையில் வளருவாங்க? என்னோட கடந்த காலம் என் பொண்ணை பாதிச்ச மாதிரி  அவங்களையும்  பாதிக்குமா என்றெல்லாம் அதிகமே மனஉளைச்சல் கொண்டிருக்கிறார்.

ஆனால் அதெல்லாம் சர்வாச்சார்யா வருவதற்கு முன்!

ம்ஹ்ம். சுவாரிஸ்யமான உண்மை இதுதானே!

அப்பா, மகளின் வாழ்க்கையை இரண்டாக பிரித்துவிடலாம்.  சர்வாச்சார்யாவிற்கு முன்! சர்வாச்சார்யாவிற்கு பின்!

குடும்பமாக மகள் வீட்டிற்குள் வர, குருமூர்த்தி சம்மந்திகளை உபசரிக்க ஆரம்பித்தார்.

பேரன்கள் ஒருவர் மாற்றி ஒருவரிடம் தாவி கொண்டிருந்தவர்கள், குணாவுடன் எஸ்டேட் ரைடிற்கு கிளம்பிவிட்டார்கள்.

வசுந்தரா பார்வை குருமூர்த்தியை அடிக்கடி தொட்டு வந்தது.

“அவன் ஒரு ரௌடி. நிச்சயம் அவனுக்கு நல்ல குடும்பமும், நல்ல வளர்ப்பும் இருக்காது, நீ ரொம்ப நல்ல பொண்ணு. அவனை கட்டிக்கிட்டா உன் வாழ்க்கை என்ன ஆகும்ன்னு யோசிச்சு பார்த்தியா நீ?” என்று சுபத்ராவை வரவைத்து பேசினார் வசுந்தரா.

“நீ குருமூர்த்தியை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு தெரிஞ்சதும் எனக்கு படபடன்னு ஆகிடுச்சு. அவனுக்கு லாயர் நீதானே. எத்தனை கேஸ் அவன்மேல் இருக்கு தெரியுமில்லை? சில கேஸ் நிரூபணம் ஆனா கூட அவன் எத்தனை நாள் உள்ளே போவான்னு தெரியாது. அவனை நம்பி உன் லைஃபை தொலைக்க போறியா நீ?” என்று வசுந்தரா கோவப்பட,

“மேடம். உண்மையிலே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்மேல உங்களுக்கு இவ்வளவு அக்கறை இருக்குன்னு”

“சுபத்ரா. படிச்ச தெளிவான பொண்ணு நீ? கொஞ்சம் நீ போகஸ் பண்ணா என்னை மாதிரி நீ வரலாம். ஆனா அதுக்கு குருமூர்த்தியை நீ கல்யாணம் பண்ணிக்க கூடாது. உன் தகுதிக்கு”

“மேம். எனக்கான தகுதி எதுன்னு எனக்கு தெரியும் மேம்” என்றார் சுபத்ரா.

“அவர் தொழில் அது. தப்புதான். எனக்கு தெரியும். ஆனா அவர் நல்லவர். ரொம்ப நல்லவர். எனக்கு அவர்மேல் நம்பிக்கை இருக்கு. நான் நிச்சயம் சந்தோஷமா வாழுவேன், தினம், தினம் இதே கோர்ட்டுக்கு அவரோட ஜோடியா வந்து போவேன்”

“சுபத்ரா”

“ஸாரி மேம். தீர்ப்பு கொடுக்கிற இடத்துல இருக்கீங்க. ஆனா உங்களோட எல்லா தீர்ப்பும் சரின்னு ஆகிடாது. அவர் விஷயத்துல உங்க தீர்ப்பு தப்பு. உங்க எண்ணங்கள் தப்பு. அவர் நல்லவர். நீங்க அதை புரிஞ்சுகிற நாள் வரும்ன்னு நான் நம்புறேன்” என்ற சுபத்ரா அதன் பின் சொன்னது போல் குருமூர்த்தியை திருமணம் செய்து அவருடன் ஜோடியாக தான் கோர்ட்டுக்கு வருவார்.

மிகவும் விறைப்புடன் தான் சுற்றுவார். அதிலும் வசுந்தரா முன் தலை வெகுவாக உயர்ந்து நிற்கும்.

வேண்டுமென குருமூர்த்தி கையை வேறு பிடித்து கொள்வார்.

சின்ன பெண் புரியாமல் செய்கிறாள் என்று நினைக்க வழியில்லாமல், இறுதி வரை சுபத்ரா மகிழ்ச்சியாக கெத்தாக தான் அந்த கோர்ட்டில் வலம் வந்தார்.

சுபத்ராவின் நம்பிக்கை எவ்வளவு உண்மையானது.

குருமூர்த்தியிடம் என் ஜட்ஜமென்ட் தவறித்தான் விட்டது.

இப்போது வரை குருமூர்த்தி சுபத்ராவின் கணவனாக மட்டுமே இருக்கிறார்.

“என்ன மேடம்? என்கிட்ட எதாவது சொல்லனுமா?” என்று கேட்டார் குருமூர்த்தி.

“சுபத்ரா சொன்னது சரி” என்றார் வசுந்தரா.

வீட்டின் சத்தம் அப்படியே அடங்கிவிட்டது.

சம்யுக்தா உடல் விறைத்து போக, பெண் அப்படியே நின்று விட்டாள்.

“நீங்க நல்லவர்ன்னு சொன்னா. நான் அதை புரிஞ்சுகிற நாள் வரும்ன்னு சொன்னா” என்றார் வசுந்தரா.

குருமூர்த்தியின் தொண்டை குழி ஏறி இறங்கியது.

அவளை பற்றி பேசினால் நான் உடைந்து போகாமல் இருக்க, இன்னும் எத்தனை வருடங்கள் தான் செல்ல வேண்டும்!

“அந்த சம்பவம் நடக்கிறதுக்கு கொஞ்ச நாள் முன்னாடி அவகிட்ட பேசினேன். பாதுகாப்பான இடத்துல இரு. குருமூர்த்தி மேல் உள்ள கோவத்தை உன்மேல காட்ட வாய்ப்பிருக்குன்னு சொன்னேன். ஆனா சுபத்ரா பத்திரமா இருக்கேன் மேம். அப்படியே எதாவது ஆனாலும் நீங்க எல்லாம்தான் இருக்கீங்களே. என் புருஷனையும், என் பொண்ணையும் எனக்காக பார்த்துக்க மாட்டிங்களா என்ன’ன்னு கேட்டுட்டு போயிட்டா!”

“உங்களுக்கு என்னால முடிஞ்ச நியாயத்தை செஞ்சேன். ஆனா சம்யுக்தாவுக்கு அநியாயம் பண்ணிட்டேன். என்னுடைய கவனக்குறைவால என் மருமக பல வருஷம் கஷ்டப்பட்டுட்டா. என்னை மன்னி”

“வேண்டாம். கேட்காதீங்க. வேண்டாம்” என்று உடனே மறுத்துவிட்டார் குருமூர்த்தி.

“உங்க பதவிக்கு, மதிப்பு மரியாதைக்கு நீங்க யார்கிட்டேயும் மன்னிப்பு கேட்டுடாதீங்க. விஷயம் தெரிஞ்சப்போ எனக்கு கோவம் வந்தது உண்மை தான். உங்க மகனை கூட சாப்”

“போதும். இப்போ எதுக்கு பழசை பேசிகிட்டு? மாம். ரெஸ்ட் எடுங்க போங்க. டாட் நீங்களும் போங்க” என்றான் சர்வாச்சார்யா.

“டேய் தம்பி. நான்”

“பேசாதீங்க சொன்னேன்” மருமகன் கோபம்கொண்டான்.

சம்யுக்தாவிடம் சென்றவன் அவளின் கரம் பற்றி எஸ்டேட்டிற்குள் அழைத்து சென்றான்.

பெண் மறுக்கவில்லை. பலமாக வெளிக்காற்றை இழுத்து சுவாசித்தபடி கணவனுடன் நடந்தாள்.

கரத்தின் ஜில்லிப்பு மெல்ல மெல்ல சரியாக, சம்யுக்தாவின் முகமும் தெளிந்தது.

“இந்த கஷ்டம் எதுக்குடி?” என்று சர்வாச்சார்யா அவளை நிறுத்தி வைத்து கேட்டான்.

“எனக்கு அழ முடியறதில்லை. அதனால கொஞ்சம் இப்படி?”

“அம்மாக்காக அழுறதுல என்னடி தப்பு?”

“நிறைய அவங்களுக்காக அழுதுட்டேன். அதனால தான் அழ முடியலை”

“ஹேய்” சர்வாச்சார்யா, அவளை தன் நெஞ்சில் பொதித்து கொண்டான்.

ராகவ் அவர்களுக்கு பின்னால் தான் நடந்து வந்து கொண்டிருக்க, சம்யுக்தா விலகி கொண்டாள்.

அன்றிரவு நல்லவனின் பிள்ளைகள் சத்தம் மொத்த எஸ்டேட்டையும் ஆக்ரமித்துவிட்டது.

ஆட்கள் குருமூர்த்தியை சந்திக்க வந்த வண்ணம் இருந்தனர்.

சர்வாச்சார்யா இரவு உணவை உண்ண கூட எழாமல் அப்படி ஒரு தூக்கம்.

வசுந்தரா, சிவப்பிரகாசம் மாலை நேர வாக்கிங், பேரன்களுடன் உணவு, அவர்களை தூங்க வைப்பது என்று பிசியாகி விட்டனர்.

நல்லவன் தூக்கத்தில் இருந்து எழும் நேரம் வீடே அமைதியாகிவிட்டிருந்தது.

குளித்து வர, அப்பாவும், மகளும் மட்டும் ஹாலில் இருந்தார்கள்.

“சாப்பிடுங்க” என்று சம்யுக்தா உணவு எடுக்க போக,

“எனக்கு பிரியாணி வேணும்” என்றான் நல்லவன்.

சம்யுக்தா அதிர்ந்து தந்தையை பார்க்க, அவரோ சமையல் அறைக்கு சென்று கொண்டிருந்தார்.

“ஏங்க என்ன இது?” மனைவி கண்டிக்க,

“சம்யுக்தா” என்றார் தந்தை.

சம்யுக்தா கணவனை முறைத்து, சமையல் அறைக்கு சென்றவள், “அப்பா அவருக்கு இடம் கொடுக்கிறதை எப்போதான் நிறுத்த போறீங்க?” என்று கேட்டாள்.

“அப்படி என்ன இடம் கொடுத்துட்டார்ன்னு குதிக்கிற நீ? உன் அழகு அப்பா எம்பையர்ல எனக்கான வாடகையை எவ்வளவு ஏத்தியிருக்கார் தெரியுமா?” என்று பின்னாலே வந்தான் நல்லவன்.

“சரியான வாடகையை தான் போட்டிருக்கு. சம்மந்தி கூட சொன்னார். நாம கொடுக்கிற வசதிக்கு வாடகை குறைவுன்னு” என்று குருமூர்த்தி சொல்ல,

“டாட்” என்று பல்லை கடித்தான் மகன்.

“போன வாரம் கூட ஒரு மணி நேரம் நெட் கிடைக்காம வேலை நடக்கலை. அதுக்கு நாங்க கிளைம் பண்ணவா?” மருமகன் மிரட்ட,

“மெயின்டெனன்ஸ்ன்னு ஆல்ரெடி மெயில் போட்டாச்சு” என்றாள் சம்யுக்தா.

“ஏன் லீவ் நாளுல எல்லாம் பார்க்க மாட்டிங்களா?”

“ஏழு நாளும் உங்க ஆபிஸ் திறந்து தான் இருக்கு” குருமூர்த்தி அவன் கையில் கேரட் சாப்பிட கொடுத்தபடி சொன்னார்.

“அப்படித்தான் இருக்கும். அநியாயத்துக்கு வாடகை வாங்குற பணத்தை நாங்க எப்படி சரிக்கட்ட” என்று நக்கலாக சொன்னவன் கேரட்டை மூன்று துண்டாக்கி அப்பா, மகள் கையில் கொடுத்தான்.

“என் பேரன்களுக்கு அந்த ரூம் வேணுமாம்” என்று குருமூர்த்தி சொல்ல,

“முடியாது. அது என் ரூம். அங்க காலை வைச்சானுங்க, தலை கீழா கட்டி தொங்க விட்டுடுவேன். சொல்லி வைங்க உங்க பேரனுங்ககிட்ட” என்று எச்சரித்தான் மருமகன்.

“சின்ன பிள்ளைகள் கேட்டா கொடுக்கிறதுக்கு என்ன? என் பேரனுங்களை தலை கீழா தொங்க விடுறதுக்கு இவர் தலை கீழா நின்னா கூட முடியாதுன்னு சொல்லி வை சம்யுக்தா” என்றார் தந்தை.

“ஒஹோ! என்னை மட்டும் நிக்க வைச்சார் தலை கீழா?”

“அது ட்ரையினிங் டைம்ல. இவர் சொல் பேச்சு கேட்கலை. என் பேரனுங்க அப்படியா? சமத்து பசங்க”

“அப்புறம் என்ன? சமத்து பசங்ககிட்ட ரூம் இல்லைன்னு சொல்லிட வேண்டியது தானே?” என்றான் கேலியாக.

குருமூர்த்தி நொடி முழித்து, “அந்த இருட்டு ரூமுக்கா இப்படி?” என்று கேட்டார்.

“எனக்கு பசிக்குது”

“இதோ ஆகிடுச்சு. சம்யுக்தா அந்த நெய் எடு” என்றவர் கை வேக, வேகமாக இயங்கியது.

சம்யுக்தா இருவரையும் கடுப்பாக பார்த்து தந்தைக்கு உதவ, “ஸ்வீட் எடுத்து வை” என்றான் நாயகன்.

மனைவி கையில் இருந்த கத்தியை நீட்டி, “கொன்னுடுவேன்டா உன்னை!” என்று உதட்டசைத்து எச்சரித்தாள்.

“என்னடி சொல்ற? சத்தமா சொல்லு” என்று கேட்டான் சேட்டைக்காரன்.

“எடுத்து வைக்கிறேன்” சம்யுக்தா பல்லை கடித்தாள்.

“ஜீராவோட ரசகுல்லா வேணும்” சர்வாச்சார்யா கண் அடிக்க,

அடேய் மலைமாடு!

சம்யுக்தா அவன் காலில் மிதித்துவிட்டு சென்றாள்.

“முடிஞ்சது” குருமூர்த்தி சொன்னபடி டேபிளுக்கு எடுத்து வந்தார்.

“உங்களுக்கும் எடுத்துட்டு வாங்க” என்றான் நாயகன்.

சுபத்ரா நினைவில் அப்பாவும், மகளும் இரவு உணவை கொறித்து தான் இருக்க, அவர்களுக்கும் இப்போது பசித்தது.

சுட, சுட மருமகனுக்கு பரிமாறினார் குருமூர்த்தி.

“கொஞ்சம் முன்னாடி சொல்லியிருந்தா என் பேரன்களும் சாப்பிட்டிருப்பாங்க” குருமூர்த்தி சொல்ல,

“இப்போ நான் சாப்பிடவா வேண்டாமா?” என்றான் கோவக்காரன்.

“டேய் தம்பி. சாப்பிடு. இந்தா நீ கேட்ட ஸ்வீட்”

“எனக்கு ஸ்வீட் வேண்டாம்” உர்ரென முகம் வைத்து மறுத்துவிட்டான்.