இப்போதும் சம்யுக்தாவின் காரில் இந்த வாசகம் இடம் பெற்றிருந்தது.
பெண்ணுக்கு அதை முன்பு போல் படிக்க தான் நேரமில்லை.
கடந்த காலங்களில் பயணம் மேற்கொள்ளும் நேரமெல்லாம் கடமையாக, கட்டாயமாக படித்த வாசகம் இது!
அன்று இருந்த கார் இது இல்லை. புது கார் வாங்கிவிட்டார் குருமூர்த்தி. ஓட்டுநர் அவரே எனும் போது முருகர் பக்தர் முருகரை கூடவே வைத்து கொண்டார்.
சம்யுக்தா காரை விட்டு இறங்கும் நேரம் அந்த வாசகத்தை பார்த்தவள், நிமிடம் அப்படியே இருந்து கொண்டாள்.
பெண்ணின் வாழ்க்கை மாற்றத்தை இந்த வாசகம் முற்றும் முழுதாக உணர்த்தி விட்டது என்றே சொல்லலாம்!
படம் போல் அவளின் கடந்த காலம் அவளுக்குள் ஓடிவிட்டது.
எங்கு இருந்து எங்கு சென்றிருக்கிறேன் நான்!
“ம்ம்மா” என்று அவளுக்கான அழைப்பு வந்துவிட்டது.
“இதோ வந்துட்டேன்” சம்யுக்தா என்ன நினைத்தாளோ வாசகத்தை விரலால் வருடி விட்டு சென்றாள்.
ஊட்டி எஸ்டேட்!
தந்தை மகளுக்கான திருப்பு முனை!
இந்த வருடம் விடுமுறைக்காக இங்கு தான் வந்திருக்கிறார்கள்.
“எவ்வளவு நேரம்டி? உன் சின்னதை கையில பிடிக்க முடியலை” என்று அனுஷா சலித்து கொண்டு வந்தாள்.
“அவனை நான் பார்த்துகிறேன். குணா எங்க?” என்று சம்யுக்தா கேட்க,
“அங்கிளோட உள்ள தான் இருக்கார்” என்றாள் குணாவின் மனைவி அனுஷா.
ஆம். சம்யுக்தாவின் தோழி அனுஷா இப்போது குணாவின் மனைவி. காதல் திருமணம் என்று குத்து மதிப்பாக சொல்லலாம்.
அனுஷாவிற்கு குணா மேல் காதல். குணாவை கேட்டால் தெரியாது என்பான்!
ஆனால் அனுஷா வேண்டுமென மண்டபத்திலே ரகளை செய்து பெண்ணை தூக்கி வந்தவன்! இது காதல் இல்லையாம்! அவளுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறானாம்!
நம் நாயகன் சகவாசம் எப்படி இருக்கும்? அத்தனையும் வில்லங்கம், அராத்துகள் தான்!
வருடங்கள் ஓடினாலும் சிலது மட்டும் மாறவே இல்லை. குருமூர்த்தியின் எஸ்டேட் வீட்டை புதுப்பிக்க இப்போது தான் மருமகன் ஒத்து கொண்டிருக்க, குருமூர்த்தி உடனுக்குடனே வேலையை முடித்துவிட்டார்.
“ரொம்ப நல்லா இருக்கு” என்று சம்யுக்தா வீட்டை பார்த்து சொல்ல,
“என்ன நல்லா இருக்கு? நான் சொன்ன பெயிண்டை இவன் அடிக்கவே இல்லை” என்றபடி குருமூர்த்தி வந்தார்.
“ஏன்ப்பா இந்த கலர் நல்லாத்தானே இருக்கு” என்று சம்யுக்தா சொல்ல.
“நல்லா ப்ரைட்டா அடிச்சிருக்கணும். இது என்னமோ?” மனிதருக்கு பிடிக்காமல் முகம் சுருங்கியது.
“நல்லா பஞ்சு மிட்டாய் கலர், ஆரஞ்சு கலர் தான் வேணுமாம் இவருக்கு! பெயிண்ட் கலர் கூட முகத்துல அடிச்ச மாதிரி தான் இருக்கணுமா?” என்று குணா கேட்க,
“அப்படித்தான் இருக்கணும். எனக்கு நான் சொன்ன கலர் தான் வேணும். ஆளுங்களை வர சொல்லு மணி” என்றார் குருமூர்த்தி.
“டேய் அவர் சொல்றதை செஞ்சிருக்க, நான் சொன்னதை செய்யலை இல்லை நீ?” மனிதர் கடுப்பாகி விட்டார்.
“பிள்ளைகளுக்கு மைல்டு கலர் தான் வேணும்ன்னு சொன்னார். எனக்கென்ன? நீங்க மாத்திக்கோங்க” என்று தோள் குலுக்கினான் குணா.
பிள்ளைங்களுக்கா? குருமூர்த்தி உடனே சாந்தமாகிவிட,
“தாத்தா. தாத்தா” என்று ஓடி வந்தார்கள் வாண்டுகள் இரண்டும்!
ஐந்து வயது, மூன்று வயதில் ஆண் பிள்ளைகள்!
“அந்த ரூம் எனக்கு தான்” என்று இரண்டும் ஒரே குரலில் கத்த,
“எந்த ரூமைடா கேட்கிறீங்க? காட்டுங்க வாங்க” என்று இருவரையும் கைகளில் தூக்கி கொண்டார் குருமூர்த்தி.
இருவரும் சரியாக அந்த ரகசிய அறை பக்கம் தான் கைகாட்டினார்கள்.
சரியா போச்சு போ!
“உன் அப்பாகிட்ட கேளுங்க. இந்த ரூம் அவருக்கு வேணுமாம்” என்றார் குருமூர்த்தி.
“நீங்க கேளுங்க தாத்தா. எனக்கு வேணும்”
“நோடா அண்ணா. எனக்கு தான் வேணும்”
இரண்டும் அவரின் கையில் இருந்தபடியே சண்டையிட ஆரம்பித்துவிட்டது.
ஒன்றுக்கு உருவம் குருமூர்த்தி! குணம் சர்வாச்சார்யா!
மற்றொன்றுக்கு உருவம் சர்வாச்சார்யா! குணம் குருமூர்த்தி!
ம்ஹ்ம். அப்பா, கணவன் மீதுள்ள சம்யுக்தாவின் அன்பு, காதல் அவளின் பிள்ளைகளிடம் தெரிகிறது.
ஒன்று கூட உருவத்திலோ, குணத்திலோ அவளை போல் இல்லை. அதில் அவளுக்கு குறையும் இல்லை.
இப்போதும் இரண்டும் சேர்ந்து குருமூர்த்திய ஆளுக்கொரு பக்கம் இழுக்க, “கத்தாதீங்கடா. இந்த ரூம் என்ன நல்லா இருக்குன்னு, இதுக்கு போய் சண்டை போட்டுட்டு இருக்கீங்க? நான் உங்களுக்காக ரொம்ப பெரிய ரூம் ரெடி பண்ணி இருக்கேன். அதை பாருங்க. வாங்க” என்று திரும்பி நடக்க போக,
“எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு. உங்க செல்ல பேரனுக்கு பெரிய ரூம் கொடுத்துகோங்க, ஐ டோண்ட் மைண்ட் தாத்தா” பெரிய மனதாக சொன்னது பெருசு.
“தாத்தா. மாட்டேன். எனக்கு இது தான் வேணும்” என்று தாத்தாவின் கன்னம் பிடித்து செல்லம் கொஞ்சியது சின்னது.
“டேய் தம்பிகளா! தாத்தா சொன்னா கேட்கணும். என்னோட வந்து அந்த ரூமை பார்த்திட்டு பேசுங்க” என்று மனிதர் இரண்டையும் மறுக்க, மறுக்க தூக்கி சென்று அந்த அறைக்குள் விட,
“ம்ஹூம். நல்லா இல்லை. இந்த ரூம் எங்களுக்கு பிடிக்கலை” இரண்டும் தீர்ப்பு சொல்லிவிட்டது.
“டேய் அநியாயம் பண்ணாதீங்கடா. எப்படியும் என்னோட தான் தூங்க போறீங்க. அப்புறம் எதுக்குடா உங்களுக்கு தனி ரூம்?”
“இந்த ரூம் எங்களுக்காக சொன்னீங்க தாத்தா. இது மட்டும் ஏன்?” என்று கேட்டான் பெரியவன்.
“தப்பு தான், தப்பு தான். உங்க அப்பா சொன்னார்ன்னு இந்த ரூமை நான் ரெடி பண்ணியிருக்கவே கூடாது. குணா மகளுக்கு கொடுத்துடுவோம்”
“அய்யே, தாத்தா. இது பாய்ஸ் ரூம். அக்கா கேர்ள்” என்று மழலை மொழியில் சொல்லி சிரித்தது சின்னது.
“அப்பா. எங்க இருக்கீங்க? மூணு பேரும் சாப்பிட வாங்க” என்று சம்யுக்தா குரல் கேட்கவும்,
“ரூம் பிரச்சனை சாப்பிட்டு முடிக்கவும் பார்த்துக்கலாம். இப்போ சாப்பிட போலாம்” என்று குருமூர்த்தி பேரன்களுடன் உணவுண்ண வந்தார்.
கற்பகம் பாட்டி ஓரிடத்தில் இருந்த படியே இவர்களுக்கான உணவை கவனிக்க, சம்யுக்தா முதலில் தந்தைக்கு பரிமாறினாள்.
பின் மகன்களுக்கு வைத்து கொடுக்க, இரண்டும் தட்டில் ஓர் வாய், குருமூர்த்தியிடம் ஓர் வாய் என்று தான் உண்டது.
சம்யுக்தா வழக்கம் போல் தந்தை வயிற்றை கவனிக்க, அவர் பேரன்களை நன்றாக சாப்பிட வைத்த பின் தான் அவர் உண்டு முடித்தார்.
சம்யுக்தா பிள்ளைகளை சுத்தம் செய்து கொண்டிருக்க, “சீக்கிரம் டிவி போடுங்க” என்றபடி குணா பரபரப்பாக ஓடிவந்தான்.
தீரஜ் என்ற பெயர் தான் இப்போது அத்தனை தொலைக்காட்சிகளிலும் ஓடி கொண்டிருந்தது.
இன்று தான் அவனுக்கான இறுதி தீர்ப்பு எழுதப்பட்டது.
ஆம். இத்தனை வருடங்கள் கடுமையாக எதிர்த்து நின்றவன், இனியும் போராட முடியாமல், அதற்கான வழியில்லாமல் சிறைக்குள் அடைக்கபட்டான்.
வசுந்தரா தான் அவனுக்கான தீர்ப்பை எழுதினார்.
ஆம் இவன் ஒருவனுக்காகவே ரிட்டையர் ஆகும் வரை பதவியில் தொடர்ந்தார் வசுந்தரா.
ஒரு அன்னையின் வைராக்கியம் இது!
சட்டம் அனைத்திற்கும் மேலானது என்று புரிய வைத்துவிட்டார் நீதிபதி வசுந்தரா.
சர்வாச்சார்யா சாட்சியாக அன்னையின் முன் அமர்ந்திருந்தான்.
சிவப்பிரகாசம் மிகவும் கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்தி கொண்டார் மனிதர்.
எங்க குடும்பத்தை ஓட விட்டவனை என் பொண்டாட்டியும், என் மகனும் தண்டிச்சுட்டாங்க. போதும். இந்த ஜென்மத்திற்கு எனக்கு இது போதும்!
தீரஜ் அவனுக்கான மிச்ச வாழ்க்கையை சிறையில் தான் கழிக்க வேண்டும்.
“பணம், பதவி, அதிகாரத்தை வைச்சு, நீ மத்தவங்களை ஓட விட்ட! இன்னைக்கு அதையே வைச்சு, நான் உன்னை ஓரிடத்துல உட்கார வைச்சுட்டேன்” என்றான் சர்வாச்சார்யா.
தீரஜ்க்கு இப்போதும் கோவம் தான். ஆனால் தன் முன் நிற்பது மலை. மோதினால் ஆபத்து அவனுக்கு தானே!
கோகுலின் அம்மா நடக்க முடியாமல் நடந்து வந்து தீரஜ் கன்னத்தில் ஒன்று வைத்தார்.
ஒற்றை மகன்! ஏன் வாழ்கிறோம் என்று தெரியாமல் ஓர் வாழ்க்கை. அவர்களுக்கு இருந்த ஒரே பிடிப்பு மகனுக்கான நியாயம். அது இன்று கிடைத்துவிட்டது.
கொதித்திருந்த அவர்களின் நெஞ்சங்களும் குளிர்ந்து போக, சர்வாச்சார்யா தலையில் கை வைத்து சென்றார்கள்.
ஆதி தவிர மற்ற எல்லோருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. ஆதிக்கு பெண் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
முன்பு போல் கூட்டு குடும்பம் இல்லை. தங்கைகள் கூட தனி, தனி வீட்டில் தான் வசிக்கிறார்கள்.
சிவப்பிரகாசம், அவரின் தங்கைகளுக்குள்ளான பாசத்தில் மாற்றமில்லை. ஆனால் மற்றது எல்லாம் மாறிவிட்டது.
“சோ. ரிட்டையர் ஆகிடலாமா பாட்டிமா?” என்று கேட்டார் சிவப்பிரகாசம்.
அவருக்கு அலைய முடியவில்லை. இப்போதெல்லாம் லண்டனை விட்டு மனைவிக்காக மட்டுமே வருகிறார்.
பேரன்களுடன், ஓய்வில் இருப்பது பிடிக்கிறது. அவரின் பொறுப்பை மருமகள் சம்யுக்தா தலையில் கட்டிவிட்டு, இவர் குருமூர்த்தியின் கிளப் பக்கம் ஒதுங்கி விடுகிறார்.
எஸ். அதேதான். குருமூர்த்தி அங்கு சென்று நம் கலைகளை கற்று கொடுப்பதற்கான கிளப் ஒன்றை ஆரம்பித்து, வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறார்.
வசுந்தராவும் அங்கு வந்துவிட்டால், குடும்பம் முழுமையடைந்துவிடும்.
“டாட். இன்னும் ஆறு மாசம் தானே? அம்மா முடிக்கட்டும்” என்றான் சர்வாச்சார்யா.
“இதுக்கு அப்புறம் நீங்க நினைச்சாலும் ஜட்ஜா இருக்க முடியாது மாம். ரொம்ப பிடிச்சு, உழைச்சு இந்த பதவியில இருக்கீங்க? இன்னும் பல தீரஜ்கள் இருக்காங்க. என்னோட விஷ் நீங்க ஆறு மாசத்தை முடிக்கணும்” என்றான் மகன்.
வசுந்தரா கணவரை பார்க்க, “ராஜா சொல்றதும் சரியா தான் இருக்கு. முடிச்சுட்டே வா வசு, ஆனா அதுக்கு அப்புறம் எதாவது கௌரவ பதவி வந்தா ஏத்துக்க கூடாது” என்றார் சிவபிராகசம்.
“உங்களை எல்லாம் விட்டு அதிகம் தள்ளி இருந்தது நான்தான். இனியும் அப்படி முடியாது. என் பேரப்பிள்ளைங்க பொறுப்பையாவது முழுசா ஏத்துக்கணும். சோ ஆறு மாசம் முடியவும் நேரா லண்டன் தான்” என்றார் வசுந்த்ரா.
அடுத்து மூவருமாக கிளம்பி சுஹாசினி குடும்பத்தை பார்க்க மும்பை வந்தார்கள். சுஹாவிற்கு இரண்டாம் பிள்ளை வயிற்றில் இருக்கிறது. கார்த்திக் இப்போது மனைவியுடன் தனியே தான் இருக்கிறான்.
“இந்த பிரசவமும் லண்டன்ல தான் கார்த்திக். முதல்ல பண்ண மாதிரி, சுஹாவை அனுப்ப மாட்டேன்னு முரண்டு பண்ண கூடாது” என்று எச்சரித்தான் நல்லவன்.
“நீங்களும் இந்த முறை மூணு மாசத்துல என் பொண்டாட்டியை என்கிட்ட அனுப்பி வைங்க” என்றான் கார்த்திக் கடுப்புடன்.
“மூணு மாசத்துல அனுப்பணுமா? சுஹா லண்டன் ஆபிஸ்ல உன் பொறுப்பை எப்போ எடுத்துக்க போற நீ?” என்று கேட்டான் வில்லன்.
“டேய் டேய் நிரந்தமா அங்கேயே வைச்சுக்க பிளான் போடுறியா நீ?” கார்த்திக் நொந்துவிட்டவன்,
“ஆறு மாசத்துலயாவது அனுப்பி வைடா” என்றான்.
“அதை அப்புறம் பார்க்கலாம்” என்றவன், “பட்டுக்குட்டி நாம ஷாப்பிங் போலாமா?” என்று தங்கை மகளுடன் ஊர் சுற்ற கிளம்பிவிட்டான்.
அன்றிரவு அங்கேயே தங்கியவர்கள், மறுநாள் ஊட்டி கிளம்பி வந்தார்கள்.