ரிசப்ஷன் ஏற்பாட்டை பற்றி ஏதும் பேசுவான் என்று மொத்த குடும்பமும் ரிலாக்ஸாக அமர்ந்திருக்க,

“ராகவ்” என்றான் சர்வாச்சார்யா.

“அப்பா, அம்மா, சுஹா” என்றழைத்தவன், தள்ளி நின்ற சம்யுக்தாவின் கரம் பற்றி தனக்கு அருகில் இழுத்து கொண்டான்.

பெரிய அத்தை, மாமாவிடம் சென்றவன்,  “அத்தை ரிசப்ஷனுக்கு வந்துடுங்க. குடும்பத்தோட வரணும்” என்று பத்திரிகையை நீட்டிவிட்டான்.

“தங்கம்” என்று அத்தை கதிகலங்கி நின்றுவிட,

“ராஜா என்ன இது?” என்று சிவப்பிரகாசம் கோபம்கொண்டு மகனை அதட்டினார்.

“சர்வா. சரியில்லை சர்வா” என்று கார்த்திக் முகம் சிவக்க கத்த,

“மாமா பண்றது சரிதான்” என்றான் ஆதி.

சர்வாச்சார்யா அடுத்து சின்ன அத்தையிடம் செல்ல, “வேணாம் சாமி” என்றார் அத்தை.

“வாங்கிக்கோங்க அத்தை” என்று அவரின் கைப்பிடித்து கொடுத்தவன், “குடும்பத்தோட வந்திடணும் அத்தை” என்றான்.

இரு அத்தைகளும் அழுகவே செய்ய, “ராஜா. இப்போ நீ பண்ணது ரொம்ப பெரிய தப்பு. என் தங்கச்சிங்களை பத்திரிக்கை வைச்சு கூப்பிடுவியா நீ?” என்று சிவப்பிரகாசம் சத்தமிட,

“என் அத்தைங்களுக்கு பத்திரிக்கை வைச்சு மரியாதையா கூப்பிட்டா என்ன தப்புப்பா” என்று சாதாரணமாக கேட்டான் மகன்.

“நம்ம பேமிலிக்குள்ள பத்திரிக்கை வைப்பியா? நாளைக்கு எனக்கும், உன் அம்மாக்கும் கூட வைப்பியா?”

“பேமிலியா? ப்பா. சரியாதான் சொல்றீங்களா?”

“சர்வா”

“கார்த்திக் கல்யாணத்துக்கு மாமா பணம் கொடுக்க மாட்டேன்னு சொல்வாராப்பா?”

“தங்கம். அவங்க பண்ண தப்புக்கு எங்களை தண்டிக்கிற இல்லை நீ?” பெரிய அத்தை அழுகை கலந்த கோபத்துடன் கேட்க,

“வைஷ்ணவிக்காக எனக்கு கிடைச்ச தண்டனையை நான் ஏத்துக்கிட்டேன் அத்தை” என்றான் சர்வாச்சார்யா.

“மாமா. ப்ளீஸ். நீங்க சொல்லியும் வெய்ட் பண்ணது நான்தான்” என்று வைஷ்ணவி சொல்ல.

“அதை உனக்கு இப்போதான் சொல்ல தோணுது இல்லைக்கா” என்று கோவமாக கேட்டான் ஆகாஷ்.

“ஆகாஷ். நான், நான்” என்று பெண் தயங்கி கலங்கி நின்றாள்.

சம்யுக்தா மீது ஈர்ப்பு. சர்வாச்சார்யா அவளை மறந்துவிடுவான் என்று நினைத்ததை எப்படி சொல்ல?

“வைஷு மேல தப்பு இல்லை. பெரியவங்க சொன்னதை அவ கேட்டுக்கிட்டா. அவ்வளவு தான்” என்றான் சர்வாச்சார்யா.

“நீ ஏன் அப்படி எங்க பேச்சை கேட்கலை சர்வா? அதனால தானே இவ்வளவும்” என்று சின்ன மாமா கேட்டுவிட,

“இப்போ எதுக்கு இந்த தேவையில்லாத பேச்சு சித்தப்பா?” என்று கார்த்திக் எரிச்சல்கொள்ள,

“நீ ஏன்ப்பா பேசமாட்ட? உனக்கு சுஹா இருக்கா. என் பொண்ணுக்கு?” என்றார் அவர்.

“கார்த்திக், சுஹா விஷயத்தை ஏன் இழுக்கிறீங்க? அவங்க கதை வேற” என்று பெரிய மாமா சொல்ல,

“எங்க குடும்பம் மட்டும் தனியா நிக்கிறது உங்களுக்கு தெரியலையா மாமா?” என்று அக்கா கணவரிடம் நியாயம் கேட்டார் சின்ன அத்தை.

“என்னமா பேசுற? சம்மந்தம் பண்ணாதான் சொந்தமா? இந்த அண்ணன் உன் கண்ணுக்கு தெரியலையா?” என்று சிவப்பிரகாசம் வருத்தத்துடன் கேட்க,

“அண்ணா. நாங்களா ராஜாவான்னு கேட்டா நீங்க யார் பக்கம் போவீங்கன்னு எங்க எல்லோருக்கும் தெரியும்” என்றார் சின்ன தங்கை.

சிவப்பிரகாசம் நிமிடம் ஒன்றுமே  பேசவில்லை.

இப்போது வரை, “லண்டன் எல்லாம் வேணாம் ராஜா. இங்கேயே இருக்கலாம்” என்று மகனை சமாதானபடுத்த தான் முயன்று கொண்டிருக்கிறார்.

சர்வாச்சார்யா நிமிர்ந்து நின்றான். நான் எடுத்த முடிவு சரிதான் என்ற திடம் அவனுக்கு அப்போது வந்தது.

சிவப்பிரகாசம் நிமிர்ந்து மகனை பார்த்தார்.

“அடுத்த மாசம் நாங்க லண்டன்ல செட்டில் ஆக போறோம்” என்றான் சர்வாச்சார்யா.

“தங்கம், ராஜா” என்று அத்தைகள் அதிர, இளையவர்கள் ஓய்ந்து போனார்கள்.

“ப்ளீஸ். அத்தைஸ் எதுவும் மறுத்தோ, கோவமோ பேசிடாதீங்க” என்ற சர்வாச்சார்யா இருவரையும் அமர வைத்து, அவர்களுக்கு முன் மண்டியிட்டு அமர்ந்தான்.

“பிஸ்னஸ் பண்ணிட்டு இருந்த நீங்க இரண்டு பேருமே எங்க எல்லோருக்காக ஆபிஸ் போறதை விட்டுட்டீங்க. அம்மா, அப்பா அவங்க வேலையை பார்த்துட்டு இருந்தப்போ, நீங்க தான் என்னையும் சுஹாவையும் வளர்த்தீங்க”

“என் கையால நான் சாப்பிட்டதை விட, நீங்க ஊட்டிவிட்டு சாப்பிட்டது தான் அதிகம். கார்த்திக், ஆகாஷை விட எனக்கு அதிகமான அன்பு கொடுத்தீங்க. உங்க வளர்ப்பு நான்! தப்பான முடிவு எடுக்க மாட்டேன்னு நம்புங்க”

“கடைசி வரை எனக்கு என் அத்தைங்க வேணும். அது இங்க இருந்தா முடியாது. கொஞ்ச நாள் தள்ளி இருக்கலாம். உங்களை நிறைய கஷ்டபடுத்தி இருக்கேன். தீரஜ் விஷயத்துல அதிகம் கவலை படவைச்சிருக்கேன்”

“எனக்கும் உங்க அருமை தெரியத்தான் வேணும். சொகுசு கண்டுக்கிட்டே இருக்க கூடாது இல்லை அத்தை. என் பொண்டாட்டி, உங்க அண்ணா, அண்ணிகிட்ட கொஞ்சநாள் இடிபட்டா தான் எனக்கும் புத்தி வரும், என்ன சொல்றீங்க?” என்று கேட்டான் பாசக்காரன்.

அவன் வார்த்தைகளை விட, அவன் கண்களில் தேங்கி நின்ற கண்ணீர் தான் அத்தைகளை தலையாட்ட வைத்தது.

“சுஹா, சுஹா என்ன? எப்படி?” என்று கார்த்திக் பொறுக்க முடியாமல் கேட்க,

“சுஹா எங்களோட தானே வருவா? இதென்ன கேள்வி?” என்றான் நல்லவன்.

“ராகவ். என் பாஸ்போர்ட்டும் ரெடி பண்ணிடு”  கார்த்திக் உடனே சொல்ல.

“எங்களோடதும் தான்” என்ற மற்ற இளையவர்களும்.

“இதுக்கு எதுக்குடா நான் லண்டன் போகணும்?” சர்வா கேட்க.

“அப்போ நீ இங்கேயே இருந்துக்கோ நாங்க போயிக்கிறோம். மாமா, அந்த புது வீட்ல மேல் ரூம் எங்களுக்கு தன்” என்றான் கார்த்திக்.

“அது எனக்குடா அண்ணா. ரூம் பக்கம் வந்த காலை உடைச்சிடுவேன்” ஆதி.

“ஸாரி கைஸ் ஆகாஷ் நேம் போர்ட் அங்க ஏற்கனவே மாட்டியாச்சு” ஆகாஷ்.

“ஹலோ பாய்ஸ். அந்த ரூம் எனக்கும், சுஹாக்கும்” என்று வைஷ்ணவி சொல்ல,

“சுஹா உன்னோட இருக்கவா நான் லண்டன் வரேன்” என்று கார்த்திக் பாய,

“ஹலோ சார். என்ன?” என்றான் சுஹாவின் அண்ணன்காரன் முறைப்புடன்.

“டேய். இது அநியாயம். உன்னை விட பெரியவன்டா நான்? எனக்கும் கல்யாணம் பண்ணி வைங்கடா”

“இப்போ முடியாது. நாள் ஆகும்”

“நீ மட்டும் பண்ணிகிட்ட?”

“உனக்கு திறமை பத்தலை”

“உன் கேடித்தனம் எனக்கு வராதுடா நான் என்ன செய்ய?” கார்த்திக் புலம்பியே விட்டான்.

சம்யுக்தா புன்னகைத்துவிட, “உன் புருஷனை தாண்டி அவன் கேடி சொல்றான். நீ சிரிக்கிற” என்று கண்களை சுருக்கினான் சர்வாச்சார்யா.

“கார்த்திக் சொல்றது உண்மை தானே சர்வா” என்று வசுந்தரா சொல்ல.

“எனக்கு தீர்ப்பு கொடுக்க மட்டும் கரெக்ட்டா ஆஜர் ஆயிடுவீங்களே” என்றான் மகன் கடுப்பாக.

இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் அதுவரை வசுந்தரா, சம்யுக்தா ஒரு வார்த்தை கூட பேசாதது.

அவர்களுக்கான எல்லையை அவர்கள் வகுத்து கொண்டார்கள் போல. அதிலே நின்று விட, அத்தைகளும் அந்த எல்லையை உணர்ந்து, அவரவர் குடும்பத்தை பார்த்தால் நல்லது தானே!

இதோ ரிசப்ஷனும் கோலாகலமாக, கலாட்டாவாக நடந்து கொண்டிருக்கிறது.