அவள் யோசிக்க அவகாசம் இல்லாமல், குருமூர்த்தி ஆட்களும் வீட்டுக்குள் நுழைந்து சண்டையிட ஆரம்பித்துவிட்டனர். 

“எங்களுக்கு நீங்க யாரும் வேண்டாம், அந்த பையனை மட்டும் எங்ககிட்ட ஒப்படைச்சிடுங்க. இல்லை உங்க பொண்ணை தூக்கிட்டு போறதை உங்க யாராலும் தடுக்க முடியாது” என்று அந்த தலைவன் கத்தி, சம்யுக்தா அறை பூட்டை உடைக்க போக,

“யார்ரா நீங்க எல்லாம். இங்க எந்த பையனும் கிடையாது. ஒழுங்கா எல்லாம் வெளியே போங்க” என்று குருமூர்த்தி அவர்களை தடுக்க, அங்கு சிறிய கலவரமே நடந்து கொண்டிருந்தது.

குருமூர்த்தியிடம் நூற்று கணக்கான ஆட்கள் இருந்தாலும், எதிர் தரப்பில் எங்கிருந்து ஆட்கள் வருகின்றனர் என்று தெரியாமல் அவ்வளவு  ஆட்கள் வந்து கொண்டே இருந்தனர்.

“உள்ள அந்த பொண்ணு தான் இருக்கா? இல்லை அந்த பையன் இருக்கானான்னு எங்களுக்கு எப்படி தெரியும்? இந்த ரூமை பார்க்காம நாங்க இங்கிருந்து ஓர் அடி கூட எடுத்து வைக்க மாட்டோம்” என்று அந்த ஆட்கள் சண்டையிட்டனர்.

குருமூர்த்தி, மாசிலாமணி வரும் வழியை  காணோம்.

குருமூர்த்தி ஆட்கள் எங்களை கொன்னாலும் பூட்டை உடைக்க விட மாட்டோம் என்று உறுதியாக நின்றுவிட, “மொத்த வீட்டையும் அலசிட்டோம். இந்த ரூம் மட்டும் பாக்கி. இங்க இல்லைன்னா நாங்க போயிடுறோம்” என்றான் அந்த தலைவனும் அவன் பிடியிலே நின்று.

“இங்க யாரும் இல்லைன்னா இல்லை தான். உனக்கு எதையும் நாங்க நிரூபிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை” என்றனர் குருமூர்த்தி ஆட்கள்.

“நீங்க எத்தனை பேர் இங்க இருக்கீங்க? நூறு, ஆயிரம்? அந்த பையனை தூக்க எத்தனை பேர் இறங்கியிருக்கோம் தெரியுமா?” 

“எத்தனை பேர் இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. எங்க அண்ணன் குருமூர்த்தி பொண்ணு ரூமை உங்களை தொட விட மாட்டோம்“

“பொண்ணுக்கு தான் பாதுகாப்பு கொடுக்கிறீங்கன்னு நாங்க எப்படி நம்புறது?”

“டேய் உங்க மேல தான் எங்களுக்கு சந்தேகமா இருக்கு. இல்லாத பையனை கேட்டு, எங்க பொண்ணை டார்கெட் பண்றீங்களா?”

“உங்க பொண்ணை நாங்க ஏன் டார்கெட் பண்ண போறோம். குருமூர்த்தி தான் எல்லாத்தையும் விட்டு ஒதுங்கிட்டாரே அப்புறம் என்ன?”

“பழைய பகை அழியாது” என்றனர் அவர்கள் உறுதியாக.

“நம்மளை சண்முகம் ஆளுங்கன்னு நினைக்கிறாங்க” என்று அந்த தலைவனிடம் ஒருவன் சொன்னான்.

“இதென்னடா புது தலைவலி” என்று அவன் சலித்து கொள்ள,

“அதனால தான் பாதுகாப்பு இருந்துட்டே இருக்கு” என்றான்.

“அப்போ அந்த பையனுக்காக இல்லையா?” தலைவன் புருவம் நெறித்தான். 

“நாங்க அந்த சண்முகம் ஆளுங்க இல்லை. எங்களுக்கு தேவை ஒரு பையன். அவன் கிடைச்சா நாங்க உடனே கிளம்பிடுறோம். இப்போ வழியை விடுங்க. அந்த ரூமை சோதனை பண்ணனும்” என்றான் தலைவன்.

“முடியாது” என்று குருமூர்த்தி ஆட்கள் அப்படியே நிற்க,

“உங்க குருமூர்த்தி, மாசிலாமணியை லாக் பண்ணிட்டோம். எவ்வளவு நேரம் ஆனாலும் இந்த ரூமை பார்க்காம நாங்க போக போறதில்லை” என்று அவன் பேச,

சம்யுக்தா கண்களை இறுக்கமாக மூடி திறந்தாள். தந்தை, மணி அண்ணா வர போவதில்லை. 

முழு வீட்டையும் அந்த ஆட்கள் விடாமல் சோதனையிட்டு கொண்டிருக்க, சம்யுக்தா அறை முன்பு திரும்ப அடிதடி.

குருமூர்த்தி ஆட்கள் எவ்வளவு தான் தாக்கு பிடிப்பார்கள்? இவள் அறை பூட்டை உடைத்து உள்ளே வந்துவிட்டால், சம்யுக்தா அங்கு இல்லாதது தெரிந்துவிடும்? 

சம்யுக்தா இனியும் தாமதிக்க விரும்பவில்லை. ஓய்வறை கதவுக்கு லாக் எதுவும் இல்லை.

இவனை கண்களை மூட சொல்லி கேட்டால்  நிச்சயம் செய்ய  மாட்டான். வேறென்ன வழி இருக்கிறது?

“இங்க பாருங்க. ஒரு நிமிஷம் கண்ணை மூடிக்கிறீங்களா?” என்று அவனிடம் கேட்க,

“கண்ணா மூச்சு விளையாட போறோமா?” என்று கேட்டான் நல்லவன்.

“அப்படி தான் வைச்சுக்கோங்க. இப்போ கண்ணை மூடுங்க ப்ளீஸ்“

“நானே ஏன் கண்ணை மூடணும்? நீ மூடிக்கோ. நான் ஒளிஞ்சுக்கிறேன்” என்றான் கேலியாக.

‘ஆஹ்‘ இழக்கும் பொறுமையை சேர்த்து பிடித்தவள், “இது விளையாட்டு நேரமில்லை. சொல்றதை செய்ங்க” என்றாள்.

“நீ என்ன செய்ய போறேன்னு சொல்லு? அப்புறம் யோசிக்கிறேன்” 

இந்த பெண்ணை இவ்வளவு நேரம் கவனித்திருந்தானே? 

“சொல்ல மாட்டேன். நீங்க கண்ணை மூடுங்க“

“முடியாது“

“உங்களுக்கு சொன்னா புரியாதா? ஒழுங்கா கண்ணை மூடுங்க” என்று அவன் கண்களை தன் கையால் பொத்தினாள்.

“நீ கையெடுத்தா கண்ணை திறந்து பார்ப்பேனே“

“உங்க கையை வைச்சு மூடுங்க” என்று அவன் கைகளை எடுத்து அவன் கண்களை மூட வைத்தாள்.

“எனக்கு கை வலிக்குது. நீயே கை வைச்சு மூடு” என்று கைகளை விலக்கி கொண்டான்.

“டேய். கண்ணை மூடு சொல்றேனில்லை” என்று சம்யுக்தா கடுப்பில் கத்திவிட,

“முடியாதுடி” என்றான் அவன் முறைப்புடன்.

சம்யுக்தாவிற்கு அவன் ‘டி‘ சொன்னதில் கூடுதல் கோவம்.

“நான் டேய் சொன்னா உடனே டி போட தெரியுதில்லை. கண்ணை மூட சொன்னா அதையும் கேட்டு தொலைங்களேன்” என்றாள்.

“ஏன் கண்ணை மூடணும் சொல்லுடி. நான் மூடுறேன்டி” என்றான் அடங்காதவன்.

“நான் இப்போ டேய் சொல்லவே இல்லை” பல்லை கடித்தாள் பெண்.

“ஆனாலும் நான் டி போடவேன்டி. நீ விஷயத்துக்கு வாடி“

“மலைமாடு. சொல்ல முடியாதுடா“

‘மலைமாடா?’ இவனுக்கு புசுபுசுவென வந்தது.

“அப்போ போடி ராட்சஸி“

“நீ தாண்டா ராக்ஷஸன். என் உயிரை வாங்குற?”

“நீயும் உன் அப்பனும் தாண்டி என் உயிரை வாங்குறீங்க“

“என் அப்பாவை மரியாதை இல்லாம பேசின, உன்னை கொன்னுடுவேன்” என்று அவன் கழுத்தை நெருக்க போய்விட்டாள்.

“தொடுடி. என்னை தொட்டு பாருடி” என்று இவள் மேல் ஏறிக்கொண்டு வந்தான்.

“தள்ளி போ. டேய் தள்ளி நில்லு” என்று அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளினாள்.

“இனி மேல ஏறி வந்து பாரு? உன் மேல ஏறிடுவேன் யார்கிட்ட“

“ச்சீ. பொறுக்கி“

“பொறுக்கியா? நானா? உன்னை என்ன பண்றேன் பாரு” என்று அவள் கையை பின்னால் வளைத்து அழுத்தம் கொடுத்தான்.

“டேய். விடு. விடுன்னு சொல்றேன் இல்லை” என்று திமிறியவள், அவன் காலை தட்டிவிட, அவன் விழும் போது இவளுடன் சேர்ந்து விழுந்து தொலைத்தான்.

இவனை தள்ளி விட்டு எழ முயன்றவளை விடாமல் பிடித்து அவளுக்கு மேல் இவன் வந்து அவள் கால்களை பின்னி கொண்டதுடன், அவள் கைகளையும் பிடித்து கொண்டான்.

“என்ன பண்ற நீ? ஒழுங்கா என் மேல இருந்து எழுந்திடு” என்று சம்யுக்தா கோபத்துடன் கண்களை உருட்ட,

“முடியாதுடி” என்று அவன் பிடியை இறுக்க, இவள் திமிர என்று இருவரும் ஒருவர் மேல் ஒருவர் புரண்டு அதகளம் செய்தனர்.

சம்யுக்தாவிற்கு அவசரம். இவனுடன் சண்டையிட இது நேரமில்லை என்று நன்றாக தெரிந்திருந்ததால், அவன் கழுத்தில் ஓர் வெட்டு வெட்டி, அவனை கீழே தள்ளினாள்.

“ஆஹ்” என்று கத்தியவனுக்கு சுள்ளென வலி, சம்யுக்தா வேகமாக  அவனை கட்டிலுக்கு அடியில் தள்ளிவிட்டு, அந்த சுரங்க வழியை திறந்து கொண்டு அவள் அறைக்கு ஓடினாள்.

மூச்சு வாங்கி அந்த வழியை நன்றாக மூடி, ஏதும் தெரிகிறதா என்று சரிபார்த்து முடிக்கும் நேரம் அவளின் அறை கதவு பூட்டு உடைந்தது.

சம்யுக்தா கதவுக்கருகில் செல்லுமுன் ஆட்கள் அறைக்குள் நுழைந்துவிட்டனர்.

அவளின் படபடத்த முகத்தில் வேர்வை வழிந்தது. 

“இங்க பாரு பொண்ணே. பயப்படாத. நாங்க உன்னை எதுவும் பண்ண மாட்டோம்” என்று இவளின் படபடப்பை, பயமாக நினைத்து பேசினான் அந்த தலைவன்.

“உன் ரூமை மட்டும் சோதனை பண்ணிக்கிறோம். நீ வெளியே அந்த கிழவிகிட்ட போயிக்கலாம். டேய் பொண்ணுக்கு வழி விடுங்கடா” என்று அந்த தலைவன் கத்த, சம்யுக்தா நடந்தாள். 

அறைக்கு வெளியே இல்லை. அவளின் டேபிளுக்கு சென்றவள், அங்கிருந்த துப்பாக்கியை கையில் எடுத்து நின்றாள்.

“டேய் இங்க பாருடா. பாப்பா துப்பாக்கி எடுக்குது” என்று ஒருவன் சிரிக்க, சம்யுக்தா யோசிக்கவே இல்லை. அவன் பாதத்தில் குண்டை பாய்ச்சிவிட்டாள்.

“ஏய்” என்று எல்லாம் கத்த,

“வெளியே போங்க. என் ரூம்ல ஒருத்தர் இருக்க கூடாது” என்றாள் சத்தமாக.

“டேய் அவளை பிடிங்கடா?” என்று சம்யுக்தாவை நெருங்க போக,

“என் பொண்ணுகிட்ட போறவன் பொணம் கூட வெளியே போகாது” என்ற குருமூர்த்தியின் கர்ஜனை அந்த வீடு முழுக்க எதிரொலித்தது.

“இந்தாள் எப்படிடா அதுக்குள்ள வந்தான்” என்று அந்த தலைவன் கத்த,

“அண்ணா. நாம இப்போ பதுங்குறது தான் சரி” என்றான் கூட இருந்தவன்.

“இங்க பாருங்க அண்ணா. நாங்க அந்த பையனை தேடித்தான் வந்தோம்” என்று அந்த தலைவன் குருமூர்த்திக்கு விளக்கம் கொடுக்க,

“தேடிட்டியா? பையன் கிடைச்சுட்டானா?” என்று குருமூர்த்தி கத்தி வீசும் பார்வையுடன் கேட்டார்.

“இங்க இருக்கான்னு தகவல் வந்தது” 

“அப்போ எங்க  பையன்? காட்டு” என்றபடி அவனை நெருங்கினார்.

“உங்க பொண்ணு ரூம்ல பார்க்கணும். அங்க தான் அந்த பையன் இருப்பான்” என்று அவன் வேகமாக பேச,

“அங்க இல்லைன்னா?” என்று கேட்டார் குருமூர்த்தி.

“இல்லைன்னா. இல்லைன்னா நாங்க கிளம்பிடுறோம்“

“அது முடியாது. ஒன்னு நீங்க போனா அந்த பையனோட தான் போகணும். இல்லை போகவே முடியாது” என்றார்.

அந்த தலைவன் அவன் ஆட்களை பார்க்க, அவர்கள் சம்யுக்தா அறைய அலசி, இல்லை என்றார்கள்.

“நான் எல்லாத்தையும் விட்டுட்டா என்னையே உரசியே பார்ப்பீங்களா? மாசிலாமணி” என்று குருமூர்த்தி கத்த,

“ண்ணா. ஒருத்தன் வெளியே போக மாட்டான்” என்றார் மாசிலாமணி.

தலைவன் நாங்க அதிக பேர் இருக்கோம் என்று இறுமாப்பு கொள்ள, குருமூர்த்தி அவன் இறுமாப்பை அடுத்த அரை மணி நேரத்திற்குள் உடைத்தார்.

அத்தனை ஆட்களும் குருமூர்த்தியின் கட்டுப்பாட்டில்! எஸ்டேட்டிக்குள் நுழைந்த யாரும் வெளியே செல்லவில்லை.

குருமூர்த்தி மகளின் தலையை வருடி செல்ல, அவரின் மகளோ தலையை பிடித்து கொண்டாள்.

நிச்சயம் அவன் சுரங்க பாதை வழியில் நான் வந்ததை பார்த்திருப்பான்! என்ன செய்ய போகிறானோ?