கடந்து செல் காதலுடன்! 6 1 11412 கடந்து செல் காதலுடன்! 6 குருமூர்த்தி காவல் நிலையத்திற்கு சென்ற நேரமே, அவர் போனை கேட்டார்கள். “என் போன் உங்களுக்கு எதுக்கு?” என்று குருமூர்த்தி கொடுக்காமல் கேட்க, “நீங்க சொல்லி தான் குணா அவங்களை அடிச்சதா சொல்றாங்க. உண்மையான்னு பார்க்கணும். உங்க போனை கொடுங்க” என்றார் காவலர். “என் போனை பார்த்து உண்மையை கண்டுபிடிச்சிட முடியுமா?” என்று குருமூர்த்தி கேட்டு வைக்க, “அதை நாங்க பார்த்துகிறோம், நீங்க கொடுங்க” என்று சட்டென அவர் சட்டை பையில் இருந்து போனை காவலர் எடுத்துவிட்டார். “சார் என்ன இது? என் போன் வேணும் கொடுங்க” என்று குருமூர்த்தி கேட்க, அவர்களோ அவரிடம் இருந்த பர்ஸ், வாட்ச் என்று அத்தனையும் ஒன்று விடாமல் வாங்கினார்கள். காவல் நிலையம் யார், யாருக்கு எப்படி இயங்கும் என்பதை முற்றும் முழுதாக அறிந்திருந்த குருமூர்த்தி, “எனக்கு லாயர் சார்கிட்ட பேசணும்” என்று சொல்ல, வேறு ஏதோ போன் தான் கொடுத்தார்கள். குருமூர்த்திக்கு அவரின் உறுத்தல்கள் கூடி கொண்டே போக, அங்கிருந்த அவரின் ஆட்களிடம், “நான் போகணும். நீங்க இங்க பாருங்க. லாயர் வந்திடுவார்” என்று சொல்லி கிளம்ப, வாசலிலே மறிக்கப்பட்டார். “விசாரணை முடியற வரை நீங்க எங்கேயும் போக முடியாது” என்று காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினார்கள். லாயரும் வந்து பேசி பார்க்க, காவலர்கள் போனையும் கொடுக்க முடியாது, இவரையும் அனுப்ப முடியாது என்றார்கள். “தப்பு பண்ணது நான். எங்க முதலாளியை ஏன் பிடிச்சு வைச்சிருக்கீங்க? அவர் என்னை செய்ய சொல்லி ஏதும் சொல்லலை” என்று குணா பேச, “வாய் மூடுடா” என்று அவனுக்கு அடி விழுந்தது. குருமூர்த்தியின் உறுத்தல்கள், இப்போது உறுதியாகிவிட்டது. “நான் வீட்டுக்கு போயே ஆகணும். என்ன வேணும்ன்னாலும் செய்ங்க” என்று லாயரிடம் சொல்லிவிட்டார். வீட்டில் சம்யுக்தா, அவன் இருவரும் பாதுகாப்பாக இருக்கிறார்களா? இல்லை. அபாய கட்டத்தில் இருந்தனர். அப்படி நிறுத்தி வைத்திருந்தான் இந்த நல்லவன்! சம்யுக்தா அவனை ரகசிய அறைக்குள் அழைத்து செல்ல முயல, இவன் மாட்டேன் என்கிறான். “யாரோ நம்ம லிமிட்டுக்குள்ள வந்துட்டாங்க. சீக்கிரம் உங்க ரூமுக்குள்ள போகணும்” என்று சம்யுக்தா படபடவென இவனிடம் சொல்ல, “வந்துட்டாங்களா? நல்லதா போச்சு” என்றான் அவன். “பைத்தியமா நீங்க” என்று கோவப்பட்டு அவனை தம் கட்டி இழுத்தவள், அவனை பத்திரமாக சுரங்க அறைக்குள் சேர்த்து விடும் முனைப்பில் ஓட, இவன் ஒத்துழைக்காமல் எங்கிருந்து ஓடுவது? “என்னை விடு. அவங்க வந்து என்னை பிடிச்சிட்டு போகட்டும்” என்று நிதானமாக சொன்னான். “ப்ளீஸ். ப்ளீஸ். என்னோட வாங்க. இப்போ எதுவும் பேச வேண்டாம்” என்று அவனை இழுக்க, அவன் மறுபக்கம் போக பார்த்தான். அந்த பக்கம் சென்றால் வாசலுக்கு அல்லவா செல்லும். சம்யுக்தா இவனை எப்படி சமாளிப்பது என்று திகைத்து போனாள். அவன் கண்ணாடி கதவை திறந்த நேரம், பெரிதான சத்தம். ஆட்கள் சத்தமிட்டு ஓடி கொண்டிருக்க, சம்யுக்தா இவனை உள்ளே தள்ளி கதவை சாத்தினாள். குருமூர்த்தி பாதுகாப்புக்கென வைத்திருந்த ஆட்கள் புதிதாக உள்ளே நுழைந்தவர்களிடம் சண்டையிடுகிறார்கள் என்று புரிந்து போனது. சம்யுக்தா மூச்சை இழுத்துவிட்டு கொண்டவள், “இங்க பாருங்க. உங்களுக்காக இங்க நிறைய பேர் போராடிட்டு இருக்காங்க. உங்க உயிர் உங்களுக்கு தேவையில்லாம இருக்கலாம். ஆனா எல்லோருக்கும் அப்படி இருக்காது தானே? ப்ளீஸ். எங்களுக்காக உள்ள வாங்க. ப்ளீஸ்” என்று விழுந்திருந்தவன் முன் மண்டியிட்டு கேட்டாள். அவனுக்கும் மனதும் உறுத்தியிருக்க வேண்டும். முகம் லேசாக சுருங்க, அவதானித்த சம்யுக்தா, தாமதம் செய்யாமல் அவனை இழுத்து கொண்டு ரகசிய அறைக்குள் சென்று சேர்த்தாள். அந்த அறை இனி என்ன செய்தாலும் திறக்க முடியாது. குருமூர்த்தி, மாசிலாமணி, பாட்டி தான் வர வேண்டும். சம்யுக்தா போன் எடுத்து தந்தைக்கு அழைக்க, போன் அணைத்து வைக்க பட்டிருந்தது. அடுத்து மாசிலாமணிக்கு அழைக்க, அவர் எடுக்க முடியா நிலை. அலுவலகத்தில் வைத்தே சில ஆட்கள் அவரை சூழ்ந்துவிட்டனர். சம்யுக்தா வேகமாக கேமரா காட்சிகளை பார்க்க, கேட்டிற்குள் முக மூடி அணிந்திருந்த ஆட்கள் திபுதிபுவென குவிந்தனர். குருமூர்த்தி வைத்திருக்கும் ஆட்கள் அதிக நேரம் இவர்களிடம் தாக்கு பிடிக்க முடியுமா? கற்பகம் பாட்டி உள்ளே வர, அவரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துவிட்டனர். வீட்டை சுற்றி அலசி, பயிற்சி கூடத்துக்கு சென்றவர்கள் வேகமாக வந்து, “ஷூட் ட்ரெயினிங் நடந்திருக்கு” என்று அங்கு தலைவனாக இருந்தவனுக்கு தகவல் கொடுத்தார்கள். “அப்படின்னா வீட்டுக்குள்ள தான் ஆள் இருக்கணும்” என்று வாசல் கதவுக்குள் அடியெடுத்து வைத்த நேரம், எங்கிருந்தோ துப்பாக்கி குண்டு பாய்ந்து வந்தது. “யாரையும் சுட கூடாது. நம்ம டார்கெட் அந்த பையன் மட்டும் தான்” என்று புதிதாக இறங்கியவர்களிடம் கட்டளையிட பட்டிருக்க, “டேய் யார் அது பைர் பண்றதுன்னு பார்த்து சீக்கிரம் கிளியர் பண்ணிவிடு” என்று தங்கள் ஆட்களிடம் கத்திய அந்த கூட்டத்தின் தலைவன், “கண்டிப்பா பார்ட்டி உள்ளேதான் இருக்கணும்” என்று முணுமுணுத்து கொண்டான். சில நிமிடம் குருமூர்த்தி ஆட்களுடன் போராடியதில், அவர்கள் குறி, கை, கால்களுக்கு மட்டும் தான் என்பதை அறிந்து கொண்டான் தலைவன். “நம்மளை கொல்ல நினைக்கலை. ஏன்?” அவனுக்குள் கேள்வி. “இதுக்கு மேல லேட் பண்ண முடியாது. சுட்டா சுட்டுக்கட்டும்” என்று வளையம் போல் அமைத்து கற்பகம் பாட்டியுடன் உள்ளே நுழைந்துவிட்டான் அந்த தலைவன். “தேடுங்க. பாஸ்ட். ஓர் இடத்தை கூட விடாதீங்க” என்று கத்த, கற்பகம் பாட்டி பயத்தில் சுருண்டிருந்தாலும், சம்யுக்தா அறையை தான் முதலில் பார்த்தார். அவளின் அறைக்கதவு வெளியில் பூட்டு போட பட்டிருந்தது. பாதுகாப்புக்கென ஆட்கள் செய்திருப்பார்கள் என்று உணர்ந்து கொண்டார். “இந்த ரூம் ஏன் பூட்டு போட்டிருக்கு?” என்று கற்பகம் பாட்டியிடம் கத்த, அவர் பதில் இல்லாமல் நின்றார். “அது குருமூர்த்தியோட பொண்ணு ரூம்” என்றான் ஒருவன். ஆக எல்லாம் விசாரித்து தான் உள்ளே இறங்கியிருக்கிறார்கள். “இங்க பாரு ஓல்ட் லேடி. எங்களுக்கு தேவை அந்த பையன் மட்டும் தான். அவன் எங்க இருக்கான்னு சொல்லிடு. நாங்க உங்க பேத்தி ரூம் பக்கம் போக மாட்டோம்” என்றான். “எந்த பையன்?” என்று கற்பகம் பாட்டி அப்பாவியாக கேட்க, அந்த தலைவன், “என்கிட்ட நடிக்காத. வயசானவங்கன்னு பார்க்க மாட்டேன். உன்னை கொன்னுடுவேன்” என்றான் மிரட்டலாக. “சாமி சத்தியமா நீங்க எந்த பையனை கேட்கிறீங்கன்னு எனக்கு தெரியலை. இங்க அப்படி யாரும் இல்லை” என்றார். இவர்களுக்கு கிடைத்திருக்கும் தகவல் உத்தேச தகவல் மட்டுமே! “அங்க இருக்க வாய்ப்பிருக்கு. தேடி போங்க” என்று மட்டுமே செய்தி. ,நிச்சயம் இல்லாத தகவலால், அந்த தலைவன் தடுமாற்றம் கொண்டான். “அப்போ அங்க ட்ரையினிங் எடுத்தது யாரு? என்ன எங்களை ஏமாத்த பார்க்கிறியா?” என்று ஒருவன் பாட்டியை அடிக்க பாய, “எங்க பேத்தி. அவதான்” என்றார் பாட்டி பயத்தில் கண்களை மூடி. அந்த தலைவன் சந்தேகமாக பார்க்க, “ஆமா. அந்த பொண்ணுக்கு ட்ரைனிங் கொடுக்கிறாங்க” என்றான் ஒருவன். குருமூர்த்தி பற்றி இவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். “பையன் இல்லைன்னு பொண்ணுக்கு எல்லா வித்தையும் கத்து கொடுக்கிறாரா என்ன?” என்று கேலி பேசி சிரிக்க, “டேய். வந்த வேலையை பாருங்க” என்று கத்திய தலைவன், “கடைசியா கேட்கிறேன். அந்த பையன் எங்க இருக்கான்னு சொல்லிடு. மாட்டேன்னா உங்க பேத்தி உங்களுக்கு இல்லை” என்றான். “தம்பி. உண்மைக்கும் நீங்க எந்த பையனை பத்தி கேட்கிறீங்கன்னு எனக்கு தெரியலை. இந்த வீட்ல நான், பேத்தி, குருமூர்த்தி, மாசிலாமணி தம்பி மட்டும் தான் இருக்கோம்” என்றார். “இல்லை நீ சரிப்பட்டு வர மாட்ட. பூட்டை உடைடா” என்று ஆணையிட, மொபைலில் காட்சிகளை பார்த்திருந்த சம்யுக்தாவிற்கு அங்கு செல்வது தான் உத்தமம் என்று புரிந்து போனது. “நான் வெளியே போகணும்” என்று பரபரத்தாள் பெண். “வெளியே போகணுமா? இங்கேயே இரு. அதான் உனக்கு பாதுகாப்பு” என்றான் அந்த நல்லவன். “ம்ஹூம். அவங்களுக்கு சந்தேகம் மட்டும் தான். நீங்க இங்க இருக்கிறது உறுதியா தெரியலை” “ம்ப்ச். இங்க பாரு. முதல்ல நாம இங்கிருந்து போக வழியில்லை. அப்படியே போறதுன்னாலும் நான் தான் போவேன். உன்னையெல்லாம் அனுப்ப முடியாது” என்றான். வெளியே சண்டையிடும் கூட்டத்தை இவனும் சம்யுக்தா உடன் கண்டிருந்தானே! “ஏன் நான் பொண்ணுன்னு பார்க்கிறீங்களா?” என்று சம்யுக்தா கேட்க, “ஆமா நீ பொண்ணு தானே?” என்று கேட்டிருந்தான் இவன். “அவங்களால எனக்கு எந்த ஆபத்தும் இல்லை. உங்களுக்கு தான் இருக்கு” என்று சம்யுக்தா மனதிற்குள் அவளின் சுரங்க வழியை பயன்படுத்துவதை பற்றி தீவிரமாக யோசித்து கொண்டிருந்தாள். அப்படியே பயன்படுத்தினால் இவன் கண்டு கொள்வானே! மிகப்பெரிய தடங்கல்.