கடந்து செல் காதலுடன்! 48 2 10766 அதில் இருந்த உண்மை புரிந்த பெரியவர்களுக்கு கொஞ்சம் பக்கென்று தான் இருந்தது. இப்போது வந்த சிவப்பிரகாசம் முகத்திலும் கோவம் வெளிப்படையாக தெரிந்ததே! “நான் ஒருமுறை பண்ண தப்பே போதும். இனி நான் சர்வா மாமாக்கு எதிரா எதுவும் செய்ய மாட்டேன். உங்களுக்கு சப்போர்ட்டும் பண்ண மாட்டேன்” என்று ஆகாஷும் அவன் முடிவை சொல்லி வெளியேறிவிட்டான். நம் நாயகனோ இன்னும் முதல் இரவு ஜோரில் இருந்து வெளியே வரவில்லை. அவர்கள் அறைக்கதவு திறந்தபாடில்லை. காலை மணி பத்துக்கு மேல் ஆகிவிட்டது. கற்பகம் பாட்டி போனில் அழைத்து பேச, “வரோம். இதோ வரோம் பாட்டி” என்றாள் சம்யுக்தா. ஆனால் அதில் இருந்து ஒரு மணி நேரம் கடந்துவிட்டது. குருமூர்த்தி காலையிலே வெளியே கிளம்பிவிட்டார். அவருக்கு மகள், மருமகன் முகம் பார்க்க சங்கடம்! கற்பகம் பாட்டி தான் பேசாம மதிய சாப்பாட்டு வேலையை ஆரம்பிச்சுடலாமா என்று யோசித்தார். நல்லவேளை அதற்குள் சம்யுக்தா அறைக்கதவு திறந்து கொண்டது. “அப்பா எங்க பாட்டி? அவர் சாப்பிட்டாரா? நீங்க எல்லாம் சாப்பிட்டீங்களா?” என்று கேட்டாள் சம்யுக்தா. “உன் அப்பாக்கு வேலை இருக்குன்னு அவர் காலையிலே கிளம்பிட்டார். வெளியே சாப்பிட்டாங்களாம். எங்க தம்பி?” என்று கேட்க, சிவந்துவிட்ட முகத்தை திருப்பி கொண்டு, “அவர், அவர் வரார் பாட்டி. நாம அதுக்குள்ள தோசை ஊத்திடலாம்” என்றாள் சம்யுக்தா. கற்பகம் பாட்டி பெண்ணின் கன்னத்தை தடவி முத்தமிட்டவர், கிச்சனுக்கு போன் செய்தார். சர்வாச்சார்யா மனைவியை முறைத்தபடி கீழிறங்கி வந்தான். “நான் குளிச்சிட்டு வரதுக்குள்ள என்னடி அவசரம்?” என்று அவள் இடையில் கில்லி வைத்தான். “ஸ்ஸ்” சம்யுக்தா இடை சேலைய இழுத்து விட்டு கணவனை கண்கள் சுருக்கி பார்த்தவள், “காலையில இருந்து இரண்டு முறை குளிச்சாச்சு” என்றாள். “கண்ணு. போய் சாமி கும்பிட்டுட்டு வந்துடுறீங்களா?” என்று கற்பகம் பாட்டி கேட்க, “பாட்டி உங்க ஸ்பெஷல் மசாலா தோசை இருக்கு தானே?” என்று கேட்டவன், மனைவியின் கைகோர்த்து பூஜை அறைக்கு சென்றான். அவர்கள் வருவதற்குள் எல்லாம் தயாராக இருக்க, உண்ண அமர்ந்துவிட்டனர். இரவெல்லாம் உழைத்தது பசிக்காதா என்ன? எல்லாம் வந்த வேகத்தில் காலியாகி கொண்டிருந்தது. இறுதியில் இனிப்புடன் உணவை முடித்து கொண்டவர்கள் கிளம்புவதற்கு தயாரான நேரம் குருமூர்த்தி வந்துவிட்டார். “ப்பா. நாங்க கிளம்புறோம். அத்தை போன் பண்ணாங்க” என்று சம்யுக்தா சொல்ல, குருமூர்த்தி இருவரையும் மலர்ந்த முகத்துடன் பார்த்தவர், “சரி. நான் உங்களை மறுவீடு கூப்பிட வரேன்” என்றார். சம்யுக்தா அறைக்கு செல்ல, “நாம கொஞ்சம் பேசணும்” என்றான் சர்வாச்சார்யா. “எதாவது முக்கியமான விஷயமா?” என்று குருமூர்த்தி கேட்க, “அப்படி இல்லை. நான் உங்களுக்கு போன் பண்றேன்” என்றான். சம்யுக்தா வந்துவிட, குருமூர்த்தி கார் வரை சென்று வழியனுப்பி வைத்தார். மனைவியின் கை கோர்த்து கொண்ட, சர்வாச்சார்யா அதிகம் போனில் இருந்தவன், வீடு வரவும் தான் போனை வைத்தான். “என்னாச்சு?” என்று சம்யுக்தா கேட்க, “ம்ம். என்னோட குறைய நீ என்னன்னு கேட்டு நிறைவேத்தலை” என்றான் அடங்கா பசி கொண்டவன். “ஹான்” சம்யுக்தா முதலில் கண்களை விரித்து, பின் கணவனை முறைத்தாள். காலை தூங்கிய ஒன்றிரண்டு மணி நேர தூக்கம் மட்டும் தான். குறை, குறை என்று சொல்லியே சாதித்து கொண்டான். இப்போது திரும்பவும் அதையே சொன்னால் பெண்ணுக்கு கோவம் வராதா? சர்வாச்சார்யா முறைத்த மனைவியை தன் மடிக்கு இழுத்து கொண்டவன், “உன் குட்டி இடுப்பு எனக்கு சப்போர்ட் பண்ணுச்சு. ஆனா உன் பெரிய மனசு எனக்கு சப்போர்ட் பண்ணலை” என்றான் குறும்பாக. “நீ ரொம்ப கெட்டபையனா இருக்க. என்னை விடு. விடுடா” என்று பெண் திமிறி அவன் மார்பிலே அடி போட்டாள். “அடங்குடி. உண்மையை தான் சொல்றேன்” என்று அவளை இறுக்கி பிடிக்க, “உண்மையா? மலைமாடே இப்போ கூட வலிக்குதுடா” என்றாள் பெண் கடுப்பாகி. “வலிக்கிற அளவு வேலையே பார்க்கலடி. என்னமோ இதுக்கே சோர்ந்து போற” என்றான் நல்லவன். “அடப்பாவி. உனக்கு தீனி போட என்னால முடியாது“ “நீ என்னடி போடுறது. நானே எடுத்துகிறேன்” என்றவன் அவளின் உதடுகளை எடுத்து கொண்டு தான் விட்டான். “இப்படி கசக்கி வைச்சிருக்க? வீட்ல எல்லாம் என்ன நினைப்பாங்க?” “கசங்கியிருக்கா? அப்படி ஒன்னும் தெரியலையே” என்றவன் பார்வை பெண் மேல் வில்லங்கமாக படிய, “புடவையை சொன்னா எங்க பார்க்கிறீங்க நீங்க?” என்று சம்யுக்தா சிவந்து விட்ட கன்னத்தை தேய்த்தபடி காரை விட்டு இறங்கினாள். வசுந்தரா மகள் மருமகனை எதிர்கொண்டு விருந்தனர்களிடம் அழைத்து சென்றார். சர்வாச்சார்யா, சம்யுக்தா முகத்தில் தெரிந்த ஜொலிப்பில் வசுந்தரா மகிழ்ந்து போனார். அத்தைகள் கூட சர்வாச்சார்யாவை நல்ல முறையிலே ஆசீர்வாதம் செய்தார்கள். ஏமாற்றம் இல்லாமல் இல்லை. ஆனால் அவனை விட்டு கொடுக்கும் எண்ணமும் இல்லை. விருந்தினர்கள் எல்லாம் நல்ல முறையில் பேசி கொண்டிருக்க, “ரூமுக்கு போறியா?” என்று மனைவியின் காதில் கேட்டான் நாயகன். “இவங்கள விட்டு எப்படி?” என்று சம்யுக்தா கேட்க, “ம்ம். நான் அப்பாகிட்ட பேசணும். இங்கதான் ஆபிஸ் ரூம்ல” என, “நீங்க போங்க” என்றாள் சம்யுக்தா. மற்ற ஆண்கள் விருந்தினர்களுடன் பேசி கொண்டிருக்க, சிவப்பிரகாசம் மட்டும் இவர்களை வரவேற்ற உடனே அலுவலக அறைக்கு சென்றுவிட்டார். நல்லவன் புருவங்களும் சுருங்கியபடி தான் இருப்பதை பெண் கவனித்து தான் இருக்கிறாள். சர்வாச்சார்யா தங்கை, அம்மாவிற்கு கண் காட்டிவிட்டு எழுந்து சென்றான். எல்லோருக்கும் குடிக்க வந்தது. சில நிமிடங்கள் மிகவும் நன்றாகவே பேச்சு சென்றது. சம்யுக்தா எம்பையர் பற்றி கூட பெருமையாக பேசினார்கள். அப்போதுதான் “குலதெய்வ கோவிலுக்கு எப்போ போறீங்க?” என்ற பேச்சு வந்தது. “நாளைக்கு போறோம்” என்று சின்ன அத்தை சொல்ல, “உங்களுக்கு ரொம்ப தூரம் போகணும் இல்லை. நைட் தங்கிடுங்க, சின்ன ட்ரிப் போய்ட்டு வந்த மாதிரி இருக்கும்,” “ரிசப்ஷன் வேலை இருக்கே. தங்க எல்லாம் முடியாது. ஒரே நாள்ல திரும்பிடுவோம்” என்றார் பெரிய அத்தை. “ஆமா, ஆமா கல்யாணத்தை விட ரிசப்ஷன் தான் கிராண்டா வைக்கணும்” என்று பெரியவர் ஒருவர் சொல்ல, “கல்யாணம் இவங்க அளவுல இல்லைன்னு தான் எனக்கு தோணுச்சு. ஏன் சிம்பிளா பண்ணிட்டீங்க” என்று வேறு ஒருவர் கேட்டார். வீட்டினர் கொஞ்சம் சங்கடத்துடன் ஒருவர் முகம் ஒருவர் பார்த்து கொண்டனர். ஏனெனில் குருமூர்த்தி தான் முழுவதும் செலவு செய்தார். அதற்காக இவர்கள் சொல்வது போல் எல்லாம் இல்லை. மிகவும் பிரம்மாண்டமாக தான் செய்திருந்தார். ஆனால் சர்வாச்சார்யா குடும்பத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பும் பெரிது தானே? குருமூர்த்தியை மனதில் வைத்து சர்வாச்சார்யா சில செலவுகளை தவிர்த்து இருந்தான் என்பதும் உண்மை. ஏற்பாடு அவனுடையது. பணம் மட்டும் குருமூர்த்தியை சார்ந்தது. ரிசப்ஷன் நீங்க வைச்சுக்கோங்க. ஆனால் என் பொண்ணு கல்யாணம் என் செலவுல தான் நடக்கணும் என்று மனிதர் கேட்டிருக்க, சர்வாச்சார்யா சரி என்றுவிட்டான். அதற்கு கூட பெரியவர்கள் அவனிடம் கோவபட்டார்கள். “நம்ம அளவுக்கு அவரால செய்ய முடியாது” என, “அவர் செய்ற அளவுல தான் என் கல்யாணம் நடக்கும். அவரும் சாதாரணமா ஒன்னும் செய்யல” என்றான் நாயகன். இப்போது அதை குறையாக ஒருவர் சொல்ல, சம்யுக்தா புன்னகையில் சிறிதும் மாற்றமில்லை. “ரிசப்ஷன் பெரிசா பண்ண பிளான்” என்றான் கார்த்திக். “சரி சரி” என்றவர்கள், “எம்மா உங்க குலதெய்வ கோவில் எங்க இருக்கு? நீங்க அங்கேயும் போகணும் தானே?” என்று சம்யுக்தாவிடம் கேட்டார்கள். அப்படி ஒன்று இருப்பதாக பெண்ணுக்கு தெரியவில்லை. போன நினைவும் இல்லை. “அவங்க அப்பாக்கு குடும்பமே இல்லை. குலதெய்வ கோவில் எங்க இருக்கும்?” என்று சட்டென ஒருவர் சொல்லிவிட்டார். “எங்க வந்து என்ன பேசிட்டு இருக்கீங்க?” சின்ன அத்தை தான் முதலில் கோவமாக கேட்டது. “கோவில் இருக்கு, இல்லை அது எங்களோட! இந்த அதிக பிரசங்கி பேச்செல்லாம் உங்களுக்கு எதுக்கு?” என்று பெரிய அத்தை அடுத்து கேட்டார். சம்யுக்தாவிற்கு ஒரு சொல் என்றாலும் அது சர்வாச்சார்யாவிற்கும் சேர்த்து தானே? எப்படி விடுவார்கள்? “குருமூர்த்தி சித்தப்பாக்கு போன் பண்ணி கொடுக்கவா? அவர் உங்களுக்கு குலதெய்வத்தை சொல்வார்” என்று கார்த்திக் போன் எடுத்தான். “சொந்தம்ன்னு தான் வீட்டுக்குள்ள இருக்கீங்க? அடுத்த முறை இங்க வரணுமா வேண்டாமா?” என்று பெரிய மாப்பிள்ளை கேட்க, “அவர் பேசுற பேச்சை பார்த்தா அவருக்கு சொந்தம் மட்டுமில்லை தொழிலும் வேணாம்ன்னு தான் தோணுது” என்றார் சின்ன மாப்பிள்ளை. அந்த மனிதர் மன்னிப்பு கேட்டு, விட்டால் போதுமென நடையை கட்டிவிட்டார். வசுந்தரா மருமகளின் கரம் பற்றி அழுத்தி கொடுக்க, சம்யுக்தா ஒன்னுமில்லை என்று இமை சிமிட்டி புன்னகைத்தாள். அவளின் புன்னகையில் வீட்டினரும், அடுத்தடுத்த பேச்சுக்கு தாவினர்கள். “லன்ச் சாப்பிட நேரம் ஆச்சு? இன்னும் என்ன பண்றாங்க?” என்று வசுந்தரா அலுவலக அறை பக்கம் பார்த்தவர், “வா நாம போய் அவங்களை கூட்டிட்டு வரலாம்” என்று மருமகளை அழைத்து சென்றார். விருந்தினர்களுக்கு மத்தியில் எவ்வளவு நேரம் தான் அமர்ந்திருக்க முடியும்? வசுந்தரா கதவை திறக்க, “எம்பையர் அப்ரூவலுக்கு நீ கொடுத்த பணம் பிரச்சனை ஆகும் சர்வா” என்று சிவப்பிரகாசம் சொல்லி கொண்டிருந்தார். சம்யுக்தா கால்கள் வாசலிலே தேங்கி நின்றுவிட்டது.