கடந்து செல் காதலுடன்! 48 1 10094 கடந்து செல் காதலுடன்! 48 “இங்க என்ன நடக்குதுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று சிவப்பிரகாசம் கேட்க, “மாமா” என்று கார்த்தி, ஆகாஷ் எழுந்து நிற்க, அவர்களின் தந்தைகள் இவரை எதிர்பார்க்காமல் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார்கள். சிவப்பிரகாசம் முகம் ஒன்றும் சொல்லி கொள்ளும்படி இல்லை. இறுக்கமான முகத்துடன் மனிதர் அமர்ந்தவர், “நான் கேள்விப்பட்டது எல்லாம் உண்மையா?” என்று பொதுவாக கேட்டார். மகனுக்கான ரிசப்ஷன் ஏற்பாட்டை தீவிரமாக பார்த்து கொண்டிருக்கும் வேளையில், குடும்பத்திற்குள் ஓர் சலனம். சர்வாச்சார்யா நானே பார்த்து கொள்கிறேன் என்று சொன்ன போது, மறுத்தது இவர்கள் எல்லாம் தான். இப்போது அதில் குழப்பத்தை ஏற்படுத்துவதும் இவர்கள் தான். “சார். கொஞ்சம் பேசணும்” என்று உதவியாளர் சங்கடத்துடன் வந்து நின்ற போது, உடன் இருந்த ஆட்களை அனுப்பிவிட்ட சிவப்பிரகாசம், “என்னாச்சு?” என்று கேட்டார். “சார் அட்வான்ஸ் கொடுக்க பணம் எடுக்கிறதுல கொஞ்சம் சிக்கல்” என்றார் உதவியாளர். “இன்னும் அட்வான்ஸ் கொடுக்கலையா? நைட்டே உங்களுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன்” என்று மனிதர் கோபம்கொள்ள ஆரம்பிக்க, “சார் நானும் காலையில இருந்து அதுக்கு தான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன். ஆனா அக்கவுன்ட்ஸ் ஹெட் வேற ஏதோ சொல்றார்“ “என்ன சொல்றார்?” சிவப்பிரகாசம் புருவம் சுருங்கியது. இவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஆட்களிடம் சிறு குறையும் இருக்காது. மிகவும் நேர்மையானவர்கள். பணத்தில் மட்டுமில்லை எல்லாவற்றிலும் மிகவும் நாணயமாக நடந்து கொள்பவர்கள்! அவர்கள் ஏதேனும் மறுக்கிறார்கள் என்றால் நிச்சயம் பிரச்சனை வெளியில் இருந்து இல்லை. சிவப்பிரகாசம் உடனே புரிந்து கொண்டார். உதவியாளரும், “பணம் யாரோட பொறுப்புல இருந்து எடுக்கிறதுன்னு” என்று நிறுத்தினார். தவறே என்றாலும் வீட்டு ஆட்கள் பற்றி சிறு வார்த்தையும் விட முடியாது. சிவப்பிரகாசம் முகம் கோவத்தில் சிவந்து போக, அறைய விட்டு வெளியேறி நேரே பொது அலுவலக அறைக்கு வந்தார். நேற்று தான் திருமணம் முடிந்திருக்கிறது. மாளிகையில் உறவினர்கள் வந்த வண்ணம் இருக்க, வசுந்தரா மகன், மருமகளை போனில் அழைப்பதை கேட்டு கொண்டே கடந்து சென்றார் சிவப்பிரகாசம். மகன் வருவதற்குள் இதை முடித்தாக வேண்டும்! “மாமா. நீங்க கொடுத்த லிஸ்ட்ல இருக்க எல்லோரையும் இன்வைட் பண்ணியாச்சு. ரிட்டர்ன் கிப்ட் பொறுப்பு நம்ம வீட்டு ராணிங்களோடது. வலுக்கட்டாயமா எங்ககிட்ட இருந்து பிடுங்கிட்டாங்க.வேறென்ன இருக்கு? உங்க பக்கம் எதாவது இருந்தா சொல்லுங்க. நாங்க ப்ரீ தான்” என்றனர் இளையவர்கள். “என் வேலைங்க அப்படியே நிக்குது” என்றார் சிவப்பிரகாசம். “என்னாச்சு மாமா?” என்று கார்த்திக் கேட்டான். ஏதோ சரியில்லை என்பதை பெரியவர்கள் முகம் காட்டி கொடுத்தது. “என் பொறுப்புல இருக்க வேலைகளுக்கு அட்வான்ஸ் கொடுக்கணும். ஆனா என்னால கொடுக்க முடியலை” “ஏன் மாமா? என்ன புதுசா?” ஆகாஷ் அதிர, “தெரியலை” என்றார் மனிதர். “அக்கவுண்ட்ஸ் ஹெட் என்னமோ கேட்கிறார். எனக்கு பதில் தெரியலை” சிவப்பிரகாசம் சொல்ல, கார்த்திக் உடனே போன் எடுத்து அவரிடம் கோவமாக பேச போக, “நோ கார்த்திக். போனை வை” என்றார் சிவப்பிரகாசம். “அதெப்படி மாமா?” “நம்மகிட்ட தான் பிரச்சனை இருக்கு. அவர்கிட்ட இல்லை“ “என், என்ன மாமா சொல்றீங்க?” கார்த்திக் திகைத்து தந்தையையும், சின்ன தந்தையையும் பார்த்தான். “யாரோட பொறுப்புல இருக்க பணத்தை எடுக்கிறதுன்னு குழப்பம் வந்திருக்கு. ம்ம். நான் இந்த நாளை பார்ப்பேன்னு நினைச்சது இல்லை. இனி இதுக்கும் நான் தயாரிகிக்கிறேன்” என்று பொதுவாக சொன்ன சிவப்பிரகாசம் அங்கிருந்தபடியே போன் எடுத்தார். “என்னோட கணக்குல இருந்து பணம் எடுக்க சொல்லிடுங்க. இதுக்கு மட்டுமில்லை என் மகனோட மொத்த ரிசப்ஷன் செலவும் என் கணக்குல தான் வரணும்” என்று உத்தரவிட்டார். “மச்சான்” என்று சின்ன தங்கை கணவர் ஏதோ பேசவர, “நாம இதைப்பத்தி ரிசப்ஷன் முடியவும் பேசி முடிச்சுக்கலாம்” என்று வெளியேறிவிட்டார் சிவப்பிரகாசம். “அப்பா இதெல்லாம் உங்க வேலை தானே?” என்னு கார்த்திக் தன் தந்தையிடம் கோவமாக கேட்க, “உனக்கு ஒன்னும் தெரியாது நீ பேசாம இரு” என்றார் அவர். “அப்பா. நீங்களுமா? ஏன்ப்பா இப்படி?” என்று ஆகாஷ் கேட்க, “நீ எதுக்காக குருமூர்த்தி விஷயத்தை அந்த பொண்ணு கம்பெனில பரப்பிவிட்ட?” என்று கேட்டார் பெரிய மருமகன். “பெரியப்பா. நான் அதுக்காக இப்போவரை வருத்தப்பட்டுட்டு இருக்கேன். என் அக்காக்கு செய்றேன்னு இன்னொருத்தவங்களை கஷ்டபடுத்த நினைச்சேன். அதுவே பெரிய தப்பு. ஆனா நீங்க என்னை மிஞ்சி, நம்ம வீட்டுக்குள்ளேயே கல்லெறிஞ்சி இருக்கீங்க” “சின்ன பசங்க நீங்க எங்களுக்கு புத்தி சொல்வீங்களா? எல்லாம் எங்களுக்கு தெரியும். நீங்க இதுல தலையிடாதீங்க” என்று சின்னவர் அடக்க, “சித்தப்பா. நம்ம வைஷுக்காக தான் நீங்க இதை பண்ணியிருக்கீங்கன்னா ஸாரி நீங்க ரொம்ப வருத்தப்பட போறீங்க” என்றான் கார்த்திக். “சர்வா கோயம்பத்தூர்ல இருந்து வந்த வாரமே வைஷுகிட்ட பேசிட்டான். சம்யுக்தா பத்தி, அவன் மனசை பத்தி அவகிட்ட சொல்லிட்டான். ஆனா வைஷூ தான், இது காதல் எல்லாம் இல்லை, கொஞ்ச நாள் போனா நீங்களே அவங்களை மறந்திடுவீங்கன்னு சொன்னா. சர்வா உறுதியா மறுத்துட்டு தான் வெளிநாடு போனான்“ “அதுக்கு அப்புறமும் அவன் முடிவுல அவன் உறுதியா தான் இருந்தான், நாமளே சம்யுக்தா வீடியோவை அவன் ரூம்ல பல முறை பார்த்திருக்கோம். நம்மகிட்ட அவன் எதையும் ஒளிச்சு மறைச்சு பண்ணலை, அப்புறம் ஏன் அவன்மேல் உங்க எல்லோருக்கும் இவ்வளவு கோவம்? எனக்கு புரியலை” கார்த்திக் கோபத்துடன் கத்தினான். “வயசு கோளறுல மனசு அப்படி. இப்படி தடுமாறி போறதுதான். அதுக்காக அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கனும்னும்ன்னு என்ன இருக்கு? பெரியவங்க நம்ம பேச்சை அவன் மதிச்சிருக்கணும். அவனுக்கு என்ன கெட்டதையா நாம பண்ணிட்டோம்? உங்களுக்கு பார்த்து பார்த்து செஞ்சதை விட அவனுக்கு அதிகம் செஞ்சிருக்கோம். அவன் அதை மறந்துட்டு, சுயநலமா கல்யாணம் பண்ணிகிட்டான். நாங்க மட்டும் இன்னமும் அவனுக்கு கொடி பிடிச்சுட்டு சுத்தணும் இல்லை” பெரியவர் கோவமாக கேட்டார். “அப்பா. உண்மையை சொல்லுங்க. அவனுக்கு செய்ய சொல்லி அத்தை, மாமா கேட்டாங்களா?” கார்த்திக் கூர்மையுடன் கேட்டான். பெரியவர்கள் கொஞ்சம் தடுமாற, “அத்தை அவங்களோடயே மகன், மகளை கூட்டிட்டு போறேன்னு எத்தனை முறை சொல்லியிருப்பாங்க. உங்க பொண்டாட்டிங்க தான் அவங்களோட வேலையை காரணம் காட்டி, “எங்க அண்ணன் பிள்ளைகளை நாங்களே பார்த்துகிறோம். உங்களுக்கு வேலை நிறைய இருக்கும், அடிக்கடி இடம் மாறிட்டே இருந்தா சர்வாக்கு சேராதுன்னு நம்மளோடயே சர்வா, சுஹாவை வைச்சுக்கிட்டோம்“ “இல்லை முடியாது என் பிள்ளைங்க என்னோடதான் இருப்பாங்கன்னு, அவங்களை கூட்டிட்டு போக அத்தைக்கு தெரியாதா என்ன? குடும்பத்துல குழப்பம் வேண்டாம்ன்னு விட்டு கொடுத்தாங்க, அவங்க லீவுக்கு ஓடி வந்து பிள்ளைகளை பார்த்துட்டு போவாங்க. ஆனா நீங்க பணத்துக்காக குடும்பத்தில குழப்பத்தை உண்டாகிட்டீங்க இல்லை. ச்சே” என்று வெகுவாக அதிருப்தி கொண்டான் கார்த்திக். அந்த வீட்டில் கார்த்திக் தான் பெரியவன். எல்லாம் அவனுக்கு தெரியும் எனும் பட்சத்தில் பெரியவர்கள் மறுத்து பேச முடியாமல் நின்றனர். “எப்படியும் இந்த விஷயம் சர்வாக்கு கண்டிப்பா தெரிஞ்சுடும். அவன் என்ன முடிவு எடுக்க போறான்னு எனக்கு தெரியலை. கண்டிப்பா நல்ல முடிவா மட்டும் இருக்காது” கார்த்திக் சொல்ல, “ஏற்கனவே தான் தொழிலை அவங்கவங்க பொறுப்பில மொத்தமா ஒப்படைச்சுட்டானே. அதுவும் அந்த பொண்ணுக்காக. இனியும் அவன் செய்ய என்ன இருக்கு?” என்றார் சின்னவர். சம்யுக்தா, குருமூர்த்திக்காக அவன் செய்யும் செயல்கள் யாவும் குடும்பத்தினரை தூண்டி விடுகிறது போல. “அதுக்கு காரணமும் நாம தான்” என்று ஆகாஷை முறைத்தான் கார்த்திக். “ஆகாஷுக்கு நாம அப்போ சப்போர்ட் பண்ணதுக்கு அர்த்தம் அவன் தப்பு பண்ணலைன்னு இல்லை. அவனுக்கு தண்டனை கிடைச்சுட கூடாதுன்னுதான். பெர்சனல் கோவத்துக்காக தொழிலை பயன்படுத்தினான். சர்வா கோவம் ஒருவிதத்தில ரொம்ப நியாயமானது. வெளியே இந்த விஷயம் கொஞ்சம் கசிஞ்சிருந்தாலும் நம்ம மரியாதை என்ன ஆகியிருக்கும்?” “நம்ம பணம் மட்டும் தொழில்ல இல்லை. பார்ட்னர்ஸ், இன்வெஸ்டர்ஸ் நம்மள நம்பி தான் அத்தனை கோடிகளை கொட்டியிருக்காங்க. அவங்களுக்கு நாம என்ன பதில் சொல்ல முடிஞ்சிருக்கும். அவங்க நம்பிக்கையை நம்மால திரும்ப பெற முடியுமா?” “சம்யுக்தாவை கல்யாணம் பண்ணா பாரம்பரிய கௌரவம் போயிடும்ன்னு அவ்வளவு பேசிட்டு, நாமளே அதை கெடுக்க தானே பார்த்தோம்” என்று கார்த்திக் படபடவென பொரிந்துவிட, ஆகாஷ் தலைகுனிந்தான். “சின்ன, சின்ன பையன் தெரியாம பண்ணிட்டான். நீ அதைவிட்டு, குருமூர்த்திக்கு கொடுத்த பணத்தை பத்தி பேசு” என்றார் தந்தை. “அவருக்கு எப்போ பணம் கொடுத்துச்சு?” “எம்பையருக்காக கொடுத்தது“ “ப்பா. கொஞ்சம் மனசாட்சியோட பேசுங்க. அவர் வாங்கின அப்ரூவலை கேன்சல் பண்ண சொன்னது நீங்க தான். அப்போ அதுக்கான விலையும் நாமதானே கொடுத்தாகணும்“ “எனக்கு இதை ஒத்துக்க முடியாது. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் இல்லை. ** கோடி கார்த்திக். நாம ஏன் கொடுக்கணும்? தொழில்ன்னா அப்படி, இப்படித்தான் இருக்கும். அந்தாள் தான் சமாளிச்சு போகணும்” புது வியாக்கினம் பேசினார் மனிதர். “ப்பா. சீரியஸ்லி. உங்ககிட்ட என்னால பேச முடியாது. சர்வாதான் உங்களுக்கு சரிப்பட்டு வருவான்” என்றான் அவன் ஆயாசத்துடன். “கார்த்திக் உனக்கு புரியலைடா. அவங்களுக்கு எதிரா நாம எது செஞ்சாலும் அதுக்கான பதிலை சர்வா நமக்கு உடனே கொடுத்துடுறான். பணம் கொடுத்தது ஆகட்டும், தொழிலை பிரிச்சு கொடுத்தது ஆகட்டும் எல்லாம் அதனால தான்“ “ப்பா. உங்களுக்கு தான் புரியலை. அவன் அவங்களுக்கு மட்டும் செய்யலை. நமக்கும் தான் செய்றான். போன வாரம் உங்களுக்கு கிடைச்ச அந்த டெண்டர்க்கு காரணம் சர்வா. அந்த இன்வெஸ்டர் பிரச்சனை பண்ணப்போ அவனை தட்டி. அடக்கி வைச்சது சர்வா தான் சித்தப்பா” “இது சமீபமா நடந்ததுதான். இந்த மாதிரி நாம நிறைய சொல்லலாம். அவன் இடத்துல அவன் சரியாத்தான் இருக்கான். நாமதான் சரியில்லை. ப்ளீஸ் உங்க எண்ணங்களை மாத்திக்கோங்க. என்னால எந்த காலத்திலும் சர்வாவை விட்டு கொடுக்க முடியாது. நான் அவனோட தான் நிப்பேன். ஸாரிப்பா” என்ற கார்த்திக் கதவு வரைக்கும் சென்று நின்றவன், “மாமாக்கு அவர் தங்கச்சிங்க மேலயும், அவங்க குடும்பத்து மேலயும் பாசம் அதிகம் தான். ஆனா மகன்னா அவருக்கு உயிர். தெரியுமில்லை, பார்த்துக்கோங்க” என்ற எச்சரிக்கையோடு வெளியேறிவிட்டான்.