விடியற்காலையில் இவன் விழித்தான். குருமூர்த்தி எதுவும் பேசாமல் கைகளை கட்டிக்கொண்டு இவனை பார்த்திருந்தார்.

கசங்கிய முகம்! கலங்கிய கண்கள்! பரிதவித்த இதயம்! இந்த நொடி அவன் இப்படியாக தான் இருக்கிறான்! குருமூர்த்தி அவனை முழுதாக படித்தார்.

நீர் ஆகாரம் கிடைத்திருந்ததில் கண்கள் இப்போது நன்றாக திறந்து, தெளிந்தும் இருந்தான்.

“ம்ப்ச்” இவரை கண்டதும் ஏகத்துக்கும் சுருங்கியது அவன் முகம்.

“சாரோட உண்ணாவிரதம் நேத்தோட முடிஞ்சிருச்சு. இனியும் தொடர நினைச்சு கூட பார்க்காதீங்க” என்றார் குருமூர்த்தி.

சுயநினைவு இல்லாதப்போ கொடுத்திருப்பாங்க என்று புரிந்தது.

பதில் சொல்ல கூட அவனுக்கு விருப்பமில்லை. எத்தனை நாள்தான் போராடுவது?

“ஒரு வாரம் மட்டும் தான் உங்களுக்கான நேரம்” குருமூர்த்தி மேலும் சொல்ல,

“ஏன் அதுக்கு அப்புறம் என்னை கொன்னுடுவாங்களா?” என்று கரகர குரலில் கேட்டிருந்தான்.

“அப்போ உங்களுக்கு சண்டை செய்ய ஆசையில்லை, சாகத்தான் ஆசை” என்றார் குருமூர்த்தி.

மின்னல் வெட்டிச்சென்றது. “நான் ஜெயிச்சா என்னை என் வழியில விட்டுடணும்” என்றான் வேகமாக எழுந்தமர்ந்து.

“ஜெயிச்சா தானே? பார்ப்போம்” குருமூர்த்தி சொல்ல,

“கண்டிப்பா ஜெயிப்பேன்” அவ்வளவு உறுதி அவனிடம்.

நீண்ட நாள் போராட்டம் அவனுடையது. பல, பல வழிகளில் அவனுக்கான சுதந்திரத்தை தேடிவிட்டான். எதுவும் பலனளிக்கவில்லை.

ஓர் உயிர் பறிபோனதிற்கே துடிதுடிப்பவன், இவனால் பல உயிர்கள் அபாய நிலையை கடப்பதை எப்படி அனுமதிப்பான்?

“பணத்துக்காக செய்றாங்க. நீ இதை எல்லாம் கண்டுக்காத” என்றார்கள்.

“பணத்துக்காகன்னாலும் வேணாம். என்னை விட்டுடுங்க” என்று கத்தி கதறி தன்னை தானே துன்புறுத்தி கூட கொண்டான். ஆனால் அவன் காயத்திற்கு அதிகப்படியான காயங்கள் சுற்றியுள்ளவர்களுக்கு தான் கிடைத்தது.

இயலாமை இவ்வளவு கொடூரமானதா? எதையும் என்னால் தடுக்க முடியவில்லை. யாரையும் என்னால் காப்பாற்ற முடியவில்லை.

அந்த இயலாமையின் இறுதி தான் அவன் உணவை மறுத்தது.

“நினைச்சதை செய்ய முடியணும்? இல்லை ஒழிஞ்சு போகணும்” என்ற அவன் வைராக்கியம் மெல்ல மெல்ல அசைகிறது.

இதோ இவரால் ஏதோ, எங்கோ ஓர் வெளிச்சம் தெரிகிறது.

“நீங்க விட்டாலும் அவங்க என்னை விடமாட்டாங்க” என்றான்.

“நீங்க ஜெயிச்சா உங்களுக்கான முழு சுதந்திரம் கிடைக்கும். நீங்க செய்ய நினைக்கிறதை செய்யலாம். அதுக்கு நான் உத்திரவாதம் தரேன்” குருமூர்த்தி சொன்னவர், “தோத்துட்டா?” என்று கேட்டார்.

“என்கிட்ட என்ன எதிர்பார்க்கிறீங்க?”

“நான் என்ன சொன்னாலும் நீங்க கேட்கணும்” குருமூர்த்தி வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து உச்சரித்தார்.

“ஜெயிச்சா என் சுதந்திரம் என் கையில். தோத்துட்டா உங்க கையில். அவ்வளவு தானே. புரிஞ்சது. டன்” என்று கட்டை விரலை தூக்கி காண்பித்தான்.

“மனசு மட்டும் உறுதியா இருந்தா போதாது. உடம்பையும் ரெடி பண்ணிக்கோங்க” குருமூர்த்தி சொல்லி சென்றார்.

அவன் உடல்நிலை அவனுக்கும் தெரிந்து தான் இருந்தது என்பதால், காலை உணவை முழுதாக உண்டான். மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு கொண்டான்.

கற்பகம் பாட்டி அவன் சமத்தாக உணவை உண்டதில், சம்யுக்தாவிடம் மகிழ்ந்து போனார்.

“இவ்வளவு நல்ல பிள்ளையா இருக்கான் தம்பி. கொடுக்கிற சாப்பாடு மொத்தமும் காலியாகிடுச்சு” என்று சொல்ல, சம்யுக்தாவிற்கு எதனால் இந்த திடீர் மாற்றம் என்று புரியவில்லை.

‘அப்பா பேசி புரிய வைச்சுட்டாரா என்ன? எப்படியோ நல்லா இருந்தா சரிதான்’ என்று நினைத்து கொண்டவளுக்கு அவனை திரும்ப சென்று பார்க்கும் எண்ணம் மட்டும் சிறிதும் இல்லை.

ரகசிய அறைக்குள் இவளை கண்டதும் குருமூர்த்தியிடம் தென்பட்ட கோவம் மகளை சற்று நிதானிக்க வைத்தது. ஆழ்ந்து யோசிக்க வைத்தது.

அந்த புதியவன் அழுதது மட்டும் தான் உனக்கு தெரியுது. மத்தபடி அவர் நல்லவரா? கெட்டவரான்னு உனக்கு எதுவும் தெரியாது சம்யு!

உன் கடந்தகாலத்தை அதுக்குள்ள மறந்திடாத! எச்சரிக்கை மணி அவளுக்குள் ஓங்கி ஒலித்ததில் பெண் தெளிந்துவிட்டாள்.

அவர் அங்கிருக்க வரை உன்னால அங்க போக முடியாது, அவ்வளவு தானே! பரவாயில்லை. அப்புறம் போயிக்கலாம். உனக்கான ரகசிய சந்தோசம் இன்னமும் உன்கிட்ட தான் இருக்கு சம்யு!

கல்லூரி, பயிற்சி, அவளின் சாம்ராஜ்யம் என்று மறுநாளே தன் வழமைக்கு திரும்பினாள்.

அன்று கல்லூரி முடிந்து வீடு வரும் போதே அவள் புருவம் சுருங்கியிருந்தது.

இரவு உணவின் போது குருமூர்த்தி, “எதாவது என்கிட்ட கேட்கணுமா?” என்று மகளிடம் கேட்டார்.

“இல்லைப்பா. எனக்கு புரிஞ்சது” என்றாள் சம்யுக்தா.

பாதுகாப்பின் தன்மை மாறியிருப்பதை மகள் ஒரு நாளிலே கவனித்துவிட்டாள் என்பதில் தந்தை கூடுதல் திடம் கொண்டார்.

“கண்ணு. அந்த தம்பிக்கு ட்ரை ப்ரூட்ஸ் மிக்ஸ் ரெடி பண்ணி கொடுக்கிறியா?” என்று கேட்டார் கற்பகம் பாட்டி.

சம்யுக்தா பதிலுக்கு தந்தையை தான் பார்த்தாள். “சரியென” அவர் தலையசைத்த பின்னே, சம்யுக்தா தயாரித்து கொடுத்தாள்.

“நல்லா இருக்கு”  என்று அவன் முழுதும் குடித்து சொல்ல,

“பாப்பா தான் ரெடி பண்ணா” என்றார் கற்பகம் பாட்டி.

“பாப்பா?” அவன் புருவம் சுருங்க,

“சம்யுக்தா கண்ணு. அவதான் உங்களுக்கு நீர் ஆகாரம் கொடுக்க வைச்சா” என,

“என்ன பண்றீங்க?” என்று குருமூர்த்தி கோபத்துடன் வந்தார்.

அவனை பார்த்து செல்லலாம் என்று வந்தால், இவர் என் மகளை பற்றியல்லவா பேசி கொண்டிருக்கிறார்.

தந்தைக்கு முகம் உர்ரென ஆனது. “பாப்பா உங்க பொண்ணா?” அவன் சற்று சீண்டலாக வேறு கேட்டு வைக்க,

“முடிஞ்சதுன்னா நீங்க கிளம்புங்க” என்றார் குருமூர்த்தி பாட்டியிடம் கோவமாக.

“உங்க பாப்பாக்கு நான் தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிடுங்க பாட்டி” என்றான் இவன்.

ஒருவேளை நான் கையை பிடித்தது இவர் மகளை தானோ?

“டாக்டர் வரணுமா? ரெகுலர் செக் அப் பண்ண கேட்கிறாங்க” என்று குருமூர்த்தி கடுகடுவென கேட்க,

“பாப்பா எந்த கிளாஸ் படிக்கிறாங்க?” என்றான் இவன்.

“நான் கேட்டதுக்கு பதில்?”

“நீங்க பதில் சொன்னா நானும் பதில் சொல்றேன்”

பொறுக்கியா இவன்! குருமூர்த்திக்கு சந்தேகம் சட்டென உச்சத்துக்கு சென்றது.

சிரிக்கும் கண்களில் சீண்டல் அதிகமாக தெரிய, குருமூர்த்தி நெஞ்சை நிமிர்த்தினார்.

“பதில் தானே. கிடைக்கும். தயாரா இரு” என்றவர் அந்த வார இறுதியில் அவனுக்கான பதிலை கொடுத்தார்.

அந்த ரகசிய அறையிலே இவன் சண்டைக்கு நிற்க, எதிரில் இருப்பவர் முழு கருப்பு உடையில் முகம் கூட மறைத்து நின்றார்.

குருமூர்த்தி,  மாசிலாமணி தள்ளி அமர்ந்திருக்க, “இது யார் புதுசா?” அவனுக்குள் கேள்வி.

“நீங்க என்னோட சண்டைக்கு வரலையா?” என்று இவன் குருமூர்த்தியிடம் கேட்க,

“இவங்களை ஜெயிச்சுட்டு வாங்க. பார்க்கலாம்” என்றார் குருமூர்த்தி.

முடிஞ்சா ஜெயிச்சு பாருடா என்ற சவால் மனிதரிடம் வெளிப்படையாக தெரிந்தது.

சரியாக அவரின் சவால் இவனை சென்று சேர்ந்ததில்,  புருவங்களை ஏற்றி இறக்கியவன், அதையும் பார்த்துடலாம்! என்ற உறுதியுடன் முதல் அடியை  எடுத்து வைத்தான்.

தற்காப்பு கலைகள் இரண்டை கற்றிருந்த திடம் அவனிடம் வெளிப்பட்டது.

பரவாயில்லையே! குருமூர்த்தி இவனை ஆழ்ந்து கவனித்து உள்வாங்க ஆரம்பித்தார்.

எதிராளியோ இவன் அடியை தடுக்க மட்டும் செய்ததோடு, இவனை பதிலுக்கு தாக்க முனையவில்லை.

நிமிடங்கள் சில இப்படியே கடந்ததில், இவனுக்கு பொறுமை பறந்து போனது.

கோபத்துடன் சண்டையிட ஆரம்பிக்க, எதிராளியும் மின்னலாக இவனை தடுத்து நிறுத்த, ஆக்ரோஷம் கொண்டான்.

பலவீனமான இடங்களை குறிவைத்து அடிகளை பலமாக இறக்க முனைய, ஓரிரு அடியும் எதிராளி மேல் நன்றாக விழுந்துவிட்டது.

நொடிக்கு நொடி அவன் நிதானம் தவறுவதை கணித்துவிட்ட எதிராளி, புதுவிதமான தற்காப்பு கலையை அறிமுகம் செய்தார்.

என்ன வித்தை இது? ஆச்சரியத்தை நொடியில் சமாளித்து, இவனும் பதில் கொடுத்தான்.

அப்படியும் ஓரிரு நிமிடங்களில், இவன் தரையில் சாய்ந்துவிட்டான். ரத்தம் வரவில்லை, எலும்பு உடையவில்லை. ஆனால் உடல் முழுக்க வலி!

தோற்றுவிட்டேன்! எனக்கான வாய்ப்பை இழந்துவிட்டேன்! இதுதான் அவனை நிலைகுலைய செய்தது.

தரையில் ஓங்கி அடித்தான். சப்தமே இல்லா அறையில், இவன் குமுறல் தான் எங்கும் எதிரொலித்தது.

வலியில் கண்களை சுளித்து சில நிமிடம் பொறுத்து சுவற்றுக்கு சாய்ந்தமர்ந்தான்.

கருப்பு உடை மனிதர் அங்கிருந்து புறப்பட, “நில்லு” என்றார் குருமூர்த்தி.

தயங்கி நின்றவரை தோளோடு அணைத்து கொண்ட குருமூர்த்தி, “என் பொண்ணு” என்றார்.

முகமூடி கலைந்த சம்யுக்தாவை வெறித்து பார்த்தது அவன் கண்கள்.

“பொண்ணுகிட்ட தோத்துட்டோம்ன்னு இருக்கா?” குருமூர்த்தி வார்த்தைகள் அம்பென அவன் இதயத்தை துளைக்க முயன்றது.

“எனக்கு இது பழக்கம் தான்” என்றான் அவனோ.

“என் அம்மாவும் உங்க பொண்ணு இனம் தானே” என்றவனிடம் மெல்லிய புன்னகை.

சம்யுக்தா மீதான முதல் எண்ணம், அவளின் பிம்பம் அடிநெஞ்சம் வரை பதிந்து போனது.

அந்த நொடியில் இருந்து எல்லாம் மாற ஆரம்பித்தது. எல்லாமே!