குருமூர்த்திக்கு மகளை தேடி கொண்டு செல்ல வேண்டும். ஆனால் எங்கு செல்ல? அவன் எங்கிருக்கிறான் என்று எப்படி கண்டுபிடிப்பது?
சர்வாச்சார்யாவை சுற்றியுள்ள இரும்பு வளையத்தை உடைத்து, அவனை டிராக் செய்வதெல்லாம் கடினம்!
இவருக்கு இருக்கும் தொடர்பை வைத்து, அவனின் நான்காம், ஐந்தாம் வளையத்தை வேண்டுமென்றால் நெருங்கலாம். அவனை நெருங்க முடியாது.
அப்படியும் குருமூர்த்தி முயன்று பார்த்துவிட்டார். எங்கிருக்கிறான் என்று தெரியவில்லை.
காரை ஓரங்கட்டி நிறுத்தி விட்ட மனிதர், அவர்களின் அலுவலகம், வீடு எங்கிருக்கிறது என்று தேடினார்.
“எதுக்கு இப்போ இவ்வளவு கஷ்டப்படுறீங்க? அவருக்கே போன் போட்டு கேட்க வேண்டியது தானே?” என்று குணா வியாக்கினம் பேசினான்.
“அவன் போன் எடுத்தா நான் ஏண்டா தேடி அலைய போறேன்?” குருமூர்த்தி எரிந்து விழுந்தார்.
“சம்யுக்தா போன்ல தான் GPS இருக்கே. அதை பார்க்க வேண்டியது தானே?”
“டேய் அது ஒர்க் ஆகியிருந்தா, நான் என் பொண்ணுகிட்ட போயிருக்க மாட்டேனா?”
“ம்ஹ்ம். சார் செம. எல்லாம் சரியா பண்றார்” குணா மெச்சி கொள்ள,
“நீ முதல்ல காரை விட்டு இறங்குடா. என் பொண்ணை நானே தேடி கண்டு பிடிச்சுகிறேன்” குருமூர்த்தி கடுப்பாகிவிட்டார்.
“ம்ப்ச். இப்போ எதுக்கு இவ்வளவு டென்சன்? அவர் பத்திரமா கொண்டு வந்து விட்டுடுவார்” என்றான் குணா.
“டேய். டெல்லில இருந்து அவனே வந்திருக்கான்னா விஷயம் ஏதோ பெருசு. என் பொண்ணு இந்த நேரத்துக்கு அவனோட இருக்க கூடாது” என்றார் குருமூர்த்தி.
“நம்ம பாப்பாக்காக தானே வந்திருக்கார். அப்படியென்ன ஆகிடும். அதெல்லாம் சம்யுக்தா பத்திரமா இருக்கும்”
“உனக்கு புரியாது. அவன் ஒருமாதிரி. விடு” குருமூர்த்தி இப்போது வசுந்த்ராவிற்கு அழைத்துவிட்டார்.
வேலையாக இருப்பார். தொந்தரவு செய்ய கூடாது என்று தான் இவ்வளவு நேரம் அழைக்கவில்லை. ஆனால் நேரம் செல்ல, செல்ல குருமூர்த்தியும் அவர் பொறுமையை இழந்துவிட்டார்.
வசுந்தராவின் உதவியாளர் தான் அழைப்பை ஏற்றவர், “மேடம் வந்ததும் சொல்றேன்” என்றார்.
குணாவிற்கு அவரை பார்க்க பாவமாக இருந்திருக்க வேண்டும். காரை விட்டு இறங்கி வந்தவன், “சார் எங்கிருக்கிறார்?” என்று கேட்டான்.
சர்வாச்சார்யாவின் கார்ட்ஸ் சீப் ராகவ் எதிர் முனையில் இருந்தவன், “மேடம் பாதுகாப்பா இருக்காங்க” என்றான்.
“ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என்று குணா கேட்க,
“வேறென்ன?” என்றான் ராகவ்.
க்கும். இவன்கிட்ட இருந்து ஒரு வார்த்தை வாங்கிட முடியாது.
அதில் திடீர் ரோமியோ புன்னகைக்க, சம்யுக்தா அவனை தள்ளிவிட்டு, அவளின் இருக்கைக்கு வந்துவிட்டாள்.
மற்றவரின் முகம் பார்க்கமல் மறுபுறம் திரும்பி கொண்டவர்களின் இதழ்களில் ரகசிய புன்னகை பூத்திருந்தது.
“சார்” என்று ராகவ் அழைக்க, இடையில் இருந்த திரை நீக்கப்பட்டது.
“ஆகாஷ் சார் மீட்டிங்ல இருக்கார்” என்றான் ராகவ்.
“கேன்சல் பண்ணிடு” என்றவன் அலுவலகம் வரவும் காரை விட்டு இறங்கினான்.
அந்த நான்கு மாடி கட்டிடம் சர்வாச்சார்யாவின் அலுவலகம் என்பது சம்யுக்தாவிற்கு தெரியும்.
இங்கெதுக்கு என்னை கூட்டிட்டு வந்திருக்கார்? பெண் காரை விட்டு இறங்காமல் இருக்க, ராகவ் அவளுக்கான கதவை திறந்துவிட சென்றான்.
“ராகவ்” என்ற சர்வாச்சார்யா அழைப்பில் அவன் அப்படியே பின் சென்றுவிட, நாயகன் சென்று கார் கதவை திறந்தான்.
சம்யுக்தா நேராக அவனின் கண்களை பார்த்தவள், மறுப்பாக தலையசைத்தாள்.
அவன் எங்கு இவளை பார்த்தான். இவளின் பாதங்களை பார்த்திருந்தவன், உதடுகளை மெலிதாக கடித்து கொண்டான்.
அவன் முதன் முதலில் முத்தமிட்ட பாதங்களை கண்டதும் அவனுக்குள் ஓர் குறுகுறுப்பு.
சில நொடிகளில் தன்னை சமாளித்து கொண்டவன், பாதங்கள் அடியெடுத்து வைக்க போவதில்லை என்று உணர்ந்து, பெண்ணின் கையை பற்றி, காரை விட்டு இறக்கினான்.
சம்யுக்தா அவனுக்கு ஒத்துழைக்காமல் தடுத்திருக்கலாம். ஆனால் சர்வாச்சார்யாவை வரவேற்க ஆட்கள் ஓட்டமாக ஓடி வந்து கொண்டிருக்க, ஊழியர்களும் அங்கங்கு நின்று பார்த்திருந்தனர்.
“ப்ளீஸ் வெல்கம் சார்” என்று கோட் சூட்டுடன் வந்த இருவர், நாயகனுக்கு கை கொடுத்து அழைத்தவர்கள்,
“ஸாரி சார். உங்களை வரவேற்க ஏற்பாடு செய்ய முடியலை” என்றார்கள்.
நீண்ட வருடங்கள் கழித்து பெங்களூர் அலுவலகம் வந்திருக்கிறான்.
இவன் சொல்லாமல் கொள்ளாமல் சட்டென வந்துவிட்டாலும், அவர்கள் மன்னிப்பை கேட்கிறார்கள். ம்ஹ்ம். சம்யுக்தா அவனை விட்டு தள்ளி நிற்க ஓர் அடி எடுத்து வைக்க, சர்வாச்சார்யா கரங்கள் நீண்டு பெண்ணை தன் பக்கம் இழுத்தது.
“மேடம். ப்ளீஸ் வெல்கம்” என்று சம்யுக்தாவை அடுத்த நொடியே அத்தனை பேரும் அழைத்தார்கள்.
சர்வாச்சார்யா அவர்களுக்கு ஒற்றை தலையசைப்பை கொடுத்தவன், சம்யுக்தா, ராகவ் உடன் மேல் தளத்திற்கு வந்தான்.
கான்பிரன்ஸ் ஹாலில் இருந்து வெளியேறி கொண்டிருந்த ஊழியர்கள் சர்வாச்சார்யா வரவும், அவனுக்கு வழி விட்டு இரு பக்கமும் நின்று கொண்டார்கள்.
ராகவ் முன்னாள் நடக்க, சர்வாச்சார்யாவிற்கு எல்லோரும் முகமன் கூறினார்கள்.
மெலிதான புன்னகையுடன் தலையசைத்து நடந்தவன், சம்யுக்தாவின் கரத்தில் அழுத்தத்தை கொடுத்தான்.
பெண் முகத்தை சீராக்கி கொண்டு, புன்னகையை ஒட்ட வைத்தாள்.
ஆகாஷ் ஹாலை விட்டு வெளியேற முனைய, “சார். ப்ளீஸ் உள்ள இருங்க” என்றார்கள் கார்ட்ஸ் இருவர்.
அதிமுக்கியமான மீட்டிங் தான் நடந்து கொண்டிருந்தது. ஆகாஷ் தீவிரமான விவாதத்தில் இருந்த நேரம், “சார் மீட்டிங் கேன்சல் பண்ண சொல்லியிருக்காங்க” என்று இருவர் வந்தனர்.
“ஹேய். யாரை கேட்டு நீங்க முதல்ல உள்ள வந்தீங்க? அவுட்” என்று கத்திவிட்டான் ஆகாஷ்.
அவர்கள் சிறிதும் அசையாமல், “ப்ளீஸ். நீங்க எல்லாம் வெளியே போங்க” என்று ஊழியர்களுக்கு சொன்னார்கள்.
“என்ன தைரியம் உனக்கு? நான் ஏற்பாடு பண்ண மீட்டிங்கை கேன்சல் பண்ண யாருக்கு இங்க அதிகாரம் இருக்கு” என்று ஆகாஷ் இவர்களை நோக்கி கோவமாக வர,
“சர்வாச்சார்யா சார்” என்றான் ஒருவன் அழுத்தமாக, சத்தமாக.
ஊழியர்கள் அதன் பின் தானே வெளியேற ஆரம்பிக்க, ஆகாஷ் புருவங்கள் சுருங்கியது.
அவனும் ஹாலை விட்டு வெளியேற நினைக்க, மறுத்து உள்ள அமர வைத்தனர்.