குருமூர்த்தி முறைப்பில், “வேணாம்ன்னா விடுங்க. எனக்கென்ன?” என்றவன் அதையும் தானே குடித்து வைத்தான்.

“என்னடா இதெல்லாம்?” குருமூர்த்தி அவனிடம் பல்லை கடிக்க,

“நீங்க ரொம்ப லேட். ஆல்ரெடி எங்காள் களத்துக்கு வந்துட்டார்” என்றபடி காலரை தூக்கி விட்டு கொண்டான் குணா.

“யாரை சொல்ற நீ?” மனிதர் சந்தேகமாக கேட்க,

“உங்களுக்கு உண்மையா தெரியலை” என்று அவரை நெருங்கி உற்று நோக்கினான்.

“டேய்” என்று அவனை தள்ளிவிட்ட குருமூர்த்தி, “அந்த அடங்காதவனை எதுக்கு இதுக்குள்ள  இழுத்துவிடுற நீ?” என்று குணாவிடம் கோவம் கொண்டார்.

“அடேங்கப்பா. நான் அவரை இழுத்துவிடுற உயரத்துலயா சர்வாச்சார்யா சார்  இருக்கார். அவரே தான் எல்லாம்  பண்றார். உங்க செல்லத்தை நாங்க ஒன்னும் செய்ய சொல்லலை” என்று இவன் முகம் திருப்பினான்.

“என்னடா செல்லம், வெல்லம்ன்னுட்டு இருக்க? நம்ம பிரச்சனையை நாம பார்த்துக்கலாம். அவன் எதுக்கு இதுல தலையிடுறான்” குருமூர்த்தி கோவப்பட,

“நம்பிட்டேன். இதனால அவருக்கு பேச்சு வந்திட கூடாது. அவ்வளவு தானே? அதை சொல்லிட்டு போங்க”

“க்கும். உன்னை எதுக்கு உட்கார வைச்சு பிரியாணி போட்டுட்டு இருக்காங்க? அவங்க ஸ்டைல்ல கவனிக்கலயா என்ன?”

“ரொம்ப வருத்தம் படுறீங்க போல. உங்க எதிர்பார்ப்பு எல்லாம் நடக்காது. கிளம்புங்க காத்து வரட்டும்”

“உன் அம்மாக்காக என்னென்னு பார்த்துட்டு போறேன்”

“அப்படியொன்னும் நீங்க பார்க்க தேவையில்லை. போயிட்டே இருங்க” என்றான் குணா கோவமாக.

“அவன்கூட ரொம்ப ஒட்டுறியா என்ன? பேச்சு எல்லாம் சரியில்லை. அவனை விட்டு தள்ளியே இரு”

“ஓஹோ. பனியை தூக்கி உங்கமேல அவர் போட, நீங்க அவரை வைச்சுட்டு சரக், சரக்குன்னு பனியில சாகசம் பண்ணன்னு அவரோட ஒண்ணுமண்ணா புரண்டுட்டு வந்து எனக்கு தள்ளி இருன்னு அட்வைஸ். நல்லா இருக்கு, ரொம்ப நல்லா இருக்கு” என்று ஜோராக கைதட்டினான் குணா.

“ராஸ்கல். அது ஒரு கேம், அதை போய். முதல்ல உன்னை எதுக்கு வெளியே உட்கார வைச்சிருக்காங்க. இரு கூண்டுல அடைக்க சொல்றேன்” என்று குருமூர்த்தி விறுவிறுவென செல்ல,

 குணாவின் போன் ஒலித்தது. “என்ன?” என்ற அதட்டலுடன் போன் எடுத்தான்.

“உங்களை போலீஸ் எதுவும் செஞ்சிடலையே? நல்லா இருக்கீங்களா? நான் வேணா என் அப்பாகிட்ட பேசவா?” என்று அனுஷா படபடவென பேச,

‘என்னை கூட்டிட்டு வந்து எவ்வளவு நேரம் ஆச்சு? இப்போதான் போன் பண்ணி என்னமோ ரொம்ப அக்கறை இருக்க மாதிரி நடிக்கிறா!’ உதட்டை சுளித்து கொண்டவன்,

“சம்யுக்தா எப்படி இருக்காங்க? அங்க எல்லாம் ஓகேவா?” என்று கேட்டான்.

“அவளோட தான் இவ்வளவு நேரம் இருந்தேன். இப்போதான் என் டெஸ்க்குக்கு வந்துட்டு”

“அவங்க எங்க இருக்காங்க? உண்மையை சொல்லு, அவங்களை ஏதும் தொந்தரவு பண்றாங்களா என்ன?” என்று குணா இடையிட்டு கேட்டான்.

“அவளை கான்பிரன்ஸ் ஹால்ல உட்கார வைச்சிருக்காங்க. விசாரணை இருக்கும்ன்னு நினைக்கிறேன்” அனுஷா சொல்ல,

“அவங்களை ஏன் தனியா விட்டு வந்த? கொஞ்ச நேரம் அவங்களோட இருந்தா என்ன?” குணா கேட்டான்.

“இருக்க விடலை” அனுஷா சொல்ல,

“ஓஹ். அடிக்கடி அவங்களை போய் பாரு. எங்க சார் வர வரைக்கும் தான். அப்புறம் எல்லாம் அவர் பார்த்துப்பார்” என்றான் குணா.

“சர்வாச்சார்யா சார் இங்க வர போறாரா என்ன?” அனுஷா குரலில் உற்சாகம் தெரிய,

“அண்ணனை பார்க்க இவ்வளவு ஆர்வம் தேவையில்லை. போனை வைச்சுட்டு போய் சம்யுக்தாவை பாரு போ” கடுப்படித்து வைத்தான் குணா.

சர்வா சார் எனக்கு அண்ணனா? இவர் எப்படி அதை சொல்லலாம்? இவருக்கு போய் தினம், தினம் தகவல் கொடுத்துட்டே இருந்தேன் பாரு என்னை சொல்லணும்! அனுஷா உர்ரென்ற முகத்துடன் சம்யுக்தாவிடம் சென்றாள்.

சிறை வைப்பது போல் சம்யுக்தாவை கான்பிரன்ஸ் ஹாலுக்குள் அமர வைத்ததுடன், வெளியே காவலுக்கு செக்கியூரிட்டியும் நின்றார்.

“அவளுக்கு தண்ணீர் கொடுக்கணும். காபி கூட கொடுக்க கூடாதா? வேலை சம்மந்தமா அவகிட்ட சந்தேகம் கேட்கணும்” என்று எதாவது காரணம் சொல்லி, அடாவடி செய்து தான் அனுஷாவால் சம்யுக்தாவை பார்க்க முடிந்தது.

இப்போதும், “அவளுக்கு லன்ச் கொடுக்கணும்” என்று கேட்டு நின்றாள் அனுஷா.

“அதை நாங்க பார்த்துகிறோம், நீங்க போங்க” என்றார் செக்கியூரிட்டி விறைப்புடன்.

“நீங்க கொடுக்கிறீங்களா? கொடுக்கலைன்னா? நானே கொடுத்துடுறேன்” என்று அனுஷா கேட்டு நிற்க, அவரும் இந்த முறை உன்னை உள்ளே விடுவதாக இல்லை என்று மல்லுக்கட்ட,

“இங்கென்ன சத்தம்?” என்று வந்தான் பரத்.

“லன்ச் கொடுக்கணும்” என்றாள் அனுஷா.

“கொடுக்க முடியாது. அவ என்ன கெஸ்ட்டா. இப்போதான் காபி, தண்ணீர்ன்னு உபசரிச்சுட்டு இருக்க? என்கொயரி பண்ண வேண்டிய ஆளை அடிக்கடி போய் பார்த்தா உன்னையும் அவளோட சேர்த்து விட்டுடுவேன். அப்புறம் உன் மேலயும் என்கொயரி இருக்கும்”

“சரி. சேர்த்து விட்டுடுங்க. எனக்கொண்ணும் பிரச்சனையில்லை” என்றாள் அனுஷா கூலாக.

“ஏய் என்ன? பிளாக் மார்க் வாங்க போறியா? அவளுக்கு அவளோட அப்பன் ஊருபட்ட சொத்து சேர்த்து வைச்சிருக்கான். நீ அப்படியா? சாதராண மிடில் கிளாஸ் பொண்ணு. ஞாபகம் வைச்சுக்கோ. உன்னோட நல்லதுக்கு தான் சொல்றேன். பேசாம இடத்தை காலி பண்ணு” என்றான் பரத்.

“இடத்தை காலி பண்ணனுமா? சார். உங்களுக்கு எப்படி சொத்துப்பத்து இருக்கா? இந்த வேலைய விட்டு போனா பொழைச்சுக்குவீங்களா?”

“நான் ஏன் வேலையை விட்டு போகப்போறேன். லூசா நீ?”

“சரிதான்” என்றவள் சட்டென ஆர்ப்பரிக்க, பரத் திரும்பி பார்த்தவன் அதிர்ந்து போனான்.

அவன் மட்டுமில்லை அந்த மொத்த கட்டிடமும், அந்த தளத்தில் குவிய ஆரம்பிக்க, கார்ட்ஸ் எல்லாரையும் கட்டுப்படுத்தி இரு பக்கமும் ஓரங்கட்டி நிற்க வைத்தனர்.

சர்வாச்சார்யா கண்ணாடி கதவை திறந்து கொண்டு வேகநடையுடன் இவர்களை நோக்கி வர, பரத்க்கு வேர்த்து ஊத்த ஆரம்பித்தது.

மின்னலென இவர்களை கடந்து கான்பிரன்ஸ் ஹாலுக்குள் நுழைந்தான் சர்வாச்சார்யா.

டேபிளில் தலை சாய்ந்திருந்த சம்யுக்தா, அனுவா? என்றபடி நிமிர்ந்தவள், இவனை கண்டதும் நொடி அவனையே வெறித்து பார்த்துவிட்டு, பின் பட்டென முகத்தை மறுபக்கம் திரும்பி படுத்து கொண்டாள்.

வந்தவன் இவளின் கையை பற்றி இழுக்க, பெண் ஒத்துழைக்க வேண்டுமே!

சர்வாச்சார்யா யோசிக்கவே இல்லை. இருக்கையில் இருந்த பெண்ணை கைகளில் ஏந்தி கொள்ள போக,

“ஹேய்” என்று துள்ளி குதித்து விலகியவள், அவனுக்கு முன் நடந்தாள்.

 சர்வாச்சார்யா அவளின் கைப்பற்றி,  ஹாலில் நிற்க வைத்தவன், “யூ” என்று பரத் நோக்கி விரல் அசைத்து அருகில் அழைத்தான்.

“சா, சார், சார்” என்று திணறியவன் மெல்ல அடியெடுத்து வைக்க, கார்ட்ஸ் அவனை இழுத்து வந்து சர்வாச்சார்யா முன் விட்டனர்.

நாயகன் கோவமுகத்தில் பரத் திகிலடைந்து போனான்.

‘என் மாமாகிட்ட சிக்கிக்காத, அவரோட கோவம் வேற மாதிரி’ ஆகாஷ் எச்சரிக்கை நினைவிற்கு வந்து, கால்கள் நடுக்கம் கண்டது.

“சா, சார். அது, ஆகா. ஆஹ்” என்று அலறினான் பரத்.

சர்வாச்சார்யாவின் ஐந்து விரலும் பரத் கன்னத்தில் பதிந்து போனது.

அடுத்த அறைக்கு கீழே விழுந்திருந்தான் பரத்.

“சார். ப்ளீஸ். போதும். நாங்க அவரை பிளாக் லிஸ்ட் பண்ணிடுறோம்” என்று கம்பெனி முதலாளி கேட்டு நிற்க,

“நீங்க மட்டும் இதுல சம்மந்தப்பட்டிருந்தா, நடுத்தெருவுல நிக்க தயாராகிக்கோங்க” சர்வாச்சார்யாவின் எச்சரிக்கை, அவரை மட்டுமில்லை ஒட்டு மொத்த ஊழியர்களையும் கதிகலங்க வைத்துவிட்டது.

“சார், எனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை. அப்படி மட்டும் எதுவும் பண்ணிடாதீங்க ப்ளீஸ்” என்று முதலாளி கேட்டு கொண்டு அவன் பின்னாலே வர, சம்யுக்தா இதை சிறிதும் ரசிக்கவில்லை.

அவனிடம் இருந்து கையை உருவிக்கொள்ள முயன்ற பெண்ணை இழுத்து தோளோடு அணைத்தபடி நடந்தான் நாயகன்.

“அனு” என்று சம்யுக்தா சட்டென நிற்க,

“பைடி” என்றாள் அனுஷா எங்கிருந்தோ.

சர்வாச்சார்யா பார்வையில், அந்த கூட்டத்தில் இருந்து அனுஷா மரியாதையுடன் அழைத்து வரப்பட்டாள்.

“தேங்க்ஸ் அனு. நைட் வீட்டுக்கு வா. கண்டிப்பா வரணும்” என்று சம்யுக்தா அவளின் கைப்பற்றி கொள்ள,

“அவருக்கு இன்ட்ரோ கொடுடி” என்றாள் அனுஷா கிசுகிசுவென.

“ஹாய்மா” என்று கைநீட்டினான் சர்வாச்சார்யா.

அனுஷா திகைத்து, “ஹா, ஹாய் சார்” என்று அவனின் நீட்டிய கரத்தை நுனியில் பற்றி குலுக்கினாள்.

“நான் கார் அனுப்புறேன். வீட்டுக்கு வாங்க” என்ற சர்வாச்சார்யா, சம்யுக்தாவை தன் தோள் அணைப்பில் இருந்து விடுவிக்காமலே காருக்கு அழைத்து வந்தான்.

ஒரு எல்லைக்குள்ளே எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்க, “அந்த நாலு பேர்” என்றான் சர்வாச்சார்யா.

“நம்ம கஸ்டடில தான் இருக்காங்க” என்றான் கார்ட்ஸ் சீப் ராகவ்.

படகு போன்ற கார் தரையில் மிதந்து கொண்டிருக்க, முன்னும், பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தது.

குருமூர்த்தி மகளுக்கு அழைத்தவர், “இந்த குணா பையன் மேல கேஸ் எதுவும் போடலைமா. நான் அவனை கூட்டிட்டு வந்துட்டு இருக்கேன், நீ வேலையை விடுறதுக்கான எல்லா பார்மாலிட்டியும் முடிச்சுட்டியா?” என்று கேட்டார்.

அவரின் குரல் காரில் எதிரொலிக்க, சட்டென முன்னிருகைக்கும், பின்னிருகைக்கும் இடையில் திரை விழுந்தது.

இவனோட இருக்கிறதை அப்பாகிட்ட எப்படி சொல்ல? பெண்ணின் கவனம் அதில் நிற்க,  “ம்ம்ப்பா” என்றாள் அனிச்சையாய்.

“என்னாச்சு? ஏன் குரல் இப்படி இருக்கு? அங்க உன்னை தொந்தரவு பண்றாங்க தானே உண்மையை சொல்லு. நான் வரலாம்ன்னா உன்மேல சத்தியம் வைச்சு என்னை வரவிடாம பண்ணிட்ட? அப்படியென்ன கோவம் உனக்கு? இவன் அங்க பண்ண கலாட்டாக்கு உன்னை எப்படி சும்மா விடுவாங்க. எனக்கு ஒன்னும் புரியலை” என்று குருமூர்த்தி பேச,

சம்யுக்தாவிடம் இருந்து போன் பிடுங்கபட்டத்துடன், “நேரா வீட்டுக்கு போங்க” என்றான் சர்வாச்சார்யா.

“டேய். டேய் நீ? அங்க என்னடா பண்ற? என் பொண்ணு எங்க?”

“கடத்திட்டேன். டீல் பேச கூப்பிடுறேன். ரெடியா இருங்க” என்று வைத்துவிட்டான்.

சம்யுக்தா கடுப்பாகி அவனிடம் இருந்து போனை பறிக்க போனவள், நாயகன் மடியில் விழுந்திருந்தாள்.

“ஆஹ்ன்” பெண் சிலையாகிவிட்டாள்.

நீட்டின என் கையை பிடிச்சு இழுத்திருக்கான் மலைமாடு!

சம்யுக்தா உணரும் நேரம், அவளின் கழுத்துக்கடியில் முகம் புதைத்திருந்தான் சர்வாச்சார்யா.

சூடான அவன் மூச்சு காற்று அவளின் சில்லென்ற கழுத்தோரத்தை சூடாக்கியது.

சம்யுக்தா திகைத்து, தெளிந்து, திமிர, அவனின் கைகள் அவளின் இடையை முழுவதுமாக தன்னுடன் நெருக்கி கொண்டது.

அத்தனை நெருக்கம் இருவருக்குள்ளும். சம்யுக்தா கண்கள் விரிந்து போனதுடன், அவளின் சுவாசமும் தடைப்பட்டு போனது.

பெரிதாக மூச்சை இழுத்து விட்டவள், ‘ஹக்’ என்று அதிர்ந்து போனாள்.

ஒட்டி கொண்ட நெருக்கத்தில் நான் மூச்சை இழுத்து விட்டிருக்க கூடாது.

அவன் கைகள் பெண்ணை இன்னும் அவனோடு இணைக்க முயல, சம்யுக்தா பட்டென அவன் கன்னத்தில் ஒன்று வைத்தாள்.

பதிலுக்கு அவன் கடித்து வைத்தான்.

பேச்சே இல்லாமல் ஓர் வன்யுத்தம்!