கடந்து செல் காதலுடன்! 38

‘இப்படி தான் நடக்க  வேண்டும் என்று முன்பே திட்டமிடப்பட்டது. டிராப்’

“சம்யுக்தாவிற்கான டிராப்!” சர்வாச்சார்யா தலையை இடம், வலமாக அசைத்து கொண்டான்.

“எஸ் சார். பிளான் பண்ணி தான் பண்ணியிருக்காங்க” என்றான் எதிரில் இருந்தவன்.

சர்வாச்சார்யா மறுநாள் காலை தான் டெல்லி வீட்டிற்கு வந்தவன், “ம்மா. காபி ப்ளீஸ்” என்று சொல்லியபடி, குருமூர்த்தி தங்கியிருக்கும் அறைக்கு சென்றான்.

“ராஜா. அவர் இல்லை. நைட்டே பெங்களூர் கிளம்பிட்டார்” என்றார் வசுந்தரா.

“ஏன்? என்னாச்சு வசுந்தரா?” என்று சிவப்பிரகாசம் கேட்க,

“தெரியலைங்க. நான் காரணம் கேட்டும் சொல்லலை. பொண்ணை பார்த்துட்டு சென்னை போறேன். அவ்வளவு தான்னு சொன்னார். ஆனா ஏதோ காரணம் இருக்கு” என்றார் வசுந்தரா.

சர்வாச்சார்யா உடனே அவன் மொபைல் எடுத்து பார்க்க, “நான் நைட் உனக்கு கூப்பிட்டேன் தங்கம். நீ எடுக்கலை. மெசேஜ் போட்டதை பார்க்கலையா நீ?” என்று மகனிடம் கேட்டார் வசுந்தரா.

“அதுக்கு எல்லாம் நேரமே இல்லை. நாங்க போறதுக்குள்ளே அந்த ஆளை அவங்க கட்டுப்பாட்டுக்குள்ள  எடுத்துட்டு இருந்தாங்க. அவரோட பேமிலி ரொம்ப பதறி போய்ட்டாங்க. அவங்களுக்காகவே,  ரொம்ப போராடி, அலைஞ்சு, போலீஸ்கிட்ட எல்லாம் சண்டை போட்டு தான் திரும்ப அவரை வெளியே கொண்டு வர முடிஞ்சது. இப்போ பாதுகாப்பான இடத்துல தங்க வைச்சுட்டு வந்திருக்கோம்” என்றார் சிவப்பிரகாசம்.

“சார்” என்று ஒருவன் வேகமாக உள்ள வந்தவன், “தொந்தரவுக்கு மன்னிக்கணும். விஷயம் ரொம்ப அர்ஜென்ட்” என்றான் அவன்.

“என்ன?” சர்வாச்சார்யா கேட்க, அவனிடம் சென்று ஏதோ சொன்னான் வந்தவன்.

“ம்மா, ப்பா. பெங்களூர் கிளம்புறேன். பார்மாலிட்டி முடிச்சுடுங்க” என்றபடி வாசலுக்கு நடந்துவிட்டான் சர்வாச்சார்யா.

அடுத்த சில நிமிடத்தில், அவர்களின் தனிப்பட்ட ஜெட்’டில் பயணித்து கொண்டிருந்தான் சர்வாச்சார்யா.

“சாரி சார். உங்ககிட்ட அப்டேட் பண்ண முடியலை. நேத்துல இருந்து நீங்க பிசியா இருந்தீங்க. நாங்களே சமாளிச்சிடலாம்ன்னு பார்த்தோம். ஆனா இல்லை சார். எங்களால முடியல” என்றவன்,

சர்வாச்சார்யாவிடம் லேப் டாப்பை நீட்டினான். சம்யுக்தா அலுவலகத்தில் நடந்தது எல்லாம் அதில் ஓடி கொண்டிருக்க, நாயகனின் புருவங்கள் இடுங்கியது.

“சம்யுக்தா மேடம் அடிச்சதுக்கு கேஸ் கொடுக்க முயற்சி பண்ணாங்க. நம்ம சைட்ல இருந்து நாங்க ஸ்டாப் பண்ணிட்டோம். ஆனா இன்னைக்கு திரும்ப பிரச்சனை, குணா ஆபிசுக்கு போய் அவங்களை அடிச்சுட்டார். போலீஸ் FIR பைல் பண்ணியே தீருவன்னு நிக்கிறாங்க. அதோட மேடமையும் ஆபிஸ்ல உட்கார வைச்சுட்டாங்க. ஏதோ பிளான் போடுறாங்கனு தோணுது சார்” என்றான் அவன்.

“ம்ம்” என்றவன் கண்கள் அலுவலகத்தில் அமர்ந்திருந்த சம்யுக்தா மேல் நிலைத்திருந்தது.

தலை பிடித்து கொண்டிருந்த சம்யுக்தாவின் போன் ஒலிக்க, எடுத்து பார்த்தவளின் கண்கள் கலங்கி போனதை கண்டு, அழுத்தமாக விழிகளை மூடி திறந்தான் சர்வாச்சார்யா.

குருமூர்த்தி அழைப்பு தான் அது! என்ன சொல்லி அவரை நிறுத்திவிட்டு வந்திருக்கிறாள்?

“யார்?” என்று கேட்டான் சர்வாச்சார்யா.

“ஆகாஷ். உங்க சின்ன மாமாவோட பையன்”

“ஆகாஷா?” நம்ப முடியாமல் கேட்டான் சர்வாச்சார்யா.

“ஆமா சார். சம்யுக்தா மேடமோட அப்பா பத்தி பரத்கிட்ட சொன்னது ஆகாஷ்தான்”

சிவந்து போன முகத்துடன்  அமர்ந்திருந்த சர்வாச்சார்யாவிடம், “அவரோட அக்காக்காக பண்ணியிருக்கார். வைஷ்ணவி மேடம் விஷயத்தில உங்கமேல அவருக்கு கோவம் இருந்திருக்கு, சோ பரத் மூலம் சம்யுக்தா மேடமை கார்னர் பண்ண ட்ரை பண்ணியிருக்கார்” என்றான்.

லேப் டாப்பை விசிறி அடித்தான் சர்வாச்சார்யா.

சில நிமிட கனத்த அமைதி. ஏறி இறங்கும் மார்புடன் வான்வெளியை வெறித்தான்.

பின், “ம்ஹ்ம்” என்றான்.

“எம்பையர் திறப்பு விழால நீங்களும்,மேடமும் இருக்க போட்டோ அதிகமே பரவியிருக்கு. மேடம் ஒர்க் பண்ற கம்பெனிக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அந்த கோணத்துல தான் இதை விசாரிக்க ஆரம்பிச்சோம்” என்றான் அவன்.

சர்வாச்சார்யா புருவங்கள் இடுங்கியது.

“சம்யுக்தா மேடம் ஒர்க் பண்ற கம்பெனிக்கு இன்வெஸ்ட் பண்ணியிருக்கிறது உங்க சின்ன மாமாவோட ஹோல்டிங் கம்பெனி தான். சோ ஆகாஷ் சாருக்கு எல்லாம் சுலபமா போயிடுச்சு” என்று முக்கிய பாயிண்டுக்கு வந்தான்.

“சம்யுக்தாவிற்கான டிராப்!” சர்வாச்சார்யா தலையை இடம், வலமாக அசைத்து கொண்டான்.

“எஸ் சார். பிளான் பண்ணி தான் பண்ணியிருக்காங்க” என்றான் எதிரில் இருந்தவன்.

‘நேரடியாக இறங்கியாகணும்!’

“ஓகே” என்பதோடு முடித்து கொண்டான் சர்வாச்சார்யா.

“குணா மேல எந்த கேசும் போட்டுட கூடாது. ஆளை பிடி மணி, சீக்கிரம்” என்று குருமூர்த்தி பரபரக்க,

“நான் சண்முகம்கிட்ட உதவி கேட்கிறேன்” என்றார் லிங்கம்.

“இல்லைங்கய்யா. நமக்கு தெரிஞ்சவங்க யாராவது இருந்தா பாருங்க” குருமூர்த்தி சொல்ல,

“பெங்களூர்ல நமக்கு கான்டெக்ட் அதிகம் இல்லை மூர்த்தி. சண்முகத்துக்கு அங்க சில தொழில் இருக்கு. அதனால தான் சொன்னேன், உனக்கு பிடிக்கலைன்னா வேண்டாம். நான் வேற ஆளை பார்க்கிறேன்” என்று போனை வைத்தார் லிங்கம்.

கற்பகம் பாட்டி எண்ணில் இருந்து விடாமல் அழைப்பு வரவும், குருமூர்த்தி எடுக்க, “குணா தம்பிகிட்ட பேசணும்பா. என்னமோ புள்ள காலையில இருந்து கூப்பிடவே இல்லை. வீட்டுக்கு போய்ட்டு கூப்பிடுறேன்னு சொன்னான். இங்க அவனோட அம்மா வேற புள்ளைகிட்ட பேசணும்ன்னு”

“அவனை ஏன் பெங்களூர் அனுப்பி வைச்சீங்க?” என்று கடுப்பாகி சத்தமிட்டார் குருமூர்த்தி.

“என்னாச்சுபா? ஏதும் பிரச்சனையா?” கற்பகம் பாட்டி உடனே போனுடன் தனியே வந்துவிட்டார்.

“ஆமா” என்ற குருமூர்த்தி விஷயத்தை சொல்லிவிட்டு, “அவனோட அம்மாகிட்ட நாளைக்கு பேசுவான்னு சொல்லிடுங்க. வேலையா அனுப்பி வைச்சிருக்கேன்னு எதாவது சொல்லுங்க” என்று வைத்துவிட்டார் குருமூர்த்தி.

ஒற்றை மகனுக்காக மட்டுமே உயிர் வாழும் ஜீவன் குணாவின் அம்மா பானுமதி! அவருக்கென தனிப்பட்ட வாழ்க்கை என்பதே கிடையாது. விடுமுறை எல்லாம் எடுக்க மாட்டார். உழைத்து கொண்டே இருப்பார்.

“இப்படி வேலை செஞ்சா உடம்பு என்னத்துக்கு ஆகிறது? நாளைக்கு வேலைக்கு வந்த உன்னை அவ்வளவு தான் பார்த்துக்கோ” என்று கற்பகம் பாட்டி மிரட்டி கூட பார்த்துவிட்டார்.

ஆனால் கேட்க மாட்டார். “என் மகன் கஷ்டப்பட்டா தாங்கி பிடிக்க அப்பனும், அண்ணனுமா இருக்காங்க. இல்லை அவனுக்கு கொடுக்க என்கிட்ட சொத்து தான் இருக்கா? ஒன்னும் கிடையாது. அவனுக்காக ஏதோ என்னால முடிஞ்சது இந்த நாலு காசை சேர்த்து வைக்கிறது மட்டும் தான். நீங்க வேணா சொன்னா நான் வீட்டுல எல்லாம் போய் முடங்கிட மாட்டேன். வேற எங்கேயாவது வேலைக்கு போவேன். என்ன போகட்டா?” என்று கேட்டு நிற்பார் பானுமதி.

குருமூர்த்தி பல முறை அவரைக்கண்டு வியந்திருக்கிறார். சில நேரமும் கோவமும் பட்டிருக்கிறார்.

“என் மகனை நாலு போட்டு ஓரிடத்தில உட்கார வைக்க மாட்டிங்களா? எதுக்கு அவன் தறிகெட்டு ஆடிட்டு இருக்கான், நீங்களும் அவனை உட்டுட்டு வேடிக்கை பார்க்கிறீங்க? ஏன் உங்களுக்கு அடிதடி செய்ய தேவைப்படுறானா என் மகன்?” என்று நேரடியாக குருமூர்த்தியிடம் கேட்டுவைப்பார் பானுமதி.

“என்னமா பேசுற நீ? அண்ணன்கிட்ட பேசும் போது பார்த்து பேசு” என்று மணி எச்சரிக்க,

“எனக்கும் அவர் அண்ணனா இருக்க போய்த்தான் கேட்டுட்டு நிக்கிறேன். என் மகன் பத்திரமா இருக்கணும், பொறுப்போட இருக்கணும்ன்னு தான் உங்ககிட்ட வேலைக்கு சேர்த்து விட்டேன். ஆனா அவன் இன்னமும் அப்படியே தானே இருக்கான். நேத்து கூட எங்கேயோ சண்டை போட்டு காயத்தோட வீட்டுக்கு வரான். அப்புறம் நான் கேட்க மாட்டேனா?” என்று கோபத்துடன் நிற்பார்.

“நான் அவன்கிட்ட பேசுறேன்” என்பதோடு குருமூர்த்தி அவரிடம் முடித்து கொள்பவர், குணாவை வரவைத்து சரியாக கவனித்துவிடுவார்.

ஆனால் அவனோ, எவ்வளவு வேலை கொடுத்தாலும் அசலட்டாக செய்து முடித்து, “வேற வேலை இருக்கா முதலாளி” என்று நக்கலாக கேட்டல்லவா நிற்பான்.

குணா எல்லை கோட்டு தாண்டும் நேரம், அவனை அடிக்க கூட செய்திருக்கிறார். பலன்தான் இல்லை.

இதோ இப்போதும் சொல்லாமல் கொள்ளாமல் மகளுடன் கிளம்பி அவளின் அலுவலகம் சென்றவன், அடிதடியில் ஈடுபட்டு, காவல் நிலையத்தில் அமர்ந்திருக்கிறான்.

குருமூர்த்தி வேகமாக அந்த காவல் நிலையத்திற்கு சென்றவர், குணாவை தான் பரபரப்பாக தேடினார்.

அவன்மேல் மட்டும் கை வைச்சிருந்தா இவங்களை சும்மா விட மாட்டேன்!

“முதலாளி” என்றழைத்த குணாவை கண்ட,  குருமூர்த்தி அங்கேயே நின்றுவிட்டார்.

அவனுக்கு முன் பிரியாணி, பக்கத்தில் டேபிள் பேன், குடிக்க ஜுஸ் என்று சகல சவுகரியத்துடன் பிரியாணியை வெட்டி கொண்டிருந்தவன்,

“என்னை தேடியா வந்தீங்க? பரவாயில்லை. ஏதோ என்மேல கொஞ்சம் பாசம் இருக்கு” என்று உதட்டை பிதுக்கி கொண்டவன்,

“ஜுஸ் குடிக்கிறீங்களா?” என்று நீட்டினான்.