எல்லார் கவனமும் அங்கு செல்ல, “நாம இப்போ ஒரு பெரிய ப்ராஜெக்ட்ல இருக்கோம்ன்னு உங்க எல்லோருக்கும் தெரியும். பல கோடி அதில இன்வெஸ்ட் ஆகியிருக்கு. நம்பகதன்மை உள்ளவங்க, கிளீன் ரிக்கார்ட் உள்ளவங்க மட்டும் தான் அந்த ப்ரொஜெக்ட்ல இருக்கணும்ன்னு நான் நினைக்கிறேன்”
“துரதிஷ்டவசமா நாம அப்படி இல்லை. நம்ம டீம்ல ஒரு பிளாக் மார்க் இருக்கு. மர்டர் கேசுல ஜெயிலுக்கு போனவங்க போன பொண்ணு இங்க ஒர்க் பண்றாங்க” என்றவர் பார்வை சம்யுக்தா மேல் படிய, தொடர்ந்து மற்றவர்களும் மொத்தமாக திரும்பி சம்யுக்தாவை பார்த்தனர்.
சம்யுக்தா நன்றாக நிமிர்ந்து நின்றவள் கைகளை கட்டி கொண்டாள்.
“அதோட நைட்ல இருந்து, நம்ம நாட்டுல ஒரு பெரிய புயல் வீசிட்டு இருக்கு. அது சம்மந்தமா நாம எல்லாம் ஒரு வீடியோ கூட பார்த்தோம். அதுல இருக்கிறவங்களுக்கும், அந்த மாஸ்டர் மைண்ட் குற்றவாளிக்கும் என்ன சம்மந்தம்ன்னும் நமக்கு தெரியலை. சோ, உங்க எல்லோருக்கும் பேக்கிரவுண்ட் செக் நடத்தணும்ன்னு மேலிடத்தில கேட்டிருக்கேன்”
“கம்பெனி பாதுகாப்பையும், உங்களோட பாதுகாப்பை நான்தானே உறுதி செய்யணும். என்ன சொல்றீங்க?” என்று அவர் கேட்டு முடிக்க,
“கண்டிப்பா பரத், நல்ல முன்னெடுப்பு பரத், நாங்க ஒத்துழைப்பு கொடுக்கிறோம் பரத்” என்று ஹாலில் சில குரல்கள் அடுத்தடுத்து ஒலித்தது.
“சம்யுக்தா, நான் சொல்ற வரைக்கும் நீங்க இந்த ப்ரொஜெக்ட்ல எந்த வேலையும் செய்ய வேண்டாம். உங்க அக்சஸ் எல்லாம் திருப்பி எடுக்கிறோம்” என்று பரத் சொல்ல,
“எனக்கு காரணம் வேணும் பரத்” என்றாள் சம்யுக்தா.
“இவ்வளவு நேரம் சொன்னது எல்லாம் தான் காரணம்” பரத் சொல்ல,
“நம்ம கம்பெனில அப்படி எந்த லா’வும் இல்லை பரத். என்னோட ரிக்கார்ட் கிளீன்”
“கிளீனா? அந்த வீடியோல இருந்தது நீங்க இல்லைன்னு மட்டும் சொல்லிடாதீங்க”
“நான் ஏன் இல்லைன்னு சொல்ல போறேன்? அது நாந்தான். நைட்டே போலீஸ் என்கிட்ட ஸ்டேட்மென்ட் வாங்கிட்டாங்க. நாட்டையே ஏமாத்திட்டு இருந்த குற்றாவளியை பிடிக்க நானும் ஒரு சின்ன காரணமா இருந்திருக்கேன். நான் அதுல பெருமை தான் படுறேன்” சம்யுக்தா கணீரென சொன்னாள்.
“அது, அது நீ சொல்றது உண்மையா இல்லையான்னு வெரிஃபிகேஷனுக்கு அப்புறமா பார்த்துக்கலாம்”
“ஓஹ். போலீஸ், கோர்ட், ஜட்ஜ் கொடுக்கிற கிளீன் சர்டிபிகேட் வேண்டாம். உங்க வெரிஃபிகேஷன் தனி டிபார்ட்மென்ட்!. அதுக்கு ஹெட் யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” சம்யுக்தாவிடம் நக்கலே.
“அது ரகசியம். சொல்ல முடியாது. நீ நான் சொல்றதை கேட்டு தான் ஆகணும்”
“கேட்க முடியாதுன்னு சொன்னா?”
“நான் உன்மேல ஆக்ஷன் எடுப்பேன்”
“நான் உங்கமேல கேஸ் பைல் பண்றேன்”
“எ, என்மேல, ஏன்? ஏன்?”
“உங்களை விசாரிக்க தான். நீங்க என்கிட்ட விளக்கம் கேட்டிருந்தா நான் நிச்சயம் கொடுத்திருப்பேன். ஆனா நீங்க என்னை குற்றவாளி மாதிரி ட்ரீட் பண்றீங்க. தீரஜ் கேஸ் நாட்டுக்கே முக்கியமான கேஸ். ஆனா நீங்க அதுல என்னை சம்மந்தப்படுத்தி பெரிய தப்பு பண்ணிட்டீங்க. யாருக்கு தெரியும் நீங்க தீரஜ் ஆளா கூட இருக்கலாம்”
“ஏய், என், என்ன பேசுற நீ?”
“தீரஜ் மாட்டிக்க நானும் ஒரு காரணமா இருந்திருக்கேன். சோ உங்களுக்கு என்மேல கோவம் இருக்கும் தானே?”
“இல்லை. இல்லை நீ ஏதேதோ பேசுற. உன் விஷயம் கண்டிப்பா மேலிடம் வரைக்கும் போகும். உன்மேல விசாரணை இருக்கும்”
“இருக்கட்டும். வைங்க. நான் ரெடி தான்” என்றாள் சம்யுக்தா.
பரத் அவளை கோவமாக பார்த்து செல்ல, ஹாலில் இருந்த அதிக பேர் இவளை ஏதோ குற்றவாளியாக தான் பார்த்தனர் ஒரு சிலரை தவிர.
“கொலைகாரனோட மகளுக்கு இந்தளவு கூட தைரியம் இல்லைன்னா தான் ஆச்சரியம்” எங்கிருந்தோ ஒரு குரல் சத்தமாக வந்தது.
“டேய் இவங்க எல்லாம் எல்லாத்துக்கும் துணிஞ்சவங்கடா”
“எல்லாத்துக்கும்ன்னா”
“கொலையில இருந்து எல்லாம் தான். யார் கண்டா, நாம கையை பிடிச்சு இழுத்தோம்ன்னு கூட கம்பளைண்ட் கொடுப்பா”
“சும்மா ஏன் கொடுக்கணும்? இழுத்து தான் பார்ப்போமே”
“டேய், டேய். அவங்க அப்பன் கொலைகாரன்டா பார்த்து பேசுங்க”
“அயோ. பயந்துட்டோம். போடா டேய் போடா. காசை தூக்கி போட்டா ஆயிரம் பேர் வருவானுங்க. இவளோட அப்பன் எல்லாம் ஒரு மேட்டரா? நான் நினைச்சா காலையில அவன் பொண. ஆஹ்” கீழே விழுந்து கிடந்தான்.
சம்யுக்தா அவர்கள் மூவர் முன்பு ஆக்ரோஷமாக நின்றிருந்தவள், “என்ன சொன்ன? என் அப்பாவையா? இப்போ சொல்லு, சொல்லுடா” என்று அவன் கையை மடக்கி இரண்டு வெட்டு வெட்டியதில், அவன் பொத்தென கீழே விழுந்துவிட்டான்.
“என் கைய இழுப்பியா? இழுடா” என்றவள் மற்றவனை காலில் தாக்கி மண்டியிட செய்தவள், அவன் விரல்களை திருப்பிய திருப்பலில்,
“ஹேய் என் கையை விடு, வலிக்குது. விடுடி. ஆஹ்” என்றவனின் விரல்களில் இருந்து சடசடவென சத்தம் வந்தது.
உடன் இருந்த மற்ற இருவரும் எப்போதோ பதுங்கிவிட்டார்கள்.
சம்யுக்தா அவளின் ஐடி கார்டை இழுத்து நடுஹாலில் விசிறி அடித்தவள், “என் அப்பா மர்டர் கேஸுக்காக தான் உள்ள போனார். என் அம்மாவை அசிங்கமா பேசினவனை அடிச்சார். அவன் அந்த அடி அத்தனைக்கும் தகுதியானவன் தான். இதை வைச்சு என் அப்பாவை யாராவது பேசினீங்க, நீங்க எனக்கு பதில் சொல்ல வேண்டி வரும். ஜாக்கிரதை” என்றவள் கண்கள் நேரடியாக பரத்தை எரித்தது.
நிச்சயம் யாரோ பின்னால் இருந்து இயக்கியிருக்கிறார்கள். பரத்தும் வந்த நாளில் இருந்து என்னை டார்கெட் தான் செய்து கொண்டிருந்தான். பேசிய இவர்களும் பரத்தின் அடிவருடிகள் தான்.
மற்ற சகஊழியர்கள் மேல் இவளுக்கு கோவம் இல்லை. எப்போதும் போல் வருத்தம் மட்டும் மிச்சம். இவளுக்கு இதுபோன்ற சூழ்நிலைகள் பழகி விட்டது தான். என்ன இடையில் இந்த பேச்சுக்கள் இல்லை. இப்போது புதிதாக தொடங்கி வைக்கபட்டிருக்கிறது.
சம்யுக்தா அவர்களுக்கான பதிலடி கொடுத்து விட்டாள் தான். ஆனால் பலவீனப்படும் மனதை என்ன செய்ய?
கார் அவளின் அலுவலகத்தில் நிற்க, “நான் பத்து நிமிஷத்துல வந்திடுவேன்” என்றபடி ஓட்டுனரை பார்த்தவள், குணாவை கண்டதும்,
“நீ எங்க இங்க?” என்று அதிர்ந்தாள்.
“எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு” என்றவன், வேகநடையில் உள்ளே நுழைந்துவிட்டான்.
சம்யுக்தா அவனுக்கு பின் வேகமாக சென்ற போதும், பரத்தின் வாய் உடைவதை தடுக்க முடியாமல் போய்விட்டது.
“குணா. என்ன பண்ற? அவரை விடு” சம்யுக்தா அவனை இழுக்க,
“யாருங்க மேடம் நீங்க? முதல்ல தள்ளி நில்லுங்க. இவர் என் தங்கச்சியை தப்பா பேசியிருக்கார்” என்ற குணாவின் கை இன்னும் ஜோராக பரத் மேல் இறங்கியது.
செக்கிரியூட்டிகள் ஓடி வந்து குணாவை தடுக்க முயல, “ஹேய் ஆளை கூட்டிட்டு வந்து அடிக்கிறியா?” என்று பரத்தின் ஆள் ஒருவன் சம்யுக்தாவிடம் எகிறி கொண்டிருந்தான்.
“இவன் மேல அவ்வளவு பாசமாடா உனக்கு? பொங்குற” என்ற குணா அவன் மூக்கையும் பதம் பார்க்க,
“டேய். இப்போ நீ நிறுத்த போறியா இல்லையா?” சம்யுக்தா கத்தினாள்.
குணாவின் எதிர்கால வாழ்க்கை இதனால் வீணாக அல்லவா போகும்.
“என்னமோ நேத்து நல்லவளாட்டம் எங்களை அடிச்ச? இப்போ இவன் யாரு? உன் ஆளா? பாய்ஞ்சிட்டு வரான்”
“டேய் நாதாரி யார்கிட்ட என்ன பேசிட்டு இருக்க?” குணா அவனை அடித்த அடியில் தலையே தொங்கிவிட்டது.
“ஆளா இருந்தா தான் பாய்ஞ்சிட்டு வரணுமா? ஏன் அக்கா, தங்கச்சின்னா உங்க மீசை எல்லாம் சுருங்கிடுமா?” குணா அடிக்க பாய,
குணாவை பிடித்திழுத்து தள்ளிவிட்ட சம்யுக்தா, “மூச். போதும். அமைதியா உட்காருர” என்று அவனை எச்சரித்தாள்.
குணா கோபத்துடன் முகம் திருப்ப, செக்கியூரிட்டிகள் அவனை நகர விடாமல் சுற்றி நின்று கொண்டனர்.
நரம்பன் மாதிரி தான் இருக்கான், என்ன துள்ளு துள்ளுறான்? அவர்கள் முணுமுணுக்க,
“இப்படி நின்னா எப்படி காத்து வரும். தள்ளி நில்லுங்க” என்று அவர்களிடம் பாய்ந்தான் குணா.
போலீஸ் வந்து குணாவை அழைத்து கொண்டு செல்ல, சம்யுக்தா தலை பிடித்து கொண்டாள்.
“இதுக்கெல்லாம் காரணம் ஆகாஷ். உங்க சின்ன மாமா பையன்” உளவாளி சொல்ல,