“உங்களை பார்த்துக்க வேண்டிய பொறுப்பை என்கிட்ட கொடுத்திட்டு போயிருக்காங்க. சட்டுன்னு நீங்க கிளம்பினா, சர்வா எப்படி எடுத்துப்பான் தெரியலை. நான் போன்ல அவன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு”
“அவரை தொந்தரவு பண்ணாதீங்க. ரொம்ப முக்கியமான வேலை இல்லாம இந்த நேரத்துக்கு அவங்க வெளியே கிளம்பி போயிருக்க மாட்டாங்க” என்றார் குருமூர்த்தி.
“உண்மை தான். தீரஜ்க்கு எதிரா டெல்லில கேஸ் பைல் பண்ண ஆளை, தீரஜோட கட்டுப்பாட்டுக்கு எடுக்க பார்க்கிறாங்க. போன் வரவும் சர்வா கிளம்பின வேகத்துக்கு, பயந்து போய் அவன் அப்பாவும் அவனோடவே போயிருக்கார்” என்றார் வசுந்தரா.
“இவ்வளவு சீக்கிரம் அதை அவன்கிட்ட எதிர்பார்க்க கூடாது. கடைசி மூச்சு வரை போராடுற குணம் அவனோடது” வசுந்தரா சொன்னார்.
“உங்க மகனுக்கும் அது தெரிஞ்சிருக்கு. அவன் தப்பிக்க விட மாட்டார். நிறைய வேலை பார்த்துட்டு தான் அவனை கைது பண்ண வைச்சிருக்கார்” என்றார் குருமூர்த்தி.
குருமூர்த்தியும் தீரஜ் கைது நடந்ததில் இருந்து சர்வாச்சார்யாவின் நடவடிக்கைகளை உடன் இருந்து கவனித்திருக்காரே!
“அதென்னமோ உண்மை தான். நிறையவே உழைச்சிருக்கான். ஜெயிப்பான்னு நம்புறேன்” வசுந்தரா சொல்ல,
“கண்டிப்பா ஜெயிப்பார். நான் கிளம்புறேன்” என்றார் குருமூர்த்தி.
வசுந்தரா, “ஒரு முறை மட்டும் போன் பண்ணி பார்க்கிறேன், என் மகன் எடுத்தா சொல்லிடலாம்” என்று அழைத்தார்.
சர்வாச்சார்யா எடுக்கவில்லை எனவும், “பிளைட் டிக்கெட் நீங்க ஏர்போர்ட் போறதுக்குள்ள வந்திடும். உங்களோட எங்க ஆள் ஒருத்தர் வருவார்” என்று வசுந்தரா சொல்ல,
“எனக்கெதுக்கு? என்னோட எல்லாம் யாரும் வேண்டாம்” குருமூர்த்தி மறுக்க,
“உங்க வீரத்தை பத்தி எனக்கும் தெரியும் குருமூர்த்தி. ஒரு காலத்துல நீங்க அடிச்ச ஆளுங்களை நான் தினம், தினம் பார்த்திருக்கேன்” என்று வசுந்தரா பழைய நினைவில் முகத்தை சுருக்க,
“அது, அது அப்போ, பொழைப்புக்காக” குருமூர்த்தி எங்கோ பார்த்தார்.
“ஜட்ஜ்ஜையே திமிரா பார்த்தவர் தைரியத்தை நான் குறைச்சு எடை போடமாட்டேன். இது என்னோட நிம்மதிக்காக. என்ன அனுப்பவா?”
“நான் கூட்டிட்டு போறேன்” குருமூர்த்தி சொன்னார்.
‘கூட்டிட்டு போறாரா? சரிதான்’
வசுந்தரா போன் எடுத்து அழைக்கவும் வாட்ட சாட்டமாக ஒருவர் வந்தார்.
குருமூர்த்தி அவரை மேலும், கீழும் பார்க்க, வசுந்த்ரா அவரிடம் பேசிவிட்டு, காரை எடுத்து வரசொன்னவர்,
“என்னவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க” என்று குருமூர்த்தியிடம் சொல்ல,
“எதுவும் இல்லை. வரேன்” என்று குருமூர்த்தி கிளம்பினார்.
சம்யுக்தா தந்தை வந்து நிற்கவும், “ப்பா” என்றாள் கொஞ்சம் கோவத்துடனே!
“என்னாச்சுன்னு முதல்ல சொல்லு” தந்தை கண்டிப்புடன் கேட்க,
விடமாட்டார்! மகளுக்கு புரிந்து தான் இருந்தது. “நாளைக்கு நான் பேப்பர் போட்டுடுறேன். நாம சென்னைக்கு போலாம்ப்பா” என்றாள்.
“விஷயத்துக்கு வா”
“ப்பா, ப்ளீஸ். எனக்கு எதுவும் சொல்ல வேணாம்”
“சம்யுக்தா”
“எனக்கு சொல்ல விருப்பம் இல்லைப்பா”
“எப்படி தெரிஞ்சுக்கணும்ன்னு எனக்கு தெரியும்”
“ஏன்ப்பா. சொன்னாதான் ஆச்சா? எனக்குன்னு ப்ரைவஸி எதுவும் இருக்க கூடாதா? எல்லாம் உங்களுக்கு சொல்லணும். நான் சொல்லலைன்னா ஆள் வைச்சு தெரிஞ்சிக்கிறது. ஏன்ப்பா? ஏன் இப்படி? எதுக்காக என்னை போட்டு இப்படி பாடா படுத்துறீங்க? நீங்க இப்படி இருக்கிறதால தான், நான் அந்த ரகசிய ரூம்க்கு போற வழியை கூட உங்ககிட்ட சொல்லலை” மகள் படபடவென வெடித்தாள்.
“நம்ம வாழ்க்கை எல்லார் வாழ்க்கை மாதிரி இல்லை. சில விஷயங்களை நான் செஞ்சு தான் ஆகணும். நான் உன்னை கண்காணிக்கலை. உன் பாதுகாப்பை தான் பார்க்கிறேன்” குருமூர்த்தி சொல்ல,
“தெரியும். உயிர் வாழணும். அது எப்படின்னு எல்லாம் முக்கியம் இல்லை. வாழ்ந்துடணும். அவ்வளவு தான். எனக்கும் இது தெரியும்ப்பா” சம்யுக்தாவிடம் எக்கச்சக்க வெறுப்பு.
“உயிர் தான் முக்கியம்ன்னு யார் சொன்னது? இதென்ன பேச்சு? ஏன் நான் உன்னை சந்தோஷமா வைச்சுக்கலையா?” தந்தைக்கு எங்கெங்கோ ஊசி இறங்கி கொண்டிருந்தது.
“இது உங்களால இல்லை. வேறப்பா. ப்ளீஸ். இதை இதோட விட்டுடுங்க” மகள் அவளின் அறைக்கு சென்று கதவடைத்து கொண்டாள்.
குருமூர்த்தியால் அடியெடுத்து வைத்து அவரின் அறைக்கு செல்ல முடியவில்லை.
மகளின் பேச்சில் இருக்கும் வெறுப்பு, கோவம் தந்தையை நன்றாகவே பதம் பார்த்தது.
அப்படியென்ன கோவம் என் மகளுக்கு? தந்தைக்கு புரியவில்லை.
அவருக்கு தெரிந்து இதுதான் முதல்முறை. முன்பும் கோவப்பட்டிருக்கிறாள் தான். ஆனால் இந்த கோவத்தில் என்னமோ சரியில்லை.
போன் எடுத்து பேச வேண்டும், சொல்ல வேண்டும், ஆனால் சில நிமிடங்கள் அப்படியே தான் நின்றார்.
காலையில், “முதலாளி” என்றபடி குணா வந்து நின்றான்.
“நீ என்னடா இங்க?” குருமூர்த்தி கேட்க,
“பெங்களூர் சுத்தி பார்த்துட்டு போலாம்ன்னு வந்தேன்” என்ற குணா,
“எங்க உங்க சமஸ்தானத்து ராணி இன்னும் ரூமை விட்டு வெளியே வரலையா?” என்று சம்யுக்தா அறைக்கதவை காட்டி கேட்டான்.
“க்கும். நான் குளிச்சுட்டு வரேன்” என்றபடி விருந்தினர் அறைக்கு சென்றான் குணா.
“சாப்பிடலாமா முதலாளி. எனக்கு பசிக்குது” என்று குணா நன்றாக அலங்கரித்து கொண்டு வர,
“என் பொண்ணு வந்ததுக்கு அப்புறம் நான் சாப்பிட்டுகிறேன். நீ சாப்பிடு போ” என்றார் குருமூர்த்தி.
“அப்புறம் சாப்பிட எதுவும் இல்லைன்னா என்னை கேட்க கூடாது” என்ற மிரட்டலுடன் உணவுண்ண அமர்ந்தான் குணா.
மேலும் அரை மணி நேரம் சென்றே சம்யுக்தா அறைக்கதவு திறக்கப்பட்டது. “ப்பா. ஸாரி. கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. வாங்க சாப்பிடலாம்” என்று தந்தையை அழைத்தவள், அவருக்கு பரிமாறிவிட்டு தானும் உண்டாள்.
மகளின் வீக்கம் கண்ட முகம், தந்தையின் தொண்டையை குத்தியது.
நன்றாகவே அழுதிருக்கிறாள்! “ப்பா. நான் ஆபிஸ் போய்ட்டு வந்துடுறேன். நாம மதியமே கிளம்பிடலாம்” என்றவள், இரண்டு இட்லியுடன் எழுந்து கொண்டாள்.
“நானும் கூட வரேன்” அதற்காகவே காத்திருந்த குருமூர்த்தி, இறங்காத உணவை வைத்துவிட்டு தானும் எழுந்து கொண்டார்.
“இல்லைப்பா. நீங்க வர கூடாது” சம்யுக்தாவிடம் முழுதான மறுப்பு.
“சம்யுக்தா” தந்தை கோவம் காட்ட முயன்றார்.
“நீங்க வந்தா நான் போக மாட்டேன்”
“புது புது பழக்கம் பழகுற சம்யுக்தா? என்கிட்ட பிடிவாதம் பிடிப்பியா நீ?”
“என்னை கண்ட்ரோல் பண்ண பார்க்கிறியா நீ?” தந்தை எகிறினார்.
“அப்போ நீங்க இத்தனை வருஷமா என்னை கண்ட்ரோல் தான் பண்ணிட்டு இருந்தீங்களா என்ன?”
“சம்யுக்தா”
“இல்லை தானே? இதுவும் அப்படி தான். நீங்க அங்க வர கூடாது. இது என்மேல சத்தியம்”
“உன்மேல சத்தியமா? சம்யுக்தா தப்பு பண்ற நீ?” குருமூர்த்தி அதிருப்தி கொண்டார்.
“ஸாரிப்பா” சம்யுக்தா மடமடவென கதவை திறந்து கொண்டு வெளியேறினாள்.
அவள் காரில் ஏற, கார் அவளின் அலுவலகம் சென்றது.
இமையோரம் வழியும் நீர் அவளின் வேதனையை சொன்னது.
“ஸாரிப்பா” சம்யுக்தா உதடுகள் அடிக்கடி முணுமுணுத்தது.
எதிர்பார்க்கா, விரும்பத்தகாத பலது அவளை சுற்றி நடந்து கொண்டிருக்கிறது.
தீரஜ் ஆட்கள் வந்து சென்றதுக்கு மறுநாள் சம்யுக்தா வழக்கம் போல அலுவலகம் வந்தாள்.
தீரஜ் தம்பி அவளை மிரட்டும் வீடியோ, நாடு முழுதும் பரவியிருக்க,”வீடியோல உங்க முகம் தெளிவா தெரியாது மேடம். நெருக்கமான சில பேர் கண்டுபிடுக்கலாம். மற்றபடி பிரச்சனையில்லை” என்று சர்வாச்சார்யாவின் பாதுகாப்பு அதிகாரி சொன்னார்.
சம்யுக்தா அதற்காக அறைக்குள் அடைந்திருக்க முடியாது. முக்கியமான ப்ராஜெக்ட் ஒன்றில் அவள் இப்போது இருக்கிறாள். எனவே, மறுநாள் எப்போதும் போல் சரியான நேரத்திற்கு அலுவலகம் வந்தவளை பலரது கண்கள் விடாமல் தொடர்ந்தது.
வீடியோல இருக்கிறது நான்தான்னு கெஸ் பண்ணியிருப்பாங்களா? சம்யுக்தாவிற்குள் கேள்வி.
நாந்தான்னு தெரிஞ்சா மட்டும் இப்போ என்ன? சம்யுக்தா வேலையில் மூழ்க முயன்றாள்.
ஆனால் ரகசிய பேச்சுகளும், பார்வைகளும் பெண்ணை தொந்தரவு செய்ய ஆரம்பித்தது.
“சம்யு. நீ லீவ் எடுத்துட்டு வீட்டுக்கு போ” என்றாள் அலுவலகத்தில் அவளின் தோழியான அனுஷா.
“அனு. என்ன நடக்குது இங்க?” சம்யுக்தா கேட்க,
“ப்ளீஸ். நீ வீட்டுக்கு கிளம்பு” என்றாள் அனுஷா.
“ஹேய். நான் இன்னைக்கு இந்த வேலையை முடிச்சாகணும்”
“வேலையாவது, *யிராவது. போன்னு சொன்னா போக மாட்டியா?” அனுவிடம் கோவம்.
“அனு. முதல்ல எனக்கு என்ன விஷயம்ன்னு சொல்லு, அப்படி எல்லாம் போக முடியாது” என்றாள் சம்யுக்தா அழுத்தமாக.