“இப்போதான் நான் உங்க கண்ணுக்கு தெரியுறானா என்ன?” இவன் கைகளை கட்டி கொண்டு கேட்டான்.
“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம, இவ்வளவு நேரம் மூஞ்சை திருப்பிகிட்டு இருந்தீங்க, இப்போ மட்டும் என்ன?”
“பதில் எல்லாம் சொல்ல முடியாது போடா”
“அப்போ நீங்களும் என்னை கேள்வி கேட்காதீங்க, போங்க”
“கேடி நீ எதுக்கோ அடிபோடுற, நான் சிக்க மாட்டேன்”
“அதையும் பார்த்துடுவோம். உங்க மகளை கொஞ்சி முடிச்சாச்சுன்னா, போய் தூங்குங்க போங்க”
“எனக்கு தூக்கம் வரலை” என்று அங்கேயே அமர்ந்து கொண்டார் குருமூர்த்தி.
அந்த இரவு முழுதும் யாரும் தூங்கவில்லை.
தீரஜ்க்கு மருத்துவமனையில் வைத்து வைத்தியம் நடந்து கொண்டிருந்தது.
“ஹாஸ்பிடல விட்டு அவன் தப்பிக்க நினைச்சாலும் நினைப்பான். செக்கியூரிட்டி டைட் பண்ணுங்க. போலீஸ்ல அவன் ஆளுங்க நிறைய பேர் இருப்பாங்க” என்றான் சர்வாச்சார்யா.
மருத்துவமனையில் இருந்த தீரஜ் மூளை பரபரவென இயங்கி கொண்டிருந்தது. அவனுக்கான லீகல் டீமை வரவைத்து, ஆலோசனை நடத்தினான்.
“நான் ஒருநாள் கூட ஸ்டேஷன்ல இருக்க மாட்டேன். வெளியே வந்தாகணும். அதுக்கு என்ன வழியோ அதை பாருங்க முதல்ல” என்று அவர்களை சத்தமிட்டவன்,
“என் பேர் எந்தளவு டேமேஜ் ஆகியிருக்கு. அதை எப்படி நிறுத்தணும்?” என்று ஆலோசனை நடத்தியவன்,
அவனுக்கு பயன்படும் பெரிய ஆட்களையும் தொடர்பு கொண்டவன், “கேஸ் பைல் பண்ணியிருக்காங்க. என் பேர்ல ஒரு FIR கூட இருக்க கூடாது” என்றான்.
“சார். லைவ் வீடியோவை எல்லோரும் பார்த்திருக்காங்க. உங்க தம்பி அவர் வாயாலே கொன்னவங்க லிஸ்டை கொடுத்தவர், உங்க பேரையும் சொல்லியிருக்கார். சில ஆதாரமும் உங்களுக்கு எதிரா ரொம்ப ஸ்ட்ராங்கா கிடைச்சிருக்கு. FIR பைல் பண்ணித்தான் ஆகணும்ன்ற சூழ்நிலை உருவாகிடுச்சு. நாங்க இப்போ எதுவும் பண்ண முடியாது சார். கோர்ட்டுக்கு தான் போகணும்” என்றார் அந்த மனிதர்.
மறுநாளே தீரஜ் லடாக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டான். மீடியாக்கள், மக்கள் கோர்ட் முன் குவிந்திருந்தார்கள்.
ஹை ப்ரொபைல் கேஸ்! தீரஜை உள்ளே அழைத்து செல்ல போராட வேண்டியிருந்தது.
அவன் சரியாக நீதிபதி முன் நின்ற நேரம், வீடியோ ஒன்று வெளிவந்தது.
கெமிக்கல் பேக்டரியில், அவன் செய்த ஒற்றை குற்றம் அடங்கிய வீடியோ.
“மை லார்ட். இவர் ரொம்ப ஆபத்தான ஆளா இருக்கிறார். இவரை வெளியே விட்டா, பல உண்மைகள் வெளிவராமலே போயிடும். சாட்சிகளையும் கலைச்சு, இவருக்கு எதிரா இருக்கிற ஆதாரங்களை அழிச்சிடுவார். பெங்களூரில் நாம பார்த்த லைவ் வீடியோவே அதுக்கு சாட்சி” என்று அரசு வழக்கறிஞர் வாதாட,
தீரஜ் வழக்கறிஞர்களோ, “என் கிளையண்ட் அப்படி எதுவும் செய்ய மாட்டார், சட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார். நம்ம சமுதாயத்துல அவர் பெரிய புள்ளி. அவர் பெயரை கெடுக்க தான் வதந்தி பரவிட்டு இருக்கு” என்று பேச,
“என்ன பேசுறீங்க நீங்க? சாட்சிகள் தெளிவா இருந்தும், வதந்தின்னு சொல்றீங்க?” என்று நீதிபதி கோவப்பட,
“உடனே தீரஜ் காயத்தை காரணம் காட்டினார்” லாயர்.
“அவரை அரெஸ்ட் பண்ணும் போது எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கலை. அதனால தான்” என்று காவலர்கள் தரப்பில் சொல்லப்பட்டது.
“அவருக்கு வைத்தியம் பார்த்தாச்சு. அவர் நல்லா இருக்கார். டாக்டர் சர்டிபிகேட்” என்று அரசு வழக்கறிஞர் கொடுக்க, அந்த காரணமும் எடுபடாமல் போனது.
நீதிபதி ஜாமீனை மறுத்துவிட்டார். பதினைந்து நாட்கள் காவலில் வைக்கப்பட்டான் தீரஜ்.
காவல் நிலையத்தில், கம்பிகளுக்கு பின் அமர்ந்திருந்த தீரஜ் முன் நின்றான் சர்வாச்சார்யா.
“சரியான இடத்துல இருக்கீங்க தீரஜ்” என்றான் நாயகன்.
“சீக்கிரம் வெளியே வந்திடுவேன்” தீரஜ் சொல்ல,
“அப்புறம் நான் எதுக்கு இருக்கேன்? வர மாட்டீங்க” என்றான் நாயகன்.
“நான் ஒரு புதைகுழி மாதிரி. யார், யாரை உள்ள இழுத்தா நான் வெளியே வருவேன்னு எனக்கு நல்லா தெரியும்” தீரஜ் ஆணவத்துடன் சொல்ல,
“பவர் சென்டர். ம்ஹ்ம். ஜாமீன் ஏன் கிடைக்கலை? இழுக்க முடியலையா?” என்று கேட்டான் சர்வாச்சார்யா.
“டேய். இது நிரந்தரம் இல்லை. நான் எல்லாத்தையும் உடைச்சுட்டு வெளியே வருவேன்”
“வாய்ப்பில்லை” என்றான் நாயகன்.
“சார்” என்று ஒருவன் ஓடிவந்து,
“உங்களுக்கு எதிரா டெல்லி சுப்ரீம் கோர்ட்ல கேஸ் பைல் ஆகியிருக்கு” என்று பதட்டத்துடன் சொல்ல, தீரஜ் அதிர்ந்து போனான்.
“சுப்ரீம் கோர்ட்ல கேஸா? இல்லை. கூடாது. தப்பா போயிடும். யார்? யார் கேஸ் கொடுத்தது. வாபஸ் வாங்க வை. உடனே” என்று உதவியாளரின் சட்டையை பிடித்திழுத்து கத்தினான் தீரஜ்.
“கேஸ் மட்டும் சொன்னீங்க ஜட்ஜ் யாருன்னு சொல்லுங்க” சர்வாச்சார்யா புன்னகையுடன் இடையிட,
“என் அம்மாவை வைச்சே உன்னை முடிச்சு காட்டுறேன்” உறுதியாக, இறுதியாக சொன்னான் சர்வாச்சார்யா.
தீரஜ் தலையெழுத்து நிச்சயம் மாறும். மாற்றி காட்டுவான் நம் நாயகன்.
“நாங்க டெல்லி போறோம். நீங்க உங்க ரைட் கன்டினியூ பண்ணுங்க” என்று கேப்டனுக்கு கை கொடுத்தான் சர்வாச்சார்யா.
“நானும் அவங்களோட போக போறேன்” குருமூர்த்தி சொல்ல,
“இனி ரைட் போகவே முடியாதுன்னு நினைச்சிருந்தேன். ஆனா இப்போ நல்லபடியா எனக்கான டார்கெட்டை நான் ரீச் பண்ணிட்டேன். உங்க சப்போர்ட்டை நான் மறக்க மாட்டேன். சோ என்னாட ட்ரீட், இந்த ரைட்டுக்கான ஸ்பான்சர்ஷிப். என்ஜாய் பண்ணுங்க ப்ரெண்ட்ஸ்” என்று சர்வாச்சார்யா சொல்ல,
“ஹேய்” என்று எல்லாம் ஆர்ப்பரித்து அவனை அணைத்து கொண்டவர்கள்,
“சார். இனி எல்லா ரைடுக்கும் நீங்களும் எங்களோட வரணும்” என்றபடி குருமூர்த்தியையும் அணைத்து விடைபெற்றார்கள்.
“என்னை அவங்களோட போக விடு” குருமூர்த்தி சொல்ல,
“சார். ஏறுங்க” என்று காரை கொண்டு வந்து நிறுத்தினார்கள்.
“அதான் உன் வேலை முடிஞ்சு போச்சு இல்லை. நான் ஊருக்கு போறேன்” குருமூர்த்தி காரில் ஏறாமல் நிற்க,
அவரை வலுக்கட்டாயமாக ஏற்றிக்கொண்டு புறப்பட்டான் அடாவடி பார்ட்டி.
“டேய் இன்னொருமுறை என்கிட்ட இப்படி நடந்துகிட்ட கையை உடைச்சிடுவேன்” என்று மனிதர் கடுப்பாகி கத்த,
“அப்படித்தான் நடந்துப்பேன் போயா” என்றான் நல்வன்.
“போயா வா? டேய் என்ன?” என்று குருமூர்த்தி அவன் கையை பற்றி முறுக்க,
நாயகன் கையை திருப்பி அசால்ட்டாக அவர் பிடியில் இருந்து வெளியே வந்தவன், “எப்படி?” என்றான் மிதப்பாக.
“வயசு ஆகிடுச்சு. ஸ்ட்ரென்த் இல்லையா என்ன?” என்று அவரை சீண்ட,
“பாவம் பார்த்தேன் பாரு என்னை சொல்லணும். இப்போ வாடா?” என்று இருவரும் யாருக்கு வலு அதிகம் என்று ARM WRESTLING கில் இறங்கிவிட்டனர்.
இறுக்கைக்கு இடையில் இருக்கும் தடுப்பை டேபிளாக பயன்படுத்தி போட்டி போட, இருவரும் சமமாக தோத்து, சமமாக ஜெயித்தனர்.
போட்டியின் முடிவில் இருவர் முகத்திலும் புன்னகை மலர்ந்திருந்தது.
டெல்லியில் சிவப்பிரகாசம் மகன் காரை விட்டு இறங்கவும் ஓடிவந்து தழுவி கொண்டார்.
சில நிமிடங்கள் அவருக்கு பேச்சே வரவில்லை.
தந்தையாக அவருக்குள் பெருமித ஊற்று!
மகனை கட்டிப்பிடித்து சில நிமிடமே நின்றவர், “உங்களுக்கு இப்போவும் நன்றி சொல்லி முடிச்சிட முடியாது. ரொம்ப கடமைப்பட்டிருக்கேன்” என்று குருமூர்த்திக்கு கைகுவித்தார் சிவப்பிரகாசம்.
குருமூர்த்தி தலையசைக்க, சிவப்பிரகாசம் மகன் கைபிடித்து நெஞ்சை நிமிர்த்தி கொண்டு நடந்தார்.
வசுந்தரா வாசலிலே காத்திருந்தவர், குருமூர்த்தியை வரவேற்று, மகனை அணைத்து கொண்டார்.
“மாம்” என்ற மகனின் நெற்றியில் அழுத்தமான முத்தத்தை பதித்தார் வசுந்தரா.
இருவரையும் வீட்டிற்குள் வரவேற்று, குருமூர்த்தியை உபசரித்தவர்கள், மகனை விட்டு நகரவில்லை.
“ராஜா. ராஜா” என்று அவன் தோள்களை வருடியபடி, உச்சியை வருடியபடி ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள் வசுந்தரா தம்பதி.
இருவருக்கும் இடையில் ராஜாவாக அமர்ந்து, செல்லம் கொஞ்சி கொண்டிருந்தவனை குருமூர்த்தி புன்னகையுடன் பார்த்திருந்தார்.
என்னமோ அவருக்கே அந்த அன்பு கிடைப்பது போல் ஒரு நிறைவான புன்னகை.
குருமூர்த்தி ஓய்வெடுக்க அறைக்குள் வந்தவர், மகளை அழைத்தார்.
“ப்பா” என்று மகள் உடனே அழைப்பை ஏற்றாள். அலுவலகத்திற்கு செல்லவில்லை சம்யுக்தா.
“அப்பா. நாளைக்கு வந்திடுவேன்மா” என்றார் குருமூர்த்தி.
“அவசரம் இல்லைபா. நான் பத்திரமா இருக்கேன்” சம்யுக்தா சொன்னவள்,
“அப்பா. நான் வேலையை விட்டுடலாம்ன்னு இருக்கேன்” என்றாள்.
“என்னாச்சும்மா. யார் என்ன சொன்னா? எதாவது பிரச்சனை ஆகிடுச்சா? அப்பா இப்போவே கிளம்பிட்டேன். நான் வரேன், நாம பேசலாம்” குருமூர்த்தி உடனே ஜெர்கின் எல்லாம் எடுத்து மாட்ட ஆரம்பித்தார்.
“அப்பா. அப்பா. இல்லை. யாரும் எதுவும் சொல்லலை. எனக்கே வேலை பார்த்தது போதும்ன்னு தோணுது. அவ்வளவு தான்” என்றாள் சம்யுக்தா வேகமாக.
“சரி. நான் வீடியோ கால் வரேன் இரு” என்று மகளின் முகம் பார்த்தவர், அவளின் சிவந்த விழிகளை கண்டுகொண்டார்.
“சம்யுக்தா”
“இல். இல்லைபா. தனியா இருக்கவும் கொஞ்சம், இப்போ நான் ஓகே” என்றாள் மகள்.
ம்ஹூம். என் மகளிடம் எதுவோ சரியில்லை.
குருமூர்த்தி அதற்கு மேல் ஒரு நொடி கூட அங்கு நிற்கவில்லை.