“உண்மையா தான் சொல்றியா? நீ நல்லா பார்த்தியா? அவன் தானா?” என்று சிவப்பிரகாசம் திரும்ப, திரும்ப கேட்டு கொண்டே இருந்தார்.
“சார். தீரஜ் தான். அவனை தான் அரெஸ்ட் பண்ணியிருக்காங்க. நியூஸ் பார்த்துட்டு கூப்பிடுங்க. பேசணும்” என்று எதிர்முனை வைக்க,
“அண்ணா. சீக்கிரம் வாங்க, வாங்கண்ணா” அவரின் தங்கைகளும், சிவபிரகாசத்தின் அறைக்கதவை தட்டி கொண்டிருந்தார்கள்.
தொலைக்காட்சியை பார்த்த சிவப்பிரகாசத்தின் விழியோரம் கண்ணீர் கசிந்து போனது.
அவரின் ராஜா மகனுக்காக, சிவப்பிரகாசம் ஓடிய ஓட்டங்கள் அதிகம்!
என் மகனை துரத்துவது யாரென தெரியாமல் சில நாட்கள் ஓடினார். தெரிந்து அவனை எதிர்கொள்ள முடியாமல் சில நாட்கள் ஓடினார். இறுதியில் அவனிடம் தோற்று மகனை மீட்டிருந்தார்.
தந்தையாக கண்களை மூடி ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல முடியா நாட்கள் அவை!
இரவில் எத்தனையோ முறை படக், படக்கென அதிர்ந்து விழித்திருக்கிறார்.
அந்த நேரத்தில் மகனை கண்ணார கண்டு விட முடியாமல் தவித்து மறுகியும் இருக்கிறார்.
வசுந்தரா மட்டும், அவருக்கு துணை நிற்கவில்லை என்றால் என்னவாகி இருப்பாரோ?
மகனின் மேல் அதீத பாசம். அவரின் பலவீனம் மகன்! அவனுக்கு ஒன்றென்றால் அவரால் தாங்க முடிவதில்லை. அவரின் அந்த பாசம் தான் பலமுறை அவரை பதம் பார்த்திருக்கிறது.
சிவபிரகாசத்தை மட்டுமில்லை, அவரின் தந்தை பெரியவரையும் பேரனின் பாசம் தான் இழுத்து பிடித்தது.
‘என் பேரனை கண்ணார பார்க்காமல் நான் போக மாட்டேன்’ என்ற அவரின் வைராக்கியமோ என்னமோ, சர்வாச்சார்யாவை பார்த்த பின்னே, அவனுடன் சில நாட்களை கழித்த பின்னே பெரியவர், அவரின் வைராக்கியத்தை விட்டு மறைந்திருந்தார்.
“நம்மளை இந்தளவு ஆட்டி படைச்சவனை மட்டும் விட்டுடாத ராஜா!” சர்வாச்சார்யாவிடம் அவர் உதிர்த்த வார்த்தைகள் அவரின் கோவம்.
இன்று பேரன் அவர் கோவத்தை கரைத்திருக்கிறான். பெரியவரின் வார்த்தைகளை காப்பாற்றி இருக்கிறான்.
தீரஜ்ஜால் எத்தனையோ பேர் பாதிக்க பட்டிருக்கலாம். ஆனால் சர்வாச்சார்யாவினால் மட்டுமே அவன் இன்று வெளியுலகத்துக்கு அம்பலப்படுத்த பட்டிருக்கிறான்.
கடைக்கோடி கிராமம் வரைக்கும் தீரஜ் பேசும் பொருளாகிவிட்டான். பலரால் நம்பவே முடியவில்லை.
அந்த இரவிலும் அவனுக்கு ஆதரவாக பல ஆட்கள் சண்டையிட்டு கொண்டிருந்தார்கள்.
அவன் உருவாக்கி வைத்திருந்த மாயபிம்பம் அவ்வளவு வலுவாக இருந்தது.
பிஸ்னஸ் உலகமும், அரசியல் உலகமும் இரவு முழுதும் விழித்திருந்தது.
தீரஜ் பற்றி தெரிந்து சிலபேர், தெரியாமல் பலபேர் இருக்க, “நான் எங்கேயாவது அவனோட சம்மந்தப்பட்டிருக்கேனா? என்ற ஆராய்ச்சி ஒரு புறம் நடக்க, “நான் மாட்டிக்க கூடாது, என் பேர் வெளியே வந்துவிட கூடாது” என்ற ஆயத்த பணிகள் மறுபுறம் நடந்தது.
“நல்லா ஸ்ட்ராங்கான கேஸ் பைல் பண்ணுங்க. தீரஜ் வெளியவே வர கூடாது. லடாக் மட்டுமில்லை பெங்களூர், டெல்லியிலும் அவனுக்கு எதிரான கேஸ் பைல் ஆகணும். நாம முதலே பேசினது தான். நம்ம பிளான் படி எல்லாம் உடனுக்கு உடனே ஆக்டிவ் ஆகணும். பாஸ்ட்” சர்வாச்சார்யா ஆட்களை விரட்டி கொண்டிருந்தான்.
அவன் தங்கியிருக்கும் ஹோட்டல் அறை முழுதும் ஆட்களும், தொலைபேசி அழைப்புகளும் தான் நிறைந்திருந்தது.
யார், யாரோ உள்ளே வந்தார்கள், வாகனங்களை எடுத்து கொண்டு பறந்தார்கள், எங்கெங்கோ உத்தரவுகள் பறந்தது, பணம் கட்டு, கட்டாக வெளியே எடுக்கப்பட்டது.
நிமிடம் கூட அவன் அமைதியாக அமர்ந்திருக்கவில்லை. அறைக்குள் நடந்தான், கத்தினான், அமர்ந்தான். எதற்கோ, எங்கோ சென்று வந்தான். “இன்னும் முடியலையா உங்களது?” என்று அவனின் டீம் ஆட்களை சத்தமிட்டான்.
“சார்” என்ற அவர்களின் சமாதானங்களை அவன் காது கொடுத்து கேட்கவே தயாரில்லை.
“குழிக்குள் விழுந்தவனை, அங்கேயே முடிச்சாகணும். அவன் எழ கூடாது, வெளியே வர கூடாது. எல்லோருக்கும் புரிஞ்சுதா?” என்று கர்ஜித்தான் சர்வாச்சார்யா.
“இன்னைக்கு நேத்தைக்கு போட்ட திட்டம் இல்லை. வருஷங்களாக இந்த நாளுக்காக காத்திருந்து இருக்கிறோம். இப்போ போய் அது முடியலை, இது நடக்காதுன்னு சொல்லிட்டு இருக்கீங்க? இதுக்கா கைநீட்டி பணத்தை வாங்குனீங்க? வெட்கமா இல்லை உங்க எல்லோருக்கும்” வார்த்தைகளிலே ரத்தம் குடிக்க நின்றான் வேம்பையர்.
“சர்வா” என்ற வசுந்தரா குரலில் மகன் அவரையும் கோவமாக திரும்பி பார்த்தான்.
“செஞ்சாகணும் மாம். அவனை பத்தி நம்ம எல்லோருக்கும் தெரியும். நூல் அளவு கேப் கிடைச்சாலும் உள்ள நுழைஞ்சு வெளியே வந்திடுவான். அது மட்டும் நடக்க கூடாது” என்றான் சர்வாச்சார்யா.
சிவப்பிரகாசம் மகனை தேடி பயணத்தை மேற்கொண்டிருக்க, “மாம். அப்பாவை உங்ககிட்ட கூப்பிட்டுக்கோங்க. இங்க வேண்டாம்” என்றான் சர்வாச்சார்யா.
“என்னை பத்தி யாரும் பேச கூடாது மாம். சொல்லிடுங்க” முகம் திருப்பினான் ரோஷக்காரன்.
“அதே மாதிரி உங்களுக்கும், எனக்கும் இடையில இவரும் வரக்கூடாதுன்னு சொல்லிடுங்க” என்றார் குருமூர்த்தியும் கோபத்துடன்.
“சரி தான் மாம். உங்களுக்காக அவர் என்ன வேணும்ன்னாலும் செய்வார் இல்லை. லைக் உங்களுக்காக என்னை சேவ் பண்ணது. மறந்துட்டேன். எவ்வளவு பெரிய இடியட் நான்? இதையெல்லாம் நான் மறக்கலாமா?” தலையில் தட்டி கொண்டான் கோவக்காரன்.
“சர்வா. என்னாச்சு ராஜா? ஏன் இவ்வளவு கோவம்?”
“நீங்க அவரை எப்படியாவது கூப்பிட்டுக்கோங்க. எனக்கென்ன?” என்று அலட்சியமாக தோள்களை குலுக்கி நகர்ந்து கொண்டான் நல்லவன்.
“உங்களுக்குள்ள எதாவது?” என்று வசுந்தரா கேட்டு நிறுத்த,
“சின்ன கோவம் தான்” என்றார் குருமூர்த்தி.
“ம்ம். கோவத்துல சில நேரம் பாய்ஞ்சிட்டு வருவான். நிதானம் இருக்காது. அவன் எதாவது பேசியிருந்தா மனசுல வைச்சுக்காதீங்க” என்றார் வசுந்தரா.
வருடங்கள் கடந்தும் குருமூர்த்தியும், அவர் மகளும் சர்வாச்சார்யாவிற்காக துணை நிற்கிறார்களே!
ஆபத்து என்று தெரிந்தும் குருமூர்த்தி மகனுடன் கிளம்பி வருகிறார். சம்யுக்தா வழியனுப்பி வைக்கிறாள். அந்த ஆதாரத்தையும் இறுக்கி பிடிக்கிறாள்!
நான் அவர்களுக்கு அப்படி ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை. ஆனாலும் குருமூர்த்தி உடன் இருக்கும் நம்பிக்கையில் தானே, சிவப்பிரகாசம் தம்பதி நிம்மதியாக இருந்தார்கள்.
வசுந்தரா முகம் தெளியாமல் இருக்க, “அவர் கொஞ்சம் என்னை மாதிரி. எனக்கு ஒரு மகன் இருந்திருந்தா இவரை மாதிரி தான் என்கிட்ட வீம்பு புடிச்சுட்டு சுத்திட்டு இருந்திருப்பார்” மெலிதான புன்னகையுடன் சொன்னார் குருமூர்த்தி.
“ஹ்ம். இதை நான் அக்சப்ட் பண்ணிக்கிறேன். நீங்க இரண்டு பேருமே வீம்பு பிடிச்சவங்க தான்” வசுந்தரா சொல்ல,
“உங்க மகன் அளவு நான் வீம்பு கிடையாது” முகம் சுருக்கினார் மனிதர்.
“ரொம்ப பண்றானோ?”
“ரொம்ப, ரொம்ப” என்றார் குருமூர்த்தி.
வசுந்தரா பெரிதாக சிரித்துவிட, சர்வாச்சார்யா இவர்களின் புன்னகையில், கடுகடுவென நின்றவன், “மாம். உங்களுக்கு வேலை இருக்கு தானே. அதை போய் பாருங்க” என்றான்.
“நான் தூங்க போறேன் ராஜா. குட் நைட்” என்று மகனுக்கு சொன்னவர், “உங்களுக்கும் குட் நைட் குருமூர். க்கும்” ராஜா மகனின் புருவ சுருக்கலில், எப்படி கூப்பிட என்று திணறி, “குட் நைட்” என்றதுடன் முடித்து கொண்டார் வசுந்தரா.
“அவங்களை ரொம்ப மிரட்டுற நீ?” குருமூர்த்தி அவரின் கோவத்தை விட்டு, நல்லவனிடம் நேருக்கு நேர் கேட்டார்.
வசுந்தரா என்பவர் குருமூர்த்தியின் எல்லா நல்லது, கெட்டதிலும் உடன் இருந்திருக்கிறார். இத்தனைக்கும் குருமூர்த்தியை அவருக்கு பிடிக்காது.
ஆனாலும் வசுந்தரா சம்மந்தப்பட்ட சில நிகழ்வுகளை குருமூர்த்தியால் மறக்க முடியாது.
அவரின் பதவியை முன்னிட்டு இல்லை, வசுந்தரா என்பவர் மீதே குருமூர்த்திக்கு பெரிதான மதிப்பு, மரியாதை உண்டு.
அவரை நம் நாயகன் நடத்தும் பாங்கு மனிதருக்கு பிடிக்கவில்லை.