துப்பாக்கி சத்தம் கேட்டது போல் சர்வாச்சார்யா உணர்ந்தான். கோகுலுக்கு பின் இவன் வண்டியை நிறுத்த. ஆட்கள் சிலர் ஒரு காரை சுற்றி நின்றிருந்தனர்.

“ஏய். என்னடா பண்றீங்க?” என்று கோகுல் பைக்கை விட்டு அவர்களிடம் போக,

முகமூடி அணிந்து முகத்தை மூடியிருந்தவர்கள், வேறு மொழியில் கத்தியடி இவர்களை நெருங்க, காருக்குள் ஒரு குடும்பமே உயிருக்கு போராடி கொண்டிருந்தது.

“யார் நீங்க? எங்கிருந்து வரீங்க? ரைடர்ஸா நீங்க?” என்று டார்ச் முகத்தில் அடித்து, கோகுலை பிடித்து வைத்து கேள்வி கேட்க, அவன் திமிறியபடி அவர்களிடம் கத்தி கொண்டிருந்தான்.

கோகுலுக்கு அடி ஒன்று விழுக, ஏய் என்று பாயச்சென்ற சர்வாச்சார்யாவை நான்கு ஆட்கள் பிடித்து கொண்டார்கள்.

கோகுலிடம் இருந்து கேள்விக்கான பதிலை வாங்கி கொண்டவர்கள், “இங்க எதையும் நீங்க பார்க்கலை. புரியுது தானே?” என்று வலுவாக எச்சரித்து சென்றார்கள்.

அதன் பின் அந்த குடும்பத்திடம் ஓடி, அவர்களை காப்பாற்ற முயற்சி செய்தார்கள்.

நெட் ஒர்க் கிடைக்காத காரணத்தினால, போன் செய்ய முடியாது. அந்த குடும்பத்தின் தலைவன் மட்டும் உயிருக்கு போராட,

“மச்சான். போடா, சீக்கிரம் போய் யாரையாவது கூட்டிட்டு வா. போ” என்று காரில் இருந்து அடிபட்டவனை விடுவிக்க போராடியபடி சொன்னான் கோகுல்.

“டேய். உன்னை தனியா விட்டு போக சொல்றியா? இவரை மட்டும் வெளியே எடுத்து, ஹாஸ்பிடல் கூட்டிட்டு போலாம்” என்ற சர்வாச்சார்யா கார் கதவை திறக்க போராடினான்.

“இல்லை மச்சான். அந்த பாப்பா விரல் அசையுது. போடா. போ சீக்கிரம்” என்று கோகுல் கத்தி, சர்வாச்சார்யாவை துரத்தினான்.

உதவி இல்லாமல் காரை திறக்க முடியாது என்று புரிந்து கொண்ட சர்வாச்சார்யா, பைக்கை எடுத்து கொண்டு ஓட, பலன் இல்லை.

அவன் திரும்பி வந்த நேரம். கார் பள்ளத்தாக்கில் விழுந்திருக்க, கோகுல் பித்து பிடித்தவன் போல் அமர்ந்திருந்தான்.

யாரோ இருவர் வந்து கோகுலை தாக்கி, அந்த காரை பள்ளத்தாக்கில் உருட்டி விட்டிருந்தார்கள்.

சர்வாச்சார்யா போராடி தான், அவர்களை கைது செய்ய வைத்திருந்தான்.

கோகுல், சர்வாச்சார்யா வாக்கு மூலம் எல்லாம் அங்கு தேவைப்பட்டிருக்கவில்லை.

“நாங்க சொல்றதை கேட்க மாட்டிங்களா? அது ஆக்சிடென்ட் இல்லை. தீரஜ் தான் இதுக்கு காரணம்” என்று கோகுல் காவல் நிலையத்தில் வைத்து கத்தியிருந்தான்.

கோகுலை தனியே இழுத்து சென்று, “நீ தான் அவங்களை இடிச்சு கீழே தள்ளிவிட்டன்னு கேஸ் பைல் பண்ணவா?” என்று அவனை மிரட்டினார் காவலர் ஒருவர்.

சர்வாச்சார்யா தன் தந்தைக்கு அழைத்து பேசி, அவரை நெறுக்கிய பின்னே, அந்த ஆட்களை கைது செய்தனர்.

அன்று மாலை இவர்களை சந்திக்க வந்தான் தீரஜ். “”நீங்க காப்பாத்த போராடினவன்  சொன்னானா என் பேரை? வேறென்ன சொன்னான்? எதையாவது உங்ககிட்ட கொடுத்தானா?” என்று இவர்கள் ஹோட்டல் அறையை தலைகீழாக புரட்டி சோதனை செய்தனர்.

எதுவும் கிடைக்கவில்லை. “சிவப்பிரகாசம் மகனா நீ? அரெஸ்ட் பண்ண வைச்சுட்ட இல்லை. இதோட நீ ஊருக்கு கிளம்பி போயிருக்கணும். இனி ஒருதரம் உன் கால் இந்த மண்ணுல பட கூடாது. திரும்பி பார்க்காம போ” என்ற தீரஜ் எச்சரிக்கை, இன்றும் சர்வாச்சார்யா காதில் ஒலித்தது.

“அவனை விட கூடாது” என்றான் சர்வாச்சார்யா.

குருமூர்த்தி ஆறுதலாக அவன் தோளை தட்டி கொடுத்தவர், “பார்த்துக்கலாம்” என்றார்.

திரும்ப அவர்கள் பயணம் லடாக்கை நோக்கி ஆரம்பித்தது.

சர்வாச்சார்யா பாதுகாப்புக்கென இரு கார்கள் அவனுடன் வந்திருக்க, அதில் பயணத்தை தொடர்ந்தனர்.

பைக்கை பாதுகாப்பு அதிகாரிகள் ஓட்டி கொண்டு வர, லடாக் எல்லையில் இவர்கள் கார் நுழைந்தது.

சர்வாச்சார்யா சொன்ன டவுணுக்குள் இவர்கள் சென்ற நேரம் கலவரம் வெடித்திருந்தது.

போலீஸ் குவிக்கப்பட்டிருக்க, மக்கள் கொந்தளித்து கொண்டிருந்தார்கள்.

“என்னாச்சு?” என்று குருமூர்த்தி கேட்க,

“திருடன் கொள்ளை அடிக்கும் போது மாட்டிக்கிட்டான்” என்றான் சர்வாச்சார்யா கோவமான சிரிப்புடன்.

தீரஜ் பேரை சொல்லி ஆட்கள் சத்தமிட, இவர்கள் கார் தீரஜ் மாளிகை நோக்கி சென்றது.

சில நிமிட காத்திருப்புக்கு பின், இருள் சூழ்ந்த வேளையில் தீரஜ் இவர்களை பார்க்க வந்தவன், “குருமூர்த்தி சார் வாங்க, வாங்க” என்று அவரின் கை குலுக்கி வரவேற்றான்.

அவன் புன்னகை முகத்தை அழுத்தமாக பார்த்தபடி அமர்ந்திருந்தான் சர்வாச்சார்யா.

“டீ” என்று குரல் கொடுத்தவன்,

“ம்ம். வளர்ந்திட்டிங்க போல” என்று சர்வாச்சார்யாவிடம் கேட்டான் தீரஜ்.

“எல்லா முறையிலும் வளர்ந்துட்டேன்” என்றான் சர்வாச்சார்யா.

தீரஜ் அவனை புருவம் சுருக்கி பார்த்தவன், டீ வரவும் கொடுக்க சொன்னான்.

குருமூர்த்தி வைத்துவிட, சர்வாச்சார்யா நிதானமாக பருகினான்.

“எம்பையர்க்கு வாழ்த்துக்கள் குருமூர்த்தி சார்” என்றான் தீரஜ்.

குருமூர்த்தி தலையசைத்து ஏற்று கொள்ள, “சோ சார் இனி உங்க மருமகன். அப்படித்தானே?” என்று சர்வாச்சார்யாவை கை காட்டி கேட்டான் தீரஜ்.

“போட்டோஸ் எல்லாம் பார்த்தேன். உலகத்துக்கே சொல்லியிருக்கார் சார்” என்று புருவம் உயர்த்திய தீரஜை பார்த்து புன்னகைத்தான் சர்வாச்சார்யா.

கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தவனின் தோரணை, அவன் புன்னகையின் பின் இருக்கும் கோவம் தீரஜை சிந்திக்க வைத்தது.

“ஊருக்குள்ள நடந்துட்டு இருக்க கலவரத்தை வைச்சு, சிரிக்கிறியா? எனக்கு அது தூசு. ஊதி விட்டுடுவேன்” என்றான் தீரஜ்.

“ஹாஹா. வாய்ப்பில்லை” என்றான் சர்வாச்சார்யா.

“டேய். என்ன?” தீரஜின் பொறுமை குறைய ஆரம்பித்தது.

“பத்த வைச்சவனுக்கு தெரியாதா? நெருப்பு எதுவரைக்கும் பத்தி எரியும்ன்னு?”

“என்ன சொல்ற நீ?”

“மண் சரிவுன்னு சொல்லி, ஒரு பத்து குடும்பத்தை புதைக்க திட்டம் போட்டது, எப்படி வெளியே வந்ததுன்னு யோசிச்சீங்களா சார்?”

“நீயா? ம்ஹூம். என் கோட்டைக்குள்ள எவனும் வர முடியாது”

“வந்து சில வருஷம் ஆச்சு. இன்னும் அஞ்சு நிமிஷத்துல போலீசும் வரும்”

“அப்படியா? அதையும் பார்ப்போமே” என்றான் தீரஜ் நக்கலாக.

“பார்க்க தானே நான் இந்த மண்ணுக்குள்ள காலடி எடுத்து வைச்சிருக்கேன்” என்றான் சர்வாச்சார்யா.

“டேய்”

“நிறுத்துடா. உன் ஆட்டம் முடிஞ்சது. கெமிக்கல் பேக்டரில நடக்கிற கொலையை கண்டிபிடிச்சுட்டான்னு தானே அந்த ஆளை, குடும்பத்தோட கொன்ன? ஆதாரத்துக்காக கோகுலையும் கொன்னுட்டு, என்னை தேடி நாயா அலைஞ்ச? இதோ இப்போ கூட அந்த ஆதாரத்துக்காக தானே, சம்யுக்தா வீட்டுக்கு உன் தம்பி போயிருக்கான்”

தீரஜ் பார்வை குருமூர்த்தி பக்கம் திரும்ப, “நீ நம்பிக்கைக்கு தகுதியானவன் இல்லைன்னு எனக்கு தெரியும்” என்றார் குருமூர்த்தி.

“ஆதாரத்தை கொடுத்தா உங்க பொண்ணை விட போறாங்க குருமூர்த்தி சார். என்னை காப்பாத்திக்க நான் இதை கூட பண்ண கூடாதா என்ன?”

“உன்னை கம்பி எண்ண வைக்க நானும் இதை பண்ணலாம் தானே?” என்று சர்வாச்சார்யா அங்கே இருந்த தொலைக்காட்சியை ஓடவிட்டான்.

சம்யுக்தா வீடு. அவள் ஹாலில் நிற்க, அவளை தவிர்த்து, அவளை சுற்றி நின்ற ஆட்கள் தெளிவாக தெரிந்தனர்.

தீரஜ் ஆட்கள் கேமரா எல்லாம் எடுத்துவிட்டார்கள். ஆனால் இந்த கேமரா எங்கிருக்கிறது?

“தீரஜ் தம்பி நான். உன் அப்பாக்கு என்னை தெரியும்” என்றான் அவன்.

“இங்க எதுக்கு வந்திருக்கீங்க?” என்று கேட்டாள் சம்யுக்தா.

“உன்கிட்ட ஆதாரம் இருக்கிறது எங்களுக்கு தெரிஞ்சு போச்சு. இனியும் நீ எங்களை ஏமாத்த முடியாது. ஆதாரத்தை கொடு” என்று கேட்டான்.

“கொடுக்க முடியாது” சம்யுக்தா உறுதியாக சொல்ல,

“இந்த ஆதரத்துக்காக எத்தனை பேரை போட்டிருக்கோம்ன்னு உனக்கு தெரியுமா?” என்று தீரஜ் தம்பி அவனே லிஸ்ட் கொடுத்தவன், “நீயும் அந்த லிஸ்ட்ல சேர போறியா என்ன?” என்று கிண்டலாக கேட்டான்.

தீரஜ் பல்லை கடிக்க, “உன் அப்பாவும், உன் காதலனும் எங்க எல்லைக்குள்ள தான் இருக்காங்க. நீ ஆதாரத்தை கொடுக்கலைன்னா, அவங்க திரும்பி வர மாட்டாங்க. பள்ளத்தாக்குல இறக்கிடுவோம்” என்று பெண்ணை மிரட்டினான் தீரஜின் தம்பிக்காரன்.

“கொடுக்க மாட்டேன்” சம்யுக்தாவின் உறுதியான பதிலில்,

“ஏய் என்ன? நானும் அண்ணா சொன்னாரேன்னு பொறுமையா பேசிட்டு இருக்கேன். இல்லைன்னா நான் டீல் பண்ற விதமே வேற மாதிரி இருந்திருக்கும்”

சம்யுக்தா கைகளை கட்டி நின்று கொள்ள, “உன் அப்பாக்காக தான், பேசிட்டு இருக்கேன். ஆதாரத்தை கொடு. இல்லை, என் அண்ணனும் இப்போ லடாக்ல தான் இருக்கான். அடுத்த நிமிஷம் அவங்களை தூக்கிடுவான்”

“கொடுக்க முடியாது”

“அப்போ சாவு” என்று அவளை கோவமாக நெருங்கியவன் மூக்கிலே குத்தியவள், படபடவென அவன் கை, கால்களை பலம் கொண்ட மட்டும் தாக்க,

சம்யுக்தாவை பதிலுக்கு தாக்க முயன்றவன் கை சுடப்பட்டது. “ஆஹ்” என்ற அலறியவன், திரும்பி பார்த்து அதிர்ந்து போனான்.

ஜன்னலுக்கு நேரே ஸ்னைப்பர்! ஒன்றல்ல, சுற்றிலும் பல. எல்லாரின் குறியும் இவன்மேல் தான்.

“இதை அடைக்கலையா?” என்று ஆட்களை பார்த்து சத்தமிட, அவன் ஆட்களுக்குள் இருந்து இரண்டு பேர் சிரித்தபடி சம்யுக்தா பக்கம் வந்து நின்றனர்.

ஒருவன் கதவை திறந்துவிட, வீட்டுக்குள் காவலர்கள் நுழைந்து, மொத்த பேரையும் அள்ளி கொண்டு சென்றார்கள்.

அனைத்து ஊடகத்திலும் இந்த வீடியோ லைவாக ஓடி கொண்டிருந்தது.

“உன்னை கொன்னுட்டு நான் ஜெயிலுக்கு போறேன்டா” தீரஜ் கோவத்தில் மிருகமாக மாறிப்போனவன், சர்வாச்சார்யா மேல் பாய, நல்லவன் தான் இந்த தருணத்துக்காக வருடங்களாக காத்திருக்கிறானே!

முதல் அடியே சர்வாச்சார்யா அடிதான் அவன் மேல் விழுந்தது.

பாய்ந்த வேகத்தில் வாய் உடைந்து ரத்தம் சொட்ட, சொட்ட கீழே விழுந்திருந்தான் தீரஜ்.

மின்னலாக எழுந்து சர்வாச்சார்யாவை தாக்க, அத்தனை நாள் கோவத்தை பதிலுக்கு காட்டினான் சர்வாச்சார்யா.

மிக நன்றாக சண்டை போட தெரிந்தவன் தீரஜ். சில நிமிடத்தில் அவனை சாய்ந்திருந்தான் சர்வாச்சார்யா.

குருமூர்த்தி பெருமிதத்துடன் பார்த்திருந்தார். ஊட்டியை விட்டு சென்ற பின்னும், நல்லவன் பயிற்சியை விட்டிருக்கவில்லை.

தொடர்ந்து பல கலைகளை கற்று தேறியிருக்கிறான். தீரஜ் கழுத்தில் கையை திருப்பி நாயகன் வெட்டிய வெட்டில், குருமூர்த்தி பூரித்துவிட்டார்.

அந்த வேகம், துள்ளியம், கையை கூர்மையாக இறக்கியது எல்லாம் மனிதரை அசர வைத்தது.

குருமூர்த்தியின் காலடியில்,  விழுந்த தீரஜின்  தலை தொங்கி போக, அதுவரை காத்திருந்த காவலர்கள் அதன் பின்னே தீரஜை கைது செய்து தூக்கி சென்றனர்.

“டேய் தம்பி அருமைடா” என்று குருமூர்த்தி நாயகனை கட்டி கொள்ள,

பிரிந்து அவர் முகம் பார்த்தவன், “சுயமா நிக்கிறேனா?” என்று கேட்டான்.

குருமூர்த்தி அதிர்ச்சி அடைய, “என்னை நான் காப்பாத்திக்கிட்டேன்.  உதவிக்கு உங்களை கூப்பிடலை ஹீரோ சார்” என்றான் நாயகன்.

“நான்”

“தீரஜ் எனக்கு எதிரி. அவன் என்னை பேசலை. ஏன் ஓடி ஒளிஞ்சுன்னு கூட அவன் என்னை கேட்கலை. ஆனா நீங்க எனக்கு யார்?”

குருமூர்த்தி கைகளை விட்டு வெளியே வந்தவன், “வசுந்தரா மேடம்க்கான உங்க நன்றி கடனை அடைக்க, நீங்க என்னை பயன்படுத்தியிருக்கீங்க?”

“டேய் தம்பி. வார்த்தையை விடாத”

“நீங்களும், உங்க பொண்ணும் விட்டதை விடவா நான் வார்த்தையை விடுறேன்”

“என்னையே நான் காப்பாத்திக்க முடியலை! உயிர் தான் முக்கியம். தாழ்ந்து போறது இல்லையில்லை. சொன்னா. அவ சொன்னா. வேண்டாம். அது வேண்டாம்” தலையாட்டி கொண்டவன்,

“நம்மளை ஓட விட்டவனை உங்க காலடியில் நான் போட்டுட்டேன் ஹீரோ சார். நிமிர்ந்து நிக்கிற அளவு சுயம் எனக்கும் இருக்கு”

“என் நண்பன் கோகுலுக்கு நான் செய்ய நினைச்சேன். செஞ்சும் காட்டிட்டேன். ஆனா நீங்க யாருக்காக என்னை காப்பாத்த பாடுபட்டிங்க. எனக்காகவா. நோ, அப்படி மட்டும் சொல்லிடாதீங்க”

“இந்த சர்வாச்சார்யாவுக்காக இல்லை. வசுந்தரா மேடம்க்காக, அவங்களுக்கு தீர்க்க வேண்டிய நன்றி கடனுக்காக, என் கையை நீங்க விடலை”

“ஆனாலும் ஏதோ எனக்கு உயிர் பிச்சை போட்ட மாதிரி பேசின நீங்களும், உங்க மகளும், கொட்டின வார்த்தைகளை திரும்ப எப்படி எடுத்துக்க போறீங்க?” என்று அழுத்தமாக கேட்டான் சர்வாச்சார்யா.