கடந்து செல் காதலுடன்! 35

தங்களின் கண்கள் முன்னால் விரிந்திருந்த இயற்கையின் பிரம்மாண்டத்தில் குருமூர்த்தி பிரமித்து போனார்.

ZOJILA PASS! அழகும், ஆபத்தும் நிறைந்த ஓர் அற்புதம்.

வளைந்து, வளைந்து செல்லும் பாதையின் ஒரு பக்கம் மலை, மறுபக்கம் மாபெரும் பள்ளத்தாக்கு!

சிறிது பிசகினாலும் நிச்சயம் இயற்கையின் கைக்கு செல்ல வேண்டியது தான்.

குருமூர்த்திக்கோ அந்த பயம் சிறிதும் இருப்பதாக தெரியவில்லை.

“டேய் தம்பி. இந்த இடம் ரொம்ப நல்லா இருக்குடா” என்றார் குருமூர்த்தி உற்சாகத்துடன்.

சர்வாச்சார்யா அவரை  அணைக்கட்டி பாதுகாப்பாக அழைத்து செல்ல, மனிதர் திடீரென வேகத்தை குறைத்தார். பின்பு சட்டென வேகத்தை ஏற்றினார்.

“எதுக்கு இப்போ வேகம் எடுக்குறீங்க?” என்றபடி நாயகன் அவர் வழியை மறைக்க,

“ம்ப்ச். என்னடா உனக்கு? நசநசன்னு பண்ணாத. வழி விடு” என்று அவனை ஓவர்டேக் செய்து சென்றார் மனிதர்.

இவரை இங்க கூட்டிட்டு வந்திருக்க கூடாதோ? சர்வாச்சார்யா திணறி போனான்.

ZERO POINT எனும் இடத்தில் வண்டிகள் நிறுத்தப்பட, “முதல்ல நீங்க பைக்கை விட்டு இறங்குங்க?” என்று குருமூர்த்தியை இழுத்தான் நாயகன்.

“ரோடை பார்த்து ஓட்ட மாட்டிங்களா? எவ்வளவு ரிஸ்க் ஆன இடத்துல போய் ஓவர் டேக் பண்றீங்க? இது ஆகாது. நீங்க என்னோட வாங்க, இனி உங்களுக்கு பைக் கிடையாது” என்றான் அவன் முடிவாக.

“உன்கூட வரணுமா? அது எனக்கு ஆகாது. நீ மட்டும் சரியா போறதா நினைப்பா? நீயும் அந்த ஹைதராபாத்ல ஒரு பஸ்கிட்ட எந்த வேகம் எடுத்த?” என்று அவர் பதிலுக்கு கேட்க,

“அந்த ரோடும், இதுவும் ஒண்ணா உங்களுக்கு?”

“ரிஸ்க் ஒண்ணு தானே?”

“அப்போ சரி. நாம கார்ல போலாம். நம்ம இரண்டு பேருக்கும் பைக் வேணாம்” என்று அவனின் பாதுகாப்பு அதிகாரியை அழைக்க,

“டேய் தம்பி, அவசரப்படாத இரு. க்கும் இப்போ என்ன? மெல்ல போகணும், அதானே. போலாம்” குருமூர்த்தி முகம் சுருக்கி சொன்னார்.

“நான் உங்களை நம்ப மாட்டேன். ஊட்டி பெண்ட்ல அடிக்கடி நீங்க பைக் ரைட் போறது மாதிரின்னு நினைச்சீங்களா இதை?”

“உனக்கு எப்படி இது தெரியும்? என்னை பாலோ பண்றியாடா?” என்று குருமூர்த்தி கோவம் கொள்ள,

“பண்றேன். பண்ணுவேன். பேச்சு இப்போ அதைப்பத்தி இல்லை. பைக் இனி உங்களுக்கு கிடையாது”

“அதான் பொறுமையா போறேன்னு சொல்லிட்டேன் இல்லை. போதும் அடங்குடா” என்று கடுகடுத்த குருமூர்த்தி,

அவருக்கு கொடுத்த காபியுடன் இயற்கையை ரசிக்க சென்றுவிட்டார்.

லேசான தூறலில் சூடான காபியை குடித்தபடி, தன் மேல் விழும் பனியை உள்ளங்கை நீட்டி வாங்கி கொண்டார் குருமூர்த்தி.

சில்லென கரைந்தது பனி. “ரைட் வரலையா?” என்று நாயகன் வர,

“வரலை” என்று முகம் திருப்பினார்.

அங்கு பனி சறுக்கலில் அதற்கான வாகனத்தை பயன்படுத்தி ரைட் செய்ய முடியும்.

“ஸ்னோ ஸ்கூட்டர் எடுத்தாச்சு. வாங்க” என்று அவரின் கைப்பற்றி இழுத்து சென்றவன்,

“ம்ம். உட்காருங்க” என்று அவரை தன் பின்னால் அமர சொன்னான்.

“எதே! நான் உன் பின்னாடி உட்காரணுமா? முடியாது. நான் ஓட்டுறேன். நீ உட்காரு”

“புதுப்பனி. சில இடத்துல இழுக்கும். ஒரு ரவுண்ட் என்னோட வந்துட்டு, அப்புறம் நீங்க ஓட்டுங்க”

“இங்க இருந்தே நீ ஒட்டுறதை பார்த்துகிறேன். நீ போ”

“யோவ். இப்போ நீ உட்கார போறியா இல்லையா? என்னமோ பிகர் கூட போற மாதிரி ஓவரா பண்ற? எல்லாம் என் நேரம், அவளோட பண்ண வேண்டியதை எல்லாம், உன்கிட்ட பண்ண வேண்டியிருக்கு”

“டேய். என்ன” என்று குருமூர்த்தி, அவன் முதுகிலே ஒன்று வைத்த நேரம்,

“சார்” என்றபடி பாதுகாப்பு அதிகாரி ஆஜரானார்.

“இவர் தான். இவரை பிடிச்சு காருக்குள்ள போடுங்க” என்றான் சர்வாச்சார்யா.

“ராஸ்கல். அவன் என்கிட்ட வந்தா உன் தோலை உரிச்சிடுவேன்”

“அவனைத்தானே நீங்க அடிக்கணும்”

“ஏவிவிட்டவன் கண்ணுக்கு முன்னாடியே இருக்கானே”

“இப்போ உட்காருறீங்களா இல்லையா?”

“எனக்கும் நேரம் வரும்டா. அப்போ உன்னை வைச்சுக்கிறேன்”

“அடேங்கப்பா. நீங்களும், உங்க மகளும் ஊட்டியில் இருந்தே தான் என்னை வைச்சு செஞ்சுட்டு இருக்கீங்களே? போதாதா உங்களுக்கு?”

“இதுக்கு தான், நான் உன்கூட வர மாட்டேன்னு சொன்னேன். பாரு சண்டை போட்டு என்னை இதையெல்லாம் பார்க்க விடாம பண்ற?”

“பார்க்கிறதை பத்தி நீங்க பேசாதீங்க? நான் உங்களை பார்க்க கேட்டா முடியாதுன்னு சொன்னீங்க இல்லை”

“நான் சொல்லி நீ கேட்டுட்டியா? இல்லைதானே? எம்பையர்ல என்னை லாக் பண்ணி பார்க்கலை”

“என்ன பிரயோஜனம்? அதான் உங்க அழகு மக, எனக்கு ஆதாரத்தை கொடுக்கலையே?”

“டேய். இனி என் மகளை பத்தி பேசினா நடக்கிறதே வேற”

“ரைட் முடிஞ்சு போச்சு இறங்குங்க” என்றான் நல்லவன்.

“நீ இறங்குடா முதல்ல. இப்போ நான் ஓட்டணும்” என்று வேகமாக கைப்பற்ற, அவருக்கு பின்னால் இவன் பொத்தென அமர்ந்தான்.

“இம்சை. இறங்குடா”

“மாட்டேன்” என்று சட்டமாக அமர்ந்து கொண்டவன், குருமூர்த்தி பனியில் சறுக்கிய நேரமெல்லாம் அவர் மேல் பனியை அள்ளி வீசி கொண்டிருந்தான்.

சர்வாச்சார்யா உடன் வந்தவர்கள் இவரின் வண்டியை மடக்க நினைக்க, குருமூர்த்தி வளைத்து வளைத்து ஓட்ட என்று சில நிமிடங்கள் அங்கு எக்கச்சக்க கலாட்டா ஆகி போனது.

சர்வாச்சார்யா பாதுகாப்பு அதிகாரி, அந்த குறிப்பிட்ட நேரம் முழுவதையும் இவர்களுக்காகவே வாங்கியிருக்க, மற்றவர்களுக்கு இவர்களின் தொல்லையில்லாமல் போய்விட்டது.

இந்த சூழ்நிலையில், இவர்களுடன் நான் அதிகமே மாறுபட்டு நிற்கிறேன்!

யாரையும் அருகில் சேர்க்காமல், விறைப்புடன், கடினமான முகத்துடனே இத்தனை வருடங்கள் வாழந்தாகிவிட்டது.

ம்ஹ்ம். ஐம்பதை கடக்கும் நேரம், இப்படியொரு மாற்றம்!

குருமூர்த்தி கண்கள் சர்வாச்சார்யாவை தேடியது. நிமிடத்திற்கு ஒரு முறையாவது அவனை பார்த்துவிடுவார்.

பாதுகாப்பு வாகனத்தின் அருகில் நின்று ஏதோ பேசி கொண்டிருந்தான். சீரியசான அவன் முகம், உடனே குருமூர்த்தியை அவனை நோக்கி செல்ல வைத்தது.

அதிகாரி இவரை பார்க்கவும் பேச்சை நிறுத்த, “என்னாச்சு?” என்று கேட்டார் குருமூர்த்தி.

“கோவப்படாம இருப்பீங்களா?” முதலே உடன்படிக்கைக்கு வர முயன்றான்.

“நீ முதல்ல விஷயத்துக்கு வா” குருமூர்த்தி எதையோ ஊகித்துவிட்டார்.

“தீரஜ் தம்பி இன்னைக்கு நைட் உங்க பொண்ணு வீட்டுக்கு போக போறான்”

சட்டென ஒரு கெட்ட வார்த்தையை உதித்த குருமூர்த்தி, “அவனை அன்னைக்கே போட்டிருக்கணும்” என்றார் கோவமாக.

“ச்சு. அவன் போகட்டும். நாம தயாரா தான் இருக்கோம்” என்றான் நாயகன்.

“என் பொண்ணை ஏன் இதுக்குள்ள இழுக்கிறாங்க?” குருமூர்த்தி வெடிக்க,

“மேடம். அந்த ஆதாரத்தை வெளியே எடுத்திருக்காங்க” என்றார் அதிகாரி.

“ஆதாரம்? எப்படி?”

“அவங்க சிஸ்டத்துல போட்டு பார்த்தாங்க”

குருமூர்த்தி நாயகன் முகம் பார்க்க, அவன் தலையசைத்தான்.

“தீரஜ் இப்போ வரையிலும் நம்ம எல்லோரையும் ரொம்ப உன்னிப்பா கவனிச்சுட்டு தான் இருக்கான். அவனுக்கு முதலில் இருந்தே மேடம் மேல சந்தேகம் தான். சிப் மாத்தி கொடுத்திருந்தா? இல்லை, காபி எடுத்திருந்தா என்ன செய்யன்னு? நேத்து நைட் மேடமும் புது சிஸ்டம் வாங்கி தான் போட்டு பார்த்தாங்க”

“ஆனா அவங்களுக்கு தெரியாது. புதுசா வாங்கினாலும், தீரஜ் அந்த புதுசிலயும் வேலை பார்த்திருப்பான்னு. லைக் நாங்க பார்த்த மாதிரி. பாதுகாப்புக்கு நாங்க செய்றோம். அவன் வேவு பார்க்க செய்றான். அவ்வளவு தான் வித்தியாசம்”

தந்தையாக குருமூர்த்தி ரத்தம் கொதித்தது. வயது பெண் அவர் மகள். அவளுக்கென சுதந்திரம் இல்லை. எத்தனை கண்கள் என் மகளை சுற்றுகிறதோ?

“உங்க பொண்ணுக்கும் இது தெரியும். ஊட்டியில் இருந்து கிளம்பும் போதே குணா மூலம் சொல்லிட்டோம். கேமரா எல்லாம் இல்லை. டிஜிட்டல் பிளாட் பார்ம்ல அவ என்ன பண்ணாலும் எங்களுக்கு தெரிஞ்சிடும். உங்களுக்கும் இதுவே தான்”

“என்னையும் கண்காணிக்கிறீங்களா?” குருமூர்த்தி அதிர்ந்து போக,

“என்ன கேள்வி இது? மணி அங்கிள், குணா, கற்பகம் பாட்டி வரை எல்லாம் தான்”

“டேய் என்னடா பிராடுத்தனம் இது?”

“இந்தெந்த தேதியில், இந்தெந்த நேரத்தில, இந்தெந்த வருஷத்துல நீங்க என்னை தேடியிருக்கீங்க? நான் என்ன பண்றேன், என் போட்டோ, எங்க இருக்கேன்னு எல்லாம் பார்த்தீங்க” என்று நாயகன் அடுக்கி கொண்டே போக,

“க்கும். அது ஏதோ, அடங்காம ஆடிட்டு இருப்பானே, இப்போவும் அப்படித்தான் இருக்கானோன்னு. க்கும். பார்த்தேன்” என்று குருமூர்த்தி எங்கோ பார்த்து சொல்ல,

சர்வாச்சார்யா முகத்தில் புன்னகை. “ரௌடின்னு ஊரை ஏமாத்துறீங்களா நீங்க?” என்று அவரை வம்பிழுக்க,

“நீதான் இப்போ ரௌடியா பார்ம் ஆகுற காமெடி பண்ணிட்டு இருக்க” என்று இவன் காலை வாரினார் குருமூர்த்தி.

“உங்க அழகு மகளை பத்தி யோசிங்க ஹீரோ சார்”

“யோசிக்க என்ன இருக்கு? எவனும் என் மககிட்ட போக கூடாது. போன் கொடுங்க” என்று கேட்டார் குருமூர்த்தி.

“பிளான் வேற” என்று சர்வாச்சார்யா அவருக்கு எல்லாம் சொல்ல, குருமூர்த்தி அரைகுறை மனதுடன் ஏற்று கொண்டார்.

ZERO POINT லிருந்து திரும்ப இவர்கள் பயணம் ஆரம்பமானது.

முன்பிருந்த உற்சாகம் இப்போது இல்லை தான். குருமூர்த்தி மனது முழுதும் மகளிடம் சென்றுவிட்டது.

தீரஜ் நிச்சயம் எங்களையும் விடமாட்டான்! குருமூர்த்தி கண்கள் இப்போது அடங்காதவனை அதிகமே தொடர ஆரம்பித்தது.

 வழியில் ஓர் இடத்தில் சர்வாச்சார்யா வேகம் குறைந்து, நின்றேவிட்டான்.

மற்ற ரைடர்களை போக சொல்லிவிட்ட பாதுகாப்பு அதிகாரிகள், இவர்கள் இருவரை மட்டும் பாதுகாப்பான இடத்தில் நிற்க வைத்தனர்.

சர்வாச்சார்யா கண்கள் ஓரிடத்தில் நிலை குத்தி இருந்தது.

“இங்க தான் அந்த பேமிலியை, எங்க கண் முன்னாடியே, எங்களால தடுக்க முடியலை” என்றான் தானே!

“நைட் ரைட் பண்ண மாட்டோம். அதுவும் இந்த ரோட்ல கண்டிப்பாவே கூடாதுன்னு கேப்டன் அலோ பண்ண மாட்டார். நானும், கோகுலும் மட்டும் அன்னைக்கு கிளம்பினோம். மணி எட்டு கூட ஆகலை. என்னமோ பாதையே காலியா இருந்த மாதிரி இருந்தது”

“என்னடா மச்சான் யாரையும் காணோம். லாரி எல்லாம் கூட இல்லை” என்று கோகுல் கேட்க,

“எனக்கும் அதுதான் டவுட்டா இருக்கு மாப்பிள்ளை. நாம திரும்பிடுவோம்” என்றான் சர்வாச்சார்யா.

அவனுக்கான பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பது, பிறந்ததில் இருந்தே அவனுக்குள் புகுத்தப்பட்டிருக்கிறது.

அந்த வருடமும் அவனுக்கான பாதுகாப்பு ஆட்கள் உடன் உண்டு. இவர்கள் தூங்க போவதாக சொல்லி, ஏமாற்றி கிளம்பி வந்திருந்தார்கள்.

ZERO POINT எல்லாம் கடந்தாகிவிட்டது. அங்கும் ஏதோ சரியில்லை.

“மாப்பிள்ளை. திருப்பு. நாம ரிட்டர்ன் போகணும்” என்று சர்வாச்சார்யா சொல்ல,

“மச்சான். இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம் போலாம்” என்றான் கோகுல்.

“ம்ப்ச். சொன்னா கேளு மாப்பிள்ளை”

“காயத்ரிக்கும், உனக்கும் என்ன போகுதுன்னு நீ சொல்லு முதல்ல?”

“டேய் நாதாரி, இப்போ இந்த கேள்வி ரொம்ப முக்கியமா?”

“உனக்கு மட்டும் ஸ்பெஷலா பிரவுனி வந்துச்சு. எங்க யாருக்கும் நீ ஷேர் பண்ணலை”

“சுஹாசினிக்காக எடுத்துட்டு போனேன் லூசே” அவன் தங்கையை பற்றி சொன்னான் சர்வாச்சார்யா.

“தங்கச்சிக்கா? நான் கூட, நீ ஷேர் பண்ணிக்க கூடாதுன்னு”

“அடிங்க. பிராடு! நீ ஸ்வேதா கூட கடலை வறுத்துகிட்டு என்னை சொல்றியா?”

“நோ, நோ. நம்ம போகஸ் புல்லா நம்ம அனு மேம் மேல தான்”

“த்தூ. ஆன்ட்டிடா அவங்க” என்று சர்வாச்சார்யா துப்ப,

“உனக்கு கூட அட்மின் பிளாக் போற வேலை இருக்கு இல்லை. நாம ரிட்டர்ன் ஆனதும் போலாம்” என்றான் கோகுல்.

“அனு மேமை பார்க்க தானே? நான் உன்னை கூட்டிட்டு போக மாட்டேன்”

“நான் உன்னை தூக்கி தோளுல போட்டுட்டு போயிடுவேனே” என்றான் கோகுல்.

“உன்னை இங்கேயே இடிச்சு தள்ள போறேன்னு பாரு” என்று சர்வாச்சார்யா சொன்ன நேரம், சத்தம் ஒன்று பெரிதாக கேட்டது.

“மச்சான் ஏதோ ஆக்சிடென்ட் போலடா” என்று கோகுல் வேகமெடுக்க,

“டேய். டேய். இல்லை. போகாத” என்று சர்வாச்சார்யா அவனை தடுத்தப்படி பின் தொடர்ந்தான்.