“இங்கதான் இருப்பேன். எனக்கு காபி சொல்லுங்க”

“மாட்டேன். ஒழுங்கா உன் ரூமுக்கு போ” என்று அவனை விரட்டினார்.

“ரொம்ப நாள் ஆச்சு ரைட் போய். டையர்டா இருக்கு. மசாஜ் பண்ணிப்போமா? இங்க இருக்கு” என்று கேட்டான் நல்லவன்.

“மசாஜ் எல்லாம் தேவையில்லை. பேசாம தூங்கு. சரியாகிடும்” குருமூர்த்தி கடிக்க,

“ஹீரோ சார். மசாஜ்ஜோட மகத்துவம் உங்களுக்கு தெரியலை. அப்படியே கை, கால் எல்லாம் நல்லா நீவிவிட்டு, சடசடன்னு சொடுக்கு எடுத்து விட்டா, அப்படியே சொர்க்கத்துக்கு போய்ட்டு வந்துடலாம்”

“சொர்க்கத்துக்கு போய்ட்டு ஏன் வரணும்? அங்கேயே தங்கிடு”

“நீங்க முகம் சுளிக்கிறதை பார்த்தா இதுவரை மசாஜ் பண்ணிக்கிட்டதே இல்லையா? இதுதான் ரைட் டைம். வாங்க எக்ஸ்பீரியன்ஸ் பண்ணுங்க”

“உன்னையே போக கூடாதுன்னு சொல்றேன். நீ என்னை வேற கூப்பிடுறியா?”

“ரௌடியா மட்டும் தான் வளர்ந்து இருக்கீங்க. மத்தபடி ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்லை” என்று உதடு பிதுக்கினான்.

“டேய் இதுக்கு என்ன அர்த்தம்?” குருமூர்த்தி பல்லை கடிக்க,

“ஏதோ சுபா ஆன்ட்டியால வாழ்க்கை கிடைச்சிருக்கு. இல்லை தேறியிருக்க மாட்டீங்க ஹீரோ சார்”

“ராஸ்கல். உன்னை, உன்னை”

“சீக்கிரம் முடிங்க. கிளம்பலாம். நான் அப்பாயிண்ட்மெண்ட் போடுறேன்”

“போன்ல கை வைச்ச, கை இருக்காது”

“மசாஜ் போக கூடாதுன்னா எனக்கு காபி சொல்லுங்க. அப்போ தான் ரிலாக்ஸா பீல் பண்ணுவேன்” என்றான் கேடிப்பையல்.

“சொல்லி தொலையுறேன்” என்று குருமூர்த்தி ஹோட்டல் போன் எடுக்க, சம்யுக்தா கண்கள் அவனையே பாராமல் பார்த்திருந்தது.

ஒற்றை கையில் தலையை தாங்கி, குருமூர்த்தி பக்கமாக திரும்பி படுத்திருந்தான்.

‘இதை விட குட்டி ஷார்ட்ஸ் கிடைக்காது போல’ சம்யுக்தா முனகி கொண்டாள்.

மலைமாடுன்னு கூப்பிட்டது சரியா போச்சு!

ஆர்ம்ஸ் எல்லாம் வைச்சு ஒரு மார்க்கமா தான் இருக்கான்!

சம்யுக்தா அதற்கு மேல் அவன் பக்கம் பார்க்க கூடாது என்று சிவந்த முகத்தை திருப்பி கொண்டாள்.

வேலை செய்வது போல் லேப் டாப்பில் கவனத்தை வைத்தாள்.

குருமூர்த்தி அவனுக்கு காபி சொல்லிவிட்டு, டீபாய் மேல் வைத்திருந்த மொபைலை எடுத்தவர், அதிர்ந்து தான் போனார்.

மகள் இணைப்பிலே இருந்திருக்கிறாள்!

திரும்பி நம் நல்லவனை பார்க்க, அவனோ, “என்ன மனசு மாறிட்டீங்களா? மசாஜ்”

“டேய், டேய் வாயை மூடு” குருமூர்த்தி இடையிட்டு படபடத்தார்.

அப்போ நாங்க பேசினதை எல்லாம் என் பொண்ணு கேட்டுட்டாளா?

குருமூர்த்தி மகளின் முகம் பார்க்க முடியாமல் அநியாயத்துக்கு சங்கட பட்டு போனவர், “வே, வேலை, வேலையா இருக்கியாமா?” என்று திக்கி கேட்டார்.

சம்யுக்தா ஏதோ எடுப்பது போல் முகத்தை தள்ளி வைத்து கொண்டவள், தந்தையின் சங்கடத்தில் வேகமாக மைக்கை அணைத்துவிட்டு, திரும்ப திரைக்குள் வந்தாள்.

“சம்யுக்தா” என்று தந்தை அழைக்க,

அவள் அப்போது தான் அவரை பார்ப்பது போல் நிமிர்ந்தவள், “ஸாரிப்பா. ஆடியோ ஆப் ஆகியிருக்கு” என்று திரும்ப ஆன் செய்தாள்.

குருமூர்த்தியின் முகம் தெளிய, திரையை விட்டு தள்ளி வந்தவர், மூச்சை பெரிதாக இழுத்து விட்டார்.

நாயகன் நமட்டு சிரிப்புடன் அவரை பார்க்க, “உன்னால தாண்டா” என்று சத்தமே இல்லாமல் அவனிடம் சண்டையிட்டு, மீண்டும் திரைக்குள் வந்தார்.

“க்கும். உனக்கு வேலை இருந்தா நீ பாரும்மா. நாம நாளைக்கு பேசலாம்” என்று குருமூர்த்தி சொல்ல,

“சரிப்பா. நீங்க ரெஸ்ட் எடுங்க. நாளைக்கு ரெஸ்டிங் டைம்ல கூப்பிடுங்கப்பா”

“சரி, சரிம்மா”

“எங்க வரைக்கும் போக போறீங்க, எங்க தங்க போறீங்கன்னு எல்லாம் எனக்கு இப்போ அனுப்பிடுங்க”

“இதோ இப்போவே உனக்கு அனுப்பிடுறேன்”

“சரிங்கப்பா. அப்புறம் எம்பையர் பத்தி சொல்லணும். சில கம்பெனி அக்ரீமண்ட் இன்னும் சைன் ஆகாம இருக்கு. அதை”

“இது அநியாயம். எனக்கு மட்டும் ஓவர் நைட்ல கொடுக்க சொல்லி மறுநாளே சைன் பண்ணீங்க?” என்று பின்னால் இருந்து ஒருத்தன் பாய்ந்தான்.

“அநியாயத்தை பத்தி நீ பேசாத. நாங்க உனக்கு அப்ரூவல் கொடுக்காம, அடாவடியா உள்ள வந்தவன் நீ?” குருமூர்த்தி அவனுக்கு மேல் பாய்ந்தவர்,

“நீ சொல்லும்மா” என்றார் மகளிடம்.

“அதில ஒரு கம்பெனி மட்டும் ரெண்ட் குறைக்க சொல்லி கேட்டிருக்காங்க” என்று அந்த நிறுவனம் பெயர் சொல்ல,

“அந்த கம்பெனியா? சரி சொல்லிடுமா” என்றார் குருமூர்த்தி.

“எதே! ரெண்ட் குறைக்கிறீங்களா? நான் ஒத்துக்க மாட்டேன், எனக்கு மட்டும் அத்தனை லட்சம் கட்ட சொல்லிட்டு, அவங்களுக்கு மட்டும் சில ஆயிரமா?” நல்லவன் கொதித்தெழுந்தான்.

“அவங்க சின்ன கம்பெனி. வருஷ வருமானமே இவ்வளவு தான்”

“அதுக்கு அவங்களுக்கு சேர்த்து என்கிட்ட வாங்க பிளான் போடுறீங்களா?”

“அப்படி தான் வைச்சுக்கோ போடா”

“நான் இப்போவே CEOக்கு போன் போடுறேன். ரெண்ட் குறைச்சு புது அக்ரீமெண்ட் நாளைக்கு வரும். சைன் ஆகணும். பார்த்துக்கோங்க”  என்று மிரட்டினான் தொழிலதிபன்.

“சைன் ஆகாது. உன் வாடகையை நான் ஒரு ரூபாய் கூட குறைக்க மாட்டேன்”

“ஏன்? ஏன் குறைக்க மாட்டீங்க?”

“நான் நெட்ஒர்க் காஸ்ட் சேர்த்து போட்டதுக்கு, முடியாதுன்னு சொன்ன இல்லை. உனக்கு இந்த வாடகை தான்”

“அவ்வா. அவ்வா!  வாடகையில அந்த காசை சேர்த்திருக்கீங்க அப்படி தானே?”

“நீ மட்டும் தான் விவரமா இருப்பியா? எனக்கும் எங்க பிடிக்கணும்ன்னு தெரியும் போடா”

“ஓஹோ. அப்படியா? சரி. நானும் இனி பார்த்துகிறேன்” என்று சவால் விட்டான் நல்லவன்.

“ப்பா” என்று சம்யுக்தா இடையிட்டு அழைக்க,

“நான் வெளியே வரேன் இரு” என்று குருமூர்த்தி போன் எடுத்து கொண்டு போக பார்க்க,

“காபி கொடுத்துட்டு எங்க வேணும்ன்னாலும் போங்க” என்று வழி மறைத்தான் சர்வாச்சார்யா.

“ப்பா. நான் வைக்கிறேன். நாம நாளைக்கு ;பேசலாம்” என்று சம்யுக்தா வைத்துவிட,

“என் பொண்ணுகிட்ட பேச விடாம பண்ணிட்டான்” என்று குருமூர்த்தி கடுப்படித்து கொண்டே கட்டிலுக்கு வர,

“ஹீரோ சார். இதுக்கு மேல பேசணும்ன்னா நேர்ல போய் பேசிக்கோங்க. இங்க வாங்க. நாளைக்கான நம்ம ட்ரிப் பிளான் தான் இது” என்று அவருக்கு விளக்க ஆரம்பித்தான்.

ரைடிங்க செய்ய எந்த முன் அனுபவமும் இல்லாதவரை, சர்வாச்சார்யா கைட் செய்து கொண்டு, அவருடனே பயணம் செய்து கொண்டிருக்கிறான்.

குருமூர்த்தி முதல் நாள் அதிகம் தடுமாறினாலும், மறுநாளில் இருந்து உடனே உடனே பிடித்து கொண்டார். பயணத்தை ரசிக்கவும் செய்தார்.

அடுத்த நாள் காலையிலே சம்யுக்தா விடுபட்ட நிறுவனங்களின் ஒப்பந்தம் பற்றி எம்பையர் மேலாளரிடம் பேசினாள்.

லீகல் டீம், “எங்க சைட் எல்லாம் சரியா இருக்கு மேம்” என்று ரிப்போர்ட் கொடுத்தார்கள்.

எம்பையரில் பெரிய நிறுவனம் என்றால் அது சர்வாச்சார்யா நிறுவனம் மட்டுமே! அவர்கள் இரண்டு தளங்கள் முழுவதையும் எடுத்து கொண்டு விட்டிருக்க, விண்ணப்பித்திருந்த நிறுவனங்கள் சிலதை மறுக்கும் நிலைக்கு எம்பையர் தள்ளப்பட்டது.

“நாங்க கூடிய சீக்கிரம் செகண்ட் பில்டிங் எழுப்பிடுவோம். அதுவரைக்கும் நீங்க வெய்ட் பண்ண முடியுமா?” என்று எம்பையர் சார்பாக செய்தி அனுப்பட்டது.

சில நிறுவனங்கள் சரியென, சிலது மறுத்துவிட்டது.

மேலாளர் அதனை பற்றியும் சம்யுக்தாவிடம் பகிர்ந்து கொண்டார்.

“ஓகே சார். அந்த கம்பெனி லிஸ்ட் மட்டும் எனக்கு அனுப்பிடுங்க. அக்ரீமெண்ட் நாளைக்கு சைன் ஆகுற மாதிரி பார்த்துக்கலாம்” என்று சம்யுக்தா பேசி வைத்தவள், அலுவலகம் கிளம்பினாள்.

பெண்ணின் நாட்கள் சாதாரணமாக செல்ல, குருமூர்த்தி, சர்வாச்சார்யா ரைடும் நல்ல விதமாக சென்றது.

பதினோரு நாட்கள் கடந்துவிட்டது. இடையிடையே சுற்றி பார்த்து, ஓய்வெடுத்து லடாக் நெருங்கும் தொலைவிற்கு சென்றுவிட்டனர்.

“கேப்டன். எனக்கு ZOJILA PASS போகணும்” என்றான் சர்வாச்சார்யா.

எல்லோரையும் வழி நடத்தும் கேப்டன் முகத்தில் அப்போது தான் பதட்டம் உதயம் ஆனது.

அவன் பயண திட்டமிடல் அனைத்தும் அதை நோக்கியே இருந்ததை கேப்டன் முதலிலே கவனித்துவிட்டார்.

சில வருடங்களுக்கு முன்பு நடந்ததை அவர் எப்படி மறந்திருக்க முடியும்?

கோகுல்!

அந்த குறிப்பிட்ட இடத்தை மையப்படுத்தியே, சர்வாச்சார்யா பாதை பயணம் வகுந்திருந்தான்.

“நாம வேற வழி போலாம். அங்க போய்ட்டு போகணும்ன்னா ட்ரிப் கஷ்டமா இருக்கும்” என்று சொல்லி கொண்டே தான் இருந்தார்.

“லாஸ்ட் டைம் சரியா பார்க்கல. இப்போ பார்த்திடுவோம் கேப்டன்” என்று அவனும், அவன் பிடியிலே இருந்துவிட்டான்.

குருமூர்த்தி எல்லாம் கவனித்து தான் இருந்தார். ஆனால் பெரிதாக தலையிடவில்லை.

செய்ய முடிவெடுத்து வந்துவிட்டான். இனி நிறுத்த வாய்ப்பில்லை.

தீரஜ் எனும் மனிதனால், நாயகனும் நிறைய கஷ்டப்பட்டு விட்டான்.

‘இவனுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கணும். ஜெயிச்சா சந்தோஷம்! தோத்தாலும் கவலையில்லை. எதிர்த்து சண்டை செஞ்ச ஆத்ம திருப்தி கிடைக்கும்’

‘பலநாள் ஓடவிட்டிருக்கான். கட்டாயம் தீரஜை அசைச்சு பார்க்கணும்!’

குருமூர்த்தி, சர்வாச்சார்யா எண்ணங்கள் தீரஜ் என்பவன் இடத்தில் ஒன்று பட்டு நின்றது.

இருவருக்கும் தீரஜை பழி வாங்கும் எண்ணமில்லை. ஆனால் அவனை சும்மா விடும் அளவுக்கு இவர்கள் கோழையும் இல்லை.

கோகுலுக்காக, அந்த குடும்பத்திற்கான நியாயத்தை வாங்கி விட வேண்டும்!

குருமூர்த்தி, சர்வாச்சார்யா முகங்கள் மெல்ல மெல்ல இறுக்கம் கண்டது.

தீரஜ் ஏரியாக்குள் இவர்கள் நுழைய, சம்யுக்தா வீட்டிற்குள் ஆட்கள் நுழைந்தனர்.

சம்யுக்தா அலுவலகம் முடித்து வீட்டிற்குள் வந்தவள், சோர்வாக படுத்துவிட்டாள்.

இன்று வேலை முடிந்து கிளம்பும் போதே இருள் சூழ்ந்துவிட்டது.

“சாப்பிடுறீங்களா மேடம்” என்று ஆள் வர,

“எடுத்து வைச்சுட்டு நீங்க போங்க, நான் சாப்பிட்டுகிறேன்” என்றவள், அரை மணி நேரம் போல் படுத்திருந்த பின்னே, ஓய்வறை சென்றாள்.

குளித்து முடித்து, அறைக்கதவை திறந்து கொண்டு ஹாலுக்கு வந்தவள், நொடி நின்று திரும்ப நடந்தாள்.

வீடு மிகவும் அமைதியாக இருந்தது. சம்யுக்தா போனில் எதையோ செய்த படி, கிட்சன் சென்று திரும்பி வந்த நேரம், அவளை பின்னிருந்து தாக்க  கை நீண்டது.

மின்னலாக விலகியவள், அவன் கால்களை தட்டி விட்டு, எழுந்து கொள்ள நேரம் கொடுக்காமல் தாக்கினாள்.

அடுத்த நொடி வீட்டில் எங்கெங்கோ இருந்து எல்லாம் ஆட்கள் அவள் முன் குதித்தனர்.

“ம்ம். குருமூர்த்தி பொண்ணுக்கு சண்டை போட தெரியலைன்னா தான் ஆச்சரியம்” என்று மெச்சியபடி முன்னால் வந்தான் ஒருவன்.

“யார் நீ?” என்று சம்யுக்தா கேட்க,

“தீரஜ் தம்பி நான்! உன் அப்பாக்கு என்னை நல்லா தெரியும்” என்றான் அவன் புன்னகையுடன்.