கடந்து செல் காதலுடன்! 34

இரண்டு நாட்கள் கடந்திருந்தது. சம்யுக்தா பெங்களூர் வந்துவிட்டாள்.

இனியும் விடுப்பு எடுக்க முடியாது என்ற கட்டாயத்தினால் பெண் கிளம்பி வந்திருக்கிறாள்.

“பெங்களூர் போறது சரியான முடிவு இல்லை. யோசிங்க” என்று குணா அவளை நிறுத்தி வைக்கவே முயன்றான்.

“பாப்பா. போறது உன் இஷ்டம்ன்னு அண்ணா சொல்லிட்டாங்க” என்றார் மாசிலாமணி.

“போக கூடாதுன்னா அப்பா என்கிட்ட சொல்லியிருப்பார். நான் பெங்களூர் போறது பிரச்சனை இல்லைன்னு தான் தோணுது” என்று குணாவிடம் சொன்னாள் சம்யுக்தா.

“இல்லை. உன் அப்பா தொலைவில இருக்கார். நீ எங்களோட இருக்கிறது தான் பாதுகாப்பு” குணா சொல்ல,

“நான் ரொம்ப நாள் லீவ் எடுக்க முடியாது. ஏற்கனவே என் மேனேஜர் என்மேல ரொம்ப கோவமா இருக்கார்” என்றாள் சம்யுக்தா.

“உனக்கு அங்க தான் வேலை பார்க்கணும்ன்னா எம்பையர் வேணும்ன்னு ஏன் முதலாளிகிட்ட கேட்ட?” குணா டென்ஷானாகி கத்தினான்.

“ம்ப்ச். என்னாச்சு உனக்கு? அவர், க்கும், அவர் உன்கிட்ட ஏதும் சொன்னாரா?”

“உங்க அவர் என்கிட்ட ஒன்னும் சொல்லலை. ஆனா உனக்கு பாதுகாப்பு ரெடி பண்ணிட்டு போயிருக்காரு”

“அப்புறம் என்ன உனக்கு? அப்பா, அவர் இரண்டு பேருமே நான் பெங்களூர் போறதை தடுக்க நினைக்கலை”

“அவங்களுக்கு என்ன? உச்சி வரைக்கும் தைரியம் விரிச்சு ஆடுது. அசால்ட்டா இருப்பாங்க. என்னால முடியாது. நீ இப்போ எங்க பொறுப்பு”

“அங்கிள். என்ன இது? ஏன் இவன் இப்படி பேசிட்டு இருக்கான்” சம்யுக்தா கோவம் கொண்டாள்.

அப்பா, அவர் பாதுகாப்பா இருப்பாங்க. முன்னாடி நடந்த மாதிரி இப்போ எதுவும் நடக்காது. தீரஜ்ஜால இவங்களை தொட முடியாது. அவன் ஸ்ட்ராங்கா இருந்தா என்ன இவரும் தான் இப்போ ஸ்ட்ராங்கா இருக்கார்! பெண்ணின் சமாதானங்கள், அவளின் தைரியம் இவை.

சர்வாச்சார்யா எப்போதுமே பிடிவாதக்காரன் தான். ஆனால் இந்த முறை அவன் பிடிவாதத்தில் கூடுதல் உறுதி.

எதையோ செய்து முடிக்க வேண்டும் என்றார் முடிவெடுத்து விட்டான். இனி நிச்சயம் பின் வாங்க மாட்டான்!

நாயகனும் வளர்ந்துவிட்டான். முன்பே சொல் பேச்சு கேட்க மாட்டான். இப்போது இன்னும் சுத்தம்!

அப்போதாவது அவனை ஓரிடத்தில் அமர வைக்க முடிந்தது. இனி எல்லாம் அதற்கு வாய்ப்பே இல்லை.

தீரஜை முடிக்க நினைக்க திட்டமிட்டதை விட,  அவன் குடும்பத்தை, அப்பா, மகளை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை பற்றி தான் அதிகம் திட்டமிட்டிருக்கிறான்.

அவன் நாடு திரும்பியதில் இருந்தே எல்லாவற்றையும் முன்பே கணக்கிட்டது போல் தான் செய்து கொண்டிருக்கிறான். சிறிதும் தடுமாற்றம் இல்லை, திணறல் இல்லை.

ஏன் இந்த லடாக் பயணத்தையும் எப்போதில் இருந்து ஏற்பாடு செய்ய ஆரம்பித்தானோ தெரியாது.

 வீட்டினருக்கு கடைசி நாளில் சொல்லி, அவர்கள் அவனை நிறுத்தி வைக்க கூட நேரம் கொடுக்காமல், கிளம்பியிருக்கிறான்.

குருமூர்த்திக்கு பயணம் பற்றி சொல்லிவிட்டாலும், அவர் அதில் கவனத்தை செலுத்த முடியாதபடி அல்லவா நேரங்கள் பரபரப்புடன் கடந்துவிட்டிருந்தது.

இந்த கேடியே அவரை எவ்வளவு படுத்திவிட்டான்!

தாயகம் வந்திறங்கிய முதல் நாளே எம்பையரில் வைத்து குருமூர்த்தியை லாக் செய்தது, தானே தன் நிறுவனத்தை எம்பையரில் வலுக்கட்டாயமாக நிறுவியது, திறப்பு விழா அன்று சம்யுக்தாவை கைவளைவுக்குள் கொண்டு வந்தது, வீட்டினர் மட்டுமில்லை எல்லோரின் கவனத்தையும் அதிலே மடைமாற்றிவிட்டது என்று எல்லாமே அவன் கணக்கிடல் தான்.

சம்யுக்தா மட்டுமில்லை, வீட்டினர் எல்லாம் இதை புரிந்து கொள்ளவே இரண்டு நாள் ஆகிவிட்டது.

நான் மறந்துட்டேன்! இவன் அப்போவே பிராடு! சம்யுக்தா மனது தன்னை தானே குட்டி கொண்டது.

ஊட்டியில் கற்பகம் பாட்டியிடம் இவளை பற்றி விசாரித்து தானே பெண்ணை நெருங்கினான்.

அவனை கோயம்பத்தூர் அழைத்து செல்ல, சம்யுக்தாவால் மட்டுமே முடியும் என்பதை கணக்கிட்டு, அதை அவளிடமே வேறு சொல்லி வைத்தானே நல்லவன்!

இப்போது நினைவிற்கு வந்து என்ன செய்வது?

அவன் குருமூர்த்தியுடன் பறந்துவிட்டான்.

இத்தனையும் திட்டமிட்டு செய்தவன் நிச்சயம், எல்லோருக்குமான பாதுகாப்பையும் உறுதி செய்திருப்பான் என்ற நம்பிக்கை சம்யுக்தாவிற்கு உண்டு.

ஆனால் குணா அவளின் உறுதியை குலைப்பது போலவே பேசி வைக்கிறான்.

சம்யுக்தா அதற்கு மேல் அவனிடம் பேசாமல், மாசிலாமணி உடன் பெங்களூர் வந்து சேர்ந்துவிட்டாள்.

குருமூர்த்தி மகளுக்கு தனி வீடு ஏற்பாடு செய்திருக்க, குணா கூடுதல் ஆட்களை பணிக்கு அமர்த்தினான்.

“இப்போ எதுக்கு இத்தனை ஆள்? நான் ஆபிசுக்கு போற பொண்ணு, என்னை இவங்க கூட்டிட்டு போய் கூட்டிட்டு வந்தா, எல்லாம் என்ன நினைப்பாங்க?” என்று குணாவிடம் சத்தமிட்டு கூட பார்த்துவிட்டாள்.

அவனோ, “நீங்க ஆபிசுக்கு போகணும்ன்னு போயிட்டீங்க. அவ்வளவு தான். மத்தபடி இதுல நீங்க தலையிட முடியாது” என்றான்.

மாசிலாமணி இவளுக்கு ஆதரவாக பேச போனால், “உங்களுக்கு ஒன்னும் தெரியாது. நீங்க பேசாம இருங்க” என்று அவரையே அடக்கினான்.

“எனக்கா தெரியாது? டேய் என்ன?” மணி அதட்டலுடன் கேட்க,

“கோயம்பத்தூர்ல நான் இருந்தேன். அவனுங்க எப்படி வெறிகொண்டு தாக்கினாங்கன்னு தெரியுமா உங்களுக்கு?”

“டேய். அது அந்த தம்பியை”

“சம்யுக்தாவும், அவரும் இப்போ வேற வேற இல்லை”

“நீ என்னையே பயமுறுத்த பார்க்கிற?”

“பயப்படுறது ஒன்னும் தப்பில்லை. உஷாரா இருப்போம்” என்றான் குணா.

தீரஜ்க்கு எதிரான அந்த ஆதாரங்கள் சம்யுக்தாவிடம் இன்னமும் இருப்பது தான் குணாவை அமைதியாக இருக்க விடாமல் செய்வது!

ஆதாரத்திற்காக, தீரஜ் எந்தளவு இறங்கினான் என்பதை குணா பின்னாளில் தெரிந்து கொண்டான்.

உயிர்களையே பணயம் வைத்தவன், ஆதாரம் கிடைக்காத தோல்வியை ஏற்று கொண்டு அமைதியாகி இருப்பான் என்ற நம்பிக்கை ஏனோ குணாவிற்கு இல்லை.

இத்தனை வருடங்களில் அவன் கண்டுபிடித்திருந்தால் சம்யுக்தாவிற்கு தானே ஆபத்து!

அதனை கொண்டே சம்யுக்தாவின் கோவத்தை கண்டு கொள்ளாமல் அவளுக்கான பாதுகாப்பில் அதிகமே கவனம் செலுத்தினான்.

மாசிலாமணி கூட குணா பேச்சில் இருக்கும் உண்மையை உணர்ந்து, “கார்ட்ஸ்க்கு ஒத்துழைப்பு கொடு பாப்பா” என்று சம்யுக்தாவிடம் சொன்னார்.

“அங்கிள் நீங்களுமா?” சம்யுக்தா சலித்தாள்.

தந்தை மீதும், நாயகன் மீதும் அவளுக்கு எக்கச்சக்க நம்பிக்கை இருக்க, இவர்களின் பயம் தேவையில்லாதது.

“என்னவோ பண்ணுங்க” என்றுவிட்ட சம்யுக்தா, கார்ட்ஸ் உடன் தான் அலுவலகம் சென்று வந்தாள்.

குருமூர்த்தி அன்றிரவு மகளுக்கு அழைத்து பேச, “எங்கப்பா இருக்கீங்க?” என்று கேட்டாள் சம்யுக்தா.

“ஹோட்டல்ல தங்கிட்டோம்மா” என்றார் குருமூர்த்தி.

“சாப்பிட்டீங்களாப்பா?”

“சாப்பிட்டேன்மா. நீ சாப்பிட்டியா? எப்படி போகுது?” என்று குருமூர்த்தி கேட்க,

பதில் சொன்ன சம்யுக்தா தந்தையின் முகத்தையே புதிதாக பார்த்திருந்தாள்.

அவரின் முகத்தில் என்ன இது? இறுக்கம் நிறைந்த குருமூர்த்தி முகத்தில் தளர்வா? இல்லை இளக்கமா? இல்லை புன்னகையா?

டிராக் பேண்ட், டிஷர்ட் அணிந்திருக்கிறார். இது எப்போதும் அணிவது தானே? ஆனால் அந்த மூப்பு அவரிடம் தென்படவில்லையே!

அவரின் வெள்ளி முடி, மகள் கண்ணுக்கு டாலடித்தது.

மிகவும் ரிலாக்ஸாக அமர்ந்திருக்கிறார். அவரின் தோள்கள், அவரின் மார்பு பகுதிகளில் இருந்த விறைப்பு காணாமல் போயிருந்தது.

“இது மாதிரி நம்ம எம்பையர்க்கு போடணும். லைட் இந்த டிசைன் எனக்கு புடிச்சிருக்கு. உனக்கு ஓகே வா?” என்று அந்த செவென் ஸ்டார் ஹோட்டல் அறையை மகளுக்கு காட்டி சொல்லி கொண்டிருந்தார்.

மகள் அதை எல்லாம் எங்கு கவனித்தாள்? தந்தையை தான் ரசித்திருந்தாள், அவளின் முகத்தில் தன்னை போல் புன்னகை பூத்து கொள்ள, கண்கள் மட்டும் ஏனோ நிறைந்து கொண்டே இருந்தது.

“நாம வீடு ஒன்னு கட்டணும். சென்னையில பெருசா வேணும். ம்ம். நம்ம பழைய வீடு இருக்கட்டும். அதுக்கு அடுத்த தெருவுல இருக்க, மூணு கிரவுண்ட் இடத்தில வீடு கட்டினா சரியா இருக்கும்”

“மூணு கிரவுண்ட்ல வீடா? அதெல்லாம் போதாது. அந்த ஏழு கிரவுண்ட் இருக்குல அங்க மாளிகை கட்டுங்க” என்று வந்தான் சர்வாச்சார்யா.

ஷார்ட்ஸ், கையில்லா டிஷர்ட்டில் இருந்த நாயகன், குருமூர்த்தி அமர்ந்திருந்த கட்டிலில் அவருக்கு பக்கத்திலே மல்லாக்க விழுந்தான்.

குருமூர்த்தி உடனே மகளின் வீடியோ காலை கட் செய்ய, டீபாய் மேல் இருக்கும் போனை எட்டி அழுத்த, சரியாக செய்யாமல் விட்டுவிட்டார்.

சம்யுக்தா இணைப்பிலே  இருக்க, “உன்னால உட்காரவே முடியாதா? முதல்ல தள்ளி போடா” என்று குருமூர்த்தி அவன் உரசலில் கடுப்பாகி போனை கவனிக்காமல், அவனை தள்ளிவிட்டார்.

“பேசாம இருங்க. இல்லை உங்க மடிமேல ஏறி படுத்துப்பேன்” என்று மிரட்டினான் நல்லவன்.

“கிட்ட வந்த கொன்னுடுவேன் ராஸ்கல்” என்ற குருமூர்த்தி, அவன் அருகில் வரவும், வேகமாக கட்டிலை விட்டு எழுந்து விட்டார்.

“உனக்குத்தான் ரூம் இருக்கு இல்லை, அங்க போய் தூங்கு போ” மனிதருக்கு அவரின் மகளிடம் பேச வேண்டும்.