“முதலாளி” என்று குணா வேகமாக வந்தவன்,

“பைக் எல்லாம் அட்டகாசமா இறங்கியிருக்கு. எப்போ வாங்குனீங்க? எனக்கு ஒரு ரைட் வேணும்” என்றான் ஆரவாரத்துடன்.

“பைக்கா? நான் எப்போடா வாங்குனேன்?” என்ற குருமூர்த்தி அதிர்ந்து மகளை பார்க்க, அவளும் அதே அதிர்வுடன் தந்தையை பார்த்து கண்ணாடி பக்கம் சென்றாள்.

சில லட்சங்களை விழுங்கிய பைக், பளபளப்புடன் ஜொலித்து கொண்டிருக்க, அதை பாதுகாத்தபடி ஆட்கள் நின்றிருந்தனர்.

“எம்பையர் திறக்கிற அன்னைக்கு நைட் நாம கிளம்புறோம்” என்று சர்வாச்சார்யா சொல்லியிருந்ததை ஒதுக்கி தவறு செய்து விட்டோமா என்ன?

என்ன பண்ணிட்டு இருக்கான் இவன்? சம்யுக்தா தவித்து நின்றாள்.

வசுந்தரா, சிவப்பிரகாசமும் கூட அதே தவிப்பில் தான் மகனிடம் பேசி கொண்டிருந்தனர்.

சர்வாச்சார்யா திறப்பு விழா முடிந்ததும், அவனுக்கான பண்ணை வீட்டுக்கு சென்றுவிட்டான்.

அடுத்த சில நிமிடங்களில் இருந்து அவன் போன் விடாமல் ஒலிக்க ஆரம்பித்தது.

சம்யுக்தா, அவனின் புகைப்படங்கள் சிவப்பிரகாசம் நெருங்கிய வட்டத்தில் பெரிய பரபரப்பை கிளப்பி விட்டிருந்தது.

அப்பாம்மா, அத்தை குடும்பத்தினர், அவனின் தங்கை, அத்தை பிள்ளைகள், அவன் நண்பர்கள் என்று பலர் அழைத்தனர்.

போன் எடுத்து யாருக்கும் பதில் சொல்லவில்லை.

“நான் ஈவினிங் வீட்டுக்கு வரேன். பேசலாம்” என்று சிவப்பிரகாசத்திற்கு மட்டும் செய்தி அனுப்பியிருந்தான்.

 அதனை கொண்டு சர்வாச்சார்யாவின் ஒட்டு மொத்த குடும்பமும் வீட்டில் குவிந்திருந்தனர்.

“அண்ணி என் வரலை? அவங்க இங்க இருந்திருக்கணும்?” என்று பெரிய அத்தை அண்ணனிடம் சண்டையிடவே செய்தார்.

“ஏதோ ரொம்ப பெரிய கேஸ் போல. அவளால இப்போதைக்கு எங்கேயும் நகர முடியாதுமா. புரிஞ்சுக்கோ” என்று சிவப்பிரகாசம் சொன்ன சமாதானங்களை எல்லாம் அவர்கள் ஏற்கவில்லை.

சர்வாச்சார்யாவின் செயல் அவர்களை அதிகமாகவே கொதிக்க வைத்திருந்தது.

நிதானத்தை இழந்திருந்த அத்தைகள் சர்வாச்சார்யா வீட்டிற்கு வந்த நேரமே, “என்ன தங்கம் இது?” என்று அந்த புகைப்படத்தை சர்வாச்சார்யா முன் வைத்து கேள்வி கேட்டனர்.

“அத்தை. பசிக்குது. சாப்பிட எதாவது கொடுக்க முடியுமா?” என்று கேட்டான் சர்வாச்சார்யா.

“அந்த ரௌடி பங்கஷனுக்கு போனதே தப்பு. இதுல அவன் பொண்ணோட இப்படி? என்ன கருமம் இது?” என்று கேட்டார் சின்ன அத்தை.

“நான் லடாக் கிளம்புறேன். போய்ட்டு வந்ததுக்கு அப்பறம் நாம இதை பத்தி பேசலாம்” என்றான் சர்வாச்சார்யா.

“லடாக் போறியா?” வீட்டினர் உடனே, “நீ போக கூடாது” என்று ஆரம்பித்துவிட்டனர்.

சிவப்பிரகாசம் மனைவிக்கு அழைத்து விஷயத்தை சொல்ல, வசுந்தரா மகனிடம் பேச முயன்றார்.

“நான் ஜஸ்ட் ரைடுக்கு தான் போறேன். நீங்க யாரும் டென்சன் ஆக வேண்டியதில்லை. நான் பத்திரமா போய்ட்டு வந்திடுவேன்” என்றான் சர்வாச்சார்யா.

“அவன். தீரஜ், அவன் அங்கதான் இருக்கான். நீ அங்க போறது பாதுகாப்பு இல்லை”

“சோ. நான் இப்போ பயந்துகிட்டு வீட்லே இருந்துக்கணும். அப்படித்தானே?”

“துஷ்டனை கண்டால் தூர விலகணும் சர்வா” என்றார் பெரிய மாமா.

“எவ்வளவு தூரம் விலகணும்? ஊட்டி, லண்டன் போயிடவா?”

“என்ன பேசுற நீ? திடீர்ன்னு எங்கிருந்து உனக்கு ரைட் போகணும்ன்னு பிடிவாதம் வந்தது?”

“இது பிடிவாதம் இல்லை. என்னோட சின்ன ஆசை”

“நாங்க யாரும் இதுக்கு ஒத்துக்க மாட்டோம். அப்படி உனக்கு போகணும்ன்னா வா நாம ட்ரெக்கிங் போலாம்” என்றான் கார்த்திக்.

“என்னை கோழையா ஒதுங்க சொல்றீங்க? முடியாது. நான் ரைட் போவேன்” என்றான் நாயகன் உறுதியாக.

வீட்டினர் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. அவர்களை இவன் பேச விடாமல் செய்தான். அவர்கள் பேச்சை அப்படியே வெட்டினான்.

“சரி நாங்க கூட வரோம்” என்று வீட்டின் ஆண் பிள்ளைகள் உடன் கிளம்ப,

“நான் என் ப்ரெண்ட்ஸ் கூட போறேன். ட்ரிப் பிளான் போட்டாச்சு. இடையில் மாத்த முடியாது” என்றுவிட்டான்.

சர்வாச்சார்யா டீம் வீட்டிற்கு வந்துவிட, அவனின் பைக்கும் வந்து இறங்கிவிட்டது.

சிவப்பிரகாசம் இனி மகனை நிறுத்த முடியாது என்று புரிந்து கொண்டார்.

சில வருடங்களுக்கு முன் வீட்டினர் இஷ்டத்துக்கு அவனை வளைத்தனர். ஆனால் இப்போது சர்வாச்சார்யா நிமிர்ந்து விட்டான்.  யார் பேச்சும் அவனிடம் எடுபடவில்லை.

வீட்டின் பெரியவர்கள் உடனே வழி நெடுகிலும் அவனுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வேலையில் இறங்கிவிட்டனர்.

சர்வாச்சார்யா தயாராகி வந்தவன், பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டான்.

சுஹாசினி அண்ணனை கட்டி கொள்ள, “நான் வந்ததும் உனக்கு டும் டும் தான் ரெடியா இரு” என்று அவளிடம் மென் குரலில் சொன்னவன், தங்கைக்கு உச்சி முத்தம் கொடுத்தான்.

மற்ற பிள்ளைகள் அவனை அணைத்து, பத்திரம் சொல்ல, அவள் மட்டும் தள்ளி நின்றாள்.

வைஷ்ணவி! நாயகனுக்காக பேசப்பட்ட பெண்ணவள்!

பெரியவர்கள் சொன்னதை ஏற்று கொண்டு விட்டிருந்தவள், இப்போது சர்வாச்சார்யாவை நெருங்காமல் நின்றாள்.

சம்யுக்தா அவன் கைவளைவில் நின்றிருந்த நெருக்கம், இதுநாள் வரை எனக்கு கிடைக்காதது.

என்னை தோளோடு அணைத்து கொள்பவன், சம்யுக்தாவை மார்புக்குள் பொதித்து கொள்கிறான்.

இருவருக்குமான வித்தியாசத்தை ஒற்றை செயலில் உணர்த்திவிட்டான் சர்வாச்சார்யா.

வைஷ்ணவி மெலிதான புன்னகையுடன் சர்வாச்சார்யாவிற்கு விடை கொடுத்தாள்.

சர்வாச்சார்யா எப்போதும் போல் அவளை தோளோடு சேர்த்து அணைத்து கொண்டவன், “வந்ததும் நாம அவுட்டிங் போறோம்” என்றான்.

“போலாம்” என்ற வைஷ்ணவி, அவனுக்கு சிறிதளவு நிம்மதியை கொடுத்தாள்.

“சார். நீங்க தயாராகணும். இதுக்கு மேல லேட் பண்ணாதீங்க” என்று ஆட்கள் குருமூர்த்தியிடம் உடை கொடுத்து, அவரை அவசரப்படுத்தி கொண்டிருக்க,

மனிதர் கடுப்பாகி அந்த உடைகளை தூக்கி எறிந்துவிட்டவர், “அவன் வரட்டும். நான் அவன்கிட்ட பேசிக்கிறேன்” என்றுவிட்டார்.

அவரை ஓர் அளவுக்கு மேல் நெருங்க சர்வாச்சார்யா ஆட்களுக்கு எக்கச்சக்க  தயக்கம்.

“எனக்கு என்ன மரியாதையோ அதை நீங்க அவருக்கு கொடுத்தாகணும்” என்ற சர்வாச்சார்யாவின் உத்தரவை அவர்களால் எப்படி மீற முடியும்? தள்ளி இருந்து கொண்டனர்.

தள்ளி நின்று தான் ஆக வேண்டும் என்ற கட்டாயமும் அங்கு உருவாகி இருந்தது.

ஆம் சட்டென எங்கிருந்து தான் அத்தனை பேர் வந்தார்களோ தெரியவில்லை. எம்பையர் முழுதும் ஆட்கள் தான்.

குருமூர்த்தியின் ஏரியா அது! சிறிது அசப்பு தெரிந்தாலும் மின்னலாக கூடி விடுவர்.

“என்ன’ண்ணே. பங்க்ஷன் தான் முடிஞ்சு போச்சே. அப்புறம் யார் இந்த கோட்டு சூட்டு ஆளுங்க? என்ன கதை அது? ஆமா இதென்ன புது பைக்? நம்ம அண்ணாத்தே எடுத்துகிறாரா? சாவி வாங்கிட்டு வாங்க. ஒரு ரைட் போய்ட்டு வரணும்” என்று மணியை சூழ்ந்து கொண்டிருந்தனர் ஆட்கள்.

அந்த கூட்டத்துக்கு இடையில் பைக் ஒன்று சீறி கொண்டு வந்து நிற்க, “யாருடா அது? எங்க ஏரியால வந்து படம் காட்டுறது?” என்று அந்த பைக்கை சுற்றி கொள்ள,

“நகருங்க. தள்ளி நின்னு பேசுங்க” என்று பாதுகாப்பு ஆட்கள் அவர்களை கட்டுப்படுத்த முயல, ஹெல்மெட்டை கழட்டினான் பைக்காரன்.

சர்வாச்சார்யா முகம் தெரியவும், “அட இது நம்ம தம்பி. டேய் யாருன்னு தெரியலையா? நம்ம அண்ணாத்தே ஆளு. அடிங்க. நம்ம அண்ணாத்தே ஆளா இது? அப்புறம் பாப்பா கோவிச்சுக்கும்” என்றதும், அத்தனை பேரும் பெரிதாக சிரித்து வைத்தனர்.

“அவருக்கு வழியை விடுங்கடா முதல்ல” என்று குருமூர்த்தி சத்தம் கேட்க, சர்வாச்சார்யாவிற்கான பாதை தானே திறந்தது.

 ராஜாவாக அத்தனை ஆண்களுக்கு இடையில் நடந்து சென்றவன், “கிளம்பலையா?” என்று முகப்பில் நின்றிருந்த குருமூர்த்தியிடம் கேட்டான்.

“முதல்ல நாம பேசணும்” என்றார் குருமூர்த்தி.

“போற வழியில பேசிக்கலாம். இப்போ கிளம்புங்க”

குருமூர்த்தி அவன் கையை பற்றி எம்பையருக்குள் அழைத்து சென்றார், பின்னால் வந்த அவன் ஆட்களை கையசைத்து தடுத்துவிட்டான் நாயகன்.

“என்ன பண்ண லடாக் போற? சொல்லு?” என்று குருமூர்த்தி கேட்க,

“நான் ரைட் போகணும். இடைப்பட்ட வேலை தீரஜை மீட் பண்றது” என்றான் நல்லவன்.

“நாம இங்கிருந்து கிளம்பும் போதே அவன் அங்க தயாராகிடுவான்”

“நாமும் தயாராத்தான் போக போறோம்”

“உனக்கு என்ன பண்ணனும்ன்னு சொல்லு. நான் பண்ணுறேன். நீ இங்கேயே நில்லு”

“என் மேல நம்பிக்கை இருக்கா?” சர்வாச்சார்யாவிடம் புதுவிதமான அழுத்தம் தென்பட்டது.

“நீ என்னை நம்புற தானே?” குருமூர்த்தி கேட்க,

“நீங்க உங்களுக்கான வாய்ப்பை பயன்படுத்திட்டீங்க, இது எனக்கான நேரம். என்கூட நீங்க இருக்கணும்னு நான் நினைக்கிறேன்” சர்வாச்சார்யா தெள்ள தெளிவாக பேசி கொண்டிருந்தான்.

பல நாட்களாக இதற்கான திட்டம் போட்டிருக்கிறான்.

குருமூர்த்தி திரும்பி மகளை பார்க்க, “அவரோட போய்ட்டு வாங்கப்பா” என்றாள் மகள்.

உலகத்திலே அவளின் நம்பிக்கை நட்சத்திரம் இவர்கள் இருவர் மட்டுமே! அவளின் வாழ்வும் இவர்கள் இருவருடன் மட்டுமே!

இருவரும் ஒன்றாக பயணம் மேற்கொள்ள போகின்றார்கள். அதுவும் ஆபத்தை நோக்கி. தெரிந்தும் சம்யுக்தா சம்மதம் சொல்கிறாள்!

என் பொண்ணுடா இவ! குருமூர்த்தி பூரித்துபோனவர், மகளை அணைத்து அவளின் உச்சியில் முத்தம் பதித்தார்.

இரு கரங்களால் இருவரையும் தன்னுடன் பிணைத்து கொண்டவர் குருமூர்த்தி.

அதில் ஒருவன் அவரிடம்  எதையோ காட்ட நினைக்கிறான். போய் பார்த்துட்டு தான் வரலாமே!

என்னை மீறி எவன், இந்த அடங்காதவன்கிட்ட வந்துட போறான்?

குருமூர்த்தி தயாராக செல்ல, சர்வாச்சார்யா முன் உணவு நீண்டது.

மாசிலாமணி தான் கொடுத்தார். மறுக்காமல் உண்டான்.

குருமூர்த்தி வரவும் அவருக்கான உணவை மகள் கொடுத்தாள்.

அமைதியான நிமிடங்களுக்கு பிறகு, கனமான நிமிடங்கள்!

“நான் வந்துடுவேன். அதுவரைக்கும் பத்திரம்” என்று மகளுக்கு சொன்னார் குருமூர்த்தி.

பின் மாசிலாமணி, குணாவிடம் பேசினார். தன் ஏரியா ஆட்களிடமும் ஏதோ சென்று பேசினார்.

ரைடிங் உடையில் விறைப்பாக நின்ற சர்வாச்சார்யாவை தொடர்ந்தது பெண்ணின் கண்கள்.

குருமூர்த்தி விடைபெற்று கிளம்ப, தந்தையை பின் தொடர்ந்த சம்யுக்தாவின் கால்கள் சட்டென நின்றது.

பின்னிருந்து அவளை சுற்றி வளைத்திருந்தது சர்வாச்சார்யாவின் கரங்கள்!

கண்களை மூடி கொண்ட சம்யுக்தாவின் விழியோரம் கண்ணீர் துளி.

நாயகனின் மூச்சு காற்று அவளின் கழுத்தில் சுட, அவனின் கைகள் இறுக்கத்தை கூட்டியது.

அவன் வாசம், அவன் அணைப்பு, அவன் நெருக்கம்! பெண்ணின் நெஞ்சத்தை விம்ம வைத்தது.

அவ்வளவு எல்லாம் அவன் என்னைவிட்டு விலகி விடவில்லை!

அவன் கரங்களின் மேல் தன் கரங்களை வைத்தாள் பெண்.

சர்வாச்சார்யாவின் மூச்சு காற்றின் வேகம் கூட, அவன் உதடுகள் அவளின் கழுத்தில் பதிந்தது.

சில நொடிகளே நீண்ட அவன் முத்தம், இறுதியில் அவளுக்கு ஒரு மென்கடியையும் பரிசாக கொடுத்தது.

“ஸ்ஸ்” என்ற சம்யுக்தாவின் கழுத்தோர முடிகள் சிலிர்த்து கொண்டது.

சிவந்த தடத்தில், திரும்ப ஓர் அழுத்தமான முத்தத்தை பதித்தவன், அவள் முகம் பார்க்காமலே அவளை விலக்கி, வேகநடையுடன் சென்று மறைந்தான்.