கடந்து செல் காதலுடன்! 29

“இப்போ முடிவா நீ என்னதான் சொல்ற?” குருமூர்த்தி கேட்க,

“நான் லடாக் போயே தீருவேன்” என்றான் சர்வாச்சார்யா.

“லடாக் போறன்னு ஏன் சொல்ற? சண்டைக்கு போறேன்னு சொல்லுங்க சார்” குருமூர்த்தி சொல்ல,

“அதுவும் ஒரு காரணம். அவ்வளவு தான்” என்றான் நாயகன்.

“ச்சு. போறவன் அமைதியா போய் தொலைய வேண்டியது தானே? ஏன் என்கிட்ட சொல்லி என் பிபியை ஏத்துற”

“ஹீரோ சார் நீங்க இவ்வளவு எல்லாம் கஷ்ட்பட்டுக்க தேவையில்லை. யாரோ ஒரு பையன் எங்கேயோ போய் என்னமோ பண்ணிட்டு போறான். உங்களை பொறுத்தவரை நான் அவ்வளவு தான்”

“ஆமா. நீ யாரோ ஒரு பையன் தான். தெரியுதில்லை. கிளம்பு போ”

“ஆதாரம்” என்றான்.

“கொடுக்க மாட்டேன்ப்பா” சம்யுக்தா நொடியும் இல்லாமல் மறுத்தாள்.

“ம்ப்ச்” என்று முகம் திருப்பி கொண்டான் நல்லவன்.

குருமூர்த்தி மகளை கோவமாக பார்க்க, சம்யுக்தா அவரின் கோவத்தை ஏற்றுக்கொள்ள தயாராகவே இருந்தாள்.

எனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் என் பொண்ணு இவன் விஷயத்துல மட்டும் மாற மாட்டேங்கிறா!

மகளின் மனதில் என்ன உள்ளது என்று தந்தைக்கு புரியாமல் இல்லை.

இருட்டு அறையில் வெறுந்தரையில் மகள் இரவு முழுதும் படுத்திருக்கிறாள். அதுவும் வருடங்கள் சில கடந்து!

பெங்களூர் வேலைக்கு தான் செல்கிறாள். ஆனாலும் இவன் மீதமான மகளின் தேடல் தந்தையை உலுக்கிவிட்டது.

குருமூர்த்திக்கு அவரின் மனைவி சுபா நினைவில் வர, தளர்ந்து போனார்.

அவரும் இப்படித்தானே! எனக்காக மொத்த குடும்பத்தையும் எதிர்த்து நின்றார்.

என் மகள் இன்று அதையே எனக்கு செய்கிறாள்! ஏற்று கொள்ளத்தான் வேண்டுமா நான்?

மற்ற எல்லாவற்றையும் விட மகளின் செயல் அவரை பலவீனத்திற்கு இட்டு செல்கிறது.

குருமூர்த்தி இருக்கையில் அமர்ந்துவிட, சம்யுக்தா கண்களில் கண்ணீர் தேங்கிவிட்டது.

தந்தையை காயப்படுத்திவிட்டாள்! நன்றாகவே புரிகிறது.

தலை குனிந்து கொண்ட மகளை கண்ட குருமூர்த்தி தன்னை சமாளித்து கொண்டார்.

“இரண்டு நாள்ல திறப்பு விழா வைச்சிருக்கேன். அது முடிஞ்சதும் நாம பேசலாம்” என்று சர்வாச்சார்யாவிடம் சொன்னார் குருமூர்த்தி.

நாயகன் அறைக்குள் அங்கும் இங்கும் நடந்தான். அவனுக்கான திட்டங்கள் உண்டு.

சரியான நேரம் பார்த்துதான் அவன் தாயகம் திரும்பியிருப்பது. இரண்டு நாள் தாமதம் எதையாவது மாற்றுமா? புருவங்கள் சுருங்க தீவிர சிந்தனை.

“எனக்கு ஆதாரம் கிடைச்சா மட்டும் போதும்” என்றான்.

சம்யுக்தாவிடம் இருந்து சத்தமே இல்லை. நாயகன் பார்வை அவள் பக்கம் திரும்பவும் இல்லை.

குருமூர்த்தி இதையும் கவனித்திருந்தார். ஏன் அப்படி? மகள் மேல்தான் கோவம் வந்தது.

“நீ என்ன பண்ண போறேன்னு எனக்கு தெரியாது. கேட்க எனக்கு உரிமையும் இல்லை” குருமூர்த்தி சொல்ல,

“என் மூச்சு காத்து கூட படக்கூடாதுன்னு ஒதுங்கினவங்க, உரிமை பத்தி ஏன் பேசுறாங்க மணி அங்கிள்” நாயகன் இடையிட்டு வெட்டினான்.

“நான் பேசி முடிக்கிற வரை வாய திறக்காத” குருமூர்த்தி எச்சரிக்க,

“ரௌடி சார். நீங்க எனக்கு ஆர்டர் போட முடியாது” என்றான் இவன்.

“நான் ரௌடி? அப்போ சார் யாரு?” குருமூர்த்தி நக்கலாக கேட்க,

“உங்களுக்கு வில்லன். ஹீரோ சாரா நீங்க இருக்கும் போது வில்லனும் வேணும் தானே?” என்று இவன் பதிலுக்கு கேட்டான்.

“வில்லன் முகரையை பாரு” குருமூர்த்தி கடுகடுக்க,

“வில்லனுக்கு தனியா ஏதும் பேஸ்கட் இருக்கா மணி அங்கிள்?” என்று இவன் கேட்டான்.

“நீ அடங்க மாட்ட. நீ என்ன பண்ண போறேன்னு சொல்லிட்டு ஆதாரத்தை வாங்கிக்கோ” என்றார் குருமூர்த்தி.

“எதுக்கு சொல்லணும்? என்கூட வாங்க நேர்லே காட்டுறேன்”

“அதெல்லாம் வர முடியாது”

“வரணும். நீங்க வந்துதான் ஆகணும்” என்று அவருக்கு உத்தரவிட்டான் வில்லன்.

“எனக்கு ஆர்டர் போடுறியா நீ?” குருமூர்த்தி கோபம்கொள்ள,

“போடுவேன். நீங்க தான் என்னை வெட்டி விட்டீங்க நான் இல்லை, எனக்கு உங்க மேல எல்லா உரிமையும் இருக்கு. இப்போ மட்டுமில்லை, எப்போவும், கடைசி வரையிலும்” என்றான் சர்வாச்சார்யா.

அவனுக்கான உரிமையில் தந்தை மட்டுமே. நான் இல்லை! சம்யுக்தாவிற்கு புரியத்தான் செய்தது.

அவள் சட்டை நுனியை இழுத்தும் அவன் சிறிதும் கண்டு கொள்ளாததோடு, அவளிடம் இருந்து தள்ளியும் நின்று கொண்டான்.

முழுதாக விலக்கி வைக்கிறான். போகட்டும்!

பெண் அமைதியாக நிற்க, குருமூர்த்தி தான் அவனிடம் மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார்.

“உன் அப்பாம்மாக்கு இந்த விஷயம் தெரியுமா?” குருமூர்த்தி வேறு கேட்டார்.

சர்வாச்சார்யா அவரை நொடி நேருக்கு நேர் பார்த்தவன், “என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது?” என்று பாய்ந்தான்.

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு” அவர் அதட்ட,

“தெரியாது” என்றான்.

“ஏண்டா இப்படி இருக்க? அவங்க உனக்காக எத்தனை முறை தான் கஷ்டப்படுறது?”

“சரி என்ன செய்யலாம் சொல்லுங்க. எவன் எக்கேடு கெட்டு போனா எனக்கென்னன்னு என் வேலையை பார்த்துட்டு போயிடணுமா நான்?” என்று கைகட்டி நின்றான்.

“ஆமா அப்படித்தான் போகணும். பணத்துக்காக சண்டை போட்டு, என் வாழ்க்கையை என் கையாலே அழிச்சுகிட்ட இந்த மடையன் குருமூர்த்தி மாதிரி நீ வாழாத”

“சரி. அப்போ கோகுல், அவனுக்கென்ன பதில் சொல்லட்டும் நான்?”

“அவன் உன்கிட்ட பதில் கேட்க மாட்டான். நீயே குற்ற உணர்ச்சியில் பதில் தேடிட்டு அவன் மேல ஏண்டா சொல்ற?”

“ஆமா அப்படியே கூட வைச்சுக்கோங்க. என் குற்ற உணர்ச்சியை நான் ஒழிக்கணும்ன்னா அவனை நான் ஒழிக்கணும்”

“கேட்க மாட்ட இல்லை. எங்க யார் பேச்சையும் நீ கேட்க மாட்ட இல்லை”

“ம்ஹ்ம்” என்று சர்வாச்சார்யாவிடம் ஓர் விரக்தி புன்னகை.

“காயம் வாங்கினவன் கடைசி வரை வலியிலே வாழணும் இல்லை” என்றான்.

“ம்ப்ச். டேய் தம்பி”

“மற்ற எல்லாரையும் விட நீங்க என்னை புரிஞ்சுப்பீங்கன்னு நினைச்சேன். இல்லை. என்னை ஏமாத்திட்டீங்க. செகண்ட் டைம் என்னை ஏமாத்திட்டீங்க நீங்க!”

“நான் சொல்றதை கொஞ்சம் கேளு”

“அதெப்படி நான் நிம்மதியா தூங்கலாம், சந்தோஷமா சிரிக்கலாம். ம்ஹூம். கூடாது. எனக்கு அந்த ரைட்ஸ் இல்லை. முதுகுல குத்து வாங்கிட்டு, நெஞ்சை நிமிர்த்த நினைக்கலாமா நான்?”

“என்னடா பேசுற நீ?”

“ஏன் தப்பா சொல்லிட்டேனா? ஒளிஞ்சு மறைஞ்சு உசுரை காப்பாத்திக்கிட்டவன் தானே நான்? எனக்கெதுக்கு மீசை?”

“சர்வாச்சார்யா” குருமூர்த்தி பெரிதாக ஓர் அதட்டல் போட,

“போதும் வாயை மூடுங்க” சம்யுக்தா கோபம்கொண்டாள்.

“என்ன, என்ன, எதுக்கு இப்போ அதட்டுறீங்க? முதல்ல என்னை அதட்ட நீங்க யாருங்க?”  அதற்கும் ஏறினான்.

இவனை அடக்கவே முடியாதா? தந்தை மகளுக்கு கண் கட்டியது.

“இரண்டு நாள் டைம் கொடு, நாம கட்டாயம் பேசலாம்” என்றார் குருமூர்த்தி.

“ம்ஹூம். பேச்சே கிடையாது. உங்க எம்பையரை நீங்க திறந்து வைக்கிறன்னைக்கு  நைட் நாம கிளம்புறோம். பைக் உங்களுக்கு வந்து சேரும்” என்றான் அவன் முடிவாக.

குருமூர்த்திக்கு அவனை மறுக்க கூட அச்சமாக இருந்தது. விட மாட்டான். விடவே மாட்டான்! அவன் காரியத்தை சாதிக்கும் வரை ஓய மாட்டான்!

இந்த நொடிதான் மகள் ஏன் அவனை கோயம்பத்தூர் வரை அழைத்து சென்றாள் என்பதும் லேசாக புரிகிறது.

எனக்கே இவனை சமாளிக்க முடியவில்லை. என் பொண்ணு என்ன செய்வா? பாவம் அவளை என்ன பாடு படுத்தினானோ?

தந்தை மகளை கரிசனையாக பார்க்க, “க்கும்” என்றான் வில்லன் உர்ரென.

“நான் கிளம்புறேன். பைக் ரைடிங்கிக்கு ரெடியா இருக்கணும்” என்று நாயகன் விடைபெற,

“அங்கிள்” என்றாள் சம்யுக்தா சட்டென. அவள் கண் கேரியரை சுட்டி காட்ட,

“தம்பி. இட்லி கேட்டிங்களே. சாப்பிட்டு போங்க” என்று மாசிலாமணி அவனுக்கு தட்டு எடுத்து பரிமாறினார்.

அவன் உடனே உணவுண்ண செல்லவில்லை. அப்படியே நின்றவனை கண்டு சம்யுக்தா என்ன புரிந்து கொண்டாளோ கதவை திறந்து கொண்டு வெளியே சென்றுவிட்டாள்.

நல்லவன் சில நொடிகள் நின்று, பின்னே உணவுண்ண சென்றான்.

குருமூர்த்தி அவனை கோவமாக முறைக்க, “வேலை இல்லையா உங்களுக்கு?” என்று அவரிடம் கேட்டுவைத்தான்.

“எல்லாம் நேரம்டா” குருமூர்த்தி தலையில் அடித்து கொண்டார்.

திருப்தியாக உணவை முடித்து கொண்டவன் காருக்கு வர, சம்யுக்தா ஏதோ ஒரு தளத்தில் நின்று அவன் கார் மறையும் வரை பார்த்திருந்தாள்.

சர்வாச்சார்யா கார் அவர்கள் மாளிகைக்குள் நுழைந்தும், நுழையாமலும் வீட்டினர் மொத்தமும் ஹாலில் கூடிவிட்டனர்.

“இந்தியா வந்ததும் நேரா அங்கதான் போகணுமா நீ?” பெரிய அத்தை கேட்க,

“ஆரத்தி எடுத்துட்டு வீட்ல போய் பேசிக்கலாம், ம்ம். எடுங்க” என்றார் பெரிய மாமா சத்தியன்.

“மாமாங்க கொஞ்சம் கோவமா இருக்காங்க. எதுவும் பேசிடாத ராஜா” என்று சிவப்பிரகாசம் மகன் கையை பிடித்தபடி வீட்டுக்குள் அழைத்து வந்தார்.

“அண்ணா” என்ற வந்த அவனின் தங்கை சுஹாசினியை தோளோடு அணைத்து கொண்டான் சர்வாச்சார்யா.

அதன் பின் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி கொண்டதும், சிறியவர்கள் ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டனர்.

“தாத்தா ரூமுக்கு போய்ட்டு வரேன்” என்றவன், அவரின் அறைக்கு சென்று சந்தன மாலையிட்ட பெரியவரின் புகைப்படத்தின் முன் சில நிமிடங்கள் நின்றான்.

பெருமூச்சுடன் திரும்ப, “நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா?” என்று வசுந்தரா மகனிடம் கேட்டார்.

“எதை கேள்விப்பட்டீங்க மாம்?” என்றபடி அவரின் கழுத்தில் மாலையாக கைகளை கோர்த்து அவரின் தோளில் சாய்ந்து கொண்டான் செல்ல மகன்.