வசுந்தரா தீர்ப்பெழுதி முடிக்க, குருமூர்த்தி நெஞ்சம் மகளை பார்க்க, பார்க்க விம்மியது. எங்கே மகளை கட்டிபிடித்து கொண்டு கதறிவோடுவோமோ என்று பெரும் பயம்.
மகளிடம் அழுவதில் பிரச்சனையில்லை. ஆனால் ஏற்கனவே அவள் மிரட்சியுடன் தான் என்னை பார்த்து கொண்டிருக்கிறாள். இதில் நான் அழவும் செய்துவிட்டால் நிச்சயம் என் மகள் அதிகமே பயந்துவிடுவாள்!
அடுத்து சண்முகம் குடும்பத்தார்! அவரின் எதிரிகள் முன் அழக்கூடாது என்ற வைராக்கியம்!
நான் தோற்று போக மாட்டேன். நிச்சயம் மீண்டு வருவேன்! குருமூர்த்தி கலங்கிய கண்களை கட்டுப்படுத்தி கொண்டு ஆறு வயது மகள் சம்யுக்தா முன் முட்டியிட்டு அமர்ந்தார்.
“ப்பா. ப்பா” என்று மகள் அவரை நெருங்க முடியாமல் விசும்பினாள்.
“அவரை கொஞ்ச நேரம் தனியா விடுங்க. ப்ளீஸ்” என்று சுபத்ராவின் சீனியர் லாயர் காவலர்களிடம் கேட்டு கொண்டார்.
அவர்களுக்கும் சம்யுக்தாவின் கண்ணீர் இரக்கத்தை கொடுத்திருக்க கூடும்.
“எனக்கு பயமா இருக்கு. நீயும் இல்லை, அம்மாவும் இல்லை” என்று மகள் இன்னும் அழுகையை கூட்டினாள்.
“அந்த தாத்தா, பாட்டி என்னை அங்க வர கூடாதுன்னு சொல்லிட்டாங்க” என்று மகள் சொல்ல,
குருமூர்த்தி திரும்பி மணியை கேள்வியாக பார்த்தார். “அது. பாப்பா எங்களோட இருக்க ரொம்ப பயப்பட்டாங்க. அதான் சுபத்ரா அண்ணி அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போனோம்” என்று தயங்கி விளக்கம் கொடுத்தார்.
குருமூர்த்திக்கு அளவில்லா கோவம்! “யாரை கேட்டுடா என் பொண்ணை அங்க கூட்டிட்டு போனீங்க?” என்று ஆத்திரத்தை அடக்கி கொண்டு கேட்டார்.
“இல்லைண்ணா. பையனா இருந்தா கூட அவனை சமாளிச்சிடலாம். ஆனா பாப்பாவை எப்படி? அதான். கூட ஜட்ஜ் மேடமும் ரத்த சொந்தம்கிட்ட பாப்பாவை விடுங்க, இல்லை எங்ககிட்ட ஒப்படைக்கிற வழியை பாருங்கன்னு போன முறை வந்தப்போவே சொன்னாங்க. அதான்” மணி சொல்ல, குருமூர்த்திக்கு நெஞ்சம் இறுக்கி பிடித்தது.
“உங்க பொண்ணை நாங்க ஹோம்ல சேர்க்க ஏற்பாடு பண்ணியிருக்கோம்” என்று வசுந்தரா அங்கு வந்தார்.
“இல்லை. நான் வேற ஏற்பாடு பண்றேன்” குருமூர்த்தி மகளை தன் அணைப்பிற்குள் கொண்டு வந்தார்.
“நான் உங்க பொண்ணை நல்ல இடத்துல விடுறேன். சின்ன பொண்ணை உங்க ரௌடி கூட்டத்தோடு அனுப்ப முடியாது” என்று வசுந்தரா சொன்னவர், “நீங்க இதுக்கு ஒத்துக்க தான் வேணும். உங்களுக்கு இதை தவிர வேற வழி இல்லை” என்று முடித்துவிட்டார்.
சுபத்ராவிற்காக மட்டுமே சம்யுக்தா பொறுப்பை தன் கைகளில் பெர்சனலாக எடுத்து கொண்ட வசுந்தராவிற்கு, குருமூர்த்தி கண்ணீர் மகள் மேல் அவர் வைத்திருக்கும் பாசத்தை சொன்னது.
குருமூர்த்தியிடம் இருந்து சம்யுக்தாவை கதற, கதற தான் பிரிக்க முடிந்தது. தந்தையை விட மாட்டேன் என்று அவரின் சட்டையை பிடித்து ரகளை செய்துவிட்டாள்.
அழுது, அழுது ஓய்ந்து போன சம்யுக்தாவை தன் அறைக்கு அழைத்து சென்றார் வசுந்தரா.
முதலில் வீட்டுக்கு சென்று, சில முக்கியமான பைல்களை வீட்டில் வைத்துவிட்டு, அதன் பின் ஹோம் செல்ல திட்டமிட்டிருந்தார் வசுந்தரா.
வசுந்தரா வீட்டிற்குள் கார் நுழைந்த நேரம் சரியாக அவர் போன் வந்தது. அவசரமாக ஓர் குற்றவாளியை ஆஜர்படுத்த வேண்டும் என்றார்கள்.
வசுந்தரா வீட்டினர் இது போன்ற விஷயங்களை வீட்டிற்கு கொண்டு வருவதை விரும்புவதில்லை என்பதால், வசுந்தரா திரும்ப கோர்ட்டிற்கு செல்ல வேண்டிய கட்டாயம்.
சம்யுக்தாவை திரும்ப அங்க கூட்டி செல்ல வேண்டுமா என்று தோன்ற, “நீ இங்கேயே இருக்கியா? நான் சீக்கிரம் வந்துடுறேன்” என்று சம்யுக்தாவிடம் கேட்க, அவள் தலையசைக்க மட்டுமே செய்தாள். உரிமையாக மாட்டேன் என்று சொல்ல தயக்கம்!
அவருக்கென தனியாக வைத்திருந்த உதவியாளரிடம் சம்யுக்தாவை வீட்டிற்குள் அழைத்து சென்று பார்த்துக்க சொல்லி வசுந்தரா கிளம்பிவிட்டார்.
“யார் இந்த பொண்ணு?” என்று வீட்டிற்குள் வந்த சம்யுக்தாவை கேட்டார் சிவப்பிரகாசத்தின் சின்ன தங்கை.
வசுந்தரா உதவியாளர் குருமூர்த்தி பற்றி எல்லாம் சொல்லி, அவரோட பொண்ணு என்றார்.
“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா, கொலைகாரனோட மகளை வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்திருப்ப?” என்று உதவியாளருக்கு பளிச்சென ஒன்று விழுந்தது.
சம்யுக்தா திக்கென அதிர்ந்து மிரண்டு போனாள்.
“வசுந்தரா மேடம் சொல்லித்தான்” என்று சொன்னதை அவர் காதில் வாங்கவே தயாரில்லை.
“அவளை கூட்டிட்டு வெளியே போ. உடனே” என்று உதவியாளரை விரட்ட, அவர் வேகமாக சம்யுக்தாவின் கைப்பற்றி இழுத்து வந்து வாசலுக்கு வெளியே உள்ள சிட் அவுட்டில் அமர வைத்தார்.
நான் இங்க வந்தது இவர்களுக்கு பிடிக்கவில்லை என்று சம்யுக்தாவிற்கு நன்கு புரிந்து போனது.
நின்றிருந்த கண்ணீர் மீண்டும் வழிய ஆரம்பிக்க, சம்யுக்தா நன்றாக குனிந்து கொண்டாள்.
“ஒய் குட்டி பாப்பா. யார் நீ?” என்று குரலொன்று வர, சம்யுக்தா பயந்து போய் எழுந்து நின்றாள்.
அவளுக்கு முன் ஆண், பெண் என இவளை விட கொஞ்ச பெரிய குட்டீஸ்கள் பள்ளி உடையில் நின்றிருந்தனர்.
“நா. நான் சம்யு” என்று அவள் திக்கி திணறி சொல்ல,
“சம்யுவா?”
“செல்ல பேர் சொல்றாடா”
“ஆமா முழு பேர் வேற எதாவது இருக்கும்” அவர்களுக்குள் பேசி கொண்டவர்கள்,
“என்ன வயசு உனக்கு? எங்க படிக்கிற?” என்று கேட்டு, அவளிடம் பதிலை வாங்கி கொண்டிருந்தார்கள்.
“அழுதியா என்ன? முகம் எல்லாம் இப்படி வீங்கியிருக்கு?” என்று ஒருவன் கேட்க,
“ஆமா, இல்லை” என்று இருபக்கமும் தலையசைத்தாள்.
“அங்க என்ன பேச்சு உங்களுக்கு? கிளாஸ் போகணும். சீக்கிரம் போய் ரெடியாகி வாங்க” என்று தங்கள் வீட்டு பிள்ளைகளை விரட்டினார் சிவபிரகாசத்தின் தங்கை.
“கிளாஸ் முடிச்சு நாங்க விளையாட போவோம். நீங்க வீட்ல சொல்லிடுங்க” என்று அவரிடம் ஆர்ப்பரித்து கொண்டே அந்த கூட்டம் உள்ளே சென்றது .
நிமிடங்கள் செல்ல, சம்யுக்தா அந்த இருக்கையிலே தூங்கி இருந்தாள்.
“பாப்பா. ஒய். மயங்கிட்டியா என்ன?” என்று அவள் கன்னத்தை யாரோ தட்ட,
“ஹான்” என்று வேகமாக முழித்த சம்யுக்தா முன் நின்றவன், “ஓஹ். தூங்கிட்டு இருந்தியா? இந்தா சாக்லேட்” என்று ஓர் பெரிய பேக்கட்டை நீட்டினான்.
ஏதோ வெளிநாட்டு சாக்லேட் போல. சம்யுக்தா, “வேணாம்” என்று சொல்ல,
“உனக்கு சாக்லேட் பிடிக்காதா?” அவன் கேட்க, அவளுக்கு தான் கொள்ளை இஷ்டம் ஆகிற்றே. சட்டென பிடிக்காது என்று சொல்ல வாய் வரவில்லை.
“பிடிக்கும் தானே? வாங்கிக்கோ” என்று அவளின் மடியில் வைத்தவன்,
“ஏன் இங்கேயே இருக்க? உன் அப்பாம்மா எங்க?” என்று கேட்டான்.
சம்யுக்தா, “அம்மா இல்லை. அப்பா ஜெயிலுக்கு போயிட்டார்” என்றாள்.
“அப்பா ஜெயிலுக்கு போனதை இந்த குட்டி எவ்வளவு பெருமையா சொல்லுது பாரு?” என்று நொடித்த சிவபிரகாசத்தின் தங்கை,
“ஆச்சார்யா. கிளாஸ்க்கு நேரம் ஆச்சு. வா தங்கம் போலாம்” என்று அவன் கைப்பற்றி இழுத்து சென்றார்.
அன்று தன்னை ஆச்சரியமாக திரும்பி பார்த்தபடி சென்றவன் தான் சர்வாச்சார்யா என்பதை சம்யுக்தா நேற்று இரவு கண்டு கொண்டாள்.
இன்று அதே சர்வாச்சார்யா அவளின் முன் இருக்கிறான். அவனை நோக்கி நகரவே சம்யுக்தாவின் கால்கள் தயங்கின.
மருத்துவமனை உடையில், தளர்ந்து படுத்திருந்தவனிடம் கோவத்திற்கு மட்டும் குறைவில்லை.
“பக்கத்துல வா’ன்னு கூப்பிட்டா தான் வருவியா?” என்று பாய்ந்தான் நாயகன்.
சம்யுக்தா அவனிடம் சென்று நின்றாள். இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை கடுப்பாக பார்த்தவன், “என்கிட்ட வந்தா எதாவது ஒட்டிக்கும்ன்னு பயப்படுறியா?” என்று சுள்ளென கேட்டான்.
“ம்ப்ச். என்ன பேச்சு இது? உங்களுக்கு தான் இன்பெக்ஷன் ஆகும்” என்று சம்யுக்தா சொல்ல,
“அதனால எல்லாம் போய் சேர்ந்துட மாட்டேன். நெருங்கி வாடி” என்றவன், அவள் கைப்பற்றி இழுக்க முயல,
“நானே வரேன்” என்று அவனை சிரமப்படுத்த கூடாது என்பதால் அவனை நெருங்கி நின்ற பெண்ணின் கையை பற்றி இழுத்து தன் ஒற்றை கைக்குள் சிறை வைத்து கொண்டான்.
அவனின் பிடி அளவுக்கு அதிகமாகவே நெருக்கி பிடித்தது, “உன் அப்பா எப்படி இருக்கார்?” என்று கேட்டான்.
“ம்ம். இப்போ ஓகே” என்று சொல்ல,
“நான் எப்படி இருக்கேன்னு கேட்க மாட்டியா?”
“ஸாரி” என்ற சம்யுக்தா விசாரிக்க வர,
“நான் கேட்டு நீ ஒன்னும் செய்ய தேவையில்லை” என்றான்.
“என்னாச்சு? ஏன் இவ்வளவு கோவம்?” சம்யுக்தா அவன் தலை முடியை வருட சென்று பின் வாங்கினாள்.
“இதுக்கு தான், இதனால தான் எனக்கு கோவம் வருது. என்னை தொட்டா என்னடி உனக்கு? கை வந்து பின்னாடி போகுது” என்று பாய்ந்தான்.
“அப்படிதாண்டி பேசுவேன். என்னை கொண்டு வந்து ஹாஸ்பிடல்ல தள்ளுனதோட சரி. அதுக்கு பின்னாடி என்னை என்ன கண்டுக்கிட்ட நீ? இப்போ கூட நான் கூப்பிட்டு தான் என்னை பார்க்க வந்திருக்க”
“அப்பாவை பார்க்க வேணாமா?”
“என்னையும் தான் நீ பார்க்கணும்”
“உங்களுக்கு உங்க பேமிலி இருக்கு. என் அப்பாக்கு நான் மட்டும் தான் இருக்கேன்”
“நான் என்ன செத்தா போயிட்டேன். நானும் தாண்டி இருக்கேன்”
“மலைமாடு. உன் வாயில நல்ல வார்த்தையே வராதா?” அவன் உச்சி முடியை பிடித்து ஆட்ட கைகள் பரபரத்தது.
சர்வாச்சார்யா அவளை உஸ், உஸ் என பார்த்திருக்க, “என்ன?” என்று கேட்டாள்.
“நீ முன்ன மாதிரி இல்லை” என்றான்.
“இருக்க மாட்டேன். இனி இப்படித்தான்” சம்யுக்தா சொல்லிவிட்டாள்.
“ஏன்? ஏன் இருக்க மாட்ட” வேகமாக எழ முயன்றவனை,
“ஏய் என்ன பண்ற?” என்று சம்யுக்தா அவனை எழும்ப விடாமல் படுக்க வைத்தாள்.
காயம் கண்டிருந்த கையை தொட கூடாது என்பதால், அவனை மிகவும் நெருங்கியிருந்தாள்.
சர்வாச்சார்யா கண்கள் அவள் கண்களை கட்டி இழுக்க முயல, வேகமாக தள்ள முயன்ற பெண்ணை ஒற்றை கையால் மீண்டும் தன் மேல் இழுத்து போட்டான்.
“டேய். என்ன பண்ணிட்டிருக்க? லூசா நீ?” சம்யுக்தா பயந்து போனாள். அறுவை சிகிச்சை முடிந்தவன் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்!
“என்கிட்டேயே இரு” என்றான். அவனிடம் மிச்சம் இருக்கும் சத்து அனைத்தையும், பெண்ணை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கே பயன் படுத்தி கொண்டிருக்கிறான்.
சம்யுக்தாவிற்கு புரிந்தது கலக்கத்தை தான் கொடுத்தது. இமை சிமிட்டி கொண்டவளின் பின் கழுத்தை பற்றி இழுத்து தன் உதட்டுக்கு அருகில் கொண்டு வந்தவன், அவளின் நெற்றியில் அழுத்தமான முத்தத்தை வைத்தான்.
சம்யுக்தா மூடிய கண்களில் இருந்து வெளியேறிய கண்ணீர் அவன் இதய பகுதியை ஈரமாக்கியது.
அவன் முத்தத்தை முழுதாக தனக்குள் எடுத்து கொண்டவள், அவனிடம் இருந்து விலகி நின்றாள்.
சர்வாச்சார்யா முகமும் இப்போது தெளிந்திருக்க, “என்னாச்சு?” என்று கேட்டான்.
“ஸாரி. அவன்கிட்ட கொடுக்க வேண்டிய சூழ்நிலை” என்றாள் சம்யுக்தா.
“கோவம் வருது தான். ஆனா என்ன செய்ய? என்னை கொன்னுடுவேன்னு மிரட்டியிருப்பான். என் வீட்டாளுங்களும் பயந்து போய் உனக்கு ப்ரெஷர் கொடுத்திருப்பாங்க” என்றவன்,
“எப்படியும் பாஸ்வோர்ட் தெரியாம அவன் ஒன்னும் பண்ண முடியாது” என்றான்.
“பைல்ஸ் காபி பண்ணும் போது குணா பாஸ்வோர்ட் மாத்தி போட்டு ஒரு வாய்ப்பை வேஸ்ட் பண்ணிட்டான். இன்னொரு வாய்ப்பை தவற விட்ட தீரஜ், பாஸ்வோர்ட் கேட்டு என்னை பார்க்க வந்திருந்தார்” என்று சம்யுக்தா எல்லாம் சொன்னாள்.
“குனாகிட்ட கொடுத்தியா? ஏய் என்னடி சொல்லிட்டிருக்க நீ?” அவன் பதறினான்.
“இப்போ என்ன? நீங்க ட்ராவல்ல என்கிட்ட சொன்னதை தான் நான் செஞ்சேன்”
“நான் உன்னை செய்ய சொன்னேன்டி” என்று அவன் பல்லை கடித்தான்.
“டேய் என்னை ரூமுக்குள்ளன் அடைச்சு வைச்சுட்டு போனது யாரு” என்று பெண் பாய்ந்தாள்.
“ஆஹ். சரி, சரி விடு” என்றவன், “புது சிப் எங்க வைச்சிருக்க?” என்று கேட்டான்.
“என்கிட்ட தான் இருக்கு” என்றாள் சம்யுக்தா.
“அப்போ கொடுடி”
“கொடுக்க மாட்டேன்”
“ஏன் கொடுக்க மாட்ட? அந்த ஆதாரத்தை எல்லாம் வைச்சுத்தான் அவனை பிடிச்சு கொடுக்கணும்”
“நீங்க அதுக்கான ஸ்டெப் எடுத்தாலே அவன் திரும்ப உங்க பின்னாடி வருவான்”
“வந்தா வந்துட்டு போறான். நீ ஆதாரத்தை கொடு”
“ஆமா உங்களுக்கென்ன? உங்களை காப்பாத்த தான், என் அப்பா மாதிரி ஆளுங்க இருக்காங்களே” சம்யுக்தா நக்கலாக சொன்னாள்.
சர்வாச்சார்யா அவளை முறைக்க, “நான் இல்லாததை சொல்லிட்டேனா?” என்று கேட்டாள் சம்யுக்தா.
“நாம அப்புறம் பேசிக்கலாம். நீ கிளம்பு” என்றான் சர்வாச்சார்யா.
“உண்மையை எப்போ வேணும்ன்னாலும் பேசலாம். பணம், பதவி, பவர் எல்லாம் உங்களை விட அவனுக்கு அதிகமாம். நீங்க பத்துக்குள்ள வந்தா, அவன் அஞ்சுக்குள்ள வருவான்னு உன் அப்பா சொல்றார்”
“அதுக்கென்னடி இப்போ?”
“தீரஜை ஜெயிக்க முடியாம என்கிட்ட உங்க மொத்த குடும்பமும் கேட்கிறாங்க. உயிர் தான் முக்கியம், தாழ்ந்து போறது முக்கியம் இல்லையில்லை”
“சம்யுக்தா”
“உங்களை சுத்தி அத்தனை போலீஸ், கார்ட்ஸ், அடியாட்கள் எல்லாம் இருந்தும் பயம். ஒருத்தர் கூட முன்னாடி நின்னு உங்களை காப்பாத்த தயாரா இல்லை. அவங்களை சொல்லியும் குத்தம் இல்லை. நீங்களே இன்னொருத்தர் பின்னாடி மறைஞ்சிருக்கும் போது, அவங்களும்” என்று தோள் குலுக்கியவள்,
“என் அப்பாக்கு மட்டும் அடிபட்டிருக்கலைன்னா சிப் அவன் கைக்கு போயிருக்காது. ஆனா என்ன செய்ய?”
“உன்னை கிளம்புன்னு சொன்னேன்”
“உங்களை நீங்களே அக்சப்ட் பண்ணிட்டு, ஒதுங்கி இருங்க. எல்லாராலும் என் அப்பா மாதிரி ஹீரோ ஆகிட முடியாது” என்றுவிட்டாள் சம்யுக்தா.