“இன்னும் தீரஜ் தம்பிய ஏன் விடலை. அந்த குருமூர்த்திக்கிட்ட பேசிட்டு, அவனை உடனே விட சொல்லு” என்று சிவப்பிரகாசம் அவரின் மேலதிகாரிக்கு சொல்லி அனுப்ப, அவன் போன வேகத்தில் திரும்பி வந்து, “முடியாதுன்னு சொல்லிட்டார்” என்றான்.
“அதெப்படி அவன் முடியாது சொல்வான்?” விநாயகம் கோவமாக கேட்டார்.
“ஏன்? என்னாச்சு? காரணம் ஏதும் சொன்னானா?” என்று சத்தியன் யோசனையாக கேட்க,
“அவர் என்னை பார்க்கவே இல்லை. அந்த சின்ன பையன் தான் சொன்னான்” என்றான்.
“தீரஜ் ஹாஸ்பிடல் வரார்” என்று வேறொரு ஆள் வந்து தகவல் சொல்ல,
சிவப்பிரகாசம் உடனே லிங்கத்திற்கு அழைத்து பேச, “ஆமா வரார்” என்றார் அவர்.
“எங்ககிட்ட சொல்ல வேண்டாமா?” என்று சிவப்பிரகாசம் கேட்க,
“குருமூர்த்தியை மீட் பண்ண வரார். உங்ககிட்ட என்ன சொல்றது?” என்று வைத்துவிட்டார் லிங்கம். அவருக்கும் நேற்று இவர்கள் செய்த கோவம் குறையாமல் இருக்கிறதே! குருமூர்த்தி கண்முழித்த பின் இவர்களின் தைரியத்திற்கு என்ன குறை வந்துவிட போகிறது?
சிவப்பிரகாசம் வீட்டின் ஆண்கள் வேகமாக குருமூர்த்தி இருக்கும் தளத்திற்கு வர, அங்கு தீரஜ் இருந்தான்.
அதுவும் எப்படி? குருமூர்த்தி இருக்கும் அறையின் வாசலில் காத்திருந்தான். சிவப்பிரகாசம் வீட்டினர் அதிர்ந்து போனார்கள்.
“நான் மறைஞ்சிருந்து சண்டை போடுற ஆள் இல்லை. எப்போ வேணும்ன்னாலும் என்னை நீங்க மீட் பண்ண முடியும்” என்றார் குருமூர்த்தி.
“ஹாஹா. கேள்விப்பட்டதை விட நீங்க ஷார்ப் தான்” என்றவன்,
“உங்க பொண்ணுகிட்ட பேச பர்மிஷன் கிடைக்குமா?” என்று கேட்டான்.
“ஆளுங்களை இறக்கி மிரட்டி தானே உங்களுக்கு பழக்கம். இதென்ன புதுசா?” குருமூர்த்தி கேட்க,
“சூழ்நிலை பொறுத்து என் நடவடிக்கை மாறும்” என்று தோள் குலுக்கினான்.
“சம்யுக்தா” என்று தந்தை அழைக்க, அவருக்கு பக்கத்தில் வந்தாள் பெண்.
“சோ. அந்த சிப் பத்தி உனக்கு எல்லாம் தெரியும்” என்றான் தீரஜ்.
“தெரியும்” என்றாள் சம்யுக்தா.
“அதை என்னால சரிபண்ண முடியுமா?” என்று கேட்டான்.
“முடியாது” சம்யுக்தா தெளிவாக சொன்னாள்.
“சரி பாஸ்வோர்ட் சொல்லு”
“எனக்கு தெரியாது”
“இந்த பையன் நேத்து சண்டை நடந்துட்டு இருந்தப்போ, வெளியே போய்ட்டு வந்தான். அவன்கிட்ட இந்த சிப் கொடுத்துவிட்டது நீதானே?” குணாவை கைநீட்டி கேட்டான்.
சம்யுக்தா அதிரவெல்லாம் இல்லை. “ஆமா கொடுத்தேன். ஆனா பாஸ்வோர்ட் தெரியாம திரும்ப கொண்டு வந்துட்டான்” என்றாள்.
தீரஜ் நம்பதான் வேண்டியிருந்தது. ஏனெனில் பாஸ்வோர்ட் தவறாக போட இரண்டு வாய்ப்பு மட்டுமே அதில் உள்ளது. முதல் வாய்ப்பை இவர்கள் பயன்படுத்தி இருந்ததால், இரண்டாம் வாய்ப்பை தீரஜ் தவற விட்டிருந்தான்.
அப்போது தான் அடுத்த முறை தவறாக பயன்படுத்தினால், இதில் உள்ள மொத்த தகவலும், இந்த, இந்த ஆட்களுக்கு சென்றுவிடும் என்று காட்டியது.
அதில் நாட்டின் முதன் மந்திரி உள்பட பல முக்கிய அதிகாரிகளுடன், மீடியாக்களும் இணைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
தீரஜ் வைத்திருக்கும் ஆள், இதில் கில்லாடி. அவனே வெகுவாக முயன்று பார்த்துதான் கைவிரித்துவிட்டான்.
சம்யுக்தாவிற்கும் தெரியவில்லை என்றால், சர்வாச்சார்யா மட்டுமே எஞ்சியிருக்கிறான்.
அவனிடம் கேட்பதும், அமைதியாக இருப்பதும் ஒன்று. நிச்சயம் சொல்ல மாட்டான்.
முன்பு போல் மிரட்டி காரியம் சாதிக்கலாம் என்றால், தீரஜ் நட்பு வட்டத்தில் இருக்கும் ஆட்கள் விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர்.
“சிவபிராகசம் பையனோட உனக்கென்ன பிரச்சனை? ஏதோ ஊர்ல ஆளுங்களை அனுப்பி கலவரம் பண்ணியிருக்க? ஊட்டில பண்ணதும் நீதான்னு சொல்றாங்க, எங்க கட்சிகூட நெருக்கமா இருக்க நீ என்ன பண்ணாலும், எங்க தலையும் தான் சேர்ந்து உருளும், என்னவா இருந்தாலும் பேசி முடிக்க பாரு” என்று எச்சரித்து இருந்தார்கள்.
இதில் நான் சம்மந்தப்பட்டிருப்பதை சிவப்பிரகாசம் இல்லை வசுந்தரா தான் அவர்களுக்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டும் என்று தீரஜ்க்கு நன்றாக புரிந்தது.
இனி அவன் செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே! முடிந்தால் சர்வாச்சார்யாவிடம் இருந்து பாஸ்வோர்ட் வாங்குவது இல்லை கிடைத்திருக்கும் ஆதாரத்தை தன்னிடம் பத்திரமாக வைத்திருப்பது. ஆம். அதை அழிக்க முயன்றாலும் ரகசியங்கள் கசிந்துவிடும்.
தீரஜ்க்கு இவ்வளவு போராடியும் வெற்றியில்லை என்ற கோவம் உள்ளுக்குள் கனன்றது தான். அதை வெளிக்காட்டி கொள்ளாமல், புன்னகைத்தவன், “பார்த்துக்கலாம்” என்றான்.
குருமூர்த்தி அவனை அமைதியாக எடைபோட்டிருக்க, “என் தம்பி இன்னும் வரலை” என்றான்.
“அது உங்க கையில தான் இருக்கு” என்றார் குருமூர்த்தி.
“நானா?” தீரஜ் புரியாமல் கேட்க,
“சர்வாச்சார்யா” என்றார் குருமூர்த்தி.
சிவப்பிரகாசம், வசுந்தராவை திரும்பி பார்த்தவன், “ஓஹ். என்கிட்ட இருந்து ப்ராமிஸ் எதிர்பார்க்கிறீங்க? ம்ம்ஹ்ம். என் குடுமி இப்போவும் அவன் கையில இருக்கு. சோ அவன் எனக்கு எதிரா மூவ் பண்ணாத வரை நானும் அவன் வழியில போக மாட்டேன்” என்றான் தீரஜ்.
மகனை பற்றி அறிந்த சிவபிரகாசம் தம்பதிக்கு நிம்மதியடைய முடியவில்லை!
“உங்களை பார்த்ததுல சந்தோசம் குருமூர்த்தி சார். எனக்கு வேலை செய்ய கேட்டா செய்வீங்களா?” என்று கேட்டான் தீரஜ்.
“மாட்டேன்” என்றார் குருமூர்த்தி.
“எதிர்பார்த்த பதில். ஆனா சிவப்பிரகாசம் பேமிலியை விட நான் உங்கஉங்களை மரியாதையா நடத்துவேன். யோசிங்க” என்று அவன் பெர்சனல் கார்டை எடுத்து கொடுத்தவன், விடைபெற்றான்.
தீரஜ் வார்த்தைகளில் முதல் முறையாக, குன்றி போனார் சிவப்பிரகாசம்.
மகன் பாசத்தில், பணபலத்தில் சிவப்பிரகாசம் பல அடி இறங்கி விட்டார் என்பதே உண்மை!
“சாரி” என்றார் சிவப்பிரகாசம்.
“என் பொண்ணை அடிச்சவங்க, என் பொண்ணுகிட்ட இதை சொல்லணும்” என்றார் குருமூர்த்தி.
சிவப்பிரகாசம் இதை சமாளிக்கட்டும் என்று மௌனம் காத்தார் வசுந்தரா.
“என் பொண்டாட்டி, இவன் பொண்ணுகிட்ட மன்னிப்பு கேட்கணுமா? முடியாது” என்று விநாயகம் குதித்தார்.
“என்ன பிளாக்மெயில் பண்றானா? இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். அந்த தீரஜ் என்ன பெரியவன், இவன் என்ன பெரியவன்? இப்போவே கமிஷனருக்கு போன் அடிச்சு இவங்களை எல்லாம் என்ன பண்றேன் பாரு” என்று விநாயகம் எகிறியதெல்லாம், அவர் மகன் காணாமல் போகும் வரைதான்.
“என் தம்பி வரவரைக்கும் ஒவ்வொருத்தரா காணாம போவாங்க” என்று தீரஜ் போன் வந்துவிட்டது.
“குருமூர்த்திக்கிட்ட நான் நடந்துக்கிறதை வைச்சு என்னை உரசி பார்க்க நினைச்சீங்க, அவ்வளவுதான் சொல்லிட்டேன்” என்று பாய்ந்தான் தீரஜ்.
அவன் தோற்ற கோவம் அவனுக்கு உண்டு எனும் போது, சர்வாச்சார்யா குடும்பத்தை எப்படி விடுவான்?
சம்யுக்தா முன் நின்ற சிவபிரகாசத்தின் தங்கை, “உன்னை அடிச்சிருக்க கூடாது. என் அண்ணன் மகன் ஆபத்துல மாட்டின கோவத்துல தான் அடிச்சுட்டேன். என்னை மன்னிச்சிரு” என்று மன்னிப்பு வேண்டினார்.
சம்யுக்தாவிற்கு அவள் கவலையே பெரிதாக இருக்க. இந்த மன்னிப்பால் என்ன ஆகிவிட போகிறது? தந்தைக்காக தலையசைத்து கொண்டாள். அவ்வளுவே!
“வசுந்தரா மேடம்க்காக மட்டும் தான் மன்னிப்போட விடுறேன். இதுவே வேற யாரா இருந்தாலும் என் மகள் மேல வைச்ச கையை உடைச்சிருப்பேன்” என்றார் குருமூர்த்தி கடுமையாக.
சும்மா சொல்கிறார் என்று நினைக்க முடியாது. சுபத்ரா விஷயமே அதற்கு சாட்சி!
சிவப்பிரகாசம் வீட்டினர் வஞ்சத்துடன் குருமூர்த்தியையும், குருமூர்த்தி மகளையும் பார்த்து சென்றனர்.
சிவப்பிரகாசம் தேங்கி நின்றவர், “உங்களுக்கு நன்றி சொல்லி முடிச்சிட முடியாது. என் மகன் மதிப்பு ஒரு நன்றியில அடங்காது. ஆனா உங்களுக்கு தேவைப்படும் போது நான் நிச்சயம் இருப்பேன்” என்று மனதார கைகுவித்து சொன்னார்.
குருமூர்த்தி தலையை அசைத்து கொண்டார். “வரேன்மா. நேத்து எதாவது கோவமா பேசியிருந்தா மனசுல வைச்சுக்காத” என்று சம்யுக்தாவிற்கும் சொல்லி கொண்டு சென்றார்.
வசுந்தரா, “சர்வா உன்னை பார்க்க கேட்டான்” என்று சம்யுக்தாவிடம் சொன்னார்.
குருமூர்த்தி பார்வை அவளை தீர்க்கமாக பார்த்திருக்க மகள் என்ன சொல்வாள்? அவனை சென்று பார்க்கும் ஆசை கடலளவு இருந்தாலும் மௌனம் காத்தாள்.
“என்னமா? வரலையா நீ?” என்று வசுந்தரா கேட்டவர், சம்யுக்தாவின் தயக்கத்தில் என்ன உணர்ந்தாரோ?
“கூட்டிட்டு போகட்டுமா?” என்று நேரடியாக குருமூர்த்தியிடம் கேட்டார்.
“சர்வா, நாங்க சொல்லித்தான் சம்யுக்தா ஆதாரத்தை கொடுத்தா. அவகிட்ட கோவபடகூடாது. உன்னை நல்லபடியா அவங்கதான் பார்த்துக்கிட்டாங்க. அதை மனசுல வைச்சு அவகிட்ட பேசு ராஜா” என்று வசுந்தரா மகனிடம் சொல்லி செல்ல,
நான் அவகிட்ட கோவப்பட கூடாதா? சர்வாச்சார்யாவிற்கு இப்போது தான் அதிகமான கோவம் வந்தது.
“எல்லாத்துக்கும் ரொம்ப தேங்க்ஸ். மாமாக்கு நீங்க பண்ண உதவியை நாங்க என்னைக்கும் மறக்க மாட்டோம்” என்று அந்த இளம்பெண் புன்னகையுடன் சம்யுக்தாவின் கைப்பற்றி நன்றி சொல்லி வெளியே செல்ல,
நான் இவருக்கு பண்ணதுக்கு, அவங்க நன்றி சொல்வாங்களா? சம்யுக்தா பதிலுக்கு புன்னகைக்க முடியாமல் நின்றாள்.