“இல்லை தான். ஆனா உங்க தம்பி விஷயம் அப்படி இல்லை தானே?” என்று பதிலுக்கு கேட்டார் லிங்கம்.
“நீ சொன்னது தப்பு” என்றபடி உள்ளே வந்தான் தீரஜ். நாற்பது வயதுக்கு மேல் இருப்பான். உடம்பை இரும்பாக வைத்திருந்தான். பார்வையில் அவ்வளவு கூர்மை.
லிங்கம் எழுந்து வணக்கம் வைக்க, “இவரை நீ அடிச்சா கேட்க குருமூர்த்தி இருக்கார். உன் கணக்கு தப்பு” என்று உதவியாளனுக்கு சொன்ன தீரஜ், “உட்காருங்க” என்றான் இவரிடம்.
“சர்வா தம்பிக்காக கேட்க வந்தேன்” என்றார் லிங்கம்.
“சரி கேளுங்க” தீரஜ் அமைதியாக சொன்னான்.
“நாம இதை முடிச்சுக்கலாம். சின்ன பையன். தெரியாம எதாவது பண்ணியிருப்பான்”
“ஹாஹா. அவன் சின்ன பையன், தெரியாம பண்ணானா?” தீரஜ் நன்றாகவே சிரித்தான்.
“லிங்கம் சார். வெளியுலகத்துக்கு நல்லவனா என்னை அடையாள படுத்தியிருக்கேன். அது ரொம்ப கஷ்டம். ரொம்ப, ரொம்ப கஷ்டம். என்னை சுத்தி பெரிய அதிகார வர்க்கமே இருக்கு. ஆனா அதுல எத்தனை பேருக்கு என்னை பத்தி முழுசா தெரியும் சொல்லுங்க. ஒன்னு, இரண்டு பேரை தவிர யாருக்கும் என்னை தெரியாது”
“தீரஜ். நல்லவன், வல்லவன், மூளைக்காரன். பணக்காரன், தொழில் செய்றான். இதுதான் என் பிம்பம். அதை நான் மெயின்டைன் பண்ணியே ஆகணும். அதை உடைக்க யார் வந்தாலும், நான் அவங்களை விட மாட்டேன். அது சர்வாச்சார்யாவா இருந்தாலும் சரி, என் தம்பியா இருந்தாலும் சரி”
“என்ன சொல்ல வரீங்க நீங்க?” லிங்கம் அதிர்ந்தார்.
“என் தம்பியை நீங்க கொன்னா கூட எனக்கு கவலை இல்லை”
“அதெ, அதெப்படி?”
“இதுதான் உங்களுக்கும், எனக்கும் உள்ள வித்தியாசம். நீங்க கிளம்பலாம்” என்று கையசைத்தான்.
“சார். ப்ளீஸ். இப்படி சொல்லிட்டா எப்படி? சர்வாச்சார்யா உங்க வழிக்கே வராம இருக்க என்ன வேணுமோ சொல்லுங்க. நாங்க செய்றோம். அவரை மட்டும் விட்டுடுங்க ப்ளீஸ்” என்று கேட்டார் லிங்கம்.
“சிவப்பிரகாசம் பேமிலி இதையே கேட்டப்போ எனக்கு கோவம் வந்துச்சு. ஆனா நீங்க கேட்கும் போது ஏனோ கொஞ்சம் தடுமாறுறேன். என்ன காரணமா இருக்கும்?” என்று கேட்டான் தீரஜ்.
லிங்கம் நீங்களே சொல்லிடுங்க சார் என்பது போல் நிற்க, “உங்க லாயல்டி!” என்றான் தீரஜ்.
“நம்மளை மாதிரி தொழில் பண்றவங்களுக்கு இதான் கிடைக்கறதில்லை. சிவப்பிரகாசம் பேமிலிக்கு கிடைச்சிருக்கு. ம்ம். அவர் பேர் என்ன? குருமூர்த்தி. நான் அவரை மீட் பண்ண முடியுமா?”
“ஏ, ஏன்? மூர்த்தியை நீங்க ஏன்?” லிங்கம் வேகமாக கேட்க,
“எங்களை அதிகமா ஓடவைச்சது அவர்தான். நான் அவரை மீட் பண்றது ஒர்த் தானே?” என்று கேட்டான்.
“மூர்த்தி உங்களை பகைச்சுக்க எதையும் செய்யலை. வசுந்தரா மேடம்க்காக தான்”
“எஸ். எஸ். கேள்விப்பட்டேன். அது பிக் டீல் இல்லை. சரி விடு. குருமூர்த்தி பண்ண தப்பை அவர் பொண்ணே சரி பண்ணிட்டா. அவளால தான் எங்களுக்கு சர்வாச்சார்யா கிடைச்சிருக்கான்”
“அவன் இருக்கிறது இந்த ஹாஸ்பிடல், இந்த மாடி, இந்த அறை, இந்த டாக்டர், இந்த நர்ஸ், இத்தனை பாதுகாப்பு ஆட்கள், ரூமுக்குள்ள இப்படி போலாம்” என்று எல்லாம் வரிசையாக சொன்னவன்,
“பாதுகாப்பு சொல்லிக்கிற அளவு இல்லை, நைட்டுக்குள்ள ஈஸியா அவனை முடிச்சிடலாம்” என்று தோள் குலுக்கினான்.
“சார். நாங்க கேட்கிறதை கன்சிடர் பண்ணுங்க. சர்வா தம்பி இனிமேல் உங்க வழிக்கு வர மாட்டார். உங்களை பத்தி எங்கேயும், எதுவும் சொல்ல மாட்டார். அதுக்கு நாங்க உத்திரவாதம் கொடுக்கிறோம்” என்று லிங்கம் சொல்ல.
“சொல்ல மாட்டானா? அப்புறம் எதுக்கு அந்த ஆதாரத்தை எடுக்க கோயம்பத்தூர் வந்தான்” என்று தீரஜ் கோவமாக கேட்டான்.
“ஆதாரமா?”
“தெரியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க?” என்று எச்சரித்தான் தீரஜ்,
“அந்த கோகுல் வீட்டுக்கு அப்புறம் எதுக்கு வந்தான் அவன்? வெளியே வந்தா நான் விட மாட்டேன்னு தெரிஞ்சும் வந்திருக்கான் ராஸ்கல். அவ்வளவு தைரியமா அவனுக்கு?” என்று சத்தமிட்டான்.
“சார். ஆதாரம், இது பத்தி உண்மையிலே எங்க யாருக்கும் எதுவும் தெரியலை” லிங்கம் சொல்ல,
“இப்போ தெரிஞ்சிடுச்சு இல்லை. உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன். அந்த ஆதாரத்தை என்கிட்ட கொடுங்க. அவனை விடுறதை பத்தி நான் யோசிக்கிறேன்” என்றான் தீரஜ்.
“சார். அப்படி ஆதாரம் எதுவும் இல்லைன்னா?”
“அவன் உங்களுக்கு இல்லை” என்று முடித்துவிட்டான் தீரஜ்.
இதென்னடா புது பூதம்?
யாரென தெரிந்து எழுந்து நின்ற சம்யுக்தாவிற்கு, இவர் என்ன சொல்ல போகிறாரோ என்ற பயம் தன்னாலே வந்தது.
“உன் அப்பா எப்படி இருக்கார்?” என்று கேட்டார் சிவப்பிரகாசம்.
“ம்ம்” என்று சம்யுக்தா தலையசைக்க,
“நீயும், என் மகனும் எதுக்காக கோயம்பத்தூர் வந்தீங்க?” என்று கேட்டார்.
என்ன சொல்வாள் சம்யுக்தா? சர்வாச்சார்யாவின் ரகசியம் ஆகிற்றே.
அவன் மயக்கமடையும் முன் அவளிடம் மிகவும் தெளிவாக சொன்னானே!
“நீ யார்கிட்டேயும் ஆதாரத்தை பத்தி சொல்ல மாட்ட எனக்கு தெரியும், உன்னை நம்புறேன், நீ பத்திரமா இருடி. உன் அப்பாகிட்ட இரு. அவர் பார்த்துப்பார்” என்று அவள் மார்புக்குள் புதைந்தபடி முனகியவனின் நம்பிக்கையை அவள் எப்படி உடைப்பாள்?
சம்யுக்தா தலை குனிந்தபடி இருக்க, “என் மகன் ட்ரெஸ் எல்லாம் நாங்க பார்த்துட்டோம். அவன்கிட்ட இல்லை. அந்த வீட்டிலும் விட்டுட்டு வந்திருக்க மாட்டீங்க. சொல்லு ஆதாரம் எங்க இருக்கு?” என்று கேட்டார்.
சம்யுக்தா மௌனத்தை பதிலாக கொடுக்க, “அவன் உயிரை விட அந்த ஆதாரம் முக்கியமானதுன்னு உனக்கு தோணுதா?” என்று கேட்டார்.
சட்டென அவளிடம் ஓர் நடுக்கம்? அவனுக்கான ஆபத்து தீரவில்லையே?
“உனக்கு புரியுதுன்னு நினைக்கிறேன். அந்த ஆதாரத்தை கொடுத்தா சர்வாவை விட்டுடுறேன்னு சொல்லியிருக்கான்” மேலும் சொன்னார்.
அதெப்படி நம்ப முடியும்? சம்யுக்தா தன் கேள்வியை தனக்குள் புதைத்தாள்.
“பணம், பவர், பலத்துல அவன் அஞ்சுக்குள்ள வந்தா, நான் பத்துக்குள்ள தான் வருவேன். என்ன விட அவன் பல அடி முன்னால இருக்கான். உண்மையை சொல்லணும்ன்னா என்னால அவனை ஜெயிக்க முடியலை”
“என் மகன் தான் எனக்கு முக்கியம். அவனை ஜெயிக்கிறது இல்லைன்னு புரிஞ்ச பின்னாடி தான் உன்கிட்ட வந்திருக்கேன். தீரஜ் சொல்ற மாதிரி ஆதாரம் எதாவது இருந்தா என்கிட்ட கொடுத்துடு” என்று சிவப்பிரகாசம் கேட்க,
“அவகிட்ட எதுக்கு கேட்டுட்டு இருக்கீங்க? நம்ம ஆளுங்களை விட்டா வாங்கி கொடுக்க போறாங்க?” என்று விநாயகம் சொன்னார்.
“என்ன பேசுறீங்க நீங்க? எங்க பொண்ணு பக்கத்துல யாராவது போனீங்க நாங்க சும்மா இருக்க மாட்டோம்” லிங்கம் கடுமையான எச்சரிகையை கொடுத்தார்.
சம்யுக்தாவிற்கு அவரை கண்டதும் சிறு ஆறுதல் கிடைத்தது.
குருமூர்த்தியை அருகில் சென்று பார்த்த லிங்கம், “பெரிய காயமா இருக்கு” என்று வருத்தம் கொண்டார்.
“நாங்க எதுவும் செய்ய கூடாதான்னா நீங்க பேசுங்க. பேசி வாங்கி கொடுங்க” என்றார் சத்தியன்.
“நான் சொன்னா கேட்ப இல்லைமா. ஆதாரம் இருந்தா கொடுத்துடு. அந்த தீரஜ்கிட்ட நாந்தான் பேச போனேன். ரொம்ப மோசமா இருக்கான். சொந்த தம்பியை கொன்னா கூட எனக்கு கவலை இல்லைங்கிறான்” என்றார் லிங்கம்.
இவர்கள் அழுத்தம் கொடுப்பதை உணர்ந்தாள் சம்யுக்தா.
“நான், எனக்கு தெரியலை மாமா” என்றாள் லிங்கத்திடம்.
“இந்த பொண்ணுகிட்ட தான் இருக்கு” சத்தியன் உறுதியாக சொன்னார்.
“அவர் எதையோ எடுக்க போனார். ஆனா எடுத்தாரான்னு தெரியலை” என்றாள்.
“உனக்கு புரியுதா இல்லையா? என் மகன் உயிர் எனக்கு வேணும். ஆதாரம் இருந்தா கொடுத்திடு” சிவப்பிரகாசம் கேட்டார்.
“சார். என்கிட்ட இல்லை” சம்யுக்தா சொல்ல,
“இந்த பொண்ணு சொல்ற வரைக்கும் தீரஜ் சும்மா இருப்பானா? எங்க பையனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு, இவளையும், இவ அப்பனையும்”
“ஏய். என்ன? கொஞ்சம் விட்டா ஓவரா பேசுற? வர சொல்லவா என் பசங்களை. எங்க கைவைச்சு பாரு” லிங்கம் கைசட்டையை ஏற்றினார்.
“உங்க சண்டைக்கு நேரமில்லை. இந்தா பொண்ணே, என்ன சொல்ற நீ? ஆதாரம் உன்கிட்ட இருக்கா இல்லையா?” சிவப்பிரகாசம் பொறுமையிழந்தார்.
அதே நேரம் வரிசையாக பல கார்கள் மருத்துவமனைக்கு வந்தது. “தீரஜ் ஆளுங்க” என்று ஒருவன் ஓடிவந்து தகவல் சொன்னான்.
மருத்துவமனைக்குள், வெளியே, மருத்துவமனைக்கு பின்னால் என்று சுற்றியும் அத்தனை ஆட்கள்!
“சர்வாச்சார்யா. அயோ என் மகன்” சிவப்பிரகாசம் மிரண்டு போனார்.
நிச்சயம் இத்தனை ஆட்களை சமாளிப்பது சுலபமான விஷயம் இல்லை.
இப்போதே சிலர் அங்கங்கு ஒளிந்து கொள்வதை பார்த்தாள் சம்யுக்தா.
“அஞ்சு நிமிசத்துக்குள்ள ஆதாரம் என் கைக்கு வரலைன்னா, என் ஆளுங்க உள்ள வந்திடுவாங்க” என்று தீரஜ் போனில் அழைத்து சொன்னான்.
சிவப்பிரகாசம் வீட்டின் ஆண்கள், பெண்கள் அத்தனை பேரும் இவளின் முன் கேட்டு நின்றார்கள்.
“சம்யுக்தா. என் மகன் உன்கிட்ட என்ன சொன்னான்னு எனக்கு தெரியாது, ஆனா எதுவா இருந்தாலும் அவன் உயிருக்கு முன்னாடி அது ஒண்ணுமே இல்லை. உனக்கு புரியுது தானே?” என்று வசுந்தரா அவளின் கைப்பற்றி கேட்டார்.
குருமூர்த்தி மட்டும் நன்றாக இருந்திருந்தால் சம்யுக்தா முடிவு வேறாக இருந்திருக்கும். ஆயிரம் பேர் எதிரில் இருந்தாலும் கவலைப்பட்டிருக்க மாட்டாள்.
ஆனால் இங்கிருப்பவர்கள் சர்வாச்சார்யாவை காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை சம்யுக்தாவிற்கு சுத்தமாக இல்லை.
தந்தை படுத்திருந்த அறையை திரும்பி பார்த்தவள் மனதில் சர்வாச்சார்யா முழுதாக நிறைந்து நிற்கிறான்.
அவன் உயிரை விட இதுவா முக்கியம்?
சம்யுக்தா அந்த சிப் எடுத்து நீட்டினாள்.
யாரோ அதை வாங்கி கொண்டு உடனே தீரஜ் நோக்கி ஓடினார்கள்.
அடுத்த நிமிடம் மொத்த ஆட்களுடன் தீரஜ் அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
மறுநாள் கண் விழித்த சர்வாச்சார்யாவிற்கு சொல்ல என்ன பதில் வைத்திருக்கிறாள் சம்யுக்தா?