கடந்து செல் காதலுடன்! 23

‘இன்னும் என்னென்ன ரகசியங்கள் என்னை சுற்றி இருக்கும்?’ சம்யுக்தா இடிந்து போய் அமர்ந்திருந்தாள்.

சர்வாச்சார்யா யார் என்று தெரிந்ததில் இருந்து குருமூர்த்தியை விட்டு அசையவில்லை சம்யுக்தா.

அவளின் மனது அமைதியை தொலைத்து, மறுகி கொண்டிருக்கிறது.

என் வாழ்நாளிலே  செய்ய கூடாத பல தவறுகளை நான் இந்த சில நாட்களுக்குள் செய்திருக்கிறேன்!

இருள் சூழ்ந்த அறையில் மெலிதாக விசும்பி கொண்டிருந்த மகளின் கை தந்தையின் கரத்தை இறுக்கமாக பற்றியிருந்தது.

ஆறுதலுக்கு மட்டுமில்லை அவளின் அச்சத்திற்கும் தந்தையின் கரம் தேவைப்பட்டது.

“நான் தப்புப்பா. ரொம்ப பெரிய தப்புப்பா. என்ன பண்ணிட்டேன் நான்? கடவுளே” குருமூர்த்தியின் கரத்தின் மேல் முகத்தை மறைத்து கொண்டாள்.

சர்வாச்சார்யா! அவரை நான் நெருங்கியிருக்கவே கூடாது!

விடாமல் வழியும் கண்ணீர் அவளின் வீங்கியிருந்த கன்னத்தை எரிச்சல் படுத்தியது.

வசுந்தரா மட்டும் இல்லையென்றால் இன்னும் சில அடிகள் வாங்கியிருக்க கூடும்!

“அவளை விடுங்க அண்ணி. அவளால தான் நம்ம சர்வா ஆபத்துல மாட்டினான்” என்று சிவபிரகாசத்தின் தங்கை கோவமாக சொல்லி சம்யுக்தாவின் கைப்பற்றி இழுக்க முயல,

“அவளை விடுங்க. விடுங்கன்னு சொல்றேன் இல்லை” என்று வசுந்தரா குரல் உயர்த்தி கத்திய பின்னே, அந்த பெண்மணி சம்யுக்தா கையை விட்டார்.

இறுக்கமாக பற்றி இழுத்ததில் மணிக்கட்டு சிவந்து போயிருந்தது.

“உனக்கு தனியா சொல்லனுமா? அந்த பையனை விட்டு தள்ளி நில்லு” என்று அவர்களின் பாதுகாப்பு மேலதிகாரியை பார்த்து கடுமையாக சொன்னார் வசுந்தரா.

“இது ஹாஸ்பிடல். இங்க இப்படியா நடந்துபீங்க?” என்று வசுந்தரா கேட்க,

“உங்களுக்கு உங்க மகனை விட, இந்த பொண்ணு முக்கியமா போயிட்டாளா அண்ணி. நியாயத்துக்கு நீங்க தான் இவளை அடிச்சிருக்கணும்” என்றார் சிவபிரகாசத்தின் தங்கை.

இவங்க மகனா? சர்வா? அப்படி மட்டும் இருக்க கூடாது. சம்யுக்தா உடலுடன், உள்ளமும் இப்போது நடுக்கம் கண்டது.

“என்ன நடந்ததுன்னு விசாரிக்காம நீங்க இவளை மட்டும் எப்படி குற்றம் சொல்றீங்க? என் மகன் சர்வா பத்தி எனக்கு நல்லா தெரியும். அவனால தான் இதெல்லாம் நடந்திருக்கும். அப்படி நியாயத்தை நீங்க பேசுறதா இருந்தா, பாதிக்கப்பட்ட இவங்க பக்கம் தான் நீங்க நின்னிருக்கணும்”

“இவங்களுக்கென்ன நல்லாத்தானே இருக்காங்க? நம்ம பிள்ளைக்கு தான் குண்டடி பட்டிருக்கு”

“அப்படியும் அவன் உயிரோட இருக்கான்னு அதுக்கு காரணம் இவங்கதான்” வசுந்தரா கோவமாக சொன்னார்.

“அவர், அவருக்கு, மூர்த்தி சாருக்கு என்னாச்சு?” என்றும் குணா திடீரென கத்த,

குருமூர்த்தி உடல் தூக்கி போட்டதுடன், மனிதர் கட்டிலில் இருந்து சரிந்து கீழே விழுந்துவிட்டார்.

“அப்பா” என்று சம்யுக்தா உள்ளே ஓட,

“டாக்டரை கூப்பிடுங்க. சீக்கிரம்” என்று வசுந்தரா கத்தினார்.

திரும்பவும் குருமூர்த்திக்கு வைத்தியம் பார்க்கப்பட்டது. “துருப்பிடித்த கத்தியால் தாக்கியிருக்கிறார்கள். அதான் இப்படி?” என்று விளக்கம் கொடுத்தார்கள் மருத்துவர்கள்.

“இப்போ அவர் எப்படி இருக்கார்?” என்று வசுந்தரா கேட்க,

“ம்ம். மருந்து கொடுத்திருக்கோம். காலையில ஒருமுறை பார்த்துட்டு சொல்றோம்” என்றார் மருத்துவர்.

“மேம் உங்களை சார் கூப்பிடுறார்?” என்று ஆள் வர,

“அப்பா நல்லா இருப்பார். நீ கவலைப்படாத” என்று சம்யுக்தா உச்சி தலையை வருடி கொடுத்து சென்றார் வசுந்தரா.

காவலுக்கு இருந்தவர்களை வசுந்தரா போக சொல்லிவிட, யார் அவரை மறுத்து பேசுவது?

குணா வாசலில் இருக்க, சம்யுக்தா தந்தைக்கு அருகிலே இருந்தாள்.

இந்த நாள் அவளுக்கு இத்துடன் முடியவில்லை. சிவப்பிரகாசம் அறைக்குள் வந்தார். அவருக்கு பின் வேறு சிலர்!

சிவப்பிரகாசம் யாரென தெரிந்த சம்யுக்தா எழுந்து நின்றாள்.

சம்யுக்தாவை தேடி சிவப்பிரகாசம் வந்ததற்கு காரணம் உள்ளது.

லிங்கம் கோயம்பத்தூர் வந்ததும் அவரை முதலில் சந்தித்தது சிவப்பிரகாசம் வீட்டின் ஆண்கள் தான்.

சர்வாச்சார்யாவிற்கான அறுவைசிகிச்சை முடிந்து, அவனுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர் சொல்லிவிட்டார்.

மகன் உடல்நிலை பற்றிய கவலை அகன்றது. ஆனால் சர்வாச்சார்யாவிற்கான அச்சுறுத்தல் அப்படியேதான் இருக்கிறது.

“மூர்த்தி எப்படி இருக்கான்?” என்று லிங்கம் கேட்க,

“அவருக்கென்ன சின்ன காயம் தான். எங்க பையன் மாதிரி குண்டு வாங்கியா படுத்திருக்கார்” சின்ன மாப்பிள்ளை  விநாயகம் சொன்னார்.

லிங்கம் இதற்கு என்ன பதில் சொல்ல? மனிதருக்கு முதலில் குருமூர்த்தியை நேரில் பார்க்க தான் பரபரத்தது.

ஆனால் இவர்கள் பேச்சை பார்த்தால், ஏதோ வில்லங்கம் வருகிறது என்று புரிந்து போனது.

“நான் அவனை பார்த்துட்டு வரவா?” என்று லிங்கம் கேட்க,

“எங்க பையன் பாதுகாப்புல கோட்டை விட்டிருக்கார். அதை பத்தி என்ன நினைக்கிறீங்க?” என்று கேட்டார் சத்தியமூர்த்தி.

“அது, அவன் சென்னை வந்தப்போ நடந்தது”

“கூட்டிட்டு வந்தது அவரோட பொண்ணு தான். உங்களுக்கு தெரியும் இல்லை?”

லிங்கம் எதிர்பார்த்த கேள்வி. “சின்ன பொண்ணு. நம்ம பையன் கேட்டிருப்பார்ன்னு நினைக்கிறேன். இல்லைன்னா சம்யுக்தா அப்படி செய்ற பொண்ணு இல்லை”

“சின்ன பொண்ணு சொல்றீங்க, ஆனா அவங்க சின்ன பொண்ணு மாதிரி நடந்துக்கலையே?”

“நான் சம்யுக்தாகிட்ட பேசுறேன்”

“இனி அவங்கிட்ட பேசி என்ன ஆக போகுது? நீங்க பேச வேண்டியது இன்னொரு ஆள்கிட்ட!” என்று விஷயத்துக்கு வந்தார் சத்தியமூர்த்தி.

“நானா?” லிங்கம் புரியாமல் பார்த்தார்.

“நீங்க தான் பேசுறீங்க? தீரஜ் தெரியும் இல்லை”

“தெரியும். இங்க இருக்கிற அவரோட பேக்டரில நம்ம பசங்க நிறைய பேர் வேலை செய்றாங்க”

“அவர்கிட்ட தான் பேச போறீங்க” என்றார் சத்தியமூர்த்தி.

தீரஜ். அவன்தான் எல்லாவற்றுக்கும் காரணம்! நாட்டின் முக்கிய மந்திரிகள் எல்லோரின் நட்பு வட்டத்தில் இருக்கிறான். மக்களுக்கும் அவன் மேல் நல்ல அபிப்பிராயம்.

தொழிலில் முன்னோடி, பொதுசேவை, நலத்திட்ட உதவிகள் என்று பல செய்கிறான்.

ஆனால் இதெல்லாம் வெளியே மட்டும் தான். அவனின் மற்றொரு பக்கம்  மிகவும் மோசமாக இருக்கிறது.

சட்டத்திற்கு புறம்பான அத்தனை வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறான். அதற்கென்று வேறொரு பெரிய கூட்டத்தையே உருவாக்கி வைத்திருக்கிறான்.

“அவர்கிட்ட நான் ஏன் பேசணும்?” லிங்கம் கேட்டார்.

“குருமூர்த்தி பண்ண தப்பை யார் சரி பண்றது? சர்வாவை பார்த்துக்க நீங்கதானே அவரை பரிந்துரை செய்தீங்க?” சத்தியன் கேட்க, லிங்கத்திற்கு புரிந்து போனது.

“தீரஜ் இப்போ கோயம்பத்தூர்ல தான் இருக்கான். எப்போ, என்ன பண்ணுவான்னு எங்களுக்கு தெரியலை. போலீஸ் இல்லாம எங்காளுங்க நூறு பேருக்கு மேல் சர்வா ரூமுக்கு வெளியே இருக்காங்க. ஆனாலும் அவனை சாதாரணமா எடை போட முடியாது. நாம இதை முடிச்சாகணும். என்ன பண்ணலாம் சொல்லுங்க?” என்று கேட்டார் சத்தியன்.

“நீங்களே சொல்லுங்க”

“போய் பேசுங்க. உன் தம்பி எங்க கட்டுப்பாட்டுல இருக்கான்னு சொல்லுங்க”

“வசுந்தரா மேடம்கிட்ட நான் பேசணும்” லிங்கம் சொல்ல,

“இனியும் வசுந்தரா வைச்சு நீங்க தப்பிக்க முடியாது லிங்கம் சார்”

“அவங்களுக்காக தான், நாங்க சர்வா தம்பி பொறுப்பை எடுத்துகிட்டோம். உங்களுக்காக இல்லை, உங்களுக்கு பயந்து இல்லை” லிங்கம் கடுமையாக சொன்னார்.

“ஏய்? நீ யாருகிட்ட பேசிட்டு இருக்கன்னு தெரியும் இல்லை” என்று சிவபிரகாசத்தின் தங்கை மகன் எகிறினான்.

“நல்லா தெரியும் தம்பி. நீங்க யாரு, எப்படிப்பட்டவங்கன்னு தெரியாம நான் இதுல இறங்கலை.” லிங்கம் நிதானமாக சொன்னார்.

“டேய் நீ பேசாம இரு” என்று அவனை அதட்டிய சத்தியன், “சர்வாச்சார்யா இப்போ ஆபத்துல இருக்கிறதுக்கான பொறுப்பை நீங்க எடுத்துக்க மாட்டீங்க. அப்படி தானே?” என்று கேட்டார்.

“சர்வா தம்பிக்கு நாங்க நிறைய செஞ்சுட்டோம். இனி அவர் குடும்பம் நீங்க செய்ங்க” லிங்கம் உறுதியாக சொன்னார்.

“நான் அவர்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என்றார் சிவப்பிரகாசம்.

“நாங்க இல்லாம நீ என்ன பேசப்போற?” சட்டென சத்தியன் கேட்க,

“மாமா. ப்ளீஸ்” என்றார் சிவப்பிரகாசம்.

“உனக்காக, நம்ம சர்வாக்காக தான் நாங்களும் பாடுபடுறோம்” என்று சின்ன மாப்பிள்ளை விநாயகம் சொல்ல,

“எனக்கு தெரியும் மாமா. நீங்க இல்லைன்னா நான் இன்னமும் அதிகம் கஷ்டப்படுவேன். நான் இவர்கிட்ட பேசுறதும் என் மகனுக்காக தான்” என்று சிவப்பிரகாசம் சொல்ல,  வீட்டின் ஆண்கள் அதிருப்தியுடன் அறையை விட்டு வெளியேறினர்.

“நாம உட்கார்ந்து பேசலாமா?” என்று கேட்டார் சிவப்பிரகாசம்.

லிங்கம் அமைதியாக அமர்ந்து கொள்ள, சிவப்பிரகாசம் அவருக்கு எதிரில் அமர்ந்தவர், “எங்க வீட்ல எல்லாம் கூட்டு தொழில். எனக்கான அதிகாரம், உரிமையை விட மத்தவங்களுக்கு கொஞ்சம் குறைவு. அவ்வளவு தான். மத்தபடி எதுவா இருந்தாலும் நாங்க எல்லாம் சேர்ந்து தான் செஞ்சாகணும்” என்றார் சிவப்பிரகாசம்.

இதை ஏன் என்னிடம் சொல்கிறார்? லிங்கம் அவர் முடிக்கட்டும் என்று அமைதி காத்தார்.

“என் பிள்ளைங்க மேல எல்லாம் ரொம்ப பாசமா இருப்பாங்க. என் பொண்ணையும், மகனையும் தங்கச்சி குடும்பத்துக்குள்ள தான் சம்மந்தம் பண்ற மாதிரி இருக்கும். சர்வாவை எங்க வீட்டாளுங்க எங்கேயும் விட்டு கொடுத்தது இல்லை. அவங்க பிள்ளைகளை விட சர்வா மேல கூடுதல் பாசம் தான்”

“ஆனாலும் இவங்க பாசம் எதுவரைன்னு எனக்கு தெரியாது. வசுந்தராக்கு இவங்க யார் மேலயும் நம்பிக்கை இல்லை. அவளோட வார்த்தைகளை நான் புறக்கணிக்கிறதில்லை. அதனால தான் உங்ககிட்ட தனியா பேசுறேன்”

“என் மகன் தான் என் ஒட்டுமொத்த வாழ்க்கையும்! அவன் விஷயத்துல நான் ஒரு சதவீதம் கூட ரிஸ்க் எடுக்கறதில்லை. நீங்க அவனுக்காக பேசப்போனா நான் ரொம்ப சந்தோஷபடுவேன். மத்த யாரைவிடவும் உங்க மேல எனக்கு அதிக நம்பிக்கை இருக்கு”

“உங்களுக்கு எந்த ஆபத்தும் நான் வரவிட மாட்டேன். கட்டாயம் உங்களை நான் பார்த்துப்பேன்” என,

லிங்கம் மெலிதாக புன்னகைத்தவர், “என் உயிரை பத்தி நான் எப்போவும் கவலை படுறதில்லை சார். நான் செய்றேன். ஆனா எங்க பொண்ணு பண்ணதுக்கான பரிகாரமா இதை செய்றேன்” என்றார் லிங்கம்.

“ரொம்ப சந்தோசம் சார்” என்று சிவப்பிரகாசம் அவர் கைப்பற்றி கொள்ள, லிங்கம் உடனே தீரஜை சந்திக்க சென்றார்.

“மணி. நான் கூப்பிடுறேன் இரு” என்று லிங்கம் விடாது அழைத்த மாசிலாமணிக்கு சொல்ல,

“மூர்த்தி அண்ணனை பார்த்துட்டீங்களா? அவர் எப்படி இருக்கார்?” என்று மணி வேகமாக கேட்டார்.

“நல்லா இருக்கான் மணி. நான் இப்போ வேற ஒரு வேலையா போயிட்டிருக்கேன்”

“அப்போ நீங்க அவரை போய் பார்க்கலை. அப்படித்தானே?” மணி கோவமாக கத்தினார்.

“மணி. புரிஞ்சுக்கோ. சூழ்நிலை சரியில்லை”

“எங்க அண்ணனை பார்க்கிறதை விட என்ன பெரிய சூழ்நிலை? நீங்க எல்லாம் இவ்வளுதான்னு தெரிஞ்சு போச்சு. நான் இப்போவே கிளம்பி வரேன். இந்த நாதாரிய பத்தி எனக்கு கவலையில்லை”

“மணி. மணி அந்த தப்பை மட்டும் பண்ணிடாத. நம்ம பாப்பா பண்ணதுக்கு நாம அவனை வைச்சுத்தான் பரிகாரம் பண்ணியாகணும்”

“ஓஹோ. நம்மளை மிரட்டுறாங்களா?” மணி கோவமாக கேட்டார்.

“மணி. அந்த தம்பியும் நம்ம புள்ள தான். அவருக்காக செய்றதோ நினைச்சுக்கோ”

மாசிலாமணி அமைதியாக, “இன்னைக்கு ஒருநாள் மட்டும் பொறுத்துக்கோ. சீக்கிரம் முடிச்சிடலாம்” என்று வைத்த லிங்கம், தீரஜ் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்றார்.

நீண்ட நேரம் காக்க வைத்தார்கள். கேள்விகளாக கேட்டு, அவரை படுத்திய பின்னே தீரஜ் உதவியாளனை சந்திக்க முடிந்தது.