கடிகார முள் நகர, நகர சம்யுக்தாவின் தவிப்பும் கூடியது.

சர்வாச்சார்யா பற்றி எதுவும் தெரியவில்லை. குருமூர்த்தியும் கண் விழிக்காமல் இருக்கிறார்.

தந்தையை தாங்கியிருந்த தோள்களை விட அவளின் நெஞ்சம் அதிகம் வலித்தது.

இதில் குருமூர்த்தியின் மேல் இருந்து அனல் அடிக்க ஆரம்பித்தது. அப்பாக்கு பீவர் வந்துடுச்சா? சம்யுக்தா அவரின்  நெற்றியில் கைவைத்து பார்த்து அதிர்ந்து போனவள், “சார், சார், அண்ணா” என்று வெளியே நின்றவர்களை அழைத்தாள்.

மூடியிருக்கும் கண்ணாடி அறைக்கதவை மீறி சத்தம் கேட்கிறதா? அவர்கள் அசையவில்லை. இவளை திரும்பி பார்க்கவில்லை.

“அப்பாக்கு ரொம்ப சுடுது. ப்ளீஸ் டாக்டரை கூப்பிடுங்க” என்று சம்யுக்தா சத்தத்தை கூட்டி பார்த்தாள்.

வேறு வழி இல்லாமல் குருமூர்த்தி தலையை சீட்டில் சாய்த்து, கதவை திறந்தவள், “டாக்டரை கூப்பிடுங்க. அப்பாக்கு பீவர் அதிமாகிட்டே இருக்கு” என்றாள்.

“சொல்றோம். நீங்க உள்ள போய் உட்காருங்க” என்று அவர்களிடம் இருந்து பதில் வர,

“உடனே கூப்பிடுங்க, இல்லை என்னை விடுங்க, நான் போறேன்” என்று வெளியே அடியெடுத்து வைத்தவள் முன்பு சட்டென இருவரும் நேருக்கு நேர் நின்றுவிட, சம்யுக்தா அவர்களை இடிக்க சென்று அதிர்ந்து பின் வாங்கினாள்.

நொடியில் அவளின் மொத்த உடலும் நடுக்கம் கண்டுவிட்டது.

“ஏய் என்ன பண்றீங்க?” என்று குணா குரல் ஓங்கி ஒலித்தது.

“சார்  யாரு?” என்று இருவர் அவன் பக்கம் திரும்ப,

“குணா. குணா.  அப்பாக்கு உடம்பு ரொம்ப சுடுது, டாக்டரை கூப்பிடு ப்ளீஸ்” என்று அவனை அங்கு கண்டதும் சம்யுக்தா ஆசுவாசத்துடன் அவனிடம் வேகமாக சொன்னாள்.

“இதோ கூப்பிட்டுட்டு வரேன் இரு” என்று குணா ஓடிச்சென்று மருத்துவரிடம் சண்டையிட்டு அவரை கையோடு அழைத்து வர,

“நீ உள்ள போக கூடாது” என்று அவனை வழி மறைத்து நின்றார்கள்.

“அதை சொல்ல நீங்க யாரு?” என்று குணா கோபத்துடன் கேட்டான்.

“நீ எவ்வளவு கத்தினாலும் உள்ள போக முடியாது, பேசாம இருந்தா இங்க இருக்க விடுவோம். இல்லை தூக்கி வெளியே போட்டுடுவோம்” என்று மிரட்ட,

“இங்க என்ன சத்தம்?” என்று மேலும் சில ஆட்கள் வந்துவிட்டார்கள்.

“குணா. ப்ளீஸ். அமைதியா இரு. நீயும் போயிட்டா நான் யார்கிட்டேயும் ஹெல்ப் கேட்க முடியாது” என்று சம்யுக்தா சொல்ல, குணா எல்லோரையும் முறைத்தபடி அறைக்கு வெளியே நின்றான்.

“கொஞ்ச நேரத்துல சரியாகிடும்” என்று மருத்துவர் சொல்ல,

“அப்பாக்கு பெட் கொடுங்க. காயத்தோட அவர் எப்படி உட்கார்ந்திருப்பார்? அவரால முடியலை. அவர் படுக்கணும்” என்று கேட்டாள் சம்யுக்தா.

“பெட் கூட கொடுக்கலையா நீங்க? இதென்ன ஹாஸ்பிடல்? நோயாளியை உட்கார வைச்சுத்தான் வைத்தியம் பார்ப்பீங்களா? அப்படி ஒன்னும் எங்களுக்கு இங்க பார்க்க வேணாம். நாங்க அவரை கூட்டிகிட்டு கிளம்பிக்கிறோம்” என்று குணா ஆர்ப்பாட்டம் செய்துவிட்டான்.

அதன்பின்னே குருமூர்த்தியை கட்டில் இருக்கும் அறைக்கு மாற்றினர்.

“உதவி செஞ்சுட்ட இல்லை. வெளியே போ” என்று ஆட்கள் அவனை அறை மாற்றியதும் வெளியே போக சொல்ல,

“எங்க முதலாளி பொண்ணுக்கு சாப்பிட என்ன கொடுத்தீங்க?” என்று கேட்டான்.

அவளின் வாடிய முகத்தை பார்த்தாலே தெரிந்தது எதுவும் சாப்பிடவில்லை என்று.

சம்யுக்தாவிற்கு பசிக்கும் உணர்வே இல்லாத போது, உணவை எங்கு கேட்பாள்?

“நான் அவங்களுக்கு சாப்பிட வாங்கிட்டு வருவேன். மாட்டேன்னு சொன்னீங்க எங்க ஆளுங்க அத்தனை பேரும் வெளியே தான் இருக்காங்க. அவங்களை உள்ளே இறக்கி ரகளை பண்ணிடுவேன் பார்த்துக்கோங்க” என்று மிரட்டி உணவு வாங்க சென்றான் குணா.

அவர்கள் இடமாக இருந்தால் பரவாயில்லை. இது மருத்துவமனை. இங்கென்ன பெரிதாக செய்துவிட முடியும்?

அதிலும் குருமூர்த்தி ஆட்கள் வெளியே காத்திருப்பது இவர்களுக்கும் தெரியத்தானே செய்யும்.

“இந்த பையன் வெளியேயும் சண்டை போட்டு தான் உள்ள வந்திருக்கான், விடுங்க, பார்ப்போம்” என்று சொல்லிவிட்டார்கள் காவலுக்கு இருந்தவர்களின் மேலதிகாரி.

“உங்க யாருக்கும் உள்ள அனுமதி இல்லை. நீங்க வந்த வழியே போங்க” என்று மருத்துவமனை கேட்டில் வைத்தே குருமூர்த்தி ஆட்களை அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

“நான் கிளம்பிட்டேன். மூர்த்தி எப்படி இருக்கான்னு எனக்கு தெரிஞ்சாகணும். பார்த்து சொல்லுங்க” என்று லிங்கம் வேறு தொலைபேசியில் அழுத்தம் கொடுத்தார்.

காவலர்கள் கருப்பு உடை மனிதர்களுக்கு ஆதரவாக பேச, குருமூர்த்தி ஆட்கள் தடுமாறினர்.

ஆனால் குணா மட்டுமே, “உள்ள இருக்கிறது எங்க முதலாளி, அவரை பார்க்க முடியாதுன்னு சொல்ல நீங்க யாரு?” என்று விடாமல் மல்லு கட்டினான்.

“எங்களை விடலைன்னாலும் பரவாயில்லை. இவனை மட்டுமாவது உள்ள விடுங்க” என்று ஆட்கள் கேட்டு, குணா சண்டையிட்டு தான் உள்ளே வந்தான்.

அவனின் துணிச்சல் எங்கு உதவியதோ இல்லையோ சம்யுக்தாவிற்கு மலையளவு நம்பிக்கையை கொடுத்தது.

குருமூர்த்தி உடல்நிலையை போனில் தகவல் கொடுத்த குணா, சம்யுக்தாவிற்கு உணவு வாங்கி வந்து வந்தான்.

“நாங்க கொடுத்துகிறோம்” என்று அவனிடம் இருந்து வாங்கி சம்யுக்தாவிடம் கொடுத்தார்கள்.

“முழுசா சாப்பிட பாரு” என்று குணா கத்தி சொன்னான்.

“போதும். போய் உட்காருங்க சார்” என்று காவலர்கள் அவனை விரட்ட,

“ரொம்ப பண்றீங்க? ஆளுங்களும் ஒரு டைப்பா இருக்கீங்க? யார் நீங்க எல்லாம்? பூனை படையா? யாருக்கு?” என்று அவர்களை விசாரிக்க ஆரம்பித்தான் குணா.

“பேசாம போய் உட்காருடா” என்று அதிகாரமாக சொல்ல,

“நீங்க பேசாம இருக்கிறது உங்க இஷ்டம். ஆனா நான் பேசுறது என் உரிமை. என்னை பேசாம இருக்க சொல்றதுக்கு உங்களுக்கென்ன ரைட்ஸ் இருக்கு? பதில் சொல்லுங்க சார்” என்று அவர்களை விடுவேனா என்று நின்றான்.

“பல்லி மாதிரி இருந்துகிட்டு என்னடா ஓவரா போற? ஒத்தை கையால உன்னை தூக்கி வெளியே கடாசிடுவேன் பார்த்துக்கோ” என்று காவலர்கள் கடுப்பாகி போனார்கள்.

“பல்லி? மீ? உருவத்தை வைச்சு என்னை அவமான படுத்துறீங்களா? எங்க ஒத்தைக்கு ஒத்தை சண்டைக்கு வாங்க பார்ப்போம்” என்று இரு கைகளையும் அவர்களை நோக்கி நீட்டி சண்டைக்கு இழுத்தான்.

“ஆஹ். இவன் தொல்லை தாங்கலை” அவர்கள் நொந்து போக,

“குணா” என்று வந்தாள் சம்யுக்தா.

“ஓகேவா?” என்று குணா கேட்க,

“ம்ம்” என்று அவனிடம் உணவு தட்டை நீட்டினாள் சம்யுக்தா.

“சாப்பிடலையா நீ?” உணவு தட்டு கனத்தில் குணா கேட்க,

“பசிக்கலை. நீங்க சாப்பிடுங்க ப்ளீஸ்” என்றாள் சம்யுக்தா.

“முதலாளிக்கு இப்போ பரவாயில்லையா?” என்று எட்டி பார்த்து கேட்டான் குணா.

“பீவர் குறைய ஆரம்பிக்குது”

“லிங்கம்ன்னு யாரோ உன்கிட்ட பேசணும்ன்னு கேட்டுட்டே இருக்கார். பேசுறியா?” என்று குணா கேட்க,

“பேசுறேன்” என்று சம்யுக்தா சொல்ல,

“யார்கிட்டேயும் பேச கூடாது” என்று காவலர்கள் மறுத்தார்கள்.

“ஏன்? ஏன் பேச கூடாது? இவங்களை என்ன அரெஸ்ட் பண்ணி வைச்சிருக்க மாதிரி பண்றீங்க?” குணா கேட்க,

“ஆமா. அப்படித்தான். எங்க சார் சொல்ற வரை இவங்க இப்படித்தான் இருப்பாங்க” என்று ஒருவன் வந்தான்.

இவர்களுக்கு மேலதிகாரி போல. வணக்கம் வைத்த காவலர்களுக்கு தலையசைத்தவன், “யார் நீ? ரொம்ப சவுன்ட் கொடுக்கிறியாமே?” என்று குணாவிடம் கேட்டான்.

“உள்ள படுத்திருக்கிறது எங்க முதலாளி” என்றான் குணா.

“பார்த்துட்ட இல்லை. கிளம்பு”

“முடியாது. அவருக்கு துணையா நான் இங்கதான் இருப்பேன்”

“அவருக்கு துணையான்னா, அவர் கட்டிலுக்கு பக்கத்து கட்டில்ல படுத்துக்கிறியா?” என்று அவன் கழுத்தோடு வளைத்த கைகள் குணாவிற்கு பெரும் வலியை கொடுத்தது.

“ஆஹ். என்ன பண்றீங்க? விடுங்க” என்று குணா அவன் பிடியில் இருந்து திமிற,

“அவருக்கு வலிக்குது போல. அவரை விடுங்க” என்றாள் சம்யுக்தா.

இவளை திரும்பி பார்த்தவன் பார்வையில் அவ்வளவு கடுமை. “ஷ்ஷ்” என்று உதட்டின் மேல் விரல் வைத்து அவன் எச்சரித்ததில், சம்யுக்தா விதிர்த்து போனாள்.

“ஏன்?” சம்யுக்தாவிற்கு அவன் கடுமைக்கான காரணம் விளங்கவில்லை.

பெண்ணின் விழிகள் அவனுக்கு பின்னால் பார்த்து இன்னமும் விரிந்தது.

“வசுந்தரா மேடம்” அவள் உதடுகள் முணுமுணுக்க, சட்டென கீழே சரிந்திருந்தாள்.

என்ன நடந்தது? சம்யுக்தாவிற்கு ஒன்றும் புரியவில்லை. கன்னம் ஏன் இப்படி எரிகிறது?

மங்கிய கண்களை நன்றாக திறந்து பார்க்க, எதிரில் ஓர் பெண்மணி நின்றிருந்தார்.

“சம்யுக்தா” என்று வசுந்தரா இவளிடம் ஓடிவர,

“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா எங்க சர்வாவை வெளியே கூட்டிட்டு வந்திருப்ப?” என்று ஆங்காரமாக கத்திய சிவபிரகாசத்தின் பெரிய தங்கை, திரும்ப இவளிடம் கை ஓங்கி கொண்டு வர,

“என்ன பண்றீங்க? அவளை விட்டு தள்ளி நில்லுங்க” என்று அவரை தடுத்து நிறுத்திய வசுந்தரா, நடுங்கிய பெண்ணவளை தன் கைப்பிடிக்குள் வைத்தார்.