குருமூர்த்தி வாதாடும் நிலையிலா இருக்கிறார். ஓட்டமாக ஊருக்குள் ஓட, அவரை தடுக்க முயன்றவர்களை ஓட்டுனர் சமாளித்து கொண்டார்.

கோகுல் வீட்டை நெருங்க, நெருங்க குருமூர்த்தியின் இதய துடிப்பு கட்டுப்பாடில்லாமல் துடித்தது.

ஆட்கள் அந்த வீட்டின் மேல் பாய்ந்து கொண்டிருக்க, மறுபக்கம் குருமூர்த்தி ஆட்கள் அவர்களை தடுத்து கொண்டிருக்க, காவலர்கள் வாசலில் நின்று யாரையும் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து கொண்டிருந்தனர்.

ஊர் மக்கள் எல்லாம் அகற்றப்பட்டு ஊரே காலியாக இருந்ததில், இவர்களின் சத்தம் தான் ஊரை நிறைத்து கொண்டிருந்தது.

“அண்ணா” என்று குருமூர்த்தியை பார்த்ததும் ஆட்கள் இவரிடம் ஓடி வந்தனர்.

“எப், எப்படி, என் பிள்ளை, என் பிள்ளைங்க எப்படி இருக்காங்க?” குருமூர்த்தி கேட்க,

“உள்ள போக முடியலைண்ணா. ஆனா வீட்டுக்குள்ள ஆளுங்க இருக்காங்க” என்றான் ஒருவன்.

“துப்பாக்கி சுடுற சத்தம் கேட்டுச்சுண்ணா” என்று ஒருவன் சொன்னான்.

அவ்வளவு தான். குருமூர்த்தி யார் எதிரில் வந்தும், அவர்களை தள்ளிவிட்டு வீட்டுக்குள் பாய்ந்திருந்தார்.

சம்யுக்தா வாசலை நோக்கி துப்பாக்கியுடன் நின்றிருக்க, அவளுக்கு பின்னால் சர்வாச்சார்யா ரத்த வெள்ளத்தில் கிழே சரிந்திருந்தான்.

இவர்கள் இருவரின் ஆரம்பம் சரியாகவே இருந்தது! ஒற்றை தொலைபேசி அழைப்பு எல்லாவற்றையும் மாற்றியிருந்தது.

கோகுல்  வீட்டிற்குள் நுழைந்ததும் சர்வாச்சார்யா முதல் வேலையாக கோகுல் சொல்லியிருந்த இடத்திற்கு ஓடினான்.

சம்யுக்தா அவனுக்கு பின்னால் வந்தவள், “என்னாச்சு?” என்று திகைத்து போயிருந்தவனின் தோள் தட்டினாள்.

“இந்த இடம், இது ரூம், இப்படி இல்லை. கோகுல் சொன்னது இது இல்லை?” என்று அவன் விழித்தான்.

சம்யுக்தாவிற்கு எதுவும் புரியாமல் போனாலும், ஏதோ சிக்கல் என்று உணர்ந்து கொண்டவள், “முதல்ல ரிலாக்ஸ் ஆகுங்க, நாம நிதானமா பார்ப்போம்” என்று அவன் கை கோர்த்து கொண்டாள்.

“நேரம் இல்லை, நாம எடுத்துட்டு போயாகணும்” அவன் பரபரத்தான்.

“நாம இங்க இருக்கிறது யாருக்கும் தெரியாது. நீங்க நிதானமா யோசிங்க”

“இல்லை. இந்த வீட்டை ரொம்ப டேமேஜ் பண்ணியிருக்காங்க. அவங்களுக்கு முதல்ல இருந்தே ஏதோ தெரிஞ்சிருக்கு. சோ இப்போவும் கண்டிப்பா இந்த வீட்டை வாட்ச் பண்ணிட்டு தான் இருப்பாங்க” சர்வாச்சார்யாவிற்கு இப்போது தான் விளக்கு எரிந்தது.

சம்யுக்தாவிற்கும் இந்த தகவல் அச்சத்தை கொடுத்தது தான் என்றாலும், “சரி. இருக்கட்டும். நாம பாஸ்ட்டா வந்த வேலையை முடிச்சிடலாம்” என்றாள்.

“ம்ம்ம். தேடணும்” என்று அங்கும், இங்கும் தேடியவனுக்கு குழப்பமே மிஞ்சியது.

“என்கிட்ட சொல்லுங்க, நானும் தேடுறேன்” சம்யுக்தா கேட்க, சர்வாச்சார்யாவும் சொன்னான்.

சம்யுக்தாவும் அவனுடன் சேர்ந்து தேடினாள். அந்த காலத்து பெரிய வீடு. இரண்டு மாடி கட்டிடம் என்பதால் தேடுதலில் நேரம் எடுத்தது.

நிமிடங்கள் செல்ல, என்னமோ ஓர் அமைதியை உணர்ந்தான் சர்வாச்சார்யா.  “ம்ஹூம். நீ கிளம்பு” என்று சம்யுக்தாவின் கைப்பற்றி இழுத்து வந்தான்.

“லூசா நீங்க? உங்களை விட்டு நான் போக மாட்டேன்” என்று சம்யுக்தா அவன் பிடியை உதற, மிக வலுவாக பிடித்திருந்தவன்,

“உன் அப்பாக்கு நீ வேணும். போ. கிளம்பு” என்று வாசலை நோக்கி அவளை தள்ளிவிட்டான்.

“உன்னை கொல்ல போறேன்டா ராஸ்கல். உன்னை விட்டு நான் எப்படி போவேன். ஒழுங்கா போய் தேடுற வழியை மட்டும் பாரு” என்று அவனை கோவமாக கத்தினாள் சம்யுக்தா.

“என்னாச்சு?” என்று ஓட்டுனர் விரைந்து வர,

“இவளை கூட்டிட்டு கிளம்புங்க. உடனே” என்று அவருக்கு கட்டளையிட்டான்.

“அங்கிள் அவனுக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சு, நீங்க போங்க” என்று அவரிடம் சொன்னவள், திரும்ப வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கும் நேரம் எங்கிருந்தோ ஓர் கல் பாய்ந்து வந்தது.

நல்லவேளைக்கு யாரின் மேலும் படவில்லை. சம்யுக்தா அதிர்ந்து பார்க்க, பைக்குகளில் சில ஆட்கள்  கேட்டுக்குள் பாய்ந்து வந்து கொண்டிருந்தார்கள்.

சம்யுக்தா சட்டென ஓட்டுனர், சர்வாச்சார்யா இருவரையும் வீட்டுக்குள் இழுத்து கதவை அடைத்தாள்.

ஓட்டுனரின் அலைபேசி கீழே விழுந்துவிட்டது. அதை கவனிக்கவா முடியும்?

“இவங்களை நானும், அங்கிளும் சமாளிச்சுப்போம். நீங்க சீக்கிரம் போய் தேடுற வேலையை மட்டும் பாருங்க” என்று பெண் சொல்ல,

“அதெப்படி?” என்று அவன் மறுத்து பேசவர,

“கிடைச்ச வாய்ப்பை தவற விடுற கோழையாடா நீ?” என்று கேட்டிருந்தாள் சம்யுக்தா.

“ஏய்?” என்று அவன் உடல் விறைக்க,

“தம்பி. இது நேரம் இல்லை. எதையோ தேடத்தானே வந்தீங்க. முடிங்க போங்க. பாப்பா நீயும் போ. நான் பார்த்துகிறேன்” என்று ஓட்டுனர் இருவரையும் வீட்டுக்குள் அனுப்பி, அவர் முன்னிலையில் நின்றார்.

குருமூர்த்தி மகளுக்காக வைத்திருக்கும் ஓட்டுனருக்கு சண்டை போட தெரியாமல் இருக்குமா?

சம்யுக்தா அவரின் திறமை தெரிந்தவள் என்பதால், தேடலை ஆரம்பித்தாள். சர்வாச்சார்யா இவளை முறைத்து மறுபக்கம் தேடினான்.

சில நிமிடங்கள் சென்று, “சர்வாச்சார்யா?” என்று கத்தினாள் சம்யுக்தா.

“என்ன?” என்று இவன் பாய்ந்து ஓட, அந்த பெட்டி அவளின் கையில்!

முட்டியிட்டு அமர்ந்துவிட்டவன் முன் வேகமாக வைத்த சம்யுக்தா, “சீக்கிரம் திற” என்றாள்.

தாத்தா காலத்து பெட்டியை ஏற்கனவே ஆட்கள் கவிழ்த்து பார்த்து காலியாக்கி இருந்தார்கள்.

இதில் என்ன இருக்க போகிறது? சம்யுக்தா படபடப்புடன் நின்றாள்.

சர்வாச்சார்யா, “கத்தி, கத்தி வேணும்” என்றான்.

சம்யுக்தா வேகமாக சமையல் அறைக்கு ஓடிச்செல்ல, எங்கிருந்தோ ஆட்கள் வீட்டிற்குள் குதித்து விட்டனர். சம்யுக்தா இவர்களை கடக்காமல் அவனிடம் செல்ல முடியாது.

“ஏய் ஒரு பொண்ணு இருக்குடா?” என்று ஒருவன் சத்தமிட மற்ற மூவரும் இவளை நோக்கி வந்தனர்.

“இங்க என்ன பண்ற நீ?” என்று சம்யுக்தாவை நெருங்க, பெண் தன்னை தற்காத்து கொள்ளத்தானே வேண்டும்.

சண்டையிட்டாள்! பணத்திற்காக வந்த இந்த ஆட்களிடம் சண்டையிடும் திறமை எல்லாம் இல்லை.

சம்யுக்தா சுலபமாக அவர்களை வீழ்த்தி சர்வாச்சார்யா இருக்குமிடம் சென்றாள்.

அதற்குள் அவன் பெட்டியை இரண்டாக உடைத்து, கீழ் பாகத்தின் தகரத்தை மட்டும் சம்யுக்த கொடுத்த கத்தியால் கிழித்தான்.

மிகச்சிறிய அளவிலான திரை உள்ளிருந்தது. சம்யுக்தா ஆச்சரியம் கொள்ள, சர்வாச்சார்யா அதனை உயிர்ப்பிக்கும் வேலையை ஆரம்பித்தான்.

ஆட்கள் இந்த பக்கம் வரும் சத்தம் கேட்கவே, “நீங்க பாருங்க” என்று சம்யுக்தா சென்றாள்.

சர்வாச்சார்யா அந்த திரை உயிர் கொண்டதும்,  அவன் கட்டை விரல், மற்றும் ஆள்க்காட்டி விரலை அழுத்தினான்.

சரியென்ற பின், அவன் கண்ணின் கருவிழியை ஸ்கேன் செய்தது.

அதுவும் சரியாக வர, இறுதியாக அவன் இதய துடிப்பு. ஆனால் அது தவறாகி போனது.

வீட்டுக்குள்ள ஆட்கள் குதித்த வண்ணமே இருக்க, ஓட்டுனர் ஒருபக்கம் சம்யுக்தா மறுபக்கம் சண்டையிட அவனால் எவ்வாறு நிதானமாக இருக்க முடியும்? அதன் எதிரொலி அவன் இதய துடிப்பில் தெரிந்தது.

“முடிஞ்சுதா?” என்று சம்யுக்தா வந்தவள்,

“என்ன சொல்லுது?” என்று கேட்டாள்.

“இவனை யார் இப்படி எல்லாம் வைக்க சொன்னது?” என்று கத்தினான் சர்வாச்சார்யா.

பைக் ரைடிங் முடித்து வந்த சில நாட்களுக்குள், சர்வாச்சார்யாவிடம் இருந்து இதையெல்லாம் வாங்கியிருந்தான் கோகுல்.

“கோகுல் டெக்னலாஜி புலி. எப்போவும் போல எதாவது செஞ்சுட்டு இருப்பான்” இதுதான் அன்றைய சர்வாச்சார்யா எண்ணம்.

ஆனால் இன்று அதுவே வேலையை காட்டியது. “நான் என்ன பண்றது? இன்னும் ஒரு வாய்ப்பு தான் இருக்கு” என்று தலை பிடித்து கொண்டான்.

இதற்கு தானே இவ்வளவு போராட்டம்!

“ஏன் டென்சன் ஆகுறீங்க? நிதானமா இருங்க” என்றாள் சம்யுக்தா.

“அப்பா ஆளுங்க நமக்காக வந்துட்டாங்க. அவங்க பார்த்துகிறாங்க. நீங்க இதை மட்டும் பாருங்க” என்று  தானும் மண்டியிட்டு அமர்ந்து அவன் கைப்பற்றி கொண்டாள்.

அப்படியும் சர்வாச்சார்யாவிற்கு பதட்டம். ஆதாரம் தனக்கு கிடைக்காமல் போய்விடுமா?

“ம்ப்ச். என்ன?” என்று அவன் முகம் நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தாள்.

“எனக்கு இந்த ஆதாரம் வேணும்” என்றான்.

“நீங்க அமைதியா, நிதானமா  இருந்தா மட்டும் தான் உங்களுக்கு இது கிடைக்கும்ன்னு கோகுல் நினைச்சிருக்கார். உங்க பாதுகாப்புக்காக இருக்கலாம். இப்போ நீங்க என்னோட தானே இருக்கீங்க? பாதுகாப்பா, மனசு அமைதியா இல்லையா? நான் உங்களுக்கு அப்படி எதையும் கொடுக்கலையா?” என்று கேட்டவள்,  தயங்கி அவனை அணைத்து  கொண்டாள்.

மண்டியிட்டபடியே ஓர் அணைப்பு. சம்யுக்தா என்ற பெண்ணே அவனுக்குள் மாயம் நிகழ்த்துபவள் தான்! இதில் அவள் வார்த்தைகளும் அவனுள் ஆழமாக இறங்கியது.

சர்வாச்சார்யா மெல்ல, மெல்ல நிதானத்துக்கு வந்தான். தன் பதிலாக அவள் நெற்றியில் ஓர் மென் முத்தத்தை பதித்தான் சர்வாச்சார்யா.

முன்பை விட வெளியே சத்தம் அதிகமாக கேட்டது தான். ஆனால் அது எதுவும் சர்வாச்சார்யாவை பாதிக்கவில்லை.

அவன் பரிசோதனையின் முடிவு வெற்றியாக முடிந்து, அவனுக்கு ஓர் சிப் கிடைத்தது. அதில் தான் கோகுல் எல்லாவற்றையும் சேமித்து வைத்திருந்தான்.

“ஹேய்” என்று இருவரும் பாய்ந்து மற்றவரை கட்டி கொண்டார்கள்.

சில நொடிகள் மட்டுமே அந்த மகிழ்ச்சி நிலைத்தது. துப்பாக்கி குண்டு இருவரின் தலைக்கு மேல் பாய்ந்து சென்றது.

சம்யுக்தா சுதாரிப்பதற்குள் சர்வாச்சார்யா அவளை அதே அறைக்குள் விட்டு, கதவடைத்திருந்தான். அவளின் உள்ளங்கைக்குள் சிப்!

அடுத்த நிமிடங்கள் மிகப்பெரிய போராட்டங்கள். காவலர்கள் வாசலுக்கு வெளியே மட்டும் காவல் இருக்க, வீட்டுக்குள் மாற்றி, மாற்றி சண்டை.

“நீ என்ன இங்க ஒளிஞ்சுட்டு இருக்க?” என்று குணா ஜன்னலில் இருந்து இவளை பார்த்து கத்தினான்.

” நீயா? சீக்கிரம் கதவை திற. ப்ளீஸ்” என்று சம்யுக்தா இவனிடம் கேட்க,

“ம்ஹூம், வெளியே வரது பாதுகாப்பு இல்லை. ரொம்ப மோசமா போயிட்டு இருக்கு” என்று மறுத்தான்.

“ப்ளீஸ், ப்ளீஸ்” என்ற சம்யுக்தாவின் கெஞ்சல்கள் எல்லாம் அவனிடம் செல்லுபடி  ஆகவில்லை.

“நாம கண்டிப்பா லாக் தான்” அவன் உறுதியாக சொல்ல, சம்யுக்தா உடனடியாக யோசித்து அவனிடம் இரு வேலையை கொடுத்தாள்.

குணா வந்த வழியே சென்றுவிட, வேறு ஒருவன் வந்து கதவை திறந்து, “மூர்த்திண்ணா பொண்ணா நீங்க? இப்படி வாங்க சீக்கிரம்” என்று இவளை காப்பாற்ற முனைய, அவள் இவனை தாண்டி சர்வாச்சார்யா தேடி ஓடினாள்.

எதிலும் முழுதாக தேர்ச்சி பெறாதவன், காயங்களுடன் தான் சண்டையிட்டு கொண்டிருந்தான்.

குணா இவரை கூட்டிட்டு போகலையா? சம்யுக்தா தானே சர்வாச்சார்யாவை இழுத்து கொண்டு செல்ல முயல, ஆட்கள் விட வேண்டுமே?

பல நாட்களுக்கு பிறகு கையில் சிக்கியிருப்பவனை விட்டு விடுவார்களா என்ன?

இவர்களை காப்பாற்ற குருமூர்த்தி ஆட்களும் வளையம் போல் அமைத்து சண்டையிட, கடுமையான நிமிடங்கள் அது!

“அவனை மட்டும் விட்டுடாதீங்க. சுடுங்கடா” என்று ஒருவன் கத்த, சம்யுக்தாவும், மற்றவர்களும் உணர்ந்து செயல்படுவதற்குள் சர்வாச்சார்யா தோள் மேல் குண்டு பாய்ந்திருந்தது.

குருமூர்த்தி ஆட்கள் அதன் பின்னே துப்பாக்கி எடுக்க, சர்வாச்சார்யா முன்பு சம்யுக்தா கிடுகிடுவென நடுங்கும் கையில் துப்பாக்கியுடன் நின்றாள்.

அப்போது தான் குருமூர்த்தி வந்தது. “சம்யுக்தா” என்ற குருமூர்த்தி அழைப்பில்,

“அப்பா” என்று தந்தையை பார்த்ததும் கதறிவிட்டாள் மகள். பின்னால் ஒருவன் ரத்த வெள்ளத்தில் சரிந்திருக்கிறானே?

“ஐயோ என் பிள்ளைங்க” குருமூர்த்தி பாய்ந்து மகளை ஒரு கையால் அணைத்து, மறுகையால் சர்வாச்சார்யாவை ஏந்தி கொண்டார்.

சர்வாச்சார்யா உயிருக்கு எந்த ஆபத்தும் இருக்க போவதில்லை. ஆனால் குருமூர்த்தி?

“சம்யுக்தா என் பொறுப்பு” என்றவன், அவன் வார்த்தைகளை காப்பாற்றி இருந்தான்.

ஆனால் குருமூர்த்தி அவரின் பொறுப்பில் இருந்து தவறி அல்லவா இருந்தார்.