குருமூர்த்தி மிகவும் இக்கட்டான நிலையில் நின்றார்.

“அந்த பையனை வைச்சுதான் நாம பேசணும்?” என்று வசுந்தரா தற்போதைய சூழ்நிலையை சொன்னார்.

“நான் மணியை அனுப்புறேன்” என்றார் குருமூர்த்தி.

“இல்லை மூர்த்தி. நீங்க இரண்டு பேர் வந்தா தான் சரியா இருக்கும்” என்று லிங்கம் சொல்ல,

“வீட்ல இருக்க சர்வாச்சார்யாவை யார் பார்த்துக்க?” என்று கேட்டார் குருமூர்த்தி.

“அவங்க கவனம் மாறிடுச்சு மூர்த்தி”

“இல்லை. இப்போவும் எங்களை பாலோ பண்ணிட்டு தான் இருக்காங்க”

“ஆனா அது சும்மா கண்காணிக்க மட்டும் தான். எப்படியும் நீ  பாதுகாப்பு வைச்சிருப்ப. அப்புறமென்ன?” என்றார் லிங்கம்.

குருமூர்த்தி மனது உறுத்தியது. “ரகசியமா செய்யணும் மூர்த்தி. நீயும், மணியும் மட்டும் தான். உனக்கு புரியுது இல்லை” என்றார் லிங்கம்.

“எனக்கு ஒப்பலை. என்னை ஏன் திரும்ப இதுக்குள்ள இழுக்குறீங்க?” குருமூர்த்தி மறுக்க முடியா வேதனையுடன் கேட்டார்.

ஏதோ இப்போதுதான் வாழ்க்கை ஒரு ஒழுங்குக்குள் வந்திருக்கிறது. திரும்பவுமா?

“என் பொண்ணுக்கு நான் மட்டும் தான் இருக்கேன். பெரிய ஆள்ன்னு சொல்றீங்க, எனக்கு ஏதாவதுன்னா என் பொண்ணு என்னாவா? ஏற்கனவே என் பொண்டாட்டி என்னால போயிட்டா. இப்போ நானும்ன்னா? ஏன்? ஏன் என்னையே கேட்கிறீங்க?” என்று கோவமாக கேட்டார்.

வசுந்தரா மனது மறுகியது. மகன் மேல் எக்கச்சக்க கோவம் பொங்கியது. இவன் ஒருவனால் எத்தனை பேருக்கு கஷ்டம்?

“மூர்த்தி. என்னய்யா. நாங்க அப்படி எல்லாம் விட்டுட மாட்டோம்” என்று லிங்கம் சொல்ல,

“என் பொண்டாட்டி எங்கய்யா?” என்று கேட்டார் குருமூர்த்தி.

இவர் சிறைக்கு சென்ற பின் தானே சுபத்ராவிற்கு விபத்து நடந்தது. அப்போ நீங்க ஏன் பார்த்துக்கலை?

“மூர்த்தி” என்ற லிங்கமிடம் பதில் இல்லை.

குருமூர்த்தியை வெளியே எடுக்க வேண்டும் என்பதிலே அவர்களின் முழு கவனமும் சென்றுவிட்டது. சுபத்ராவை விட்டுவிட்டார் என்பது உண்மை!

குருமூர்த்தி சென்னையை விட்டு வெகு தூரம் வந்ததற்கு நிறைய காரணங்கள் உண்டு. அதில் இதுவும் ஒன்று!

‘என் பொண்டாட்டிக்கு இல்லாத உறவு எனக்கும் வேண்டாம்!’

லிங்கம் இப்போதுதான் அதை உணர்கிறார். வாயடைத்து போனார் மனிதர். குருமூர்த்திக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்தவர், சறுக்கிவிட்டார்.

சில நிமிட கனமான அமைதி. “நாங்களே பார்த்துகிறோம்” என்று வசுந்தரா சொல்ல,

“நான் செய்றேன். ஆனா தயவு செஞ்சு இனி என்கிட்ட எதுக்கும் வந்துடாதீங்க, உங்க நன்றி கடனை இதோட கழிச்சிடுங்க” என்று வைத்துவிட்டார் குருமூர்த்தி.

தாழ்ந்துவிட்டேன் நான்! வசுந்தரா உணர்ந்தார்.

“என்னால வர முடியாது” என்று குருமூர்த்தி சொன்னதில், சம்யுக்தாவும் செல்ல கூடாது என்றே நினைத்தாள்.

ஆனால் உள்ளுக்குள் ஒருவன் குடைந்து கொண்டிருக்கிறானே!

மற்ற நாளாக இருந்தால் நிச்சயம் சம்யுக்தா கிளம்பியிருக்க மாட்டாள். ஆனால் இப்போது மாசிலாமணியும் தந்தையுடன் பயணப்பட போகிறார் என்று தெரிந்த பின், சம்யுக்தா ஏதேதோ யோசித்தாள்.

“அப்பா. அவருக்கு எங்கேயோ போகணும்ன்னு” என்று சம்யுக்தா தன் மனதிருப்திக்காக தந்தையிடம் கேட்டாள்.

“யாருக்கு?” குருமூர்த்தியிடம் கோவம்.

அதிலே சம்யுக்தா தடுமாறி போனவள், “அவ. அவருக்கு ஏதோ வாங்கணும்ன்னு”

“ஒன்னும் கிடையாது. இந்த வீட்டு வாசலுக்கு வர கூட அவருக்கு அனுமதி இல்லை” குருமூர்த்தி காய்ந்தார்.

முடிஞ்சு!

சம்யுக்தா அவனை காண ரகசிய அறைக்கு சென்றாள். “ஹேய் நானே உன்னை பார்க்க வர இருந்தேன். நான் நாளைக்கு முழுசும் ரூமுக்குள்ள மட்டும் தான் இருக்கணுமாம். உன் அப்பாவும், மணி அங்கிளும் உன்னோட வராங்களா என்ன?” என்று அவளை கட்டிலில் அமர வைத்து கேட்டான்.

“இல்லை. அவங்க வேறெங்கேயோ போறாங்க. நான் மட்டும் தான் கோயம்பத்தூர் போறேன்”

“என்ன. என்ன சொன்ன? உண்மையாவா?” அவன் மகிழ்ச்சியில் குதித்தான்.

“உங்களை கூட்டிட்டு போக மாட்டேன்” சம்யுக்தா சொல்ல,

“சம்யு குட்டி, என்ன இது?” என்று அவளின் முன் சம்மணமிட்டு அமர்ந்தான்.

“அப்பா உங்களுக்கு வாசலுக்கு வரக்கூட பர்மிஷன் இல்லைன்னு சொல்லிட்டார்”

“நான் ஏன் வாசலுக்கு வர போறேன்? உன்கூட கார்ல தானே வர போறேன்”

“ம்ப்ச்”

“ப்ளீஸ் சம்யு தங்கம். எனக்கும் ஏதோ கொஞ்சம் அதிர்ஷ்டம் அடிச்சிருக்கு. அதுல மண்ணை வாரி போட்டுடாத”

“உங்களுக்காக தானே இந்த பாதுகாப்பு. அதையே பிரேக் பண்ணனும்ன்னு நாம நினைக்கிறது தப்பு”

“எனக்கு கிடைச்சிருக்கு கடைசி வாய்ப்பு இது” என்று அவளுக்கு காரணத்தை சொன்னான்.

கோயம்பத்தூர் சென்றாக வேண்டிய கட்டாயத்தை சொன்னான்.

சம்யுக்தா குழம்பி போனாள். முதலில் இருந்தே தடுமாற்றம் தான். ஆனால் இப்போது முழுதாக இவன்பக்கம் சாய்கிறாள் பெண்.

‘நோ சம்யு. இது தப்பு. அப்பாக்கு தெரியாம செய்ய போறியா? உனக்கு எப்படி இந்த தைரியம் வந்தது?’ சம்யுக்தா தன் முன் இருந்தவனை பார்த்தாள்.

‘இவருக்கும் ஆபத்து இருக்கு. நோ சம்யு. ப்ளீஸ்’ தன்னை தானே கெஞ்சினாள்.

அப்பா, இவன் இருவரை பற்றி யோசித்தவளிடம் அலைப்புறுதல். கண்கள் சுழன்றது. தடுமாற்றம் அவளின் கண்களில்!

எனக்காக தடுமாறுகிறாளா?

சில்லென்ற உணர்வு இளங்காளைக்குள்!

“சம்யுக்தா” என்றான்.

இவள் முன் அமர்ந்திருந்தவனின் கண்கள் சம்யுக்தாவை பார்த்திருக்க, அவனின் கைகள் நீண்டு சம்யுக்தாவின் பாதத்தை பற்றி வருடியது.

“ஹேய்” சம்யுக்தா அவன் செயலில் அதிர்ந்து போனாள்.

பாதத்தை அவன் பிடியில் இருந்து இழுக்க, “நோ” என்றவன், அவள் இரு பாதங்களை பூப்போல் ஏந்தி தன் மடியில் வைத்தவன், அழுத்தமாக அவளின் பாதங்களில் முத்தமிட்டான்.

 சம்யுக்தா கண்கள் கலங்கி போக, “நான் என்ன பண்றேன்னு தெரிஞ்சு தான் பண்றேன், நீ என்னை கோயம்பத்தூர் கூட்டிட்டு போகலைன்னாலும், இப்படி தான்”  என்றவன் திரும்ப அவள் பாதங்களில் தன் முத்தத்தை பதித்தான்.

“நான் இருக்க சூழ்நிலையிலும் என்னை ரொம்ப டீப்பா டிஸ்டர்ப் பண்ற பொண்ணு நீ” என்றான்.

சம்யுக்தா அதற்கு மேல் தாங்காமல் பாதங்களை இழுத்துகொண்டாள்.

சர்வாச்சார்யா மண்டியிட்டு அமர்ந்தவன், பெண்ணை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்து கொண்டான்.

“நான் இப்படியான்னு எனக்கே என்னை தெரியாது. தெரிய வைச்ச உனக்கு பனிஷ்மென்ட் தர வேண்டாமா?” என்று அவள் முகம் நிமிர்த்தி கேட்டான்.

“இப்போவும் நீங்க செஞ்சதை நான் நம்பலை” என்றாள் சம்யுக்தா.

“நம்பாத. எனக்கும் அதுதான் வேணும்” என்றான் அவன்,

சம்யுக்தா அவனை தள்ளிவிட்டு எழுந்து கொண்டவள், “நான் உங்களை கூட்டிட்டு போகலை” என்றாள்.

“சரி” என்றான்.

“நடிக்காதடா” சம்யுக்தா கோவம் கொள்ள,

“என்னால எதையும் செய்ய முடியலைன்னு நிறைய வருத்தப்பட்டுட்டேன். ஆனா இனி இல்லை. நான் உன்கிட்ட என்னை எக்ஸ்பிரஸ்  பண்ணியிருக்கேன். அதுவும் என் கெத்தை விட்டு! ம்ம்”

“பொல்லாத கெத்து. போடா மலைமாடு” என்றாள் பெண்.

“மரியாதையா பேசுடி. நாம முன்னமாதிரி இல்லை. தெரியுமில்லை”

“எனக்கு எந்த மாதிரியும் இல்லை. நீ பிராடு, நீ கேடின்னு எனக்கு நல்லா தெரியும்”

“போடி. என் மதிப்பு என்னன்னு தெரியாம பேசுற நீ?”

“எனக்கு தெரிய வேண்டாம். போடா” என்று கிளம்பியவளை அவன் தடுக்கவில்லை.

சம்யுக்தா தான் தூங்க முடியாமல் தத்தளித்தாள். இப்போ வருவான், அப்புறம் வருவான், கூட்டிட்டு போக சொல்லி கேட்பான் என்று காத்திருக்க, அவன் நல்ல தூக்கத்தில் அல்லவா இருந்தான்.

மணி அதிகாலை மூன்று மணியானது. வெளியே ஏதோ சத்தம். அப்பா கிளம்புறாரா என்ன?

சம்யுக்தா கதவை திறந்து வர, “தூங்கலையா நீ?” என்று குருமூர்த்தி மலர்ந்த முகத்துடன் கேட்டார்.

மகளை பார்க்க வேண்டும் என்று அவரே நினைத்திருக்க, சம்யுக்தாவே வந்துவிட்டாள்.

“இப்போதான் எழுந்தேன்” என்று மகள் சொல்ல,

“சரி பத்திரம். கார்ட் இருக்கு இல்லை. பார்த்துக்கோ” என்ற குருமூர்த்தி மகள் உச்சி தலையை வருடினார்.

“அண்ணா” என்று மாசிலாமணி தயாராகி வர,

“குணாவை வர சொல்லிட்டியா?” என்று கேட்டார்.

“அவன் போன் எடுக்கலைண்ணா” என்றார் மணி.

“என் பொண்ணு கூட அவன் போகணும்ன்னு சொன்னேன் இல்லை. வீட்டுக்கு போய் எழுப்பியிருக்க வேண்டியது தானே?” என்று கோவப்பட்டார்.

“அண்ணா. வழக்கம் போல், அவங்க அம்மாவோட சண்டை போட்டுட்டு எங்கேயோ போய் தொலைஞ்சிட்டான். ஆபிஸ்ல கூட இல்லை”

“நாம போன் எடுக்க முடியாது தெரியுமில்ல” குருமூர்த்தி பேச,

‘ஏன்?’ என்று சம்யுக்தாவிற்கு கேள்வி முளைத்தது.

“இங்க இவரை நம்மாளுங்க பார்த்துப்பாங்க. என் பொண்ணு கூட இவங்க யாரும் வேணாம்ன்னு தான் குணாவை கூட்டிட்டு வர சொன்னேன், அதை கூட உன்னால செய்ய முடியாது இல்லை”

“நான் ட்ரைவர்கிட்ட கூட, பாப்பாவோட ஒரு பையன் வருவான்னு சொல்லிட்டேன். ஆனா இவன் இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கலை”

“ப்பா. கற்பகம் பாட்டி மூலம், நான் ஆளை அனுப்பி அவரை கூப்பிட்டுகிறேன்” என்றாள் சம்யுக்தா.

குருமூர்த்தி வேறென்ன செய்ய முடியும்? அவருக்கும் கிளம்ப நேரம் ஆகிறது.

“சரிமா. பார்த்துக்கோ” என்றவர் வாசலுக்கு சென்று திரும்ப மகளை பார்த்தார்.

சம்யுக்தாவும் அவரிடம் வர, மகள் கையை பற்றி கொண்டு கார் வரை சென்றார்.

அப்பா, மகள் இருவரும் தாங்கள் செய்ய போகும் செயலை நினைத்து, மற்றவரின் கரம் பற்றி நின்றனர்.

“அண்ணா” என்று மணி அழைக்க, மனதே இல்லாமல் மகள் கையை விட்டு காருக்குள் அமர்ந்தார்.

குருமூர்த்தி வாகனம் கண்ணில் இருந்து மறையும் வரை சம்யுக்தா அங்கேயே நின்றாள்.

“கண்ணு தூங்கலையா நீ? அதுக்குள்ள கிளம்பிட்டியா?” என்று கற்பகம் பாட்டி வர,

“நீங்க என்ன பாட்டி இவ்வளவு சீக்கிரம்?” என்று சம்யுக்தா கேட்டாள்.

“அவருக்கு மூணு வேளை சாப்பாட்டையும் இப்போவே கொடுத்திட சொல்லி உன் அப்பா சொல்லிட்டார். அதுக்கு அப்புறம் அவர் ரூம் பக்கம் போக கூடாதாம்” என்றபடி மடமடவென சமையல் வேலையை ஆரம்பித்தார்.

“பாவம் புள்ள பிரியாணி கேட்டுச்சு. செய்ய முடியலை” என்று கற்பகம் பாட்டி சொல்ல,

“ரொம்ப முக்கியம்” என்ற சம்யுக்தா அவருக்கு உதவியபடி அடுத்து என்ன என்று யோசித்தாள்.

எல்லா வழியும் அவர்களுக்காக திறந்திருக்கிறது. இனியும் என்ன யோசனை?

“நீ கிளம்பு கண்ணு. ட்ரைவர் வந்துட்டார் பாரு” என்று பாட்டி சொல்ல,

“அவ்வளவு தான் முடிஞ்சது. நீங்க போய் கொடுத்துட்டு வந்துடுங்க” என்று பேக் செய்து கொடுத்தவள், கடகடவென தயாரானாள்.

கற்பகம் பாட்டி ஹாலுக்கு வந்தவுடன், அவன் அறைக்கு ஓடியவள், “சீக்கிரம் ரெடியாகு” என்று அவனை அவசரபடுத்தினாள்.

“நாம போறோமா?”

“ஆமா. இனி பாட்டி நைட் வரை உங்களை தேடி வர மாட்டாங்க. என்னோட குணாவை கூட்டிட்டு போக சொல்லி அப்பா சொல்லியிருக்கார். குணாக்கும் உங்க வயசுதான் இருக்கும். அவனுக்கு பதில் நீங்க வாங்க” என்று பெண் வேகமாக சொல்லியபடி அவனுக்கான உடை எடுத்து கொடுத்தாள்.

“யார் அந்த குணா?” அவன் கண்கள் இடுங்க கேட்டான்.

“ரொம்ப முக்கியம் கிளம்புடா”

 சர்வாச்சார்யா தயாராகி வர, “என் ரூமுக்கு போய்ட்டு அங்கிருந்து காருக்கு போயிடலாம்” என்று பேக் செய்த உணவுடன் அவனை அழைத்து வந்தாள்.

“கண்ணு. யாரோ பையன் வருவான்னு மணி ட்ரைவர்கிட்ட சொல்லியிருக்கான், யார் அது? அவன் ஏன் இன்னும் வரலை” என்று கற்பகம் பாட்டி கேட்டார்.

“வந்திடுவாங்க பாட்டி. லேட் ஆகுமாம். நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. காலையில சீக்கிரம் எழுந்திட்டீங்க”

“உன்னை அனுப்பிட்டு போறேன்” என்று மறுத்துவரை விடாப்பிடியாக அறைக்குள் அனுப்பி வைத்தாள்.

இருள் இன்னும் மிச்சமிருக்க, சர்வாச்சார்யாவிற்கு ஒரு கேப் அணிவித்து அவனை காருக்குள் அழைத்து வந்தாள்,

“தம்பி எப்போ வந்தார்?” என்று ஓட்டுநர் கேட்க,

“முன்னாடியே வந்து, வீட்டுக்குள்ள இருந்தார். பாட்டிதான் கவனிக்கலை” என்றவள், அவனை தன்னுடன் பின்னிருக்கையில் அமர வைக்க,

“தம்பி நீங்க முன்னாடி வாங்க” என்றார் ஓட்டுநர்.

“அங்கிள். இருக்கட்டும்” என்றாள் சம்யுக்தா.

குருமூர்த்தியின் மகளை எப்படி மறுக்க?

அவர்கள் பயணம் ஆரம்பமானது.