கடந்து செல் காதலுடன்! 14 9969 கடந்து செல் காதலுடன்! 14 “என் ப்ரெண்ட் கோகுல்க்கு சொந்த ஊர் கோயம்பத்தூர் தான். அவன் வீட்டுக்கு நான் போகணும்” என்று கேட்டிருந்தான் சர்வாச்சார்யா. சம்யுக்தா யோசிக்கவே இல்லை. பாய்ந்து அவனை கட்டிப்பிடித்து விட்டாள். உயிர் முக்கியம் அமைச்சரே! நல்லவனை சுரங்க அறைக்குள் அடைத்து வைக்கும் போதே, அவ்வளவு பெரிய கலவரம் நடக்கிறது. இதில் இவன் ஊர் சுற்ற கேட்கிறான்! சம்யுக்தா உடனே ஒத்துக்கொள்வாள் என்று சர்வாச்சார்யாவும் எதிர்பார்க்கவில்லை தான். அவளிடம் பேச வேண்டும், கெஞ்ச வேண்டும், முடிந்தால் அவள் கையை கூட காலாக நினைத்து பிடித்து கொள்ள வேண்டும். அவனின் எண்ணம் இதுதான்! ஓர் முடிவோடு தான் அவனும் இவளிடம் பேச வந்திருக்கிறான். நல்லவனுக்கு இவளை விட்டால் வேறு வழியும் இல்லை. இங்குள்ள யாரிடமாவது கேட்டால், அது கிடைக்கும் என்ற நம்பிக்கை இவளிடம் மட்டுமே உண்டு. அதுவும் சிறிதளவு நம்பிக்கை தான். போதும் அந்த சிறிதளவு நம்பிக்கை கூட இத்தனை நாட்கள் அவனுக்கு யாரிடம் இருந்தும் கிடைத்திருக்கவில்லை. எல்லோருக்கும் அவன் உயிர் மட்டுமே அவசியம்! ஆனால் சம்யுக்தா அப்படியாக தெரியவில்லை. இதுவரை இரண்டு முறை அவள் அறைக்கு வந்து சென்றுவிட்டான். இப்போது வரை அவள் யாருக்கும் சொல்லவில்லை. சர்வாச்சார்யாவின் தேர்வில் அவள் தொடர்ந்து ஜெயித்து கொண்டே இருக்கிறாள். ஆம்! அவன் நிலை இதுதான். சம்யுக்தா அவனுக்கான அம்பு! வயது பெண் என்ற உறுத்தலை எல்லாம் அடி மனதிற்குள் புதைத்துவிட்டான். கடந்த நாட்களில் அவன் அதிகம் யோசித்தது, பேசியது, விசாரித்தது எல்லாம் சம்யுக்தா என்ற பெண்ணை மட்டுமே! ஆம். விசாரித்தான்! கற்பகம் பாட்டியிடம் தொடர்ந்து விசாரித்தான். அவர் உணவு கொடுக்க வரும் போதெல்லாம் கேட்டு தெரிந்து கொள்வான். இன்று கூட அவள் எந்த பயிற்சி அறையில் இருப்பாள் என்று தெரிந்தே தான் வந்திருந்தான். குருமூர்த்தி அதிக நேரம் வீட்டில் இருப்பதில்லை. அழைத்தால் கற்பகம் பாட்டி வருவார் என்று தான் அழைத்தான். ஆனால் குருமூர்த்தி வந்தது அவனுக்கு சிறு ஜெர்க். இவனின் அதிர்ஷ்டம் குருமூர்த்தி வெளியே கிளம்பிவிட்டார். இதோ பெண்ணிடமும் அவன் கோரிக்கையை சொல்லிவிட்டான். கவனிக்க வேண்டியது அந்த கோரிக்கையை சொல்ல அவன் சில நொடிகள் தடுமாறியது! இறுதியில் அவன் சூழ்நிலை தான் ஜெயித்தது. அவள் சண்டையிடுவாள், மிஞ்சி போனால் அடிக்க கூட செய்வாள் என்று தான் எதிர்பார்த்தான். ஆனால் சம்யுக்தா அவனை பாய்ந்தல்லவா கட்டிக்கொண்டாள். இதில் ஒரு முறை கட்டிபிடிச்சா போதுமா என்று வேறு கேட்கிறாள்! விரிய துடித்த இதழ்களை கட்டுப்படுத்தி, ஒற்றை கையால் தானும் அவளை அணைத்து கொண்டவன், “இப்படியே நாள் முழுக்க கட்டிபிடிச்சிட்டு இருந்தா கூட எனக்கு ஓகே தான்” என்றான். சம்யுக்தா கடுப்பாகி அவனை விட்டு விலகியவள், “நீங்க கேட்ட மாதிரி கட்டிபிடிச்சுட்டேன். நீங்க எப்போ அப்பாகிட்ட பேச போறீங்க?” என்று கறாராக கேட்டாள். “நான் கேட்டது இது இல்லை” என்றான் சர்வாச்சார்யா. “ஆஹ்ன். கட்டிப்பிடிக்க மாட்டேன்னு தானே அதை கேட்டீங்க. இப்போதான் நான் கட்டிபிடிச்சுட்டேனே. சரியா போச்சு“ “இல்லை. அதெப்படி? எனக்கு அதுதான் வேணும். நான் கோகுல் வீட்டுக்கு போகணும்“ “வீட்ல இருந்து கேட்டுக்கு போனாலே உன் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. இந்த லட்சணத்துல கோயம்புத்தூருக்கு வேற போகணுமா உனக்கு?” “போகணும். போயே ஆகணும். நான் அங்க போய்ட்டு வந்த பின்னாடி தான் ஆதாரத்தை பத்தி உன் அப்பாகிட்ட பேசுவேன்” சம்யுக்தாவிற்கு இதற்கு மேல் பிடித்து வைக்க பொறுமை இல்லை. “நீ பேசவே பேசாத. கிளம்பு. உன் ரூமுக்கு போ. போடா தடிமாடு” என்றாள் கோவமாக. இவனுக்காக எத்தகைய பாதுகாப்பு கொடுக்க படுகிறது. இவன் என்னவென்றால் சாதாரணமாக எங்கேயோ போக வேண்டும் என்று கேட்பான்? “எதுக்கு இப்போ நீ கோவப்படுற? நாம பொறுமையா பேசலாம் வா” என்று அவள் கைப்பற்றி இழுக்க, “இதுக்கு மேலயுமா பேசணும்! ஆளை விடுங்க சார்” என்று கையெடுத்து கும்பிட்டாள் சம்யுக்தா. “ஹேய் சம்யு பாப்பா. நான் சொல்றதை கேளு பட்டு குட்டி. கோகுல் வீட்டுக்கு நான் நிச்சயம் போகணும். உன்னை விட்டா எனக்கு ஹெல்ப் பண்றதுக்கு வேற யார் இருக்கா? எனக்காக யோசி. ப்ளீஸ்” என்று அவளிடம் கெஞ்சலாக கேட்டான் காரியவாதி. “உங்களுக்கு இப்படியெல்லாம் கூட பேச தெரியுது இல்லை” சம்யுக்தா அவனை கண்கள் சுருங்க பார்த்தாள். “சம்யுகிட்ட இன்னும் கூட பேசுவேன். நாம என்ன அப்படியா பழகுறோம்” என்று அவளின் கன்னம் கிள்ளினான் கேடி! “ரொம்ப கேவலமான டெக்னிக் இது! உங்க வேலைக்காக தானே இந்த வேஷம்” சம்யுக்தா அசருவேனா என்று நின்றாள். “இன்சல்ட் பண்ற! என்னையெல்லாம் ஒரு பொண்ணு இப்படி பேசும்ன்னு நான் கனவுல கூட நினைச்சு பார்த்ததில்லை. காலேஜ்ல நாந்தான் ஹீரோ! ஆனா இங்க பாரு குட்டி பாப்பா என்னை அடிக்கிறாங்க, அவமானப்படுத்துறாங்க. ம்ப்ச்” என்று சர்வாச்சார்யா பாவமாக முகத்தை வைத்து கொண்டான். உண்மைக்கும் ஹீரோ மாதிரி இருக்கிறான். பேச்சுக்கு கூட மறுக்க முடியாத தோற்றம். பொய் என்று அவன் சொல்வதை முத்திரை குத்த முடியாது! வேறென்ன சொல்லி இவனை ஆப் செய்வது என்பது தான் சம்யுக்தாவின் எண்ணம்! அதற்கேற்றாற் போல், “நான் சொல்றதை கேட்டா நீங்க திரும்ப ஹீரோ மாதிரி ம்ஹூம் ஹீரோவாவே வலம் வரலாம். நீங்க நான் சொல்றதை யோசிங்க” என்றாள் சம்யுக்தா. அழகில் சம்யுக்தா வீழ்வாள் என்றால், எப்போதே அவள் இவனிடம் வீழ்ந்திருக்க வேண்டும்! அந்த எண்ணம் சர்வாச்சார்யாவுக்கே இல்லை. பேசி புரிய வைக்கலாம் என்ற நம்பிக்கையில், “என்னை சுத்தி நடக்கிற எதையும் புரிஞ்சுக்க முடியாதவனா நான் உனக்கு தெரியுறேனா?” என்று கேட்டான். “இல்லை தான்“ “என் ஒரு உயிருக்காக நிறைய பேர் போராடுறாங்க. அப்படியும் நான் கோயம்பத்தூர் போகணும்ன்னு கேட்கிறேன். உனக்கு புரியுதா?” என்று அவள் கையைப்பற்றி கொண்டான். “எவ்வளவு முக்கியமான வேலையா இருந்தாலும், இப்போ முடியாதுன்னு தான் நானும் சொல்றேன். நீங்களும் புரிஞ்சுக்கோங்க” சம்யுக்தாவும் அவன் கைகளை விலக்காமல் நல்ல முறையில் சொன்னாள். “நான் காலம் தாழ்த்த முடியாது சம்யு. உனக்கு எப்படி புரிய வைப்பேன். ஆஹ்ஹ்” என்று அவள் கைகளை நெறித்தான். இயலாமை! இதுதான் இவனை அதிகம் துரத்துவது! காரணத்தை சொல்ல முடியாது! சொல்லாமல் இவளையும் சம்மதிக்க வைக்க முடியாது! கிடைத்த ஓர் வெளிச்சமும் அணைந்துவிடுமா? தவித்து போனவன், சம்யுக்தாவின் நெற்றி முட்டி நின்றான். சூடான மூச்சு காற்றும், வேகமாக துடிக்கும் இருவர் இதயமும் அந்த நெருக்கத்தை கொஞ்சம் கனமாக்கின! சம்யுக்தாவிற்கு அவன் அருகாமையை ஏற்றுக்கொள்வது சவாலாக இருந்தது. “நான் தப்பு செய்றேன் தானே?” என்று கேட்டான் சர்வாச்சார்யா. “ஆமா” என்று அவனை அழுத்தமாக பார்த்தாள் சம்யுக்தா. “நீ ஏண்டி பொண்ணா பிறந்த?” என்று சட்டென சீறினான். “பையனா இருந்திருந்தா நான் வேற மாதிரி சமாளிச்சிருப்பேன், ஆனா நீ பொண்ணா இருந்து என்னை ரொம்ப டென்சன் பண்ற?” “என் அப்பா உங்க இனம் தான்” சம்யுக்தா நினைவுபடுத்த, “அவர் வேலைக்கு ஆக மாட்டார்” என்றான் உடனே! “அதான் நார்மல் ஆகிட்டீங்க இல்லை. தள்ளி நில்லுங்க” என்று அவனை வேகமாக தள்ளிவிட்டவள், கையால் தனக்கு தானே விசிறி கொண்டாள். கற்பகம் பாட்டி அவளை தேடி போனில் அழைக்க, “நான் போகணும். நீங்களும் ரூமுக்கு போங்க” என்றாள் சம்யுக்தா. “சரி. நாம சாப்பாட்டு நைட்டுக்கு இதைப்பத்தி தெம்பா பேசலாம். நான் ரூமுக்கு வரேன்“ “ரூமுக்கா? முடியாது. அங்க வராதீங்க” என்று சம்யுக்தா கத்தியதை கேட்க அவன் நின்றால் தானே? “ஏன் இவ்வளவு நேரம் கண்ணு? பயிற்ச்சி முடிச்சு ஓய்வெடுக்கலாம் இல்லை” என்று கற்பகம் பாட்டி அவளை இரவு உணவிற்காக குளித்து வர சொன்னார். சம்யுக்தாவும் குளித்து வந்தவள், “அப்பா வரட்டும் பாட்டி” என்றாள். ரோஹனை என்ன செய்திருப்பார்? ‘ஏன் இன்னும் வீட்டுக்கு வரலை? எதாவது பிரச்சனை ஆகியிருக்குமா?’ அந்த நேரம் மாசிலாமணி போனில் அழைத்தார். “அண்ணா வர லேட் ஆகும். உங்களை சாப்பிட்டு ரூமுக்கு போக சொன்னார்” என்று சம்யுக்தாவிடம் சொன்னவர், “கற்பகம் பாட்டிகிட்ட போன் கொடும்மா” என்று பாட்டியிடம் என்ன சொன்னாரோ? “ஏன்ப்பா. ஏன் கொடுக்க வேணாம்?” என்று பாட்டி கேட்டார். “அண்ணா சொன்னார்” என்று மணி போனை வைத்துவிட்டார். “என்னாச்சு பாட்டி?” என்று சம்யுக்தா கேட்க, “அந்த தம்பிக்கு சாப்பாடு கொடுக்க வேணாம்ன்னு சொல்றாங்க” என்றார் பாட்டி வருத்தத்துடன். “அப்பா சொன்னாரா?” சம்யுக்தா வேகமாக கேட்க, “ஆமா. மூர்த்தி தான் கொடுக்க கூடாதுன்னு சொல்லியிருக்கு” என் தந்தை சொல்லியிருக்க மாட்டார் என்ற மகளின் நம்பிக்கை பொய்த்து போனது. “அண்ணா. சொல்லிட்டேன்” என்றார் மாசிலாமணி. “என் பொண்ணை அவங்களை நம்பி, அவங்க சொன்ன இடத்துல தானே விட்டேன். ஆனா என் பொண்ணு கஷ்டப்பட்டிருக்கா! சாப்பிடாம இருந்திருக்கா. வசுந்தரா மேடம் என் மகளை கண்டுக்காம விட்டுட்டாங்க!” “அவங்க மகனை நானும் அப்படியே விட போறேன். அவங்க வாரிசும் கஷ்டப்படட்டும். மூணு வேளை சாப்பாடு அவங்க மகனுக்கு கிடையாது. சொல்லிடு மணி. அந்த வசுந்தரா மேடத்துகிட்ட சொல்லிடு” என்றார் குருமூர்த்தி. சர்வாச்சார்யா இரவு உணவிற்காக அழைத்தான். குருமூர்த்தி அவன் அழைப்பை புறந்தள்ளினார். சம்யுக்தாவிற்கு ஏன் இந்த திடீர் முடிவு என்று புரியவில்லை. ரோஹனை தானே அப்பா பார்க்க போனார்! “பாவம் அந்த தம்பி! மதியம் கூட ஒழுங்கா சாப்பிடலை. என்னவோ யோசனையிலே இருந்தார். டீயும் குடிக்கல“ “இந்நேரத்துக்கு ரொம்ப பசிச்சிருக்கும்! வயசு பையன் எப்படி பசி தாங்கும்?” “உன் அப்பா என்னாச்சுன்னு சாப்பாடு கொடுக்க வேணாம்ன்னு சொல்றார். நம்மளை நம்பி வந்த பையனை நாமளே விடலாமா?” என்று பாட்டி தான் அங்கும் இங்கும் நடந்தபடி புலம்பி கொண்டிருந்தார். சம்யுக்தாவிற்கு உணவை உண்பதே கடினமாக இருந்தது.