குருமூர்த்தி மிகவும் கோவமாக தேடி சென்ற ஆள் அங்கில்லை.
“எங்கடா அவன்?” என்று மாசிலாமணியிடம் கேட்க,
“தெரியலைண்ணா. அவன் இந்த வீட்ல தான் தங்கியிருக்கான், இதோ பார்க்கிறேன்” என்று மணி வேகமாக ரோஹன் எங்கு இருக்கிறான் என்று விசாரிக்க, ரோஹன் தானே அங்கு வந்து சேர்ந்தான்.
காருக்குள் இருக்கும் போதே குருமூர்த்தியை பார்த்து திகைத்தவன், தன்னை தயார் படுத்தி கொண்டே காரை விட்டு இறங்கினான்.
என்றைக்கு இருந்தாலும் இவரை சந்தித்து ஆக வேண்டும் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும் என்பதால், இருவருக்கும் இடையேயான பத்து அடி இடைவேளையை கடக்க அவன் அடியெடுத்து வைக்க, குருமூர்த்தியோ கண் இமைக்கும் நேரத்தில் இவனை நெருங்கியிருந்தார்.
அவரின் வேகத்தில் ரோஹன் நொடி திணறி, “அங்கிள்” என்ற நேரமே, வலுவான அறை வாங்கிவிட்டான்.
“அண்ணா” என்று மணி ஓடி வரும் முன்பு, மேலும் சில அடிகள் விழுந்துவிட்டன.
“போதும்ண்ணா. விடுங்க, விடுங்கண்ணா” என்று மணி அவரை இழுக்க, ரோஹன் ஆட்களும் சத்தத்தில் இவர்களிடம் ஓடி வந்துவிட்டனர்.
ரோஹன் சுற்றி அரண் போல் நின்றவர்கள், “மூர்த்தி அண்ணே. என்னங்கண்ணா. என்னவா இருந்தாலும் பேசிக்கலாம்ண்ணா” என்று அவரிடம் சமாதானம் செய்ய,
“என்னை விடுங்கடா. இன்னைக்கு இவனை முடிக்காம நான் விட மாட்டேன்” என்று மூர்த்தி மணியின் கையில் இருந்து திமிறி, ரோஹன் மேல் பாய்ந்தார்.
“அண்ணா. சொன்னா கேளுங்கண்ணா, சண்முகம் அண்ணாக்கு தெரிஞ்சா பிரச்சனையாகிடும்ண்ணா. தம்பியை விடுங்கண்ணா” என்று ஆட்கள் மூர்த்தியை மிகவும் கடினப்பட்டே, ரோஹனிடம் இருந்து பிரித்தார்கள்.
“வர சொல்லுங்கடா உன் அண்ணனை! இன்னைக்கு இவனை இரண்டுல ஒண்ணு பார்க்காம நான் போக மாட்டேன்” என்று குருமூர்த்தி மிகவும் ஆக்ரோஷமாகவே கத்த,
“அங்கிள். நான் சொல்றதை கேளுங்க” என்றான் ரோஹன்.
குருமூர்த்தி கொடுத்த அத்தனை அடியையும் மறுப்பே இல்லாமல் வாங்கி கொண்டான் ரோஹன் என்பதை அப்போது தான் மாசிலாமணியே உணர்ந்தார்.
“டேய் இன்னொரு முறை என்கிட்ட பேச முயற்சி பண்ணாத. கொன்னு போட்டுடுவேன்” என்று மூர்த்தி ஆவேசமாக எச்சரிக்க,
“அண்ணா. பையனை பார்த்தா தப்பா தெரியலை, ப்ளீஸ் நிதானத்துக்கு வாங்க. நம்ம சம்யுக்தா பொண்ணுக்காக. ப்ளீஸ்ண்ணா” என்று மணி இடையில் வந்து அவரை கட்டுப்படுத்த முயன்றார்.
ஆனாலும் சம்யுக்தாவின் தந்தைக்கு தான் ரத்தத்தின் சூடு இறங்குவேனா என்றது!
குருமூர்த்தி எத்தனையோ பார்த்துவிட்டார்! வலிக்க வலிக்க அனுபவித்துவிட்டார்! போதும், இனி எல்லாம் மகள் தான் என்று தனித்து வந்துவிட்டவரை திரும்ப கடந்த காலம் துரத்துகிறதே!
“நீங்க மட்டும் இல்லை நாங்களும் தான் நிம்மதியா வாழணும்” என்றான் ரோஹன்.
“உன் நிம்மதிக்கு என்ன கேடு வந்துச்சுன்னு என் பொண்ணு பின்னாடி சுத்துற நாயே” குருமூர்த்தி திரும்ப அவன் சட்டையை பிடித்து இறுக்கினார்.
“உங்க பொண்ணை எனக்கு பிடிச்சிருக்கு, அதனால தான் சம்யுக்தா பின்னாடி சுத்துறேன்” என்றான் ரோஹன் அவர் கைப்பிடியிலே.
“டேய் என் மகள் பேரை சொன்னா இப்போவே உன்னை உறுத்தெரியாம அழிச்சிடுவேன்”
“செய்ங்க, என்னை கொன்னா கூட நான் சொல்றது உண்மை. எனக்கு சம்யுக்தா வேணும்” என்றான் ரோஹன் உறுதியாக.
தன்னை நேருக்கு நேர் எதிர்கொண்ட ரோஹன் கண்ணில் குருமூர்த்தி என்ன கண்டாரோ?
“தம்பி, அமைதியா இருங்க. மூர்த்திண்ணா அவரை விடுங்க. நாம பேசலாம். வாங்க, வாங்கண்ணா” என்று குருமூர்த்தியை தனியே இழுத்து வந்து அமர்த்தினார்கள்.
குருமூர்த்தி விடாமல் ரோஹனையே பார்த்திருந்தார். சம்யுக்தாவின் தந்தை மனது எதையோ எச்சரித்தது.
ரோஹன் முகத்தில் இருக்கும் ரத்தத்தை துடைத்து, அவனை இருக்கையில் அமர வைத்தார்கள் ஆட்கள்.
சண்முகம் அமைச்சர்! அவரின் பதவியை கொண்டு மகனுக்கு பாதுகாப்பு என்பதை விட அவரின் எதிரிகளை கொண்டே ரோஹனுக்கு பாதுகாப்பு அதிகம்!
இப்போதும் உடனே மருத்துவர் வந்து ரோஹனை பரிசோதிக்க, “நான் அங்கிள்கிட்ட தனியா பேசணும்” என்றான் ரோஹன்.
“இல்லை தம்பி. சரியா வராது. அப்பாக்கு போன் பண்ணிட்டோம். அவர் வந்திடட்டும்” என்று மறுத்தார்கள்.
“இல்லை. நான் அங்கிள்கிட்ட கண்டிப்பா பேசணும். நீங்க எல்லாம் வெளியே போங்க” ரோஹன் உறுதியாக சொன்னான்.
ஆனால் சண்முகத்தின் ஆட்கள் குருமூர்த்தியின் அமைதியில் தான் அதிகம் அச்சம் கொண்டார்கள். அவர்கள் மட்டுமில்லை மாசிலாமணியும் தான் குருமூர்த்தியின் அருகிலே படபடத்த நெஞ்சத்துடன் நின்றார்.
கோவத்தில் பாய்ந்துவிடும் குருமூர்த்தி ஆபத்தானவர் இல்லை. அமைதியாக நின்று அடிக்கும் குருமூர்த்தி நிச்சயம் ஆபத்தானவர் தான்!
அவரை தெரிந்த எல்லோருக்கும் இது தெரியும்!
ரோஹன் மேல் கட்டுப்பாடில்லாமல் பாய்ந்த குருமூர்த்தி சட்டென அமைதியாகிவிட, ரோஹனை அவரிடம் தனியே விட பயந்தார்கள்.
“தம்பி. எங்களுக்கு மூர்த்தியை தெரியும். எதுவோ சரியில்லை. அப்பா வந்த பின்னாடி என்ன வேணும்ன்னாலும் பேசிக்கோங்க. இப்போ வேண்டாம்” என்று ரோஹனிடம் ரகசிய குரலில் சொன்னார்கள்.
“எனக்கு மூர்த்தி அங்கிளை தெரியும். நான் பார்த்துகிறேன், நீங்க போங்க” என்றான் ரோஹன் அவன் பிடியிலே!
சண்முகத்தின் ஆட்கள் உடனே சண்முகத்தை தான் தொடர்பு கொண்டார்கள். “முருகா நீ மட்டும் தம்பிகூட இரு” என்று சண்முகம் சொல்லிவிட்டார்.
அப்போ சண்முகத்துக்கும் தெரிஞ்சிருக்கு. அப்பனும், மகனும் சேர்ந்து எதாவது திட்டம் போடுறாங்களா? மாசிலாமணி சந்தேகத்துடன் குருமூர்த்தியை பார்க்க, அவரிடம் சிறு அசைவும் இல்லை.
பார்வை முழுதும் ரோஹனை தொடர்ந்திருக்க, “சம்யுக்தாவை எனக்கு முன்னாடியே தெரியும்” என்றான் ரோஹன்.
“அதனால என்ன இப்போ?” மணி தான் அதட்டி கேட்டார்.
“எங்க தாத்தா சம்யுக்தாவுக்கு பண்ணது அதிகம். நாங்க விஷயம் தெரிஞ்சு தடுக்கிறதுக்குள்ள நீங்களே ஜெயில்ல இருந்து வெளியே வந்துட்டீங்க, ஆனா அந்த சின்ன பொண்ணுக்கான உறுத்தல் எங்களை விட்டு போகலை” என்று ரோஹன் வருந்தி சொன்னான்.
இதென்ன புதிதாக சொல்கிறான்? குருமூர்த்தி சட்டென திரும்பி மணியை பார்க்க, அவர் தெரியாது என தலையசைத்தார்.
“வசுந்தரா மேடம் நல்ல இடத்துல தான் சம்யுக்தாவை சேர்த்துவிட்டாங்க. ஆனா அந்த ஹோம்ல இருக்கிறவங்களோட எங்க தாத்தாக்கு தொடர்பு இருந்திருக்கு”
“எங்க சித்தப்பாவை நீங்க கொன்ன கோவத்தை சம்யுக்தா மேல தான் காட்டியிருக்காங்க. அவங்க எதிர்பார்த்த தண்டனை உங்களுக்கு கிடைக்கலன்னு நிறைய கோவம்”
“எங்க அப்பாக்கு முதல்ல இருந்தே அழுத்தம் கொடுத்துட்டே இருந்தாங்க. எங்க அப்பாவும் உங்களை எதாவது செய்யணும்ன்னு தான் சம்யுக்தா அம்மாக்கு விபத்து ஏற்படுத்தினாங்க. ஆனா அவங்களை கொல்ல நினைக்கலை. பயம் மட்டும் தான் காட்ட சொன்னார்”
“ஆனா தாத்தா பணம் கொடுத்து சம்யுக்தா அம்மாவை! அப்பா இதை எதிர்பார்க்கலை. பிரேக் புடிக்கலை எதிர்பாராம நடந்திடுச்சுன்னு அந்த ட்ரைவர் சொன்னதை அப்பாவும் நம்பிட்டார்”
“பின்னாடி தான் எங்களுக்கு எல்லாம் தெரிஞ்சது. ரொம்பவே தாமதம். அதுக்குள்ள சம்யுக்தா எங்க தாத்தா கோவத்துக்கு பலியாகிட்டா! இரண்டு வேலை தான் சாப்பாடு, இருட்டு ரூம்ல தான் தூக்கம்ன்னு நிறைய பண்ணிட்டார்”
“இல். இல்லை. நீ சொல்றதை நாங்க நம்ப மாட்டோம். நீயும், உன் அப்பாவும் தப்பிக்க ஏதேதோ சொல்லிட்டு இருக்க?” மணி தான் கோபத்துடன் பதட்டமும் கொண்டார்.
“சாரி உங்களுக்கு இது அதிர்ச்சியா தான் இருக்கும்” ரோஹன் சொல்ல,
“நாங்க நம்ப மாட்டோம். சம்யுக்தா எங்ககிட்ட சொல்லியிருப்பாங்க. பாப்பா இதுவரைக்கும் இப்படி எதையும் சொன்னது இல்லை” மணி சொல்ல,
“சம்யுக்தாவுக்கே தெரியாம நடந்ததை அவங்க எப்படி சொல்வாங்க?” ரோஹன் கேட்டான்.
“என். என்ன சொல்ற நீ?” மணி படபடத்து போனார்.
“சம்யுக்தாவுக்கு தெரியாது. கொலையாளி மகளுக்கு இவ்வளவு தான் கிடைக்கும்ன்னு ஹோம்ல சொன்னதை அக்சப்ட் பண்ணியிருப்பாங்க. அதனால அமைதியா இருந்திருப்பாங்க” ரோஹன் சொல்ல, மணி பார்வை குருமூர்த்தி மேல் தான் அச்சத்துடன் படிந்தது.
“சம்யுக்தா இப்போ வரையிலும் உங்ககிட்ட எதையும் சொல்லியிருக்க மாட்டாங்கன்னு எனக்கு தெரியும். மறைக்க என் மனசாட்சியும் இடம் கொடுக்கலை”
“அதோட என்னோட சுயநலமும் இதில அடங்கியிருக்கு. உண்மையை ரொம்ப நாளுக்கு மறைச்சு வைக்க முடியாது. பின்னாடி இது தெரியும் போது எனக்கு சம்யுக்தா கிடைக்காம போக வாய்ப்பிருக்கு. அதனாலயும் நான் எல்லாம் சொல்லிட்டேன்” என்று ரோஹன் ஒரே மூச்சில் தன் இத்தனை நாள் அழுத்தத்தை இறக்கிவிட்டான்.