குருமூர்த்திக்கு சொல்லவும் வேண்டுமா? தன் காதில் கேட்டதை நம்ப முடியாமல் அமர்ந்திருந்தார்.

“நீ சொன்ன எல்லாம்  உண்மையா?” மணி நடுக்கம் கண்ட குரலுடன் கேட்டார்.

நாங்க கஷ்டப்பட்டா கூட பரவாயில்லை, சம்யுக்தா நல்லா இருக்கணும் என்று அவ்வளவு பணத்தை அந்த ஹோமுக்கு கொட்டி கொடுத்திருந்தார்கள்.

ரத்தம் சொந்தம் இல்லாதவர்களிடம் சம்யுக்தாவை ஒப்படைக்க முடியாது என்று வசுந்தரா சொல்லிவிட்டார்.

சுபத்ராவின் அம்மா வீட்டினர் பேத்தியை ஏற்று கொள்ள மாட்டேன் என்றுவிட்டார்கள்.

மாசிலாமணி போன்ற ஆண்களிடம் எப்படி சிறு பெண்ணை விடுவது? முடியாது என்று தான் சம்யுக்தா ஹோமில் சேர்க்க பட்டாள்.

“என் பொண்ணு அங்க நல்லா இருக்கணும். நான் வரவரைக்கும் என் பொண்ணு கஷ்டப்பட கூடாது. அவ உங்க பொறுப்பு” என்று வசுந்தரா சொன்னதை நம்பி மகளின் பொறுப்பை ஒப்படைத்தார் குருமூர்த்தி.

ஆனால் என் மகள் நன்றாக இல்லை, கஷ்டப்பட்டிருக்கிறாள், எனக்கு இது தெரியவில்லை! குருமூர்த்தி கண்கள் கலங்கியது.

மெலிந்து காணப்படும் மகள், சோர்ந்த கண்கள், அதை சுற்றிய கருவளையம், தடுமாறும் நடை  எல்லாம் தந்தைக்கு அப்போதை விட இப்போது அதிக துயரத்தை கொடுத்தது.

‘என் மகளுக்கு சுபா போனது, நான் ஜெயில்ல இருக்கிறதே போதுன்ற அளவுக்கு கஷ்டத்தை கொடுத்திருக்கும். அதுக்கும் மேலயா அவளை கஷ்டப்படுத்தி பார்த்திருக்காங்க. என் பொண்ணு, என் எஜமானி!’ தந்தைக்கு இதயமே வெடித்து விடும் போலானது.

ரோஹனுக்கு அவரை புரிய, அவனுமே வருத்தம் கொண்டான்.

நல்லவனே! ஆனால் அவன் சார்ந்த குடும்பம்  சரியில்லை!

“சம்யுக்தாவை கூட்டிட்டு நீங்க ஊட்டி வந்துட்டீங்க. நானும் என் பிஜியை படிக்க இங்க வந்தேன். முதல்ல அவளை பார்க்கும் போது மனசு உறுத்தும். அவளுக்கு எதாவது நல்லது செய்யணும்ன்னு தான் நினைச்சேன். ஆனா அவளோட பழக, பழக என் மனசு மாறிடுச்சு. அவளை விரும்”

“போதும்” என்றார் குருமூர்த்தி.

“அங்கிள்”

“தம்பி” என்றழைத்த மாசிலாமணி வேண்டாமென தலையசைத்தார். ரோஹன் உடன் நின்ற முருகனும், ரோஹன் தோளில் கை வைத்து அழுத்தம் கொடுத்தார்.

குருமூர்த்தி மகள் நினைப்பில் கலங்கி கொண்டிருக்க, அவரின் மகளோ அந்த நல்லவன் கையில்  சிக்கி கொண்டிருந்தாள்.

தங்களின் வாழ்க்கையை சொன்னால் புரிந்து கொள்வான் என்று அவளின் கடந்த காலத்தை சொன்னாள் சம்யுக்தா.

ஆனால் இந்த கேடியோ, நான் வேற ரகம் என்றல்லவா அவளை கோவப்படுத்துகிறான்.

“காதலிச்சா நாசமா தான் போகணும்” என்கிறான் நல்லவன்.

இத்தகைய பதிலை எதிர்பார்க்கா சம்யுக்தா, “அறிவில்லை! நான் என்ன கேட்கிறேன் நீ என்ன பேசுற?” என்று பொங்கிவிட்டாள்.

“ஏய் என்ன ரொம்ப பேசுற? நான் சொன்னதில என்ன தப்பு? உன் அம்மா போனதுக்கும், உன் அப்பா ஜெயிலுக்கு போனதுக்கும் என்ன காரணம்ன்னு நீயே சொல்லு? நீதான் ரொம்ப பெரிய அறிவாளியாச்சே?”

“டேய் தடிமாடு! எல்லாத்தையும் விட்டு அதை மட்டும் யோசிச்சியா? வேறெதுவும் உனக்கு தெரியலையா?”

“தெரியலைடி! அந்த பாழாய் போன காதல் தான் எல்லாத்துக்கும் காரணம்” என்றான் விடாமல்.

“அடிதடி இல்லாம, நல்ல முறையில வாழணும்ன்னு எல்லாம் உனக்கு தோணாதா?” சம்யுக்தா கேட்க,

“இல்லவே இல்லை. வெளியே போய் நல்லா உலகத்தை உத்து பாரு. அராஜகம் பண்றவங்க தான் அமோகமா வாழ்ந்துட்டு இருக்காங்க”

“முதல்ல அப்படி தான் இருக்கும், கடைசியில எல்லாம் புட்டுக்கிட்டு போயிடும்”

“கடைசி வரைக்கும் கூட சூப்பரா இருக்கிறவங்களை எனக்கே தெரியும், உன் அப்பாவும் இந்த காதல் எல்லாம் பண்ணாம இருந்திருந்தா ராஜாவா இருந்திருப்பாரோ என்னவோ?”

“மலைமாடு. நீயெல்லாம் திருந்தவே மாட்ட. ஒழுங்கா நான் சொல்றதை கேளு. அப்பாகிட்ட பேசு”

“கண்ணு கோளாறா உனக்கு? உன் அப்பாகிட்ட நான் பேசிட்டு தான் இருக்கேன்”

“ஆஹ். நான் சொல்றது இதில்லை. நேத்து ஏதோ சொன்ன இல்லை. அதை பத்தி”

“எதை பத்தி?”

“அந்த ஆதாரம்! அதை பத்தி அவர்கிட்ட சொல்லு”

“இதுக்கு தான் இவ்வளவு சுத்தினியா? இதுல என்னை வேற அறிவில்லைன்னு கேட்கிற? எல்லாம் என் நேரம்!”

“எனக்கும் தான் நேரம் உன்கூட எல்லாம் மல்லு கட்ட வேண்டியிருக்கே?” என்று சம்யுக்தா தலையில் அடித்து கொண்டாள்.

“சத்தமே கேட்கல. ஓங்கி அடிச்சுக்கோ” என்று எதிர்பார்ப்புடன் அவளை பார்த்தான்.

“பேசாம நானே உன்னை கொன்னுட்டா என்ன?” என்று சம்யுக்தா அவனை தீவிரமாக பார்க்க,

“பிஸ்டல் கூட இங்க தான் இருக்கு. எடுத்து தரவா?” என்று நல்ல பிள்ளையாக கேட்டான்.

“ஸ்ஸ்ஸ். நோ. நோ. கூல் சம்யு. கூல்” தனக்கு தானே சொன்னபடி நெஞ்சை நீவி விட்டு கொண்டவள்,

“நாம பொறுமையா பேசலாம். உன்னை தேடி வர ஆளுங்க”

“வெய்ட். நீதான் கூல் ஆகிட்ட இல்லை. மரியாதை கொடுத்து பேசுடி” என்றான் சட்டமாக.

“சரிரிரி. அந்த ஆதாரத்துக்காக தான் ஒருவேளை ஆளுங்க உங்களை தேடி வருவாங்க போல. நாம அதை பெரியவங்ககிட்ட சொல்லி என்னன்னு பார்க்கலாம் இல்லை”

“எனக்கு இஷ்டமில்லை. நான் சொல்ல மாட்டேன்” என்று தோள் குலுக்கினான்.

“ஏன்? ஏன் சொல்ல மாட்ட?” சம்யுக்தா வேகமாக கேட்க,

“பொறுமையா பேசணும். கூல். கூல்” என்று அவளின் நெஞ்சை தடவ வந்தவனை,

“ஏய் என்னடா பண்ற?” என்று அவன் கையை தட்டிவிட்டாள்.

“உன்னை கூல் ஆக்குறேன். வேறென்ன?” என்று கேட்டான் நடிகன்.

“உன்னை சாவடிச்சிடுவேன். ஒழுங்கா நான் சொல்றதை கேளு. அப்பாகிட்ட இதைப்பத்தி சொல்லு”

“முடியாது” என்றான் உடனே.

“ஏன் முடியாது. ஏதாவது வலுவான காரணம் இருந்தா சொல்லு”

“வலுவில்லாத காரணம் சொன்னா ஏத்துக்க மாட்டியா சம்யு குட்டி?” என்று அவளின் கன்னம் தட்டினான் இளவயதுக்காரன்.

“கண்டபடி பேசி என்னை கோவப்படுத்தி டாபிக்கை மாத்த நினைக்காத” என்றாள் சம்யுக்தா கோபத்துடன்.

“டாபிக் மாத்துறேனா? ஏய் நான் உன்கிட்ட ப்ளர்ட் பண்றேன்டி என் பட்டர்” என்றான் குறும்புக்காரன்!

“கடவுளே!” சம்யுக்தா தலையை பிடித்து கொண்டாள்.

சர்வாச்சார்யா முகத்தில் ஓர் மந்தகாச புன்னகை. அவன் விரல்கள் குனிந்திருந்த பெண்ணின் உச்சி தலையை வாஞ்சையாக வருடியது.

“தொடாத” சம்யுக்தா அவன் கையை தட்டிவிட்டாள்.

சர்வாச்சார்யா உடனே முகத்தை சுளித்து கொள்ள, “ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க! இந்த ஓட்டம் உங்களுக்கு வேண்டாம். பெரியவங்ககிட்ட சொல்லுங்க. அவங்க நிச்சயம் பார்த்துப்பாங்க” என்று அவன் கையை பிடித்து கொண்டாள் சம்யுக்தா.

“நீ ரொம்ப சூடா இருக்க?” என்றான் விஷமக்காரன்!

சம்யுக்தா அவனை முறைக்க, “வயசு பையன் கூட இருக்கும் போது இதெல்லாம் சகஜம் தான். எனக்கு புரியுது. நீ பீல் பண்ணாத” என்று அவளுக்கு ஆறுதல் வேறு!

கொடுமைடா சாமி!

சம்யுக்தா களைத்து போனாள். ஏற்கனவே மூளைக்குள் குருமூர்த்தியும், ரோஹனும் ஓடி கொண்டிருக்கிறார்கள். இதில் இவன் சேட்டை செய்தே பெண்ணை களைப்பாக்கி விட்டான்.

“நாம இதுக்கு முன்னாடி மீட் பண்ணியிருக்கோமா?” என்று நல்லவன் கேட்க,

“கண்டிப்பா இல்லை” என்றாள் சம்யுக்தா.

“போன ஜென்மத்துல கூடவா?”

“நீங்க என்ன வேதாளமா ஏழு ஜென்மத்துக்கும் என் முதுகிலே தொங்கிட்டு வர?”

“நான் வேணா என் முதுகை செக் பண்ணி பார்க்கவா?”

“தேவையில்லாதது எல்லாம் பேசுங்க. ஆனா முக்கியமானதை பேச விடாதீங்க” என்று சம்யுக்தா எழுந்து கொண்டாள்.

“சரி நான் உன் அப்பாகிட்ட ஆதாரம் பத்தி சொல்றேன். ஆனா அதுக்கு பதிலா நீ எனக்கு ஒன்னு செய்யணும்” என்று தானும் எழுந்து கொண்டபடி டீல் பேசினான் வருங்கால தொழிலதிபன்.

“உண்மையா அப்பாகிட்ட பேசுவீங்களா?” சம்யுக்தாவிற்கு அவனை நம்ப முடியவில்லை.

“நம்பு சம்யு தங்கம்! நான் உன் அப்பாகிட்ட பேசுறேன். நான் கேட்கிறதை நீயும் செய்வியா?” என்று கேட்டான்.

“என்ன செய்யணும்?” சம்யுக்தா சந்தேகமாக கேட்க,

“என்னை கட்டிபிடிச்சுக்கோன்னு கேட்க தான் மனசு பிராண்டுது” என்றவன் பெண் முறைப்பில்,

“ஆனா அது நடக்காதுன்னு தெரியும். அதனால எனக்கு” என்று அவன் ஒன்று கேட்க, சம்யுக்தாவோ அவனை பாய்ந்து கட்டி பிடித்திருந்தாள்.

“ஒரு முறை கட்டிபிடிச்சா போதுமா?” என்று சம்யுக்தா அவன் மார்பிலே தலை நிமிர்த்தி கேட்க,

சர்வாச்சார்யா தான் அவளை விலக்கவும் முடியாமல், வேறொன்றை விடவும் முடியாமல் திகைத்து நின்றிருந்தான்.