மாசிலாமணி தான் சம்யுக்தாவை கல்லூரியில் இருந்து அழைத்து வர சென்றிருந்தார். “என்கிட்ட எதாவது சொல்லணுமா பாப்பா?” என்று மணி கேட்க,
“ஆஹ். இல்லை. இல்லை அங்கிள்” என்ற சம்யுக்தா மொபைலை பார்ப்பது, மணியை பார்ப்பது என்றிருந்தாள்.
‘ஆதாரம் இருக்கிறது. அதை வெளியில் விட வேண்டும்’ என்று சர்வாச்சார்யா சொன்னதை இவரிடம் சொல்வதே உத்தமம் என்று சம்யுக்தாவிற்கு நன்கு புரிந்திருந்தது.
அந்த விடாக்கண்டன் ஆதாரம் இருக்கிறது என்பதையெல்லாம் கண்டிப்பா யாரிடமும் சொல்லியிருக்க மாட்டான். ஒருவேளை அவர்கள் இவனை துரத்துவதும் அந்த ஆதாரத்திற்காக என்றால்? சம்யுக்தாவிற்கு நெஞ்சம் திக்கென்றானது.
ஆனால் உனக்கு எப்படி அது தெரியும் என்று இவர்கள் பதில் கேள்வி கேட்டால் தான் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சமும் அவளை திணறடித்தது.
ரகசிய வழியை பற்றி முதலிலே தந்தைக்கு சொல்லியிருக்க வேண்டும், அதுவும் இல்லை என்றால் அந்த நல்லவனுக்கு தெரிந்த பிறகாவது சொல்லியிருக்க வேண்டும்.
இரண்டுமே செய்யாமல் இப்போது சொல்வது! அதுவும் அவன் இரு முறை இவளின் அறைக்கு வந்து சென்றுவிட்ட பின் சொல்வது என்பது? சம்யுக்தா உடல் குருமூர்த்தியை நினைத்த நேரமே நடுங்கி போனது.
தந்தை எனும் ஸ்தானம் அவளை மிரட்ட, நகத்தை கடித்து கொண்டாள்.
“பசங்க யாராவது தொந்தரவு பண்றாங்களா பாப்பா?” மணி அவளை கவனித்து கேட்க,
“இல்லை. இல்லை அங்கிள்” என்றாள் சம்யுக்தா.
அவளின் வேகமான பதிலில், மணி புருவங்கள் சுருங்கியது.
“வேறென்ன? எதுவா இருந்தாலும் எங்ககிட்ட சொல்லணும் நீ! சூழ்நிலை சரியில்லை. உனக்கு தெரியும் இல்லை. பொறுப்பா நடந்துக்கணும் பாப்பா” என்று மணி அறிவுரையாக தான் சொன்னார்.
ஆனால் அந்த குரல், கண்டிப்பு, இடுங்கிய புருவங்கள் சம்யுக்தாவிற்கு படபடப்பை தான் கொடுத்தது.
இவரே இப்படின்னா அப்பாகிட்ட பேச கூட முடியாது போலவே!
சம்யுக்தா தவறு செய்து தந்தையிடம் நிற்பது இதுதான் முதல் முறையாக இருக்க போகிறது!
கடங்காரன் என்னை அப்பா முன்னாடி தலை குனிஞ்சு நிற்க வைக்க போறான். தடிமாடு!
“சரி போ கண்ணு” என்று கற்பகம் பாட்டி வெளியே வந்துவிட்டார்.
சம்யுக்தா ஓய்வறைக்குள் நிமிடம் அப்படியே நின்றுவிட்டாள். இத்தகைய அனுபவம் அவளுக்கு புதிது!
தன் சிறு முகமாற்றமும் இந்தளவு கவனிக்கப்படுகிறதா?
கள்ளத்தனம் இல்லா பெண் சம்யுக்தா!
நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, நேர்மையான குணம் தான் குருமூர்த்தியின் வளர்ப்பு!
அதில் சிறு குறையும் குருமூர்த்தி விரும்ப மாட்டார்!
சம்யுக்தாவும் தந்தையின் பார்வையில் கீழ் இறங்குவதை துளியும் ஏற்று கொள்ள மாட்டாள்!
ஆனால் எதற்கும் முதல் முறை என்ற ஒன்று உண்டே!
சர்வாச்சார்யா அந்த முதல் முறையாகி போனான்!
இதில் இருந்து விடுதலை பெற இரண்டே இரண்டு வழி தான். ஒன்று தந்தையிடம் சொல்லி விட வேண்டும்! இல்லையென்றால் அவனை அந்த ரகசிய வழியை பயன்படுத்தாமல் தடுக்க வேண்டும்!
இரண்டில் எது சுலபம்! நிச்சயம் அந்த நடிகனிடம் பேசுவது மட்டுமே!