கடந்து செல் காதலுடன்! 10

சம்யுக்தாவிற்கு மனதில் எதோ உறுத்தல். இரவு தூங்க என்று அறைக்கு வந்துவிட்டாள். ஆனாலும் தூங்கத்தான் முடியவில்லை.

“கொஞ்ச நேரம் ஹால்ல இருக்கேன் பாட்டி” என்று பெண் கற்பகத்திடம் கேட்டிருக்க,

“இல்லை கண்ணு. வீட்ல நடமாட்டமே இருக்க கூடாதுன்னு அப்பா கண்டிஷனா சொல்லிட்டார். ரூம்லையும் நடமாடிட்டு இருக்காத. படுத்துக்க கண்ணு” என்றிருந்தார் கற்பகம்.

சம்யுக்தா படுத்திருக்க பிடிக்காமல் எழுந்து கொண்டாள். கண்களை மூடினாலே ஏதேதோ நினைவுகள். 

தண்ணீர் குடித்தவள், சில நொடிகள் தான் அறைக்குள் நடந்திருப்பாள். அவளின் போன் ஒலித்தது.

“மேம். நடக்காதீங்க. படுங்க” என்று ஒருவர் சொன்னார்.

சம்யுக்தா மறுக்க முடியாது. குருமூர்த்தியின் பாதுகாப்பு ஆட்கள் அவர்கள்.

“சரி” என்ற சம்யுக்தாவிற்கு இப்போது உறுதியாகிவிட்டது. ஏதோ ஒன்று நடக்க போகிறது!

ஆனால் அப்பா ஏன் இங்கில்லை? ஒருவேளை அப்பாக்கு ஏதும்? சம்யுக்தா நெஞ்சம் திக்கென்றது.

போன் எடுத்து அழைக்க போனவள் நிதானித்தாள். அவர் வேறெதுவும் வேலையாக இருந்தால்? 

“அப்பா நீங்க ஓகே தானே?” என்று  தந்தைக்கு மெசேஜ் அனுப்பியவள், உயிரை கையில் பிடித்திருப்பது போல் போனையே பார்த்திருந்தாள்.

நிமிடமே ஆகிவிட, சம்யுக்தா கண்கள் கட்டுப்பாடு இல்லாமல் கலங்கியது.

‘நோ. அப்பா நல்லா இருப்பார்’ தனக்கு உறுபோட ஆரம்பித்தாள்.

கடவுள் நம்பிக்கை பெண்ணுக்கு பெரிதும் இல்லை. அம்மாவை வேண்டிக்கொண்டாள்.

குருமூர்த்தியிடம் இருந்து மகளுக்கு அழைப்பே வந்துவிட்டது. “நான் இங்க ஆபிஸ்ல இருக்கேன். கொஞ்சம் வேலை” என்றார் குருமூர்த்தி.

சம்யுக்தா தளர்ந்து போனாள். இரண்டொரு நிமிடங்கள் என்றாலும் அவளின் துடிப்பு அதிவேகத்தை தொட்டுவிட்டது.

“சரிப்பா” என்றாள் மகள் சமாளித்து.

குருமூர்த்தி போனை உடனே வைக்காமல், “சாப்பிட்டியா” என்று கேட்டார். குரலில் சிறு நெகிழ்வு இருந்ததோ!

“ம்ம். நீங்க?” என்று கேட்டாள் மகள்.

“ஆச்சு. நீ தூங்கு. அப்பா காலையில உன்னை பார்க்கிறேன்” என்று வைத்தார் குருமூர்த்தி.

சம்யுக்தாவிற்கு ஆசுவாசம். பெண் அப்பா வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டு உறங்க செல்ல, தந்தை அங்கு மகள், மனைவி புகைப்படத்தை கையில் வைத்து அமர்ந்திருந்தார்.

தறிகெட்டு திரிந்த குருமூர்த்தியின் லகானை பிடித்திழுத்தவர் சுபத்ரா!

இன்று அதே லகான் சம்யுக்தா கையில் இருக்கிறது. மனைவியை விட மகள் இன்னும் வலுவாகவே இழுக்கிறாள்!

ஆம். காதல் ஒரு பக்கத்தை காட்டியது என்றால், பாசம் வேறொரு பக்கத்தை அவருக்கு காட்டி கொண்டிருக்கிறது.

குருமூர்த்திக்கு குடும்பம் என்பதெல்லாம் இல்லை. தாய், தந்தை யாரென்று தெரியாது. பாட்டி ஒருவரின் குடிசை தான் அவரின் மாளிகை!

உழைப்பு மட்டுமே சோறு போடும்! ஓர் வேளை உணவுக்காக பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கியவர்! இன்று அதனால் தான் எழுத, படிக்கவும் தெரிகிறது.

எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர், பின் லிங்கத்திடம் வேலைக்கு சேர்ந்தார்.

“அவனே ரவுடி பையன். அவன் கூட சேராத” என்று சிலர் அறிவுரை சொல்ல,

“அப்போ நீ எனக்கு சோறு போடுறியா?” என்று குருமூர்த்தி கேட்டார்.

அந்த கேள்வியில் நக்கலுடன் எதிர்பார்ப்பும் இருந்தது அவருக்கு மட்டுமே தெரியும்!

பிறகென்ன எல்லோரும் ஒதுங்கிக்கொள்ள, எடுபிடி வேலை செய்தார். 

சிலம்பம், சுருள் வாள் வீச்சு போன்று சில கலைகளை தெரிந்தவர். குருமூர்த்தி ஆர்வமாக லிங்கத்திடம்  கற்று கொள்ள, மனிதரும் கற்று கொடுத்தார்.

“நானும் வயித்து பொழப்புக்கு தான் இதை கத்துக்கிட்டேன். யாரையாவது மிரட்டணும்ன்னு பெரிய ஆளுங்க என்னை கூப்பிட்டனுப்புவாங்க. நானும் அவங்க சொல்ற ஆளை மிரட்டி, அடி போடுவேன். அடி வாங்கினவன் சும்மா இருப்பானா நமக்கும் நாலு கொடுப்பான். அதையும் வாங்கிட்டு தான் பணம் வாங்கிட்டு வருவேன்” என்றார் லிங்கம்.

“துட்டு கிடைக்குது இல்லை. அடி கொடுத்து, அடி வாங்கிக்கலாம்” என்றார் குருமூர்த்தி அப்போதே!

“ஹாஹா. நீ பொழைச்சுக்குவ” என்று அவரின் தோளில் தட்டி கொடுத்த லிங்கத்திற்கும் குடும்பம் என்று யாரும் இல்லை. 

குருமூர்த்தியை தனக்கு அடுத்த வாரிசாக தத்தெடுத்து கொண்ட மனிதர் எல்லா சண்டையையும் கத்து கொடுத்தார்.

“காலம் மாறும் போது நாமளும் மாறிக்கணும் மூர்த்தி” என்று வேறு சில தற்காப்பு கலைகளையும் வெளியே அனுப்பி கற்று கொள்ள வைத்தார்.

குருமூர்த்தி விரைவாக எல்லாவற்றையும் கற்று கொண்டதுடன், லிங்கம் வேலையை அவர் பார்க்க ஆரம்பித்தார்.

மீசை முளைத்துவிட்ட இளவயது! பயம் சிறிதும் இல்லை. அவர் கற்ற கலைகள் தான் அவரின் தைரியம்!

சீறும் காளையாக அவர் பாய்ந்தார். யாரிடமும் பயம் இல்லை. காவல் துறை கைது செய்தாலும் கவலையில்லை.

சிறிது, சிறிதாக அவர் புகழ் பரவ, வேலைகள் குவிந்தது. லிங்கத்திடம்,  “எதுவாக இருந்தாலும் நீங்க சொல்லுங்க, நான் செய்றேன்” என்றுவிட்டார் குருமூர்த்தி. 

லிங்கமும் பணத்தை பார்த்து வேலைகள் எடுப்பதில்லை. குருமூர்த்தியின் பாதுகாப்பை மனிதர் அதிகமே கவனத்தில் வைத்தார்.

“பெரிய ஆளுங்ககிட்ட எல்லாம் முட்டிக்காத மூர்த்தி. நிதானமா இரு” என்று லிங்கம் அவரை அடக்கி கொண்டே இருப்பார்.

மாசிலாமணியும் அப்போது தான் வேலைக்கு சேர்ந்தவர், “பணம் எனக்கு வேணாம். மூணு வேளை சோறு போதும்” என்றுவிட்டார்.  

குருமூர்த்தி யாரையும் அருகில் சேர்க்காதவர், மாசிலாமணியை மட்டும் தன் வட்டத்திற்குள் அனுமதித்தார்.

மாசிலாமணிக்கு தானே எல்லா கலைகளையும் கற்று கொடுத்தார். “அண்ணா” என்ற அவரின் அழைப்பிலே குருமூர்த்தி கரைந்து விடுவார். வெளியே காட்டி கொள்ள மாட்டார். அவ்வளவு தான்!

“அண்ணா கேஸ் இருக்கு. கோர்ட்டுக்கு போகணும்” என்று மாசிலாமணி சொல்ல, 

“ச்சு. போகணுமாடா. காண்டா இருக்கு. அங்க போகவே பிடிக்கலை” என்று குருமூர்த்தி முகத்தை சுளித்தார்.

“அண்ணா. ஜட்ஜ் ரொம்ப கோவப்படுறாங்க. இரண்டு முறையும் நாம போகலை. பாவம் அந்த வக்கீல் மேடம் அழுகிற மாதிரி சொல்லிட்டு போனாங்க” என்றார் மணி.

“யாரு அந்த புதுசா வந்திருக்க பொண்ணா? நம்ம சீனிவாசன் அய்யாகிட்ட சொல்லிக்கலாம்” 

“ண்ணா. நம்ம அய்யாகிட்ட வேலைக்கு வந்திருக்க பொண்ணு. நம்ம நல்லதுக்கு தான் சொல்லுவாங்க. இன்னைக்கு மட்டும் வாங்கண்ணா” என்று மணி  அவரை வற்புறுத்தி அழைத்து சென்றார்.

“சார். வந்துட்டீங்களா? ஹப்பா கோடான கோடி நன்றி உங்களுக்கு. இன்னைக்கு நான் மேடம்கிட்ட திட்டு வாங்க மாட்டேன்” என்று எங்கிருந்தோ ஓடி வந்த பெண் ஒருத்தி, விகசித்த முகத்துடன் படபடக்க,

“யாருடா இது?” என்று மணியிடம் கேட்டார் குருமூர்த்தி.

“சார். நான் சுபத்ரா. சீனிவாசன் சார்கிட்ட ஜுனியரா சேர்ந்திருக்கேன். உங்க கேஸ் எல்லாம் இனி நாந்தான் பார்த்துக்க போறேன்” என்று சுபத்ரா சொல்ல,

“நீயா? ம்ஹூம். இது வேலைக்கு ஆகாது. இந்த குட்டச்சி நம்மளை ஜெயில்ல போட்டுடுவா. வா நாம வேற வக்கீலை பார்த்துக்கலாம்” என்று குருமூர்த்தி நடையை கட்ட,

“சார். சார். நான் நல்லா வாதாடுவேன் சார்” என்று சுபத்ரா அவரின் பின் ஓடினாள்.

“போட்டிருக்க கறுப்பு கோட்டு உசரம் கூட இல்லை நீ. எனக்காக கேஸ் வாதாட போறியா?” என்று கைகளை முறுக்கினார்.

திண்ணிய அவரின் கையை பார்த்த சுபத்ராவிற்கு படபடத்து போனது. “ஓங்கி ஒன்னு வைச்சா டைரெக்ட்டா சொர்கத்துக்கே போயிடுவேன் போலயே” மிரண்டு போன கண்களுடன் குருமூர்த்தியை பார்த்தார் சுபத்ரா.

“அண்ணா. என்ன’ண்ணா நீ? சீனிவாசன் அய்யாக்கு நாம தான் கேஸ் கொடுத்துட்டே இருக்க ஆளு. ஏப்ப சாப்பையா எல்லாம் வக்கீலை கொடுக்க மாட்டார். பாவம் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம்” என்று மாசிலாமணி சமாதானமாக சொல்ல,

“மணி. சும்மாவே அந்த ஜட்ஜ் அம்மாக்கு என்னை பிடிக்காது. இதுல இந்த பொண்ணு ஒழுங்கா பேசலைன்னு வை, நான் ஒரு வருஷத்துக்கு களி தான் திங்கணும்” என்றார் குருமூர்த்தி.

“சார். நான் சாட்சி எல்லாம் பக்காவா வைச்சிருக்கேன். என்னை நம்புங்க சார்” என்றார் சுபத்ரா.

வீட்டில் தந்தையிடம் போராடி தான் வேலைக்கென வந்திருக்கிறார். சீனிவாசன் தெரிந்தவர் என்பதாலே அவரிடம் ஜுனியராக சேர அனுமதி கிடைத்தது.

பேர் சொல்ல கூடிய வக்கீல் சீனிவாசன். அவரிடம் ஜுனியர்களாக சிறு கூட்டமே உண்டு. மிகப்பெரிய கேஸ் ஒன்று சீனிவாசனுக்கு வந்திருப்பதால், சிறு, சிறு வழக்குகளை ஜுனியர்களுக்கு பிரித்து கொடுத்துவிட்டார்.

“குருமூர்த்தி நல்ல பையன். கேசும் எல்லாம் சின்ன கேஸுங்க தான். உனக்கு ஓகே வா?” என்று சுபத்ராவிடம் கேட்டார் சீனிவாசன்.

சுபத்ரா இதற்கு முன்பே குருமூர்த்தியை பார்த்திருக்கிறார் என்பதால் சரியென்றுவிட்டார். 

ஆனால் இப்போது குருமூர்த்தி இவரை நம்ப மாட்டேன் என்று நிற்க, சுபத்ராவிற்கும் வாய்ப்பு கேட்பதை விட வேறு வழியில்லை.

“சரி எப்படி வாதாடுறேன்னு இன்னைக்கு பார்க்க தானே போறேன். அப்புறம் இருக்கு உனக்கு” என்று குருமூர்த்தி ஒப்புக்கொள்ள, சுபத்ராவின் முகம் மலர்ந்துவிட்டது.

இவரின் வழக்குக்கான நேரமும் வர, நீதிபதியாக வசுந்தரா!

குருமூர்த்தியை அவர் பார்க்கும் பார்வையிலே அனல் வீசியது. குருமூர்த்தி காலர் சட்டையை தூக்கி விட்டு கொண்டு நின்றார்.

சுபத்ரா தான் மூச்சு வாங்க வாதாடினார். “என் கட்சிக்காரர் வஞ்சம் வைச்சு அடிக்கலை. சின்ன தகராறு தான். பேச்சு கைகலப்பா மாறிடுச்சு. மத்தபடி வேறெதுவும் இல்லை” என்று ஆட்களை எல்லாம் வரவைத்து சாட்சி சொல்ல வைத்தார்.

“அப்போ பணத்துக்காக, பகைக்காக  குருமூர்த்தி இவரை அடிக்கலை. அப்ப்டித்தானே?” என்று வசுந்தரா முறைப்பாக கேட்க,

“ஆமா. ஆமா மேடம்” என்று சுபத்ரா வேக வேகமாக தலையாட்டினார்.

“நீ சொல்லுப்பா. அப்படியா?” என்று குருமூர்த்தி அடித்த ஆளை கேட்டார் வசுந்தரா.

அந்த மனிதர் அச்சத்துடன் குருமூர்த்தியை பார்க்க, “சொல்லித்தான் பாரு” என்று கண்களை உருட்டினர் குருமூர்த்தி.

“இவங்க சொல்றது தான் உண்மை. பேச்சு தான் கைகலப்பா மாறிடுச்சு” என்றுவிட்டார் அவர். வாங்கிய அடியே இன்னும் வலி கொடுக்க, திரும்ப எங்கு அடி வாங்குவது?