ஆகாஷ், அஸ்வத்தின் பால்ய காலத்திலிருந்தே நண்பன். பல வருட நட்பு. ஆகாஷ் கூறியது போல் அவனது பெற்றோர்கள் அஸ்வத்தின் நிச்சியப் படங்களை அவனுக்கு அனுப்பி வைத்தது என்னவோ உண்மை தான். அதில் ப்ரனவிகா மட்டும் அவன் கண்ணுக்குத் தனித்துத் தெரிந்தாள். அவள் அஸ்வத்தின் தங்கை என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். பார்த்ததும் அவள் அவனை ஈர்த்து விட்டாள். அவளை விட மனசில்லை. அதே சமயம் நண்பன் அவனைத் தப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் தோன்ற, யோசித்தான்.
‘நாமளே போய் கேட்டா தான தப்பு! நம்ம அம்மா அப்பாவுக்குப் பிடிச்சுருக்கு, அதனால கேட்கிறோம்னு சொல்லிட்டா போச்சு. முதல்ல அம்மாவையும் அப்பாவையும் அனுப்பிப் பேச வைப்போமா? இல்லை நாமளே நேரா போய் ப்ரனவிகாகிட்டயே பேசிடலாமா?’ என்று தீவிரமாக யோசித்தான். அவனே போய் அவளிடம் பேசினாள் நன்றாக இருக்காது என்று தீர்மானித்து அஸ்வத்திடம் பேசலாம் என்று முடிவு செய்து தான் அவனது உணவகத்திற்குச் சென்று பேசினான்.
ஆகாஷ் கண்டிப்பாக அஸ்வத் தன்னை நிராகரிக்க மாட்டான் என்று ஸ்திரமாக நம்பினான். அதே போல் தான் நடந்தது. ஆகாஷ் நினைத்ததை விட அஸ்வத் மிகுந்த ஆர்வம் காட்டினான். அது ஆகாஷிற்கும் மகிழ்ச்சியாக இருந்தது. எப்படியும் அஸ்வத் வீட்டில் பேசி சம்மதிக்க வைத்து விடுவான் என்று நம்பினான். அதே போல் அவன் பேசிச் சென்ற அடுத்த நாள் அஸ்வத்திடம் இருந்து அழைப்பு வந்தது.
“சொல்லு அஸ்வத். உன்னை இப்போ தான் நினைச்சேன். நீயே ஃபோன் பண்ணிட்ட.”
“டேய் நமக்குள்ள டெலிபதி வொர்க்அவுட் ஆகக் கூடாது டா. உனக்கும் என் தங்கச்சிக்கும் தான் வொர்க்அவுட் ஆகனும்.” என்று அஸ்வத் கூற,
ஆகாஷ் மிகுந்த மகிழ்ச்சியோடும் ஆர்வத்தோடும்,”ஹேய் அஸ்வத் அப்போ உங்க வீட்டுல ஓகே சொல்லிட்டாங்களா?” என்று கேட்க,
“அப்படிச் சொல்ல முடியாது. ஆனால் ஓகே தான்.”
“என்ன சொல்ற அஸ்வத்? எனக்கு ஒன்னும் புரியலை?”
“இல்லை ஆகாஷ், வீட்டுல நான் சொன்னேன். எல்லாருக்கும் ஓகே தான். ஆனால் அப்பா, தாத்தா, பாட்டி எல்லாரும் ப்ரனவிகாவுக்கும் உன்னைப் பிடிக்கனும். அதுக்கு அப்புறம் எதுவா இருந்தாலும் பேசலாம்னு சொல்லிட்டாங்க டா.”
என்னவோ எதுவோ என்று பயந்த ஆகாஷிற்கு விஷயம் இது தான் என்று தெரிந்ததும் நிம்மதி அடைந்தான்.
“அட இவ்ளோ தானா? உனக்கும் உங்க வீட்டுல இருக்கிறவங்களுக்கும் ஓகே அப்படின்னா நான் வந்து ப்ரனவிகா கிட்ட பேசுறேன் அஸ்வத்.” என்று ஆகாஷ் கூற,
“அதைச் சொல்ல தான் கூப்பிட்டேன் ஆகாஷ். உனக்கு எப்போ ஃப்ரீனு சொல்லு. அன்னைக்கு நான் ப்ரனவிகாவை கூட்டிட்டு வரேன். நீங்க இரண்டு பேரும் பேசுங்க.” என்று அஸ்வத் கூற, ஆகாஷிற்கு அப்பொழுது தான் தன் பெற்றோர்களிடம் இன்னும் விஷயத்தைச் சொல்லவே இல்லை என்ற எண்ணம் தோன்ற,
“நான் இன்னும் ஆபிஸ் போகலை அஸ்வத். அங்கப் போயிட்டு என்னோட ஷெட்யூல் பார்த்துட்டு உனக்குச் சொல்லவா?”
“ம் ஓகே டா. நீ பார்த்துட்டு சொல்லு. சரி டா இதைச் சொல்ல தான் கூப்பிட்டேன். நீ பார்த்துட்டு எனக்கு ஃபோன் பண்ணு. நான் வைக்கிறேன்.” என்று கூறி அஸ்வத் வைத்துவிட, ஆகாஷ் தன் பெற்றோர்களிடம் பேசச் சென்றான்.
ஆகாஷ் வீட்டிற்கு ஒரே மகன். அவரது அப்பா டைல்ஸ் வியாபாரம் செய்கிறார். அதுவும் பெரிய அளவில். பல கோடிக் கணக்கான சொத்துக்கு ஒரே வாரிசு தான் ஆகாஷ்.
அஸ்வத்திடம் பேசியதும் ஆகாஷ் அவனது அம்மா மற்றும் அப்பாவிடம் முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று அவர்களை வீட்டிற்கு வரச் சொன்னான். அவனது அப்பா ஆபிஸ்ல இருந்தும், அவனது அம்மா ஷாப்பிங்கை பாதியிலே விட்டுவிட்டும் வந்தனர்.
“என்ன ஆகாஷ்? மீட்டிங்ல இருந்தேன். நீ கூப்பிட்டதும் அப்படியே வந்துட்டேன். என்ன விஷயம்?” என்று அவனது அப்பா கேட்க,
“நானும் நீ கூப்பிட்டதும் எடுத்து வைச்சதை கூட அப்படியே போட்டுட்டு வந்துட்டேன். என்ன முக்கியமான விஷயம் பேசனும்?” என்று அவனது அம்மாவும் கேட்க,
“அப்பா நீங்க அஸ்வத் என்கேஜ்மென்ட் போனீங்கள?”
“ஆமா போனேன். அதுக்கு என்ன இப்போ?” என்று அவனது அப்பாவும்,
“ஆகாஷ் இதுவா முக்கியமான விஷயம்?” என்று அவனது அம்மாவும் கேட்க,
“ப்ச் அம்மா காரணம் இருக்கு. அதுக்கு தான் கேட்கிறேன்.”
“ஆமா போனோம். நீ தான் எந்த வொர்க் இருந்தாலும் அதை எல்லாம் விட்டுட்டு கண்டிப்பா போகனும்னு சொன்னியே அதனால நாங்க போனோம். ஏன் இப்போ அதைக் கேட்கிற?”
“எதுக்கு கேட்கிற?” என்று அவனது அப்பா அவனைச் சந்தேகமாப் பார்த்துக் கேட்க,
“என்ன ஆகாஷ் உனக்கு அந்தப் பொண்ணை பிடிச்சுருக்கா?” என்று பளிச்சென்று அவனது அம்மா கேட்க,
“ஆமா அம்மா. நீங்க அனுப்பின பிக்லயே எனக்கு ரொம்ப பிடிச்சுருச்சு அம்மா. எனக்காக நீங்க போய் பொண்ணு கேட்கனும்.”
“என்ன விளையாடுறியா ஆகாஷ்?” என்று அவனது அப்பா கோபமாகக் கேட்க,
“இதுல விளையாட ஒன்னுமே இல்லை அப்பா. எனக்கு ப்ரனவிகாவை பிடிச்சுருக்கு. நீங்க போய் பொண்ணு கேளுங்கனு சொல்றேன். இது என்னோட லைஃப். நான் இதுல விளையாடுவேனா? அதனால போய் பொண்ணு கேளுங்க. நீங்க கேட்டுத் தான் ஆகனும். எனக்கு அந்தப் பொண்ணை ரொம்ப பிடிச்சுருக்கு ஸோ உங்களுக்கு வேற வழியே இல்லை. அப்புறம் நான் ஏற்கனவே அஸ்வத்கிட்ட பேசிட்டேன்.” என்று ஆகாஷ் கூற, பெற்றவர்களுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.
“நீங்க இப்படிப் பார்க்கிறதுனால எதுவும் மாற போறது இல்லை. நான் ஒன்னும் யாரோ முன்ன பின்னத் தெரியாத பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லி கேட்கலையே! நல்லா தெரிஞ்ச பொண்ணு தான ப்ரனவிகா. அதை விட அவங்களும் நமக்கு ஈக்வளா, இன்னும் சொல்ல போனா நம்மை விட வசதியானவங்க தான அப்பா. அப்புறம் உங்களுக்கு என்ன பிரச்சனை?”
“ஆகாஷ் சொல்றதும் நியாயம் தான! அவன் ஒன்னும் யாரோ ஊர் பேர் தெரியாத பொண்ணை பிடிச்சுருக்குனு சொல்லலையே!நானும் அந்தப் பொண்ணை ஃபன்க்ஷன்ல பார்த்தேன். எவ்ளோ சுட்டியை இருந்தா தெரியுமா? பேசாமல் அந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணி வைச்சுடலாம்ங்க.” என்று அவனது அம்மா கூற,
“நான் யோசிக்கனும். யோசிச்சுட்டு என் முடிவச் சொல்றேன். அதுக்கு அப்புறம் என்ன பண்றதுனு முடிவுப் பண்ணலாம்.” என்று அவனது தந்தை கூற,
“நீங்க எடுக்கிற முடிவு எனக்குச் சாதகமா இருக்கும்னு நம்புறேன் அப்பா. அப்புறம் அப்பா இப்பவே சொல்லிடுறேன் நாளைக்குக் காலைல நான் ப்ரனவிகாவை பார்த்துப் பேசப் போறேன். அதனால நான் ஆபிஸ்கு லேட்டா தான் வருவேன்.” என்று கூற,
“என்னது அந்தப் பொண்ணை பார்த்துப் பேசப் போறியா? என்ன வழக்கம் இது ஆகாஷ்? முதல்ல பெத்தவங்க பார்த்துப் பேச வேண்டாமா? அதுக்கு முன்னாடி நீ போய் பேசனும்னு சொல்ற? அப்புறம் நான் இன்னும் இந்தக் கல்யாணதுக்கு ஓகே சொல்லலை. அதை மறந்துடாத!! நீ ஒன்னும் அந்தப் பொண்ணை பார்த்துப் பேசலாம் வேண்டாம். என்னை மீறி போன அப்படினா இந்தக் கல்யாணதுக்குக் கண்டிப்பா நான் ஒத்துக்க மாட்டேன்.” என்று கூறிவிட்டு அவர் அங்கிருந்து சென்று விட, ஆகாஷிற்கு பயங்கர கோபம்.
“என்ன அம்மா இப்படிச் சொல்லிட்டு போறார்.”
“இங்கப் பார் ஆகாஷ் நீ அவசரப் பட்டால் எதுவும் நடக்காது. பொறுமையா இரு ஆகாஷ். பொறுத்தார் பூமி ஆழ்வார். அப்பா ஒன்னும் மொத்தமா வேண்டாம் அப்படின்னு சொல்லலை இல்லை. யோசிக்கிறேன்னு தான சொல்லிருக்கார். அப்புறம் எதுக்கு நீ டென்ஷன் ஆகுற? வேண்டாம் அப்படினு சொல்ல எந்த ரீசனும் இல்லை. நீ கவலைப்படாத நான் உன் அப்பாகிட்ட பேசுறேன்.” என்று அவனது அம்மா கூற, ஆகாஷும் தலையசைத்து விட்டு அங்கிருந்து சென்றான்.
~~~~~~~~~~
பரத் கூறியது போலவே இளாவும் ஈரோடு செல்வது என முடிவெடுத்து விட்டான். அவன் செல்வதற்கு முன்பு பரத்திற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை எடுத்து வைக்க உதவிச் செய்து விட்டுச் செல்லலாம் என்று அவனால் முயன்ற வேலையைச் செய்தான்.
“இளா நீ ஊருக்குப் போகப் போறதுக்கு என்ன தேவையோ அதை எடுத்து வை டா. இதெல்லாம் ஆள் வைச்சு கூடப் பார்த்துக்கலாம்.”
“என்ன பரத் பேசுற? நம்ம வீடு நம்ம பொருள். இதெல்லாம் நாம எடுத்து வைச்சா தான் நாளைக்குத் திரும்ப நாம எடுத்து உபயோகப் படுத்த முடியும். எனக்கு எடுத்து வைக்க எதுவுமில்லை பரத். ட்ரெஸ் மட்டும் தான், அதை நான் எப்போவோ எடுத்து வைச்சுட்டேன்.”
“நீ சொன்னாலும் கேட்க மாட்டா. சரி வா எடுத்து வைப்போம்.” என்று கூறி இரண்டு பேரும் சேர்ந்து எடுத்து வைத்தனர்.
பரத் கிளம்ப இன்னும் நாட்கள் இருந்தாலும் அவன் தனியாகக் கஷ்டப்படக் கூடாது என்று தான் இளாவும் இப்பவே எடுத்து வைக்கிறேன்.
மாலை வரை பரத்தும் இளாவும் சேர்ந்து எடுத்து வைத்ததில் ஓரளவு அனைத்தும் எடுத்து வைத்து விட்டனர்.
“போதும் இளா. இதுக்கு மேல நான் பார்த்துக்கிறேன். நீ உன்னோட திங்க்ஸ் எடுத்துக்கிட்டியானு ஒரு வாட்டி பார்த்துக்கோ.”
“ம் சரி பரத்.” என்று கூறி அவனது அறைக்குச் சென்று பார்த்து விட்டு திரும்பி வந்து,
“எல்லாம் ரெடி பரத். நீ எனக்குப் பண்ற உதவிக்கு நான் என்ன கைமாறு செய்யப் போறேன்னு தெரியலை பரத்.” உணர்ச்சி பொங்க இளா கூற,
“ப்ச் லூசு மாதிரி பேசாத இளா. உன் நிலைமைல நான் இருந்தாலும் நீயும் எனக்கு இப்படித் தான் ஹெல்ப் பண்ணிருப்ப. ஸோ இந்த மாதிரிலாம் பேசாத. ப்ரண்ட்ஸ்னா ஒன்னா கூடிப் பேசிச் சிரிக்க மட்டுமல்ல, அவங்களோட கஷ்டத்துலயும் பங்கு எடுக்கனும். அதைத் தான் நான் செஞ்சேன்.” என்று பரத் கூற,
“ரொம்ப தாங்க்ஸ் பரத். எனக்கு என்ன சொல்றதுனு ஒன்னும் புரியலை.”
“டேய் பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம். நைட் ட்ராவல் பண்ணனும். ஸோ கொஞ்ச நேரம் தூங்கலாம் வா.” என்று பரத் கூற, இளாவும் அவனது அறைக்குச் சென்றான்.
இரவு பதினோர் மணிக்கு தங்களது உடைமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு பரத்தும் இளாவும் ஈரோடு நோக்கிப் பயணித்தனர். இளாவுக்கு வண்டி ஓட்டத் தெரியும் என்பதால் பரத்தை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு இளாவே வண்டியை எடுத்தான். இன்னும் நூறு கிலோ மீட்டர் இருக்கும் தூரத்தில் பரத் தான் வண்டி ஓட்டுவதாகக் கூற, இளாவிற்கும் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து வண்டியை எடுத்ததால் அவனுக்குச் சோர்வாக இருக்க மறு பேச்சு பேசாமல் மாறி அமர்ந்தான்.
காலை ஆறு மணிக்கு வண்டி ஈரோடு வந்தடைய, ஒரு இடத்தில் நிறுத்தி முகம் கழுவிக் கொண்டனர். அப்பொழுது பரத் அவர்கள் வந்து விட்டதை தன் பெற்றோருக்கு அறிவித்த பின் வண்டியை எடுத்தான். அதன் பின் நேராக பரத் வண்டியை அவர்கள் வீட்டிற்குத் தான் விட்டான். அவர்கள் வரும் நேரம் அவனது அம்மா வெளியே காத்திருந்தார். வண்டியை உள்ளே போர்ட்கோவில் நிறுத்தி விட்டு இருவரும் இறங்க, பரத்தின் அம்மா அவர்களை வரவேற்றார்.
“வா இளமுகில். எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேன் அம்மா. நீங்க எப்படி இருக்கீங்க?”
“நானும் நல்லா இருக்கேன் பா. உள்ள வாங்க, செல்ப் டிரைவிங் பண்ணது டையர்டா இருப்பீங்க. போய் கொஞ்ச நேரம் தூங்குங்க.” என்று அவனது அம்மா கூற,
“அப்பா எங்க அம்மா? ஓவி இன்னும் தூங்கிட்டு தான் இருக்காளா?”
“அப்புறம் பேசலாம். முதல்ல இளாவை உள்ள கூட்டிட்டு போ பரத். குறைஞ்சது இரண்டு மணி நேரமாவது ரெஸ்ட் எடுங்க, போங்க.” என்று அவனது அம்மா கூற, பரத்திற்கும் ஓய்வு தேவைப்பட்டதால் மறுக்காமல் இளாவையும் அழைத்துக் கொண்டு சென்றான்.
இளாவிற்கு விருந்தினர் தங்கும் அறையைக் காண்பித்து,”இங்கப் பார் இளா எதுவும் யோசிக்காத, இது உன் வீடு மாதிரி நினைச்சுக்கோ. கேசுவலா இரு டா. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. எனக்கும் தூக்கம் வருது. உன் லைஃப் இன்னைல இருந்து புதுசா ஸ்டார்ட் ஆகுதுனு நினைச்சுக்கோ சரியா. அதனால எதுவும் பேசாமல் போய் தூங்கு.” என்று பரத் கூறிவிட்டு இளா பேச வாய்ப்பு அளிக்காமல் அவனது அறைக்குச் சென்று விட்டான்.
பரத் சாதாரணமாகக் கூறிவிட்டான். ஆனால் இளாவுக்கு தான் சட்டென்று அங்கு ஒட்ட முடியவில்லை. மூன்று ஆண்டு காலம் வீட்டை விட்டு வெளியே வராதவன் இன்று வீட்டை விட்டு மட்டுமல்லாமல் ஊரை விட்டே வந்துருக்கான். இந்த மாற்றம் அவனது வாழ்க்கையில் நல்லதைத் தருமா இல்லை கெட்டதைத் தருமா என்று அவனுக்குத் தெரியாது. ஆனால் மனம் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டான். வாழ்க்கையை அதன் போக்கில் சென்று வாழலாம் என்று முடிவெடுத்து அறைக்குள் சென்றான்.
~~~~~~~~~~
ப்ரனவிகாவிற்கு அன்று தூக்கத்திலிருந்து எழும் போதே புத்துணர்ச்சியாக இருந்தாள். காரணம் இல்லாமல் அவளது மனம் அன்று மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதனால் இந்த மகிழ்ச்சி என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு நல்ல விஷயம் நடக்கப் போகிறது என்று மட்டும் தோன்றியது.
அவள் எழுந்து குளித்து உடை மாற்றித் தயாராக, அவளது அறைக்குள் வந்தாள் ஹரிதா. அவளுக்கும் ப்ரனவிகாவிடம் ஏதோ மாற்றம் தெரிந்தது.
“என்ன மேடம் இன்னைக்கு ரொம்ப ஃப்ரெஷா, ஹாப்பியா இருக்கிற மாதிரி தெரியுது. என்ன விஷயம்?”
“அது எனக்கே தெரியலை. காலைல இருந்து மூட் நல்லா இருக்கு. சம்திங் ஹாப்பியா ஏதோ நடக்கப் போகிற மாதிரி ஃபீல்.”
“அப்படி என்ன நடக்கப் போகுது?”
“அதுத் தெரிஞ்சா நான் சொல்ல மாட்டேனா?”
“அதுவும் சரி தான். அத்தான் எதுவும் பேசுனாரா உன்கிட்ட?”
“இல்லை, எதுவும் பேசலை. அவன் கோபமா இருக்கான் போல.”
“இருக்கட்டும் ப்ரனு. நானும் எதுவும் பேசலை. அப்படி என்னப் பிடிவாதம் தான் நினைச்சது தான் நடக்கனும்னு.”
“விடு அண்ணி. உனக்குத் தான் அண்ணா பத்தித் தெரியும்ல அப்புறம் எதுக்கு டென்ஷனாகுற?”
“ம் எனக்குப் புரியுது. டோண்ட் வொர்ரி, மே பி எனக்கு அந்த ஆகாஷை பிடிக்கக் கூடச் செய்யலாம். எல்லாம் நல்லபடியாக நடந்து நான் ஆகாஷா கூட கல்யாணம் பண்ணிக்கலாம். அப்புறம் அண்ணா தானா சரியாகிடுவான்.”
“உனக்கு யாரைப் பிடிக்கும்னு எனக்குத் தெரியும் ப்ரனு.”என்று அழுத்தமாகக் கூற,
“ப்ச் அண்ணி என்னப் பேசுற நீ? நான் தான் அன்னைக்கே சொன்னேன்ல, அதெல்லாம் சும்மா, அந்த மாதிரி எந்த எண்ணமும் எனக்கு இல்லை. நீ தேவையில்லாம பேசி பிரச்சனையாக்கிடாதா சரியா.”
“உண்மையா சொல்றியா ப்ரனு?”
“அட என்னை நம்பு அண்ணி. அது ஜஸ்ட் அ க்ரஷ். அவ்ளோ தான். உன்னை விட்டா நீ இப்படியே பேசிட்டே தான் இருப்ப வா நாம கீழ போகலாம்.” என்று கூறி ப்ரனவிகா ஹரிதாவை இழுத்துக் கொண்டு கீழேச் சென்றாள்.