பரத் தன் வீட்டிற்கு வந்து இன்றோடு ஐந்து நாட்கள் ஆன நிலையில் அவனது அலுவலகத்தில் இருந்து அவனது மேலாளர் அழைத்திருந்தார்.
“எஸ் டேவிட் சொல்லுங்க.”
“பரத் நீ உன் மெயில் செக் பண்ணியா மேன்?”
“இல்லை டேவிட். நான் பார்க்கலையே. இப்போ தான் ஓபன் பண்ணேன். நீங்க கால் பண்ணிட்டீங்க.”
“அப்படியா! அப்போ சரி. உனக்கு நேத்தே மெயில் வந்துருச்சு. என்ன டா இன்னும் பையன் நமக்குக் கால் பண்ணலையேனு பார்த்தேன்.”
“என்ன விஷயம் டேவிட்?”
“உன்னை நம்மளோட பேங்க்ளூர் ப்ராஞ்சுக்கு மாத்திட்டாங்க வித் ப்ரோமோஷன்.”
“நிஜமாவா டேவிட்?”
“நான் எதுக்கு மேன் பொய் சொல்ல போறேன். அங்க உனக்கு ஒரு ஆறு மாசம் தான் வொர்க் இருக்கும். அதுக்கு அப்புறம் நீ லண்டன் போகனும்.”
“டேவிட் ஆர் யூ சீரியஸ்?”
“அட ஆமா மேன். நீ லண்டன் போறது யாருக்கும் சொல்லலை. விஷயம் எனக்கு மட்டும் தான் தெரியும். ஆறு மாசம் கழிச்சு தான் கன்ஃபர்மேஷன் பண்ணுவாங்க. நான் தான் உனக்கு முன்னாடியே சொல்றேன்.”
“ஓ தாங்க்ஸ் டேவிட். ஐ ஆம் ஸோ ஹாப்பி.”
“எனக்கு எதுக்கு மேன் தாங்க்ஸ்? இது உன்னோட உழைப்புக்குக் கிடைச்ச பரிசு. ஸோ என்ஜாய் த மொமென்ட். நீ லீவ் முடிஞ்சு ஆஃபிஸ் வந்ததும் மத்ததை பத்திப் பேசலாம்.” என்று கூறி டேவிட் வைத்துவிட, பரத்திற்கு மிகுந்த மகிழ்ச்சி.
வேகமாகக் கீழே வந்து அவனது அப்பா,அம்மா மற்றும் தங்கையிடம் சந்தோஷமாக விஷயத்தைப் பகிர, அவனது சந்தோஷம் அனைவருக்கும் தொற்றிக் கொண்டது.
“ரொம்ப சந்தோஷம் கண்ணா. பரத் அப்பா சீக்கிரம் அவனுக்கு பொண்ணு பாருங்க. லண்டன் வேற போறேன்னு சொல்றான். கல்யாணம் பண்ணி அனுப்பி வைச்சோம்னா நானும் நிம்மதியா இருப்பேன்.” என்று பரத்தின் அம்மா கூற,
“அட என்ன அம்மா நீங்க? முதல்ல இவளுக்கு பாருங்க. எனக்குப் பொறுமையா பார்த்துக்கலாம் அம்மா. லண்டன் போறது இன்னும் கன்ஃபார்ம் ஆகலை. அதுக்குள்ள நீங்க என்ன என்னமோ பேசுறீங்க.”
“அவளுக்கும் சேர்த்தே பார்த்துரலாம். அமைஞ்சா இரண்டு பேர் கல்யாணத்தையும் ஒன்னாவே வைச்சுருவோம். இல்லாட்டி அடுத்த அடுத்த முகூர்த்தத்துல வைச்சுக்கலாம். ஒன்னும் பிரச்சனை இல்லை.” என்று பரத்தின் அப்பா கூற,
“இதெல்லாம் அந்நியாயம். நான் தான் ஒரு வருஷம் போகட்டும்னு சொன்னேன்ல அப்பா.”
“கல்யாணம் நடக்கிறது நம்ம கையில் இல்லை. ஒருத்தருக்கு எப்போ குரு பார்வை வருதோ அப்போ கண்டிப்பா அவங்களுக்கு கல்யாணம் நடந்துரும்.”
“ப்ச் போங்க அம்மா. சரி நீ பேங்க்ளூர் போயிட்டா உன் கூடவே இளா அண்ணாவையும் கூட்டிட்டு போயிடுவியா?” என்று பரத்தின் தங்கை கேட்க
“ஆமா அவன் எப்படி சென்னைல தனியா இருப்பான்.”
“தப்புப் பண்ற பரத். One day or the other நீங்க இரண்டு பேரும் தனியா போய் தான் ஆகனும். இத்தனை நாள் ஓகே. ஆனால் இனிமேல் அது சரியா வருமா? பேங்க்ளூர் ஓகே. நாளைக்கு நீ லண்டன் போகும் போது கூடவே கூட்டிட்டு போயிடுவியா? அப்போ உனக்குக் கல்யாணம் ஆனதும் என்ன பண்ணுவ?” என்று அவனது அப்பா கேட்க, இளமுகிலிடம் தானும் இதையே தான கேட்டோம் என்று தாமதமாக அவனது ஞாபகத்துக்கு வந்தது.
“அப்போ என்ன பண்றது?”
“அதை அந்த தம்பி தான் சொல்லனும்.”
“அண்ணா எங்க அகாடமில ஒரு வேகன்ட் இருக்கு. நான் எங்க மேடம்கிட்ட சொல்றேன். நீ ஏன் இளா அண்ணாவை இங்க கூட்டிட்டு வரக் கூடாது?”
“ஏய் அவன் இன்ஜினியர். உங்க அகாடமில அவனுக்கு என்ன வொர்க் இருக்கும்?”
“ப்ச் அண்ணா நான் ஒன்னும் பாடம் நடத்த அவங்களை கூப்பிடலை. எங்க அகாடமி வெப்சைட் மேனஜர் ரோல் வேகன்ட்டா இருக்கு. அதுக்கு தான் சொல்றேன். இளா அண்ணாவுக்கு தான் வெப்சைட் டெவலப் பண்றது தெரியுமே அப்புறம் என்ன?”
பரத்தின் தங்கை ப்ரனவிகாவின் சேஸ் அகாடமியில் தான் பணிபுரிகிறாள். அவள் அரசுப் பள்ளியில் சேர தகுதித் தேர்வுக்குத் தயார் ஆகிக் கொண்டிருக்கிறாள். இடைப்பட்ட நாட்களில் சும்மா இருக்காமல் எங்காவது வேலைக்குப் போவோம் என்று போய்ச் சேர்ந்த இடம் தான் சேஸ் அகாடமி.
“நீ சொல்றதும் சரி தான். அவன்கிட்ட நான் பேசுறேன்.”
“சீக்கிரம் பேசு அண்ணா. ஆல்ரெடி இரண்டு பேரை மேடம் இண்டர்வியூ பண்ணிட்டாங்க.”
“ம் ஓகே போனதும் முதல் வேலை அதான். அவன் இங்க வந்தா தங்க என்ன பண்றது?”
“அதைப் பத்தி நீ கவலைப்படாத பரத். வீடு கிடைக்கிறது என்ன பெரிய விஷயமா? நீ பேசிட்டு சொல்லு. அந்தப் பையன் வரும் போது அவன் தங்க வீடு தயாரா இருக்கும்.”
“சரி அப்பா. நான் நாளைக்கே கிளம்புறேன். ட்ரான்ஸ்ஃபர் ப்ரொசீஜர் வேற பார்க்கனும். இளா வர சம்மதிச்சிட்டா அவன் கூடவே நானும் வருவேன். ஸோ நான் நாளைக்கே கிளம்புறேன்.” என்று பரத் கூற, அவனது அப்பாவும் தலையசைத்துச் சம்மதித்தார்.
~~~~~~~~~~
அஸ்வத் அன்று மிகுந்த சந்தோஷத்துடன் வீட்டிற்கு வந்தான். அவனது நீண்ட கால நண்பனே தன் தங்கைக்குக் கணவராக வரப் போவதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தான். அவனிற்கு ஆகாஷை பற்றி முழுவதுமாக தெரியும். ஹரிதா என்ன தான் அத்தைப் பெண்ணாக இருந்தாலும் அவளும் ப்ரனவிகாவும் தோழிகள். அதே போல் தானும் ஆகாஷூம் நண்பர்கள். அதனால் உறவுகளுக்குள் எந்தப் பிரச்சனையும் வராது என்று நினைத்தான்.
வீட்டில் உள்ளவர்களிடம் எதுவும் சொல்லவும் இல்லை, ப்ரனவிகாவின் விருப்பத்தையும் கேட்காமலே அவன் கனவில் மிதந்த ஆரம்பித்துவிட்டான். அவனது கனவு கனவாகவே போயிடும் என்பது அந்த விதிக்கு மட்டுமே தெரியும்.
அஸ்வத் கையில் இனிப்புடன் வர, அவனது அத்தை பூர்ணிமா,”என்ன அஸ்வத் உன் முகமே ஏதோ பிரகாசமா இருக்கு இன்னைக்கு. அதுவும் ஸ்வீடோட வந்துருக்க. என்ன விஷயம் அஸ்வத்?”
“ஆமா அத்தை எல்லாம் நல்ல விஷயம் தான். எல்லாரும் வரட்டும் அத்தை. மொத்தமா எல்லாருக்கும் சொல்றேன்.” என்று அஸ்வத் கூற,
“அப்போ கூப்பிட்டா போச்சு.” என்று கூறி பூர்ணிமா அனைவரையும் அழைக்க,
“ஆமா தாத்தா. என்னோட பெஸ்ட் ப்ரண்ட. அவன் நேத்து தான் கேனடால இருந்து வந்தான். அவனோட பேரன்ட்ஸ் என்னோட நித்சயத்துக்கு வந்தாங்க ஞாபகம் இருக்கா?”
“ம் நல்லாவே ஞாபகம் இருக்கு. இப்போ எதுக்கு இதை எல்லாம் கேட்கிற?” என்று ராகவன் கேட்க,
“காரணம் இருக்கு அப்பா. அவனோட பேரன்ட்ஸ் என்னோட நிச்சியத்துல ப்ரனவிகாவை பார்த்துருக்காங்க. ரொம்ப பிடிச்சு போச்சாம். ஆகாஷ் இன்னைக்கு வந்து என்னை ஆஃபிஸ்ல பார்த்துப் பேசுனான். நம்ம ப்ரனவிகாவை அவனுக்கு கல்யாணம் பண்ணித் தரச் சொல்லிக் கேட்டான்.” என்று அஸ்வத் கூற, பூர்ணிமா தவிர்த்து அனைவரும் ஏதோ யோசனையில் இருக்க,
“அட ரொம்ப சந்தோஷம் அஸ்வத். அந்தப் பையனை உனக்கு நல்லா தெரியும். அவங்க அப்பா அம்மாவும் கூட நல்லவங்களா தான் தெரிஞ்சாங்க. தெரிஞ்ச பையன் வேற. அப்புறம் என்ன அவங்களை நம்ம வீட்டுக்கு வரச் சொல்ல வேண்டியது தான. என்ன அப்பா நான் சொல்றது?” பூர்ணிமா ஆர்வத்துடன் தன் அப்பாவிடம் கேட்க,
“பூர்ணி இது எடுத்தோம் கவுத்தோம்னு செய்றது கிடையாது. நமக்கு அந்தப் பையனை பிடிச்சா மட்டும் பத்தாது. கட்டிக்கப் போற ப்ரனவிகாவுக்கு பிடிக்கனும்.”
“தாத்தா இதுல பிடிக்காமல் போக என்ன இருக்கு? ஆகாஷ் ரொம்ப நல்ல பையன். என்னோட ப்ரண்ட் வேற. வீட்டுக்கும் ஓரே பையன். நம்மளை மாதிரியே அவங்களும் வசதியானவங்க. அப்புறம் என்ன தாத்தா?”
“அஸ்வத் என்ன பேசுற நீ? இதெல்லாம் இருந்தா கல்யாணத்துக்கு ஓகே சொல்லனுமா? ப்ரனவிகா மனசுல என்ன இருக்குன்னு பார்க்க வேண்டாமா?” என்று ராகவன் கேட்க,
“அண்ணா அஸ்வதோட ப்ரண்ட், நமக்கும் நல்லா தெரிஞ்ச பையன் வேற என்ன யோசிக்கனும்? ப்ரனு சின்ன பொண்ணு. அவளுக்கு என்ன தெரியும்?” என்று பூர்ணிமா கூற,
“பூர்ணி அவள் சின்னப் பொண்ணு கிடையாது. நம்ம அகாடமியை அவள் எப்படி நிர்வகிக்கிறானு பார்க்கிற தான!! எப்படி அஸ்வத்கிட்டயும் ஹரிதாகிட்டயும் அவங்களோட விருப்பத்தைக் கேட்டோமோ அப்படித் தான் இப்போவும். ப்ரனு விருப்பம் ரொம்ப முக்கியம்” என்று மரகதம் கூற,
“சரி ப்ரனவிகா நீயே சொல்லு உனக்கு ஓகே தானா? நான் அவன்கிட்ட ரொம்ப நம்பிக்கையா பேசிருக்கேன். நெகடிவ்வா எதுவும் சொல்லாத.”
“அண்ணா நீ என்கிட்ட ஒப்பீனியன் கேட்கிற மாதிரி தெரியலை. நான் ஓகே சொல்லனும்னு நினைக்கிற.”
“இதுல என்ன தப்பு இருக்கு? அவன் ரொம்ப நல்லவன். அவனை விட உனக்குச் சரியானவன் யார் இருக்க முடியும்?” சாதாரணமாக அஸ்வத் கேட்க,
“அத்தான் புரிஞ்சு பேசுறீங்களா இல்லையா? இது அவளோட கல்யாணம். அவளுக்குன்னு ஒரு ஆசை இருக்காதா?”
“நான் அதைத் தப்புன்னு சொல்லவே இல்லையே!! அவளோட ஆசைக்கு ஏற்ப தான் ஆகாஷ் இருப்பான்.” என்று அஸ்வத் கூற, ப்ரனவிகா அவனை முறைத்துப் பார்க்க, ஹரிதா ஏதோ சொல்ல வருவதற்குள்,
“இங்கப் பார் அஸ்வத் முதல்ல ப்ரனவிகா அந்தப் பையனைப் பார்த்துப் பேசட்டும். அதுக்கு அப்புறம் எதுவா இருந்தாலும் பேசலாம். இப்போவே நீங்க சண்டை போட வேண்டாம். ப்ரனு நீ ஒரு முறை பேசி பார் டா. உனக்குச் சரியா வந்துச்சுன்னா நாம மூவ் பண்ணலாம். எந்த கம்பெல்ஷனும் இல்லை.” என்று நம்பியப்பன் கூற,
“தாத்தா என்ன இப்படிச் சொல்றீங்க?”
“வேற என்ன சொல்லனும்னு எதிர்பார்க்கிற அஸ்வத்?” சற்றுக் கடுமையாகக் கேட்க,
“அப்பா விடுங்க. தங்கச்சிக்கு நல்ல வாழ்க்கை அமையனும் ஆசைல பேசுறான். அதான் ப்ரனு பேசப் போறாளா, பாருங்க அவள் சரின்னு தான் வந்து சொல்லுவா.” என்று பூர்ணி அவரை சமாதானப்படுத்தி அஸ்வத்தை அங்கிருந்து அழைத்துச் சென்றார்.
அஸ்வத்தும் பூர்ணிமாவும் அவர்கள் வீட்டுத் தோட்டத்திற்கு வந்தார்கள்.
“அஸ்வத் நீ எதுக்கு வருத்தப்படுற? நான் சொல்றேன் கண்டிப்பா ப்ரனு பேசிட்டு ஓகே சொல்லுவா பார்.”
“அத்தை நிஜமாவா சொல்றீங்க?”
“நிஜமா தான் சொல்றேன். அந்தப் பையன் நல்லவனா தான் தெரியுறான். அப்புறம் நாம எதுக்கு யோசிக்கனும்?”
“ஆமா அத்தை அவன் ரொம்ப நல்லவன். ஆனால் ஏன் அப்பா, தாத்தா, பாட்டி யாரும் புரிஞ்சுக்க மாட்டீங்குறாங்க? அவங்களை கூட விடுங்க இந்த ஹரிதா அவளும் புரியாமல் பேசுறா. நான் ப்ரனு நல்லதுக்கு தான சொல்றேன்.”
“விடு அஸ்வத். ப்ரனு பேசட்டும் முதல்ல. அப்புறம் பார் அவங்களுக்கும் புரியும் உன்னோட முடிவு சரியானதுனு.” என்று பூர்ணிமா அவனைச் சமாதானப்படுத்தினார்.
ஹரிதா இதை எல்லாம் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். அவளுக்கு அவர்கள் பேசுவது புரியவில்லை என்றாலும் ஏனோ மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. அவளுக்கு அஸ்வத்தின் போக்கும் பிடிக்கவில்லை. ப்ரனவிகாவிடம் அவன் அவளது விருப்பத்தைக் கேட்டிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பாள். ஆனால் மாறாக அவன் நிர்ப்பந்தப் படுத்த அவளுக்கு அது தவறாகத் தெரிந்தது.
அவள் அப்படியே நின்று பார்த்துக் கொண்டிருக்க, யாரோ அவளை பின்னால் அடிக்க, சட்டென்று அவளது நினைப்பில் இருந்து வெளி வந்து திரும்பிப் பார்த்தாள். ப்ரனவிகா தான் நின்றிருந்தாள்.
“ஏய் லூசு எதுக்கு டீ அடிச்ச?”
“என்ன பகல் கனவா இல்லை இல்லை இரவு கனவா?”
“அய்யோ ஜோக்கா சிரிச்சுட்டேன். ஈ போதுமா!” என்று எல்லா பல்லையும் காட்டிக் கேட்க,
“ஹா ஹா சரி சரி சொல்லு என்ன ஆச்சு அண்ணி ஏன் இப்படி நின்னுட்டு இருக்க?” என்று ப்ரனவிகா கேட்டவுடன் தான் திரும்பிப் பார்த்தாள் பூர்ணிமாவும் அஸ்வத்தும் அங்கு இல்லை என்பதை.
“ப்ச் எனக்கு அத்தான் பண்றது எதுவும் பிடிக்கலை. இதுல அம்மா வேற அத்தான்னுக்கு சப்போர்ட் பண்ணி பேசுறாங்க.”
“இதுக்கா இவ்ளோ யோசனை!! இங்கப் பார் அண்ணி அண்ணாவுக்கு ஏனோ அவனோட ப்ரண்டை நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறான். அத்தைக்கு நல்ல பையனை விட மனசில்லை. இதுக்கு எதுக்கு நீ இவ்ளோ எமோஷ்னல் ஆகுற?”
“ப்ரனு அவங்க பண்றதை நான் தப்புன்னு சொல்லலை. உன்னோட நல்லதுக்கு தான் அவங்க பேசுறாங்க. எனக்கும் புரியுது. ஆனால் உன்னை நிர்ப்பந்திக்கக் கூடாது. அதைத் தான் நான் சொல்றேன். அப்புறம் இன்னொரு விஷயம் மறந்துடாத உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்கு நல்லா தெரியும்.”
“அட அண்ணி அதலாம் ஒன்னுமில்லை. இன்னுமா நான் அதையே நினைச்சுட்டு இருப்பேன்.”
“பொய் சொல்லாத ப்ரனு.”
“நிஜமா தான் சொல்றேன் அண்ணி. என் மனசுல எதுவும் இல்லை. எல்லாரும் சொல்ற மாதிரி பேசிப் பார்க்கிறேன். அதனால நீயா ஏதாவது யோசிச்சு தேவையில்லாம அண்ணாகிட்ட எதுவும் சண்டை போடாத சரியா! வா போய் சாப்பிடலாம்.” என்று கூறி அவளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றாள்.
ஹரிதா அவளுடன் சென்றாலும் ஏனோ மனம் உரித்துக் கொண்டே இருந்தது. எதுவும் அசம்பாவிதம் நடக்காமல் யாருக்கும் மனம் நோகாமல் எது தங்களுக்கு நல்லதோ அதையே செய்து தரும்படி கடவுளிடம் மனதார பிரார்த்திக் கொண்டாள்.
~~~~~~~~~~
இளமுகிலன் வாழ்க்கை ஆமை போல் மெதுவாகவே சென்றது. ஐந்து நாள் பரத் இல்லாமல் வெறுமையாக இருந்தது. இந்த ஐந்து நாட்களில் தான் இளமுகிலன் நன்றாகப் புரிந்து கொண்டான் தான் பரத் மேல எவ்வளவு சார்ந்து இருக்கிறோம் என்று. பரத் இல்லை என்றால் வாழ்க்கை எப்படி நகரப் போகிறது என்பதை நினைத்தாலே அவனுக்கு ஐயமாக இருந்தது.
இளமுகில் எப்பொழுதும் தைரியமாக இருப்பவன். எந்தப் பிரச்சனை வந்தாலும் துணிச்சலாக எதிர்கொள்பவன். ஆனால் இந்தப் பிரச்சனையில் அவனால் எதுவுமே செய்ய முடியாமல் கையாலாகாத நிலைமையில் இருக்கும் அவனை நினைத்தே அவனுக்குக் கோபமாக வந்தது.
இந்த ஐந்து நாட்களும் சதாசர்வ நேரமும் யோசனையிலே ஆழ்ந்து இருந்தான் இளமுகில். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் தான் இருந்தான் இளமுகில். இந்த நிலையை எண்ணி அவன் அவனையே வெறுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டான்.
‘இப்படியே எத்தனை நாள் பயந்து சாகிறது? பரத்தும் எவ்ளோ நாள் நம்மைத் தாங்கிப் பிடிப்பான். அவனுக்கு நாளைக்குக் கல்யாணமான நாம தனியா தான் இருக்கனும். அதை ஏன் இப்பவே பண்ணக் கூடாது. ஒரு வேளை அவங்க கண்ல நாம பட்டால் என்ன பண்ணுவாங்க? பிடிச்சு ஜெயில்ல போடுவாங்க. சாகிற வரைக்கும் அங்கேயே இருக்கப் போறோம்? மிஞ்சி போனா ஏழு வருஷம் தண்டனை தருவாங்க. இல்லாட்டி அதிகபட்சமா பதினாலு வருஷம். இருந்துட்டு போகலாம். இந்த ஜெனமத்துல இது தான் விதிக்கப்பட்டிருக்குனா அதை ஏதுக்குவோம். பயந்து அடங்கி ஒடங்கி வாழ்றதுக்கு ஜெயில்லுக்குப் போறது எவ்ளவோ மேல். பரத் வரட்டும், சொல்லிட்டு நாம திருச்சிக்குப் போயிடலாம். இது தான் சரியான முடிவு.’ என்று திடமாக முடிவு செய்து விட்டு பரத்தின் வரவிற்குக் காத்திருந்தான் இளமுகில்.