Advertisement

இளமுகிலன், எம்.சி.ஏ. முடிந்தவுடன் கல்லூரியிலே வந்து நிறுவனங்கள் நடத்திய நேர்முகத் தேர்வில் நல்ல சம்பளத்துடன் தேர்வாகி இருந்தான். சென்னையில் தான் வேலை என்பதால் அவனுக்கு மிகுந்த நிம்மதி. ஏற்கனவே பழகிய இடம், அவன் முன்னால் இருந்த இடத்திலே தங்கியும் கொள்ளலாம் என்பதால் மகிழ்ச்சியுடனே வேலையில் சேர்ந்தான்.

முழுதாக ஒரு வருடம் கூட இருந்திருக்காது அவன் வேலைக்குச் சேர்ந்து, ஆனால் திவ்யா அவளது இரண்டாவது வருடப் படிப்பை முடித்து விட்டு ஊருக்கு வருவதால் அவளை அதிர்ச்சியடைச் செய்ய வேண்டுமென என யோசித்து அலுவலகத்தில் விடுமுறை கூறிவிட்டு அவளிடமும் கூறாமல் திருச்சிக்கு திவ்யா வரும் நாள் அதிகாலையில் தான் வந்தான். வந்தவுடன் அவனது அம்மா மற்றும் அப்பாவிடம் நண்பனைப் பார்க்கப் போகிறேன் என்று பொய்யுறைத்து விட்டுத் தான் வந்தான். ஆனால் நடுவில் கூட்ட நெரிசலால் தாமதமாக, மிகுந்த பதட்டத்தில் தான் வந்தான். திவ்யா வீட்டிற்குப் போயிருக்கக் கூடாதென,

அவன் எண்ணியது போலவே திவ்யா வீட்டிற்குச் செல்லவில்லை மாறாக அவளது தோழியைப் பார்த்ததால் அவளிடம் பேசலாம் என்று பக்கத்தில் உள்ள உணவகத்திற்குச் செல்ல, இளமுகிலனும் திவ்யா பின்னாலே அவளை அதிர்ச்சியாக்கச் சென்றான்.

முதலில் உடனே சென்று அவளை அதிர்ச்சியாக்கத் தான் நினைத்தான். ஆனால் தோழிகள் மத்தியில் தடையாக இருக்க விரும்பாமல் அவர்கள் அமர்ந்திருந்த மேஜைக்கும் பின்னால் அமர்ந்தான். அந்த உணவகத்தில் ஒவ்வொரு மேஜைக்கும் நடுவில் தடுப்பு பாதி மறைக்கப் பட்டும் இருக்கும். அதனால் இளமுகிலன் வந்து அமர்ந்ததை அவர்கள் இருவரும் பார்க்கவில்லை.

இளமுகிலன் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள அங்கு உட்காரவில்லை. ஆனால் அவனது விதியின் படி அவனது வாழ்க்கைத் துணை திவ்யா இல்லை. அவன் செய்த தவறை திருத்திக் கொள்ளவே இந்தச் சந்திப்பு என்பதைத் தெரியாமல் அவர்கள் பேசுவதை எதார்த்தமாகக் கேட்க ஆரம்பித்தான். அவர்கள் பேசப் பேச அவன் ஸ்தம்பித்து விட்டான். அப்படியே வந்த மாதிரியே எழுந்து வெளியே வந்து விட்டான்.

அவன் திவ்யாவை அழைத்துச் செல்வதற்கு அவன் புதிதாக வாங்கிய மகிழுந்தில் முதன் முதலில் அவளைத் தான் ஏற்ற வேண்டுமென ஆசை ஆசையாக வந்தான். இப்பொழுது அந்த வண்டியே தன்னைப் பார்த்துச் சிரிப்பதுப் போலத் தெரிந்தது அவனுக்கு. ஆனால் அந்த மகிழுந்தை முதலும் கடைசியுமாக அன்று தான் உபயோகிப்பான் என்று அப்பொழுது அவனுக்குத் தெரியாமல் போயிற்று.

தன்னிலையிலே இல்லாமல் ஏமாற்றப்பட்ட உணர்வுடன் அவன் வண்டியை எடுத்துக் கொண்டு அடுத்த என்னச் செய்வது எங்குப் போவது எனத் தெரியாமல் வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தான். அவனது நேரம் எதிரில் எந்த வண்டியும் வரவில்லை. இல்லை என்றால் இவனது உயிருக்கு ஏதாவது ஆகியிருக்கும். அந்த அளவுக்குக் கவனமில்லாமல் தான் வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தான். எப்படியே அவன் வீட்டுக்கு வந்து விட, அவனது பெற்றோர் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் கூறாமல் அவனது அறைக்குச் சென்றான்.

சரியாக அந்த நேரம் அவனது கைப்பேசிக்கு திவ்யாவிடம் இருந்து அழைப்பு வர, அவன் அதை வெறித்துப் பார்த்தானே ஒழிய, அதை எடுக்கவே இல்லை. அவள் மறுபடி அழைக்கவில்லை மாறாகக் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தால், திருச்சி வந்து சேர்ந்து விட்டதாக. அதையும் அவன் பார்க்கவில்லை. வேகமாக அவனது உடைமைகளை எடுத்துக் கொண்டு கீழே வந்தான்.

அவனது பெற்றோர் கேள்வியுடன் அவனைப் பார்க்க, அவர்கள் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து,

“அப்பா, அம்மா திடிர்னு கம்பெனில இருந்து ஃபோன் வந்தது நான் போகனும். அதான் கிளம்பிட்டேன்.” என்று தயங்கிக் கொண்டே அவன் கூற,

“ப்ச் என்னமோ போ ராசா, இத்தனை நாள் வராமல் இப்போ வந்தியேனு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. சரி வேலை இருக்குன்னு சொல்ற போகாமல் இருக்க முடியாது. அடுத்து வரும்போது ரொம்ப நாள் இருக்கிற மாதிரி வா ராசா.” என்று அவனது அம்மா வசந்தி கூற,

“சரிங்க அம்மா.”

“பார்த்து போயிட்டு வா இளா. நீயும் அவங்ககிட்ட வேலை இருக்கானு கேட்டுட்டு வந்துருக்கலாம். பார் இப்போ எவ்ளோ செலவாகுது வந்து போறதுக்கு. போதாதுக்கு கார வேற வாங்கிருக்க. ம் சரி இனிமேலாவது வரும் போது கேட்டுட்டு வா சரியா.” என்று அவனது தந்தை கூற, அப்பொழுது இருந்த மனநிலையில் அவன் எதுவும் யோசிக்காமல் தலையை மட்டும் அசைத்து விட்டு திருச்சிக்குக் கிளம்பி விட்டான். அந்த நேரத்தில் எது கிடைக்கிறதோ அதில் ஏறிச் சென்று விடலாம் என்று முடிவெடுத்து முதலில் பேருந்து நிலையம் வர, அவனது நேரம் ஒரு பேருந்து சென்னை நோக்கிச் செல்வது இருக்க, டிக்கெட்டும் இருக்க, ஏறி அவனது இருக்கையில் அமர்ந்து விட்டான்.

அவன் கண் முன் சற்று முன் உணவகத்தில் நடந்தது மீண்டும் ஒரு முறை வலம் வந்தது.

திவ்யாவும் அவளது தோழியும் நலம் விசாரித்து விட்டு பொதுவாகப் பேச ஆரம்பித்தனர். பின்னர் பேச்சு காதலுக்கு மாற, திவ்யா வெட்கப்பட,

“ஏய் திவி வெட்கப்பட்டால் விட்டுருவோமா? அதெல்லாம் கிடையாது சொல்லு எப்படி உன்னோட இளாவை சரி சொல்ல வைச்ச?” என்று அவளது தோழி கேட்க,

“அது பெரிய கதை டீ. உன்கிட்ட சொல்லிருக்கேன்ல இளாவை அவனோட காலேஜ்ல தான் பார்த்தேன். செமயா பாட்டு பாடுனான். அதுல தான் நான் சொக்கிப் போயிட்டேன். அதுக்கு அப்புறம் தனியா பார்த்து சூப்பரா பாடுனீங்க அப்படினும் விதி இருந்தா திரும்ப மீட் பண்ணலாம்னு அவனுக்குள்ள ஒரு க்யூராசிட்டிய டெவலப் பண்ணிட்டு நான் போயிட்டேன். வேணும்னே பத்து நாள் அவன் கண்ணுல படவே இல்லை. ஆனால் அவன் என்னைத் தேடுனதை மட்டும் மறைஞ்சு நின்னு பார்த்து ரசிச்சேன்.” என்று திவ்யா கூற,

இதையெல்லாம் இளமுகிலனும் கேட்டுக் கொண்டு தான் இருந்தான். அவள் அவனை எப்போதும் மரியாதையுடன் தான் அழைப்பாள். ஆனால் தன் தோழியிடம் அவன், இவன் என்று பேசுவது அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் கூட அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவளுக்குத் தன்னை அப்படி அழைக்க உரிமையிருக்கிறது என்று அவனது மனதை அவனே சமாதானப்படுத்திக் கொண்டான். அடுத்து அவள் வேண்டும் என்று தான் பத்து நாள் வரவில்லை என்று அவள் கூறியதும் அவனது முகத்தில் மெல்லிய சிரிப்பு வந்தது அவளது கேடித் தனத்தில். அதை அவன் ரசிக்கவும் செய்தான். திவ்யாவிற்கு தன் மீது மிகுந்த காதல் என்று.

“செம, அப்புறம் என்னாச்சு?” என்று திவ்யாவின் தோழி கேட்க,

“ம் அப்புறம் பதினோராவது நாள், இளா ப்ராஜெக்ட் விஷயமா வெளிய போவான்னு தெரியும். அதனால அவன் எப்பவும் பஸ் ஏறுற பஸ் ஸ்டேன்ட்ல நமக்குத் தெரிஞ்ச பசங்ககிட்ட காசு கொடுத்து என்னை டீஸ் பண்ற மாதிரி நடிக்கச் சொன்னேன். இளா வந்தால் அவனுங்க போயிடனும்னு சொன்னேன். நான் சொன்ன மாதிரியே அந்தப் பசங்களும் செமயா நடிச்சாங்க. இளாவும் வந்தவன் அவனுங்கள பார்த்து முறைக்க நான் அப்படியே பயந்த மாதிரி ஆக்ட் பண்ண அவனுங்க சொன்ன மாதிரியே அங்கிருந்து போயிட்டானுங்க. என்னோட ஆக்ட் பார்த்து இளா அப்படியே நம்பிட்டான். அப்புறம் நான் ஒரு கதையை அவுத்து விட்டேன் கார் ரிப்பேர்னு. அதையும் நம்பிட்டான். நான் ஏற்கனவே அந்த டிரைவர்கிட்ட சொல்லிருந்தேன். நான் ஃபோன் பண்ணுவேன் மூணு வாட்டி ஃபுல் ரிங்க் அடிக்கனும், அதுக்கு அப்புறம் சிவிட்ச் ஆஃப் பண்ணி வைச்சுடனும்னு. அவனும் அதே மாதிரி பண்ண, என்னோட ப்ளான் சக்சஸ். அதுக்கு அப்புறம் நல்ல பிள்ளையாட்டாம் இளாவ நான் போகச் சொன்னேன். எனக்குத் தெரியும் இளா என்னைத் தனியா விட்டுட்டு போக மாட்டன்னு. அதே மாதிரி தான் நடந்துச்சு. அதுக்கு அப்புறம் என்ன நான் பஸ்லயே காலேஜ் போனேன். அதுவும் அவனுக்காகத் தான் நான் பஸ்ல வர மாதிரி சீன்ன போட்டேன். அவனும் கொஞ்சம் கொஞ்சமா என்கிட்ட ஸ்லிப்பாகிட்டான். அப்புறம் அவனோட எக்சாம் எல்லாம் முடிஞ்சு அவனுக்கு ஊருக்குப் போகும் போது கொஞ்சம் அழுது வடியுற மாதிரி சீன்ன போட்டு என்னோட காதல்ல சொல்லிட்டேன். அவனும் ஒத்துக்கிட்டான்.” என்று திவ்யா கூற,

“அவன் ஒத்துப்பான்னு உனக்கு நம்பிக்கை இருந்துச்சா?”

“ஏய் அந்த ஒரு வருஷப் பழக்கத்துல நான் அவனை நல்லாவே புரிஞ்சு வைச்சுருந்தேன். அதனால தான் தைரியமா சொன்னேன். அவனும் ஒத்துக்கிட்டான்.”

“பலே கில்லாடி தான் நீ.” என்று கூறி அவளது தோழி சிரிக்க,

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த இளமுகிலனுக்கு ஏமாற்றப்பட்ட உணர்வு எழுவதை எதை வைத்தும் தடுக்க முடியவில்லை. அவன் எல்லாமே தானாக நடந்ததாக நினைத்துக் கொண்டிருக்க, எல்லாம் திவ்யாவின் திருவிளையாடல் என்பதை அவனால் ஏற்க முடியவில்லை. அவர்கள் உறவின் அடித்தளமே பொய்யில் தான் ஆரம்பித்தது என்பதை அவனால் சுத்தமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“சரி இப்படி ப்ளான் பண்ணி நீ அந்த இளாவ கல்யாணம் பண்ணிக்கனும்?”

“கண்டிப்பா, இதுக்கு இரண்டு காரணம் இருக்கு டீ. முதல் காரணம் எனக்கு அவனைப் பிடிச்சுருக்கு. இரண்டாவது காரணம் அவன் வசதியில்லாதவன். கல்யாணத்துக்கு அப்புறம் நான் என்ன சொன்னாலும் அவன் கேட்பான். ஏனா அவனோட மனசுக்குள்ள ரொம்ப பெரிய பணக்காரி தனக்காகத் தான் இப்படி வாழ்றானு அவனோட புத்தில ஏத்திருவேன். எங்க அப்பாவ அவனை இன்சல்ட் பண்ற மாதிரி பேச வைச்சு நான் அவனுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி பேசுனா போதும். பையன் ப்ளாட்டாகிருவான். அப்புறம் என்ன நான் சொல்றதை தானாவே கேட்பான்.” என்று அவள் சாதாரணமாகக் கூற,

“எப்படி இவ்ளோ கான்ஃபிடென்ட்டா பேசுற?”

“இங்கப் பார், இளா ஒரு சாதாரண குடும்பத்துல இருந்து அதுவும் கிராமத்துல இருந்து வரவன். அவனோட எதிர்பார்ப்பு எல்லாம் அமைதியான நிறைவான வாழ்க்கை அவ்ளோ தான். அவனுக்கு லட்சியம்னு எதுவுமில்லை. அவன் எப்படி யோசிப்பான் எனக்கு நல்லா தெரியும். அதுக்கு தகுந்தபடி நாம நடிச்சா போதும் அவன் எல்லாத்தையும் மறந்து என் பின்னாடியே நாய் குட்டி மாதிரி திரிவான்.” என்று திவ்யா கூற,

“அடிப்பாவி!! சரி ஒரு நாள் அவனுக்குத் தெரிஞ்சா என்ன பண்ணுவ?”

“அதெல்லாம் தெரிய வாய்ப்பே இல்லை. அப்படியே தெரிஞ்சாலும் அவன் நம்ப மாட்டான். நானே சொன்னா கூட அந்த பேக்கு நம்பாது. ஏனா என் மேல ஐயாவுக்கு அவ்ளோ லவ்ஸ். ஒரு வேளை தெரிஞ்சாலும் அதை எப்படிச் சமாளிக்கனு இந்த திவ்யாவுக்கு நல்லாவே தெரியும்.” என்று அவள் பெருமையாகக் கூற,

இங்குக் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு தான் உள்ளம் கொதித்தது. சத்தியமாக அவன் நினைக்கவே இல்லை திவ்யா திட்டம் போட்டுத் தான் எல்லாம் செய்திருக்கிறாள் என்று. அவனை அவள் முட்டாளிக்கி இருக்கிறாள் என்பதை நினைக்கும் போது உடம்பெல்லாம் தீப்பற்றிக் கொண்டது போல எரிந்தது. இதுவே போதும் இதற்கு மேல் முடியாது என்று எழ நினைக்கும் போது,

திவ்யாவின் தோழி,”அப்போ கூடியச் சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடப் போறனு சொல்லு.”

“ஆமா!! நான் அப்பாகிட்ட பேச போறேன். கண்டிப்பா அப்பா நோ சொல்ல மாட்டார். அடுத்த வேளையே கல்யாணத்தை வைச்சுடுவார்.”

“அப்போ சென்னை போகப் போறனு சொல்லு.”

“யார் சொன்னா? நான் திருச்சி விட்டுப் போக மாட்டேன்.”

“அப்புறம் என்ன டீ பண்ணப் போற?”

“இளாவ திருச்சிக்கு கூட்டிட்டு வந்துருவேன்.”

“அவன் ஒத்துக்குவானா?”

“கல்யாணமானதும் நான் சொல்ல மாட்டேன். அவன் கூடவே சென்னை போற மாதிரி போய், அவனுக்காக வீட்டு வேலை சமைக்கிறதுனு பண்ணி, நான் கஷ்டப்படுற மாதிரியும் இதெல்லாம் அவனுக்காக தான் நான் பொறுத்துட்டு போற மாதிரியும் ஒரு சீன்ன போடுவேன். சரியா அதே நேரம் எங்க அப்பாவை வரச் சொல்லி இளாவ திட்டச் சொல்லி வேலை செஞ்சது எல்லாம் போதும் திருச்சி வந்து எங்கக் கப்பெனிய பார்த்துக்கிட்டு ராஜா மாதிரி இருக்கலாம்னு சொல்ல வைப்பேன். ஆனால் நானே இளா முன்னாடி அப்பாவை திட்டுற மாதிரி திட்டி அனுப்பிட்டு இளாகிட்ட நல்ல பிள்ளையாட்டம் நாம ஒன்னும் திருச்சிக்கு போக வேண்டாம். எனக்கு எந்தக் கஷ்டமும் இல்லை. உங்களுக்காக நான் இதைச் செய்ய கடமைப்பட்டிருக்கேன்னு டையலாக் விட்டா போதும் இளா கவுந்துருவான். அப்புறம் என்ன அவனே திருச்சி போகலாம்னு சொல்லிடுவான். அவ்ளோ தான் ரொம்ப சிம்பிள்.” என்று அவள் கூற,

“ஏய் நிஜமாவே நீ சூப்பர் டீ. உன்கிட்ட நான் டீயூஷன் தான் எடுக்கனும்.” என்று அவளது தோழி கூறிச் சிரிக்க,

இளாவிற்கு இதற்கு மேல் முடியாது என்று எழுந்து வந்த மாதிரியே அவர்கள் கண்ணில் சிக்காமல் அங்கிருந்து சென்று விட்டான்.

பக்கத்தில் ஏதோ அரவம் கேட்க, அவனது நினைவிலிருந்து வெளியே வந்தான். இந்த நிமிடம் வரை அவன் ஏமாற்றப்பட்டதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஆரம்பம் முதல் இப்பொழுது வரை திவ்யா மனதில் ஒன்று வைத்துக் கொண்டு வெளியே வேறு மாதிரி தான் அவனிடம் இருந்திருக்கிறாள். அவள் இதுவரை பேசியது அனைத்தும் பொய். இதை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவன் அவளை உண்மையாகத் தான் நேசித்தான். ஆனால் அவள் அவனை நேசித்தது உண்மை என்றாலும் அவனிடம் உண்மையாக அவள் இல்லை. என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் அவன் முடிவெடுத்து விட்டான். திவ்யா இனி தனக்கு வேண்டாமென. அந்த முடிவில் அவன் தெளிவாக இருந்தான்.

சென்னை வந்து ஒரு வாரமாகி இருக்கும். திவ்யாவிடம் அவன் எதுவும் சொல்லவில்லை. ஆனால் சொல்லும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தான். இந்த ஒரு வாரமும் திவ்யா அவனுக்கு அழைத்தால் வேலை இருப்பதாகச் சொல்லி அவளைத் தவிர்த்து விட்டான். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அதைச் செய்ய முடியவில்லை. ஏனென்றால் அவள் அழைப்பதை அவன் எடுக்காமல் இருக்க, அவள் அவன் எடுக்கவில்லை என்று அவனது அலுவலக எண்ணிற்கு அழைப்பது, அல்லது அவளது நண்பர்கள் சென்னையில் உள்ளவர்களை அவனைச் சென்று பார்த்துத் தன்னிடம் பேசச் சொல்லுவது, அல்லது தினமும் அவனது அலுவலகத்திற்கு ஏதாவது பரிசுப் பொருட்கள் அனுப்புவது என்று அவள் தொல்லை செய்ய ஆரம்பிக்க, ஒரு முடிவுடன் இளா திருச்சி நோக்கிப் பயணித்தான்.

இந்தப் பயணம் அவனது வாழ்க்கையை முழுவதும் மாற்றியமைக்கும் என்று தெரிந்திருந்தால் அவன் ஊருக்கும் சென்றிருக்க மாட்டான், திவ்யாவை சந்தித்தும் இருந்திருக்க மாட்டான். ஆனால் இது இரண்டும் நடந்ததால் தான் அவன் ப்ரனவிகாவை சந்திக்க நேர்ந்தது. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் முன்னையே தீர்மானிக்கப் பட்டது. எந்த நிகழ்ச்சியும் தேவையில்லாமல் நம் வாழ்க்கையில் நடப்பது இல்லை. ஒவ்வொரு நிகழ்வுக்குப் பிறகும் ஒரு அர்த்தம் கண்டிப்பாக இருக்கும். அதே போல் தான் இளமுகிலன் வாழ்க்கையிலும், திவ்யா வந்ததால் தான் அவன் அவள் மேல் காதலில் விழுந்தான். அதனால் அவன் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள, அதைச் சமாளிக்க முடியாமல் அவன் தப்பிச் செல்ல, ப்ரனவிகா அவன் வாழ்வில் வசந்தமாக வந்தாள்.

Advertisement