இளமுகிலனின் சொந்த ஊர் திருச்சி மாவட்டத்திலிருக்கும் முசிறி என்னும் கிராமம் தான். அவனது அப்பா குமாரும் அம்மா வசந்தியும் படிக்காதவர்கள். அவர்களைப் போல் தங்கள் பிள்ளை இருக்கக் கூடாது என்று அவனை நன்றாகப் படிக்க வேண்டுமென வைராக்கியமாக உழைத்து பணம் சேர்த்தார்கள். அவர்களுக்கு என்று எதுவும் வாங்காமல் இளாவின் படிப்பிற்கு என்ன தேவையோ அதை வாங்கிக் குவித்தார்கள். இளாவும் பெற்றோரின் கஷ்டம் அறிந்து நன்றாகவே படித்தான். அவன் கவுன்சிலிங் மூலமாகத் தான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான். அதனால் அவனது படிப்பிற்குக் குறைந்த அளவிலே பணம் செலவழித்தார்கள். அதன் பின் அவன் நல்ல வேலையில் சேர, அவர்களுக்கு மிகவும் ஆனந்தம்.

“இளா நம்ம அண்ணாச்சி சொன்னார். அவரோட பையனும் நீ வேலைல சேர்ந்திருக்க இடத்தில தான் வேலைப் பார்க்கிறானாம். உனக்கு ஏதாவது தேவைனா அவன்கிட்ட சொல்ல சொன்னார்.” என்று அவனது அப்பா கூற,

“சரிங்க அப்பா. நீங்கக் கவலைப்படாதீங்க, நான் பார்த்துக்கிறேன்.”

“ராசா ஐயா நீ எங்க யா தங்குவ?” அவனது கண்ணத்தைத் தடவி வாஞ்சையுடன் அவனது அம்மா கேட்க,

“அம்மா என்னோட நண்பர்கள் அங்க இருக்காங்க. நான் அவங்களோட தங்கிக்கிறேன். எந்தப் பிரச்சினையும் இல்லை.” என்று அவன் கூற,

“அப்படியா ராசா. இந்தா இந்தப் பணத்தை வைச்சுக்கோ. உனக்குச் செலவுக்கு.” என்று கூறி முப்பதாயிரம் தர,

“அம்மா உங்களுக்கு ஏது இவ்ளோ காசு?” கோபமாக அவன் கேட்டு விட்டு அவரது கையைப் பார்க்க, அதில் கண்ணாடி வளையல் தான் இருந்தது.

“அம்மா உங்களோட வளையலை வித்துட்டீங்களா? ஏன் மா இப்படிப் பண்றீங்க?”

“இங்கப் பார் இளா, இந்த வருஷம் விளைச்சலானதும் நான் உங்க அம்மாவுக்கு வளையல் வாங்கி தரேன். இல்லையா நீ உன் முதல் மாச சம்பளத்துல வாங்கித் தா. அவசரத்திற்கு உதவ தான் தங்கமே.” என்று அவர் கூற, இளாவிற்கு மனம் ஆரவில்லை. அவனது பெற்றோர் இருவரும் அவனைச் சமாதானம் செய்த பிறகே அவன் அங்கிருந்து சென்றான்.

ஒரு வருடம் நன்றாக வேலைப் பார்த்தான். அதில் கிடைத்த அனைத்து பணத்தையும் தன் பெற்றோருக்கே செலவழித்தான். அவர்களும் மகன் செய்கிறான் என்று சந்தோஷமாகவே வாங்கிக் கொண்டார்கள். தன் பெற்றோரை இன்னும் நன்றாக வைத்துக் கொள்ள வேண்டுமென முடிவெடுத்து அதற்கு வழி என்ன என்று யோசிக்க, எம்.சி.ஏ. பட்டதாரிகளின் தேவைகளைப் புரிந்து கொண்டு எம்.சி.ஏ. படிப்பிற்கு விண்ணப்பித்தான்.

முதலில் அவனது பெற்றோர்கள் எதிர்த்தாலும் அந்தப் படிப்பின் மூலம் இளமுகிலனின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று சம்மதித்தனர். அவனும் சந்தோஷமாகப் படிக்க வந்தான். அப்படிப் படிக்க வரும் இடத்தில் அவனது வாழ்க்கையை மாற்றி அமைக்கும் இரு பெண்களையும் ஓரே நாளில் பார்ப்பான் என்றும் அவனது வாழ்க்கையே தலைகீழாக மாறும் என்று தெரிந்திருந்தால் கண்டிப்பாக அவன் படிக்க முடிவெடுத்திருக்க மாட்டான்.

~~~~~~~~~~

ப்ரனவிகா, இளமுகிலனை சந்தித்த அதே நாள் தான் அவனது வாழ்வில் பெரும் புயல் ஒன்று திவ்யா என்னும் ரூபத்தில் வந்தது.

ப்ரனவிகாவும் அவளது நண்பர்களும் இளமுகிலனின் பாட்டை பாராட்டி விட்டுச் செல்ல, அங்கு வந்த திவ்யா அவனிடம்,”ஹாய்! நீங்க சூப்பரா பாடுனீங்க!! உங்க வாய்ஸ் கேட்டு நான் மயங்காத குறை தான். அவ்ளோ நல்லா பாடுனீங்க. அதுலயும் கிட்டார் சூப்பரா வாசிச்சீங்க. மூங்கில் தோட்டம் சாங்க் என்னோட ஃபேவரைட். அதை உங்க வாய்ஸ்ல கேட்கும் போது ஒர்ஜினல்லா பாடுனவங்களை விட, நீங்க சூப்பரா பாடுனீங்க. உங்களையே அந்த சாங்க் பாட வைச்சுருக்கலாம்.” என்று அவள் கூற,

“அய்யோ ரொம்ப பெரிய வார்த்தை இது எல்லாம். உங்களோட பாராட்டுக்கு தாங்க்ஸ்.” என்று இளமுகிலன் கூற,

“உங்களோட தன்னடக்கமும் சூப்பர். ப்ரண்ட்ஸ்?” என்று கூறி அவளது கையை நீட்ட, இளமுகிலன் சிரித்துக் கொண்டே அவளிடம் கை குலுக்கினான்.

“இவ்ளோ நல்ல சிங்கர் என் ப்ரண்ட்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஐ ஆம் திவ்யா. நானும் எம்.சி.ஏ. தான் படிக்கிறேன், ஃப்ர்ஸ்ட் யியர். ஆனால் இந்த காலேஜ் இல்லை. பக்கத்துல இருக்கிற காலேஜ்.” என்று அவள் கூற,

“ஓ சூப்பர். ஐ ஆம் இளமுகிலன். தேர்ட் யியர் எம்.சி.ஏ.” என்று அவன் கூற, திவ்யா மேலே பேச வருவதற்கு முன்பு அவளது தோழிகள் அவளை அழைக்க,

“ஓகே இளா…நான் அப்படிக் கூப்பிடலாமா?” என்று அவள் கேட்க,

“தாராளமா!!” என்று அவன் கூற,

“நாம மறுபடியும் மீட் பண்ணனும்னு விதிச்சு இருந்தா சந்திக்கலாம்.” என்று அவள் கூறிவிட்டுச் செல்ல, இளாவிற்கு வியப்பாக இருந்தது. முதலில் நண்பர்கள் என்று கூறியவள் பின்னர் விதி நம்மைச் சந்திக்க வைத்தாள் சந்திக்கலாம் என்று கூறுகிறாள். அவனுக்கு அவள் வித்தியாசமாகத் தெரிந்தாள்.

பின்னர் அவனது நண்பர்கள் வர, திவ்யாவை மறந்து விட்டு அவன் அவர்களுடன் சென்று விட்டான்.

பத்து நாட்களாகி இருக்கும். இளமுகிலனும் திவ்யாவும் சந்திக்கும் வாய்ப்பு வரவே இல்லை. ஆனால் இளமுகிலன் கண்கள் மட்டும் திவ்யா தென்படுகிறாளா என்று ஆராய்ச்சி செய்தது. ஆனால் அவள் அவன் கண்ணில் தென்படவே இல்லை. பதினோராவது நாள் அவன் எப்போதும் போல அவனது ப்ராஜெக்ட் விஷயமாக வெளியே வர, அங்கிருந்த பேருந்து நிலையத்தில் இளமுகிலன் திவ்யாவைப் பார்த்து விட்டான்.

அவளிடம் செல்லலாம் என்று போகும் போது தான், நன்றாகக் கவனித்தான் அவளது பக்கத்திலிருந்த இரண்டு ஆடவர்கள் அவளை வம்பிழுத்துக் கொண்டிருப்பதை. வேகமாக அவளிடம் விரைந்து சென்றான்.

திவ்யாவிற்கு இளமுகிலனைப் பார்த்ததும் நிம்மதி. அவனிடம் விரைந்து சென்று,”இளா.” என்று அவன் கையைப் பற்றி அவன் பக்கத்தில் நிற்க, அவன் இவர்களைப் பார்த்து முறைக்க, அந்த ஆடவர்கள் இவன் முறைப்பதைப் பார்த்ததும் அங்கிருந்து சென்று விட்டனர்.

“நான் உங்களை எதிர்பார்க்கவே இல்லை இளா. ரொம்ப தாங்க்ஸ்!! நீங்க மட்டும் வராமலிருந்து இருந்தால் என்ன நடந்திருக்கும்னு என்னால நினைச்சு கூடப் பார்க்க முடியலை. அவங்க ஒரு மாதிரி அசிங்கமா பேச ஆரம்பிச்சுட்டாங்க இளா.”மிகுவும் பயந்த குரலில் அவள் கூற,

இளா அவளது கையை அழுத்திப் பிடித்து,”திவ்யா பயப்படாதீங்க. அதான் நான் வந்துட்டேன்ல!! ரிலாக்ஸ் திவ்யா. அவங்க சும்மா வாய் பேச்சு மட்டும் தான். பாருங்க என்னைப் பார்த்ததும் அவங்க ஓடிப் போயிட்டாங்க. நீங்க இனி கவலைப்படாதீங்க திவ்யா.” அவளுக்கு அவன் ஆறுதல் கூற,

“ப்ச் எப்பவும் கார்ல தான் போவேன் இளா. இன்னைக்கு கார் ரிப்பேர் ஆகிடுச்சு. அதனால் தான் நான் பஸ்ல போகலாம்னு முடிவுப் பண்ணி டிரைவர் அண்ணாவைப் போகச் சொல்லிட்டு வந்தேன். அவர் பஸ் வர வரை இருக்கேன்னு தான் சொன்னார். நான் தான் பகல் நேரத்துல எதுக்கு துணைனு அவரைப் போகச் சொன்னேன். நீங்க மட்டும் வராட்டி என்ன நடந்துருக்கும்னு யோசிக்கவே முடியலை.”

“விடுங்க திவ்யா, அதான் நான் வந்ததும் அவங்க போயிட்டாங்களா!! அதை மறந்துடுங்க…” என்று அவன் கூற, பேருந்தும் சரியாக வர,

“இந்த பஸ் உங்க காலேஜ்கு போகும் திவ்யா.” என்று அவன் கூற,

“இல்லை இளா, எனக்கு இன்னும் ஒரு மாதிரி இருக்கு. நான் காலேஜ் போகலை. டிரைவர் அண்ணாவை வரச் சொல்லி அவர் கூட வீட்டுக்கே போறேன்.” என்று அவள் கூற,

“திவ்யா நீங்க காலேஜ் போனால் உங்க ப்ரண்ட்ஸ் எல்லாரையும் பார்த்தா உங்டளோட மனநிலை மாற வாய்ப்பு இருக்கு.” என்று அவன் கூற,

“இல்லை இளா எனக்கு க்ளோஸ் ப்ரண்ட்ஸ் இங்க யாருமில்லை. காலேஜ் போனாலும் என்னால நார்மலா இருக்க முடியும்னு தோனலை.” என்று அவள் கூற,

“ஓ!! சரி திவ்யா அப்போ உங்க டிரைவர் வர வரைக்கும் நான் வெயிட் பண்றேன்.”

“ரொம்ப தாங்க்ஸ் இளா.” என்று கூறி அவளது ஓட்டுநருக்கு அழைக்க, அவர் எடுக்கவே இல்லை.

இரண்டு மூன்று முறை முயன்றும் அவர் எடுக்கவே இல்லை. நான்காவது முறை அழைக்கும் போது அவரது கைப்பேசி அணைத்து வைக்கப் பட்டிருப்பதாகச் சேமித்து வைத்த குரல் கூற, திவ்யா சோர்ந்து போய் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

“என்னாச்சு திவ்யா?”

“டிரைவர் அண்ணா ஃபோன் சுவிட்ச் ஆஃப்னு வருது. ஊஃப் இன்னைக்கு நாளே சரியில்லை எனக்கு.” என்று அவள் கூற, அவளைப் பார்க்க அவனுக்குப் பாவமாக இருந்தது.

“சரி இளா, நீங்கக் கிளம்புங்க உங்களுக்கும் வேலை இருக்கே.”

“உங்களை எப்படி விட்டுட்டு போறது திவ்யா? சரி உங்க வீடு எங்க இருக்குனு சொல்லுங்க நான் உங்களைக் கொண்டு போய் விடுறேன்.” என்று அவன் கூற,

“இல்லை இளா, வீடு ரொம்ப தூரம். அங்கப் போயிட்டு திரும்ப நீங்க போற இடம்னா உங்களுக்குக் கஷ்டம். நீங்கக் கேட்டதே சந்தோஷம் இளா. நான் பார்த்துக்கிறேன்.” என்று அவள் கூற, அவனுக்கு அவளைத் தனியாக விட மனமில்லை.

“உங்களுக்கு ஆட்சேபனை இல்லாட்டி, என் கூட வரீங்களா?” என்று அவன் கேட்க, அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

“நெஜமாவா இளா? உங்களோட நான் வரலாமா?” என்று சிறு குழந்தை போல அவள் கேட்க, இளாவிற்கு வெட்கம் வந்துவிட்டது.

“என் கூட வர ஏன் இவ்ளோ சந்தோஷம்?” என்று இளா கேட்டு விட,

“ஹீ ஹீ அதெல்லாம் இல்லை… வாங்க போகலாம் பஸ் வந்துருச்சுங்க பாருங்க.” என்று பேச்சை மாற்றி பேருந்தில் திவ்யா ஏற, இளமுகிலன் சிரித்துக் கொண்டே அவள் பின்னால் ஏறினான்.

அதன் பிறகு அவள் கல்லூரிக்குப் பேருந்திலே பயணம் செய்ய ஆரம்பித்தாள். அதனால் இளமுகிலனிற்கும் திவ்யாவுக்கும் நடுவில் நல்ல புரிதல் ஏற்பட்டது. நண்பர்கள் என்ற பதவியிலிருந்து நெருங்கிய நண்பர்கள் என்று பதவி உயர்வுப் பெற்றனர்.

ஒரு நாள் இரண்டு பேரில் யாராவது ஒருத்தர் வரவில்லை என்றால் அந்த நாளே மற்றொருவருக்கு நன்றாக இருக்காது என்னும் அளவிற்கு நெருக்கமாகினர். அது மட்டுமில்லாமல் திவ்யா மற்றும் இளமுகிலன் இருவருக்கும் ஒருவரைப் பற்றி இன்னொருவர் நன்றாக அறிந்து வைத்துள்ளனர். அப்படி என்று இளமுகிலன் நம்பினான். அவனுக்கு திவ்யாவின் தந்தை தான் தில்லை சங்கர் என்று தெரியும் போது அவனுக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது. ஆனால் திவ்யா,”எங்க அப்பா அரசியல்வாதினு தெரிஞ்சா என் கூடப் பழகுறவங்க, ஏதாவது நோக்கத்தோட தான் பழகுவாங்க, இதுவரை பழகியிருக்காங்க. அதனால் தான் நான் யார்கிட்டயும் சொல்றது இல்லை.”

“அப்புறம் எதுக்கு என்கிட்ட மட்டும் சொன்ன?”

“உங்க மேல் எனக்கு நம்பிக்கை இருக்கு இளா. நீங்க மத்தவங்க மாதிரி கிடையாது. அதனால் தான் என்னால் உங்களோட இயல்பா பழக முடிஞ்சது.” என்று சர்க்கரை வார்த்தைக் கூற, இளமுகிலன் உண்மையிலே உருகிவிட்டான்.

இவ்ளோ வசதியானவள், எந்த ஆடம்பரமும் இல்லாமல் பழகுவது அவனுக்கு வியப்பை அளித்தது. அவள் மேல் பெரிய அபிமானமே வந்தது இளமுகிலனுக்கு.

நாட்கள், கடல் நீரைப் போல யாருக்கும் காத்திருக்காமல் கடந்து கொண்டிருந்தது. இளமுகிலன் அவனது கல்லூரி காலத்தின் இறுதி நாளில் இருந்தான். அவன் கல்லூரி முடியப் போகிறது என்று கூட வருத்தமாக இல்லை. திவ்யாவை பிரியப் போகிறோம் என்று தான் மிகவும் வருந்தினான்.

அன்று எப்போதும் அவர்கள் சந்திக்கும் இடத்தில் இளமுகிலன், திவ்யாவிற்கு காத்திருக்க, எப்போதும் சரியான நேரத்தில் வருபவள் இன்று சற்றுத் தாமதமாகத் தான் வந்தாள்.

“என்னாச்சு திவ்யா? ஏன் இவ்ளோ லேட்?”

“இல்லை இளா, நான் அப்போவே வந்துட்டேன். மறைஞ்சு நின்னு இவ்ளோ நேரம் உங்களைத் தான் பார்த்துட்டு இருந்தேன். நான் வந்தா பேசிட்டு நீங்க உடனே போயிடுவாங்க. இனிமேல் எப்போ சந்திப்போமோ? அதான்.” என்று அவள் மிகவும் சோகமாகக் கூற,

“என்ன சொல்ற திவ்யா? மறைஞ்சு நின்னு பார்த்தியா?நீ ஏன் மறைஞ்சு நின்னு பார்க்கனும்?”

“பிகாஸ் ஐ லவ் யூ இளா. படத்துல வர மாதிரி, சினிமால வர மாதிரி என்னால காதல் டையலாக் எல்லாம் பேச முடியாது இளா. நான் சொல்லக் கூடாதுனு தான் யோசிச்சேன். ஆனால் எங்க இன்னைக்கு விட்டா இனிமேல் சொல்ல முடியாமல் போயிடுமோனு பயம் வந்துருச்சு. உங்களுக்கு என்னைப் பிடிக்காட்டி பரவால, ஆனால் இனிமேல் பேச மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க. ப்ளீஸ்.” என்று அவள் உருக்கமாகக் கூற, இளமுகிலன் அவளது உருக்கமான பேச்சில் பனிக்கட்டியை வெயிலில் வைத்தால் எப்படி உருகுமோ அது போல் அவனும் உருகிவிட்டான்.

தன் வாழ்வில் எப்படி இருந்தாலும் திருமணம் ஒன்று நடக்கத் தான் போகிறது. அது ஏன் நன்றாகப் பேசிப் பழகிய திவ்யாவாக இருக்கக் கூடாது என்று எண்ணினான்.

அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதைப் பார்த்த திவ்யா,”எனக்குத் தெரியும் இளா, நான் சொன்னது உங்களுக்கு எந்த அளவுக்கு அதிர்ச்சியா இருக்கும்னு. என்னால புரிஞ்சுக்க முடியுது. இது என்னோட எண்ணம் மட்டும் தான் இளா. உங்களுக்கு என்னைப் பிடிக்கிற வரை நான் வெயிட் பண்ணுவேன் இளா. அதே மாதிரி உங்களை எந்தவிதத்திலும் நான் வற்புறுத்த மாட்டேன் இளா. இதை இன்னைக்குச் சொல்லனும்னு தான் இங்க வந்தேன். சொல்லிட்டேன் அதனால நான் இப்போ கிளம்புறேன் பை.” என்று கூறிவிட்டு அவள் நடக்க, இளா வேகமாக வந்து அவளது கையைப் பற்றி,

“என்னோட பதில் என்னன்னு கேட்காமலே போறியா திவ்யா?” என்று அவன் கேட்க, அவள் எதிர்பார்ப்புடன் அவனைப் பார்க்க, இளா அழகாக அவன் பல் வரிசை தெரியும் மாதிரி சிரித்து,

“ஐ டூ லவ் யூ.” என்று அவன் கூறியது தான் தாமதம், திவ்யா தாவிச் சென்று அவனை அனைத்துக் கொண்டாள்.

சுற்றுப்புறம் மறந்து அவனது கண்ணத்தில் அழுத்தமாக முத்தம் வைத்து,”தாங்க் யூ இளா. நான் எதிர்பார்க்கவே இல்லை நீங்க ஓகே சொல்லுவீங்கனு. நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஐ ஆம் த ஹாப்பியஸ்ட் பெர்சன் இன் த வெர்ல்ட்.” என்று அவள் கத்திக் கூற, இளமுகிலன் அவளது வாயை தன் கையால் மூடி,

“ஏய் எல்லாரும் நம்மளை தான் பார்க்கிறாங்க. அமைதியா இரு திவி.” என்று அவன் கூற,

திவ்யா ஆச்சரியமாக அவனைப் பார்த்து,”இளா என்னை எப்படிக் கூப்பிட்டீங்க?” என்று அவள் ஆர்வமாகக் கேட்க,

இவன் சிரித்துக் கொண்டே,”திவினு கூப்பிட்டேன்.” என்று அவளது நுனி மூக்கைப் பிடித்து ஆட்டிக் கூற, திவ்யா வானத்தில் பறக்க ஆரம்பித்து விட்டாள்.

“அச்சோ இளா, எனக்கு என்ன சொல்றதுனு தெரியலை. வார்த்தையே இல்லை. நான் இங்க வரும் போது இவ்ளோ சந்தோஷமா போவேன்னு எதிர்பார்க்கவே இல்லை.” என்று கூறி அவனது முழங்கையைப் பிடித்துக் கொண்டு அவனது தோளில் சாய, இருவரும் அப்படியே கொஞ்சம் தூரம் நடந்தார்கள்.

அப்படியே எவ்ளோ தூரம் சென்றிருப்பார்கள் என்று தெரியாது, இளமுகிலன் அவனது கடிகாரத்தைப் பார்த்து விட்டு,”திவி நேரமாச்சு டா. நான் இப்போ ஹாஸ்டல் போயிட்டு பேக் எல்லாம் எடுத்துட்டு திரும்ப ஸ்டேஷன் போகச் சரியாக இருக்கும். கிளம்பட்டுமா?” என்று அவன் கேட்க,

“இளா நம்ம கார்லயே போகலாம். ப்ளீஸ் வேண்டாம்னு மட்டும்னு சொல்லிடுதாங்கீ ப்ளீஸ். இனி அடுத்து எப்போ மீட் பண்ணுவோமோ தெரியாது. ப்ளீஸ் இளா.” என்று அவள் கூற, அவனுக்கும் அவளுடன் சிறிது நேரம் கூடுதலாக இருக்க வேண்டுமென எனத் தோன்றச் சரி என்று கூறிவிட்டான்.

அன்றைய தினம் இருவருக்கும் மிகுந்த சந்தோஷமாகக் கழிந்தது. அன்றைய நாள் மட்டுமின்றி அடுத்து அடுத்து வந்த நாட்களும் இருவருக்கும் தேனாக இனித்தது.

திவ்யாவிற்கு கடைசிப் பரிட்சை முடிந்து ஊருக்கு வரும் நாள் இளமுகிலன் அவளுக்கு அதிர்ச்சி தர எண்ணி அவளிடம் கூறாமலே அவளை அழைக்க இரயில் நிலையத்திற்கு வரலாம் என்று முடிவெடுத்தான். ஆனால் அவன் அங்கு வரத் தாமதமானதால் வேகமாக வண்டியை நிறுத்தி விட்டு வர, திவ்யா யாருடனோ பேசிக் கொண்டே பக்கத்திலிருக்கும் உணவகத்திற்குச் சென்றாள். இளமுகிலனும் அவளுக்குத் தெரியாமல் அவளைப் பின் தொடர்ந்து போய் அவளை அதிர்ச்சியடைச் செய்ய நினைக்க, மாறாக அவன் தான் அவளின் பேச்சில் முழு அதிர்ச்சியடைந்தான். வந்த மாதிரியே அவளுக்குத் தெரியாமல் அவன் வெளியேறி விட்டான்.