இளமுகிலன் வீட்டிலிருந்து பரத் கிளம்பியதும், வீட்டை ஒதுக்கி வைத்து விட்டு சமையலறைச் சென்று அங்கிருந்த பாத்திரங்களையும் கழுவி வைத்து விட்டு அவனது அறைக்குச் சென்று உடை மாற்றிக் கொண்டு கீழே வர, பரத்தும் சரியாக அங்கு வந்தான்.
“டேய் என்ன டா? இப்போ தான போன அதுக்குள்ள திரும்ப வந்துருக்க?”
“இளா உனக்கு இந்த பைக்கை கொடுத்துட்டு போகலாம்னு தான் வந்தேன்.” என்று பரத் கூற, இளமுகிலன் அவனைப் புரியாமல் பார்த்தான்.
“எனக்குப் புரியலை டா. எதுக்கு இந்த பைக்கை என்கிட்ட கொடுக்கிற?”
“அதலாம் ஒன்னும் வேண்டாம். இந்த பைக்கை எடுத்துக்கோ. பைக் வீட்டுல வெட்டியா தான் இருக்கு. சும்மா இருக்கிற வண்டிய நீ ஓட்டு டா. எந்தப் பொருளும் உபயோகப் படுத்தாமல் அப்படியே வைச்சுருந்தா மக்கிப் போயிடும். அதனால எந்தப் பதில் பேச்சும் பேசாமல் நான் சொல்ற மாதிரி பைக்கை எடுத்துக்கோ.”
“பரத் திஸ் ஸ் டூ மச் டா. நீ இது வரை எனக்குச் செஞ்ச உதவியே போதும். மேலும் மேலும் இப்படிச் செஞ்சு என்னைச் சங்கடப் படுத்தாத பரத். ப்ளீஸ் சொன்ன கேள்.”
“நீ நான் சொல்றதை கேள் டா. நான் உனக்கு அப்படிப் பெரிய உதவி எதுவும் செய்யலை. உன்னை என் கூடத் தங்க வைச்சுக்கிட்டேன். அவ்ளோ தான். அதுவும் சும்மா ஒன்னும் நீ தங்கலையே!! வாடகைப் பணம் பாதி கொடுத்துட்டு தான தங்குனு?”
“அப்போ பைக்கை மட்டும் ஏன் டா ஓசில கொடுக்கிற?”
“இங்கப் பார் இளா, நான் தான் சொல்றேன்ல பைக் வீட்டுல சும்மா இருக்கிறதுக்கு நீ ஓட்டலாம். நான் பைக் மட்டும் தான் தரேன். நீ தான் பெட்ரோல் போட்டு ஓட்டப் போற. அதனால எதுவும் பேசாத. உண்மையிலே என்னை உன் ப்ரண்டா நினைச்சா இந்த பைக்கை எடுத்துக்கோ. இல்லையா சொல்லு நான் இப்படியே என் வீட்டுக்குப் போறேன்.”
“ப்ச் ஏன் டா இப்படிப் பேசுற? சரி நான் எடுத்துக்கிறேன். பட் ஒன் கண்டிஷன், செகன்ட் ஹாண்ட் ரேட்கு நான் இந்த பைக்கை வாங்கிக்கிறேன். ஓகே வா.” என்று இளா கேட்க, பரத் அவனை முறைத்தான்.
“இளா இப்போ தான் டா வீட்டுக்குத் தேவையான திங்க்ஸ் வாங்கக் காசை செலவழிச்ச. இப்போ மறுபடியும் வண்டிக்குச் செலவு செஞ்சா எப்படி டா?”
“ப்ச் பரத் மறந்துட்டியா? என் அக்கவுன்ட்ல நிறையப் பணம் இருக்கு. நீ கவலைப்படாத, நான் இன்னும் ஒரு வருஷத்துக்கு வேலையே செய்யாமல் இருந்தா கூட என்னால சமாளிக்க முடியும். அது உனக்கும் தெரியும்?” என்று இளா கூற, பரத்தும் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டான்.
இளமுகில் இரண்டரை வருடத்தில் நிறையவே சம்பாதித்தான். அவன் ஃப்ரீலேன்சராக ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் வேலைச் செய்ததால் அவனுக்கு நிறையவே பணம் கிடைத்தது. அதேப் போல் வாடகையைத் தவிர அவன் வேறு எதுக்கும் செலவு செய்யவில்லை. அதனால் கணிசமாகத் தான் பணம் செலவழிந்தது. அவனிடம் இப்போது புது வண்டி வாங்கவே பணம் இருக்கிறது. ஆனால் அவன் தான் வேண்டாம் என்று அமைதியாக இருக்கிறான்.
“சரி இளா. நீ கிளம்பு, நான் வீட்டுக்குப் போறேன்.”
“டேய் வா நானே வீட்டுல விட்டுறேன். இந்த வண்டிக்கு எவ்ளோ அமௌன்ட்டோ அதை எடுத்துட்டு மத்த பணத்தை என்னோட புது அக்கவுன்ட்க்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணி விடு.” என்று இளா கூற, பரத் எதுவும் கூறாமல் அமைதியாகத் தலையை மட்டும் அசைத்தான்.
இளா கூறியது போலவே பரத்தை அவனது வீட்டில் இறக்கி விட்டுவிட்டு அகாடமிக்கு சென்றான் இளா.
~~~~~~~~~~
அன்று ப்ரனவிகா அதீத கவனத்துடன் தன்னை அலங்காரம் பண்ணிக் கொண்டு கீழே வந்தாள். அனைவரும் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்திருக்க, ப்ரனவிகாவை வியப்புடன் பார்த்தனர்.
“என்ன ப்ரனு? இன்னைக்கு வித்தியாசமா இருக்க?” என்று அஸ்வத் கேட்க, ஹரிதா யாருக்கும் தெரியாமல் அமைதியாகச் சிரித்தாள்.
“அப்படியா? நான் எப்பவும் போல தான இருக்கேன்.” என்று ப்ரனவிகா கூறிவிட்டு சாப்பிட அமர,
“இல்லை ப்ரனு எனக்குமே நீ இன்னைக்கு வித்தியாசமா தான் தெரியுற!! என்ன விஷயம்?” என்று பூர்ணிமா கேட்க,
“அதெல்லாம் ஒன்னுமில்லை அத்தை. நான் எப்பவும் போல தான் இருக்கேன். அப்புறம் ஒரு விஷயமும் இல்லை.”
“அட அவள் எப்படி இருந்தா என்ன? ஏதாவது விஷயம் இருந்தா அவளே சொல்லுவா. ஆராய்ச்சி பண்றதை விட்டுட்டு சாப்பிடுங்க.” என்று மரகதம் பாட்டி கூற, அனைவரும் அமைதியாகச் சாப்பிட்டனர்.
பின்னர் ப்ரனவிகா கிளம்ப, ஹரிதா அவளைச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டே இருந்தாள். அதைப் பார்த்த ப்ரனவிகா அவளை விளையாட்டாக முறைத்துப் பார்த்தாள். ஹரிதா இன்னும் சிரிக்க, ப்ரனவிகா நாக்கை துருத்திக் காட்டி கொண்ணுடுவேன் என்று சைகையில் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள். இவர்கள் சம்பாஷனையை அஸ்வத்தும் பூர்ணிமாவும் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர். அவர்களுக்கு ஏதோ விஷயம் இருப்பது போலத் தெரிந்தது.
“அத்தை ஏதோ விஷயம் இருக்கு. இவங்க இரண்டு பேரும் பேசிகிட்டதை பார்த்தீங்கள?”
“ஆமா அஸ்வத் எனக்கும் அப்படித் தான் தெரியுது. நீ ஹரிதாகிட்ட என்னன்னு கேள் அஸ்வத்.”
“ப்ச் அத்தை அவ என்கிட்ட சரியாவே பேச மாட்டீங்குறா. நான் கேட்டாலும் அவள் சொல்ல மாட்டா. நீங்களே கேளுங்க அத்தை.”
“என்ன சொல்ற அஸ்வத்? ஏன் ஹரிதா உன்கிட்ட சரியா பேசுறது இல்லை?”
“யாருக்கு தெரியும். ஏதாவது கேட்டா அதுக்கு பதில் மட்டும் தான் சொல்றா! என்னப் பிரச்சனைனு கேட்டா சொல்ல மாட்டீங்குறா.”
“இந்தப் பொண்ணுக்கு ஏன் தான் புத்தி இப்படிப் போகுதோ!! சரி நான் அவகிட்ட பேசுறேன்.”என்று பூர்ணிமா கூற, அஸ்வத் தலையசைத்து விட்டு அவனது உணவகத்திற்குச் சென்றான்.
அவன் சென்றவுடன் பூர்ணிமா, ஹரிதாவின் அறைக்குச் சென்றார். அவள் அவளது அறையில் இருக்கும் தொலைக்காட்சியில் ஏதோ பார்த்துக் கொண்டிருக்க, வேகமாக உள்ளே வந்தவர் தொலைக்காட்சியை அணைத்து விட்டு ஹரிதாவை கோபமாகப் பார்த்தார்.
“எதுக்கு மா இப்போ இப்படிப் பார்க்கிற?”
“உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க?”
“அம்மா புரியுற மாதிரி பேசு. எதுக்கு இப்போ டீ.வி. ஆஃப் பண்ண? அது மட்டுமில்லாம சம்மதமே இல்லாம என் மனசுல நான் என்ன நினைக்கிறேன்னு வேற கேட்கிற!! இப்போ உன் பிரச்சனை என்ன அம்மா?”
“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. உனக்குத் தான் கிறுக்கு பிடிச்சுருக்குனு நினைக்கிறேன். எதுக்கு ஹரிதா அஸ்வத் கூடச் சரியாப் பேசாமல் இருக்க?”
“யார் சொன்னா உனக்கு?”
“யார் சொன்னா என்ன? நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லு!”
“நான் எப்பவும் போல தான் பேசுறேன். உனக்கு அப்படித் தெரியாட்டி அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது.”
“அப்புறம் எதுக்கு அஸ்வத் அப்படிச் சொல்லனும்?”
“எப்படிச் சொன்னாங்க?”
“நீ ஒழுங்கா பேசலைனு!!”
“எதுக்கு உன்கிட்ட வந்து சொன்னாங்க?”
“ப்ச் என்கிட்ட சொன்னதுல உனக்கு என்ன பிரச்சனை?”
“அம்மா அது உனக்குத் தேவையில்லை. இது எங்க இரண்டு பேருக்குள்ள இருக்கிற விஷயம். அதை நாங்க பார்த்துக்கிறோம். நீ தலையிடாத.”
“ஓ அப்படியா!! சரி நான் தலையிடல, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீயும் ப்ரனவிகாவும் என்ன சைகையில பேசுனீங்க?”
“அம்மா உனக்கு இப்போ என்ன பிரச்சனை? ஏன் இப்படி வந்து பேசிட்டு இருக்க? நாங்க என்னமோ பேசுனோம் அதை எல்லாம் உன்கிட்ட சொல்லனுமா?” என்று கொஞ்சம் சத்தமாகவே கேட்க,
“எதுக்கு இப்போ இப்படிக் கத்துற?” என்று பூர்ணிமா கேட்ட அதே சமயம் கீழே இருந்து மரகதம்,
“பூர்ணிமா கொஞ்சம் கீழ வாயேன்.” என்று கூப்பிட,
“உன்கிட்ட அப்புறம் பேசிக்கிறேன்.” என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல, ஹரிதாவிற்கு அஸ்வத் மேல் பயங்கர கோபம். எதுவாக இருந்தாலும் அவனே நேரடியாகக் கேட்காமல் பூர்ணிமாவை வைத்துக் கேட்டது அவளுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.
~~~~~~~~~~
ப்ரனவிகா மிகுந்த சந்தோஷத்துடன் அவளது அகாடமிக்கு வந்தாள். ஒரு எதிர்பார்ப்பு, ஒரு குறுகுறுப்பு, அவளைப் பார்த்தாள் இளமுகிலன் எப்படி நடந்துப்பான். அவள் அவனைப் பார்க்கும் போது அவளது கட்டுப்பாட்டை இழந்திருவோமா என்று பல எண்ணங்கள்.
அதே மனநிலையில் அவளது அகாடமிக்குள் நுழைந்தாள். அவளது அறை இருக்கும் முதல் தளத்திற்கு வர, இளமுகிலன் ரேஷ்மியிடம் பேசிக் கொண்டிருந்தான்.
ப்ரனவிகா அவர்களிடம் வந்து,”என்னாச்சு இரண்டு பேரும் இங்க நின்னு பேசிட்டு இருக்கீங்க?”
“மேம் இவர் எங்க வொர்க் பண்ணனும்னு கேட்டார் மேம். ஆனால் நாம இன்னும் இவருக்கு கேபின் அல்லாட் பண்ணலை மேம். அதான் நீங்க வர வரைக்கும் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் மேம்.” என்று ரேஷ்மி கூற, ப்ரனவிகா சில நிமிட யோசனைக்குப் பிறகு,
“என்னோட ரூம்லயே இவருக்கு சேர் அண்ட் டேபிள் போட்டு ரெடி பண்ணிடுங்க.” என்று அவள் கூற, ரேஷ்மியும் இளமுகிலனும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.
“என்ன அப்படிப் பார்க்கிறீங்க? ஏன் என் ரூம்ல இதெல்லாம் அரேன்ஜ் பண்ண உங்களுக்கு எதுவும் கஷ்டமா?” என்று ப்ரனவிகா ரேஷ்மியைப் பார்த்துக் கேட்க,
“அய்யோ இல்லை மேம் உங்க ரூம்லயே நான் அரேன்ஜ் பண்ணச் சொல்லிடுறேன்.” என்று கூறிவிட்டு ரேஷ்மி அங்கிருந்து நகர,
“முகிலன் உங்களுக்கு எதுவும் பிரச்சனை இருக்கா?” என்று ப்ரனவிகா கேட்க,
“இல்லை மேம் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை மேம்.” என்று கூறினான்.
“சரி வாங்க போகலாம்.” என்று கூறி அவளது அறைக்கு அழைத்துச் சென்றாள்.
இளமுகிலனுக்கு அனைத்தும் வித்தியாசமாக இருந்தது. இதுவரை அவன் பிறந்ததிலிருந்து யாரும் அவனை முகிலன் என்று அழைத்தது இல்லை. அனைவருமே இளா அல்லது இளமுகிலன் என்று தான் அழைத்திருக்கிறார்கள். இது அவனுக்கு வித்தியாசமாக இருந்தாலும் கேட்க நன்றாகத் தான் இருந்தது. அதனால் எதுவும் பேசாமல் அவள் பின்னால் சென்றான்.
இளாவும் ப்ரனவிகாவும் அவளது அறைக்குள் நுழைந்தனர். ப்ரனவிகா அவளது இருக்கையில் அமர்ந்து விட்டு இளாவை தன் எதிரில் அமரச் சொன்னாள்.
“உங்களுக்கு டேபிள், சார் போடுற வரைக்கும் நீங்க இங்க உட்காருங்க.” என்று அவள் கூற, அவன் அமைதியாக அமர்ந்தான்.
சில நொடிகள் இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர். அந்த அமைதியை இளா தான் கலைத்து,”நேத்தே உங்ககிட்ட கேட்கனும்னு இருந்தேன் மேம். உங்களுக்கு என்னை முதல்லயே தெரியுமா?”
“ம் தெரியும். நேத்தே சொன்னேனே?”
“எஸ் மேம் சொன்னீங்க. ஆனால் எப்படித் தெரியும்னு சொல்லலையே?” என்று அவன் கேட்க,
ஒரு நிமிட அமைதிக்குப் பிறகு,”உங்களை நான் முதல்ல பார்த்தது ட்ரெயின்ல தான்.” என்று அவள் கூற, இளமுகிலன் புரியாமல் பார்த்தான்.
“ட்ரெயின்லயா? எப்போ? எனக்கு உங்களைப் பார்த்த மாதிரி ஞாபகமில்லையே?”
“நீங்க என்னைப் பார்க்கலை. நான் தான் உங்களைப் பார்த்தேன்.” என்று அவள் கூற,
“ஓ!!.” என்று மட்டும் தான் சொன்னான்.
ப்ரனவிகாவின் நினைவுகள் இளமுகிலனை முதலில் சந்தித்த தினத்திற்குச் சென்றது.
ப்ரனவிகாவும் ஹரிதாவும் ஈரோட்டில் உள்ள புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியில் தான் படித்தனர். அவர்கள் மூன்றாம் வருடம் படிக்கும் போது, ஒரு நாள் கல்லூரியில் தங்கள் தோழிகளுடன் பேசிக் கொண்டிருக்கும் போது,
“ப்ரனு, ஹரிதா நீங்க வரீங்களா?” என்று ஒரு தோழி அவர்களிடம் கேட்க,
“எங்க வரீங்களா? மொட்டையா கேட்டா என்ன பதில் சொல்றது?” என்று ப்ரனவிகா கேட்க,
“ஏய் அவங்க தான் நேத்து லீவ்ல!! எப்படித் தெரியும்? விஷயத்தை முதல்ல சொல்லுவோம்.” என்று இன்னொரு தோழி கூற,
“ஓ நான் அதை மறந்துட்டேன். கோயம்பத்தூர்ல ஒரு காலேஜ்ல சிம்போசியம் போட்டுருக்காங்க. அதுக்கு நாங்களாம் பேப்பர் ப்ரசன்டேஷன்ல பார்ட்டிசிபேட் பண்ணலாம்னு இருக்கோம். அதுக்கு தான் கேட்டேன் நீங்களும் வரீங்களானு.”
“கண்டிப்பா, நாங்க இல்லாமல் எப்படி?” என்று ஹரிதா கூற,
“அப்போ சூப்பர். நீங்க இந்தத் தடவையாவது எங்க கூட வரலாம்ல? அடுத்த வருஷம் ப்ளேஸ்மென்ட், ப்ராஜெக்ட் வொர்க்னு பிஸியாகிடுவோம். வீட்டுல கேட்டுட்டு இந்தத் தடவை எங்கக் கூட வர ட்ரை பண்ணுங்க.” என்று ஒரு தோழி கூற,
ப்ரனவிகாவும் ஹரிதாவும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். அந்தத் தோழி இப்படிக் கேட்டதில் விஷயம் இருக்கிறது. அவர்கள் இது போல் பல சிம்போசியம் சென்றிருந்தாலும் ப்ரனவிகாவும் ஹரிதாவும் தனியாக அவர்களது காரில் தான் வருவார்கள்.
“கண்டிப்பா சொல்ல முடியாது. ஆனால் நாங்க வீட்டுல பேசிப் பார்க்கிறோம்.” என்று ப்ரனவிகா கூற, அவர்களும் சரியென்று அங்கிருந்து சென்றனர்.
அன்று மாலை கல்லூரி விட்டு வீட்டிற்கு வந்ததும் ஹரிதாவும் ப்ரனவிகாவும் நேராகச் சென்றது அவர்களது தாத்தா மற்றும் பாட்டியிடம் தான்.
“என்ன இது இரண்டு காலேஜ்ல இருந்து வந்ததும் வராததுமா இங்க வந்துருக்கீங்க? என்ன விஷயம்?” என்று சரியாக அவர்களது பாட்டிக் கேட்க,
“பாட்டி, தாத்தா நீங்க தான் எங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்.”
“அது தெரியுது. ஏதாவது காரியமாகனும்னா தான் நீங்க இப்படி வருவீங்கனு எங்களுக்கு நல்லாவே தெரியும். சொல்லுங்க என்ன பண்ணனும்?”
“அது வந்து இந்தத் தடவை சிம்போசியம் எங்க ப்ரண்ட்ஸோட போக நீங்க பெர்மிஷன் தரனும். அதே மாதிரி அப்பாகிட்டயும் அத்தைகிட்டயும் நீங்களே பேசி பெர்மிஷன் வாங்கித் தரனும்.” என்று ப்ரனவிகா கூற,
“ப்ரனு இது என்ன புதுசா? எப்பவும் நம்ம கார்ல தான போவீங்க?”
“ஆமா தாத்தா. ஆனால் இந்தத் தடவை ப்ரண்ட்ஸ் கூடப் போகலாம்னு தான். அது ரொம்ப ஜாலியா இருக்கும் தாத்தா. ப்ளீஸ்.” என்று ஹரிதாவும் கூற,
“சரி நான் உங்க அப்பா அம்மாகிட்ட பேசிட்டு சொல்றேன்.” என்று அவரும் கூறிவிட, அதுக்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக இவர்கள் வந்து விட்டனர்.
நம்பியப்பன் அன்று இரவே ஹரிதாவும் ப்ரனவிகாவும் தூங்கச் சென்றவுடன் ராகவனிடமும் பூர்ணிமாவிடமும் இதைக் கூற, ராகவன் யோசித்தார். ஆனால் பூர்ணிமா, அப்பா எனக்கு எதுவுமில்லை. நீங்க எல்லாரும் என்னச் சொன்னாலும் எனக்குச் சம்மதம் தான்.” என்று அவர் கூற,
“ராகவா நீ என்னச் சொல்ற?”
“அவங்க பத்திரமா போயிட்டு வருவாங்களானு யோசனையா இருக்கு அப்பா. ஸ்கூல் காலேஜ் டூர்னா எல்லாரும் ஒன்னா பஸ்ல இல்லாட்டி ட்ரெயின்ல அவங்க கூட டீச்சர் யாராவது போவாங்க. ஆனால் சிம்போசியம் அப்படியில்லையே!! பிள்ளைங்க தனியா தான போவாங்க?”
“கூட மத்தப் பிள்ளைங்களும் போறாங்கள ராகவா? யோசி போயிட்டு வரட்டும் இந்தத் தடவை மட்டும்.” என்று நம்பியப்பன் கூற,
சில நிமிட யோசனைக்குப் பிறகுச் சரி போகட்டும் என்று அவர் கூறிவிட, ஏ என்று சத்தம் கேட்க, நால்வரும் திரும்பிப் பார்த்தனர். இவர்கள் பேசுவதைக் கதவின் பக்கம் நின்றிருந்த ஹரிதாவும் ப்ரனவிகாவும் கேட்டுத் தான் கத்தினர்.
அவர்கள் கத்துவதைப் பார்த்து பெரியவர்கள் சிரிக்க, இருவரும் வேகமாக வந்து அவர்களைக் கட்டிக் கொண்டனர்.
இந்தப் பயணத்தில் ப்ரனவிகா அவளது மனம் கவர்ந்த மன்னவனைப் பார்க்கப் போகிறாள் என்று கனவிலும் அவள் நினைத்துப் பார்க்கவில்லை.