Advertisement

ஹரிதா, ப்ரனவிகாவை கேலியாகப் பார்த்து,”யாரோ ஒருத்தங்க இன்னைக்கு காலைல தான் அதெல்லாம் சும்மா க்ரஷ் தான். மத்தபடி வேற எதுவுமில்லைனு சொன்னாங்க. ஆனால் இப்போ என்ன டா னா அவங்க வந்ததுக்கு அவ்ளோ சந்தோஷப்படுறாங்க. அது யாருனு தெரியுமா உனக்கு ப்ரனு?” என்று நமட்டுச்சிரிப்புடன் கேட்க,

“அப்படியா அண்ணி? யார் அந்த அறிவு ஜீவி?” என்று ஒன்றும் தெரியாதப் பச்ச குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு ப்ரனவிகா கேட்க,

“அப்படியே போய் கண்ணாடியைப் பார். அந்த அறிவு ஜீவி உன் கண்ணுக்குத் தெரிவா.” என்று அலட்டாமல் ஹரிதா கூற,

“போ அண்ணி. உனக்கு எப்பவும் விளையாட்டு தான்.” என்று செல்லமாக ஹரிதாவை அடித்தாள் ப்ரனவிகா.

“ப்ரனு அப்போ மேடம் நாளைல இருந்து ஃபுல் டே அடாகமியே கதினு கிடக்கப் போற சரியா?”

“ஹாஹா அண்ணி எப்படி இப்படி? சரியா சொல்லிட்டீங்க! மதியம் சாப்பிடுறதுக்கு மட்டும் நடுவுல வருவேன். மே பி சில நாட்கள் அங்கேயே முகிலன் கூட கூடச் சாப்பிடுவேன்.”

“நினைப்பு தான் பிழைப்பைக் கெடுக்குமாம்!! நல்லா இருக்குது நீ சொல்றது.”

“அண்ணி பட் முகிலன் அன்னைக்கு நாம பார்த்ததுக்கும் இன்னைக்கும் பார்க்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தது அண்ணி.”

“ஏய் நாம அண்ணாவைப் பார்த்துக் கிட்டத்தட்ட நாலு வருஷமாகிடுச்சு. அதே மாதிரி எப்படி இருப்பாங்க?”

“அய்யோ அண்ணி நான் தோற்றத்தைச் சொல்லலை. அவங்க நடவடிக்கையே வேற மாதிரி இருந்தது. அப்போ எப்பவும் சிரிச்ச முகமா இருப்பாங்க. ஆனால் இப்ப சிரிக்கச் சொன்னா காசு கேட்பாங்க போல. ம் இன்னொன்னு அவங்க கிட்ட எந்த செர்டிஃபிகேட்டும் இல்லை. எல்லாம் சாஃப்ட் காப்பி தான் வைச்சுருக்காங்க. கேட்டதுக்கு என்னமோ பெர்சனல், எடுக்க முடியாத இடத்துல இருக்குன்னு சொன்னாங்க. எனக்கு முகிலனை தெரியும். அதனால தான் அவரை அப்பாய்ன்ட் பண்ணேன். இதுவே வேற யாராவது இருந்திருந்தா கண்டிப்பா வேலை கொடுத்துருக்க மாட்டேன்.” என்று ப்ரனவிகா கூற,

“என்ன சொல்ற ப்ரனு? செர்டிஃபிகேட் இல்லாமல் யார் வேலைத் தேடி வருவா? அது என்ன எடுக்க முடியாத இடத்துல? ரொம்ப புதிரா இருக்கு?”

“ஆமா அண்ணி. சம்திங் இஸ் ராங்க்னு மட்டும் எனக்குப் புரிஞ்சது.” என்று ப்ரனவிகா கூற, ஹரிதாவின் முகமே மாறிவிட்டது.

“ப்ரனு உனக்கே அப்படித் தோனுதுனா கண்டிப்பா ஏதாவது தப்பு இருக்கும்னு தான் நினைக்கிறேன். நீ எதுக்கு அவரை அப்பாய்ன்ட் பண்ண? வேலை இல்லைனு சொல்லிருக்க வேண்டியது தானா?”

“அண்ணி என்னப் பேசுற நீ? அவர் முகிலன். அவருக்கு நான் வேலை இல்லைன்னு எப்படிச் சொல்ல முடியும்? நான் அவர் தப்பானவர்னு சொல்லலை. ஏதோ மாற்றம் அவர்கிட்ட இருக்குதுனு தான் சொல்றேன்.”

“இல்லை ப்ரனு எனக்கு என்னமோ தப்பா தெரியுது. நீயே சொல்ற அவர் முகிலன் அதனால அப்பாய்ன்ட் பண்ணேன். இதுவே வேற யாராவதா இருந்தா அப்பாய்ன்ட் பண்ணிருக்க மாட்டான்னு. அப்போ ஏதோ இருக்குன்னு தான அர்த்தம். முகிலன்னா தப்பு இல்லை. இதுவே வேற யாராவதுனு தப்புன்னு உனக்குத் தோனுது. அப்போ இதுக்கு என்ன அர்த்தம்?”

“ப்ச் அண்ணி. நீ தப்பா புரிஞ்சுகிட்ட. நான் அப்படிச் சொன்னதுக்கு அர்த்தமே வேற. முகிலன் என்ன படிச்சுருக்கார்னு எனக்குத் தெரியும். அதனால அவரோட செர்டிஃபிகேட் எனக்குத் தேவைப்படலை. ஒரு வேளை வேற யாராவது தெரியாதவங்க இப்படி செர்டிஃபிகேட் இல்லாமல் வந்திருந்தா நான் யோசிச்சுருப்பேன். அதைத் தான் சொல்ல வந்தேன் அண்ணி.” என்று ப்ரனவிகா விளக்கியவுடன் தான் ஹரிதா முகத்தில் பயம் தெளிந்தது.

“ஓ நீ அப்படிச் சொல்றியா? அப்போ ஓகே. ஆனால் நீ ஏதோ சம்திங்க் ராங்க்னு சொன்ன. அது எதுக்கு?”

“அண்ணி சம்திங்க் ராங்க்னு நான் சொன்னது அவருக்கு ஏதோ ப்ராப்ளம் இருக்குமோனு மனசுக்குப் பட்டுச்சு. அதனால தான் நம்ம அகாடமிக்கு வேலைக்கு வந்தாரோனு தோனுச்சு.”

“நீ ஏன் அப்படி யோசிச்ச?”

“அண்ணி அவரோட படிப்புக்கு நல்ல கம்பெனில நல்ல வேலை கிடைக்கும். அவர் அகாடமி வந்து இந்தச் சம்பளத்துக்கு வொர்க் பண்ண வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் அவர் வந்துருக்கார்னு ஏதோ பிராப்ளம் இருக்குமோனு மனசுக்குத் தோனுச்சு. அவ்ளோ தான் அண்ணி.”

“ஓ!! ஆமா ப்ரனு நீ சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கும் புரியுது. அவரோட ப்ராப்ளம் என்னனு தெரிஞ்சுக்க முயற்சிப் பண்ணு ப்ரனு. உன்னால சால்வ் பண்ண முடிஞ்சா அதைப் பண்ணு. அவர் மனசுல நீ இடம் பிடிச்சுரலாம்.”

“அண்ணி இதெல்லாம் ஓவரா தெரியலை உனக்கு. இது என்ன படமா? அப்படியே படமா இருந்தா கூட ஹீரோ தான் அண்ணி ஹீரோயின் பிரச்சனையை தெரிஞ்சுகிட்ட அவளுக்கு ஹெல்ப் பண்ணி நல்ல பேர் எடுப்பார்.”

“ஏன் நாமளும் அதைச் செய்யக் கூடாதுனு எதுவும் ரூல்ஸ் இருக்கா என்ன?”

“அடப் போ அண்ணி. அப்புறம் ஏதோ எதிர்பார்த்து நாம அவருக்கு ஹெல்ப் பண்ற மாதிரியாகிடும்.”

“ம் அதுவும் சரி தான். அப்போ என்ன பண்றதா இருக்க?”

“தெரியலை அண்ணி. ஏதாவது செய்யனும். இது கடவுள் எனக்குக் கொடுத்த வாய்ப்பா தான் பார்க்கிறேன்.”

“சூப்பர் ஆல் த பெஸ்ட் ப்ரனு.” என்று கூறி அவளை அனைத்துக் கொண்டாள் ஹரிதா.

இருவருக்குமே அந்தச் சமயத்தில் ஆகாஷ் பற்றியும் அஸ்வத் பற்றியும் நினைப்பே இல்லை. சுத்தமாக இருவரையும் மறந்து சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அஸ்வத்திற்கு ப்ரனவிகா காதல் விஷயம் தெரிந்தால் கண்டிப்பாக அவன் பெரிய பிரச்சனை செய்வான் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை. இதற்கு எல்லாம் முன் இளமுகிலன், ப்ரனவிகாவின் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்படிப் பல பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால் இவர்களோ எல்லாம் சுலபமாக நடந்து விடும் என்று கனவு காண்கின்றனர். அப்படி நடக்குமா? இதற்கு விடையைக் காலம் தான் சொல்ல வேண்டும்.

~~~~~~~~~~

அஸ்வத், ஆகாஷிடம் எப்பொழுது ப்ரனவிகாவைப் பார்த்துப் பேசுகிறாய் என்று கேட்டு இரண்டு நாட்களாகி விட்டது. அவனிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. பூர்ணிமா அவனிடம் இருமுறை கேட்டும் விட்டார். அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. இதற்கு மேல் அவனே அழைப்பான் என்ற நம்பிக்கைப் போய்விட்டது. இன்று எப்படியாவது அவனிடம் கேட்டு விட வேண்டும் என்று ஆகாஷிற்கு அழைத்தான் அஸ்வத்.

ஆகாஷ் அவனது அலுவலகத்தில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனது கைப்பேசி ஒலிக்க, எடுத்துப் பார்த்தான் அஸ்வத் என்று பெயர் திரையில் தெரிய, அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அவனது தந்தை இன்னும் எந்தப் பதிலும் கூறவில்லை. அவரை எதிர்த்து அவனால் கண்டிப்பாக எதுவும் செய்ய முடியாது. இப்பொழுது என்ன செய்யலாம் என்று அவன் யோசிக்க, அவன் யோசித்து முடிப்பதற்குள் கைப்பேசி நின்று விட்டது. சரி இனி அழைக்க மாட்டான் என்று நினைத்து அவனது வேலைகளைப் பார்க்க, மறுபடியும் அஸ்வத் அழைக்க இப்பொழுது எடுக்காமல் இருந்தால் முதலுக்கே மோசம் என்று புரிந்து கொண்டு கைப்பேசியை எடுத்தான்.

“சொல்லு அஸ்வத்.”

“என்ன ஆகாஷ் பிசியா? இரண்டு நாள் ட்ரை பண்றேன். உன்னைப் பிடிக்கவே முடியலை.”

“சாரி அஸ்வத். நானே ஃபோன் பண்ணனும்னு இருந்தேன். நீயே பண்ணிட்டா. ஆடிட் மீட்டிங் இருக்கு டா. ஸோ அக்கவுண்ட்ஸ் எல்லாம் சரி பார்க்கனும். உனக்கே தெரியும் அது எவ்ளோ பெரிய தலைவலினு. அதனால தான் அஸ்வத் என்னால உன்னோட கால்ஸை எடுக்க முடியலை.” என்று ஆகாஷ் அவன் வாய்க்கு வந்ததைக் கூற,

“ஓ அப்படியா ஆகாஷ். சரி சரி நீ அன்னைக்கு ஆஃபிஸ் போயிட்டு சொல்றனு சொன்ன அதுக்கு அப்புறம் எந்த ஃபோன்னும் வரலை. அதான் நான் கால் பண்ணேன் ஆகாஷ்.” என்று தன்னிலை விளக்கம் தர,

“டேய் நீ இவ்ளோ விளக்கம் எல்லாம் தர வேண்டாம். நான் தான் தப்புப் பண்ணிட்டேன். உன்கிட்ட நானே கால் பண்ணிச் சொல்லிருக்கனும். சாரி அஸ்வத். இந்த வேலை எல்லாம் முடிஞ்சதும் நானே என்னனு உனக்குக் கூப்பிட்டு சொல்றேன் டா.”

“அட விடு ஆகாஷ். முதல்ல உன் வொர்க் முடியட்டும். அதுக்கு அப்புறம் இதைப் பார்த்துக்கலாம். சரி டா நீ பிசியா இருப்பா. நீ என்னனு பார்த்துட்டு கூப்பிடு.” என்று கூறி அஸ்வத் வைத்து விட, ஆகாஷிற்கு அவனது தந்தை மேல் பயங்கர கோபம்.

வேகமாக எழுந்து அவனது அறையிலிருந்து வெளியே வந்து அவனது அப்பாவின் அறைக்குச் சென்றான். அங்கு வேற யாரோ ஒருவர் தொழில் விஷயமாகப் பேசிக் கொண்டிருக்க, இவன் அமைதியாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான். அவர்கள் சில நிமட பேச்சுக்குப் பிறகுக் கிளம்பிச் சென்று விட, ஆகாஷின் தந்தை அவனைக் கேள்வியாகப் பார்த்தார்.

“என்ன ஆகாஷ் எதுக்கு இங்க வந்துருக்க?”

“அப்பா நான் உங்ககிட்ட அஸ்வத் தங்கச்சிய கல்யாணம் பண்றது பத்திப் பேசி இரண்டு நாளாகிடுச்சு. இன்னும் நீங்க எதுவும் சொல்லாமல் இருந்தா நான் என்ன பண்றது? அஸ்வத் எனக்கு ஃபோன் பண்ணிக் கேட்கிறான். அவனுக்கு நான் என்ன பதில் சொல்றது?”

“இங்கப் பார் ஆகாஷ், இது ஒன்னும் சாதாரண விஷயம் இல்லை. நீ முடிவு சொல்லச் சொல்றது உன்னோட கல்யாணத்தைப் பத்தி. எடுத்தோம் கவுத்தோம்னுலாம் என்னால முடிவெடுக்க முடியாது. அவங்களுக்கு அவ்ளோ அவசரம்னா வேற இடம் பார்த்துக்கச் சொல்.” என்று அதிராமல் ஒரு குண்டைத் தூக்கு வீச,

“அப்பா என்ன விளையாடுறீங்களா? அவங்களா நம்மகிட்ட முதல்ல பேசுனாங்க?”

“அது என் தப்புக் கிடையாது. அவங்களுக்கு நீ மாப்பிள்ளையா வரனும்னா அவங்க வெயிட் பண்ணித் தான் ஆகனும். இதுக்கு மேல பேச எதுவுமில்லை. வேற எதாவது சொல்லனுமா?”

“ப்ச் எனக்குத் தெரியாது. இன்னைக்கு சாயந்தரம் வரை மட்டும் தான் அப்பா உங்களுக்கு டைம். அதுக்குள்ள எனக்கு நல்ல நியூஸா சொல்லுங்க.”

“இல்லாட்டி என்ன பண்ணுவ ஆகாஷ்? எங்களை மீறிப் போய் கல்யாணம் பண்ணிப்பியா?”

“அப்படி ஒரு சூழ்நிலை வராதுனு நான் நம்புறேன்.” என்று கோபமாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

அவன் சென்றதும் அவனது அப்பா யோசித்தார். அவருக்குச் சில யோசனைத் தோன்ற, அதையே செயல்படுத்தலாம் என்று முடிவு செய்துவிட்டு அவரது வேலையில் ஆழ்ந்தார்.

~~~~~~~~~~

இளமுகிலனுக்கு பார்த்திருக்கும் வீட்டில் அடுத்த நாள் நல்லா நாளாகவே இருக்க, அன்றே பால் காய்ச்சிடலாம் என்று பரத்தின் அப்பாவும் அம்மாவும் கூற, இளாவிற்கும் அது சரியாகத் தோன்ற, அவனும் சம்மதித்தான்.

காலைச் சீக்கிரம் எழுந்து குளித்துத் தயாராகி இளமுகிலன் அவனது பொருட்கள் அதாவது துணிமணிகளை எடுத்துக் கொண்டு பரத்தின் குடும்பத்தோடு அவனுக்குப் பார்த்திருக்கும் வீட்டிற்குச் சென்றனர்.

அந்த வீட்டின் உரிமையாளரையும் பால் காய்ச்ச அழைத்திருந்தார்கள் பரத்தும் இளமுகிலனும். இவர்கள் வரும் நேரம் அந்த வீட்டின் உரிமையாளரும் அவரது மனைவியும் தயாராக வாசலில் நின்றிருந்தனர்.

“வாங்க வாங்க.” என்று அவர்கள் வரவேற்க,

“மேல வாங்க.” என்று இளா கூற, அனைவரும் மேலே சென்றனர்.

இளமுகில், பரத்தின் அம்மாவிடம்,”அம்மா நீங்க பெரியவங்க. நீங்களே பால் காய்ச்சிடுங்க.” என்று இளா கூற, அவருக்கு மிகுந்த சந்தோஷம்.

பரத்தின் அம்மா பால் காய்ச்சி அதைச் சாமி படத்துக்கு முன் வைத்துக் கும்பிட்டு அனைவருக்கும் தந்தார்.

“அரை மணிநேரம் இருங்க. நான் சமைச்சுடுறேன்.” என்று இளா கூற,

“தம்பி அதெல்லாம் வேண்டாம். நாம ஹோட்டல்ல வாங்கிக்கலாம்.” அந்த வீட்டின் உரிமையாளர் கூற,

“ஐயா நீங்க பயப்படாதீங்க. அவன் நல்லாவே சமைப்பான்.”

“அதுக்கு இல்லை தம்பி. எதுக்கு தேவையில்லாத வேலை?”

“அதெல்லாம் ஒன்னுமில்லை ஐயா. எனக்கு சமையல் பழக்கம் தான். நீங்க இருங்க.”

“ஆமா நீங்க எல்லாம் பேசிட்டு இருங்க.” என்று கூறி பரத்தும் இளாவுக்கு உதவிச் செய்யச் சமையல் சீக்கிரமாகவே முடிந்தது.

இட்லி, பொங்கல், பூரி, சாம்பார், சட்னி, பூரிக்குக் கொண்டைக் கடலை குருமா என்று வகையாகவே செய்திருந்தனர்.

“ரொம்ப நல்லா இருக்கு எல்லாமே. உனக்கு வரப் போற மனைவி ரொம்ப கொடுத்து வைச்சுவ தான் போ. இப்படிச் சமைக்கிறதா இருந்தா எனக்கு வாடகைப் பணமே வேண்டாம்.” என்று வீட்டின் உரிமையாளர் கூற,

“இளா இது நல்லா சான்ஸ் டா. டெய்லியும் அவருக்கு நீ சமைச்சு கொடுத்துரு. வாடகைப் பணம் மிச்சம்.” என்று பரத் கூற,

“ஹாஹா தாராளமாக.” என்று அவரும் கூற,

“அம்மா பார்த்துக்கோ!! இளா அண்ணா இவ்ளோ சூப்பரா சமைக்கிறதுனால தான் உன் பையன் இந்த மூணு வருஷமா நம்ம வீட்டுக்கு வராமல் இருந்துருக்கான்.” என்று ஓவியா கூற,

“ஏய் நான் எங்க வராமலிருந்தேன்? வந்தேன்ல?”

“ஆமா ஆமா ஆடிக்கு ஒரு வாட்டி அமாவாசைக்கு ஒரு வாட்டி வந்தியே அதைச் சொல்றியா?”

“ஹேய் என்கிட்ட அடி வாங்கமா ஒழுங்கா சாப்பிட்டு வேலைக்குப் போறதைப் பார்.” என்று பரத் கூற, ஓவியா அவனைப் பார்த்து பழிப்பு காட்டி விட்டுச் சாப்பிட்டாள்.

பரத்தின் குடும்பமும், அந்த வீட்டின் உரிமையாளர் குடும்பமும் கலகலப்பாக பேசிச் சிரித்துச் சாப்பிட்டு விட்டுக் கிளம்ப, பரத் மற்றும் அங்கிருந்தான்.

“இளா இனி உன் லைஃப் நல்லா இருக்கும் டா. எதுவும் யோசிக்காத இளா. உன் லைஃப்பை இனிமேல் சந்தோஷமா லீட் பண்ணு. எதாவது ப்ராப்ளம்னா எனக்குக் கூப்பிடு. நான் எங்க இருந்தாலும் உடனே வந்துடுவேன் சரியா.”

“ம் சரி பரத். ரொம்ப தாங்க்ஸ். நீ செஞ்ச உதவியை நான் என்னைக்கும் மறக்க மாட்டேன்.” என்று கூற,

“ப்ச் சென்ட்டியா பேசாத டா. அதை விடு, இன்னைக்கு தான முதல் நாள் வேலைக்குப் போற?”

“ஆமா பரத். நீ வேலைன்னு சொன்னதும் தான் ஞாபகமே வருது. நேத்து அந்த அகாடமி ஓனருக்கு என்னைத் தெரியுமாம். ஆனால் எப்படித் தெரியும்னு கேட்க மறந்துட்டேன் டா. உஃப் இன்னைக்கு கேட்கனும்.”

“அவங்களுக்கு எப்படி உன்னைத் தெரியும்?”

“அதாம் டா கேட்க மறந்துட்டேன். இன்னைக்குக் கேட்கனும்.”

“என்ன இளா இவ்ளோ சாதாரணமா சொல்ற? உனக்குப் பயமா இல்லையா?” என்று பரத் கேட்க,

இளமுகிலன் சிரித்துக் கொண்டே, “நானும் அவங்க முதல்ல அப்படிச் சொல்லும் போது கொஞ்சம் பயந்துட்டேன் டா. ஆனால் அவங்க கிட்டப் பேசும் போது தான் தெரிஞ்சது அவங்களுக்கு என்னைத் தெரியும் அவ்ளோ தான். மத்தபடி என்னைப் பத்தி வேற எதுவும் தெரியாதுனு நினைக்கிறேன். பார்க்கலாம், இன்னைக்கு நானே அவங்ககிட்ட கேட்கிறேன்.”

“டேய் இளா நீ மாறிட்டனு எனக்குத் தெரியும் அதுக்குன்னு இவ்ளோ பெரிய மாற்றத்தை நான் உன்கிட்ட எதிர்பார்க்கலை இளா. ஆனால் இதுவும் நல்லா தான் இருக்கு.” என்று பரத் கூற, இளமுகிலன் எதுவும் பேசாமல் சிரிக்க மட்டும் செய்தான்.

“சரி இளா பார்த்துக்கோ. நான் மதியம் ஊருக்குக் கிளம்புறேன் டா. முதல் நாளே பெர்மிஷன் எதுவும் கேட்க வேண்டாம். நான் ஊருக்குப் போயிட்டு உனக்குக் கூப்பிடுறேன். நீ பழையபடி மாறனும் அது மட்டும் தான் என்னோட ஆசை.”

“பார்த்துப் பத்திரமா போ பரத். என்னைப் பத்தி நீ யோசிக்காத. நான் பத்திரமா இருந்துப்பேன். அப்படியே ஏதாவது நடந்தாலும் அதைத் தைரியமா ஃபேஸ் பண்ண இப்போ தெம்பு வந்துருச்சு. ஸோ என்னைப் பத்தி யோசிக்காமா சீக்கிரம் உன்னோட லைஃப்ல செட்டிலாக பார். அம்மா நேத்து சொன்னாங்க உனக்குப் பொண்ணு பார்க்கப் போறதா.” என்று இளா கூற,

பரத் சிறிது வெட்கப்பட்டு,”அடப் போ டா. முதல்ல தங்கச்சிக்கு முடியட்டும் நமக்கு அப்புறம் பார்த்துக்கலாம்.” என்று கூற,

“ஹா ஹா உனக்கு வெட்கப்பட எல்லாம் தெரியுமா? இதுவும் நல்லா இருக்கே.” என்று இளா அவனைக் கேலி செய்ய, பரத்தின் கைப்பேசி ஒலி எழுப்பியது. எடுத்துப் பார்த்தான் அவனது அம்மா தான் அழைத்திருந்தார்.

“டேய் அம்மா தான் கூப்பிடுறாங்க. நான் கிளம்புறேன். நீ பத்திரமா இருந்துக்கோ. எதுனாலும் எனக்குக் கூப்பிடு.” என்று கூறிவிட்டு கைப்பேசியை எடுத்துப் பேசிக் கொண்டே பரத் அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.

‘நீ எனக்காகப் பண்ணது வரைக்கும் போதும் டா. இனிமேல் என் லைஃப்பை நான் பார்த்துக்கிறேன். நீ சந்தோஷமா இரு டா.’ என்று மனதிற்குள் போகும் பரத்தைப் பார்த்துப் பேசிக் கொண்டான் இளமுகிலன்.

அவன் சரியான முடிவெடுத்தால் அவனது வாழ்க்கையும் பரத் கூறியது போல் சந்தோஷமாக இருக்கும் என்று யார் அவனிடம் கூறுவார்கள்.

Advertisement