Advertisement

அத்தியாயம் 5

பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்த ராமை அலைபேசியின் குரல் கலைத்துவிட அதை எடுத்தான்.

அக்கா ராஜலட்சுமி அழைத்திருக்க, எடுத்துக் காதில் வைத்தான்.

“சொல்லுக்கா”

“தம்பி, என்னய்யா இப்படிப் பண்ணிட்ட. நீங்க ரெண்டு பேரும் பிரியறதா சொன்னப்பகூட ஏதோ ரெண்டு பேருக்கும் மனஸ்தாபம், அந்தக் கோபத்துல சொல்லுறேன்னு நினைச்சேன். இப்ப நிஜமாலுமே பிரிஞ்சுட்டீங்களா?”

“ம்ம்… பிரிஞ்சுட்டோம் க்கா”

“ஊருல இருக்கற நிறையப் பேரு வாழ்க்கை நல்லாருக்கணும்னு விளக்கேத்தி வச்சிட்டு உன் வாழ்க்கை இப்படி ஆகிப் போச்சேய்யா…”

“தலைவிதியை மாத்த முடியாதில்லக்கா”

“என்னய்யா விதி? குழந்தைகளை நினைச்சாவது ரெண்டு பேரும் பிரியாம ஒண்ணா இருந்திருக்கலாம்ல?”

“நாங்க ஒண்ணா இருக்கறதை விட உயிரோட இருக்கறது அவசியம் தானக்கா”

“நீ என்னய்யா சொல்லற?” என்றார் அவர் விளங்காமல்.

“விடுக்கா, சில விஷயங்களை ஆழ்ந்து தெரிஞ்சுக்காம இருக்கறது தான் நல்லது.” அவன் விரக்தியான குரலில் சொல்ல ராஜலட்சுமி என்ன சொல்லுவதென்று தெரியாமல் மௌனம் காத்தார்.

“நீ வருத்தப்படாதக்கா, இதுவும் கடந்து போகும்?”

“எல்லாமே கடந்து போகத்தான் செய்யும். எதுவும் யாருக்காகவும் நிக்கப் போறதில்ல தான். ஆனா கடக்கறது எளிதில்லையே?”

“சில நல்லது நடக்கணும்னா சிலதை இழந்து தான் ஆகணும்”

“எதுக்காகவும் குடும்பத்தை இழக்கலாமாய்யா?”

‘என் குடும்பம் நல்லாருக்கணும்னு தான் அதை இழந்துட்டு நிக்கறேன் க்கா’ என மனதுக்குள் நினைத்தவன் சொல்லவில்லை.

“சரி, ஏதோ போதாத காலம் இப்படில்லாம் நடக்குது. எதுக்காகவும் மனசு விட்டுடாதய்யா. அம்மா உயிரோட இருந்தாலாச்சும் உனக்கு ஒரு துணையா இருந்திருப்பாங்க. மனசு கஷ்டமா இருந்தா கிளம்பி மதுரைக்கு நம்ம வூட்டுக்கு வந்திருய்யா” என மூத்த சகோதரியாய் அன்னையின் ஸ்தானத்தில் இருந்து கவலையோடு பேசினார்.

“சரிக்கா, நான் வைக்கிறேன்…” என்றவன் போனை அணைத்துவிட, மனதில் ஒரு வெறுமை சூழ்ந்து கொண்டது.

அதற்குள் நான்கைந்து அழைப்புகள் மிஸ்டு காலில் காட்டியது. எல்லாரும் அனுதாபத்திலோ, ஆனந்தத்திலோ இவனது நிலையை விமர்சிக்கவும், நடந்ததை அறிந்து கொள்ளவும், பரிதாபப்பட்டு பேசவும் அழைப்பவர்கள். எல்லாருக்கும் மற்றவர்களைப் பேசவோ, அவர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யவோ எளிது. ஒருவன் எந்தச் சூழ்நிலையில் ஒரு செயலைச் செய்கிறான் என்பதை அவனைத் தவிர வேறு யாராலும் புரிந்து கொள்ள முடிவதில்லை.

மீண்டும் அலைபேசி சிணுங்க அதைப் பார்த்தவன் விழிகளில் வெறுப்பும், கோபமும் நிறைந்து வழிந்தது.

அது ஒரு பிரைவேட் நம்பர். அழைப்பை எடுக்க எதிர்ப்புறம் கரகரத்தது ஒரு ஆண்குரல்.

“ம்ம்… சொன்னபடியே செய்துட்ட போலருக்கு”

“ஆமா, இனியாச்சும் எங்களை நிம்மதியா வாழ விடுங்க ப்ளீஸ்”

“அது நீ நடந்துக்கறதைப் பொறுத்துதான் இருக்கு.”

“இதுக்கு மேல நான் எப்படி நடந்துக்கணும்னு நினைக்கறிங்க?”

“என்ன தம்பி, குரல் உயருது?”

“இ..இல்ல, அப்படி ஒண்ணும் இல்ல”

“ம்ம்… பார்த்து நடந்துகிட்டா எந்தப் பிரச்சனையும் வராது”

“சரி, நீங்க சொன்னபடியே நடந்துக்கறேன்”

“ம்ம்… நல்லது, வைக்கிறேன்” எனவும் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

ஒரு பெருமூச்சுடன் அலைபேசியைப் பார்த்திருந்தவன் அதைத் தூக்கி மேஜையில் எறிந்துவிட்டு கட்டிலில் சாய்ந்தான். மனம் கனத்துப் போயிருந்தது.

‘இப்ப ஸ்ரீ என்ன பண்ணிட்டு இருப்பாங்க? ரொம்ப ஃபீல் பண்ணி அழுவாங்களே. அவங்களுக்கு ஆறுதல் சொல்லக் கூட யாரும் இல்லியே. பிள்ளைங்க என்ன பண்ணுவாங்க? அம்மாவை அழ வச்சிட்டேன்னு என் மேல கோபப்படுவாங்களா? இல்ல, இந்தச் சூழ்நிலையைப் புரிஞ்சுகிட்டு ஏத்துப்பாங்களா?’

மனம் ஏதேதோ யோசித்துத் தவிக்க எழுந்தவன் அலைபேசியை எடுத்து டிரைவர் ரவிக்கு அழைத்தான்.

“ரவிண்ணா, அவங்க தவிச்சுப் போயிருப்பாங்க. கூடவே இருங்க, என்ன தேவை இருந்தாலும் பார்த்துக்கங்க” என்றுவிட்டு போனை வைத்தான். மனது மட்டும் நிலை கொள்ளாமல் தவித்தது.

***********

தனது இஷ்ட தெய்வமான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியைக் கண்டு கண்ணீர் மல்க, மனதில் உள்ள பாரத்தை எல்லாம் சொல்லி, அவள் காலடியில் இறக்கி வைத்துவிட்டு ரவியின் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர் நித்யாவும், குழந்தைகளும்.

குழந்தைகள் இருவரும் உறங்கத் தொடங்கியிருக்க வெளியே பார்வையைப் பதித்திருந்தாள் நித்யா. காரின் வேகத்துக்கு ஏற்ப வெளியே தெரிந்த காட்சிகளும் வேகமாய் கண்ணிலிருந்து மறைந்து செல்ல, கலங்கி நின்ற கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

‘இது போல என் வாழ்க்கைலயும் இந்தச் சூழ்நிலையை வேகமாய் கடந்து போயிட்டா எவ்வளவு நல்லாருக்கும்? என்னதான் மனசைத் தேத்தி, நடந்ததை ஏத்துகிட்டு, அடுத்ததை யோசிச்சுக் கடந்திடனும்னு நினைச்சாலும் இந்தச் சூழ்நிலையும், எதிர்காலமும் என்னை ரொம்ப மிரட்டுதே. என் அம்மா பராசக்தி எல்லாம் பார்த்துப்பான்னு நினைச்சாலும் மனசு மட்டும் தவியாத் தவிக்குதே. ராம், நீங்களும் எங்களை தான் நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருப்பீங்கன்னு தெரியும். எனக்காச்சும், கூட நம்ம பிள்ளைங்க இருக்காங்க. நீங்க தனியா எப்படி இந்தச் சூழ்நிலையைக் கடந்து வரப் போறீங்க? தவிச்சுப் போயிருவீங்களே? அம்மா தாயே! நீதான் அவருக்கும் துணையா இருந்து பார்த்துக்கணும்’ என அவனைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பையும் அன்னையிடமே விட்டுவிட்டாள் நித்யா.

மனதில் பழைய நினைவுகள் இதமாய் அணைத்துக் கொண்டன.

அன்று ஒரு பெரிய நட்சச்திர ஹோட்டலில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்க, உணவு இடைவேளையில் தனக்குத் தோழியாய் நடிக்கும் உண்மைத் தோழியான வனிதாவுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள் நித்யாஸ்ரீ.

அப்போது அடுத்த காட்சிக்கான செட்டிங்கைத் தயார் செய்ய அசிஸ்டன்ட் டைரக்டரான ராம்சரண், அங்குமிங்கும் ஓடிச் சரி பார்த்துத் தீயாய் வேலை செய்து கொண்டிருந்தான்.

“அந்த ஏடி ரொம்பச் சுறுசுறுப்பா இருக்கார், ஒரு இடத்துல நிக்கறது இல்ல. துறுதுறுன்னு ஓடிட்டே இருக்கார்” வனிதா தோழியின் காதில் கிசுகிசுக்க ராமை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு கண்கள் சுருங்கச் சிரித்தாள் நித்யாஸ்ரீ.

“ஆமா வனி, அவர் ஒரு இடத்துல சும்மா நின்னு நானும் பார்த்ததே இல்ல, படத்தோட டைரக்டர் கூட இவ்ளோ பிஸியா இருக்க மாட்டார்” எனத் தோழியின் காதில் ராமைக் கலாய்த்தாள் நித்யாஸ்ரீ.

“ஆமாடி, அதுவும் நீ ஷூட்டிங் வந்துட்டாப் போதும். மனுஷனுக்குச் சோறு, தண்ணி கூட வேண்டாம். எல்லாத்தையும் மறந்துட்டு, அப்பப்ப உன்னை சைட் அடிச்சிட்டு ஓடிக்கிட்டே இருப்பார்” வனிதா சொல்ல நித்யா சிரித்துக் கொண்டாள். நித்யா ராமைப் பார்க்க, அதே நேரம் சரியாய் அவனும் அவளைப் பார்க்க சிரிப்புடன் திரும்பினாள். ராமுக்கு தான் அவனை நோக்கி அவள் சிரித்தது குற்றாலச் சாரலை அவன்மீது தெளித்தது போல் ஜில்லென்று இருந்தது. அவளை நோக்கி ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு நகர்ந்தான். சற்றுத் தள்ளி தான் நித்யாவின் பாடிகார்டான அவள் அன்னை அமர்ந்து இருந்தாரே.

“ஹேய், நாம அவரைதான் கலாய்ச்சுப் பேசறோம்னு தெரிஞ்சிருக்குமோ?” நித்யா தோழியிடம் கேட்க அவள் மறுத்தாள்.

“அதெல்லாம் தெரிஞ்சிருக்காது. வழக்கம் போல உன்னைப் பார்த்து பூஸ்ட் ஏத்திக்கிறார், வேறொண்ணுமில்ல” என்றவளை நோக்கிச் சிரித்தவள் அடுத்த காட்சிக்குத் தயாராகச் செல்ல, உடை மாற்றும் அறையில் அவளுக்காய் வைக்கப்பட்டிருந்த உடையைக் கண்டவள் முகத்தைச் சுளித்தாள்.

“ஐயே! இதென்ன நீச்சல் உடை மாதிரி இருக்கு. இதெல்லாம் நான் போட மாட்டேன்” என நித்யா காஸ்ட்யூம் டிஸைனரிடம் சொல்ல,

“நித்யா மா, இந்த சீன்ல நீங்க நீச்சல் குளத்துல குளிச்சிட்டு இருக்கும்போது வில்லன் உங்களைத் தப்பா போட்டோ எடுக்கிறதா தான் காட்சியே. இந்த டிரஸ் போடலேன்னா எப்படிமா?” எனக் கேட்க, அந்தப் படத்தின் வில்லனான சத்யன் அங்கே வந்தார்.

“என்ன நித்யா? என்ன பிரச்சனை?”

“சத்யாண்ணா, நீச்சல் உடைல நடிக்கச் சொல்லுறாங்க, எனக்கு அதெல்லாம் போடப் பிடிக்கவே இல்லை” என்றாள் முகம் சுருங்க.

“டைரக்டர் சார்கிட்டச் சொல்லி வேற எதுவும் ஏற்பாடு பண்ணலாம்ல” சத்யன் கேட்க, அதற்குள் நித்யாவின் அன்னை ரோகிணிக்கு விஷயம் தெரிய அவரும் அங்கே வந்தார்.

“ஏய்! நடிக்கறேன்னு சொல்லிதான காசு வாங்கினோம். இப்ப அந்த டிரஸ் போட மாட்டேன், இந்த டிரஸ் போட மாட்டேன்னு சொன்னா எப்படி? காட்சிக்கு எது சரியோ, அதைத்தான டைரக்டர் சொல்லுவார். ஒழுங்கா அந்த டிரஸ்ஸைப் போட்டுட்டு வா” என்ற அன்னையை முறைத்தாள் நித்யாஸ்ரீ.

“என்னடி முறைக்கிற?” என ரோகிணி மகளைத் திட்ட அதற்குள் டைரக்டர் மணிபாரதியும், ஏடி ராமும் அங்கே வந்தனர்.

விஷயத்தைச் சொல்லவும் மணிபாரதி யோசித்தார்.

“ராம், இப்ப என்ன பண்ணறது?” எனக் கேட்க அவன் அந்தக் காஸ்ட்யூம் டிஸைனரிடம் சென்று எதையோ கேட்க அவர் தலையாட்டினார்.

“மேடம், உங்களுக்கு விருப்பமில்லாத டிரஸ்ஸைப் போட வேண்டாம். ஒரு மாத்து ஏற்பாடு சொல்லிருக்கேன். இப்பப் போயி அந்த டிரஸ்ஸைப் போடுங்க.” எனவும் அரை மனதாய் நகர்ந்தாள்.

அதே நீச்சல் உடையைப் போட்டு தொடையிலிருந்து நெட் டைப்பில் ஒரு ஸ்கின் கலர் பேண்டைப் போட்டுக் கொண்டவளுக்கு இப்போது சற்று நிம்மதியாக இருந்தது.

தயாராகி வந்தவள் நன்றியுடன் ராமைப் பார்க்க அவன் பார்வையோ அவள் மேல் ரசனையுடன் படிந்திருந்தது.

அவளது விருப்பு, வெறுப்பு புரிந்து அதற்குத் தகுந்த போல் நடந்து கொண்டான் ராம்சரண். அன்னை ரோகிணி செட்டில் இருக்கும்போது, நித்யா உணவு உண்ணுவதில் இருந்து அங்கே யாருடன் பேசுகிறாள் என்பது வரை கண்காணித்துக் கொண்டே இருப்பார்.

உணவுப் பிரியையான நித்யாவுக்கு உணவுக் கட்டுப்பாடு மட்டும்  அறவே பிடிப்பதில்லை. ஒரு நடிகைக்கு உடல்வாகு மிக முக்கியம். நித்யாவுக்கு மெலிந்த உடல்வாகுதான் என்றாலும் அவளை அதிகம் சாப்பிட விடாமல் நிறைய ஜூஸ், கொஞ்சம் உணவு எனதான் கொடுப்பார் ரோகிணி.

அவளோ நிம்மதியாய் இலை நிறையப் பதார்த்தங்களோடு வயிறு நிறைய உண்ண வேண்டுமென்று நினைப்பாள். ரோகிணிக்குத் தெரியாமல் சில நேரம் ஐஸ்கிரீம், சிக்கன் சில்லி, இறால் சில்லி, ஸ்வீட் என வாங்கி வந்து மேக்கப் பெண்ணிடம் கொடுத்து நித்யாவுக்குக் கொடுக்கச் சொல்லுவான் ராம். மேக்கப் பெண்ணுக்கும் அதுக்கு சாக்கலேட் லஞ்சமாய் கிடைக்கும்.

ராம் தன் மீது வைத்திருந்த பிரியமும், அக்கறையும் நித்யாவுக்கும் பிடித்திருந்தது. ஒருநாள் அவள் அணிந்து வந்த லஹங்காவைக் கண்டவன் விழிகள் விரிந்தது. அத்தனை அழகாய் இருந்தது நித்யாவுக்கு அந்த உடை.

அன்றைய காட்சிக்கான வசனம் எழுதிய பேப்பரை அவளிடம் கொடுத்த ராம், “மேடம், இந்த டிரஸ் உங்களுக்கு ரொம்ப அழகாருக்கு. நாளைக்கும் இதையே போட்டுட்டு வரீங்களா?” என மெல்லிய குரலில் கேட்க, “அப்படியா, தேங்க்ஸ்” என்றவள் அவன் நீட்டிய டயலாக் பேப்பரையும், அதற்குள் வைத்திருந்த ஃபைவ் ஸ்டார் சாக்கலேட்டையும் ஆர்வமாய் வாங்கிக் கொண்டாள்.

மறுநாள் ராம் அவள் வரவை எதிர்பார்ப்புடன் நோக்கியிருக்க, அவன் சொன்னதுபோல் அதே உடை அணிந்து வந்தவளைக் கண்டதும், அவனுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது. அவளோ, எப்போதும் போல், அன்றும் அன்னை எடுத்து வைத்த உடையை அணிந்து வந்திருந்தாள். அவன் சொன்னதைக் கருத்தில் கொள்ளாமல்.

‘மேடம்க்கும் என்னைப் பிடிக்கும் போலிருக்கு’ எனத் தீர்மானமாய் எண்ணியவன், ‘சீக்கிரமே தனியா ஒரு படத்தை டைரக்ட் பண்ணி, அதை சக்ஸஸ் பண்ணி நல்ல டைரக்டர்னு பேரு வாங்கணும். அப்பதான் அவங்களைக் கல்யாணம் பண்ணித்தரச் சொல்லி, கெத்தா வீட்டுல போயி கேக்க முடியும்’ என யோசித்துக் கொண்டான்.

அதற்குப் பின் வந்த நாட்களும் அழகாய் செல்ல வெகு நாட்களாய் தனது காதலைச் சொல்லத் தயங்கியவன் ஒருநாள் தைரியமாய் டயலாக் பேப்பருக்கு நடுவே காதல் கடிதத்தை வைத்து அவளிடம் கொடுத்து விட்டான்.

படபடப்புடன் அவளை நோக்கியவன், “மே..மேடம்… டயலாக் பேப்பருக்குள்ள உங்களுக்கு ஒரு லெட்டர் எழுதி வச்சிருக்கேன். படிச்சிட்டு உங்க ப..பதிலைச் சொல்லுங்க.” என்றவனைப் புரியாமல் பார்த்தாலும் தலையசைத்தாள்.

மெல்ல பாத்ரூமுக்கு நழுவியவள் அங்கே அவனது காதல் கடிதத்தைப் பிரித்துப் படித்தாள்.

குண்டு குண்டாய் அழகான கையெழுத்துடன் சீரான வாக்கிய அமைப்போடு நேர்த்தியாய் அவனது மனதை அந்தக் கடிதத்தில் சொல்லி எழுதியிருந்தான்.

ஆருயிரே… எனத் தொடங்கி, உங்கள் அன்புள்ள ராம் என முடிக்கும் வரையிலும் அவளைப் பற்றிய அக்கறையும் அன்புமே அதில் கொட்டிக் கிடந்தது.

“நேரம் காலமில்லாமல், சாப்பிடாமல், தூங்காமல் ரொம்ப உழைக்கறீங்க, உடம்பைப் பார்த்துக்கங்க. உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். உங்களுக்கும் என்னைப் பிடிக்குமா? நீங்க ரொம்ப உச்சில இருக்கீங்க. நான் ரொம்பக் கீழ இருக்கேன். உங்ககிட்ட என் விருப்பத்தைச் சொல்லக் கூட எனக்குத் தகுதி இல்லைதான். ஆனாலும், நான் உங்களை உண்மையா நேசிக்கிறேன். உங்களை அன்பா, அக்கறையா, உங்களுக்குப் பிடிச்சதை எல்லாம் செய்து நல்லாப் பார்த்துக்கணும்னு ஆசைப்படறேன். உங்களுக்கும் விருப்பம் இருந்தா இந்தக் கடிதத்தை பத்திரமா வச்சுக்கங்க. நம்ம காதல் தொடரும். இல்லன்னா, இதைப் படிச்சதும் கிழிச்சு என் கண்ணு முன்னாடியே குப்பைல போட்டிருங்க… உங்களை நான் பிறகு தொந்தரவு செய்ய மாட்டேன்…”

என்றும் உங்களை உண்மையாய் நேசிக்கும்,

உங்கள் ராம்…

என முடித்திருக்க, அவளுக்கு அதைப் படித்ததும் தோன்றிய மனநிலையை விவரிக்க முடியவில்லை. ஆனாலும், அவனது அக்கறையும் அன்பும் பாலை வனத்தில் பனித்துளி போல் அவள் மனதை இதமாய் வருடத் தொடங்கியது.

‘எப்படி இருந்தாலும் ஒருத்தனைக் கல்யாணம் பண்ணித்தான் ஆகணும், அது ஏன் இவராய் இருக்கக் கூடாது?’ அவள் மனம் யோசிக்க, கடிதத்தைப் பத்திரமாய் பதுக்கிவிட்டு வெளியே வந்தவள் அவனை நோக்கிச் சிரிக்க அவனுக்குள் சாரலடித்தது.

அதற்குப் பின் அடிக்கடி ஃபைவ் ஸ்டாருடன் லவ் லெட்டரை டயலாக் பேப்பர் நடுவே வைத்து நித்யாவின் அசிஸ்டன்ட் பெண்ணிடம் கொடுத்து விடத் தொடங்கினான் ராம்.

“மேடம், ராம் சார் உங்களை டீப்பா லவ் பண்ணுறார் போலருக்கே…” என ராம் தந்த லஞ்சப் பணத்தைப் பர்ஸுக்குள் பதுக்கி, அவன் வாங்கிக் கொடுத்த சாக்கலேட்டை வாய்க்குள் அதக்கிக் கொண்டு சொன்னாள் கலைச்செல்வி.

“ஆமா, அவரையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்”

“ஐயய்யோ! அதெல்லாம் வேண்டாம், பெரிய மேடம்க்கு தெரிஞ்சா அவ்வளவுதான்.” எனப் பயத்துடன் கூறினாள் செல்வி.

“அவ்ளோ பயம் இருக்குறவ எதுக்கு அவர் கொடுக்கிற கமிஷன் பணத்தையும், சாக்கலேட்டையும் வாங்கிட்டு லவ் லெட்டரைக் கொண்டு வந்து தர்ற? வாங்க மாட்டேன்னு சொல்ல வேண்டியது தான?” என்றாள் நித்யா சிரிப்புடன்.

“ப்ச்… பாவம், வெள்ளந்தியான மனுஷன். அவர் கொடுக்கிறது இருக்கட்டும். நீங்க கல்யாணம் எல்லாம் பண்ண முடியாது, கஷ்டம்னு சொல்லிடுங்க” என்றாள் செல்வி.

“ஹூம்…” என யோசனையுடன் தலையாட்டினாள் நித்யா.

நாட்கள் இனிதாய் நகர, ராம் தனியே படத்தை இயக்குவதற்கான முயற்சியில் இறங்கி இருந்தான். பல தயாரிப்பாளர்களைச் சந்திக்க, மணிபாரதியும் அவனைச் சிபாரிசு செய்ய, கிராமத்துப் படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பு ராமுக்குக் கிடைத்தது.

அன்று நித்யாவுக்கு விஜயகாந்துடன் இரவு ஒரு ஷூட்டிங்கை முடித்துவிட்டு, படப்பிடிப்புக் குழுவினருடன் மதுரைக்கு ஒரு தயாரிப்பாளர் மகனின் கல்யாணத்துக்குக் கிளம்ப வேண்டியிருந்தது. ரோகிணிக்கு கட்சிப் பணி சம்பந்தமாய் திருச்சி செல்ல வேண்டியிருக்க மகளை விஜயகாந்தின் பொறுப்பில் விட்டார்.

ஒரு பெரிய வண்டியில் அனைவரும் மதுரைக்குக் கிளம்ப பாட்டும், டான்ஸுமாய் கொண்டாட்டமாய் இருந்தது.

“விஜிண்ணே, மதுரைல கொத்துப் பரோட்டாவும், சால்னாவும் ஃபேமஸாமே. கண்டிப்பா எனக்கு வாங்கித் தரணும்” என்றாள் நித்யா. அவளுக்கு ஆல் இண்டியன்ஸ் ஆர் மை பிரதர்ஸ் என்பதே கொள்கை என்பதால் உடன் நடிக்கும் நடிகர்கள் எல்லாம் அண்ணன், தம்பி தான். பெரியவர்கள் என்றால் சார்.

“சரிம்மா, சரிம்மா. உனக்கு என்னெல்லாம் வேணும்னு சொல்லு, எல்லாம் வாங்கித் தரேன். திருப்தியா சாப்பிடு” என்றார் விஜயகாந்த். அதேபோல் அவள் வயிறு குளிரச் சாப்பிடவும் வைத்தார்.

அன்று சந்தோஷத்துடன் கல்யாணத்தில் கலந்து கொண்டனர்.

“அண்ணே, இவ்ளோ தூரம் வந்திட்டு அம்மாவைப் பார்க்காமப் போனா நல்லாருக்குமா? கோவிலுக்குக் கூட்டிட்டுப் போங்கண்ணே…” எனக் கூறியவளை முறைத்த விஜயகாந்த்,

“கோவில் குளம்னு எங்க, அம்மனைப் பார்த்தாலும் விட மாட்டியே” என்றவர் அதற்கும் ஏற்பாடு செய்தார்.

கோவிலுக்குச் சென்று சிறப்பு தரிசனத்தில், மனம் குளிர அன்னையைத் தரிசித்துவிட்டு வெளியே வர, நிறைய ரசிகர்கள் அவளைக் காண முண்டியடித்தனர். அவர்களுக்குப் புன்னகையுடன் கையசைத்துவிட்டு வண்டியில் ஏறினாள். மீண்டும் அவர்கள் குழுவுடன் இணைந்து கொள்ள ராம் அவளைக் காண வந்தான்.

அவனைக் கண்ட விஜயகாந்த் சிரிப்புடன், “ஹூம்… இங்க ஒரு லைவ் லவ் ஸ்டோரி ஓடிட்டு இருக்கு” எனச் சிரிப்புடன் கூறிவிட்டுச் சென்றார்.

ராம் நித்யாவிடம், தனக்குப் படம் இயக்க வாய்ப்புக் கிடைத்ததைக் கூற, “ரொம்ப சந்தோஷம், இன்னும் நிறையப் படங்கள் கிடைத்து பெரிய இயக்குநரா வரணும்” எனக் கூறிக் கொண்டே அவள் கையில் இருந்த மீனாட்சி அம்மனின் குங்குமத்தை அவன் நெற்றியில் வைத்து விட அவளையே கண்ணெடுக்காமல் பார்த்தான்.

“நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” எனக் கேட்க,

“ம்ம்… வீட்டுல வந்து பேசுங்க…” எனச் சிரித்தாள் நித்யா.

“சீக்கிரமே வர்றேன், அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி…”

“நீங்க பெரிய நடிகை, நான் இப்பதான் ஒரு படத்தை இயக்கவே போறேன். உங்களுக்கு அதுல வருத்தம் ஒண்ணும் இல்லியே”

“இல்லவே இல்ல, எனக்குப் பணம், காசுல எல்லாம் ஆசை இல்லை. நீங்க என்னைப் பார்த்துப்பிங்கன்னு நம்பறேன்.”

என்ற அவளின் அந்த வார்த்தையே அவனுக்குப் போதுமாய் இருந்தது. அடுத்த சில நாட்களில் தனது பிரதான இயக்குநர் மணிபாரதி மற்றும் சில மூத்த டெக்னீஷியன்கள் சிலரை  அழைத்துக் கொண்டு தைரியமாய் நித்யஸ்ரீயின் பெரிய பங்களா முன் சென்று நின்றான் ராம்சரண்.

நித்யா ஷூட்டிங் சென்றிருக்க, வீட்டில் அவளது அன்னையும், இரு அண்ணியரும், தந்தை, அண்ணங்களும் மட்டுமே இருந்தனர்.

மணிபாரதி ராம்சரணுக்குப் பெண் கேட்டு வந்த விஷயத்தைச் சொன்னதும் கோபத்தில் பொங்கினார் ரோகிணி.

“என்ன சார் பேசறீங்க? உங்க மேல எனக்கு ரொம்ப மரியாதை இருக்கு. அதுக்காக இத்தனை நாள் உங்ககிட்ட அசிஸ்டண்டா இருந்த ஒருத்தனுக்கு என் பொண்ணைக் கேட்டு வருவீங்களா? ஏன்? இவனுக்கு அப்பா, அம்மால்லாம் இல்லியா? நீங்க வந்திருக்கீங்க?”

“ராம்க்கு அப்பா தவறிட்டார் மா. அம்மா மட்டும்தான். நல்ல, திறமையான பையன், நிச்சயம் நல்ல நிலைக்கு வருவான்… சீக்கிரமே ஒரு படத்தைச் சொந்தமா டைரக்ட் பண்ணப் போறான். அதும் இல்லாம, ரெண்டு பேரும் விரும்பறாங்க.” என்றதும் அவர் கோபம் உச்சத்திற்குப் போனது.

“வேணாம் சார், நான் மரியாதை இல்லாம ஏதாச்சும் சொல்லிடப் போறேன், கிளம்புங்க” எனவும் எழுந்து கொண்டனர்.

“மேடம், நான் உங்க பொண்ணை சந்தோஷமா வச்சுக்குவேன். அவங்களைக் காதலிக்கறேன்…” என ராம் சொல்லத் தொடங்க, அவனை ஓங்கி அறைந்து விட்டார் ரோகிணி.

“ச்சீ… யாருக்கு யாரு மேல காதல்? இருக்கற இடம் தெரியாமப் பண்ணிருவேன், ஜாக்கிரதை!”

எனக் கோபத்துடன் கத்த நித்யாவின் அண்ணன்களும் அவனை அடித்து விட்டனர்.

“யாரு பொண்ணை யாருக்குக் கட்டி வைக்கிறது? தியேட்டர்ல டிக்கட் கிழிக்கற கழுதைக்கு, பணக்கார வீட்டுப் பொண்ணு கேக்குதோ? அதும் அவளோட அழகுக்கும், புகழுக்கும் ஏணி வச்சாலும் எட்டுவியா நீ?” எனக் கூறிக் கொண்டே மற்றவர்கள் தடுக்க முயன்றும் ராமை நன்றாக அடித்து விட்டனர்.

அதில் அவனது உதடு கிழிந்து ரத்தம் வர, சட்டையும் கிழிந்து விட்டது. மணிபாரதியும், மற்றவர்களும் தடுக்க முயன்றும் ஆஜானுபாகுவான நித்யாவின் அண்ணன்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

பாவம் ராம், காதலுக்காய் ரத்தம் சிந்திப் பரிதாபமாய் நின்றான்.

ஒரு காதல் இடைவேளை

-லதா பைஜூ

Advertisement