Advertisement

அத்தியாயம் 3

திங்கள் கிழமை.

எல்லாம் முடிந்துவிட்டது.

இத்தனை நாள் தாம்பத்தியத்தை ஒரு ‘விவாக ரத்து’ அறிக்கை இனி இந்தத் திருமணம் செல்லுபடியாகாது என அவர்களின் திருமண பந்தத்திற்கு விலக்குக் கொடுத்து அறிவித்து விட்டது.

மணத்திற்கு வேண்டுமானால் கோர்ட்டும், சட்டமும் விலக்குக் கொடுக்கலாம். மனத்திற்கு விலக்கையோ, விலங்கையோ யார் கொடுப்பது? அது சதா சர்வ காலமும், ‘ராம், ராம்…’ என அவன் பெயரை மட்டும் தானே உச்சரித்து அலறிக் கொண்டிருக்கிறது.

குடும்ப நீதிமன்றத்தில் நீதிபதி விவாகத்தை ரத்து செய்து அறிவித்ததும், அதைக் கேட்டு அதீத மன உளைச்சலில் அப்படியே மயங்கிச் சரிந்த நித்யாவை ராம் தான் தாங்கிக் கொண்டான்.

மடியில் அவளைக் கிடத்திக் கொண்டு கண்ணீருடன் பதட்டமாய் அவளை அழைத்தது, இப்போதும் கூட அவள் செவியில் ஒலித்துக் கொண்டு தானிருக்கிறது.

“ஸ்ரீ… ஸ்ரீம்மா, எழுந்திருங்க… கொஞ்சம் தண்ணி கொண்டு வாங்க” எனப் பதறியபடி யாரிடமோ கூறியவனின் குரலும் கூட எங்கோ பாதாளத்தில் இருந்து ஒலிப்பது போல் கேட்டது. அவன் விழியில் நிறைந்த கண்ணீர்த்துளி அவளது கன்னத்தில் விழுந்து தெறிக்க, அவனது பதட்டத்தையும், கண்ணீரையும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர் அந்த வழக்கின் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும்.

ஒரு தனியறையில் இவர்களின் வழக்கு நடந்து கொண்டிருக்க வெளியே காத்திருந்த தனது டிரைவரிடம், காரிலிருந்து ஜூஸ் எடுத்து வருமாறு பணித்தான் ராம்சரண்.

அவரும் வேகமாய் ஓடிச்சென்று ஜூஸுடன் திரும்ப அதற்குள் நித்யாவுக்குத் தண்ணீர் தெளித்ததில் மயக்கம் தெளிந்திருந்தது.

சோர்வுடன் குனிந்து அமர்ந்திருந்தவளிடம் ஜூஸ் கிளாஸை நீட்டியவன், “ஸ்ரீ மா, ஜூஸ் குடிங்க” எனக் கொடுக்க, நடுங்கும் விரல்களை நீட்டி அந்தக் கிளாஸை வாங்கியவள் ஜூஸைக் குடிக்க விழிகள் மட்டும் மடை திறந்து கொண்டது.

“இப்ப பரவால்லியா…” என்றவனிடம் முகத்தைக் காணாமல் குனிந்தபடியே தலையாட்ட காலி கிளாஸை வாங்கிக் கொண்டான்.

“மிஸ்டர் ராம், நிச்சயம் உங்களுக்கு மணவிலக்கு வேணுமா?” என்ற நீதிபதியை விரக்தியுடன் நோக்கியவன் விழிகளும் கலங்கி இருந்தன.

அவன் அமைதியாய் நிற்பதைப் பார்த்தவர், “உங்க மனைவி மேல இத்தனை அன்பு வச்சிருக்கீங்க, அவங்களுக்கு ஒண்ணுன்னா துடிச்சுப் போறிங்க. இப்படி இருக்கற நீங்க ஏன் பிரியணும்னு நினைக்கறிங்க?” எனக் கேட்கத் தவிப்புடன் நித்யாவை ஒரு பார்வை பார்த்த ராம்சரண்,

“சில பிரிவுகளையோ, இழப்புகளையோ தவிர்க்க முடியாது சார்… என்னாலயும் தவிர்க்க முடியலை” என்றான்.

“நீங்க என்ன சொல்லறீங்க மா?” என நித்யாவிடம் கேட்க,

“அ..வர் விருப்பப்பட்டுக் கேட்டுட்டார், கொடு..த்துடறேன். பிரிச்சு விட்டு..டுங்க சார்” என அழுகையைக் கட்டுப்படுத்தியபடி கூறினாள்.

“ஜீவனாம்ஸம், குழந்தைங்க பத்தி”

“அவரே எனக்கு இல்லன்னு ஆன பிறகு அவர் கொடுக்கிற எதுவுமே எனக்கு வேண்டாம் சார். என் குழந்தைகளுக்கு அவர் தான் அப்பா. அந்த உறவுக்கான பாசத்தையும், அவகாசத்தையும் மட்டும் அவர் எப்பவும் கொடுத்தா போதும். குழந்தைகளை தயவுசெய்து என் பொறுப்பில் விட்டுடுங்க” எனக் கை கூப்பி வேண்டினாள்.

“நீங்க என்ன சொல்லறிங்க, மிஸ்டர் ராம்சரண்?”

“அவங்க கேட்ட போலவே இருக்கட்டும் சார்.” எனச் சொல்ல இருவரின் பதிலையும் அந்த விவாகரத்துப் பத்திரத்தில் சேர்த்து எழுதிக் கையெழுத்திட்டார் நீதிபதி.

“இந்த நீதிமன்றம் இப்படி ஒரு பிரிவைச் சந்தித்ததே இல்லை. வழக்கமா கணவன் மனைவி, நிறையக் கருத்து வேறுபாடுகளும், ஒத்துப் போகாமலும், வேற பல பிரச்சனைக்காகவும் தான் பிரிய நினைப்பாங்க. ஆனா, இத்தனை புரிதலோட, விட்டுக் கொடுக்கிற மனப்பான்மையோட, அன்பா இருக்கற நீங்க ஏன் பிரியனும்னு ஒரு சக மனுஷனா என் மனசு வேதனைப்படுது. எனிவே, உங்க இரண்டு பேரோட புது வாழ்க்கைப் பயணத்துக்கு என் வாழ்த்துகள்” என நெகிழ்ச்சியுடன் கூறிவிட்டுச் சென்றார் நீதிபதி.

மற்ற நடைமுறைகளையும் இருவரும் முடித்துவிட்டு வெளியே வந்தனர். சோர்வுடன் வெளிகேட்டை நோக்கி நடந்து கொண்டிருந்த நித்யாவைக் கண்ட ராம் தனது வக்கீலிடம், “ஒரு நிமிஷம் சார், நீங்க மத்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடிங்க” என்றவன் அவளை நோக்கிச் செல்ல, அவளது பார்வையும் அவன் மேல் படிந்தது.

“ஸ்ரீமா…” அவனது பரிதவிப்பான அழைப்பில் விழிகள் மீண்டும் உடைப்பெடுத்துக் கொள்ள, அவன் முகத்தை ஏறிடாமல் குனிந்து கொண்டாள் நித்யா.

 “உங்க தவிப்பும், வலியும் எனக்குப் புரியுது. ஆனாலும், சில பிரிவுகள் தவிர்க்க முடியாதது. அப்படி இதையும் நினைச்சுக்கங்க, இதை நீங்க கடந்து வரணும், நீங்க தளர்ந்துட்டா அப்புறம் நானும் இல்லாமப் போயிருவேன். இந்தப் பிரிவு நம்ம மண வாழ்க்கைக்கு தான், மனசுக்கு இல்ல. உங்களைப் பார்த்துக்கங்க”

“ஹூம், உயிரையே பறிச்சுகிட்டு எழுந்து வான்னு கூப்பிடற மாதிரி இருக்கு ராம்.” என்றவள் வழியும் கண்ணீரைத் துடைத்துவிட்டு, “நீங்க சொன்னதுதான் எனக்கும். இந்த ஆயுள் முழுசும் உங்களை நான் நேசிச்சிட்டு தான் இருப்பேன். அதை யாராலும், எப்பவும் எந்தக் கோர்ட்டிலும் ரத்து பண்ணவே முடியாது.” அழுத்திச் சொன்னாள்.

“ம்ம்… கடைசியா எனக்காக ஒரு முறை சிரிக்க முடியுமா?” என்றவனின் கண்களும் கலங்கி இருக்க, மூக்கைச் சுளித்து கண்ணைச் சுருக்கி, இதழை விரித்துச் சிரித்தவள், “லவ் யூ ராம்” எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாய் சென்று விட்டாள்.

சில நிமிடங்கள் செல்லும் நித்யாவையே பார்த்து நின்ற ராம் ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றிவிட்டு, டவலால் தன் கண்ணைத் துடைத்துவிட்டு நகர்ந்தான்.

வீட்டுக்கு வந்த பிறகும் கோர்ட்டில் நடந்த விஷயங்களும், ராம் பேசியதுமே நித்யாவின் மனதில் சுழன்று கொண்டிருந்தது.

“அம்மா, அப்பாவைப் பார்த்திங்களா? என்ன சொன்னார்?” என ஆவலுடன் ஓடி வந்தனர் பிள்ளைகள்.

அவர்களுக்குப் பதில் சொல்லும் முன்னர் அவளது அலைபேசியில் தெரிந்தவர்களும், நட்புகளும் அழைத்துக் கொண்டிருந்தனர்.

அவளிடம் உண்மையான பரிவுடன் தைரியம் சொல்லியவர்களுக்கு நன்றி சொல்லி வைத்தாள். நடிப்பிலிருந்து விலகி இருந்தாலும் திரைத்துறையில் இருந்து நித்யா விலகவில்லை. கணவன் ராம் இயக்கும் பல படங்களின் தயாரிப்பாளராக இருந்தாள். அவளுக்குத் திரை உலகம் நிறைய நல்ல நட்புக்களையும் சம்பாதித்துக் கொடுத்திருந்தது.

நித்யாவின் அன்னை ரோகிணியும் அழைத்தார்.

“என்னடி, கோர்ட்டுல அத்து விட்டுட்டாங்களா? ஜீவனாம்சம் எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டியாமே? நிறைய உன் பேருல சம்பாதிச்சு வச்சிருக்கியோ? பிழைக்கத் தெரியாதவ, இன்னும் எத்தனை காலத்துக்கு தான் இப்படி ஏமாளியா இருக்கப் போறியோ? உன் தேவை முடிஞ்சதும் தூக்கி எறிஞ்சானா உன் புருஷன்?”

“அம்மா, போதும். நான் ஏமாளியோ, கோமாளியோ? அவரைத் தப்பா எதுவும் சொன்னா சும்மாருக்க மாட்டேன்”

“ஹூக்கும், வேண்டாம்னு வெட்டி விட்டவனுக்கு இன்னும் சப்போர்ட் பண்ணிட்டு இருக்காளே, இந்த லூஸு?” எனக் கோபமாய் அன்னை சொல்ல அழைப்பைத் துண்டித்தாள்.

சிறிது நேரம் வந்த அழைப்புகளுக்குப் பதில் பேசி அலுத்துப் போனவள் யாரிடமும் போன் பேசப் பிடிக்காமல் அதை அணைத்து வைத்தாள். அனைத்தின் மீதும் வெறுப்பாய் இருந்தது.

இப்படியொரு வாழ்க்கை வாழத்தான் வேண்டுமா? எனத் தோன்றியது. ஒரே நாளில் உலகமே தன்னைத் தனியாக்கி எதிரானது போல் தோன்றியது. அடுத்த அடி எங்கே எடுத்து வைப்பதென்று புரியாமல் கண் இருந்தும் குருடியாய், அறிவிருந்தும் பித்தாய் மனம் பேதலித்து அழக் கூடத் தோன்றாமல் வெறுமையில் கரைந்தாள் நித்யா.

ராமின் நிழலில் எதைப் பற்றியும் கவலை இல்லாமல் வாழ்ந்தவளுக்கு எதிர்காலம் மிரட்டியது. இந்தக் கொடுமை எல்லாம் அனுபவிக்காமல், எல்லாத்தையும் விட்டுவிட்டுச் செத்து விடலாம் என்று கூடத் தோன்றிப் போனது. நல்ல வேளையாகப் பிள்ளைகள் அருகே வந்து அவள் சிந்தனையை மாற்றினர்.

“அம்மா, சாரும்மா லைன்ல இருக்காங்க, பேசுங்க…” எனக் கூறி தனது அலைபேசியைக் கொடுத்தாள் நிமிஷா.

அன்னையின் நிலையைக் கண்ட நிமிஷா, அவளே சாரதாவிற்கு அழைத்து அன்னையிடம் பேசச் சொன்னாள்.

“நித்தி, என்னடா?” என எதிர்ப்புறமிருந்து ஒலித்த அன்பான குரலில் மீண்டவள், விம்மினாள்.

“எல்லாம் முடிஞ்சிருச்சு சாருமா… நானும் அவரும் இனிமே புருஷன் பொண்டாட்டி இல்லயாம், யாரோ தானாம்… கோர்ட்டுல சொல்லிட்டாங்க”

“ம்ம்…”

“இந்த ராம் அங்க வந்தாச்சும் என் மேல அக்கறையைக் காட்டாம இருந்திருக்கலாம், கொஞ்சமாச்சும் மனசைத் தேத்தி இருப்பேன். கோர்ட்டுல என்ன நடந்துச்சு தெரியுமா?” என்றவள் நடந்ததைச் சொல்ல சாரதாவிடம் நீண்ட பெருமூச்சு மட்டுமே. அவருமே இவர்கள் பிரிவைச் சற்றும் எதிர் பார்த்திருக்கவில்லை.

ராம், நித்யாவின் நேசத்தைக் கண்ணாரக் கண்டு மனதாரச் சந்தோஷித்தவர் சாரதா. அவர்களுக்குள் இந்தப் பிரிவு, என்பதை அவராலேயே முழுமையாய் ஏற்க முடியாத போது பாவம் நித்யா. எப்படிதான் இதைக் கடக்கப் போகிறாளோ?’ என அவருக்குச் சற்று பயமாகக் கூட இருந்தது எனலாம். இருந்தாலும், அவளைத் தேற்ற வேண்டியது தன் கடமை என உணர்ந்தவர் நித்யாவிடம் நிதானமாய் பேசத் தொடங்கினார்.

“நித்திமா, உன் மேல அவருக்குப் பாசம் இருக்கறது உனக்கு இப்பதான் தெரியுமா என்ன?”

“ஹூம் அதானே. அவர் என் மேல எப்பவும் பாசமாதான் இருப்பார்.”

“நீ தளர்ந்துடக் கூடாதுன்னு தானே கடைசியா அப்படிச் சொல்லிட்டுப் போயிருக்கார். நீ இப்ப என்ன பண்ணிட்டு இருக்க?”

“அவரு சொல்லிட்டார். என்னால முடியலையே மா…”

“அப்படிச் சொல்லாத. உனக்கு எப்ப எந்த ஒரு சந்தோஷம், துக்கம்னாலும் உன் அம்மா ஆதி பராசக்தியைத் தேடி ஓடுவியே, அவகிட்ட உன் மனசுல உள்ளதை எல்லாம் கொட்டு. நிச்சயம் உனக்கு ஒரு வழியைக் காட்டுவா. நீ இப்படிக் கலங்கிப் போனா உன்னோட கலக்கம் உன்னை மட்டும் பாதிக்காது நித்தி. உன்னை நம்பி ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. இனி அவங்க உன் பொறுப்பு தானே. உன்னை மட்டுமே யோசிச்சிட்டு இருக்கற நீ அவங்களுக்காக எப்ப யோசிக்கப் போற?” நிதானமாய் அழுத்தமாய் கேட்டார் சாரதா.

“ஆமா, என் பிள்ளைங்க! இனி அவங்க வாழ்க்கை என்னாகும்?”

“அதை நீதான் யோசிக்கணும்? அவங்க என் பொறுப்புன்னு சொன்னா மட்டும் போதாது, அவங்களுக்கு என்ன பண்ணனும்னு யோசி”

“ம்ம்… ஆமாம் மா, கரக்ட். முடிஞ்சு போன என் வாழ்க்கையைப் பத்தியே யோசிக்காம வாழ வேண்டிய அவங்க வாழ்கையைப் பத்தி தான் நான் யோசிக்கணும், புரியுது சாரு மா”

“ம்ம்… இந்தச் சூழ்நிலை உனக்கு மட்டுமில்ல, பிள்ளைங்களுக்கும் புதுசு. அவங்ககிட்ட பக்குவமாப் பேசி எல்லாத்தையும் புரிய வைக்கணும். அவங்க படிப்புக்கு என்ன பண்ணனும்னு பார்க்கணும்.”

“சரிம்மா, நான் பேசறேன்…”

“ம்ம்… குட்! மனசு சோர்ந்து போறதும், உற்சாகமா இருக்கறதும் நம்ம கைல தான் இருக்கு. உன் மனசுக்கு ஒரு மாற்றம் நிச்சயம் தேவை. நீ மறுபடி நடிக்கறதைப் பத்தி யோசி. இல்ல வேற எதுவும் ஹெல்ப் வேணும்னாலும் அம்மாகிட்டத் தயங்காமக் கேக்கணும், சரியா? நிமிஷாகிட்ட போனைக் குடு” என்றார்.

“சரிம்மா, இதோ கொடுக்கறேன்” என்றவள் மகளிடம் நீட்டினாள்.

அலைபேசியை வாங்கிக் கொண்டு நகர்ந்த நிமிஷாவிடம் சாரதா, “நிமிஷா, அம்மா பக்கத்துலயே இருங்கடா. அவளைத் தனியா விடாம ஏதாவது பேசுங்க. நீங்க ரெண்டு பேரும் நல்ல குழந்தைங்க. உங்களுக்கு ஓரளவுக்கு அம்மாவோட மனநிலையும், சூழ்நிலையும் புரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன். பார்த்துக்கங்க”

“சரி சாரும்மா” என்றாள் நிமிஷா.

“எப்ப என்ன வேணும்னாலும் என்னைக் கூப்பிடுடா தங்கம். வச்சிடட்டுமா?” என்றவர் அழைப்பைத் துண்டித்தார்.

நித்யாவின் மனது சாரதா சொன்ன விஷயங்களில் நின்றது.

‘குழந்தைகளிடம் இப்போது உள்ள சூழலைப் புரிய வைக்க வேண்டும். இந்தப் புது வாழ்க்கைக்கு அவர்களைத் தயார் செய்ய வேண்டும். அதற்கு முதலில் தான் நிதானமாய் இருக்க வேண்டும்.’ என நினைத்தவள் கண்களை மூடி ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டாள்.

“அம்மா…” வாசலில் ரவியின் குரல் கேட்டது.

“வாங்க ரவிண்ணா…”

“இன்னைக்கு எதுவும் சமைச்சிருக்க மாட்டீங்க, பிள்ளைங்க பசியா இருப்பாங்கன்னு வீட்டுல சமைக்கச் சொல்லி எடுத்திட்டு வந்தேன். இவங்களுக்கு தான் ஹோட்டல் சாப்பாடு அதிகம் சேராதே” என்றவர் கையிலிருந்த கூடையை நீட்ட ஒரு பெருமூச்சுடன் அவரைப் பார்த்தாள் நித்யா.

கூடையைப் பார்த்தவள், “எந்த வீட்டுல சமைச்சதுண்ணா?” எனக் கேட்கப் பார்வையைத் தாழ்த்திக் கொண்டவர்,

“ராம் ஐயா தான் வீட்டுல சமைச்சதைக் கொடுத்து விட்டார்மா…” என்றார் தயக்கத்துடன்.

“இன்னிக்குச் சாப்பிடறோம், இனி அங்கிருந்து வாங்கிட்டு வராதீங்கண்ணா, ப்ளீஸ்” என்றவளின் முகத்தைக் காண அவருக்கு என்ன தோன்றியதோ, “சரிம்மா, வாங்கல” என்றார்.

“நீங்க சாப்பிட்டீங்களா ண்ணா?” கேட்டுக் கொண்டே அந்தக் கூடையில் இருந்த கேரியரை எடுத்து மேஜையில் நிரப்பியவள்,

“நிமி, எல்லாருக்கும் பிளேட் எடுத்து வை” என்றாள்.

நிமிஷா அனைவருக்கும் தட்டை வைத்துப் பரிமாறினாள்.

“நிதீ, சாப்பிட வா…” என மகனை அழைக்க அவனும் அமர்ந்தான்.

“நம்ம ஜானகிம்மா சமையல் போல இருக்கேம்மா” சாப்பிட்டவன் சொல்ல நித்யா ரவியைப் பார்த்தாள்.

“நம்ம பசியா இருப்போம்னு அப்பா ஜானகியம்மாவைச் சமைக்கச் சொல்லிக் கொடுத்து விட்டிருக்கார், சாப்பிடு” என்ற நித்யாவின் குரல் கரகரக்க, கண்ணீரைக் கட்டுப்படுத்தியவள், “அண்ணா, நீங்களும் சாப்பிடுங்க” என ஒரு தட்டை அவருக்கு வைக்க, “வேண்டாம் மா, நீங்க சாப்பிடுங்க” என்றவரை அந்த மனநிலையிலும் சாப்பிட வைத்தே விட்டாள்.

“சாப்பாடு மட்டும் தான் கொடுத்தனுப்பினாரா ண்ணா?”

“ஒரு விஷயமும் சொல்லச் சொன்னார்மா.”

அவள் கேள்வியாய் அவரை நோக்க, “நீங்க இப்ப ரொம்பக் குழப்பத்தில் இருப்பீங்க. இந்தப் புதிய சூழலும், வாழ்க்கையும் ஏத்துக்கக் கொஞ்சம் காலம் எடுக்கும். ஆனா எந்தச் சூழ்நிலைலயும், எந்தத் தேவை இருந்தாலும் அவரை அழைக்கச் சொன்னார் மா…” எனக் கூற விரக்தியாய் புன்னகைத்தவள் பதில் சொல்லவில்லை.

அவர் கிளம்பிவிட யோசனையுடன் அமர்ந்திருந்தாள்.

அன்றைய நாள் அப்படியே சிலரின் துக்க விசாரணைகளுடன் செல்ல இரவும் வந்தது. வெகுநேரம் உறங்காமல் அழுகையில் கரைந்தவளுக்கு விடியலை நினைத்துக் கூட பயமாய் இருந்தது.

‘அம்மா பராசக்தி! இந்தச் சூழலை நான் எப்படி கடக்கப் போகிறேன்? பிள்ளைகள் என் பொறுப்பு எனச் சொல்லி விட்டேன். அவர்களின் எதிர்காலத்தை எப்படி அமைத்துக் கொடுக்கப் போகிறேன். இத்தனை நாளும் எனக்குள் இருந்து வழிகாட்டியவள் நீ! அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று தெரியாமல் திகைக்கும் என்னைக் கைவிட்டு விடுவாயா என்ன? உன் மகளுக்கு அடுத்துச் செல்ல வேண்டிய பாதையை நீதான் காட்ட வேண்டும் தாயே!’ மனமார அன்னையை வேண்டிக் கொண்டு கண்களை இறுக்கமாய் மூடிக் கொண்டாள்.

வெகுநேரம் உறக்கம் வராவிட்டாலும், ஏதோ ஒரு நிமிடத்தில் உறங்கிப் போயிருந்தாள்.

கனவில் அவளது அன்னையின் கருணை முகம் கண்டாள்.

“நீ செல்லும் பாதையில் அம்மா துணையிருப்பேன். தயக்கமின்றி அடுத்த அடியை முன்னோக்கி வைத்து நடந்து செல். இந்த உலகத்தில் யாருக்குக் கஷ்டம் இல்லை. எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் எனத் துணிந்து இறங்கிவிடு” என அவள் காதில் யாரோ சொல்லுவது போல் உணர்ந்தாள் நித்யா.

சட்டென்று விழித்தவளுக்கு அந்தக் கம்பீரமான கருணைக் குரலே காதில் மீண்டும் மீண்டும் கேட்டது.

“அம்மா! பராசக்தி தாயே…” எனக் கண் கலங்கப் பிரார்த்தித்து விட்டு கடிகாரத்தைப் பார்க்க 3 மணி ஆகியிருந்தது.

அதற்குமேல் உறங்க விரும்பாமல் எழுந்தவள் குளித்தாள்.

எப்போதும் தன்னுடன் வைத்திருக்கும் அம்பாளின் போட்டோவை எடுத்தவள் ஹாலுக்குச் சென்று அங்கிருந்த செல்ஃபில் வைத்தாள். சம்மணமிட்டு அமர்ந்தவள் மனமாரப் பிரார்த்தித்து மெல்லிய குரலில் லலிதா சகஸ்ரநாமத்தை உச்சரிக்கத் தொடங்கினாள். அவளுக்குள் இருந்த பிரச்சனைகள் எல்லாம் மனதின் ஓரத்தில் ஒதுங்கிப் போயிருக்க, அன்னையின் அருள் வடியும் முகம் மட்டுமே மனதில் நிறைந்திருந்தது.

காலையில் பிள்ளைகள் எழுந்து வருகையில் நெற்றி நிறைய விபூதியும், குங்குமமும் வைத்து மங்களகரமாய் பழையது போல் நின்ற அன்னையைக் காண அவர்கள் விழியிலும் ஒரு மலர்ச்சி.

“அம்மா…” என ஓடி வந்து நிமிஷா கட்டிக் கொள்ள நித்யாவின் இதழ்களிலும் சின்னப் புன்னகை. ‘தனது பலவீனத்தை வெளிக்காட்டி பிள்ளைகள் மனதையும் தளர்த்தி இருக்கிறோம்’ எனப் புரிந்தது.

“நிதி எழுந்துட்டானா? ரெண்டு பேரும் குளிச்சிட்டு வாங்க, காஃபி தரேன்” சொன்னவள் டிபன் தயாரிப்பிலிருக்க நிமிஷா நகர்ந்தாள்.

சிறிது நேரத்தில் பிள்ளைகள் குளித்து வர, அவர்களுக்குப் பால் இல்லாத காப்பியை நீட்டியவள், “நாளைல இருந்து பால் காப்பி தரேன். இன்னைக்கு இதைக் குடிங்க” எனச் சொல்ல,

“அம்மா, ஒரு நிமிஷம் குனியுங்க…” என்றான் நிதீஷ்.

“என்னப்பா?” எனக் குனிந்தவளின் கன்னத்தில் தன் இதழைப் பதித்தவன், “எப்பவும் இப்படியே இருங்க மா…” எனச் சொல்ல, நெகிழ்ந்த மனதை இறுக்கிப் பிடித்தவள், மகனை நோக்கிப் புன்னகைத்து விட்டு அவன் தலையைக் கலைத்து விட்டாள்.

“இனி எப்பவும் இப்படிதான் இருப்பேன்…” எனத் தன் வலியை மறைத்து இதழில் சிரிப்பை உறைய விட்டாள்.

எத்தனையோ கதாபாத்திரங்களில் நடிப்பைக் கொட்டியவளுக்கு வாழ்க்கையிலும் நடிக்க வேண்டிய சூழலை விதி கொண்டு வந்து விட்டது. பிள்ளைகளுக்காகவும், தன் வலியைப் பிறருக்கு அறியாமல் மறைத்துக் கொள்ளவும், அவளை அவளே சந்தோஷமாய் இருப்பதாய் நம்ப வைக்கவும் கூட அவளுக்கு இப்போது ஒரு முகமூடி நிச்சயம் தேவைதான்.

அழுது கொண்டே இருக்க அவளுக்குப் பிடிக்கவில்லை.

நித்யாவின் அடையாளமே அவளது பாஸிடிவ்வான புன்னகை தான். அதைத் தொலைத்தால் அவளையே தொலைத்தது போல் தான், என்பதை உணர்ந்தவள் புன்னகையெனும் முகமூடியைத் தரித்து தனக்குள் வேதனைகளை ஒதுக்கிச் சிரிக்கப் பழகினாள்.

அன்னையின் மாற்றம் பிள்ளைகளுக்கும் புரிந்தது, அவள் தங்களுக்காகத் தான் சிரிக்கிறாள் என்று. ஆனாலும், அறிந்ததாய் காட்டிக் கொள்ளாமல் அவளுடன் சேர்ந்து சிரித்தனர்.

புதுப் பயணத்தில் சந்திக்கப் போகும் புதிய சூழ்நிலைகளை, புதிய மனிதர்களை எப்படி எதிர் கொள்வது என்ற யோசனையுடனே காலை டிபனைத் தயார் செய்து கொண்டிருந்தாள் நித்யா.

அவள் மனத்தில் இப்போது தன்னைப் பற்றிய தவிப்புகள் ஒதுங்கிப் போயிருக்க, பிள்ளைகள் மட்டுமே நிறைந்திருந்தனர்.

‘பிள்ளைகளை என் பொறுப்பில் வளர்ப்பதாய் சொல்லி விட்டேன். இத்தனை நாள் சொகுசாய் செல்வச் செழிப்பில் வளர்ந்த குழந்தைகளைச் சாதாரண வாழ்க்கைக்குப் பழக்க வேண்டும். சினிமாக்காரி வளர்த்த பிள்ளைகள் எப்படி இருக்கும்னு, நாளை யாரும் தன்னைக் குற்றம் சொல்லிவிடக் கூடாது. எனவே இனி அவர்களைக் கண்ணும் கருத்துமாய் வளர்த்து நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும்’ என மனதில் தீர்மானித்துக் கொண்டாள்.

தீர்மானங்கள் எல்லாம் நாம் நினைக்கும்படி எளிதில் நடந்து விடுமா என்ன? அதற்கும் ஆயிரம் தடைகள் வரத்தானே செய்யும்?

‘என்ன தடை வந்தாலும், அதை நேரிட்டுக் கடந்து வரும் துணிவையும், தைரியத்தையும் நீதான் தாயே தரவேண்டும். எப்போதும் போல இப்போதும் எனக்கு வழிகாட்டியாய் உடனிரு தாயே’ என அவளது அன்னை ஆதிபராசக்தியை மனதார வேண்டிக் கொண்டாள்.

‘நம்பிக்கை’ அதானே எல்லாம்?

 

ஒரு காதல் இடைவேளை…

-லதா பைஜூ

Advertisement