Advertisement

அத்தியாயம் 2

எத்தனை நேரம் அப்படியே அழுது கொண்டிருந்தாளோ, பிள்ளைகளும் கலக்கத்துடன் அவளருகே அமர்ந்து அவள் மீது சாய்ந்து சோர்ந்து உறங்கிப் போயிருந்தனர்.

சுவரில் தலை சாய்த்துக் கண்களில் கண்ணீர்த் தடத்துடன் அமர்ந்திருந்தவள் வெறுமனே சாத்தியிருந்த கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த பெண்மணியைக் கண்டதும் சட்டென்று நிமிர்ந்தாள்.

சாரதா…

அவள் மிகவும் மதிக்கும், விரும்பும் ஆதர்ஷப் பெண்மணிதான் சாரதா. திரைத்துறையில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்தவர். கல்யாணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகியவர், சின்ன வயதிலேயே கணவனை இழந்தவர். தனது இரண்டு பிள்ளைகளைப் பெரும் போராட்டத்துடன் நல்ல முறையில் வளர்த்து அவர்களின் உயர்வோடு தனக்கென்று சின்னத்திரையில் ஒரு அடையாளத்தை அழுத்தமாய் பதித்தவர். அவர் எழுதி இயக்கிய பல தொடர்கள் அவருக்கு நல்ல பேரைத் தேடித் தந்திருந்தது.

திரைப்படத்தில் தனக்கு அன்னையாய் பல படங்களில் வேடமிட்ட சாரதாவைத் தன் அன்னையைப் போலவே நேசித்தாள் நித்யா.

நித்யாவின் களங்கமில்லாத அன்பும், சிரிப்பும், கணவன் மறைந்த போது அவள் கொடுத்த ஆதரவும் சாரதாவின் மனதில் அவளை என்றும் தன் மகளைப் போலவே நேசிக்க வைத்திருந்தது.

தோள் வரை வெட்டப்பட்டிருந்த கூந்தல். கண்களின் தீர்க்கத்தை மறைத்திருந்த கண்ணாடி. ஆரோக்கியமான உடல்வாகு. காட்டன் புடவையைக் கட்டியிருந்தாலும் அதிலும் ஒரு நேர்த்தி தெரிந்தது. சினிமா நடிகை ரேவதியின் சாயலில் இருந்தார்.

அவரைக் கண்டதும் தாய்ப்பசுவைக் கண்ட கன்றுக் குட்டி போல் “சாரும்மா…” என நெகிழ்வுடன் அழைக்க, அந்தச் சத்தத்தில் பிள்ளைகளும் எழுந்து விட்டனர். ஓடிவந்து தன்னைக் கட்டிக் கொண்ட நித்யாவை ஆதரவுடன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

சிறிது நேரம் கழித்து அவளை விலக்கியவர், “நித்தி மா, இப்படி வந்து உக்காரு. பிள்ளைங்களா, சாப்பிட்டிங்களா?” எனக் கேட்க அவர்கள் மறுப்பாய் தலையாட்டி,

“இல்ல சாரும்மா, அம்மாவும் நேத்திருந்து எதுவுமே சாப்பிடல.” என வருத்தத்துடன் கூறினர்.

“ம்ம்… நிமிக்குட்டி, இதுல இட்லியும், சட்னி சாம்பாரும் இருக்கு. நிதிக்கு கொடுத்திட்டு நீயும் சாப்பிடு…” எனக் கையில் இருந்த பையை அவளிடம் கொடுக்க வாங்கிக் கொண்டாள்.

“சரி சாரும்மா…” என்ற நிமிஷா அன்னையை இனிச் சாரும்மா தேற்றி விடுவார் என்ற நம்பிக்கையுடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு நிதீஷுடன் அடுக்களைக்கு நகர்ந்தாள்.

தலை குனிந்து கண்ணீருடன் அமர்ந்திருந்த நித்யாவின் அருகே அமர்ந்தவர் பரிவுடன் அவள் தோளில் கை வைக்கத் தேம்பலுடன் சாரும்மாவின் தோளில் சாய்ந்து கொண்டவள் விசும்பினாள்.

அவள் கையை ஆதரவுடன் பற்றியவர், “நித்திமா, என்ன நடந்துச்சு? ஏன் இந்தப் பிரிவுன்னு நான் காரணம் எதுவும் உன்னைக் கேட்கப் போறதில்லை. சில காரணங்களைச் சொல்லவும் முடியாது. சொன்னாலும் அதை அனுபவிக்கிறவங்களைத் தவிர மத்தவங்களுக்கு அது அப்படியே புரியவும் செய்யாது. அதனால அந்தக் கேள்வியை விட்டுடலாம்.” என்றவரை நிம்மதியுடன் பார்த்தாள் நித்யா. அவர் கேட்டால் மட்டும் என்ன காரணத்தை அவளால் சொல்லி விட முடியும்? அந்த தர்ம சங்கடத்தைத் தவிர்த்ததே கூட ஒரு பெரும் ஆறுதல் தானே.

“இதான் நம்ம வாழ்க்கைனு ஒரு லைஃப் ஸ்டைலுக்கு நம்மைத் தயார் படுத்திட்டு ஒரு பாதைல போயிட்டு இருப்போம். சட்டுன்னு அதை அப்படியே திருப்பிப் போட்டு, அந்தப் பாதைல ஒரு டெட் எண்டை வைத்து நம்மளைத் திருப்பி விட்டிருவார் கடவுள். அது உனக்கான பாதை இல்ல, நீ இனி இந்தப் புதிய பாதைல தான் பயணிக்கணும்னு. அதனால எதையும் இதான் வாழ்க்கைன்னு மைண்டுல பிக்ஸ் பண்ணிக்காம, அது போற பாதைல நாமும் பயணிக்கத் தொடங்கினாலே பாதி ஜெயிச்ச போல தான் நித்தி.”

“இனி எனக்குன்னு என்ன வாழ்க்கை இருக்கு சாரும்மா”

“நித்தி, இது நீ துவண்டு நிக்க வேண்டிய சமயம் இல்ல. இதுநாள் வரை மத்தவங்க கையைப் பிடிச்சிட்டு அவங்க காட்டின வழியில நீ நடந்திட்டு இருந்த. இனி உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடுத்து தனியா நடந்து பழகணும். வலிக்கும் தான்… வழியில கரடுமுரடா நிறையக் கல்லும், முள்ளும் காலுல குத்தும் தான்… எதிர்காலம் பெரிய பூதம் மாதிரி பயமுறுத்தும் தான். அதுக்காக எல்லாம் நம்ம பயணத்தை நிறுத்திடக் கூடாது. எல்லாத்தையும் கடந்து நடை போடும் போது நமக்குள்ள ஒரு தன்னம்பிக்கையும், தைரியமும் வரும் பாரு. அது ரொம்ப அழகானது! நமக்கான அடையாளத்தையும், பாதையையும் அது தான் உருவாக்கிக் கொடுக்கும். அதுனால இதை உன் வீழ்ச்சின்னு நினைக்காம எழுந்து நிக்கப் பாரு. என்னதான் ஆயிடும்? ஒரு கை பார்த்திடுவோம்னு தைரியமா இந்தச் சூழ்நிலையைக் கடந்து வரப் பாரு.”

“என்னால எதையும் யோசிக்க முடியல சாரு மா…”

“இப்ப நான் சொன்னதெல்லாம் உன் மனசுல ஏறாம இருக்கலாம். ஆனா, நிதானமா யோசிச்சுப் பார்த்தா உனக்கே புரியும்.”

“ம்ம்… உங்களுக்கு எப்படி நாங்க இங்கே இருக்கோம்னு தெரியும்?”

“ரவிதான் எனக்கு கால் பண்ணிச் சொன்னார். நீங்க வந்து நித்யாம்மாவைப் பார்த்துப் பேசினா கொஞ்சம் ஆறுதலா இருக்கும்னு. விஷயம் தெரிஞ்ச பிறகு என்னாலயும் உன்னைப் பார்க்காம இருக்க முடியல, அதான் கிளம்பி வந்தேன்.”

“ம்ம்… உங்களைப் பார்த்தது கொஞ்சம் ஆறுதலா இருக்கு…” என்றவள் கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

“வீடு ரொம்பச் சின்னதா இருக்கு. உனக்கு இங்கே கம்ஃபர்டபிளா இல்லன்னா நம்ம வீட்டுக்கு வந்திடேன் நித்திமா. நான் தனியா தானே இருக்கேன்.” என்றார். அவரது மகன் படித்து முடித்து கல்யாணமாகி வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டிலாகி இருந்தார். மகள் கணவருடன் டெல்லியில் இருக்க இவர் தனிக்கட்டை தான்.

“இல்லம்மா, நீங்க சொன்னதே ரொம்பச் சந்தோஷம். நீங்க சொன்ன போல இவ்ளோ நாள்தான் மத்தவங்க கையைப் பிடிச்சே நடந்து பழகிட்டேன். இனியாச்சும் தனியா நடக்க முயற்சி பண்ணறேன்.” என்றவளைப் புன்னகையுடன் பார்த்தார் சாரதா.

“குட்! நான் கம்பெல் பண்ண மாட்டேன். ஆனா, இது எதுக்கும் முடிவல்ல, எல்லாத்துக்கும் இதான் ஆரம்பம்னு நினைச்சுக்க”

“முயற்சி பண்ணறேன் மா…” என்றவளின் குரலில் சற்றே தெளிவு.

“அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சியா?”

“என்னால இப்ப எதையும் யோசிக்க முடியலமா”

“ம்ம்…” என்றவர், “நித்தி, நீ டீவி சீரியல் தொடர்ல நடிக்கறியா?” எனக் கேட்கத் திகைத்தாள் நித்யா.

இதுவரை பெரிய திரையில் பெரிய நட்சத்திரமாய் மின்னியவள், கல்யாண வாழ்க்கை தொடங்கியபின் நடிப்பிலிருந்து விலகி இருந்தாலும் இப்போதும் அதே பிரிமிப்புடன் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருப்பவள். இப்போது மீண்டும் நடிப்பது, அதுவும் சின்னத்திரையில் நடிப்பது என்றால்?

“மறுபடி நடிக்கறது பத்தி நான் எதுவும் யோசிக்கல சாரு மா”

“ம்ம்… யோசி, அது உனக்கான அடையாளத்தை, அங்கீகாரத்தைத் தரும். இன்னும் ரெண்டு மாசத்துல புதிய சீரியல் ஒண்ணோட ஷூட்டிங் தொடங்கப் போறேன். உனக்கு விருப்பம்னா அதுல முக்கியமான ஒரு காரக்டர் கொடுக்கிறேன், யோசிச்சு சொல்லு.”

“யோசிக்கறேன்”

“மறுபடி நடிக்கறது உன் வாழ்க்கைல மட்டுமில்ல, மனசுலயும் ஒரு மாற்றத்தையும், நம்பிக்கையும் கொண்டு வரும்.”

“ம்ம்… புரியுது சாரு மா”

“சரி, கோர்ட்ல எப்ப ஹியரிங் வருது”

“திங்கள் கிழமை” என்றவளின் குரல் கம்ம மீண்டும் கண்கள் கலங்கியது.

“கலங்காதே! யாரில்லைனாலும் நமக்கு நாம துணையா இருப்போம். நான் கிளம்பட்டுமா?” என்றவர் எழப் போக அவர் கையைப் பற்றிக் கொண்டாள் நித்யா.

அதற்குள் பிள்ளைகளும் சாப்பிட்டு முடித்து வர, “பிள்ளைங்களா, சாப்பிட்டாச்சா? டிபன் நல்லா இருந்துச்சா? உங்கம்மா மாதிரி, நான் குக்கிங்ல ஸ்பெஷலிஸ்ட் எல்லாம் கிடையாது” எனச் சிரித்தபடி கேட்க,

“எங்க பசியறிஞ்சு கொண்டு வந்திருக்கீங்க. அந்த அன்போட டேஸ்ட் டிஃபன்ல அதிகமாவே இருந்துச்சு சாரும்மா” நிமிஷா சொல்ல அவளை ஆச்சரியமாய் பார்த்தார் சாரதா.

“பாருடா, வருங்காலத்துல நல்ல டயலாக் ரைட்டரா வரதுக்கான எல்லா வாய்ப்பும் உனக்கு அதிகமா இருக்கு” என நிமிஷாவின் தலையைக் கோத,

“அவங்களுக்கு இந்தச் சினிமா எல்லாம் வேண்டாம் சாரும்மா. அவங்க பாதை வேறயா இருக்கணும்னு நான் ஆசைப்படறேன்” என்ற நித்யாவின் மனநிலை புரியத் தலையாட்டியவர் அவள் தோளில் ஆறுதலாய் தட்டினார்.

“டேய் நிதீஷ் பையா, அம்மா சொன்னதைக் கேட்டியா? ரெண்டு பேரும் நல்லாப் படிக்கணும், சரியா?”

“சரி சாரும்மா, நீங்க அடிக்கடி அம்மாவைப் பார்க்க வாங்க. அப்பதான் அம்மா அழாம இருப்பாங்க” என்ற சின்னவனின் பேச்சில் நெகிழ்ந்து அவனை அணைத்துக் கொண்டார் சாரதா.

“சரிடா கண்ணா, நீங்க ரெண்டு பேரும் இருக்கிங்களே, உங்கம்மாவுக்கு ரெண்டு கண்ணு மாதிரி. நீங்க அவளை அழாம நல்லாப் பார்த்துப்பீங்க தானே”

“நாங்க அம்மாவைப் பார்த்துப்போம், சாரும்மா” என்ற மகனை இழுத்து நித்யா கட்டிக் கொள்ள, நிமிஷாவும் அன்னையைக் கட்டிக் கொள்ள நெகிழ்வுடன் அவர்களைப் பார்த்து நின்றார் சாரதா.

“ஓகே, எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. பொள்ளாச்சி கிளம்பணும், நான் வர்றேன்” என்றவர் புறப்பட்டார்.

“நீங்க என்னைப் பார்க்க வந்தது மனசுக்கு ஆறுதலா இருக்குமா.” நித்யா சொல்ல அவள் கையில் தட்டிக் கொடுத்தவர்,

“முதல்ல சாப்பிடு, அடுத்து என்ன பண்ணலாம்னு யோசி, எல்லாம் முடிஞ்சுதுன்னு மட்டும் நினைச்சுடாத, இதான் ஆரம்பம்…” என்றவர் கிளம்பி விட, வாசலையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் நித்யா.

“இதான் ஆரம்பம்!” அவர் இறுதியாய் சொல்லிச் சென்ற வார்த்தைகள் காதுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்தது.

“அம்மா…” நிமிஷாவின் குரலில் திரும்பினாள்.

“உங்களுக்கு இட்லி எடுத்திட்டு வரவாம்மா?” எனக் கேட்ட மகளிடம் கண்ணீருடன் தலையசைக்க, ஒரு தட்டில் இட்லியுடன் வந்தவள் அவளே அன்னைக்கு ஊட்டி விடச் சாப்பிட்டு முடித்தாள்.

சற்று நேரத்தில் ரவி வரவும், அவரிடம் சில மளிகைப் பொருட்களை வாங்கச் சொன்னவள் தெரிந்த கடை ஓனருக்கு அழைத்து மிக்ஸி, கியாஸ் அடுப்பு, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற அத்தியாவசிய சாமான்களை ரவியிடம் கொடுத்தனுப்பச் சொல்லி அவரிடம் பணத்தைக் கொடுத்தாள்.

“ரவிண்ணா, நம்ம அண்ணாச்சிக்கு கால் பண்ணிச் சொல்லிட்டேன். நீங்க பணத்தைக் கொடுத்து எல்லாத்தையும் வண்டில ஏத்திக் கொண்டு வந்திடுங்க…” என, சரியென்று வாங்கிக் கொண்டார் ரவி.

“உங்களுக்கு என்னால சிரமம் எதுவும் இல்லியே?” நித்யா கேட்கத் தவிப்புடன் அவளைப் பார்த்தார் அவர்.

“என்னம்மா நீங்க, உங்ககிட்ட வேலை பார்த்தப்ப அள்ளி அள்ளி என் குடும்பத்துக்குச் செய்திருக்கீங்க. ஒரு டிரைவரா என்னைப் பார்க்காம ஒரு அண்ணனைப் போல வாய் நிறையக் கூப்பிட்டு, வயிறு நிறையச் சாப்பிட வச்சிருக்கீங்க. அந்த நன்றிலாம் மறந்தா நான் மனுஷனே இல்ல மா… இப்ப என் பிள்ளை வெளிநாடு போயிச் சம்பாதிச்சு பணம் அனுப்பறான். மூணு டாக்ஸி வாங்கி வாழ்க்கைல கொஞ்சம் மேல வந்திருக்கோம்னா அதுக்கு அடித்தளம் போட்டதே நீங்களும், நம்ம ஐயாவும் தானம்மா. உங்களுக்குச் செய்யுறது எனக்குச் சிரமமான்னு கேக்கறீங்களே? இது என் கடமை மா…” என நெகிழ்வுடன் அவர் சொல்ல அதில் கலங்கிய தனது கண்ணைத் துடைத்துக் கொண்டவள் அவரை அனுப்பி வைத்தாள்.

எல்லா நேரமும் ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டால் பிள்ளைகள் வயிற்றுக்கு ஆகாதே. இன்று மட்டும் ஹோட்டலில் வாங்கிக் கொள்வோம் என நினைத்தவள் மறுநாளிலிருந்து வீட்டிலேயே சமைக்க நினைத்திருந்தாள். சமையல் நிபுணியான நித்யாவுக்குப் பிறர் மனமும், வயிறும் மகிழச் சமைப்பது பிடித்தமான விஷயம்.  விதவிதமாய் புதுப் புது அயிட்டங்களைச் சமைத்து அனைவருக்கும் கொடுத்து மகிழ்வதில் விருப்பம் அதிகம். நடிப்புக்குப் பிறகு அவள் மிகவும் நேசிப்பது சமையல் செய்வதை தான். அவளுக்கு அப்படியே அன்னை ரோகிணியின் கைப்பக்குவம் கிடைத்திருந்தது. நித்யாவின் வீட்டில் ஆள்கள் அதிகம் என்பதால் தினமும் விருந்து போல தான் ரோகிணியின் சமையல் இருக்கும்.

பிள்ளைகள் ஏதோ நோட்டை எடுத்து வைத்துக் கொண்டு நேம், பிளேஸ், திங்க்ஸ் என்று அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்க பெருமூச்சுடன் அவர்களைப் பார்த்து நின்றவளுக்கு அழுது கொண்டே இருக்கப் பிடிக்கவில்லை. சாரும்மா சொன்ன வார்த்தைகளும் மனதுக்குள் ரீங்காரமிட எழுந்தாள். தான் கொண்டு வந்திருந்த உடைகளை பாகில் இருந்து எடுத்து அலமாரியில் அடுக்கியவளின் மனம் நினைவடுக்கில் சுழன்று பழைய நினைவுகளுக்குச் சென்றது.

நித்யா திரைத்துறையில் சம்பாதித்த பணம் முழுவதையும் அவள் வீட்டுக்கே செலவாக்கி இருந்தாள். அவளுக்கென்று சொத்து எதையும் பெரிதாய் அவள் சேர்த்து வைத்திருக்கவில்லை, அக்கவுண்டில் இருந்த சில லட்சங்களைத் தவிர.

நித்யாவின் குடும்பம் மிகப் பெரியது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், ரோகிணிக்கு மொத்தம் நித்யாவுடன் சேர்த்து எட்டுப் பிள்ளைகள். நித்யாவுக்கு மூத்தவர்கள் அனைவரும் ஆண்கள். நித்யா 6 வது பெண், அவளுக்குக் கீழே ஒரு தங்கையும், தம்பியும் இருந்தனர். தந்தை அரசியல் பிரமுகர் என்ற பேரில் பெரிதாய் எதுவும் சாதிக்காமல் சுற்றிக் கொண்டிருக்க, தாய் ரோகிணியும் அதே கட்சியின் மகளிர் அணித் தலைவராய் இருந்ததால் கட்சித் தலைவரின் சப்போர்ட்டும் இவர்கள் குடும்பத்திற்கு இருந்தது.

அவர்களுக்காய் ஒரு மளிகைக்கடை இருக்க, வரும் வருமானத்தில் குடும்பச் செலவுகளைக் கவனித்து பிள்ளைகளைப் படிக்க வைப்பதே பெரும் பாடாய் இருந்தது ரோகிணிக்கு. நித்யாவுக்கும் பெரிதாய் படிப்பு ஏறாததால் 10ம் வகுப்பு வரை எப்படியோ எட்டிப் பிடித்தாள்.

தனது 15 வது வயதில் அரசியல் தலைவர் வீட்டுத் திருமண விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தாள் நித்யா. அங்கே வந்திருந்த இயக்குநர் மணிபாரதி தனது புதுப்படத்திற்கு புதுமுகம் ஒன்றைத் தேடிக் கொண்டிருக்க அவரது கண்ணில் பட்டாள். அந்த அரசியல் தலைவருக்கு அவரது மகளும் நித்யாவும் ஒரே நாளில் பிறந்தவர்கள் என்பதால் நித்யாவின் மீது மிகுந்த பாசம் இருந்தது. இயக்குநரின் எண்ணம் அறிந்தவர் நித்யாவையே அந்தப் படத்தின் நாயகியாக்கச் சொல்லிவிட, நித்யாவின் அன்னை முதலில் திரைத்துறைக்குப் பெண்ணை அனுப்பத் தயங்கினார். என்றாலும் கட்சித் தலைவரின் சப்போர்ட் இருந்ததால் பிறகு ஒப்புக் கொள்ள நித்யா, நித்யஸ்ரீ என்ற புதுப்பெயரில் வெள்ளித் திரையில் உலா வரத் தொடங்கினாள்.

அவள் நடித்த ‘பருவ வயதினிலே’ என்ற முதல் கிராமத்துப் படமே பெரும் வெற்றியடைந்தது. பட்டி, தொட்டி எல்லாம் ஓடிப் பெயர் வாங்கித் தந்தது. அப்பாவித்தனமான முகமும், கள்ளமில்லாச் சிரிப்பும், சிரிக்கும் போது கன்னத்தில் விழுந்த குழியும், சுருள் முடியுமாய் இருந்த புது வரவை ரசிகர்கள் கொண்டாட மளமளவென்று வாய்ப்புகள் குவிந்தது. அடுத்தடுத்த படங்களும் பெரும் வெற்றியடைய நித்யஸ்ரீ ரசிகர்களின் கனவுக் கன்னியாய் நம்பர் ஒன் நடிகையாய் ஜொலிக்கத் தொடங்கினாள். உறங்கக் கூட நேரமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா எனப் பல மொழிகளிலும் வாய்ப்புகள் குவிய, அவளுடைய கால்ஷீட் சம்மந்தமான பொறுப்பை ரோகிணியே கவனித்துக் கொண்டார்.

சினிமாவில் நடிப்பதைத் தவிர நித்யாவின் மற்ற எல்லாப் பொறுப்புகளையும் ரோகிணி தான் பார்த்துக் கொண்டார். எந்தப் படத்தில் எத்தனை கால்ஷீட், என்ன தொகை தனக்கு வருமானமாய் வந்தது என்று எதுவும் நித்யாவுக்குத் தெரியாது. தெரிந்து கொள்வதிலும் அவளுக்கு விருப்பமில்லை. அவர்களின் வாழ்க்கைத் தரம் நித்யாவின் திரைப் பிரவேசத்தால் உயரத் தொடங்கியது. பெரிய மாளிகை, கார், வாகனங்கள் என வசதி கூடியது.

அன்னையின் மேற்பார்வையில் தான் அவளது திரைப்பயணம் தொடங்கியதும், வளர்ந்ததும் எல்லாம். வெளியூர் ஷூட்டிங்கிற்கு ரோகிணியும் உடன் கிளம்பி விடுவார். மகளுக்குப் புகழ் சேர்வதோடு அவளது பாதுகாப்பையும் முக்கியமாய் கருதி ஒரு பாடிகார்டு போல எப்போதும் மகளைக் கவனித்துக் கொள்வார். அரசியல் தலைவரின் சப்போர்ட் இருக்கவே நித்யாவுக்கு வேறு தொல்லைகள் வரவில்லை.

எந்த ஒரு கதாபாத்திரத்திற்கும் நித்யாவின் அழகிய முகம் பொருந்திப் போக அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்தது. ஓய்வெடுக்க நேரமின்றி ஓடிக் கொண்டிருந்தாள். சாமி வேடத்தில் நடித்த படம் மிகுந்த வரவேற்பைப் பெற்று பெண்கள் அனைவரும் அவளை ஒரு தெய்வப் பெண்ணாகவே காணத் தொடங்கினர். நான்கு வருடத்தில் 40 படங்களுக்கும் மேல் நடித்திருந்தாள்.

புதுப்படம் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் நன்றாக ஓடினால் இன்னும் படங்கள் குவியுமே, நிம்மதியாய் உண்ண, உறங்கக் கூட முடியாதே என நித்யா வருத்தமாய் யோசிக்கும் அளவுக்குப் படங்கள் குவிந்தன. ஒரே வருடத்தில் 23 படங்கள்கூட வெளியாகின. ஒரு நாளில் 3-4 ஷூட்டிங்கில் மாறி மாறிக் கலந்து கொண்டாலும் நடிப்பின் மீதுள்ள ஆர்வம், சோர்வடையாமல் புத்துணர்ச்சியுடன் வைத்திருந்தது.

ஒருநாள் அவளது புதுப்படம் ஒன்று ரிலீஸ் ஆகியிருக்க தியேட்டரில் நேரே சென்று காண விரும்பி அன்னையிடம் கெஞ்சிக் கூத்தாடி அனுமதி வாங்கியிருந்தாள்.

பல நிபந்தனைகளுடன் தான் ரோகிணி அவளைத் தியேட்டருக்கு அனுப்பி வைத்தார். அன்று அவருக்கு முக்கியமான கட்சி மீட்டிங் இருந்ததால் நித்யாவுடன் இளைய மகள் சத்யாவையும், கடைசி மகனையும் காரில் அனுப்பி வைத்தார்.

அன்று தியேட்டருக்குள் நுழையும்போது கதவருகே டிக்கட் கிழிக்க நின்றிருந்த மெலிந்த பையன் ஒருவன் இவளையே பார்த்திருந்தான். “மேடம், நீங்க நித்யஸ்ரீ தானே” என மெல்லிய குரலில் அருகே வந்து கேட்க, முகத்தில் கண்ணைத் தவிர அனைத்தையும் பர்தா போட்டு மறைத்து வந்த தன்னை அப்போதும் அடையாளம் கண்டு கொண்டு கேட்ட இளைஞனைத் திகைப்புடன் நோக்கியவள், “ஆமா, எப்படிக் கண்டு பிடிச்சீங்க?” என்றாள் வழக்கம் போலக் கண்கள் சிரிக்கும் தன் டிரேட் மார்க் புன்சிரிப்புடன்.

“என் பேரு ராம்சரண், நான் உங்க மிகப் பெரிய ரசிகன் மேடம். உங்க படம் ஒண்ணு விடாமப் பார்த்திருவேன். உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். உங்க ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பா கவனிக்கிற எனக்கு உங்க கண்ணை வச்சு உங்களைக் கண்டு பிடிக்க முடியாதா என்ன?” எனப் புன்னகைத்தான் அவன். தோற்றத்தில் மிகவும் அப்பாவியாய், வெள்ளந்தியாய் கிராமப்புறத்தான் போலத் தோன்றியவன் வெளிப்படையாகச் சொன்னான்.

“ஓ! ரொம்ப சந்தோஷம்…” என்றவளுக்குச் சந்தோஷத்தோடு சிறிது கூச்சமாகவும் இருந்தது.

“வாங்க மேடம்” என அவனே அழைத்துச் சென்று பாதுகாப்பாய் பின்னில் இருந்த இருக்கையில் அவர்களை அமர வைத்தான்.

“நான் முன்னாடி டிக்கட் கவுன்டர்ல தான் இருப்பேன். இந்தப் படத்தை இது வரைக்கும் நிறைய முறை பார்த்துட்டேன். ரொம்ப நல்லாருக்கு. நான் இப்ப வந்துடறேன், உக்காருங்க” எனச் சொல்லிச் சென்றான் ராம்சரண்.

சிறிது நேரத்தில் பாப்கார்ன், சமோசா, கூல்டிரிங்ஸ் எனக் கை நிறையக் கொண்டு வந்தவனிடம் அவள் வேண்டாமென்று மறுக்க, தங்கை விலாவில் கிள்ளி வாங்கச் சொல்ல வாங்கிக் கொண்டாள்.

“வேற எதுவும் வேணுமா மேடம்?”

“இல்ல போதும், தேங்க்ஸ்” என்றவளுக்கு அதை வாங்கக் கூச்சமாய் இருந்தாலும், அன்னை அவளை இதெல்லாம் சாப்பிட விடுவதில்லை என்பதால் சாப்பிட ஆசையாகவும் இருந்தது.

“பார்த்தியா, என்னோட ரசிகனை” எனத் தங்கையிடம் பெருமையாய் சொல்லிக் கொண்டே திரையில் படம் தொடங்கவும் சாப்பிட்டபடி கவனிக்கத் தொடங்கினர்.

இடைவேளை சமயத்தில் மீண்டும் கையில் ஐஸ்கிரீம், சிப்ஸ் எனக் கொண்டு வந்து அவர்களை கவனித்துக் கொண்டான் ராம்சரண்.

“பரவால்லக்கா, உனக்கு நல்ல ஒரு அடிமை சிக்கி இருக்கான். அம்மா பார்த்தா இதெல்லாம் சாப்பிட விட மாட்டாங்க, அடிச்சு நொறுக்கு” என்றபடி சாப்பிட்டனர் அவள் தம்பியும், தங்கையும்.

படம் முடிந்து வெளியே வருகையில் அவளையே புன்னகையுடன் பார்த்தபடி நின்றவன் அருகே வந்து, “எப்பப் படம் பார்க்க வரணும்னு தோணுதோ தியேட்டருக்கு போன் பண்ணிச் சொல்லுங்க மேடம். தனியா உங்களுக்கு சீட் ஒதுக்கி வச்சிடறேன்.” என்றான் பணிவாக.

“ரொம்பத் தேங்க்ஸ்ங்க. யாராவது கவனிக்கிற முன்னாடி கிளம்பிடறோம், பை…” என்றபடி நகர்ந்து செல்லும் மெலிந்த, பர்தா அணிந்த, கண்கள் புன்னகைக்கும் நித்யாவைக் கண்ணெடுக்காமல் பார்த்து நின்றான் ராம் சரண்.

அவன் நித்தமும் மனதில் ஆராதிக்கும் அவனது தேவதையை இத்தனை அருகில் கண்டதோடு, அவளுடன் பேசிச் சிரித்து, அவளுக்கு வேண்டியதைப் பார்த்துக் கவனிக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி அவன் மனதில் பட்டாம்பூச்சி பறந்தது.

சட்டென்று சிலநாள் முன்பு அவனது குடும்ப ஜோசியர் ஒருவர் சொன்ன வார்த்தைகள் மனதில் வர சந்தோஷமாய் உணர்ந்தான்.

‘ஒருவேளை, நம்ம ஜோசியர் சொன்ன போல என் வாழ்க்கைல வெளிச்சத்தைக் கொண்டு வரப் போற தேவதை நித்யஸ்ரீ தானோ? அதனால தான் இன்னைக்கு இப்படி ஒரு சந்திப்பு நடந்திருக்குமோ?’ யோசித்தவனின் மனம் குதூகலித்தது.

மனதில் பாரதிராஜாவின் வெள்ளை தேவதைகள் ‘நம்தன நம்தன” எனப் பாடிக் கொண்டிருக்க பரவசமாய் உணர்ந்தான் ராம்சரண்.

ஒரு காதல் இடைவேளை…

– லதா பைஜூ

Advertisement